திங்கள், 30 செப்டம்பர், 2013

தேவன் - 12 : சாப்ளின் தமிழன் தேவன்!

சாப்ளின் தமிழன் தேவன்!
ரவிபிரகாஷ்


தேவன் நூற்றாண்டு விழாவைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் வந்த கட்டுரை இதோ! 

ரவி பிரகாஷ் மிக அழகாக எழுதியுள்ளார். அவருக்கு என் நன்றி. கூடவே, ‘தேவனின் பழைய பல படைப்புகளை விகடன் ‘பொக்கிஷ’ப் பகுதியில் வெளியிட்டால் மேலும் சிறக்கும்! 



அச்சில் வராத பல தேவனின்  படைப்புகளை வெளியிட விகடனின் உதவி தேவை !
======

ஹாலிவுட்டில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்றால், நமக்கு உடனே 'சார்லி சாப்ளின்தான் நினைவுக்கு வருவார். அதே மாதிரி, தமிழில் 'நகைச்சுவைஎன்றதுமே சட்டென்று நம் நினைவுக்கு வரும் கதாபாத்திரம் 'துப்பறியும் சாம்பு’.

தமிழர் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்தச் சிரஞ்சீவிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பிரம்மா, 'தேவன்என்கிற மகாதேவன்.

ஆனந்த விகடன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது பேராசிரியர் கல்கி கண்டெடுத்த முத்து, இந்த தேவன். விகடனில் சுமார் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிரஞ்சீவிப் படைப்புகள் பல எழுதியும், சுமார் 15 ஆண்டுகாலம் பொறுப்பாசிரியராகப் பணியேற்று பத்திரிகையை நடத்தியும், விகடனின் புகழை உச்சத்துக்குக் கொண்டுசென்றவர் தேவன்.
துப்பறியும் சாம்பு உட்பட தேவன் எழுதிய அத்தனைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் நகைச்சுவை தெறிக்கும். 'ராஜத்தின் மனோரதம்’ 'மல்லாரி ராவ் கதைகள்போன்ற நகைச்சுவைக் கதைகளையும், 'மிஸ்டர் வேதாந்தம்’, 'ஸ்ரீமான் சுதர்சனம்’, 'லக்ஷ்மி கடாக்ஷம்போன்ற அற்புதமான குடும்ப நாவல்களையும் எழுதி, தனது பெயரை எழுத்துலகில் நீங்கா இடம்பெறச் செய்தவர் தேவன்.

இந்த வருடம், தேவனின் நூற்றாண்டு. 1913-ம் ஆண்டு, செப்டம்பர் 8-ம் தேதி திருவிடைமருதூரில் பிறந்த இவர், ஊர்ப் பாசம் காரணமாக தமது சொந்த ஊரை இயன்றபோதெல்லாம் தம் கதைகளில் எப்படியாவது நுழைத்துவிடுவார். இவரது கதைகளில் உவமைநயம் மிளிரும். உதாரணத்துக்குச் சில...

'எதைக் கேட்டாலும் இல்லைதான்; யார் கேட்டாலும் கிடையாதுதான். பீரங்கி வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப்போகும்!

'பல்வரிசை காட்டிக் கைக்கொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது எழும்புவதும் குனிவதுமாக இருந்தன.

'பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிரஹம் இரவில் துஷ்டமிருகத்தின் குகைபோலக் காணப்பட்டது.

பொதுவாகவே, துயரமான, துக்கமான நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு வாசகர்களுக்குப் படைப்பது தேவனின் பாணி. 'ஸ்ரீமான் சுதர்சனம்நாவல் ஓர் உதாரணம்.

எழுத்தாளர் சுஜாதா, தேவன் எழுத்துக்குப் பரமரசிகர். இவர் விகடனில் எழுதிய 'கற்றதும் பெற்றதும்தொடரில், 'பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக்கொண்டால்கூட, இன்றுவரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஓர் உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் 'ஸ்ரீமான் சுதர்சனம்அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்!என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தில் பல உத்திகளைப் புகுத்தியவர் தேவன். தொடர்கதை அத்தியாயங்கள் விகடனில் ஏழெட்டுப் பக்கங்கள் வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நறுக்கென்று ஒரே பக்கத்தில் 'மாலதிஎனும் சஸ்பென்ஸ் தொடர்கதையை எழுதினார் தேவன்.
தேவன், எழுத்துலகில் மட்டும் ஜாம்பவான் அல்ல; பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர், பயணக் கட்டுரையாளர், நாடக வசனகர்த்தா எனப் பல முகங்கள் கொண்டவர். தமிழ் எழுத்துலகத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்து, பெருமை சேர்த்தவர்.

இன்றைக்கு இலங்கைப் பிரச்னை பற்றிப் பேசுகிறோம்... படிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றிக் கண்ணீர் வடிக்கிறோம். 1930-களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியெல்லாம் நேரடியாகக் கண்டு, அங்குள்ள தமிழ்ச் சங்கங்களைப் பார்வையிட்டு, தமிழறிஞர்களைப் பார்த்துப் பேசி, தமிழர்களின் நிலையை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியவர் தேவன்.

ஆனந்த விகடனில் தேவனின் முக்கியப் பங்களிப்பு 'தென்னாட்டுச் செல்வங்கள்’. 1948-ம் ஆண்டில், விகடனில் முழு நேர ஓவியராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன் என்னும் 'சில்பியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் தெய்வத் திருவுருவங்களையும் அப்படியே சித்திரமாக வரையச் செய்து, வாசகர்களின் பார்வைக்கு வழங்கினால் என்ன என்று யோசித்து, அதைச் செயல்படுத்தியவர் தேவன்தான். தஞ்சை, தாராசுரம், திரிபுவனம், ஸ்ரீரங்கம், பேரூர் என ஏறத்தாழ, தமிழ்நாட்டில் சிற்ப எழில் கொஞ்சும் எல்லாக் கோயில்களையுமே 'தென்னாட்டுச் செல்வங்களில் காணலாம். ஓவியர் சில்பியின் திறமை பெரிதும் பேசப்பட்டது இந்தத் தொடர் மூலமாகத்தான். படங்களை சில்பி வரைய, அவற்றுக்கான விளக்கங்களை தமது பெயர் போட்டுக் கொள்ளாமலே எழுதினார் தேவன்.

1957 மே 5-ம் தேதி, தமது 44-வது வயதில் தேவன் மறைந்தார். மகாகவி பாரதி போல குறைந்த வயதே வாழ்ந்தாலும், தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொடையாகப் பல பங்களிப்புகளைச் செய்துவிட்டு அமரத்துவம் பெற்றவர் அவர்.

விகடனின் மகத்தான நஷ்டம் என்னும் தலைப்பில் மனம் பதைபதைக்க ஒரு தலையங்கம் தீட்டி, அவரது மறைவுக்குத் தமது இதய அஞ்சலியைச் செலுத்தினார் எஸ்.எஸ்.வாசன்.


கடந்த எட்டாம் தேதியன்று, தேவன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் எழுத்தாளர் தேவனின் நூற்றாண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு, 'ஓவியப் பிதாமகன்கோபுலு வந்திருந்து சிறப்பித்தார்.  'தேவன் வரலாறுஎன்னும் தலைப்பில், தேவனின் படைப்புகளையும் அவரது அருங்குணங்களையும் வெளிக்காட்டும் விதத்தில் எழுத்தாளர் சாருகேசி தொகுத்திருந்த தேவனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.

[ நன்றி : ஆனந்த விகடன், 18 செப்டம்பர் 2013 ] 

தொடர்புள்ள பதிவுகள்: 
தேவன் நூற்றாண்டு விழா -1 
தேவன் நூற்றாண்டு விழா -2 
தேவன் நூற்றாண்டு விழா -3 
தேவன் படைப்புகள் 

தென்னாட்டுச் செல்வங்கள் இப்போது விகடன் நூல்களாய்க் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய ஒரு விமர்சனத்தை இங்கே படிக்கலாம். 

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சசி -7 : பொதுஜன சேவை

பொதுஜன சேவை 
சசி





ரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பண்டங்களை 'பிளாக் மார்க்கெட்'டில் விற்கிறவர்களைக் கண்டால் உடனே அவர்களைப் போலீஸாரிடம் ஒப்புவித்துத் தண்டனை அடையச் செய்யவேண்டும் என்றும், அது ஒரு பெரிய பொதுஜன சேவையாகும் என்றும் பத்திரிகைகளில் அடிக்கடி படித்திருந்த எனக்கு, அன்று அந்த ஆசாமியிடம் அளவு கடந்த கோபம் வந்ததில் என்ன ஆச்சரியம்?

துணிச்சல் என்றால், சாதாரண துணிச்சலா அவனுக்கு! பட்டப்பகலில், பலர் நடமாடும் ஒரு பொது இடத்தில் நின்றவாறு, அந்தப் பேர்வழி சிறிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு ''வெள்ளை மணல், எத்தனை வீசை வேணும்? வீசை 2 ரூபாய்'' என்று கொஞ்சங்கூட பயப்படாமல், பக்கத்திலிருந்த ஒரு மனிதரிடம் விலை கூறிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மனிதர் ஒரு நீண்ட பெருமூச்சுடன், ''சர்க்கரைப் பஞ்சம் என்றுதான் ஒழியுமோ! இந்த பிளாக் மார்க்கெட்காரர்கள் என்று தான் ஒழிவார்களோ!'' என்று முணுமுணுக்கவே, பிளாக் மார்க்கெட் ஆசாமி கோபத்துடன், ''ஏன் ஐயா எங்களை ஒழியச் சொல்லுகிறீர்? உங்களைப் போன்ற ஆசாமிகள், எவ்வளவு அதிக விலை கொடுத்தும் சர்க்கரையை வாங்க முன் வருவதால் தானே ஐயா, நாங்கள் செழிக்கிறோம்! முதலில் நீர் தான் ஒழிய வேண்டும்!'' என்று இரைச்சல் போட ஆரம்பித்தான். 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த எனக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. 'வெள்ளை மணல்' என்று சொல்லி, சர்க்கரையை பிளாக் மார்க்கெட் விலைக்கு விற்கும் அந்தப் பேர்வழியை எப்படியாவது போலீஸாரிடம் அப்போதே ஒப்புவித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஆனால், அவனுடைய குற்றத்தை எப்படிப் போலீஸார் முன்னிலையில் ருசுப்படுத்துவது? ''நான் யாருக்கும் விற்கவில்லை!'' என்று அவன் சொல்லி விட்டால்?

அதற்கு ஒரு நல்ல யோசனை தோன்றிற்று எனக்கு. அவனிடமிருந்து 'வெள்ளை மணலை' அப்படியே நாம் விலைக்கு வாங்கிக்கொண்டுவிட்டு, பக்கத்திலிருந்த மனிதரை சாட்சி சொல்லச் சொன்னால், சட்டப்படி அந்த ஆசாமியின் குற்றத்தை ருசுப்படுத்திவிடலாமல்லவா?

இந்த யோசனையின்படி, அவனிடமிருந்து 'வெள்ளை மணல்' மூட்டையை விலைக்கு வாங்கி விட்டேன். அவன், ''இன்னும் உங்களுக்கு வேணுமானால், நம்ம வீட்டுக்கு நாளைக்குக் காலையிலே வாங்க, தரேன்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டபோது, ''தம்பி! சித்தே என்னோடு போலீஸ் ஸ்டேஷன்வரை வந்துவிட்டுப் போயேன்'' என்றேன்.

''எதுக்காக?'' என்றான் அவன் முறைப்பாக.

''பிளாக் மார்க்கெட்டிலே சர்க்கரை விற்ற குற்றத்துக்காக!''

''உங்களாலே அதை ருசுப்படுத்த முடியுங்களா?''

''ஏன் முடியாது? இதோ, இந்த நண்பர் எனக்கு சாட்சி சொல்லுவார்.''

''சொன்னா அவருக்குத்தான் ஆபத்து. பைத்தியம்னு சொல்லி, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவாங்க.''

''ஏன்?''

''இந்த மூட்டையில் இருக்கிற மணலைப் பார்த்து, சர்க்கரைன்னு சொன்னா பின்னே எங்கே கொண்டு போவாங்களாம்?''

''இதுலே மணலா இருக்குது?''

''வேற என்ன இருக்கு? நான்தான் ஆரம்பத்திலேர்ந்து சொல்லிண்டு வந்தேனே, வெள்ளை மணல்னு!''

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற படைப்புகள்

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தேவன் - 11 : தேவன் நூற்றாண்டு விழா -3 : தினமணிக் கட்டுரை

தேவனுக்கு வழி விடுங்கள் !

ராணிமைந்தன்


[  மேல் வரிசையில் ஓவியர்கள்: மணியம் செல்வன், நடனம், கேசவ். ] 


எளிமையாகவே வாழ்ந்து தன் 44 வயதில் மறைந்தவர் எழுத்தாளர் தேவன் (1913 - 1957). இம்மாதம் கடந்த எட்டாம் தேதி (8.9.13) ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கில், தேவன் அறக்கட்டளை எடுத்த தேவன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியும் அதேபோல் எளிமையாகவே இருந்தது. விழாத் துளிகளில் சில:

ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் அன்று காலை ஒன்பது மணிக்கே முக்கால் வாசி அரங்கம் நிரம்பியதற்கு முக்கியக் காரணம் சஞ்சய் சுப்ரமணியம். ஒன்றே முக்கால் மணி நேரம் ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டார். அற்புதமான கச்சேரி.

தேவனின் நெருங்கிய நண்பர் ஓவியர் கோபுலு கைத்தாங்கலாக மெதுவாக அடிமேல் அடி எடுத்து வந்தபோது அவரை வாயிலில் நின்று வரவேற்றார் ஓவியர் நடனம். தேவனுக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு உண்டு. அவருடன் நெருங்கிப் பழகி அவர் கதைகளுக்கு சித்திரம் வரைந்தவர் கோபுலு என்றால், தேவனின் மறைவிற்குப் பிறகு வெளியாகியுள்ள முப்பதுக்கும் மேலான அவருடைய புத்தகங்களில் பெரும்பாலானவற்றுக்கு அட்டைப் படச் சித்திரம் நடனத்தின் கைவண்ணம்தான்.

பலரின் பார்வையில் "தேவன் வரலாறு'' என்ற தலைப்பில் சாருகேசி தொகுத்த நூலை கீழாம்பூர் வெளியிட, திருப்பூர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்."ஒருமுறை அண்ணா பெருங்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த இடத்தின் வழியாக தேவன் காரில் வரவும், அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் அண்ணாவிடம் போய் "தேவனின் கார்' என்று சொன்னதும் "ஆனந்த விகடன் தேவனா... உடனே அவர் போக வழி விடுங்கள்' என்றாராம் அண்ணா. இதைச் சொன்னவர்: கீழாம்பூர்.



"தேவனின் கதைகளை பதிப்பிக்கும்போது கோபுலுவின் சித்திரங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும்'' என்றார் திருப்பூர் கிருஷ்ணன்.

தேவனைப் பற்றி இவ்வளவு தெரிந்த ஒருவர் கனடாவில் இருக்கிறாரா என்று வியக்க வைத்தார் அங்கிருந்து வந்து உரை நிகழ்த்திய பேராசியர் எஸ். பசுபதி. தன் கருத்துகளை சில நிமிடங்கள் பாடல்களாகவும் அவர் பாடினார். ""தேவன் எழுத்தில் இசையின் தாக்கம் உண்டு. அவரது "மைதிலி' நாவல் முழுக்க முழுக்க இசைத் தொடர்பானதுதான். தேவன் போன்று எழுதுபவர்களை ஊக்குவிக்க போட்டி வைக்கலாம்'' என்றார் பேராசிரியர் பசுபதி.

எழுத்தாளர் அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) ஒரு காரியம் செய்தார். தேவனின் "லட்சுமி கடாட்சம்' நாவலுக்கு கோபுலு வரைந்த சித்திரங்களை ஸ்கேன் செய்து அதை விஷுவலாக திரையில் காட்டியது புதுமையான முயற்சியாக இருந்தது. அது மட்டுமல்ல, அந்தச் சித்திரம் ஒவ்வொன்றையும் காட்டியபோது எந்தக் காட்சிக்காக கோபுலு வரைந்தது என்று கையில் எந்தக் குறிப்பையும் வைத்துக்கொள்ளாமல் அம்பை விளக்கியது வியக்க வைத்தது. மேலும், ""தேவன் காலத்தில் உள்ள நிலையையொட்டி பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவதாக அவரது கதைகள் அமைந்தன'' என்றார் அம்பை.

தேவன் அவர்களின் சகோதரி மகன் கே. விசுவநாதன் (அன்னம்), தேவனின் பரம ரசிகர் வாதூலன், பதிப்பாளர் "அல்லயன்ஸ்' சீனிவாசன், திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் ஆகியோருக்கு தேவனின் நினைவாகப் பரிசு வழங்கப்பட்டது. "பலரின் பார்வையில் தேவன்' புத்தகத்தைப் பதிப்பித்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கினார் "அல்லயன்ஸ்' சீனிவாசன்.

தேவனின் முதல் சிறுகதை "மிஸ்டர் ராஜாமணி'யை வெளியிட்டதுடன், அவரது எழுத்தில் ஈர்க்கப்பட்டு விகடனில் துணை ஆசிரியராக சேர்த்துக்கொண்டார் கல்கி. பின்னர் "தேவன்' விகடனின் நிர்வாக ஆசிரியராகவே மாறினார். அவரது எழுத்தில் நகைச்சுவை நிறைந்திருக்கும். ஜஸ்டிஸ் ஜகநாதன், மிஸ் மாலதி, சி.ஐ.டி. சந்துரு, லட்சுமி கடாட்சம், ராஜத்தின் மனோரதம், துப்பறியும் சாம்பு எல்லாமே வெவ்வேறு ரகம் என்றாலும் நகைச்சுவையே பிரதானம் என்று பேசியவர்கள் பலரும் ஒருசேர குறிப்பிட்டார்கள்.

ஒரு நூற்றாண்டு விழா என்றால் அதற்கான பதாகைகளை எப்படியெப்படி எல்லாமோ டிûஸன் செய்து பொருத்துவார்கள். ஆனால் இந்த விழாவிற்கு இரண்டே இரண்டு பேனர்கள். அவையும் அநியாயத்திற்கு சிறியதாக இருந்தன.

சாருகேசியின் தனி மனித முயற்சிதான் இந்த நிகழ்ச்சியை சாத்தியமாக்கி இருந்தது என்பது தெளிவாகப் புரிந்தது. விழா நேரத்தை அவர் எப்போதும்போல துல்லியமாக நிர்வகித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும் வந்திருந்தவர்கள் கருத்து வேறுபாடின்றி வெளியிட்ட ஒரு மனதான கருத்து: "ஒரு நூற்றாண்டு விழாவை இதை விட எளிமையாக யாராலும் கொண்டாடி விட முடியாது''.



(படம்: ஏ.எஸ். கணேஷ்)

[ நன்றி : தினமணி ] 

தொடர்புள்ள பதிவுகள்;



திங்கள், 9 செப்டம்பர், 2013

தேவன் - 10 : தேவன் நூற்றாண்டு விழா -2

தேவன் 100 (8/9/2013) : ஒரு தொகுப்புரை
சந்தர் சுப்ரமணியன், ஆசிரியர் ‘ இலக்கியவேல்’ 
செப்டெம்பர் மாதம் 8 ஆம் தேதி, சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் தேவன் நூற்றாண்டு விழாவை, தேவன்  அறக்கட்டளை  நடத்தியது. அது குறித்த சில குறிப்புகள்.



1. சஞ்சய் சுப்ரமணியம்

திரு சஞ்சய் சுப்ரமணியம் அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரியுடன் விழா தொடங்கியது. சஞ்சய் அவர்கள், தேவனிடம் தங்கள் குடும்பம் கொண்ட தொடர்பைக் குறித்த சில தகவல்களைக் கச்சேரியின் முன்னர் சபையோர்க்குத் தெரிவித்தார். தன் பாட்டனார் தேவனின் நண்பர் என்று நினைவு கூர்ந்ததுடன், தன் பாட்டனார் பற்றிய குறிப்பை, தேவனின் படைப்பிலிருந்தே எடுத்தளித்தார். சஞ்சய் அவர்களின் தந்தையார் துப்பறியும் சாம்பு வேடமேற்று நடித்தவர் என்ற குறிப்பையும் தெரிவித்தார். தேவனின் நூல்களே தன்னுள் தமிழ் இலக்கியம் குறித்த ஆவலைத் தூண்டியதாகத் தெரிவித்தார்.

Sanjay Subramanyam

தேவன் குறித்த நிகழ்ச்சி என்பதால், "தேவ தேவ ஜகதீஸ்வர" என்ற பாடலுடன் தன் நிகழ்ச்சியை அவர் தொடங்கினார். தொடர்ச்சியாக "வேலையா தயவில்லையா எனக்கருள", "ஸ்ரீ மாதா", "யார் போய் சொல்லுவார் எனக்காக", "வா சாம கோசருன்னதி", "தாயே ஏழை பால் தயை செய்வையே", "சொல்லச் சொல்ல  வர்மம் ஏனையா", " ஒருமையுடன் நினது திருமலரடி " என்ற பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்தினார். "தாயே ஏழை பால்" என்னும் பாடலை விஸ்தாரமாக பாடிப் பிரமிப்பூட்டினார். "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற" விருத்தமும் அழகுற அமைந்திருந்தது. வந்தோரின் செவிகளுக்கினிப்பாக எல்லாப் பாடல்களும் அமைந்தது மிகச் சிறப்பாகும்.

2. ஓவியர் கோபுலு அவர்களுக்கு மரியாதையும் கௌரவமும்

தேவனின் நண்பரும் அவர் கதைகளுக்குத் தன் சித்திரங்களின் மூலம் உயிரூட்டியவருமான கோபுலு அவர்களை மன்றம் கௌரவம் செய்தது. திரு ஆர் சேஷசாயி அவர்கள் வரவியலாத காரணத்தால், திரு R T சாரி அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

Gopulu being honoured
Gopulu, 'Nagupoliyan' Balu, Pasupathy


3. "தேவனின் வாழ்க்கை வரலாறு" நூல் வெளியீடு

"தேவனின் வரலாறு - பலரின் பார்வையில் ஒரு வாழ்க்கைச் சரிதம்" என்னும் நூலை திரு சாருகேசி தொகுத்துள்ளார். இந்தத் தொகுப்பு நூலில், தேவன் குறித்து பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பாக அளித்துள்ளார். அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட இந்த நூல் பார்வையாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.
இந்த நூலை வெளியிட்ட திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் தன்னுடைய உரையில் பல வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்தளித்தார். பேரறிஞர் அண்ணாவை நினைவுகூர்ந்த அவர், அண்ணாவுக்கும் தேவனுக்கும் இடையேயான உறவு குறித்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி விளக்கினார். பின்னர் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வை தேவனின் ஒரு வாழ்கை நிகழ்வோடு இணைத்துப் பேசினார். தேவரைக் கைது செய்ய வந்த போது தேவர் தன் கரத்தில் ஏந்திருந்த வேலுக்குப் பூசை செய்து முடித்துவிட்டு வருகிறேன் அதுவரை காத்திருங்கள் என்று கூறியது போலவே தேவனும் பெரியவர் அளித்த வேலைப் பூசை செய்து வந்தார் என்றும் பின்னர் அவ்வேலைக் கோவிலுக்கு அளித்த குறிப்பையும் கூறிச் சென்றார்.

Charukesi, RT Chari, Thiruppur Krishnan, Kizambur , Alliance Srinivasan

நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக தன்னுரையை ஆற்றினார். தேவனும், அவர்களின் படைப்புகளுக்கு சித்திரங்கள் வரைந்தளித்த கோபுலுவும் 'இரட்டை நாயனங்களாகவே' தங்கள் திறமைகளைக் காட்டியுள்ளார்கள் என்னும் கருத்தை நினைவுறுத்தினார். ஸ்ரீராம் குருப்பின் முதல் லோகோவை படைத்தவர் கோபுலு என்னும் குறிப்பில், கோபுலுவை 'லோகோபோகரி' என்று கூறிய விதம் அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியது. மேலும் சிட்டி அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது தானும் சிட்டி அவர்களுக்கு மகன் போல என்பதால் தன்னை ஐந்தாவது "citison" என்று கூறிக்கொண்டார். பொருளடக்கம் இல்லாததை நூலின் ஒரு குறையாகக் குறிப்பிட்ட அவர், அதில் அமைந்துள்ள கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், தேவனின் சகோதரியின் மகன் அன்னம் எழுதிய கட்டுரையின் நடை மிகச் சிறப்பாக உள்ளது என்றார். அது அன்னத்தின் நடை என்பதால் சிறப்பாகவே அமையமுடியும் என்று முடித்தார்.

4. தேவன் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல்

அ) பசுபதி அவர்களின் உரை

Gangadhar, NGS Krishnaswamy, Pasupathy
Gangadhar, Pasupathy

தொடக்கத்தில் சஞ்சய் அவர்களின் இசைகுறித்துச் சிலாகித்த பசுபதி அவர்கள், தேவனின் சங்கீத தொடர்புகளைப் பற்றிய குறிப்புகளுடன் தன்னுரையைத் தொடங்கினார். தேவனின் முதல் நாவலான மைதிலியில், நாவலின் நாயகன் செல்லமணி, பஞ்சு பாகவதராக மற்றவர்களால் தவறாக அறியப்படுவதையும் அந்தக் கதையின் ஓட்டத்தில் தேவன் அளித்த பல நகைச்சுவைத் துணுக்குகளையும் விவரித்தார். தர்மபுரி சுப்பராயர் அவர்களின் கீர்த்தனையை 'ஏமாந்தேனே' என்று மாற்றிக் கதையில் ஹாஸ்யத்தை புகுத்திய தேவனின் சாதுர்யத்தை நினைவு கூர்ந்தார்.

தேவனின் பல நாவல்கள் பிரபலமானாலும், அவர் எழுதிய பல்வேறு குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகள், தொடர்கள் குறித்துத் தான் உரையாற்ற இருப்பதாகக் கூறினார். தேவன் கோபுலு அவர்களின் கதைச்சித்திர உறவு தமிழ்க் கலாச்சாரத்தின் பொற்காலம் என்று கூறிய பசுபதி, தேவனின் நூல்கள் அனைத்தும் கோபுலு அவர்களின் மூல ஓவியங்களுடன் மட்டுமே பதிப்பிக்கப் படவேண்டும் என்ற தனது கோரிக்கையை முன்வைத்தார். 'கோபுலு அவர்களின் மூலப்படத்துடன் இல்லாது அந்நூல்களை வாசிப்பது பாதி அநுபவமே' என்று குறிப்பிட்டார். பின்னர் கோபுலு குறித்து 'கோபுலு ஓவியர் கோ' என்ற ஈற்றடி கொண்ட தன் வெண்பா ஒன்றை படித்தார்.
பின்னர் தேவனின் குறுந்தொடர்கள் குறித்துப் பேசிய பசுபதி, பல அரிய தகவல்களை பார்வையாளர்களுக்கு வழங்கினார்.

- 'போடாத தபால்' என்னும் குறுந்தொடர் இன்னும் அச்சில் வரவில்லை
- 'அப்பளக்கச்சேரி' பல்வேறு நாட்டுநடப்புக்களையும் செய்திகளையும் கொண்டது. 
1/ஆகஸ்ட்டு/1937 இல் ராஜாஜியை வட இந்தியாவில் ராஜாஜி என்று அழைக்கும் வழக்கம் தொடங்கியது என்ற குறிப்பு இந்த குறுந்தொடரில் உள்ளது 
- 'பிரபுவே உத்தரவு' என்னும் நாடகத்துக்காக எழுதப்பட்ட குறுந்தொடர் இன்னும் அச்சில் வரவில்லை
- 'கண்ணன் கட்டுரைகள்' என்னும் தொடரும் இன்னும் அச்சில் வரவில்லை. இதுவே தேவனின் படைப்புகளில் மிகச்சிறந்ததாகத் தான் கருதுவதாகப் பசுபதி குறிப்பிட்டார்
- 'ராஜாமணி', 'ராஜியின் பிள்ளை' மற்றும் 'அதிசய தம்பதிகள்' போன்ற தொடர்களையும் குறிப்பிட்டார்.
கடித இலக்கியத்தில் தேவனின் பங்கு மிகச் சிறந்தது என்பதை சான்றுகளால் விளக்கினார். 'விச்சுவுக்குக் கடிதங்கள்', 'கமலாவுக்குக் கடிதங்கள்' போன்ற தொடர்கள் மிகச் சிறந்த படைப்புகள் என்று குறிப்பிட்டார். ராசிகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்வது போன்ற கற்பனை தேவனின் படைப்புகளில் மிக அரிய பொக்கிஷமெனக் கூறினார். அத்தகைய யுக்தி இதுவரை எந்த மொழியிலும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
தேவன் வரலாற்றுக் கதைகளே எழுதியதில்லை என்பது தவறு என்று குறிப்பிட்ட பசுபதி, 'மல்லாரி ராவ் கதைகள்' வரலாற்று கதைகளே என்று குறிப்பிட்டார். பேஷ்வாக்கள் காலத்தில் நடைபெற்ற கதைகள் அவை என்ற குறிப்பையும் வழங்கினார்.
'துப்பறியும் சாம்பு' தேவனின் துப்பறியும் தொடரென்றாலும், அவர் அதற்கு முன்பே துப்பறியும் கதைகளை எழுதியுள்ளார் என்பதைக் குறிப்பிட்ட பசுபதி, 'கோபாலன் கவனிக்கிறார்' என்னும் துப்பறியும் தொடர் தான் அவரது முதல் துப்பறியும் தொடர் என்பதையும் குறிப்பிட்டார். 
'சாகாவரம் பெற்ற சாம்பு' என்றோர் கவிதையை ஆனந்தக் களிப்பு மெட்டில் பசுபதி அரங்கத்துக்கு அளித்தார். அதைத் தொடர்ந்து சி ஐ டீ சந்துரு குறித்தோர் விருத்தத்தையும் படித்தார்.

NGS Krishnaswamy, Pasupathy

இறுதியாக தேவனின் சாயலில் இன்றைய எழுத்தாளர்களை எழுத வைக்கும் வகையில் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

ஆ) எழுத்தாளர் அம்பை

"காரியம் யாவிலும் கைகொடுக்கும் பெண்களும் தேவனின் படைப்பு மாந்தர்களும்' என்ற தலைப்பில் எழுத்தாளர் அம்பை அவர்கள் தன்னுரையை ஆற்றினார். பெண் குறித்து தேவனின் பார்வையை அவர் கதைகளிலிருந்தே அவர் எடுத்துக் கூறிய விதம் சிறப்பாகவும் உருக்கமாகவும் அமைந்திருந்தது. பெண்ணுரிமை குறித்த பல கருத்துகளைத் தேவன் தன் படைப்புகளில் தந்திருந்தாலும், அன்றைய சூழலில் பெண் எப்படியெல்லாம் இருந்தாள் என்பதை உணர்த்தும் காலக்கண்ணாடியாக தேவனின் படைப்புகள் அமைந்திருந்தன என்பதை அழகிய காட்டுகளுடன் விளக்கினார்.
அதைத்தொடர்ந்து, கோபுலு அவர்களின் ஓவியங்கள் தேவனின் படைப்புகளுக்கு எவ்வாறு மெருகேற்றின என்பதைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க, ஒலி-ஒளி (ppt show) காட்சியின் மூலம் கோபுலுவின் சித்திரங்களைத் தொடுத்துக் காட்டினார். லக்ஷ்மி கடாக்ஷம் என்னும் தேவனின் படைப்புக்காக கோபுலுவின் சித்திரங்களைக் காட்டி அவைகுறித்த பின்புலத்தையும் விளக்கினார்.

'Ambai' getting a momento


இ) திரு கங்காதர்

தேவன் படைப்புகளில் P G Wodehouse-இன் தாக்கம் மிகுந்து காணப்படுவதாக கங்காதர் விவரித்தார். 'துப்பறியும் சாம்பு' என்னும் தொடர் pickwick papers என்னும் படைப்பைச் சார்ந்தது என்று குறிப்பிட்டார். மற்றும் தேவனின் பல கதாபாத்திரங்கள் Wodehouse-இன் பாத்திரங்களை ஒட்டி அமைந்துள்ளது என்பதைச் சில சான்றுகளுடன் தெரிவித்தார். நடராஜன் என்னும் பாத்திரம் 'Code of the Woosters" என்னும் படைப்பிலிருந்து வந்தது என்றும், கான்ஸ்டபுள் கண்ணாயிரம் என்பது கான்ஸ்டபுள் ஹூட்ஸ் என்றும் விளக்கினார்.
ஜஸ்டீஸ் ஜகந்நாதனின் வரும் கோர்ட் காட்சிகள் யாவும் அகதா கிறிஸ்டியின் நடையைப் பின்பற்றுவன என்பதையும் குறிப்பிட்டார்.
தேவனைப் போல எழுத இயலுமா என்று வினவிய கங்காதர், அப்படியே எவரேனும் முயன்றாலும், கால வித்தியாசத்தையும் மீறி தேவனின் நடையின் படைப்புகளைத் தர இயலுமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
தேவனின் படைப்புகள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருந்தாலும் இன்றளவும் அவரது படைப்புகள் கல்லூரிகளில் பாடநூலாக வரவில்லை என்ற தன் ஆதங்கத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

Gangadhar getting a momento


[ படங்கள் : சந்தர் ]

( தொடரும் )


தொடர்புள்ள பதிவுகள் :

தேவன் படைப்புகள்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

தேவன் - 9 : தேவன் நூற்றாண்டு விழா -1

தேவன் நூற்றாண்டு விழா -1
செப்டம்பர் 8, 2013.

தேவன் நூற்றாண்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

எழுத்தாளர் சாருகேசி மிக்க அக்கறையுடன் விழா நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார். இசை நிகழ்ச்சியில் தொடங்கி, மதிய உணவுச் சுவையுடன் நிறைபெற்றது.
கோபுலு, ’நகுபோலியன்’ பாலு, பசுபதி, சந்தர் , அம்பை, .., கங்காதர்

தேவனின் நெருங்கிய நண்பர்,  91-ஆண்டு இளைஞர் கோபுலு விழாவில் கலந்துகொண்டது எல்லோரையும் பெரிதும் மகிழ்வித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரைப் பார்த்து , அவரைப் பற்றி நான் எழுதிய ஒரு வாழ்த்து வெண்பாவைச் சமர்ப்பித்ததை அவர் நினைவு கூர்ந்தார். "சார், அதை மீண்டும் நான் இந்த விழாவிலும் படிக்கிறேன்" என்று சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டேன்.  மணியம் செல்வன், நடனம் போன்ற ஓவியர்களும் அங்கு வந்து அவர் ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர்.
கங்காதர், பசுபதி

விழாவில் 'தேவனி'ன் குறுந்தொடர்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிப் பேசினேன்.

நடுவில் நான் படித்த/ பாடின :-) சில கவிதைகளை இங்கு இடுகிறேன்.

. தேவன் எனும்மகா தேவன் 

( "நந்த வனத்தில் ஓர் ஆண்டி " மெட்டு )

தேவன் எனும்மகா தேவன் -அவர்
  தீட்டும் படைப்பில் நகைச்சுவை ஜீவன்
பூவென மென்மை  சிரிக்கும்  - அவர் 
  தூவும்மேற் கோள்கள் விழியை விரிக்கும்    1

சாகா வரம்பெற்ற சாம்பு -- அவன் 
  சகதர் மிணியோ அழகான வேம்பு !
வாகாய்த் துலக்குவான் துப்பு -- சாம்பு 
  வந்தாலே வேகாது துஷ்டரின் ‘பப்பு’!       2

மானேஜர் செய்தார்தி ருட்டு -- சாம்பு
  வாசனை மோந்துடைத் தானவர் குட்டு !
ஆனால் கிடைத்ததோ திட்டு! -- துப்(பு)
  அறியத் தொடங்கினான் வேலையை விட்டு!    3

காகம் கிளையிலுட் கார -- பின்
  கனியொன்று கீழே விழுவது போல 
யோகம் கொடுத்தது வெற்றி -- சாம்பு 
  உச்சம் அடைந்தான் உலகப்ர சித்தி !           4

கள்ளநோட் அச்சிட்ட குண்டன் -- அவனைக் 
  கைதாக்க சாம்பு பறந்தனன் லண்டன் 
வெள்ளைக் கமிஷனர் பின்னர் -- சாம்பு
  மேதையை மெச்சிக் கொடுத்தாரே ‘டின்னர்’ !   5 

புன்னகை வாழ்வினில் வேண்டும் -- அதைப் 
  போற்றும் எழுத்தினை நாமும் வளர்த்தால் 
இன்னோரு தேவன் வரலாம் -- பல‌
  இன்பப்  படைப்புகள்  மீண்டும் தரலாம் !          6


கோபுலு சார் பற்றி:
( முன்பே இங்கு நான் எழுதியது தான்! )
கோபுலு

நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,
ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்
சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிடும்
கோபுலு ஓவியர் கோ

சி.ஐ.டி சந்துரு பற்றி:

துருவும் கூர்மை விழிமுகம்;
. துப்பறி தொழிலில் தனிரகம்;
இரும்புக் கரத்தால் பேசுவான்
. எதிரி உடலை வீசுவான்
தெருச்சீ ராளம் புசிப்பான்;
. திருவாய் மொழியும் ரசிப்பான்
திருடும் நபர்க்குச் சத்துரு;
. தேவன் படைத்த சந்துரு! 


பிறகு விவரமாக எழுதுகிறேன். முதலில் , விழா அழைப்பிதழைப் பாருங்கள்!






( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள் :

தேவன் படைப்புகள்