ஸரிகமபதநி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸரிகமபதநி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 மே, 2016

சங்கீத சங்கதிகள் - 76

சில சங்கீத சமாசாரங்கள்
ரா.கி.ரங்கராஜன்

   




           
 சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றபோது, அந்த விழாவுக்காகப் பல சங்கீத வித்வான்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். புல்லாங்குழல் மேதை பல்லடம் சஞ்சீவி ராவ் மேடை ஏறினார். குழல் வாசித்துக் கொண்டிருக்கும்போது அரியக்குடியிடம். 'உங்களுக்கு ஏதாவது தர வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் சில்லறை இல்லை. 'நோட்டாகத் தருகிறேன்,' என்று கூறியவர், சங்கராபரண ராகத்தின் 'நோட்' வாசித்தார்.

சங்கீத வித்வான்களுள் மிக மிக தெய்வ பக்தியும் ஆசார அனுஷ்டானமும் உள்ளவராகத் திகழ்ந்தவர் செம்பை வைத்தியநாத பாகவதர். ஒரு முறை கள்ளிக் கோட்டையில் அவருடைய கச்சேரி இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு சற்று முன்னால் திடீரென்று அவருக்குத் தொண்டை கட்டிக் கொண்டது. பாடுவது கஷ்டம் என்று உணர்ந்தார். நாள்பூரா நன்றாயிருந்த குரல் திடீரென்று ஏன் இப்படி ஆயிற்று என்று திகைத்த செம்பை, 'இன்று என்ன திதி?' என்று விசாரித்தார். கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி என்று பஞ்சாங்கத்தைப் பார்த்து சொன்னார்கள். பிறகு தான் செம்பைக்குப் புரிந்தது. கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று குருவாயூர் சன்னதியில் பாடுவதை விரதமாகக் கொண்டிருந்தவர் அவர். அன்று அதை மறந்ததை நினைத்து வருந்தி, கச்சேரி ஏற்பாடு செய்தவரிடம் அனுமதி பெற்று, காரில் குருவாயூருக்குப் போனார். சுவாமி சன்னதியில் பாடிய போது சாரீரம் சரியாகிவிட்டது. வெகு நேரம் பாடினார். மறுநாள் கள்ளிக் கோட்டைக்குத் திரும்பி வந்து கச்சேரி செய்தார்.

இத்தகைய சங்கீதத் துணுக்குகளைப் படித்துக் கொண்டிருந்த சமயம் நண்பர் நாராயண விசுவநாத் தான் நடத்தி வரும் 'ஸரிகமபதநி' என்ற மாத இதழை நாராயண விசுவநாத் தான் அனுப்பி வைத்தார். எம்.எஸ். சுப்புலட்சுமி சிறப்பிதழ். அட்டையில் உள்ள வண்ணப் படம் கண்ணாடி போட்டு வைக்கும் அளவுக்குப் பளீரென்று இருக்கிறது. உள்ளே உள்ள கறுப்பு வெளுப்புப் படங்கள் சரியான மங்கல்.

எம்.எஸ்.ஸைப் பற்றி சமீப காலத்தில் ஏராளமான பாராட்டுக்களும் புகழுரைகளும் வாழ்க்கைக் குறிப்புக்களும் வெளி வந்துவிட்டன. ஆகவே இந்த 'ஸ்பெஷல்' இதழில் வித்தியாசமாக என்ன இருக்கப் போகிறது என்று நினைத்துப் புரட்டிப் பார்த்தேன். இரண்டொரு விஷயங்கள் புதிதாயிருந்தன.(ஒரு வேளை நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டதாகவோ படித்ததாகவோ இருக்கலாம்.)

1. வீட்டில் செல்லப் பெயர் குஞ்சம்மாள். அன்னை ஷண்முகவடிவு புகழ்பெற்ற வீணைக் கலைஞர். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் அரங்கில் ஷண்முகவடிவு அவர்களின் வீணைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. திடீ ரென்று வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு, அருகில் அமர்ந்திருந்த எட்டு வயது சிறுமி குஞ்சம்மாளைப் பார்த்து. 'எங்கே, அந்த ஆனந்த ஜா பாட்டைப் பாடு' என்றார் அன்னை. அவர் சொன்னதுதான் தாமதம், துளியும் சபைச் கூச்சமின்றி, கணீரென்று பாட ஆரம்பித்தாள் சிறுமி. சற்று முன்னால் வரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மேடை யேறி ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்த மராத்தியப் பாடலான 'ஆனந்த ஜா' வைப் பாடியது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இதுதான் எம்.எஸ்.ஸின் அரங்கேற்றக் கச்சேரி.

2. இசை உலகில் மகளுக்குக் கிடைத்த ஆதரவையும் வளர்ச்சியையும் மனத்தில் கொண்டு மதுரையிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தார் ஷண்முகவடிவு. சென்னை புரசைவாக்கம் தாணாத் தெருவில் ஜாகை. (ஆ! 'என்னோட' புரசை வாக்கத்துக்கு மேலும் ஒரு பெருமை!)

3. கஸ்தூரி பா நினைவு நிதிக்காகப் பல கச்சேரிகள் செய்தார் எம்.எஸ். இதைப் பாராட்டி, காந்தியடிகள் ஆங்கிலத்தில் தன் கைப்படக் கடிதம் எழுதி, தமிழிலே கையொப்பமிட்டு அனுப்பினார். அது: 'அன்புள்ள சுப்புலட்சுமி, உங்களது தெய்வீகமான இசையைப் பயன்படுத்தி, கஸ்தூரி பா நினைவு நிதிக்காக நீங்கள் செய்துள்ள ஆத்மார்த்தமான தொண்டின் முழு விவரங்களையும் ராஜாஜி என்னிடம் கூறினார். ஆண்டவனின் பரிபூரண அருட்கடாட்சம் உங்களுக்குக் கிட்டட்டும். உங்கள் மோ. க. காந்தி'.

4. 'சகுந்தலை' படத்தில் 'மல்லிகைப் பூங்கொடி பாங்கி இதோ பார்' என்ற பாடலை டி.ஏ. மதுரத்துடன் இணைந்து பாடியிருக்கிறார் எம்.எஸ்.

5. புழுதி நிறைந்த அந்த சாலையில் ஒரு ஜட்கா வண்டி போய்க் கொண்டிருந்தது. உள்ளே அமர்ந்திருந்தவர் ஒரு சாது. வண்டியின் கம்பியைப் பிடித்தபடி பினினாலேயே ஓடி வந்து கொண்டிருந்தார் ஓர் இளைஞர். தேசத் தொண்டில் தானும் பங்கேற்க வேண்டுமென்று மூச்சு இரைக்கக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். 'உயிரையும் கொடுப்பாயா?' என்று சாது கேட்க, 'கொடுப்பேன் ஐயா' என்று அந்த இளைஞர் உறுதி கூற, 'சுண்ணாம்புக்காரத் தெரு பதினெட்டாம் நம்பர் வீட்டுக்கு வந்து பார்' என்றார் சாது. அவர் தொழுநோயின் நடுவில் 'வந்தே மாதரம்' என்று கோஷம் கொடுத்த தேச பக்தர் சுப்பிரமணிய சிவா. இளைஞர் எம்.எஸ்.ஸின் கணவர் கல்கி சதாசிவம். 1921ம் வருடம் இந்த சந்திப்பு நடந்த இடம் கும்பகோணம்.(ஆ! மறுபடியும் 'என்னோட' கும்பகோணம்!) 

6. சுப்புடுவின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:( 1) (இதை சுப்புடு எப்போது எழுதினார் என்று தெரியவில்லை). இசையைத் தவிர எம்.எஸ். ஸுக்கு வேறு ஒன்றுமே தெரியாது. எந்த இடத்தில் கச்சேரி என்பது கூட அவர் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. அதெல்லாம் சதாசிவத்தின் இலாகா.

வங்காளிப் பாட்டுக்கள் கற்றுக் கொள்ளும்போது எம்.எஸ். பல அல்லல்களுக்கு ஆளாகியுள்ளார். 'அந்தகார'வை 'ஒந்தகார' என்றும் 'விரஹ' என்பதை 'பீரோ ஹொ' என்றும் உச்சரிக்க, வாயைக் கிழக்கு மேற்காக அசை போட்டு. நுனி நாக்கு அண்ணாவியைத் தொட்டு, பரம வேதனையைப் பட்டால்தான் வங்காளம் வெளியேவரும். துளி உச்சரிப்பு விலகினால் கூட வங்காளம் வேதாளமாகிவிடும்.

டிசம்பர் சீசன் போது எத்தனை வித்வான்கள் பாடினார்கள், என்னென்ன ராகங்களைக் கையாண்டார்கள்,

பல்லவிக்கு எடுத்துக் கொண்ட ராகங்கள் எவை யெவை என்பதைக் கேட்டறிந்து. அலசி, எம்.எஸ்.ஸின் கச்சேரிக்கு சதாசிவம் தான் நிரல் தயாரிப்பார்.

இவ்வளவு நேரம் படித்து சலித்திருந்தவர்களுக்கு ஒரு ஜோக்:

டி. ராஜேந்தர் ஒரு கச்சேரிக்குப் போனார். எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'தாத்துக்குக் காவேரி ராகத்துக்கு சாவேரி' என்றார் டி.ராஜேந்தர்.

                    
 [ நன்றி: அண்ணாநகர் டைம்ஸ் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

(1)  சுப்புடுவின் கட்டுரை அடுத்த ‘சங்கதி’யில் வரும் ! 


சனி, 3 மே, 2014

சங்கீத சங்கதிகள் - 37

டி.கே.பட்டம்மாள் - 5


[ நன்றி: ஸ்ருதி, அக்டோபர் 83 ] 


முந்தைய பதிவுகள் :

டி.கே.பி -1
டி.கே.பி -2
டி.கே.பி -3
டி.கே.பி -4


எனது இசைப்பயணம் -3
டி.கே.பட்டம்மாள்  

( தொடர்ச்சி ) 

டைகர் வரதாச்சாரியார் எனக்கு “கான சரஸ்வதி”னு பட்டம் கொடுத்தார். அரியக்குடி ஸ்ரீராமானுஜ ஐயங்கார் என்னைப் பாராட்டி “பாட்டம்மா ..” “ ஸங்கீதத்துக்காகப் பாடு பட்ட அம்மா”னு வர்ணிச்சார்.

தமிழ் இசையில் எனக்கு ஆர்வம் வருவதற்குத் “தமிழ் தியாகய்யா” பாபநாசம் சிவன் அவர்களும் ஒரு முக்கிய காரணம். எத்தனை தமிழ் கீர்த்தனைகள். அப்பப்பா...வற்றாத இசைக் கடல்னா அவர். நேரிடையாக அவரிடமே கற்றுக் கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது.

மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், வீருசாமி பிள்ளை மற்றும் டி.என்.ஸ்வாமிநாதப் பிள்ளை ஆகியோரது சஷ்டியப்த பூர்த்தி விழாக்களின்போது பாடும் பாக்கியம் கிடைச்சுது. அதே போல் நாதஸ்வர சக்ரவர்த்தி T.N.ராஜரத்தினம் பிள்ளையின் மருமான் கக்காயியின் கல்யாணத்துக்கு நானும் ஜெயராமனும் பாடினோம். Dr.S.ராமநாதனின் ( தியாகராஜர் இயற்றிய) பிரஹ்லாத பக்தி விஜயம் வெளியீட்டு விழா மைலாப்பூர் சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. அரியக்குடி ஸ்ரீராமானுஜ ஐயங்கார் முன்னிலையில் ஆலத்தூர், எம்.எஸ். நான் எல்லோரும் பாடினோம், மறக்க முடியாத நிகழ்ச்சி.

1947-ல ஆகஸ்டு 14 ராத்திரி 12 மணிக்கு இங்க மெட்ராஸே ஜகஜ் ஜோதியாயிருந்தது. எங்க பார்த்தாலும் மாவிலைத் தோரணங்கள். எல்லோரும் அவா அவா ஆத்துல கல்யாணம் மாதிரி கொண்டாடிண்டிருந்தா. ஆல் இண்டியா ரேடியோவுல என்னைப் பாடக் கூப்பிட்டா. “விடுதலை, விடுதலை..” “ஆடுவோமே பள்ளு பாடுவோமே..” “வெற்றி எட்டுத் திக்கும் எட்ட” “ வந்தே மாதரம்” பாடல்களைப் பாடினேன். பாடி முடிச்சப்பறம், அப்போ டைரக்டராயிருந்த கோபாலன் சன்மானமா செக் கொடுத்தார். கண்டிப்பாக வாங்கிக்கவேணும்னு கட்டாயப்படுத்தினார். என் தேசத்துக்கு, என்னோட பிறந்த மண்ணுக்கு, என் தாய் திருநாட்டுக்கு ஸ்வதந்திரம் கிடைச்சிருக்கு. நான் கைநீட்டி காசு வாங்க மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டேன். என்னோட பாரதத் தாய்க்கு அடிமை விலங்கெல்லாம் நீங்கி விடுதலை கிடைச்சதுக்குக் காசு வாங்கிண்டு பாடுவதா... அபச்சாரம் இல்லையா?

[ நன்றி: ஸ்ருதி, ஆகஸ்ட் 2009 ]

எனக்குப் பாரதியார் பாடல்கள் மேல் அதீதமான ஆசை வரக் காரணமாயிருந்தவர் என் கணவரின் மாமா டாக்டர் ஸ்ரீநிவாசந்தான். தேசபிதா மகாத்மா காந்திஜி காஞ்சிபுரம் வந்தப்போ என்னை ஊக்குவித்துத் தைரியமாகப் பாரதியார் பாடல்களைப் பாடச் சொன்னார். காந்திஜி முன்பாக, “வீர சுதந்திரம் வேண்டி நின்றார்..” பாடினேன். பாரதி பாடல்கள் பாட ஆரம்பிச்சது இதுலேர்ந்துதான். இன்னி வரைக்கும் ஏராளமான பாரதி பாடல்கள் பாட அஸ்திவாரமாய் அமைஞ்சது இந்நிகழ்ச்சி தான். தேசபிதா மகாத்மா காந்தி காலமானபோது 1948 ஜனவரியில ரேடியோவில் “வைஷ்ணவ ஜனதோ” “ சாந்தி நிலவ வேண்டும்” “காந்தி மகான் பிறந்தார்”..போன்ற பாடல்களைக் கண்ணீர் மல்கப் பாடினேன்.

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் தாயார் ஸ்ரீமதி வீணை சண்முக வடிவு அவர்களுக்கு என் மீது அதீதமான பிரியமும், வாஞ்சையுமுண்டு. அதேபோல் ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, காலஞ்சென்ற எம்.எல்.வி போன்ற இன்னும் பல இசைக் கலைஞர்களுக்கு என்மீது மிக்க பந்துப்பிரியமுண்டு.

நமது கர்நாடக இசையானது பிராச்சீனமானது. அது வெறும் கலை மட்டுமல்ல, ஒரு சாஸ்திரமும் கூட. மனசுக்கும், காதுக்கும் சுகம் அளிக்க வல்லது. சாதகம் மூலம் அந்த இறைவனையே அடையலாம். ”


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

( தொடரும் )

[ நன்றி : ஸரிகமபதநி, டிசம்பர் 2000 இதழ் ]

தொடர்புள்ள பதிவுகள் :

டி.கே.பட்டம்மாள்

சங்கீத சங்கதிகள்

DKPATTAMMAL-FILM-SONGS

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 36

டி.கே.பட்டம்மாள் - 4

 முந்தைய பதிவுகள் :


எனது இசைப்பயணம் -2
டி.கே.பட்டம்மாள்  


( தொடர்ச்சி ) 

எங்க ஸ்கூல் ஹெட்மிஸ்டிரஸ் ஸ்ரீமதி அம்முகுட்டி அம்மாள் இசை நாடகம் ஒண்ணு தயாரிச்சு என்னை நடிக்கவும் பாடவும் வெச்சா. நான் அதுலே சாவித்திரி வேஷம் போட்டேன்.”நாடகத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக தங்கப் பதக்கம் பரிசுபெற்ற காஞ்சிபுரம் கவர்ன்மெண்ட் உபாத்தியாயினி பயிற்சி பாடசாலையைச் சேர்ந்த டி.கே.பட்டம்மாள் “ என கொட்டை எழுத்துக்களுடனும், போட்டோவுடனும் அடுத்தநாள் பேப்பரில் நியூஸ் வெளியாயிடுத்து! அந்தக் காலத்துல இது ஒரு மாபெரும் புரட்சியாக்கும்! 
[ நன்றி: ஸ்ருதி ] 
இந்தச் செய்தியைப் படிச்சுட்டு, Columbia Gramaphone கம்பெனிகாரர்கள் ரிகார்டு கொடுக்கணும்னு என் அப்பாவை அணுகினார்கள். அந்தக் காலத்துல, ஸ்திரீகள் போட்டோ எடுத்துக்கறதே மகாபாவம். மற்றும் துர்லபமும் கூட. அதுலேயும் ரிகார்டு வேற கொடுப்பதா? என் அப்பா வேண்டாவிருப்பாகச் சம்மதித்தார். “முக்தியளிக்கும் திருமூல ஸ்தலத்தைக் கண்டு” பாடல்தான் நான் முதன்முதலா கொடுத்த ரிகார்டு!

திருப்புகழ் மாதிரி ஒரு இசை வடிவம் எந்த நாட்டு இசையிலும் கிடையாது. 108 அங்க தாளங்களையும் உள்ளடக்கி இந்த சந்தத் திருப்புகழை நமக்கு அளித்துள்ளார் அருணகிரிநாதர். சிம்ம நந்தன தாளம் கூட இதுல இருக்கிறதாகச் சொல்லுவா. காஞ்சிபுரத்தில திருப்புகழ் பாடல்களைப் பாடி வந்த வேலூர் ஸ்ரீ அப்பாதுரை ஆசாரி என்பவர்தான் எனக்கு திருப்புகழ், திருப்பாவை-திருவெம்பாவை, இராமலிங்க ஸ்வாமிகளின் அருட்பா ஆகியவைகளைக் கற்றுக் கொடுத்தார்.

ஆரம்ப காலத்தில் நான், ஜகன்மோகினி ராகத்தில் அமைந்த “ நெஞ்சே நினை அன்பே துதி நெறி நீ குருபரனை ..” என்கிற பல்லவியைப் பாடுவேன். இது எனது மானசீக குரு காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையவர்கள் பாடிப் பிரபலமானதாகும். மிகவும் கடினமான பல பல்லவிகளை திருப்பதி ஸ்ரீமான் வித்யால நரசிம்மலு நாயுடு கற்றுக் கொடுத்தார்.

1929-ல் மதராஸ் கார்பரேஷன் ரேடியோவில் பாடினேன்.

1930-ல் ப்ரொபசர் சாம்பமூர்த்தி நடத்திண்டுருந்த Summer School of Music -ல நான் சேர்ந்தப்போ நல்ல நல்ல கிருதிகளைச் சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு வாரக் கடைசியிலும், ரஸிகர்கள் முன்னிலையில் நாங்கள் மாணவ, மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து பாடுவோம். வீணை மற்றும் வயலினும் சொல்லிக் கொடுப்பா.உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ... நான் வீணையும், வயலினும் கத்துண்டு வாசிச்சும் இருக்கேன்! இந்த சமயத்துலதான் நன்னா பாடும் மாணாக்கர்களுக்கு கச்சேரி செய்ய வாய்ப்பும் கொடுப்பார்கள். எங்களுக்கு மயிலாப்பூர் ரஸிக ரஞ்சனி சபாவிலேயும், ஜார்ஜ் டவுன் கான மந்திரத்திலுமாக இரண்டு chance கிடைச்சுது.

முதன் முதலாக 1933-ல் ( எக்மோர் லேடிஸ் கிளப் ) சென்னை எழும்பூர் மஹிளா ஸமாஜத்தில் தான் என்னுடைய முதல் Public Performance  அரங்கேறியது. இதே வருஷம்தான் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சிஷ்யர் ஸ்ரீமான் வி.சி.வைத்யநாதன் அவர்களிடம் பல ‘அட தாள’ வர்ணங்களும், க்ஷேத்ரஞர் மற்றும் தமிழ் பதங்களும் கத்துண்டேன். காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை சிஷ்யர் என்.எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரிடம் “நாயனாப்பிள்ளை பாணி”யில் பாடல்கள் பாடமாச்சு .

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதிகள்னாலே எனக்கு உயிர். அவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் “ஸங்கீத கலாநிதி” நீதியரசர் T.L.வெங்கடராமய்யர் அவர்கள். அவரிடம் என்னை அம்பி தீக்ஷிதர்தான் அறிமுகப் படுத்தினார். அவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சொல்லிக் கொடுப்பார். நான் கீழே பாயில் உட்கார்ந்து கத்துப்பேன். பின்னர், அதைப் பிராக்டீஸ் பண்ணுவேன். அதையே திருப்பித் திருப்பிப் பாடிப் பார்த்துப்பேன். எத்தனை கிருதிகள் சொல்லிக் கொடுத்திருப்பார்! மகாமேதை அவர். அவர் மாதிரியெல்லாம் மனுஷாபிமாமானத்தோடும், பிரியத்தோடும் மனுஷர்களைப் பார்ப்பது அபூர்வம்...!

ஸ்ரீமான் T.L.வெங்கடராமய்யர் பற்றி இன்னொரு விசேஷமான விஷயம். ‘உனக்கு சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கறதைப் பார்த்துட்டுதான் நான் உயிரையே விடுவேன்” என்று சொன்னார். அதன்படியே 1971 ஜனவரி 1 அன்று சதஸ் நடந்தபோது எனக்கு ஸங்கீத கலாநிதி பட்டம் வழங்கப் பட்டது. மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த அவரால் விழாவுக்கு வரமுடியலை. பின்னர், அவர் வீட்டுக்குச் என்று விருதைக் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கிண்டேன். சொல்லி வைத்தாற்போல் அன்றே அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஏதோ, நான் விருது வாங்குவதற்காகக் காத்து கொண்டிருந்தது போல் இருந்தார். என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி இது. அது மட்டுமில்லே. என்னால் தாங்கிக்க முடியாத பிருவுகள்ல இது ஒண்ணு. மற்றது என்னோடேயே உயிரோடு உயிராக கலந்திருந்த தம்பி D.K.ஜெயராமன் காலமானது.....”

( தொடரும் )

[ நன்றி “ ஸரிகமபதநி, டிசம்பர் 2000 ]

தொடர்புள்ள பதிவுகள் :


ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 35

டி.கே.பட்டம்மாள் -3
[ நன்றி; dkpattammal.org ]

முந்தைய பதிவுகள் :

( தொடர்ச்சி ) 
டி.கே.பி அவர்கள் மனம் திறந்து தன் வாழ்க்கை விவரங்களைப் பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். இப்படி ‘ஒரு திறந்த புத்தகமாய்’ப் பேசிய இசைமேதைகள் ஒரு சிலரே. சில கட்டுரைகளிலும் அவை பதிவாகியிருக்கின்றன. ‘ஸ்ருதி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் முதல் இரு இதழ்களில் ( அக்டோபர் , நவம்பர் 83) வெளிவந்த கௌரி ராம்நாராயணனின் ஆங்கிலக் கட்டுரை அவற்றுள் ஒன்று. அதே போல் ‘ஸரிகமபதநி’ என்ற தமிழ்ப் பத்திரிகையில் டிசம்பர் 2000-இல் வெளிவந்த தமிழ்க் கட்டுரையும் ஒன்று. அந்தத் தமிழ்க் கட்டுரையிலிருந்து , டி.கே.பட்டம்மாளின் சொற்களிலேயே, அவருடைய சில வாழ்க்கை நிகழ்வுகளையும், சில இசை நினைவுகளையும் இப்போது பார்ப்போம்.
எனது இசைப்பயணம் -1
டி.கே.பட்டம்மாள்  
[ ஒரு தொகுப்பு; நன்றி: சங்கர் வெங்கட்ராமன், ஸரிகமபதநி ]
நான் மூணு மாசக் குழந்தையாய் இருந்தபோது, எங்கள் அப்பாவும், அம்மாவும் திருவண்ணாமலையில் அருளாட்சி செய்துவந்த மகான் ஸ்ரீரமண மகரிஷி அவர்களது காலடியில் என்னைப் போட்டனர். அப்போ, பகவான் ரமணர் தேன்துளிகளை என் நாக்கில் தெளித்து ஆசீர்வாதம் செய்தாராம். இப்பேர்ப்பட்ட பாக்கியத்தை அடைய நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கணும்!

[ ஒரு குறிப்பு: தான் பிரபலமாக்கிய ”வள்ளி கணவன் “ என்ற கிளிக்கண்ணி மெட்டில் அமைந்த “வள்ளல் ரமணர் பேரை வழிபோக்கர் பாடினாலும் ...” என்ற ஒரு பாடலை டி.கே.பி பலமுறை பாடியிருக்கிறார். ] 
வட ஆற்காடு மாவட்டம் ஆரணியிலிருந்து, ‘தெலுங்கு வாத்தியார்னு ஒருத்தர். ஒரு கல்யாணத்துல நானும் என் அண்ணா ரங்கநாதனும் பாடினதைப் பார்த்துட்டு அப்படியே என்னை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்து “நான்தான் உனக்குப் பாட்டு சொல்லிக் கொடுபேன்”னார். எனக்கு அப்போ 6 வயசுதான். அவராகவே ஆசைப்பட்டு “கொலுவமரகத” “கோரினவரமு”, “லேகனா” “துளசி பில்வ” போன்ற கிருதிகளைச் சொல்லிக் குடுத்தார். நான் பிரபல பாடகியானதுக்கு அப்புறமா ஒருநாள் எங்காத்துக்கு ஒரு வயசான கிழவர், தலையெல்லாம் நரைச்சுப்போய் தள்ளாடிண்டு வந்தார். கடைசியிலே பார்த்தா இவர்தான். நான் அப்படியே அழுதுட்டேன். எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த குருவாச்சே. வேஷ்டி, அங்கவஸ்திரம், மற்றும் ஆயிரம் ரூபாய் சன்மானத்தோட கொடுத்தேன். அப்படியே திருப்பிக் கொடுத்துட்டார். “ என் பொண்ணு மாதிரியம்மா நீங்க! என் அன்பளிப்பா இதைக் கருதி வேஷ்டி, அங்கவஸ்திரத்தை என் மாப்பிள்ளைக்குக் கொடுக்கிறேன்”னு திருப்பிக் கொடுத்துட்டார். இன்னி வரைக்கும் அவரோட பெயர் தெரியாது! 
’கவர்ன்மெண்ட் டெக்னிகல் எக்ஸாமினேஷன் இன் மியூஸிக்’ பரிட்சைக்காக அப்பாவும், நானும் மதராஸ் வந்தோம். புரொபசர் சாம்பமூர்த்தி, டைகர் வரதாச்சாரியார் மற்றும் ஸ்ரீமான் அம்பி தீக்ஷிதர் ஆகியோர் எக்ஸாமினர்களாக இருந்தனர். அம்பி தீக்ஷிதர் “ ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே ..” ( காம்போதி) பாடச் சொன்னார். டைகர் வரதாச்சாரியார் பிலஹரியில் “நா ஜீவாதார” பாடச் சொன்னார். பரீட்சை முடிந்ததும் எனக்கு ரொம்ப நல்ல எதிர்காலம் இருப்பதாக ஆசீர்வதித்து, தானே எனக்குப் பாட்டுக் கற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார் அம்பி தீக்ஷிதர். இவர் சாட்சாத் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பேரன். எனக்கு வீணையோட பாட்டு சொல்லிக் கொடுத்தார். அப்போதான் குரல் அழகா இழைஞ்சு, குழைஞ்சு வரும்னு சொல்லுவார். 
“பாலகோபால..” “கஞ்சதளாயதாக்ஷி”...கிருதிகளைச் சொல்லிக் கொடுத்து ஆசீர்வதித்தார். என்ன ஒரு மகாபாக்யம்? இது தவிர ராக ஆலாபனை செய்யும் முறைகளை காஞ்சிபுரம் பட்டு ஐயங்கார் அவர்களிடமும் “ரக்ஷபெட்டரே”(பைரவி), “இகநன்னுப்ரோவ” போன்ற கிருதிகளை சின்னமாள்னு ஒரு அம்மாளிடமும் கற்றேன். 
என்னோட மானசீக குருவாக காஞ்சிபுரம் சுப்பிரமணிய பிள்ளை அவர்களைத்தான் கருதுகிறேன். இவர் யார் தெரியுமா? காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையேதான்! வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, டோலக், மோர்சிங் மற்றும் கொன்னக்கோல்னு ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரியைத் துணிஞ்சு நடத்திக் காட்டிய இசைமேதை ஸ்ரீமான் நாயனாப் பிள்ளையவர்கள்தான். ராக பாவத்தையும், லய சமத்காரத்தையும் ஒரே தராசில் நிறுத்தாற்போல் சரிசமமாக பங்கிட்டு அளிப்பார்.



காஞ்சிபுரத்துலே என் பாட்டைக் கேட்டு, ரஸிச்சு தங்கள் வீட்டு நவராத்திரி கொலுவின்போது என்னைப் பாட அழைத்தார். என்னுடைய பாட்டைக் கேட்டுவிட்டு நாயனாப் பிள்ளை மிகவும் மனமகிழ்ந்து பாராட்டினார். அதன் நற்பலனாக அவருடைய தாயார் காமாட்சி அம்மாள் எனக்கு மாஞ்சி ராகத்தில் “ப்ரோவவம்மா” கிருதியைச் சொல்லிக் கொடுத்தார். அந்த சமயத்தில் தான் பிருந்தா-முக்தா ஸகோதரிகள் சின்னப் பெண்களா வருவா ....” 

( தொடரும் )

[ நன்றி : ஸரிகமபதநி, டிசம்பர் 2000 இதழ் ]

தொடர்புள்ள பதிவுகள் :


செவ்வாய், 25 ஜூன், 2013

திருப்புகழ் - 7

அமெரிக்காவில் திருப்புகழ் !



நவம்பர் 2, 1997
. அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில், அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாட்டில், குருஜி ராகவன் தலைமையில் திருப்புகழ் இசை வழிபாடு நடந்தது. டொராண்டோவிலிருந்து என்னைப் போன்ற பல திருப்புகழ் அன்பர்கள் அங்குச் சென்று பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த  ‘ஸரிகமபதநி’ என்ற பத்திரிகையின் பிப்ரவரி -98 இதழில் நான் ஒரு சிறு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்!




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:





வியாழன், 7 பிப்ரவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 15

தியாகராஜரும் தமிழும் 
பசுபதி


”ஸங்கீத ஸரிகமபதநி”  என்ற இசை-நாட்டிய மாத இதழைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றி ரா.கி. ரங்கராஜன் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.

“ கர்நாடக சங்கீதத்தின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் பத்திரிகைகளில் ஒன்று 'ஸங்கீத ஸரிகமபதநி'. நல்லி குப்புசாமி செட்டியார் இதன் தலைமைப் புரவலர்.(மாத இதழ் என்று சொல்லிக்கொள்கிறதேயொழிய அப்படியொன்றும் இது ரெகுலராக வருவதாய்த் தெரியவில்லை.) ரொம்ப மேதாவித் தனமான சங்கீத நுணுக்கங்களுக்குள் புகுந்து என்னைப் போன்ற சாமானியனின் மூளையை சிரமப்படுத்துவதில்லை இந்த இதழ். சங்கீத மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை சிறு சிறு துணுக்குகளுடன் சேர்த்துத் தருகிறது. அதே சமயம், கொஞ்சம் வம்பு தும்புகளையும் வெளியிடுகிறது. “ 


என்று தொடங்கி எழுதியிருக்கிறார்.  சாதாரணமாக இந்த இதழில் ஜோக்குகள் வருவதில்லை. ஆனால், பாருங்கள்! நானும் பல இதழ்களைப் படித்திருக்கிறேன். என் கண்ணில் படாத ஒரு ஜோக் ரா.கி.ரங்கராஜனின் கண்ணில் பட்டிருக்கிறது! 

 'என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்...'

 'சரி, நீ என்ன பண்ணறே?'

 'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?'

அது சரி,”தியாகராஜரும் தமிழும்” என்ற கட்டுரைக்கு வருவோம்.இது ”ஸரிகமபதநி” பத்திரிகையில் டிசம்பர் 98-இல் வெளியானது. மீண்டும் ஒருமுறை 2005-இல் வெளியிட்டார்கள் . ( இந்தக் கட்டுரையின் கடைசியில் என் வெண்பா-முயற்சி ஒன்று மூலத்தில் இருந்தது. இப்போது பார்த்தால், அது வெண்பா இல்லை என்று தெரிந்தது :-((! அதனால் அதை ‘சென்ஸார்’ செய்துவிட்டு இன்னொரு முயற்சியைக் கட்டுரைக்குப் பின் சேர்த்துள்ளேன்:-))!) மற்றபடி அந்த முழுக் கட்டுரையும் , அந்த இதழின் அட்டைப்படமும் இதோ! 

( கட்டுரையை ஆசிரியரிடம் அனுப்பியபோது, எஸ்.ராஜம் அவர்களிடம், கோபால கிருஷ்ண பாரதி தியாகராஜரைச் சந்திப்பது போல் ஒரு சித்திரம் வரையச் சொல்லி, அதை வாங்கிப் பிரசுரிக்க விண்ணப்பித்தேன்; கட்டுரையில்  நான் விரும்பிய இருவரும் உள்ளனர்; ஆனால் ஒன்றாக இல்லை!  ) 





இசையுலக மாளிகையில் இன்றுபலர் நல்ல
பசையுடனே வாழ்வதற்குப் பாடல் பலஎழுதக்
காசெதுவும் கேட்காத கண்ணியனை ஸ்ரீத்யாக
ராசனென ஏத்துதல் நேர். 


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort.  Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்