வீயெஸ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீயெஸ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2020

1570. சங்கீத சங்கதிகள் - 237

இசை உலகின் மகாராஜா!
வீயெஸ்வி



ஜூன் 24மகாராஜபுரம் சந்தானத்தின் நினைவு தினம்.

அவர் டொராண்டோவிற்கு 81-இல்  முதன் முறை வந்தபோது, எங்கள் வீட்டில் அவரும், அவர் மனைவியும் தங்கிய போது நடந்தவை யாவும் மனத்தில் பசுமையாக இன்னும் இருக்கின்றன.

பல வருடங்களுக்கு முன், நான் சென்னையில் இருந்தபோது, நான் வானொலியில் அடிக்கடி   கேட்ட  அவருடைய ஒரு இசைத்தட்டு என் நினைவுக்கு வந்தது. எப்போதும் அவருடைய அந்தப் பாடல்தான் ஒலிபரப்பாகும்.  அது    " கந்தா குகா..." என்று தொடங்கும் ஒரு ராகமாலிகை.  ( அவர் டொராண்டோவிற்கு வந்தபோது அதை எழுதியவர் யாரெனக் கேட்டேன். அவருக்கும் தெரியாது. யாரோ ஒருவர் அவர் தந்தையிடம் கொடுத்தார் என்பது தான் அவர் நினைவு.)   அந்த  விருத்தத்தை டொராண்டோக்  கச்சேரியில்  பாட வேண்டினேன். பாடினார்,   முன்பு நான்  கேட்டவற்றிற்கு முற்றிலும் வேறுபட்ட  ராகங்கள் ( பிருந்தாவன சாரங்கா, மோகனம், தர்பாரி கானடா, பஸந்த் பஹார் )  கொண்ட ஓர் அற்புத  மாலையாக  அது இருந்தது!   கடைசி ராகம் முடித்த சூட்டில், தன் சாகித்யமான ஒரு பஸந்த் பஹார் தில்லானாவும் பாடிச் சபையினரை பிரமிக்க வைத்தார்.

 இன்னொரு முறை  டொராண்டோவில்  ஒரு 4 மணி நேரக் கச்சேரி.  நேயர் விருப்பங்கள் வந்து கொண்டே இருந்தன. பாடிக்கொண்டே போனார்.   சீட்டுகள் மேடைக்கு வருவது ஓய்வதாய் இருக்கவில்லை.

உடனே  பாடத் தொடங்கினார்: " விளையாட இது நேரமா? " ( டி.என்.பாலாவின் சாகித்யம்) ( ஷண்முகப்ரியா)

 சபையே அதிர்ந்தது கைதட்டல்களால்!

எங்கே எப்படி  எதைப் பாடவேண்டும் என்பதை அளந்து வைத்திருந்தார் சந்தானம்.


அவர் கார்விபத்தில் 92-இல்  அகாலமரணம் அடைந்த பின் விகடனில் வந்த அஞ்சலி.
======

"சங்கீத உலகத்துல நாலு தலை முறை எனக்குத் தெரியும். சந்தானம் மாதிரி இதுவரை யாரும் அத்தனை உசரத்துக்குப் போனதில்லே; அத் தனை பிரபலம் அடைந்ததில்லே!" என்றார் செம்மங்குடி.

"மகாராஜபுரம் சந்தானம் ஒரு சகாப்தம்! ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவிதத்தில் எவரெஸ்ட்டை யெல்லாம் தாண்டி ஒரு உயரத்துக்கு அவர் போய்விட்டார். இனிமே அப்படியொரு அபார சாதனையை யாராலும் நிகழ்த்தமுடியாது!" என்றார் லால்குடி.

ரசிகர்களின் நாடித்துடிப்பை நூறு சதவிகிதம் அறிந்து வைத்திருந்தார் மகாராஜபுரம். கர்னாடக சங்கீதக் கச்சேரிகளில் காலி நாற்காலிகள் மட்டுமே அதிகம் இருந்த ஒரு கால கட்டத்தில், புயலாக நுழைந்து அரங்கத்தில் கூட்டம் அலைமோதச் செய்த பெருமை சந்தானத்துக்கு உண்டு.

கடைசி கச்சேரி...

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள மஞ்சக்குடி, சுவாமி தயானந்தா சரஸ்வதியின் பிறந்த ஊர். அங்கு இருக்கும் தயானந்தா மேல்நிலைப் பள்ளியில், சென்ற மாதம் 23-ம் தேதி, மாலை 4 மணி அளவில் சந்தானத்தின் கச்சேரி ஏற்பாடாகி யிருந்தது.

கச்சேரியின் முடிவில் அன்று 'மங்களம்' பாடாமல், 'வாழிய செந்தமிழ்' பாடலைப் பாடினாராம் சந்தானம். 'வந்தே மாதரம்' என்று அந்த (கடைசி) கச்சேரியை முடித் துக் கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மஞ்சக் குடியிலிருக்கும் தயானந்தாவின் அம்மாவைச் சந்தித்து வணங்கிவிட்டு கும்பகோணம் செல்லும் வழியில் உப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் சந்தானம். சுவாமி தரிசனம் முடிந்ததும், அங்கு தரப் பட்ட புளியோதரை பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, ஓட்டல் திரும்பி யிருக்கிறார். பிறகு, மெட்ராஸ் பயணம்; அதுவே அவரது இறுதிப் பயணமானது!

தன் தந்தையிடம் பாட்டு கற்றுக் கொள்ள வந்த ஞானத்தைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண் டவர் சந்தானம். இப்போது, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஞானத்துக்குச் சென்ற ஞாயிறன்று காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. விபத்துக்குப் பிறகு, முழு நினைவு இன்னும் திரும்பவில்லை.

"எங்கோ பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் அடிபட்டிருப்பதாகவே அம்மா நினைத்துக்கொண்டு இருக்கிறார். 'அவர் எப்படி இருக்கார்? வேளாவேளைக்கு அவருக்கு வேண்டியதெல்லாம் கொடுங்க' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்றார் மகன் ராமச்சந்திரன். விபத்து நடந்தது ஞானத்துக்கு நினைவில்லை. கணவர் இறந்து போய்விட்டது இன்னமும் இவருக்குத் தெரியாது.
====
 [ நன்றி : விகடன் ] 

 தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சங்கீத சங்கதிகள் - 73

நினைவில் நீங்காத தோடி!

வீயெஸ்வி

ஏப்ரல் 22. லால்குடி ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.



2013-இல் அவர் மறைந்தவுடன்  இசை விமர்சகர், எழுத்தாளர் ‘வீயெஸ்வி’ விகடனில்  எழுதிய கட்டுரை இதோ!
=======


பல வருடங்களுக்கு முன்  ஒரு மாலை வேளை. மாக்ஸ்முல்லர் பவனில் லால்குடி ஜெயராமனின் வயலின் ஸோலோ. நிசப்தமான  சூழலில், லால்குடியின் வயலி னில் இருந்து தவழ்ந்து வந்த தோடியில் அந்த ராகத்துக்கு உண்டான அத்தனை நெளிவு சுளிவுகளும் குழைவுகளும் அடுத் தடுத்து அணிவகுத்து வந்து, அவையோரை மெய்ம்மறக்கச் செய்தன. மறக்கவே முடியாத அற்புதமான தோடி அது.

இன்னொரு கச்சேரி... சென்னை- திருப்பதி தேவஸ்தானத்தில். மகனும் மகளும் இரு பக்கமும் அமர்ந்திருக்க, பிருந்தாவன சாரங்கா ராகத்தை வாசிக்க ஆரம்பித்தார் லால்குடி. கோயிலுக்குப் பெருமாளைச் சேவிக்க வந்த பக்தர்கள்,  அந்த ராகப் பிரவாகத்தில் அமிழ்ந்துபோனார்கள். சற்றே வட இந்தியச் சாயல்கொண்ட இந்த ராக தேவதையைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி, 'ரங்கபுர விஹார’ பாடலை வாசித்தபோது, ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் தரிசனம் கொடுத்தது நிஜம்.ஸ்வரங்களின்போது லால்குடி என்கிற மேதையின் முழு ஆற்றலும் அன்று வெளிப்பட்டது. வயலின் வாசிப்பில் உன்னதம் தொட்ட லால்குடி ஜெயராமனின் மரணம் சங்கீத உலகத்துக்குப் பேரிழப்பு!



ஸோலோ வாசிப்புக்கு வருவதற்கு முன்னால், இளம் வயதிலேயே பக்கவாத்தியக் கலைஞராக அறிமுகமாகி, அந்த நாள் சங்கீத சிம்மங்களுக்குச் சமமாக மேடையில் அமர்ந்து, அவர்களுக்கு ஈடுகொடுத்தது லால்குடியின் இன்னொரு சாதனை. ஜி.என்.பி - லால்குடி, செம்மங்குடி - லால்குடி என்று பலருடன் ஜமா சேர்ந்து, தன்னுடைய வாசிப்புத் திறனால் கச்சேரி மேடையைக் கலகலப்பு ஆக்கியவர். ஆலத்தூர் சகோதரர்கள் பல்லவி பாடியபோது எல்லாம் லால்குடி கொடுத்த பதிலடியைக் கேட்டவர்கள், இன்றும் வியந்து பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படித் தன்னுடை வாசிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்து அவர்களைத் தன் மீது வெறிகொள்ளச் செய்த லால்குடியின் இன்னொரு பரிமாணம், அவர் இயற்றிய வர்ணங்களும் தில்லானாக்களும். இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, நடன மணிகளும் அவருடைய இந்தப் படைப்புகளைப் பயன்படுத்திப் பலன் அடைந்துவருகிறார்கள். நளினகாந்தி, நீலாம்பரி, சாருகேசி மாதிரி யான ராகங்களில் அமைந்த வர்ணங்களும்... மதுவந்தி, ரேவதி, தேஷ் போன்ற ராகங்களில் இயற்றப்பட்ட தில்லானாக்களும் காலத்துக்கும் லால்குடியின் புகழ் பாடிக்கொண்டே இருக்கும்.

லால்குடி எனும் சிறு கிராமத்தை ஊரறியச் செய்து, உலகம் முழுவதும் அதைப் பரவச் செய்த ஜெயராமன் விட்டுச் சென்றிருக்கும் சங்கீதச் சொத்து, இன்னும் பலப்பல தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் கலங்கரை விளக்கமாகவும் திகழும்!

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

புதன், 13 ஏப்ரல், 2016

சங்கீத சங்கதிகள் - 72

வீணையின் குரல்

வீயெஸ்வி 

ஏப்ரல் 13. வீணை எஸ்.பாலசந்தர் அவர்களின் நினைவு தினம்.



2012 -இல்  வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம்  என்ற தலைப்பில் விக்ரம் சம்பத் ஆங்கிலத்தில் எழுதிய நூலை தமிழில் பிரபல எழுத்தாளர், இசை விமர்சகர்  வீயெஸ்வி மொழிபெயர்த்த நூல் வெளிவந்தது. 

அப்போது விகடனில் வீயெஸ்வி எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை இதோ! 

====== 
'கச்சேரி முடிந்ததும் உங்களைப் பாராட்டுவதற்காக மேடையை முற்றுகை இடும் ரசிகர்கள் பலரில் கோடீஸ்வரர்களும் இருப்பார்கள். உங்களுடன் மனப்பூர்வமாகக் கை குலுக்க ஆர்வமுடன் வருவார்கள் அவர்கள். 'உங்களை மாதிரி நானும் ஓர் இசைக் கலைஞராக இருந்து, உங்களைப் போல இசைத் தெய்வங்களுக்குச் சேவை புரிந்து, உங்களை மாதிரி அமைதியாக வாழ்ந்து, உலகம் சுற்றிலும் இருக்கும் ஆன்மாக்களை மகிழ்வித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றே அவர்கள் பெரும்பாலும் கூறுவார்கள். அவர்களிடம் இருக்கும் லேசான பொறாமை உங்கள் மீது அல்ல. உங்களிடம் இருக்கும் கலையின் மீது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - அவர்கள் ஏழையாகவும், யார் என்றே தெரியாதவர்களாகவும் இருக்கலாம் - உங்கள் மீது ஆழ்ந்த மரியாதை வைத்து, பொது இடம் என்றும் பார்க்காமல் உங்கள் கால்களில் விழுந்து வணங்குகிறார்கள் என்றால், உங்களிடம் இருக்கும் கலையை அவர்கள் நமஸ்கரிக்கிறார்கள் என்று அர்த்தம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் வெறும் ஏஜென்ட்டுகள்தான் நீங்கள். உங்களைப் பற்றி பத்திரிகைகளில் எழுதப் பட்டால், நீங்கள் விமர்சனம் செய்யப்பட்டால், உங்களிடம் உள்ள கலை அலசப்படுவதாகவோ அல்லது புகழப்படுவதாகவோதான் பொருள். அவை எல்லாவற்றுக்கும் நீங்கள் வெறும் கருவி மட்டுமே!’

 - 1989-ம் வருடம் ஜூன் மாதம் 4-ம் தேதி மும்பையில் நடந்த ஒரு விழாவில் மறைந்த வீணை மேதை எஸ்.பாலசந்தர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது.
வீணையைக் கடவுளாகப் போற்றி வழிபாடு செய்து வந்த எஸ்.பாலசந்தர், முதலில் வாசிக்க ஆரம்பித்தது கஞ்சிரா. பின்னர் தபேலா. ஒரு கட்டத்தில் சிதாரைக் கையில் எடுத்தார். இறுதியாக வீணை மீட்டத் தொடங்கியவர் அதிலேயே செட்டில் ஆகி, சாதித்து, தனக்கு என்று தனி பாணி ஒன்றை உருவாக்கி, உலகை வலம் வந்தார். நடுவில் திரைப்படத் துறையிலும் கால் பதித்து பலராலும் பாராட்டப்பட்டார்.

பன்முகம்கொண்ட இந்த அபூர்வக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை 'VOICE OF THE VEENA S.BALACHANDER’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியாகி இருக்கும் ஆங்கில நூலில் பதிவு செய்திருக்கிறார் விக்ரம் சம்பத். மியூஸிக் அகாடமியுடன் பாலசந்தர் மல்லுக்கு நின்றதும், பாலமுரளி கிருஷ்ணாவுடன் கோதாவில் இறங்கியதும், சுவாதித் திருநாள் மற்றும் செம்மங்குடிக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியதும், சுப்புடுவின் விமர்சனத்துக்குப் பதில் அடி கொடுத்ததும்... படிப்பதற்கு செம விறுவிறுப்பு!

எஸ்.பாலசந்தர் முதன்முதலாக கச்சேரி மேடை ஏறியது, 1933-ல். வித்வான் ஜி.சுப்ரமணியம்,வயலினிஸ்ட் தேவர், மிருதங்கம் வீரராகவ சௌத்ரியுடன் பாலசந்தரின் பெயரும் அப்போது அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் காணப்படுகிறது. விக்டோரியா ஜூப்ளி டவுன் ஹாலில் நடந்த இந்தக் கச்சேரியில் கஞ்சிரா வாசித்து இருக்கிறார் பாலசந்தர். வானொலி நிலையத்தில் இரண்டரை வருடங்கள் நிலைய வித்வானாக வேலை பார்த்திருக்கிறார். இது அவருடைய 15-வது வயதில். வீணை மீது அவருக்கு வற்றாத காதல் பிறந்தது அந்தச் சமயத்தில்தான். 'இனி வீணைதான் எனக்கு’ என்று தீர்மானித்தவர், கஞ்சிரா, தபேலா, சிதார் ஆகிய இசைக் கருவிகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்!

ஏவி.எம். தயாரித்த 'அந்த நாள்’ படம் எஸ்.பாலசந்தரின் சினிமா வாழ்க்கையில் ஓர் மைல் கல். இவர் இயக்கிய அந்தப் படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசன்.

'படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தனித்துவிடப்பட்டால், அது நாட்டை நாசமாக்கிவிடும்’ என்பது படத்தின் தீம். கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர் இருவரைப் பார்த்தும் ரசிகர்களை அனுதாபப்படவைத்தது அந்தப் படத்தின் ஸ்பெஷல். 'அதில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்’ என்று தனது வாழ்க்கைச் சரிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் சிவாஜி. 'தமிழில் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் 'அந்த நாள்’ படமும் ஒன்று’ என்று இன்றைய முன்னணி இயக்குநர்களான கே.பாலசந்தர், மணிரத்னம், அமீர் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

திரைத் துறையில் எஸ்.பி-யின் புகழ் வளர வளர... அவருடைய வீணைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள் சினிமா பிரபலத்தைக் கச்சேரிகளுக்கு விளம்பரமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது பாலசந்தருக்குப் பிடிக்கவில்லை. விளைவு, தனது சொந்த சினிமா கம்பெனியையும் மூடிவிட்டு, திரைத் துறைக்கே முழுக்குப் போட்டுவிட்டார் அவர்!

கச்சேரிகளில் வெறும் ராகங்களை மட்டுமே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு வாசித்து புரட்சி ஏற்படுத்தியவர் பாலசந்தர். அதாவது, பிரதானமாக ஒரு ராக ஆலாபனை. பின்பு, தாளங்களை 45 ராகங்களில் ராக மாலிகையாக வாசிப்பார். இந்த வகையில் முதல் கச்சேரி கிருஷ்ணகான சபாவில் 1967-ம் வருடம்.

''வேறு எந்த இசைக் கலைஞரும் இதைச் சாதிக்கவில்லை. என் வாழ்க்கையில் இதற்கு முன்னால் இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் கேட்டதே இல்லை. இந்தக் கச்சேரி வரலாறு படைத்துவிட்டது!'' என்று இந்தக் கச்சேரியைக் கேட்டுவிட்டு பிரமித்து எழுதினார் பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி.


[ நன்றி: விகடன் ]

தினமணியில் வந்த அந்த நூலின் மதிப்புரை :


வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம் - விக்ரம் சம்பத்; தமிழில் : வீயெஸ்வி; பக்.440, விலை ரூ. 350, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், )0462-278525.
கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ்.பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ்.பாலசந்தர்.
சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்குத் திரும்பிவிட்டார். அவருடைய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், ""வீணை என்றால் பாலசந்தர், பாலசந்தர் என்றால் வீணை'' என்று அறியப்பட அவர் பெரும் உழைப்பு உழைத்தார்.
அவருடைய இசை ஞானம் லேசுப்பட்டதல்ல; பல வாத்தியங்களைச் சிறு வயதில் தானாகவே வாசிக்கப் பழகியிருந்தார். வீணையையும் அவராகவே வாசிக்கப் பழகிக் கொண்டார். பின்னர் அதில்தான் எத்தனை புதுமைகள், சோதனை முயற்சிகள்! ஆனால் எதிலும் மரபு தவறியது கிடையாது. வீணை அமைப்பிலும் அதனை உருவாக்குவதிலும் தொழில்நுட்பத்திலும் கூட அவர் கவனம் செலுத்தினார்.
எந்த ஒரு மேதையும் வைரம்தான். சீராக பட்டை தீட்டப்படாத கரடு முரடான சில பக்கங்கள் இவருக்கும் உண்டு. சக கலைஞர்களுடன் அவருடைய மோதல், அவருடைய குறைகள், மேன்மை எல்லாவற்றையும் சமமான தட்டுகளில் வைத்து அளிக்கிறார் நூலாசிரியர் விக்ரம் சம்பத்.
பாலசந்தரின் வருகையின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்க விரும்பிய ஆசிரியர், கர்நாடக இசை சரித்திரம், மியூசிக் அகாதமி-தமிழிசை சர்ச்சை என்று சற்று அகலக் கால் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
விமர்சனபூர்வமான வாழ்க்கைச் சரிதங்கள் தமிழில் வந்தது கிடையாது என்றே சொல்லிவிடலாம். அந்தக் குறையைப் போக்கும் முக்கியமான புத்தகம் இது.
[ நன்றி: தினமணி ] 


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

திங்கள், 28 மார்ச், 2016

டி.கே.பட்டம்மாள் - 6

பாட்டம்மாள் 
வீயெஸ்வி 

ஆனந்த விகடனில் பிரபல இசை விமர்சகர், எழுத்தாளர்  வீயெஸ்வி  2007-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ! 
==============

கர்னாடக இசை உலகில் முப்பெரும் தேவியருள் ஒருவராக இருந்து பட்டொளி வீசிப் பிரகாசித்தவர் டி.கே.பட்டம்மாள். வீட்டில் செல்லமாக பட்டா!
குழந்தைப் பருவத்திலேயே பகவான் ரமணராலும், காஞ்சிப் பெரியவராலும் ஆசீர்வதிக்கப்பட்டு, குருமார்கள் பலரிடம் இசை பயின்று படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கூரை வேயப்பட்ட வீட்டில் விடியற்காலை மூன்றரை மணிக்கு எல்லாம் எழுந்து, சுலோகங்களையும் பக்திப் பாடல்களையும் பாடிப் பயிற்சி செய்யும்போது பட்டாவுக்கு வயது நான்கு!

வருடம் 1931. பட்டம்மாள் படித்த காஞ்சிபுரம் பெண்கள் பள்ளியில் 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தை மேடை ஏற்றிய சமயம். 12 வயது பட்டம்மாளுக்கு சாவித்திரி வேடம். 'தாயார் இருந்தென்ன... தந்தையார் இருந்தென்ன?' பாடலை உணர்ச்சிப்பெருக்குடன் டி.கே.பி. பாட, குழுமி இருந்தவர்கள் கண் கலங்கி இருக்கிறார்கள். இந்த நாடகத்துக்கு அனுமதிக் கட்டணம் நாலணா. அன்று வசூலான தொகை 900 ரூபாய்!

டி.கே.பி-க்குப் பதக்கம் கிடைத்தது. மறுநாள் சுதேசமித்திரன் நாளேட்டில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியது. திகைத்துப் போனார் தந்தை. ''இதென்ன அநியாயம்? பேப்பர்ல இப்படி போட்டோ எல்லாம் வந்தா உன் பொண்ணுக்கு யாரும் மாப்பிள்ளை கொடுக்கப் போறது இல்லை. பட்டாவோட எதிர்காலம் அவ்வளவுதான்...'' என்று கிருஷ்ணஸ்வாமியின் சகோதரி கள் எட்டுப் பேரும் கூச்சல் போட்டார்கள். இன்னொரு பக்கம், பேப்பரில் செய்தியைப் பார்த்துவிட்டு கொலம் பியா கிராமபோன் கம்பெனியினர் இவரை அணுகி, பட்டம்மாளின் குரலைப் பதிவுசெய்ய அனுமதி கேட்டு இருக்கிறார்கள். தந்தைக்கு விருப்பம் இல்லை. ''கவலைப்படாதே... வெளியே மாப்பிள்ளை கிடைக்கலேன்னா என் மருமானையே பட்டம்மாளுக்குக் கல்யாணம் செய்துவைக்கிறேன்...'' என்று உறுதி கொடுத்து அவரைச் சம்மதிக்கவைத்திருக்கிறார் டாக்டர் சீனிவாசன் என்ற அவரது குடும்ப நண்பர்.

திருநெல்வேலி சபாவில் டி.கே.பி. கச்சேரி. பாரதியாரின் பாடல் ஒன்றை மெய்மறந்து பாடிக்கொண்டு இருந்தவர், முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த பெண்களில் ஒருவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டு இருந்ததைக் கவனித்தார். அந்தப் பெண்மணி மகா கவியின் மனைவி செல்லம்மாள். கச்சேரி முடிந்ததும், ''என் கணவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நீங்கள் பாடியதைக் கேட்டுக் குளிர்ந்திருப்பார்...'' என்று தொண்டை அடைக்கச் சொன்னாராம் செல்லம்மாள்.

1940-ல் கீழ்த் திருப்பதியில் உள்ள திருச்சானூரில் பட்டமாவுக்குக் கல்யாணம். மணமகன் ஈஸ்வரன், முன்பே உறுதியளித்த குடும்ப நண்பர் டாக்டர் சீனிவாசனின் மருமகன். திருமண நாள் அன்று வைர அட்டிகையுடன் ஜொலித்தார் பட்டம்மாள். ''விலை மதிப்பற்ற இசை உன்னிடம் இருக்கும்போது இந்த வைர அட்டிகை உனக்கு எதற்கு?'' என்று திருமணத்துக்கு வந்திருந்த ராஜாஜி கேட்க, அதற்குப் பிறகு அந்த அட்டிகையை அணியவே இல்லையாம் டி.கே.பி!

திருமணமான புதிதில் தங்களுடன் திருநெல்வேலிக்கு வரும்படி ஈஸ்வர ஐயரை வற்புறுத்தினார்கள் இவருடைய நண்பர்கள். பட்டமாளுக்குக் கணவர் தன்னை விட்டு விட்டுத் தனியாகச் செல்வதில் விருப்பம் இல்லை. இருப்பினும், 'மனைவிதாசன்' என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்பதால் சம்மதித்தார் ஈஸ்வர ஐயர். ஆனால், சில மணி நேரத்துக்குள்ளாகவே வீடு திரும்பிவிட்ட அவர் சொன்னார்...
''நீ இல்லாம என்னால இருக்க முடியாது பட்டா!''

நன்றி: "Gana Saraswathi D.K.Pattammal:
Dimensions of a divine songster"  by Nithya Raj, Bharatiya Vidya Bhavan, 2007.

[ நன்றி: விகடன் ] 

*  பின் குறிப்பு:

டி.கே.பட்டம்மாள் பேசுகிறார் : 



====