வெள்ளி, 30 மே, 2014

கொத்தமங்கலம் சுப்பு - 6

கொத்தமங்கலம் தந்த தமிழ்
பிரபா ஸ்ரீதேவன்



அண்மையில் ஒருநாள் கொத்தமங்கலம் விசுவனாதனின் அருளுரையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது அவருடைய தந்தையின் கவிதைகளைப் பாடினார். என்ன எளிமை, என்ன கவிநயம், என்ன கற்பனை வளம் சொல்லிக்கொண்டே போகலாம். அப்பொழுது இந்தத் தலைமுறைக்கு அவரைத் தெரியுமோ என்று தோன்றியது. புகழ் என்பதன் ஆயுட்காலம் ஒரு தலைமுறைதானா?

சமீபத்தில் வந்த ஜல்லிக்கட்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பிராணிகள் வதை சட்டத்தையும் அரசியல் சாசனம் ஷரத்து 51அ(ஜி)(Art 51A(g))யையும் சுட்டிக் காட்டி, எல்லா உயிரினங்களிடத்திலும் கருணைக் காட்டுவது நம் அடிப்படை கடமை என்று கூறி, பிராணிகளை சுத்தமான சுகாதாரமான இடத்தில் வைத்துப் பேண வேண்டும் என்றும், தேவையில்லாமல் நோக அடிப்பதும் சித்திரவதை செய்வதும் கூடாது என்றும் தீர்ப்பளித்தது.

இது பொறுத்து சுப்பு அவர்கள் வரிகளைப் பார்போம்.

மாயவரம் பக்கம் வண்டியிளுக்கிற
   மாட்டுக்குக் கொம்பையே காணோமே!

நாயம் தெரிஞ்சு படைக்கிற ஆண்டவன் 
   ஏனிந்த மாதிரி படைச்சுப்பிட்டான்?

கொம்பையும் வாலையும் வெட்டிவிட்டா மாடு 
   கொசுக்கடி நேரத்தில் என்ன செய்யும்?

தும்பிலேயும் போட்டுக் கட்டி வச்சா மாடு 
   துன்பப்படும் இதை அறியாரோ?

நாம் அதே காட்சியைப் பார்த்து மாட்டுக்கு கொம்பைக் காணோமே என்று வேண்டுமானால் யோசித்திருப்போம், இல்லை அது கூட தோன்றாமல் ஜிவ்வென்று தாண்டி போயிருப்போம். ஆனால் கொசு கடிக்கும் பொழுது மாடு தவிக்குமே என்று ஒரு ஈரம் நிறைந்த கவிஞர் உள்ளம்தான் பாடும்.

உலகமயமாக்கத்தினால் பீட்சா நாகரிகம் மேலோங்குவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். உணவு, உடை, மொழி, பழக்க வழக்கங்கள் என்று நம் வாழ்க்கையின் பன்முகங்களிலும் விதேசம் பேசுகிறது. இந்த நேரத்தில் நம்முடைய இசை, நாடகம், மொழி, இலக்கியம் இவைகளில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று நான் சொன்னால் யார் கேட்பார்? சுப்பு அவர்கள் சொல்கிறார் -

சூட்டு ஹாட்டு பூட்சு போடும்
தொல்லை நீங்கித் தொலையணும்

தாட்டுப் பூட்டு நீங்கி நாவில்
 தமிழ்ப் பயிரு விளையணும்.

பாட்டு கூத்து நாட்டியத்தில்
 காட்டு மிருகம் போலவே

பப்பரப்பே யென்று கத்தும்
 பாண்டு பேயும் நீங்கியே

நாட்டு மத்தளம் சுதியிழைஞ்சு
 கட்டுந் தம்பூர் சாலரா

நாத மோங்கி கீத மோங்கி
 நாடு மோங்கி வாழணும்.

இனிமேல் தம்பூர் செய்பவர்கள் மத்தளம் செய்பவர்கள் எல்லாம் மறைந்து விடுவார்கள். நாம் அவர்களை மதிப்பதில்லை, பிறகு இளைய தலைமுறை எப்படி செய்தொழிலை மதிக்கும்?

ஸ்ட்ராடிவாரியஸ் (Stradivarius) என்று ஒரு உயர்ரக வயலின். அதன் நாதத்திற்கு ஈடாக இன்று வயலின் தயார் செய்ய முடியுமா என்று ஐரோப்பாவில் முயற்சி செய்கிறார்கள். இங்கு நரசிங்கம் பேட்டையில் பல வருடங்களாக நாதஸ்வரம் செய்யும் பாரம்பரியம் இன்று சுவாசத்திற்கு தவிக்கிறது.

நம் நாட்டில் ஒரு ஸ்ட்ராடிவாரியஸ் என்று இல்லை. அதைப் போல பல செல்வங்கள். அதனால்தானோ என்னவோ நமக்கு அதிலெல்லாம் அக்கறையில்லை. "நாதமோங்கி கீதமோங்கி' என்று அவர் அன்று பாடியதன் தொலைநோக்குச் சிறப்பு இன்று புரிகிறது. நம்முடைய கலைச்செல்வங்களைப் போற்றினால்தான் நாடுமோங்கும் என்கிறார்.

கடவுளிடம் நமக்கு வலுவான ஈர்ப்பு ஏன்? நாம் கேட்டதைக் கொடுப்பான் என்பதுதான். நம் கற்பனையையும் வசியம் செய்து, நம் கண்களையும் கசிய வைத்து, நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒரு கடவுள் காட்சி துரெளபதியின் சோகம் சம்பந்தப்பட்டது.

துரெளபதி வெளியே வர முடியாத நிலை. அவளை ஒரு பொருள் போல பணயம் வைத்து தோற்று விட்டார் கணவர். மைத்துனன் வந்து அவளை இழுத்து வருகிறான். நாடு போற்றும் மூத்தோர் வாய் மூடி சிலையாக இருக்கின்றனர். அவள் எங்கு போவாள்? கதறினாள் கண்ணன் வந்தான். பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனை காக்க தென்றலின் வடிவாக கண்ணன் வந்தான். புடவைகள் எங்கிருந்து நில்லாமல் நிற்காமல் வந்தன - எந்த கடை? எந்த தறி?

இதோ சுப்பு அவர்களின் விடை -

பாற்கடல் எல்லாம் பஞ்சாக்கி பட்டையிட் 
 டாராம் அலை அலையாய்

நூற்று எடுத்தார் மழைபோலே 
  நூதன சேலை தந்தாராம்

திருமகள் ஒருபுறம் பாவோட்ட 
சிவபார்வதியும் தறியோட்ட

திருமாலுருவம் பெரிதாகி திசை 
  யெட்டும் தறி நெய்தாராம்.

திரைப்படங்களை விளம்பரம் செய்யும்பொழுது பிரும்மாண்டமாக என்று மார் தட்டுகிறார்கள். ஆனால் இந்த கற்பனை பிரும்மாண்டத்திற்கு முன்னால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை. இவரால்தான் அன்றே ஒளவையார் இயக்கியிருக்க முடியும். இன்று எத்தனையோ தொழில் நுட்ப முன்னேற்றங்கள் வந்து விட்டன.

அன்று ஒரு யானை பலவாகி, நூறாகி, போர்க்களத்தில் முன்னேறும். அதை மனதில் உருவகித்தவர் இப்படி ஒரு கட்டுத்தறியை நம் கண் முன் கொண்டுவருவது அதிசயமில்லை. அந்த ஊடு பாவு டடக் டடக் சத்தம் என்னவாக இருக்கும்?

இப்பொழுது வீர மரணம் எய்தினாரே மேஜர் முகுந்த் வரதராஜன், அவர் மனைவி போல எத்தனை பேர் என் சினேகிதி. அண்மையில் லே முதலிய இடங்களை பார்த்து விட்டு, "ஆயிரமாயிரம் வீரர்கள் நமக்காக உயிரைக்கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நம் நாட்டின் எல்லையைக் காக்கிறார்கள். நாம் துளியும் நன்றி உணர்வு இல்லாமல் இருக்கிறோமே' என்றார்.

இதோ -

தொட்டியிலே கடந்த புள்ளே
 செவுடி தூக்குறான்

தொட்டு தொட்டு அப்பன் எங்கே
 என்று கேக்குறான்.

தந்தித்தவால் காரன் வந்தா 
தவிதவிக்கிறா

தாலிச்சரட்டைப் பாத்துக்கண்ணுத்
 தண்ணி வடிக்கிறா

அந்திபட்டா ஒரு யுகமா
 அவ தவிக்கிறா

ஆறுவருசமாச்சுதப்பா
 வீட்டுக்கு வாங்க

முகுந்த் இனி அறுநூறு வருசமானாலும் வீட்டுக்கு வரமட்டார். ஆருயிர் கணவனுக்கு காத்திருக்கும் தவிப்பு என்ன எளிய வரிகளில் வந்து விழுகின்றன.

காந்தி மகான் கதைக்கு கொத்தமங்கலம் சுப்பு எழுதிய முன்னுரையில் சில வரிகள் இதோ - "எனக்கு எப்பொழுதுமே நாட்டுப் பாடல்களைப் படிப்பதில் ஆவல் அதிகம். ராஜா தேசிங்கு போன்ற கதைகளைப்படிக்கும் பொழுது என்னை அறியாமலே உணர்ச்சி வசபட்டு விடுவேன். ஆஹா இந்தக் கவிஞர்கள் அந்தந்த காலத்தில் இருந்தார்கள். அந்த நிகழ்ச்சிகளை கண்ணால் கண்டிருக்கிறார்கள். பொங்கி வந்த உணர்ச்சியில் பாடியிருக்கிறார்கள் என்று எண்ணி பூரித்துப்போவேன்'.

காந்தி மகான் கதையில் சில கவிதைகளைப் பார்ப்போம்.

"கருப்பு பூடுசால் எட்டி உதைச்சான் 
  காந்தி மகாத்மா மேல்
 கட்டின தலைப்பா தட்டிவிட்டானாம் 
  காந்தி மகாத்மா மேல்.

சாந்தம் பொங்கி வழியுது ஐயா 
  காந்தி மகானுக்கு
சனங்களைக் கண்டு கருணைப் பெருகுது 
  காந்தி மகானுக்கு

கையுப்பு தன்னையள்ளிக்
 காட்ட வகையில்லையேல்

கடலில் விழுந்து அங்கே சாகிறோம்
 சாகிறோம் சாகிறோம்

உப்பையெடுத்துச் சட்டம்
 உடைச்சு எறிஞ்சுப்பிட்டு

ஊருக்குள்ளே திரும்ப போகிறோம்
 போகிறோம் போகிறோம்.

ஆபா காந்தி தோளைத்தழுவி 
   அய்யன் வரும்பொழுது

அருகிலிருந்து பாவி கிளம்பி 

  அவரு பக்கம் வந்தான்

புத்திலிருந்து பாம்பு கிளம்பி 
  கொத்திய பாவனைபோல்
சத்திய ரூபனைக் கொல்லகாலன் 
  சமயம் பாத்து வந்தான்

குண்டு துளைத்தது குலையும் துடிச்சிடவே
குண்டு துளைத்தது தேசம் முழுவதும் 
குலையும் துடிச்சிதுவே'

நேர்க்காணல் வர்ணனை போல தொனிக்கிறது. சத்தியமாக காந்தி மகானின் கதை அவர் மனத்திரையில் படமாக விரிந்திருக்கிறது.

மேலும் அவர் சொல்லுகிறார்

"இதைப் படிக்கும் அன்பர்கள் வசனம் படிப்பது போல் படிக்கக் கூடாது. பாடிப்பாருங்கள். தேசத்தின் சென்ற கால வாழ்வையும் காந்தி மகானையும் கருத்தில் நினைத்துக் கொண்டு பாடுங்கள். தேன் போலப் பாடுவீர்கள். என் சிந்தை குளிரும்'.

அவர் சொல்வது உண்மைதான். உப்பு சத்தியாகிரகத்தை பற்றி பாடுகையில் போகிறோம் போகிறோம் போகிறோம் என்று சொற்கள் பாடும் பொழுது தண்டியில் மகாத்மா காந்தி பின்னால், அவர் செல்லும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாமும் ஓட்டமும் நடையுமாக செல்வது போல தோன்றவில்லை?

சொல்லும் சேதி, சொல்லும் முறை இவை சாதாரண மக்களை மிரள வைக்கக்கூடாது என்பதற்காகவே அவர் மகாத்மா காந்தியில் துவங்கி ககனத்தில் பறந்த நாய் வரை எத்தனை எத்தனையோ விஷயங்களை எளிமையான தமிழில் பாடிவிட்டார்.

சொல்வழி பாரம்பரியம் ( Oral Tradition ) நமக்கு மிக முக்கியம். பாட்டி சொன்ன கதை, பாட்டி கை மருந்து, வேதம், தெம்மாங்கு, ஆழ்வார்கள், நாயன்மார்கள் சொல்லிக்கொண்டே போகலாம். காந்தி மகான் கதையின் பதிப்புரையில் இந்த வரிகளைக் காணலாம். சொல்லாய் கிடந்ததை பாட்டாய் மாற்றி சொல்லுப்பாட்டை வில்லுப்பாட்டாக்கி கிராமத்தை நெகிழவைத்தார், நகரத்தை வியக்க வைத்தார்.

நான் அவர் கவிதைகளைப் பற்றி மட்டுமே சொல்ல நினைத்தேன். அவருடைய பல முகங்களைப் பற்றி சுருங்க சொல்வது கடினம். ஆனால் அவருடைய தில்லானா மோகனாம்பாள் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. என்ன ஆர்வத்துடன் ஒவ்வொரு வாரமும் அவர் விகடனை பிரிக்க வைத்தார். தஞ்சை மண்ணும் இசையும் நாட்டியமும் நாயனமும் எப்படி பின்னி பிணைந்துள்ளன என்று சொல்லும் அதே நேரத்தில், அந்த உலகத்தின் இருண்ட மூலைகளையும் அவர் நம் முன்னே வைத்தார்.

தில்லானா மோகனாம்பாளும், சிக்கில் சண்முக சுந்தரமும் நம் மனமேடையிலிருந்து மறையக்கூடாது. ஏனென்றால், அது ஒரு கதை மட்டும் அல்ல; ஒரு வாழ்க்கை முறையின் ஆவணம் என்று சொல்லலாம். இந்த இரண்டு வரி போதாது இவர்கள் இருவரை அடைக்க. இவர்கள் இருவர் மட்டுமா? வைத்தி, வடிவாம்பாள், ஜில் ஜில் ரமாமணி என்று ஒரு உலகமே அவர் சிருஷ்டித்தார். ஆனால் நான் இங்கு அவர் நினைவு ஒளியை தூண்ட நினைத்தது அவர் கவிதைகள் என்ற விளக்கை வைத்து மட்டும்தான்.

வானவெளிப் பயணம் செய்த முதல் பிராணி நாய். உலகமே மூக்கில் விரலை வைத்தது. சுப்பு அவர்களின் கற்பனை எப்படி பறந்தது என்று பார்ப்போம்.

நாடு வேறு பாஷை வேறு நமது இனத்துக்கில்லையே
 நாளைக்கென்று சேர்த்து வைப்பதும் நம்ம குலத்துக்கில்லையே

பாடுபட்ட பேரை மறக்கும் பழக்கமும் நமக்கிலையே
 படைச்சவனை இளுத்துப் பேசும் பம்மாத்தும் நமக்கில்லையே

எல்லா ஊரும் எங்க ஊரு என்றிருப்பதாலே--- நம்மை
 ஏத்திவிட்டான் ஏத்திவிட்டான் வானத்துக்கப்பாலே

எல்லா நாடும் எங்கள் நாடு என்ற உண்மையாலே முதலில்
 இந்த உலகைச் சுற்றி வந்தோம் எங்கள் குணத்தினாலே.

நாயைத்தான் புகழ்கிறார். ஆனால் ஏன் நம் முதுகில் ஏதோ சுளீரென்று விழுந்தது போல தோன்றுகிறது.

[ நன்றி :  தினமணி, மே 28, 2014 ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு

செவ்வாய், 27 மே, 2014

சின்ன அண்ணாமலை -2

கல்கியுடன் நான்!
சின்ன அண்ணாமலை


"ஸ்ரீ சின்ன அண்ணாமலை மணிக்கணக்கில் பிரசங்க மாரி 
பொழியக்கூடியவர்.ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்படி பேசுவார்: 
சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார். பேசும் ஆற்றலைப் போல் 
எழுதும் ஆற்றல் படைத்தவர். " 

            
    
- பேராசிரியர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி



இதோ 'கல்கி' யைப் பற்றிச் சின்ன அண்ணாமலை எழுதிய மூன்று சிறு  கட்டுரைகள்! [ நன்றி: 1978-இல் ’குமுத’த்தின் இலவச இணைப்பான 

சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ (, 'சொன்னால் நம்பமாட்டீர்கள்!" என்ற நூலிலிருந்து ஒரு சிறு தொகுப்பு.) 








‘கல்கி’யைக் கண்டேன்! 

சின்ன அண்ணாமலை 




பத்திரிகை ஆசிரியர் 
சின்ன அண்ணாமலை 



கல்கி தந்த கார் 
சின்ன அண்ணாமலை





பின் குறிப்பு:

'கல்கி' 54-இல் மறைந்தவுடன் சென்னையில் நடந்த பல இரங்கற் கூட்டங்களுள் ஒன்றில் சின்ன அண்ணாமலை உருக்கமாகப் பேசியதை நான் கேட்டிருக்கிறேன். அவர் பேச்சில் இப்போது எனக்கு நினைவில் இருப்பது ஒன்றுதான்: சில நாள்களுக்கு முன் கல்கியை மருத்துவமனையில் பார்த்தபோது, கல்கி தன் அடுத்த வரலாற்று நாவல் ஹைதர் அலி/திப்பு சுல்தான் பற்றி இருக்கும் என்றும், அதற்குத் தேவையான நூல்களைச் சேகரித்து வைக்கத் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார். 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

பாரதி பிறந்தார் ! : ஒரு நூல் முன்னுரை 

கல்கி மறைந்தவுடன் வந்த கல்கியில் இருந்து:


மீ.ப.சோமுவின் தலையங்கம் 

ம.பொ.சி யின் அஞ்சலிக் கட்டுரை

’தேவனி’ன் அஞ்சலிக் கட்டுரை

கொத்தமங்கலம் சுப்புவின் அஞ்சலிக் கவிதை


கல்கியைப் பற்றி . . .
கல்கி மறைந்தவுடன் ‘விகடனில்’ வந்த

எஸ்.எஸ்.வாசனின் கட்டுரை 


கல்கி’ கட்டுரைகள்

சனி, 24 மே, 2014

சங்கீத சங்கதிகள் - 38

ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் ! 

சாவி 
[ ஓவியம்: அரஸ் ] 


பிரபல எழுத்தாளர் ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) பல வேறுபட்ட துறைகளில் ஆர்வம், அனுபவம் கொண்டவர். சின்ன அண்ணாமலையுடன் சேர்ந்து ‘கிங்காங்-தாரா’சிங் மல்யுத்தச் சண்டையின் பப்ளிஸிடி ஏஜண்ட்டாகக் கூட  இருந்திருக்கிறார்! சங்கீதத்திலும் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர் ’குங்குமம்” இதழில் அவர் எழுதிய இந்தக் கட்டுரையில் அவருடைய சில சங்கீத அனுபவங்களை விவரிக்கிறார். அவர் ’குங்கும’த்தில் எழுதிய இத்தகைய பல கட்டுரைகள் “என்னுரை” என்ற நூலாகப் பின்னர் வெளிவந்தது.










[ நன்றி : “என்னுரை” நூல், சாவி பப்ளிகேஷன்ஸ் ] 

 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்;

சாவியின் படைப்புகள்

புதன், 21 மே, 2014

கவிதை இயற்றிக் கலக்கு - 10

கவிதை இயற்றிக் கலக்கு: நூல் மதிப்பீடு
கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

’கவிதை உறவு’ கவிதைகளுக்கு ஒரு சிறப்பான இடம் கொடுத்து வெளிவரும் ஒரு மனித நேய இலக்கியத் திங்களிதழ். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிவரும் அந்த இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள். அண்மையில் கனடாவிற்கு வந்தபோது அவரைச் சந்திக்கும் பேறு கிட்டியது.

என் நூலைப் பற்றிய இந்த விமர்சனம் “கவிதை உறவு” பிப்ரவரி, 2014 இதழில் ’நூல் மதிப்பீடு’ என்ற பகுதியில் வெளியானது 




தொடர்புள்ள சில பதிவுகள்:
நூல் விவரங்கள்:
கவிதை இயற்றிக் கலக்கு -5

மற்ற சில அறிஞர்களின் மதிப்புரைகள் :
டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ( ‘அமுதசுரபி’ ஆசிரியர்),
கவிமாமணி இலந்தை இராமசாமி, பேராசிரியர் அனந்தநாராயணன்.
க. இ. க -6 

கவிமாமணி குமரிச்செழியன் ( தலைவர், பாரதி கலைக் கழகம் ) 
க. இ. க -7

முனைவர் மு.இளங்கோவன்
https://muelangovan.blogspot.ca/2018/05/blog-post_20.html

நூலில் உள்ள ‘என்னுரை’
க.இ.க -9

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

வெள்ளி, 16 மே, 2014

முருகன் - 3

ஆஞ்சநேயனுக்கு அருளிய அழகன் 
குருஜி ஏ.எஸ். ராகவன் 

மே 17. ’திருப்புகழ் தொண்டன்’ குருஜி ராகவன் மறைந்து ஓராண்டு ஆகிறது.  அவர் நினைவில், இதோ அவர் 'கல்கி'யில் எழுதிய ஒரு கட்டுரை!





‘கோவைக்கு மிக அருகேயுள்ள முருகன் தலம்’ என்றதும் நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது மருதமலைதான். ஆனால், அந்த முருகனுக்குப் போட்டியாக, அதே மலையின் வடபுறச் சாரலில் இன்னொரு முருகன் வீற்றிருக்கிறான்._ இல்லை! நின்று கொண்டிருக்கிறான்!

கோவையிலிருந்து சுமார் பத்து மைல் தொலைவில் இருக்கிறது அனுவாவி. சென்றுவர பேருந்து வசதிகள் உண்டு. தலத்தின் நீர்வளமும் மலைவளமும் நிலவளமும் அது முருகனுக்கு மிக மிகப் பொருத்தமான, அவன் அழகுக்கு அழகு செய்கின்ற தலம் என்பதைப் பறைசாற்றுகின்றன. வடக்கே குருவிருக்ஷமலை, தெற்கே அனுவாவிமலை, மேற்கே கடலரசி மலை என்று திக்கெல்லாம் சூழ்ந்து நிற்க, ஏறத்தாழ ஒரு பசுமைப் பள்ளத்தாக்கில் குடியேறியிருக்கிறான் முருகன். செங்கரும்பு வயல்களும் தென்னை, மாந்தோப்புகளும் சாமரம் வீச, தண்ணென்ற அந்தச் சூழலில், இன்னருள் சொரிந்து பொருளாகிறான்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையில் சிறப்புடையது அனுவாவி.

 அனுவாவி என்றாலே, ‘சிறிய குளம்’ என்றுதான் பொருள். சிறிய ஊற்று அல்லது கிணறு என்றும்  குறிப்பிடலாம்.

தல வரலாறு அறிய கொஞ்சம் ராமாயணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  

இலங்கை ராஜ்ஜியத்தின் மீது ராமன் போர் தொடுத்திருக்கிறான். வானரப் படைகளுடன் லக்ஷ்மணனும்கூட ராவணனின் சேனையுடன் போரிட்டுப் பலமிழந்து மூர்ச்சையாகியிருக்கிற நேரம். சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்தால் அவர்களை மீண்டும் எழுந்து போரிடச் செய்யலாம் என்று யோசனை கூறி, ஆஞ்சனேயனை அனுப்புகிறார் ஜாம்பவான்.

 ‘வெட்டிக்கொண்டு வா!’ என்று சொன்னால் கட்டிக் கொண்டு வருகிற ரகமல்லவா ஆஞ்சனேயன்! மூலிகையைத் தேடிப் பறித்து நேரத்தைக் கடத்தாமல் மலையையே பெயர்த்துக் கொண்டு வருகிறான்!

 வாயுபுத்ரனான போதிலும் மலையைப் பெயர்த்துக் கொண்டு காற்றிலேறி விண்ணைச் சாடி, கடல் கடந்து பறப்பது சுலபமல்லவே! களைப்பும் தாகமும் வாட்டலாயின. அந்த நேரத்தில் ஆஞ்சனேயனுக்குக் கைகொடுத்தவன் _ இல்லையில்லை! வேல் கொடுத்துக் காப்பாற்றியவன் இந்த அனுவாவி கந்தன்தான்! தன் கை வேலால் இத்தலத்தில் ஒரு சுனையை உண்டாக்கி ஆஞ்சனேயனின் தாகம் தீர்த்தானாம் முருகன். ‘அனுமக்குமரர் தீர்த்தம்’, ‘அனுமார்வாவி’ என்று இவ்விடத்துக்குப் பெயர்கள் வழங்கலாயின. இவைதான் பின்னர் மருவி ‘அனுவாவி’ ஆகியிருக்க வேண்டும். மலையின் பெயர் அனுமக் குமாரமலை.

அனுவாவி பத்துப்பாட்டு என்ற நூலில் இந்த ஸ்தல வரலாறு அழகான கவிதையாக்கப்பட்டிருக்கிறது.

அனுவாவி வந்துற்ற அஞ்சனாதேவி மகன்  
அனுமாரின் அருந்தாகம் தீர்க்க நீர் தந்த மலை  
கனமான மலை சுமந்த களைப்பாற்றிக் கரங்குவித்து  
குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலை.  

அனுமன் தொழுத குமரன் எப்படித்தானிருக்கிறான் என்று நாமும் பார்த்துவிடுவோமே!

கிழக்கு நோக்கி நிற்கும் ஆலயம் மலையடிவாரத்திலிருந்தே, தெரிகிறது. விரைவில் ஏறிவிடலாம். ஒரே பிராகாரம் கொண்ட அழகான சிறு ஆலயம். வினாயகரை வணங்கிவிட்டு, முன் மண்டபத்தைக் கடந்து கருவறையை அடைந்தால், அங்கே முருகன் ஆஞ்சனேயனுக்கு அருள்செய்த திருப்தியில் முகம் பூரிக்க நிற்கிறான். இருபுறமும் வள்ளி - தெய்வானையர் அவன் மலர்ச்சியில் மகிழ்ந்து தாங்களும் பூரித்து நிற்கிறார்கள்!  

கிருபானந்த வாரியார் இந்த அனுவாவி முருகனைப் பாடிய அழகான பாடல் நினைவுக்கு வருகிறது:

புகழனுவாவி மேவும் புனித வேலனே போற்றி!  
மகபதி தன்னை ஆண்ட வள்ளி நாயகனே போற்றி!  
இகபரம் அருள்வாய் போற்றி, என்றுமே இளையாய் போற்றி!  
குகபர குருவே போற்றி, குமரனே போற்றி போற்றி!

சிரத்தையுடன் செய்யப்படும் தினசரி பூஜைகளும் விழாக்கால விசேஷங்களும் இத் தலத்தை மக்கள் நாடும் ஸ்தலமாகப் பிரபலப்படுத்தி வருகின்றன.

அதிசயம் அனேகமுற்ற மலை இந்த அனுவாவி. அந்தக் காலத்தில் இம்மலையடிவாரத்தில் தாமரைத் தடாகம் என்ற ஊரிலிருந்த ஜமீந்தார் ஒருவர் மலைப்பாதை அமைத்து இக்கோயிலுக்கு உத்ஸவ மூர்த்திகள் செய்து கொடுத்தார். இங்கே ‘காணாச் சுனையும், கருநொச்சி வளமும், ஐந்திதழ் வில்வமும்’ இருந்ததாகச் சொல்வார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் இங்கே கண்ட அதிசயமொன்றைப் போற்றிப் புகழ்ந்தார் என்பார்கள்: இத்தலத்துக்குக் கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரின் விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும் மற்றதிலிருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரர். அவ்வேர், அனுவாவியிலிருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர்தான் என்று கண்டறிந்தார்! இவ்வியற்கை வினோதம் அனுவாவியின் தலச் சிறப்பால் விளைந்ததே என்று அவர் உணர்ந்து, வாழ்த்தி வழிபட்டதாகச் சொல்கின்றனர். விண்ணாவரங் கொடி, விண்ணாடும் கொடி என்று பெயர்கள் பெற்ற அக்கொடி, அனுவாவி ஸ்தல விருக்ஷமான மாமரத்தில் இன்றும் படர்ந்திருப்பதைக் காணலாம்.

மலைச்சாரலில் சில குகைகள் இருக்கின்றன. அவற்றில் அக்காலத்தில் முனிவர்களும் பாம்பாட்டிச் சித்தரும் தவமியற்றியிருக்கிறார்கள்.

   1957ஆம் ஆண்டு இங்கே ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆலயத்திலிருந்த தெய்வ வடிவங்களெல்லாம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. வெள்ளத்தின் உக்கிரத்தைவென்று நின்றது மாமரம் மட்டுமே! பின்னர் இறைவன் திருவருளால் தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. திருவண்ணாலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் அருள் வாக்குப்படி வினாயகர், அருணாசலேசுவரர் ஆகிய இருவர் உருவங்கள் மட்டும் மாமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்தன.

 ‘அனுவாவிப் பத்து’, ‘அருள்மிகு அனுவாவி முருகன் பெருமை’ என்ற நூல்களில் இத்தலப் பெருமையை விரிவாகக் காணலாம்.

மூர்த்தியின் பெருமையையோ தரிசித்தும் அனுபவித்தும்தான் அறிய வேண்டும். அவ்வாறு அனுபவித்து கந்தவேளின் சுந்தர வதனத்தை மனத்தில் குடியேற்றிய ஒரு பக்தர் பாடியிருப்பதைக் கேளுங்கள்:

 அனுவாவி தலம் வந்து அவனடியே கதியென்று  
அவனடியார் வேண்டுகின்ற வரம்யாவும் வழங்கும்மலை  
தினைமாவும் செழுந்தேனும் தான் விரும்பும் குருநாதன்  
திருமுருகன் வேலோடு மயிலேறி ஆடும் மலை!  
மயிலேறி ஆடும் மலை!  

கம்பன், ஆஞ்சனேயனின் புகழ் பாடுகையில், ‘அஞ்சிலே ஒன்று பெற்றான்’ என ஆரம்பித்து பஞ்சபூதங்களையும் வெற்றி கண்டவனாக அவனைச் சித்திரிக்கிறார். ‘அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்று ஆஞ்சனேயனைச் சரணடையச் சொல்கிறார். அந்த ஆஞ்சனேயனோ இந்த அனுவாவி முருகனால் அருளும் பலமும் பெற்று இயங்கியிருக்கிறான்! இவ்வாறிருக்க, அனுவாவி சுப்ரமண்யனை நினைத்தாலே இரட்டிப்பு சக்தி உடலில் பெருகிப் பொங்கித்தானே ஆகவேண்டும்!

[ நன்றி ; கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:



புதன், 14 மே, 2014

சாவி - 10: 'ஆப்பக்கடை' அம்மாக்கண்ணு

'ஆப்பக்கடை' அம்மாக்கண்ணு
சாவி


இந்தக் கேரக்டர் கட்டுரை விகடனில் 29-2-61-இல் வெளிவந்தது. சென்னைக்கே உரிய பாஷையில் திளைக்கிறார் 'சாவி' (சா.விசுவநாதன்).
அம்மாகண்ணுக்கும், சாவிக்கும் வாழ்க்கை அனுபவங்களில் ஓர் ஒற்றுமையும் உண்டு! அதைப் ‘போர்டு-பாஸ்’ ( Board-Pass )என்ற ஒரே வார்த்தை மூலம் நாம் ஆய்ந்தறியலாம்! மேலே படியுங்கள்! .
======

''சீ... கய்தே! இன்னாடா முறைக்கிறே! இந்த அம்மாக் கண்ணு கிட்டே வெச்சுக்காதே உன் வேலையெல்லாம்..! ஆப்பக் கரண்டியாலேயே போடுவேன். நெதம் நெதம் வந்து நாஷ்டா பண்ணிட்டுப் போனியே, அதப் போல பாக்கியைக் குடுக்க புத்தி வாணாம்? பெரிசா மீசை வச்சிக்கினு வந்துட்டான்!''

''மோவ்... தாஸ்தி பேசாத! பாக்கி வேணும்னா மரியாதையா கேட்டு வாங்கிக்க. நான் யார் தெரியுமா?''

''நீ யாராயிருந்தா எனக்கு இன்னாடா! பெரிய கவுனரா நீ! கயித கெட்ட கேட்டுக்கு மருவாதியாம் மருவாதி! துட்டை வெச்சுட்டு ரிஸ்காவை இசுடா! கண் மறைவாவா சுத்திக்கினுக்கீறே, பேமானி(1) !''

கூவம் நதி வாராவதிக்கு அருகில் ஒரு கட்டைத் தொட்டி. அதற்குப் பக்கத்திலுள்ள மரத்தின் கீழ்தான் அம்மாக்கண்ணுவின் ஆப்பக்கடை.
பொழுது விடிந்தால் அந்தப் பேட்டையிலுள்ள போலீஸ் காரர்கள், கை வண்டிக்காரர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் எல்லோரும் நாஷ்டா(2) வுக்கு அம்மாக்கண்ணுவின் கடையைத் தான் நாடி வருவார்கள்.


அவள் சுட்டுப்போடும் ஆப்பங்களைச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் காசு கொடுப்பார்கள். சிலர் கடன் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அம்மாக்கண்ணுவை ஒருவரும் ஏமாற்ற முடியாது. டாணாக்காரர்கள் யாராவது வந்தால்,

'இன்னா பல்லைக் காட்டறே? ஓசி நாஷ்டாவா?''
என்பாள். கார்ப்பரேஷன் ஆள் வந்தால்,

'இங்கே ஓசிலே துண்ணுட்டு, அங்கே போயி ஆப்பத்திலே ஈ மொய்க்குதுன்னு கேசு எழுதிடு. ஏன்யா... ஈ மொய்க்கிற ஆப்பத்தை நீ மட்டும் துண்ணலாமாய்யா?” என்று கேட்பாள்.

வெளிப்பார்வைக்கு அவள் சற்றுக் கடுமையாகத் தோன்றினாலும், இளகிய மனசு படைத்தவள். கஷ்டப்படுகிறவர்களுக்குத் தன்னை மீறியும் உபகாரம் செய்யும் குணம் அவளிடம் உண்டு.

''பாக்கி கொடுக்க முடியலேன்னா, அதுக்காக ஏண்டா தலை தப்பிச்சுக்கினு திரியறே? பணம் கெடைக்கிறப்போ கொடு. நான் மாட்டேன்னா சொல்றேன்? இதுக்காவ நாஷ்டா பண்ண வரதையே நிறுத்திடறதா? ஒழுங்கா வந்து சாப்பிட்டுக்கினு போயிக்கினு இரு'' என்று சிலரிடம் அன்பொழுகப் பேசி அனுப்புவாள்.

''நாடாரே, கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. கஞ்சித்தொட்டி ஆசுபத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடறேன்!''

''ஆசுபத்திரியிலே இன்னா வேலை?''

''முருவன் இல்லே... அதாம்பா, நெதைக்கும் இங்கே வந்து ஆப்பம் துண்ணுவானே, பிச்சைக்கார முருவன்... அவன் மேலே கார் மோதிடுச்சாம், பாவம்! ஆசுபத்திரியிலே படுத்திருக்கானாம். அவனைப் போய் பாத்துட்டு, ரெண்டு ஆப்பத்தையும் குடுத்துட்டு வந்துடறேன்!''

''சரி; கொஞ்சம் பொயலை இருந்தா குடுத்துட்டுப் போ!'' என்பார் நாடார்.

''உக்கும்! ஈர வெறவெல்லாம் வித்து வர துட்டை முடிபோட்டு வச்சுக்கோ'' என்று சொல்லிக் கொண்டே, இடுப்பில் உள்ள சுருக்குப் பையைத் திறந்து புகையிலையை எடுத்துக் கொடுத்து விட்டுப் போவாள்.

அம்மாக்கண்ணுவுக்குக் கொஞ்சம் சினிமாப் பயித்தியமும் உண்டு. மலையாளத்தார் டீக் கடை மீது வாரா வாரம் சினிமா விளம்பர போர்டுகள் கொண்டு வந்து வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். அதற்காக மலையாளத்தாருக்கு 'போர்டு பாஸ்'(3) வரும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

''இன்னா மலையாளம்! வாத்தியார் படம் வந்துக்குதாமே... ஒரு பாஸ் குடேன், பாத்துட்டு வரேன்'' என்று கேட்டு வாங்கிக்கொண்டு போய்ப் படம் பார்த்துவிட்டு வந்துவிடுவாள்!

[ நன்றி: விகடன்  ]

பேமானி(1) : நாணயமற்றவன். மூலம் உருது என்பர்.

நாஷ்டா(2) : ஹிந்தியில் ‘சிற்றுண்டி’ !

போர்டு பாஸ்'(3) : போர்டு பாஸ் என்றால் என்ன தெரியுமா? அது ஓர் இலவச பாஸ்.  சாவி தன் வாழ்க்கையில் ‘போர்டு பாஸ்’ மூலம் நிறைய திரைப் படங்களைப் பார்த்திருக்கிறார்! இதோ, அதைப் பற்றி ராணி மைந்தனின் வார்த்தைகளில் படியுங்கள்! [ நன்றி:  நூல் “சாவி 85” ]

வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் அப்போது ஆசிரியராக இருந்த ராமநாதன் என்பவருக்கும் விசுவநாதனைப் ( சாவி) போலவே விளம்பர போர்டுகளின் மீது தீராத காதல் இருந்தது. போர்டுகள் எழுதுவதில் அவர் வல்லவராகவும் இருந்தார்.

விசுவநாதனின் போர்டு எழுதும் ஆசை, ஏற்கனவே ராமநாதனுடன் இருந்த நெருக்கத்தை மேலும் அதிகமாக்கியது. அந்த நெருக்கம் இரண்டு பேருமே ஒன்றாக இணைந்து போர்டு எழுதும் தொழிலை மேற்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. பகல் நேரங்களில் ராமநாதன் சுற்றி அலைந்து 'ஆர்டர்' பிடித்து வருவார். இரவு நேரங்களில் அவருக்குக் கூடமாட ஒத்தாசை செய்வது விசுவநாதனுடைய வேலை.

மண்ணடி ராமசாமி தெருவில், ஒரு மொட்டை மாடியில் இவர்களின் 'விளம்பர நிறுவனம்' செயல்பட்டது. விசுவநாதனுக்கு இந்தத் தொழிலின் மூலம் அவ்வப்போது கொஞ்சம் வருமானம் கிடைக்கும். அதில் ஒரு பகுதி சிற்றுண்டிக்கும், இன்னொரு பகுதி சினிமாவுக்கும் செலவாகிவிடும். சின்ன வயதிலிருந்தே சினிமா பார்க்கும் வழக்கம் விசுவநாதனுக்கு அதிகம் இருந்தது. கூத்து பார்த்த கண்கள் ஆயிற்றே!

அப்போது செலக்ட் தியேட்டர் சென்னையில் ரொம்பவும் பிரசித்தம். அதன் முதலாளி பட்டேல் என்பவருக்குச் சொந்தமாக சாகர் டாக்கீஸ் என்று இன்னொரு தியேட்டரும் இருந்தது. விசுவநாதனும் ராமநாதனும் அவரை சிநேகம் பிடித்துக் கொண்டார்கள். தியேட்டரில் ஓடும் படங்களுக்கான விளம்பரத் தட்டிகள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்ற வேலைகளை விசுவநாதன் விரும்பிச் செய்ததற்குக் காரணம்: போர்டு பாஸ்!

அப்போதெல்லாம் 'போர்டு பாஸ்' என்று ஒரு இலவச பாஸ் கொடுப்பார்கள். அது வைத்திருந்தால் இலவசமாக சினிமா பார்க்கலாம். ஆக, செலக்ட் தியேட்டரிலும் சாகர் தியேட்டரிலும் ஓடும் எல்லாப் படங்களையும் இருவரும் பார்த்து விடுவார்கள். இப்படியே மற்ற தியேட்டர்களோடும் தொடர்பு கொண்டு எல்லா பெரிய தியேட்டர்களிலும் விசுவநாதன் 'போர்டு பாஸ்' வாங்கியது பெரிய சாதனை. “

தொடர்புள்ள பதிவுகள்:

சாவியின் படைப்புகள்