வெள்ளி, 16 மே, 2014

முருகன் - 3

ஆஞ்சநேயனுக்கு அருளிய அழகன் 
குருஜி ஏ.எஸ். ராகவன் 

மே 17. ’திருப்புகழ் தொண்டன்’ குருஜி ராகவன் மறைந்து ஓராண்டு ஆகிறது.  அவர் நினைவில், இதோ அவர் 'கல்கி'யில் எழுதிய ஒரு கட்டுரை!





‘கோவைக்கு மிக அருகேயுள்ள முருகன் தலம்’ என்றதும் நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது மருதமலைதான். ஆனால், அந்த முருகனுக்குப் போட்டியாக, அதே மலையின் வடபுறச் சாரலில் இன்னொரு முருகன் வீற்றிருக்கிறான்._ இல்லை! நின்று கொண்டிருக்கிறான்!

கோவையிலிருந்து சுமார் பத்து மைல் தொலைவில் இருக்கிறது அனுவாவி. சென்றுவர பேருந்து வசதிகள் உண்டு. தலத்தின் நீர்வளமும் மலைவளமும் நிலவளமும் அது முருகனுக்கு மிக மிகப் பொருத்தமான, அவன் அழகுக்கு அழகு செய்கின்ற தலம் என்பதைப் பறைசாற்றுகின்றன. வடக்கே குருவிருக்ஷமலை, தெற்கே அனுவாவிமலை, மேற்கே கடலரசி மலை என்று திக்கெல்லாம் சூழ்ந்து நிற்க, ஏறத்தாழ ஒரு பசுமைப் பள்ளத்தாக்கில் குடியேறியிருக்கிறான் முருகன். செங்கரும்பு வயல்களும் தென்னை, மாந்தோப்புகளும் சாமரம் வீச, தண்ணென்ற அந்தச் சூழலில், இன்னருள் சொரிந்து பொருளாகிறான்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையில் சிறப்புடையது அனுவாவி.

 அனுவாவி என்றாலே, ‘சிறிய குளம்’ என்றுதான் பொருள். சிறிய ஊற்று அல்லது கிணறு என்றும்  குறிப்பிடலாம்.

தல வரலாறு அறிய கொஞ்சம் ராமாயணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  

இலங்கை ராஜ்ஜியத்தின் மீது ராமன் போர் தொடுத்திருக்கிறான். வானரப் படைகளுடன் லக்ஷ்மணனும்கூட ராவணனின் சேனையுடன் போரிட்டுப் பலமிழந்து மூர்ச்சையாகியிருக்கிற நேரம். சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்தால் அவர்களை மீண்டும் எழுந்து போரிடச் செய்யலாம் என்று யோசனை கூறி, ஆஞ்சனேயனை அனுப்புகிறார் ஜாம்பவான்.

 ‘வெட்டிக்கொண்டு வா!’ என்று சொன்னால் கட்டிக் கொண்டு வருகிற ரகமல்லவா ஆஞ்சனேயன்! மூலிகையைத் தேடிப் பறித்து நேரத்தைக் கடத்தாமல் மலையையே பெயர்த்துக் கொண்டு வருகிறான்!

 வாயுபுத்ரனான போதிலும் மலையைப் பெயர்த்துக் கொண்டு காற்றிலேறி விண்ணைச் சாடி, கடல் கடந்து பறப்பது சுலபமல்லவே! களைப்பும் தாகமும் வாட்டலாயின. அந்த நேரத்தில் ஆஞ்சனேயனுக்குக் கைகொடுத்தவன் _ இல்லையில்லை! வேல் கொடுத்துக் காப்பாற்றியவன் இந்த அனுவாவி கந்தன்தான்! தன் கை வேலால் இத்தலத்தில் ஒரு சுனையை உண்டாக்கி ஆஞ்சனேயனின் தாகம் தீர்த்தானாம் முருகன். ‘அனுமக்குமரர் தீர்த்தம்’, ‘அனுமார்வாவி’ என்று இவ்விடத்துக்குப் பெயர்கள் வழங்கலாயின. இவைதான் பின்னர் மருவி ‘அனுவாவி’ ஆகியிருக்க வேண்டும். மலையின் பெயர் அனுமக் குமாரமலை.

அனுவாவி பத்துப்பாட்டு என்ற நூலில் இந்த ஸ்தல வரலாறு அழகான கவிதையாக்கப்பட்டிருக்கிறது.

அனுவாவி வந்துற்ற அஞ்சனாதேவி மகன்  
அனுமாரின் அருந்தாகம் தீர்க்க நீர் தந்த மலை  
கனமான மலை சுமந்த களைப்பாற்றிக் கரங்குவித்து  
குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலை.  

அனுமன் தொழுத குமரன் எப்படித்தானிருக்கிறான் என்று நாமும் பார்த்துவிடுவோமே!

கிழக்கு நோக்கி நிற்கும் ஆலயம் மலையடிவாரத்திலிருந்தே, தெரிகிறது. விரைவில் ஏறிவிடலாம். ஒரே பிராகாரம் கொண்ட அழகான சிறு ஆலயம். வினாயகரை வணங்கிவிட்டு, முன் மண்டபத்தைக் கடந்து கருவறையை அடைந்தால், அங்கே முருகன் ஆஞ்சனேயனுக்கு அருள்செய்த திருப்தியில் முகம் பூரிக்க நிற்கிறான். இருபுறமும் வள்ளி - தெய்வானையர் அவன் மலர்ச்சியில் மகிழ்ந்து தாங்களும் பூரித்து நிற்கிறார்கள்!  

கிருபானந்த வாரியார் இந்த அனுவாவி முருகனைப் பாடிய அழகான பாடல் நினைவுக்கு வருகிறது:

புகழனுவாவி மேவும் புனித வேலனே போற்றி!  
மகபதி தன்னை ஆண்ட வள்ளி நாயகனே போற்றி!  
இகபரம் அருள்வாய் போற்றி, என்றுமே இளையாய் போற்றி!  
குகபர குருவே போற்றி, குமரனே போற்றி போற்றி!

சிரத்தையுடன் செய்யப்படும் தினசரி பூஜைகளும் விழாக்கால விசேஷங்களும் இத் தலத்தை மக்கள் நாடும் ஸ்தலமாகப் பிரபலப்படுத்தி வருகின்றன.

அதிசயம் அனேகமுற்ற மலை இந்த அனுவாவி. அந்தக் காலத்தில் இம்மலையடிவாரத்தில் தாமரைத் தடாகம் என்ற ஊரிலிருந்த ஜமீந்தார் ஒருவர் மலைப்பாதை அமைத்து இக்கோயிலுக்கு உத்ஸவ மூர்த்திகள் செய்து கொடுத்தார். இங்கே ‘காணாச் சுனையும், கருநொச்சி வளமும், ஐந்திதழ் வில்வமும்’ இருந்ததாகச் சொல்வார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் இங்கே கண்ட அதிசயமொன்றைப் போற்றிப் புகழ்ந்தார் என்பார்கள்: இத்தலத்துக்குக் கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரின் விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும் மற்றதிலிருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரர். அவ்வேர், அனுவாவியிலிருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர்தான் என்று கண்டறிந்தார்! இவ்வியற்கை வினோதம் அனுவாவியின் தலச் சிறப்பால் விளைந்ததே என்று அவர் உணர்ந்து, வாழ்த்தி வழிபட்டதாகச் சொல்கின்றனர். விண்ணாவரங் கொடி, விண்ணாடும் கொடி என்று பெயர்கள் பெற்ற அக்கொடி, அனுவாவி ஸ்தல விருக்ஷமான மாமரத்தில் இன்றும் படர்ந்திருப்பதைக் காணலாம்.

மலைச்சாரலில் சில குகைகள் இருக்கின்றன. அவற்றில் அக்காலத்தில் முனிவர்களும் பாம்பாட்டிச் சித்தரும் தவமியற்றியிருக்கிறார்கள்.

   1957ஆம் ஆண்டு இங்கே ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆலயத்திலிருந்த தெய்வ வடிவங்களெல்லாம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. வெள்ளத்தின் உக்கிரத்தைவென்று நின்றது மாமரம் மட்டுமே! பின்னர் இறைவன் திருவருளால் தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. திருவண்ணாலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் அருள் வாக்குப்படி வினாயகர், அருணாசலேசுவரர் ஆகிய இருவர் உருவங்கள் மட்டும் மாமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்தன.

 ‘அனுவாவிப் பத்து’, ‘அருள்மிகு அனுவாவி முருகன் பெருமை’ என்ற நூல்களில் இத்தலப் பெருமையை விரிவாகக் காணலாம்.

மூர்த்தியின் பெருமையையோ தரிசித்தும் அனுபவித்தும்தான் அறிய வேண்டும். அவ்வாறு அனுபவித்து கந்தவேளின் சுந்தர வதனத்தை மனத்தில் குடியேற்றிய ஒரு பக்தர் பாடியிருப்பதைக் கேளுங்கள்:

 அனுவாவி தலம் வந்து அவனடியே கதியென்று  
அவனடியார் வேண்டுகின்ற வரம்யாவும் வழங்கும்மலை  
தினைமாவும் செழுந்தேனும் தான் விரும்பும் குருநாதன்  
திருமுருகன் வேலோடு மயிலேறி ஆடும் மலை!  
மயிலேறி ஆடும் மலை!  

கம்பன், ஆஞ்சனேயனின் புகழ் பாடுகையில், ‘அஞ்சிலே ஒன்று பெற்றான்’ என ஆரம்பித்து பஞ்சபூதங்களையும் வெற்றி கண்டவனாக அவனைச் சித்திரிக்கிறார். ‘அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்று ஆஞ்சனேயனைச் சரணடையச் சொல்கிறார். அந்த ஆஞ்சனேயனோ இந்த அனுவாவி முருகனால் அருளும் பலமும் பெற்று இயங்கியிருக்கிறான்! இவ்வாறிருக்க, அனுவாவி சுப்ரமண்யனை நினைத்தாலே இரட்டிப்பு சக்தி உடலில் பெருகிப் பொங்கித்தானே ஆகவேண்டும்!

[ நன்றி ; கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:



1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அனுவாவி தலம் பற்றியும் குருஜி அவர்களைப்பற்றியும் சிறப்பான பகிர்வுகள்..