வியாழன், 30 ஏப்ரல், 2015

சங்கீத சங்கதிகள் - 52

ஜி.என்.பி , மதுரை மணி  சந்தித்தால் ?  
மே 1. ஜி.என்.பியின்  நினைவு நாள். ( இந்த வருடம் 50-ஆவது நினைவு நாள்) இதோ அவர் நினைவில் சில ‘சங்கதி’கள் !

முதல் சங்கதி:
இசை விமர்சகர் சுப்புடு ஜி.என்.பி.யைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு இசை வானிலே ‘ஜி.என்.பி’ தோன்றியபோது இசைப் பழம்புள்ளிகளெல்லாம் பெரிதும் கலங்கினார்கள். ஏனெனில் ஜி.என்.பி. மேதா விலாசம் படைத்தவர். குறுகிய நோக்கம் அவரிடம் அறவே கிடையாது. பழைய பல்லவியைப் பாடாமல், இருபதே கீர்த்தனைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளாமல், ராகங்களையும் கீர்த்தனைகளையும் எழில் நோக்குடன் கண்டு, இசை உலகில் ஒரு புரட்சியையே உண்டு பண்ணினார். நாதஸ்வரத்தை ஒத்த சாரீரம். நாலு ஸ்தாயிகளை எட்டும் சாரீரம். நினைத்ததையெல்லாம் பேசும் சாரீரம். 

அவர் ஒரு இசை வள்ளல். அண்டியவர்க்கெல்லாம் இசையை அள்ளி அள்ளி வழங்கினவர். அவருடைய சீடர்கள் அனந்த கோடி. வேறு எந்த மகா வித்வான்களுக்குள்ளும் இந்த மனப் பான்மையோ பாங்கோ அறவே கிடையாது. இதற்கு சாட்சி தேவையில்லை. இது அப்பட்டமான உண்மை. ”

இரண்டாம் சங்கதி:

ஆதௌ கீர்த்தனாரம்பத்தில் ... ‘ஆனந்த விகட’னில் 22.7.56-இல் ஒரு புதிய நகைச்சுவைத் தொடர் தொடங்கியது. “இவர்கள் சந்தித்தால்’ என்பது அதன் தலைப்பு.

முதலில் இந்தத் தொடரைப் பற்றி எழுத்தாளர் ஸ்ரீதர் ( பரணிதரன், மெரினா) , அமரர்  ‘கோபுலு’ இருவரும் என்ன சொன்னார்கள்  என்று  பார்ப்போம்.


அக்காலத்தில் ‘இவர்கள் சந்தித்தால்” என்ற பகுதியைப் படிக்காதவர்களே  இல்லை எனலாம். பத்திரிகை உலகிற்கே புது இலக்கணம் படைத்த எவரெஸ்ட் சட்டயர் அது. நான்கைந்து பேரை எழுதச் சொல்லி, அவற்றை அடித்துத் திருத்தி, செதுக்கிச் செப்பனிட்டு, இணைத்துப் பிணைத்து, ஒரு கட்டுரையைக் கடைந்தெடுக்கும் ஆசிரியரின் (வாசனின்) செப்பிடு வித்தையைக் கண்டு நான் வியந்து போனேன்.
                -- ஸ்ரீதர், ”விகடனில் நான்”,விகடன் பவழ விழா மலர் ---

அந்தக் கால கட்டம் விகடனுக்கு ஒரு லேசான இறங்குமுகமாக இருந்தது. அந்த சமயத்தில் வாசன், விகடனுக்குப் புதிய பொலிவு ஊட்டும் நோக்கத்துடன் தானே நேரடியாக விகடன் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். தினமும் விகடன் ஆபீசுக்கு வந்து, ஆசிரியர் இலாகாவினருடன் மீட்டிங் நடத்துவார். விகடனை இம்ப்ரூவ் பண்ண ஆலோசனைகள் சொல்லுவார். அனைவரிடம் ஆலோசனைகள் கேட்பார். அப்போது உதித்தது தான் ‘இவர்கள் சந்தித்தால்’ என்ற ஐடியா. இந்த வரிசையில் எழுதப் பட்ட கட்டுரைகளில் ராஜாஜி, ஈ.வே.ரா.வில் தொடங்கி பல இரு துருவ முக்கிய பிரமுகர்கள் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும்? என்ன பேசுவார்கள்? என்று சுவைபட விவரிக்கும் கற்பனைச் சந்திப்புகள் இடம்பெற்றன. அவை வாசகர்கள் மத்தியில் பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன. ‘
      --கோபுலு, “சித்திரம் பேசுதடி”,  தொடர், அமுதசுரபி, டிசம்பர் 2007.

( என் குறிப்பு:  

முதல் கட்டுரை ஈ.வே.ரா - ஆசார்ய வினோபாவுடன்  தான் தொடங்கியது. பிறகு ராஜாஜி-காமராஜர் , அண்ணாதுரை - ஸ்ரீபிரகாசா, சிவாஜி கணேசன் -எம்.ஜி.ஆர் என்ற பல சந்திப்புக் கட்டுரைகள் வந்தன.   தோராயமாக  20 கட்டுரைகள் வந்தன என்று நினைவு. ) 

முதல் கட்டுரைத் தொடர்புள்ள ஒரு படம் கீழே! )

அந்தத் தொடரில் அவ்வப்போது சங்கீதம், நடனம்  தொடர்புள்ள  சில கட்டுரைகள் வந்தன. அவற்றில் ஜி.என்.பி. தொடர்புள்ள ஒன்றை இங்கே இடுகிறேன்.  அவருடைய நண்பர் மதுரை மணிக்கும் இது ஓர் அஞ்சலி தான்!

இந்தக் கட்டுரைக்குப் போனஸ் அமரர் கோபுலு வின் ஓவியங்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? ( சில ஓவியங்களில் ‘மாலி’யின் பழைய சித்திரங்களின் சாயல் தெரியவில்லை? )[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜி.என்.பி.

மதுரை மணி 

சங்கீத சங்கதிகள் : மற்ற பதிவுகள்

புதன், 29 ஏப்ரல், 2015

பாரதிதாசன் -2

ரவிவர்மா பரமசிவப் பட பாரதி 
பாரதிதாசன் 

29 ஏப்ரல் . இன்று பாரதிதாசன் பிறந்த தினம்.
ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பிறந்த தினமும் தான்!இவ்விரண்டும் சேர்ந்து எனக்கு நினைவு படுத்திய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்!

இந்தக் கட்டுரைக்கு ஒரு முன்னுரையாக ‘பாரதி’ அறிஞர் ரா.அ.பத்மநாபன் ஒரு நூலில் எழுதியதில் ஒருபகுதியை முதலில் இடுகிறேன்.

பாரதியாரால் ஊக்குவிக்கப் பெற்றுக் கவியாகி, கவிதையில் பாரதியாரின் நேர் வாரிசாகத் திகழ்ந்த “பாரதிதாசன்” தாம் பாரதியாரை முதன் முதலில் சந்தித்த சுவையான சந்தர்ப்பத்தை இங்கு அழகுற விவரிக்கிறார். 

பாரதியாரை விட ஒன்பது வயது சிறியவரானாலும், பாரதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கிய பாரதிதாசன், கடைசி வரை பாரதியாரை “ஐயர்” என்றே அழைப்பார். பாரதியைத் தவிர நிறை, எடை, தெய்வம் ஏதுமில்லை  அவருக்கு; “ஐயரை” யாரேனும் குறை சொல்லிவிட்டால் பொல்லாத கோபம் வந்துவிடும். அது மட்டுமல்ல. சாதாரணமாகப் பாரதியார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே குரல் உயர்ந்துவிடும்:  ஏதோ ஆவேசம் வந்தவர் போலப் பேசத் தொடங்கிவிடுவார் . ...... 

1939-இல் “ஹிந்துஸ்தான்” தமிழ் வாரப் பத்திரிகையில் இந்நூல் பதிப்பாசிரியர் வெளியிட்ட , ‘பாரதி மல’ரில் இக்கட்டுரை பிரசுரமாயிற்று. அனுமதியுடன் வெளியிடப் பெறுகிறது “ 
                                                                   --ரா.அ.ப. -- 

இப்போது  பாரதிதாசன் பேசுகிறார்!
=====

பாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில் படித்தவர்களிடையே உலவியிருந்தது. குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்) அந்தப் பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட நான் கேட்டிருக்கிறேன். என் ஆசைக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ஒரு நாள்.

சுதேச கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன். 'இந்தியா' பத்திரிகையில் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு வளைவுகள், குவளையின் கூச்சல் இவை எல்லாம் சுதேச கீதங்களின் உட்பொருளை எனக்கு விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷயமான உணர்வோடும், 'நான் ஓர் இந்தியன்' என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப் பாட முடிந்தது நாளடைவில்!

எனது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது. மாலை 3 மணிக்குக் கல்யாணப் பந்தல் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும் ஒருவன்.

கணீரென்று ஆரம்பித்தேன். "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ!" என்பதை. அப்போது என் பின் ஒருபுறமாக, இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று ரவிவர்மா 'பரமசிவம்'.வேணு நாய்க்கர், "இன்னும் பாடு சுப்பு" என்றார்.

நான், "தொன்று நிகழ்ந்த தனைத்தும்" என்ற பாட்டைப் பாடினேன்.

சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர் இருக்கும். 30 பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள், நான் பாடும் போது, அந்த ரவிவர்மா பரமசிவத்தையே பார்க்கிறார்கள். அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம் என்று தோன்றிற்று.என்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாய்க்கர். பாடினேன்.

அப்போது வேணு நாய்க்கர், "அவுங்க யார் தெரியுமில்ல?" என்று கேட்டார்.

தெரியாது என்று கூட நான் சொல்லி முடிக்கவில்லை. ரவிவர்மா படம்: "நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ?" என்று என்னைக் கேட்டார்.

நான்: "கொஞ்சம்."

'படம்': "உணர்ந்து பாடுகிறீர்கள்."

வேணு நாய்க்கர், அப்போது, "அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே?" என்று 'பரமசிவப் படத்தை' எனக்கு அறிமுகப்படுத்தினார்.

எனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என் மூஞ்சியை நான் கண்ணாடி எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான் ஓர் அசல் இஞ்சி தின்ற குரங்கு. பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார், நான் அப்போது என்ன பதில் சொன்னேன் என்பவைகளைக் கேட்டால் அப்போதே என்னால் சொல்ல முடியாது. இப்போது என்னால் சொல்ல முடியுமா?

கடைசியாக பாரதியார் சொல்லிய வார்த்தையை மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன் என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி விடக் கூடும் என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.

அவர் கூறிய வார்த்தைகளாவன:

"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே?"

நான் வீதியில் அடிக்கடி பார்த்து, "இவர் ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல் இருக்கிறார்" எனறு ஒப்புக் கூட்டி நினைத்த மனிதர் பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று. அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று. அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு முருகேசம் பிள்ளை முதலியவர்களால் பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று -- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச் சந்தோஷமயமாக்கிவிட்டன. மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன் பாரதியார் வீட்டுக்குப் போகப் போகிறேன். மறுநாள் என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான் கவலையாய்க் கிடந்தது.

நானும் வேணு நாய்க்கரும் பாரதியார் வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்... வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என் காதில் கேட்கிறது. நான் மாடியின் கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில் பாடிக் கொண்டிருக்கும் சிவா நாயகரை, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி சாமிநாத ஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப் பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார் 'ஆஹா' போடும்போது நான் கும்பிட்டேன். பாரதியார் கும்பிட்டு, "வாருங்கோ, உட்காருங்கோ. வேணு உட்கார். குயில் பாடுகிறது. கேளுங்கோ" என்றார். சிவா நாயகருக்குப் பாரதியார் 'குயில்' என்று பெயர் வைத்திருந்தார்.

பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு. அதன் பிறகு என்னைப் பற்றிய விவரம் நடந்தது. கொஞ்ச நேரம். "எனக்கு உத்தரவு கொடுங்கள்" என்று பாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார். மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப் புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது. மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பிறகு அதைக் கையில் எடுத்தேன், விரித்தேன்... வசமிழந்தேன்.

நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே என் காலத்தைக் கடத்தியிருந்தவன். என் ஆசிரியரும், புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர், மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை இவர்களால் நடத்தப்படும் கலைமகள் கழகத்தின் அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே யாருக்கும் புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம் எழுதும்போதுகூடக் கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்ற தப்பெண்ணமுடையவன்.

பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர் உலகில் சேர்த்தது.

நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள கையெழுத்துப் புத்தகமும் ஒரு பக்கம்; என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும் விஷயமும் ஒரு பக்கம். என் உள்ளமும் அதில் இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ள எளிய சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை, அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக் கவனிக்க என்னிடம் மீந்திருந்த உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.

இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த ராஜுலு நாயுடு பீடி பிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று. மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச் சுட்டிக்காட்டி, "இவர் தமிழ் வாசித்தவர் சுவாமி" என்றார். அதற்குப் பாரதியார், "இல்லாவிட்டால் என் கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன இருக்கிறது?" என்றார், அன்புடன், நல்லெண்ணத்துடன்.

அதன் பிறகு நான், "போய் வருகிறேன், சுவாமி" என்றேன். பாரதியார், "சரி, நேரமாகிறதா? நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்" என்று குறிப்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை. "நமஸ்காரம், நமஸ்காரம்" என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய எண்ணமில்லாது பிரிந்தேன். என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.


நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி முழுவதும் பாரதியாரின் குணாதிசயங்களை விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில் சற்று நேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள் நூதனமாக ஒன்றும் கூறவில்லை!

[ நன்றி: “பாரதியைப் பற்றி நண்பர்கள்” , தொகுத்தவர்: ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், 1982. ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

ரா.அ.பத்மநாபன்

பாரதி மணிமண்டபம்

புதன், 22 ஏப்ரல், 2015

பாரதிதாசன் -1

புகழ் வாழ்க்கை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

[ நன்றி: விகடன் ]

ஏப்ரல் 21. பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினம். 

அவர் 1964-இல் மறைந்தபோது, ஆனந்த விகடன் வெளியிட்ட கட்டுரையை இங்கு அவர் நினைவில் இடுகிறேன்.
======

புதுமைக் குயில் பறந்தது
'னக்குக் குயிலின் பாட்டும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முனவும் இனிக்கும்; பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்' என்றார் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. 

ஆமாம். பாரதிதாசன் பாட்டு, இனிமையும், வேகமும், எழுச்சியும் மிகுந்த ஒன்று! பாவேந்தர் பாரதி ஏற்றித் தந்த தீபத்தை அணையாமல் காப்பாற்றி வந்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவருக்கு இணையான தமிழ்க் கவிஞர் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அவர் மறைவு தமிழுக்கு நஷ்டம், தமிழ் மக்களுக்கு நஷ்டம், தமிழ்க் கவிதை உலகுக்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம். அவர் குடும்பத்தாருக்கு விகடன் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறான்.

பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி விகடனுக்கு எழுதுவதாக இருந்தார் கவிஞர் பாரதிதாசன். ஒரு கட்டுரையும் தந்தார். பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து தர முடியவில்லை. 'அவர் தருவார்; அதை வாசகர்களுக்கு நாம் தரலாம்' என்றிருந்தோம். அதற்குள் கூற்றுவன் அவரைக் கொண்டு சென்றுவிட்டான். அவர் தந்த அந்தக் கட்டுரையை இந்த இதழில் பிரசுரிக்கிறோம்.
                                                                                                           - ஆசிரியர்

புகழ் வாழ்க்கை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

ஆயிரக்கணக்கான அந் தமிழ்க் கவிஞர்கள் இருந்தார்கள். பதினாயிரக்கணக்கான பைந்தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள்.

வாய்ப் பாட்டுக்காரர்கள் வன்னாசன்னம். நகர்தோறும் நாடகப் பாட்டுக்கள், சிற்றூர்தோறும் தெருக் கூத்துப் பாட்டுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குந்தும் திண்ணைகளில் இரா மாயணப் பாட்டுக்கும், கோயிலின் குறடுகளில் பாரதப் பாட்டுக்கும் பஞ்சமே இல்லை.

சாவுக்கு இறுதியிலும், வாழ்வுக்கு நடுவிலும் மற்றும் திருக்கோயில்களிலும் திருவிழாக்களிலும் தேவாரமும், திருவாசகமும், திருவாய் மொழியும் வாய் ஓய்ந்தாலும் வழக்கம் ஓய்வதில்லை.

ஒரு தப்பு, அல்லது இரண்டு தாளம்; அதுவும் இல்லாவிட்டால் ஓர் உடுக்கை. அதற்கும் பஞ்சமானால், ஒற்றைத் தந்தி துத்தனாகக் கட்டையிலாவது ஒட்டியோ ஒட்டாமலோ பிச்சைக்காரர் பாட்டுக்கள் அங்கு இங்கு எனாதபடி எங்கும் கேட்கும். குறைந்தது 'காயமே இது பொய்யடா' இனத்தில் வேளைக்குப் பத்து உருப்படியாவது காதில் விழும். ஆனால்-

சந்து, பொந்து, தமிழ் மன்றம் எந்த இடங்களிலும், தழைவு, இழவு, தமிழ் விழா எந்த நேரத்திலும் கேட்கப்படும் பாட்டில், ஒலிதான் விளங்கும்; பொருள் விளங்காது!

புலவர்க்குள் பாட்டின் பொருள் பற்றிப் போர் தொடங்கும். கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் எந்த முடிவும் ஏற்பட்டுவிடாது.

புலவர் தாய்மொழி பற்றிப் போராடுவதை மற்றவர் ஆவலாக வேடிக்கை பார்க்க நெருங்குவதுண்டா என்றால், 'இரும்படிக்கும் இடத்தில் ஈ மொய்க்கவே மொய்க்காது'. புலவர் பொதுமக்கள் அல்லர்; அனாமத்துக்கள்!

ஒரு கவிஞர் கவிதை இயற்றினால், அந்தக் கவிதையின் பொருள் அவருக்கும், அவர் போன்ற கவிஞர்க்குமே விளங்கவேண்டும்! அயலார்க்குப் பொருள் தெரியும்படி எழுதப்படும் கவிதை அப்பட்டம், மட்டம்!

நாடகத்தில் பாட்டைக் கவனிப்பதில்லை. பாட்டின் மெட்டுக்கள்தாம் கவனிக்கப்படும். பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. அது பெரும்பாலும் இந்துஸ்தானியாய் இருந்து போகட் டுமே!

இடையிடையே சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லுகின்ற நடிகன், சமஸ்கிருதத்தைச் சொல்லுவதாக வாந்தி எடுத்தாலும் அவன் கெட் டிக்காரன். அவனால் வருமானம் மிகுதியாகும். 'நல்ல தங்கை', 'வள்ளி', 'அரிச்சந்திர விலாசம்' போன்ற மாமூல் நாடகங்களுக்குத்தான் நல்ல பெயர். நாடகத்துக்கு வந்தவர்கள் உருவத்தை ஆவலாகக் காணுவதல்லாமல், கதை உறுப்பினரின் உள்ளத்தையும், உள்ளத்தை விளக்கும் பாட்டையும் கேட்பதில் காலத்தை வீணாக்க மாட்டார்கள்! கதையும், பாட்டும் தலைமுறை தலைமுறை யாக நடப்பவைதானே!


அந்நாளில் பொருள் விரியும்        தமிழ்ச் செய்யுட்கள் இருந்தன; பொருள் புரியும் தமிழ்ச் செய்யுள்கள் இருந்ததில்லை. புரியாத பாட்டைக் கேட்டுக் கேட்டு மக்கள், புரியும் பாட்டைக் காட்டி 'இந்தா' என்று அழைத்தாலும், அவர்கள் தெனாலி இராமனின் சுடக் குடித்த பூனைகளாய் ஓடுவார்கள்!

தமிழ்ப் பாட்டு என்பது தமிழர்க்கு வெறுப்பூட்டும் பொருளாயிற்று. 
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம், பாவேந்தர் பாரதியாரின் பாட்டுக்கு வரும்வரைக் கும் எழுந்திருக்கவே இல்லை! கொட்டை நீக்கிக் கோது நீக்கி 'இந்தா' என்று தந்த பலாச்சுளை, மக்கட்கு அன்று பாரதியார் அருள் புரிந்த, பொருள் விளங்கும் பாட்டு!

வல்லாள மாவரசன் மனைவியைச் சிவனடியார்க்கு அளித்துச் சிவனடி அடைந்தான் என்ற கதையை, ஆயிரம் பாட்டால் பாடி முடித்தார் என் நண்பர் துரைசாமி வாத்தியார். 'இது காலத்துக்கு ஏற்றதல்ல; பாட்டின் நடையும் சிக்கலானது' என்றார்கள் பலர். துரைசாமி வாத்தியார் தவறுணர்ந்து, தணலிற் போட்டுக்கொளுத்தினார் புராணத்தை. ஆனால், அரிய கருத்தை எளிய நடையில் எழுதுவது செயற் கரிய செயல் என்பதை துரைசாமி வாத்தியார் அப்போதுதான் தெரிந்து கொண்டார்.

பாவேந்தர் பாரதியார் நாட்டுக்குப் பாடத் துவங்கியது 1906-ம் ஆண்டில்தான். அதற்கு முன் அவர் வீட்டாருக்கும் நெருங்கிய நண்பர்கட்கும் பாடியிருக்கலாம்.

பாரதியார் பாட்டுக்கள் எப்படி இருக்கும் என்று கேட்பவர் இருந்தால், அவர்கட்கு நான் சொல்லும் விடை இதுதான்:

1. தமிழர் 1906-ல் எந்தெந்த தமிழ்ச் சொற்களை அறிந்திருந்தார்கள்? அந்தந்தச் சொற்களையே வைத்துப் பாட்டைப் பாடினார்.

2. 1906-ல் தமிழர் இருந்த அடிமை நிலையை விலக்க, அவர்கள் மீட்சி நிலையை அடைய அவர்கட்கு எக்கருத்தை வைத்துப் பாட வேண்டும்? அக்கருத்தை வைத்துப் பாடினார்.

3. எவ்வளவு பெரிய உள்ளம் வேண்டும்? அவ்வளவு பெரிய உள்ளத்தைக் கொண்டு பாடினார்.

4. எவ்வளவு பாட்டுத் திறம் வேண்டும்? அவ்வளவு பாட்டுத் திறத்தைக் கொண்டு பாடினார்.

அந்நாள் பாரதியார் பாட்டைக் கேட்ட, பாசி படிந்த தமிழ்த்தாயின் செந்தாமரை முகத்தில் மின்னிய புன்னகை, இருண்ட நாட்டில் பட்டப்பகலைச் செய்தது. தமிழர் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்தார்கள்.


புகழ் பாரதியாரிடம் சேருமா? துரைசாமி வாத்தியாரிடம் சேருமா?

[ நன்றி : விகடனின் ‘காலப் பெட்டகம்’ ]

'கல்கி' யில் வந்த அஞ்சலிக் குறிப்பு.தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

வியாழன், 16 ஏப்ரல், 2015

கல்கி - 7: சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ : பட விமர்சனம்
கல்கி

ஏப்ரல் 16.
சார்லி சாப்ளினின் பிறந்ததினம்.
டிசம்பர் 25. சாப்ளினின் நினைவு தினம்.

1931- இல் வந்த சாப்ளின் படம் ‘ சிட்டி லைட்ஸ்’.


1932-இல்  ஆனந்த விகடனில் , கே.ஆர். சர்மா சாப்ளினின்  இரு தோற்றங்களை உடனே வரைந்தார்!  ( சி.வி.மார்க்கன் ( மார்க்கபந்து) என்ற ஓவியருக்குப் பின்னர் விகடனில் சேர்ந்தவர் சர்மா என்று தெரிகிறது.)

[ நன்றி: விகடன் ] 

1933-இல்  இந்தப் படம் பற்றி 'கல்கிதன் ‘ஆடல் பாடல்’ பகுதியில்
எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி: 

'சார்லி சாப்ளின் பெயர் பெற்ற ஹாஸ்ய நடிகராயிற்றே? இந்தக் கதை சோகரஸம் பொருந்தியதாகவல்லவோ இருக்கிறது?' என்று மேற்படி காட்சியைப் பாராதவர்கள் கேட்கலாம். ஆமாம்; சோகரஸம் பொருந்திய இந்தக் கதையிலேதான் ஆரம்ப முதல் கடைசி வரையில் பார்ப்பவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரிக்கும்படி பண்ணுகிறார் சார்லி. இந்தக் கதையை சினிமா காட்சியில் பார்க்கும்போது சிரிப்பும் கண்ணீரும் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது.


எந்த உணர்ச்சியையும் வாய்ப் பேச்சினால் உண்டாக்குவதைவிட அதிக தீவிரமான அளவில் நடிப்பினால்தான் உண்டாக்க முடியும் என்பது சார்லியின் கருத்து. இதை முன்னிட்டுத்தான் இக் காட்சியின் ஆரம்பத்தில் டாக்கி பரிகசிக்கப்பட் டிருக்கிறது போலும்!

குபேர பட்டணமான நியூயார்க்கில், ஆயிரம் தையலுடன் கூடிய கந்தல் துணி உடுத்தியவனும், வீடு வாசலற்றவனும், ஜீவனத்துக்கு வழியில்லாத வனுமான ஒரு நாடோடியைத் தமது கதாநாயகனாகவும், ஏழைக் குருட்டுப் பெண் ஒருத்தியை கதாநாயகியாகவும் அமைத்துக்கொண்ட சார்லியின் தைரியந்தான் என்ன? தற்கால நாகரிக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வளவும் கடூரமாக அவர் பரிகசிக்கிறார்?தமிழ்நாட்டிலுள்ள நடிக சிகாமணிகளுக் கெல்லாம் ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். 'ஸிடி லைட்ஸ்' என்னும் காட்சியைப் பார்க்க மட்டும் தப்பித் தவறிப் போய்விட வேண்டாம். அதைப் பார்த்தால் ஒருவேளை, 'நாமும் பவுடர் பூசி வேஷம் போடுவதா? வேண்டாம் நமக்கு இந்த நாடகத் தொழில்!' என்று தீர்மானித்து விடக் கூடும். ஆகவே, ஜாக்கிரதை!

[ நன்றி : விகடனின் ‘காலப் பெட்டகம்’ ]

தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி படைப்புகள்

’கல்கி’யைப் பற்றி

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

தமிழன்னை : கவிதை

 தமிழன்னை
      
[  மூலம்; மணியம் ]


யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 

கீழே உள்ள கவிதை கோபுர தரிசனம் 2005 தீபாவளி மலரில் வந்த கவிதை

பரமனின்  பாட்டில் பிழைதனைக் கண்டு 
. . பகர்ந்தது யாருடைச் சொல்? -- தமிழ் 
மரபணு என்னும் மகிமைப்  பிரணவ 
. . மந்திர நாயகி சொல்  (1). 

தந்திரச் சூரனைப் பண்டைச் சமர்தனில்

. . தாக்கிய தாருடை வேல்? -- திருச் 
செந்திலின் செல்வனைப் பத்தர்க் கருளிய 
. . செந்தமிழ் அன்னையின் வேல்.  (2)

தாவத் தவித்திடும்   முல்லைக்குத்  தேரினைத் 

. . தந்த தெவருடைக் கை? -- மொழிக் 
காவலர் காமுறும் தொன்மை இலக்கணக் 
. . காப்பிய நாயகி கை.  (3) 

அன்பும் இறையும் இரண்டிலை ஒன்றென 

. . ஆய்வுகள் செய்தவர் யார் ? -- திரு 
மந்திரம் ஓதிய  மாமுனி முத்தமிழ் 
. . மாதவள் செல்வ  மகன்.   (4) 

கறையான் அரித்த சுவடிகள் தேடிக் 

. . களைத்த தெவருடைக் கால்? -- நான் 
மறையென மாண்புறு முப்பால் வழங்கிய  
. . வண்டமிழ் அன்னையின் கால்.  (5) 

பண்ணிசை கூத்தியல் யாப்பியல்  நல்கிப் 

. . பகுத்தது யார் அறிவு? -- எந்த 
மண்ணும் அறிந்திடாச் சந்தம்  நிறைதமிழ்
. . மாதாவின் கூர் அறிவு.  (6) 

யாவரும் எம்மவர் யாதுமே நம்நகர் 

. . என்றசொல் யாருடைச் சொல்? -- சங்கப்
பாவலர் பாட்டிசைப் பாணரைப் பெற்றவள் 
. . பைந்தமிழ்  அன்னையின் சொல். (7) 


தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

பதிவுகளின் தொகுப்பு: 276 – 300

பதிவுகளின் தொகுப்பு: 276 – 300
276. பி.ஸ்ரீ. -10: பாரதி விஜயம் -2
277. சங்கீத சங்கதிகள் -41
சீஸன் 55 : 1
278. ஸர்தார் வல்லபாய் படேல்
279. சங்கீத சங்கதிகள் -42
சீஸன் 55: 2
280. பதிவுகளின் தொகுப்பு: 251 – 275
281. சங்கீத சங்கதிகள் -43
சுப்புடு; நினைவுகள் : 1
282. சங்கீத சங்கதிகள் -44
சுப்புடு; நினைவுகள் : 2
283. சங்கீத சங்கதிகள் – 45
 பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 1
 உ.வே.சாமிநாதய்யர்
284. சங்கீத சங்கதிகள் – 46
பெரிய வைத்தியநாத ஐயர் : பகுதி 2
உ.வே.சாமிநாதய்யர்
285. மீ.ப.சோமு – 2
பாலு பொங்குச்சா? வயிறு வீங்குச்சா?
286. சாவி -12 : 'அவுட்' அண்ணாஜி
287. பாடலும் படமும் - 9:
குடியரசுக் கொண்டாட்டங்கள் !
288. சங்கீத சங்கதிகள் - 47
வி.வி. சடகோபன் -1
சங்கீத மும்மூர்த்திகள்
289. காந்தி -1
ஐயன் முகம் மறைந்து போச்சே! சுரபி
290. சங்கீத சங்கதிகள் - 48
வி.வி.சடகோபன் -2
பாகவத சம்பிரதாயம்
291. சங்கீத சங்கதிகள் - 49
வி,வி.சடகோபன் -3
நாத வனத்திலோர் ஆண்டி!
292. சங்கீத சங்கதிகள் - 50
வி.வி.சடகோபன் -4
காத்தானும் கர்நாடக இசையும் !
293. கொத்தமங்கலம் சுப்பு -10
படத்தொழில் செழிக்கப் பாடுபட்டவர்கள்!
கொத்தமங்கலம் சுப்பு
294. செந்தமிழ்ப் பாட்டன் ; கவிதை
295. சசி -10 ; எதிர்பாராதது!
296. லா.ச.ராமாமிருதம் -9: சிந்தா நதி - 9
5. சொல் // லா.ச.ரா
297. எஸ். எஸ். வாசன் – 2
விகடனின் மழலைப் பருவம்!
298.சங்கீத சங்கதிகள் - 51
பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
உ.வே.சாமிநாதய்யர்
299. நாடோடி -1 :
" அப்பவே சொன்னேனே, கேட்டாயா?”
நாடோடி
300. சாவி -13: 'கமிஷன்' குப்பண்ணா


தொடர்புள்ள பதிவுகள்: