புதன், 22 ஏப்ரல், 2015

பாரதிதாசன் -1

புகழ் வாழ்க்கை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

[ நன்றி: விகடன் ]

ஏப்ரல் 21. பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினம். 

அவர் 1964-இல் மறைந்தபோது, ஆனந்த விகடன் வெளியிட்ட கட்டுரையை இங்கு அவர் நினைவில் இடுகிறேன்.
======

புதுமைக் குயில் பறந்தது
'னக்குக் குயிலின் பாட்டும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முனவும் இனிக்கும்; பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்' என்றார் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. 

ஆமாம். பாரதிதாசன் பாட்டு, இனிமையும், வேகமும், எழுச்சியும் மிகுந்த ஒன்று! பாவேந்தர் பாரதி ஏற்றித் தந்த தீபத்தை அணையாமல் காப்பாற்றி வந்தவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவருக்கு இணையான தமிழ்க் கவிஞர் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அவர் மறைவு தமிழுக்கு நஷ்டம், தமிழ் மக்களுக்கு நஷ்டம், தமிழ்க் கவிதை உலகுக்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம். அவர் குடும்பத்தாருக்கு விகடன் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறான்.

பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி விகடனுக்கு எழுதுவதாக இருந்தார் கவிஞர் பாரதிதாசன். ஒரு கட்டுரையும் தந்தார். பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து தர முடியவில்லை. 'அவர் தருவார்; அதை வாசகர்களுக்கு நாம் தரலாம்' என்றிருந்தோம். அதற்குள் கூற்றுவன் அவரைக் கொண்டு சென்றுவிட்டான். அவர் தந்த அந்தக் கட்டுரையை இந்த இதழில் பிரசுரிக்கிறோம்.
                                                                                                           - ஆசிரியர்

புகழ் வாழ்க்கை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

ஆயிரக்கணக்கான அந் தமிழ்க் கவிஞர்கள் இருந்தார்கள். பதினாயிரக்கணக்கான பைந்தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள்.

வாய்ப் பாட்டுக்காரர்கள் வன்னாசன்னம். நகர்தோறும் நாடகப் பாட்டுக்கள், சிற்றூர்தோறும் தெருக் கூத்துப் பாட்டுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குந்தும் திண்ணைகளில் இரா மாயணப் பாட்டுக்கும், கோயிலின் குறடுகளில் பாரதப் பாட்டுக்கும் பஞ்சமே இல்லை.

சாவுக்கு இறுதியிலும், வாழ்வுக்கு நடுவிலும் மற்றும் திருக்கோயில்களிலும் திருவிழாக்களிலும் தேவாரமும், திருவாசகமும், திருவாய் மொழியும் வாய் ஓய்ந்தாலும் வழக்கம் ஓய்வதில்லை.

ஒரு தப்பு, அல்லது இரண்டு தாளம்; அதுவும் இல்லாவிட்டால் ஓர் உடுக்கை. அதற்கும் பஞ்சமானால், ஒற்றைத் தந்தி துத்தனாகக் கட்டையிலாவது ஒட்டியோ ஒட்டாமலோ பிச்சைக்காரர் பாட்டுக்கள் அங்கு இங்கு எனாதபடி எங்கும் கேட்கும். குறைந்தது 'காயமே இது பொய்யடா' இனத்தில் வேளைக்குப் பத்து உருப்படியாவது காதில் விழும். ஆனால்-

சந்து, பொந்து, தமிழ் மன்றம் எந்த இடங்களிலும், தழைவு, இழவு, தமிழ் விழா எந்த நேரத்திலும் கேட்கப்படும் பாட்டில், ஒலிதான் விளங்கும்; பொருள் விளங்காது!

புலவர்க்குள் பாட்டின் பொருள் பற்றிப் போர் தொடங்கும். கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் எந்த முடிவும் ஏற்பட்டுவிடாது.

புலவர் தாய்மொழி பற்றிப் போராடுவதை மற்றவர் ஆவலாக வேடிக்கை பார்க்க நெருங்குவதுண்டா என்றால், 'இரும்படிக்கும் இடத்தில் ஈ மொய்க்கவே மொய்க்காது'. புலவர் பொதுமக்கள் அல்லர்; அனாமத்துக்கள்!

ஒரு கவிஞர் கவிதை இயற்றினால், அந்தக் கவிதையின் பொருள் அவருக்கும், அவர் போன்ற கவிஞர்க்குமே விளங்கவேண்டும்! அயலார்க்குப் பொருள் தெரியும்படி எழுதப்படும் கவிதை அப்பட்டம், மட்டம்!

நாடகத்தில் பாட்டைக் கவனிப்பதில்லை. பாட்டின் மெட்டுக்கள்தாம் கவனிக்கப்படும். பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. அது பெரும்பாலும் இந்துஸ்தானியாய் இருந்து போகட் டுமே!

இடையிடையே சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லுகின்ற நடிகன், சமஸ்கிருதத்தைச் சொல்லுவதாக வாந்தி எடுத்தாலும் அவன் கெட் டிக்காரன். அவனால் வருமானம் மிகுதியாகும். 'நல்ல தங்கை', 'வள்ளி', 'அரிச்சந்திர விலாசம்' போன்ற மாமூல் நாடகங்களுக்குத்தான் நல்ல பெயர். நாடகத்துக்கு வந்தவர்கள் உருவத்தை ஆவலாகக் காணுவதல்லாமல், கதை உறுப்பினரின் உள்ளத்தையும், உள்ளத்தை விளக்கும் பாட்டையும் கேட்பதில் காலத்தை வீணாக்க மாட்டார்கள்! கதையும், பாட்டும் தலைமுறை தலைமுறை யாக நடப்பவைதானே!


அந்நாளில் பொருள் விரியும் தமிழ்ச் செய்யுட்கள் இருந்தன; பொருள் புரியும் தமிழ்ச் செய்யுள்கள் இருந்ததில்லை. புரியாத பாட்டைக் கேட்டுக் கேட்டு மக்கள், புரியும் பாட்டைக் காட்டி 'இந்தா' என்று அழைத்தாலும், அவர்கள் தெனாலி இராமனின் சுடக் குடித்த பூனைகளாய் ஓடுவார்கள்!

தமிழ்ப் பாட்டு என்பது தமிழர்க்கு வெறுப்பூட்டும் பொருளாயிற்று. 
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம், பாவேந்தர் பாரதியாரின் பாட்டுக்கு வரும்வரைக் கும் எழுந்திருக்கவே இல்லை! கொட்டை நீக்கிக் கோது நீக்கி 'இந்தா' என்று தந்த பலாச்சுளை, மக்கட்கு அன்று பாரதியார் அருள் புரிந்த, பொருள் விளங்கும் பாட்டு!

வல்லாள மாவரசன் மனைவியைச் சிவனடியார்க்கு அளித்துச் சிவனடி அடைந்தான் என்ற கதையை, ஆயிரம் பாட்டால் பாடி முடித்தார் என் நண்பர் துரைசாமி வாத்தியார். 'இது காலத்துக்கு ஏற்றதல்ல; பாட்டின் நடையும் சிக்கலானது' என்றார்கள் பலர். துரைசாமி வாத்தியார் தவறுணர்ந்து, தணலிற் போட்டுக்கொளுத்தினார் புராணத்தை. ஆனால், அரிய கருத்தை எளிய நடையில் எழுதுவது செயற் கரிய செயல் என்பதை துரைசாமி வாத்தியார் அப்போதுதான் தெரிந்து கொண்டார்.

பாவேந்தர் பாரதியார் நாட்டுக்குப் பாடத் துவங்கியது 1906-ம் ஆண்டில்தான். அதற்கு முன் அவர் வீட்டாருக்கும் நெருங்கிய நண்பர்கட்கும் பாடியிருக்கலாம்.

பாரதியார் பாட்டுக்கள் எப்படி இருக்கும் என்று கேட்பவர் இருந்தால், அவர்கட்கு நான் சொல்லும் விடை இதுதான்:

1. தமிழர் 1906-ல் எந்தெந்த தமிழ்ச் சொற்களை அறிந்திருந்தார்கள்? அந்தந்தச் சொற்களையே வைத்துப் பாட்டைப் பாடினார்.

2. 1906-ல் தமிழர் இருந்த அடிமை நிலையை விலக்க, அவர்கள் மீட்சி நிலையை அடைய அவர்கட்கு எக்கருத்தை வைத்துப் பாட வேண்டும்? அக்கருத்தை வைத்துப் பாடினார்.

3. எவ்வளவு பெரிய உள்ளம் வேண்டும்? அவ்வளவு பெரிய உள்ளத்தைக் கொண்டு பாடினார்.

4. எவ்வளவு பாட்டுத் திறம் வேண்டும்? அவ்வளவு பாட்டுத் திறத்தைக் கொண்டு பாடினார்.

அந்நாள் பாரதியார் பாட்டைக் கேட்ட, பாசி படிந்த தமிழ்த்தாயின் செந்தாமரை முகத்தில் மின்னிய புன்னகை, இருண்ட நாட்டில் பட்டப்பகலைச் செய்தது. தமிழர் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்தார்கள்.


புகழ் பாரதியாரிடம் சேருமா? துரைசாமி வாத்தியாரிடம் சேருமா?

[ நன்றி : விகடனின் ‘காலப் பெட்டகம்’ ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புரட்சிக் கவி போற்றுவோம்

கருத்துரையிடுக