புதன், 30 மே, 2012

’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -4

மிஸ்டர் ராஜாமணி - 4            
தேவன்           

                

சென்ற வாரம் விடியற்காலையில் வாசல் ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அரைத் தூக்கமாய்ப் படுத்துக் கொண்டிருந்தேன். ஓர் சிறு கை வாசல்கதவை மெதுவாய்த் தட்டிற்று; ஓர் இனிமையான குரல். ''அம்பி மாமா! அம்பி மாமா!'' என்று கூப்பிட்டது. ஒரே பாய்ச்சலில் படுக்கையைவிட்டுக் குதித்து ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். மறுகணம் என் அருமை மருமான் ராஜாமணி என்னைக் கட்டிக்கொண்டான். ''எப்படா ராஜா வந்தே?'' என்றேன். ''நான்தான் வந்தேன் மாமா, அம்மாவை அழைச்சிண்டு; 'திர்வன்றம் எச்சுப்பச்சு'லேதான் வந்தேன்'' என்றான். நான் என் தமக்கை பக்கம் திரும்பி, ''ஏனம்மா, ஒரு கடுதாசி போடக்கூடாதா? நான் ஸ்டேஷனுக்கு வரமாட்டேனா?'' என்றதற்கும் அவனே பதில் சொல்லிவிட்டான்'' போடணும்தான். ஆனாக்கே ஒழியவேல்லே, மாமா'' என்றுதான் ஏதோ பெரிய மனிதன்போலும், குடும்பக் காரியங்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறவன் போலும் பதில் சொன்னான்.

ராஜாமணி எப்போதும்போல் என்னிடம் ஆசையாகத்தான் இருந்தான். ஆனால் முன் போல் நாள் முழுவதும் என்னுடனேயே கழிப்பதில்லை. நான் ஆபீசுக்குப் போயிருக்கும் நேரமெல்லாம் அவன் அம்மாமியுடன் பேசிக்கொண்டிருப்பான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாகிவிட்டதாவென்று கேட்டேன்.

''! ஆச்சே, மாமா! நான் ஒண்ணாங்கிளாஸ்னு வாசிக்கிறேன்!'' என்றான்.

''ஏண்டா, உனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கிறதா?'' என்று கேட்விட்டேன்.

''அம்பிமாமா, எங்க வாத்தியார் சார் வந்து தொரெஸாமி அய்யர்; அவருக்குக் கிளி மாதிரி மூக்கு இருக்கு. அதனாலே அவரைக் 'கிளி மூக்கு' இன்னே நாங்கள்ளாம் கூப்பிடறோம். நாங்கள்ளாம் கணக்குப் போட்டுண்டு கஷ்டப்பட்டா அவருக்கு ரொம்ப ஸந்தோஷம், மாமா.''

''ஏண்டா அப்படிச் சொல்கிறாய்?''

''இல்லே, மாமா. வந்து திங்கட்கிழமை காலமே போன ஒடனே கணக்குப் போடறா, 'ஒரு ஆனை மூணு ரூபான்னாக்கே, நாலு யானை என்ன வெலை' இன்னு. எங்க வாத்தியார் என்ன, ஆனை வாங்கப் போறாரா? அதுக்காக எங்களை எதுக்கு மாமா குட்டணும்?''

''சரி, அப்புறம் என்ன வாசிப்பாய்?''

''தமிழ்ப்பாடம் ஒண்ணு வச்சிருக்கா. அதிலே ஒண்ணுமே கிடையாது. அதிலே அணில் குஞ்சையும், துரை பொம்பையையும் போட்டிருக்கான். எனக்குச் சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிச்சுப் போச்சு.''

''அப்புறம்?''
               

''அப்புறம் கணக்குச் சொல்லித் தரா. ஒரு நாளைக்கு அப்பா கணக்குப் போட்டுக் குடுத்தா. 'யாருடா போட்டா இதை? ரைட்டாயிருக்கேடா'ன்னார், 'கிளி மூக்கு'. 'நான்தான் ஸார் போட்டேன் நேத்திக்கு' இன்னேன். 'பொய் சொல்றேடா. வா போர்டுக்கு'ன்னார். 'இல்லே ஸார். அப்போ போட்டேன், ஞாபகமிருந்தது. அதுக்குமேலே காபி குடிச்சுட்டு வந்தேன். சித்தே மறந்து போயிருக்கு. அப்புறம் ஆகட்டும்'ன்னேன். அப்படியும் விடாமே அந்தக் 'கிளி மூக்கு' என்னெ ரெண்டடி அடிச்சுடுத்து. எனக்காக ஒண்ணு, அப்பாவுக்காக ஒண்ணுன்னு நினைச்சுண்டு பேசாமே இருந்துட்டேன், மாமா.''

''குழந்தைக்குப் பேசவே தெரியாது!'' என்று சொல்லிக்கொண்டே என் தமக்கை அவ்விடம் வந்தாள். அத்துடன் அந்தச் சம்பாஷணை நின்றது.

எங்கள் ராஜாமணி தலை வாரிக்கொள்வது, டிரஸ் செய்துகொள்வது எல்லாம் அம்மாமியிடந்தான். அம்மாமி வந்து ஒரு வருஷத்துக்குள்ளாகத்தான் ஆகிறது.

நான் வீட்டில் இல்லாத வேளைகளிலெல்லாம் அவன் அம்மாமியுடன் வம்பளந்து கொண்டிருப்பான். விசாரித்ததில் அந்தப் போக்கிரி அவளை ரொம்பப் பயமுறுத்திக்கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது.

'' அம்மாமி! எங்க அம்பி மாமாக்குக் கோவம் வந்தா என்ன பண்ணுவா, தெரியுமா?'' என்றானாம் ஒரு நாள.

''தெரியாது'' என்றி பதில் வந்ததாம்.

''நீ மாமாவுக்குப் பால், காபி எல்லாம் கொடுக்கறே, ரொம்ப சரி. ஆனாக்கே, மாமா இருக்கிற பக்கம் தவிர எங்கே பார்த்தாலும் பார்க்கறியே, எதுக்கு? அதனாலே மாமாக்கு ஒம் பேரிலே ரொம்பக் கோவம். அதுக்கோசரம் நீ இன்னிக்கு மத்தியானம் நல்ல டிபனாப் பண்ணி, திதிக்கத் திதிக்கக் கொடுக்கணும், தெரியுமா?'' என்றானாம்.

நான் தினம் ஆபீஸுக்குக் கிளம்பும்போதெல்லாம் குழந்தை, ''மாமா! 'பல்லூன்' வாங்கிண்டு வர்றயா, மாமா?'' என்று கெஞ்சுவதே வழக்கமாக இருந்தது. இரண்டு நாளைக்குமுன் சாயந்தரம் வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு 'பல்லூன்' வாங்கிக் கொண்டு போனேன். அவன் கையில் அதைக் கொடுத்தது முதற்கொண்டு அதே காரியமாய் அதை ஊதிக்கொண்டே இருந்தான். நான் சாப்பிட உட்கார்ந்த போதும் என் பின்னால் நின்றுகொண்டு ஊதிக்கொண்டிருந்தான்.

திடீரென்று 'படா'ரென்ற பிரம்மாண்டமான சப்தம் கேட்டது. என் பின்னால் நின்ற ராஜாமணியின் முகத்தைப் பார்க்கவேணுமே. சற்றத் தூரத்தில் 'பல்லூன்' வெடித்துக் கீழே கிடந்தது.

''ஆச்சோல்லியோ காரியம்? ஒரு வழியா தூங்கப் போ'' என்றாள் அவன் தாயார். ராஜாமணி யார் பேரில் குற்றஞ் சாட்டலாமென்று இரண்டு நிமிஷம் யோசனை செய்தான். கடைசியில் என்னிடம் வந்து, ''இல்லே மாமா, போனாப் போறது. எம் பேரிலே பெசகே இல்லே, மாமா. அந்த ராஜி அம்மாமி இருக்கோல்லியோ, அது சொல்லித்து, 'இன்னம் ஊதுடா, ஊதுடா' ன்னு. நான் ஊதிப்பிட்டேன். அவ்வளவுதான்!'' என்றான்.

நான் சிரித்தேன். எங்கே நான் கோபித்துக் கொள்ளப் போகிறேனோவென்று பயந்து கொண்டிருந்த ராஜாமணி நான் சிரிப்பதைப் பார்த்துவிட்டுச் சற்றுத் தைரியமாய் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, ''மாமா, மாமா! நாளைக்கு நல்ல 'பல்லூ'னா இன்னொண்ணு வாங்கிண்டு வர்றயா, மாமா?'' என்றான்.

நேற்று இரவு ராஜாமணி என்னுடன் படுத்துக்கொண்டிருந்தான். ''சாயந்தரம் எங்கே போயிருந்தாய்!'' என்று கேட்டேன்.

''மாமா. இன்னிக்குச் சாயந்தரம் நான் அப்பாவோடே பீச்சுக்குப் போனேன். அம்மாகூட வந்தா. அசட்டு அம்மாமி முன்னாலே வரமாட்டேன்னா. நான் சொன்னேன், 'நீ வர்றயா, இல்லாட்டா நான் ஒன்னை மடுரையிலே போய்ப் பரியாசம் பண்ணட்டுமா'ன்னு. அப்புறம் பயந்துண்டு வந்துட்டா.
               

''என்னோடே அடுத்தாத்துப் பயல் கிட்டு வந்திருந்தான். நாங்கள்ளாம் மணலிலே விளையாடினோம். அந்தப் பயல் சொன்னான், 'எலே ஆசாமணி! என்னை வந்து ஒரு பெரிய திமிங்கிலம் கடிச்சுடுத்துரா'ன்னு. 'திமிங்கிலம்னா என்னடா' இன்னேன். அவன் வந்து ஒரு சின்ன கட்டையைக் காமிச்சு, 'அதுக்குள்ளேதாண்டா அது இப்போ ஒளிஞ்சிண்டுடுத்து' இன்னான். நான் ஒரு கழியாலே குத்திக் குத்திப் பார்த்தேன். ஒண்ணையும் காணல்லே. 'சரிதாண்டா, நண்டாயிருக்குமடா'ன்னேன். 'இல்லவே இல்லேடா, பெரிய திமிங்கிலம்டா. கொட்டப்பாக்கத்தனை பெரிசா இருந்து தடா'ன்னான் , மாமா!''

''அப்புறம்!''

''ராஜி அம்மாமி வந்து நின்னுண்டே இருந்தா. ஒரு பெரிய அலை வந்தது. அப்படியே நனைச்சுட்டுப் போயிடுத்து. நான் வந்து, 'நோக்கு நன்னா வேணும். எங்க அம்பி மாமாக்கு நேத்தி ராத்திரி உருளைக்கிழங்குக் கறி சரியாப் போடலியோன்னோ நீ?'' இன்னேன். எல்லாத்துக்கும் அவள் சிரிக்கிறா, மாமா!''

''போனாப் போறாள். அப்புறம்?''

''அப்புறம் கறுப்பா ஒண்ணா ஓரத்திலே மொதந்தது. கிச்சா சொன்னான், 'எலே! காட்டெருமைடா'ன்னு. நான் சொன்னேன், 'ஆமாண்டா, கல்லெடுத்து அடிடா!' இன்னு. அப்புறம் பார்த்தாக்கே அது கறுப்பா யாரோ ஒரு மாமா குளிச்சிண்டிருக்கா. நான் மண்ணைத் தூக்கிப் போட்ட உடனே எழுந்திருந்து வந்து, 'என்னடா பசங்களா?' இன்னார் நான் ஓட்டமா ஓடிப் போய் அப்பா பக்கத்தில் நின்னுண்டேன். அந்த மாமாவும் சிரிச்சுண்டே அங்கே வந்தார். அவரைப் பார்த்து அப்பா, 'நம்ம ராஜாமணி யானைன்னு நினைச்சுண்டிருப்பான்' இன்னார். அதுகூட அந்த மாமாவுக்குப் பிடிக்கல்லே.''

''சரி.''

எனக்கு இப்போது கொஞ்சம் தூக்கம் வந்தது. ஒரு புறமாய்த் திரும்பிப் படுத்துக் கொண்டேன். ராஜாமணி மேலும் பேசிக்கொண்டே போனான்.

''மெராஸ் ரொம்ப நன்னாருக்கு. எங்க 'கிளி மூக்கு' மட்டும் பார்த்தார்னாக்கே ஆச்சரியப்படுவார். ஆனாக்கே மாமா - மாமா! - மாமா! - மாமா! - தூங்கறியா?''

''ஆமாண்டா'' என்றேன்.

''ஆனாக்கே மாமா, அவங்ர இங்கே வந்தா, 'பீபிள்ஸ் பார்க்' இருக்கே. அதிலே புடிச்சுப் போட்டுண்டு வா, மாமா! மாமா! மாமா!''

நான் பதிலே சொல்லவில்லை.

ராஜாமணியின் சிறிய கை என் தலை, நெற்றி, கண், மூக்கு, மோவாய்க்கட்டையை எல்லாம் மெதுவாய்த் தடவிற்று. பிறகு கண்களை மூடிக்கொண்டு தன் சிறிய வாயைத் திறந்து அழகாய் ஒரு கொட்டாவி விட்டான் அவன்.
[நன்றி: appusami.com ]

தொடர்புள்ள பதிவுகள்:

மிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்