செவ்வாய், 22 மே, 2012

'தேவன்': மிஸ்டர் ராஜாமணி -1

மிஸ்டர் ராஜாமணி - 1


தேவன்

ஆனந்தவிகடனில் 20 வயது இளைஞனான மகாதேவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்த கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’.  1930-32 வாக்கில் வெளியான கட்டுரை. இதைப் படித்த விகடன் ஆசிரியர் ‘கல்கி’ அவனுக்கு  உதவி ஆசிரியர் வேலை கொடுத்து,  மகாதேவனை ‘தேவ’னாக்கினார்.  அதற்குப் பிறகு ‘தேவன்’ பல கட்டுரைகளை இந்தத் தொடரில் எழுதினார்; இவை இன்னும் நூல் வடிவில் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
=====
என் மருமான் சின்ன ராஜாமணியைப்பற்றி என் ஆபீஸ் துரையவர்கள் கேள்விப்பட்டு அவனைத்தாம் பார்க்க வேண்டுமென்று சொல்லியிருந்தார். இந்தச் செய்தியை நான் குழந்தையிடம் தெரிவித்தேன்.

அவனும் வெள்ளைக்காரர் எவரையும் பார்த்ததில்லை யாகையால் மிகவும் ஆவலுடன் தன்னுடைய நிஜாரையும், சொக்காயையும் மாட்டிக்கொண்டு தயாராய் நின்றான். குழந்தையுடன் துரையின் பங்களாவுக்குக் கிளம்பினேன். போகும் வழி முழுவதும் ராஜாமணி, ''துரை எப்படி மாமா இருக்கும்? அது பேசுமோ? அதுக்கு காலெல்லாம் இருக்குமோ? அது சாப்பிடுமோ? என்னத்தை மாமா சாப்பிடும்?'' என்று பல கேள்விகளும் கேட்டு ஒருவாறு மனத்துக்குள், துரை என்றால் இன்னதென்று ஒரு தீர்மானம் செய்து வைத்திருந்தான்.


எங்களைக் கண்டதும் துரையவர்களும் புன்சிரிப்புடன் வந்து நின்றார். ராஜாமணி அவரைப் பார்த்துவிட்டு, ''இதுதானா துரே! துரேன்னியே, மாமா! கோங்கு மாதிரின்னா இருக்கு'' என்றான். நல்ல வேளையாய்த் துரையவர்களுக்குத் தமிழ் தெரியாது.


''வாட் டஸ் தி பாய் ஸே? (பையன் என்ன சொல்கிறான்?)'' என்றார்.


''உங்களைப் பார்ப்பதில் மிகவும் சந்தோஷம் என்கிறான்'' என்றேன்.

''கோங்கு துரை பேசறதுடோய்'' என்றான் ராஜாமணி. துரையவர்கள் என்னை நோக்கினார்.

''தனக்கு இங்கிலீஷ் புரியவில்லை என்கிறான்'' என்றேன். துரை குழந்தையை வாரித் தூக்கினார். குழந்தைகளிடம் அவருக்கு மிகவும் அபிமானம். குழந்தைக்கு ஒரு முத்தமும் அளித்தார். துரையவர்கள் காலைப் போஜனத்துக்குப் பிறகு ஸிகரெட் பிடிக்கும் வழக்கமாதலால் அந்த 'வாஸனை' சற்று வீசியிருக்கும்போல் இருக்கிறது. உடனே குழந்தை, ''அம்பி மாமா! கோங்கு துரை வாயெல்லாம் நாத்தமா நார்றதே'' என்று கத்தினான்.

''வாட்?'' என்று துரையவர்கள் ஆங்கிலத்தில் வினவினார்.

''நீங்கள் மிகவும் நல்லவர் என்கிறான்'' என்றேன். புகழ்ச்சியால் திருப்தி யடையாதவர் யார்? நான் சொன்னதைக் கேட்டதும் அவர் அடங்காத சந்தோஷத்துடன். ''ஹா! ஹா! ஹா!'' என்று வாய்விட்டுச் சிரித்து, ராஜாமணியின் முதுகை மெதுவாய்த் தட்டிக்கொண்டு நயமான குரலில், ''வெரி நைஸ் பாய்'' (மிகவும் நேர்த்தியான பையன்) என்றார்.

சின்ன ராஜாமணிக்கு 'வெரி நைஸ்' என்றால் என்ன தெரியுமா? ஏதோ தன்னை வைதுவிட்டதாக மாத்திரம் எண்ணிக்கொண்டான். வெகு கோபத்துடன் என்னிடம் வந்து நின்று, என் கோட்டைப் பற்றிக்கொண்டு துரையைப் பார்த்து, ''நீதான் வெரி! நோக்குத்தான் நைஸ், கோங்குப் பயலே'' என்றான்.

எனக்கு இவனை ஏன் அழைத்து வந்தோமென்று ஆகிவிட்டது. துரைக்கோ இவன் சொல்வது ஒன்றும் புரியவில்லை. நான் ஏதாவது சொல்லுவேனோவென்று மீண்டும் மீண்டும் என்னை நோக்கினார். எனக்கும் என்ன சொல்வதென்று தோன்றவில்லை. பின்பு ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு துரையைப் பார்த்து, ''நானும் சீக்கிரம் இங்கிலீஷ் கற்றுக்கொண்டு உங்களுடன் பேசுகிறேன் என்கிறான்'' என்றேன்.

ராஜாமணியிடம் துரைக்கு உண்மையிலேயே மிகவும் அபிமானம் ஏற்பட்டிருக்கிறதென்பது அவர் முகத்தில் நன்றாய்த் தெரிந்தது. எல்லாக் குழந்தைகளையும் வசியப்படுத்தும் சக்தி தம்மிடம் இருக்கிறதென்றும். குழந்தைகள் ஸ்வபாவமாகவே தம்மிடம் வருவதல்லாமல், ஒருவித மரியாதையும் காட்டுமென்றும் தற்பெருமையாய் ஐந்து நிமிஷம் பேசினார். நானும் முகம் மாறாது ஆமோதித்து வந்தேன்.

அப்பொழுது மூலையில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்த துரையவர்களின் 'டைபிஸ்ட்' தன் வயிற்றைப் பிசைந்துகொண்டு, முகத்தைச் சுளித்துக்கொண்டு மிகவும் வேதனையிலிருப்பவன்போல் துள்ளிக்கொண்டிருந்தான். துரையவர்கள் மிகவும் இரக்க சுபாவமுள்ளவர். டைபிஸ்டைப் பார்த்து, ''வாட் ஸ் தி மாட்டர் வித் யூ? (உனக்கு என்ன?)'' என்று கேட்டார்.

''ஸிவியர் ஸ்டமக் ஏக், ஸார் (ரொம்ப வயிற்றுவலி)'' என்று குழறினான் டைபிஸ்ட்.

''டேக் லீவ் அண்ட் ஸம் மெடிஸன் (போ, அப்பேன்! லீவு எடுத்துக்கொண்டு போய் மருந்து சாப்பிடு!)'' என்று தயாளமாய்ச் சொன்னார்.

அவனும் உடனே வெளிச்சென்று மிகவும் வேதனையுடன் வாயிற்படியைக் கடந்து சென்றான். அவன்

வெளியேறினதும் யாரோ ஒருவர் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கும் சப்தத்தைக் கேட்டேன். துரையவர்களும் ஏதோ ஞாபகமாய்த் தம் டைபிஸ்டுக்கு அடிக்கடி உடம்பு அஸெளகரியப்படுகிறதென்றும், 'கேர்லெஸ் பெல்லோ', 'ஹெல்த்தைக் கவனிப்பதில்லை'யென்றும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கொல்லாம் அவரிடம் சொல்லிக் கொண்டு ராஜாமணியையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அன்று மாலை மேற்படி டைபிஸ்டை வாயிலில் கண்டேன்.

''என்னையா, காலம் கெட்டுக் கிடக்கிறது! எங்கே பார்த்தாலும் ரிட்ரெஞ்ச்மென்டாக இருக்கிறது. உமது மருமானா? அந்த வாண்டுப் பயலை விட்டு வேடிக்கைப் பார்க்கிறீரே! நான் சிரிப்பை அடக்கப்பட்ட பாடு கடவுளுக்குத்தான் தெரியும். நல்ல வேளையாகத் தப்பினேன்'' என்றார்.

ராஜாமணிக்குப் படிப்பில் மிகவும் அவா உண்டு. தமிழில் 'டிக்டேஷன்' போடச் சொல்லி ஸ்லேட்டில் எழுதிக் காண்பிப்பது வழக்கம். ஒரு நாள் ஒரு 'டிக்டேஷன்' கொடுத்து எழுதச் சொன்னேன்.

''ஓர் ஊரில் ஒரு மாடு இருந்தது --'' என்று ஆரம்பித்தேன். இதை எழுதிவிட்டானாவென்று பார்த்தேன். 'ஓர் ஊரில்' 'ஒரு' என்றுதான் எழுதியிருந்தான்.

''உம்'' என்றேன்.

''என்ன மாமா, மாடா?''

''ஆம், மாடுதான், எழுது. ஓர் ஊரில் ஓர் மாடு-- என்னடா எழுதமாட்டே னென்கிறாய்.''

''மாடா, மாமா?'' என்று கேட்டான் மறுபடியும்.

''எவ்வளவு தரம் சொல்லுவது? மாடுதான்!'' என்று அழுத்தமாய்ச் சொன்னேன். அவன் இன்னும் எழுதாதிருப்பதைப் பார்த்து, ''நீ எழுதப் போகிறாயா?'' என்றேன்.

''பால் கறக்குமோல்லியோ, மாமா?''

நான் பதில் சொல்லாமல் காதில் விழாததுபோல் பாவனை செய்தேன்.

''நிறையக் காப்பி அகப்படுமோன்னோ, மாமா?'' என்றான்.

நான் சற்றுத் திரும்பி உட்கார்ந்துகொண்டேன். பிறகு மிகவும் கவலையாய், ''கன்னூட்டியும் இந்துதோன்னோ மாமா?'' என்று கேட்டான்.

''அதெல்லாம் உனக்கென்ன? சொன்னதை எழுதுடா'' என்று பேச்சுக்கு இடங் கொடுக்காமல் சொன்னேன்.

''நம்மாத்திலே ஒரு மாடு வாங்கணும்'' என்று கெஞ்சினான்.

''வாங்குகிறபோது வாங்கலாம். சொன்னதை எழுது என்று அதட்டினேன்.

ஆனால் அவன் என் வார்த்தைகளை லக்ஷியஞ் செய்ததாய்த் தெரியவில்லை. ''ஒரு கன்னூட்டியும் வாங்கறயா, மாமா?'' என்றான்.

குழந்தையை நான் அடிப்பது வழக்கமில்லாதபடியால் என்ன செய்வதென்று தெரியாமல் மெளனமாய் உட்கார்ந்திருந்தேன்.


''அம்பி மாமா, ஆக்கீலாத்திலே மாடு, கோக்குட்டு, வாங்கிருக்காளே.''

''ஆக்கீல் ஆருடா?'' என்று கேட்டேன். அதற்குள் அவன் தாயார், ''வக்கீல் ஸுப்ரமணிய அய்யராத்திலே 75 ரூபாயில் ஒரு மாடும், குஞ்சலமாட்டமா கன்னுக்குட்டியும் ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்'' என்றாள்.

அவ்வளவுதான்; ''நான் போய்ப் பார்த்தூட்டு வர்றேன், மாமா!'' என்று சொல்லிக் கொண்டே சிலேட்டைப் பொத்தென்று கீழே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான்.

[நன்றி; appusami.com ; ஓவியம்: நடனம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
மிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்

1 கருத்து:

Angarai Vadyar சொன்னது…

Good read. How come I still have a feeling of discontent? have I expected more from Devan? I shouldn't forget He wrote this when he was very young. Thanks for posting.