செவ்வாய், 31 மார்ச், 2015

சாவி -13: 'கமிஷன்' குப்பண்ணா

'கமிஷன்' குப்பண்ணா 
சாவி 


[ ஓவியம்: நடனம் ]

"குப்பண்ணாவை யாராவது பார்த்தீர்களா, சார்! ஆளே அகப்பட மாட்டேங்கிறானே?" 

"எந்தக் குப்பண்ணா? கமிஷன் குப்பண்ணாவா? இத்தனை நேரம் இங்கேதானே இருந்தான்? இப்பத்தான் ஒருவர் வந்து அவனைக் காரில் அழைத்துக் கொண்டு போனார்." 

குப்பண்ணாவைத் தேடிக் கொண்டு தினமும் ஆயிரம் பேர் அலைவார்கள். அவனோ ஆயிரம் இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பான்.

''என்ன ஸார் பண்றது? சப் ஜட்ஜ் வீட்டிலே கல்யாணம்; வக்கீல் வீட்டுப் பையனுக்கு காலேஜ் அட்மிஷன்; இன்னொருத்தருக்கு வீடு வேணும்; வேறொருத்தருக்கு கார்ப்பரேஷன் லைசென்ஸ்; எல்லாத்துக்கும் இந்தக் குப்பண்ணாதான்! முடியாதுன்னா யார் விடறா?'' என்பான்.

இந்தச் சமயம் ''குப்பண்ணா! உன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்'' என்று சொல்லிக்கொண்டு வருவார் ஓர் ஆசாமி.

'' என்ன சங்கதி,  ரிஸ்ட் வாட்ச் விஷயம்தானே? வாங்க, இந்த ஓட்டலுக்குள்ளே போய்க் காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்'' என்று அவரை ஓட்டலுக்குள்ளே அழைத்துச் சென்று, '' எங்கே கடியாரத்தைக் காட்டுங்க, பார்க்கலாம் ?  எத்தனை ஜ்வல்ஸ்? பழசு மாதிரி இருக்கே? என்ன விலை?'' என்பான்.''என்ன, குப்பண்ணா! புது வாட்ச் இது! பார்த்தால் தெரியல்லே? சிங்கப்பூர்லேருந்து வந்தது. போன மாசம்தான் வாங்கினேன். 270 ரூபாய்'' என்பார் அவர்.

''அடாடா! ஏமாந்துட்டேளே சார்! என்கிட்டே சொல்லியிருந்தா இதே வாச்சை இருநூற்று முப்பது ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருப்பேனே! சரி, போறது. இப்ப யார் சார் வாங்கப் போறா? இருநூறு ரூபாய்க்குத் தருவதானால் சொல்லுங்க. ஓர் இடத்திலே கேட்டுப் பார்க்கறேன். அதுவும் உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் விலை போகும்'' 

" அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, குப்பண்ணா, உன்கிட்டே வந்தா காரியம் நடக்கும்னுதானே காலையிலிருந்து அலையறேன்" 

[ ஓவியம்: கோபுலு ]

" சரி, வாச்சைக் கொடுங்க, சரியா மூணு மணிக்கு என்னைப் பஸ் ஸ்டாண்ட்லே வந்து பாருங்க" என்று கடியாரத்தை வாங்கிக்கொள்வான். இதற்குள் இன்னொரு ஆசாமி அவனைத் தேடிக்கொண்டு வருவார்.

''என்ன குப்பண்ணா? உன்னை எங்கெல்லாம் தேடறது?  காலையிலே எட்டு மணிக்கு என்னைப் போஸ்டாபீஸ் வாசல்லே வந்து காத்துண்டிருக்கச் சொல்லிட்டு நீபாட்டுக்கு வராமலேயே இருந்துட்டயே! காத்துக் காத்து எனக்குக் காலே வலியெடுத்துப் போச்சு. சரி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?'' என்று கேட்பார். 

அவ்வளவுதான்... ரிஸ்ட் வாச் ஆசாமியை அப்படியே நடுத் தெருவில் விட்டுவிட்டுப் புதிதாக வந்தவருடன் போய்விடுவான்.

''உன்னை நம்பி முகூர்த்தத்தை வெச்சுண்டுட்டேன். இன்னும் ஒரு வேலையும் ஆகல்லே! நாளோ ஓடிண்டிருக்குது. நீயோ அதுக்கு மேலே ஓடிண்டு இருக்கே. 'கலியாணத்துக்குச் சத்திரம் பிடிச்சுத் தரேன்னே; கச்சேரிக்கு ஏற்பாடு பண்றேன்னே;' பந்தல்காரன், மேளக்காரன், பால்காரன், சமையல்காரன் எல்லாம் என் பொறுப்பு. நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்கோ'ன்னே?''

'' நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க. இதோ, இப்பவே போய் சத்திரத்தை 'ஃபிக்ஸ்' பண்ணிடறேன். கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிடறேன். பால்காரன், சமையல்காரன், மேளக்காரனுக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடறேன். போதுமா?  அவ்வளவுதானே? அப்புறம் என்ன? இன்னொரு சின்ன விஷயம்... மாப்பிள்ளைக்கு ரிஸ்ட் வாட்சு போடணும்னு சொல்லிண்டிருந்தீங்களே... ஒரு இடத்திலே ஃபஸ்ட் கிளாஸ் சிங்கப்பூர் வாச் இருக்குது. விலை ரொம்ப மலிவு. அவன் 300 ரூபா சொல்றான். வேணுமானா சொல்லுங்க, 250-க்கு முடிச்சுடலாம். முந்திக் காட்டாப் போயிடும்'' என்றெல்லாம் கூறி, அந்தக் கடியாரத்தை அவர் தலையில் கட்டிவிட்டு, வாச்சின் சொந்தக்காரரிடம் 240-க்குத்தான் விலை போயிற்று என்று கூறுவான். இதைத் தவிர, இரண்டு பேரிடமும் கமிஷன் வேறு தட்டிவிடுவான்.

" என்ன குப்பண்ணா, உன்னைப் பார்க்கிறதே அபூர்வமாய்ப் போச்சே?"

' இன்னும் நாலு நாளைக்கு ஒண்ணும் பேசாதீங்க, அண்ணா! வக்கீல் சேஷாத்திரி வீட்டிலே கல்யாணம். மூச்சு விட நேரமில்லே. தேங்காய் வாங்கி வரக் கொத்தவால் சாவடிக்குப் போயிண்டுருக்கேன்" 

''எங்க வீட்டுக் கலியாணத்திலே ஆயிரம் தேங்காய் மிஞ்சிப் போயிடுத்தே! அதை வித்துக் கொடுன்னு சொல்லியிருந்தேனே... மறந்துட்டியா!''

''வக்கீல் வீட்டிலே பெரிய காயா இருக்கணும்னு சொன்னா. அதனாலே யோசிக்கிறேன். எதுக்கும் என்ன விலைன்னு சொல்லுங்க.''

''நூறு 15 ரூபாய்னு போட்டுண்டு தள்ளிவிடுடா. உனக்கும் கொஞ்சம் கமிஷன் தரேன்.''

''கமிஷனா? சேச்சே! உங்ககிட்டே அதெல்லாம் வாங்குவேனா? அவர் என்ன விலை கொடுக்கிறாரோ, அதை அப்படியே வாங்கிக் கொடுத்துடறேன். எனக்கெதுக்கு கமிஷனும் கிமிஷனும்?''ஆனால், வக்கீல் வீட்டில் நூறு 18 என்று விலை சொல்லி, ஆயிரம் காய்களையும் தள்ளிவிடுவான். தேங்காய் கொடுத்தவரிடம் 14 ரூபாய் என்று சொல்லி அதிலும் ஒரு ரூபாய் பார்த்துக்கொள்வான். 
கடைசியில் வக்கீல் கல்யாணத்தில் மிஞ்சிய தேங்காய்களை வேறொரு கல்யாண வீட்டில் கொண்டுபோய் விற்று, அதிலும் பத்து ரூபாய் கமிஷன் பார்த்துக் கொள்வான். 

" ஏண்டா குப்பண்ணா! இப்படியே எத்தனை நாளைக்குத் தான் காலம் தள்ளப் போகிறாய்? ஏதாவது சொந்த வியாபாரம் ஆரம்பிக்கக் கூடாதோ? " என்று யாராவது கேட்டால் "எனக்கு எதுக்கண்ணா அதெல்லாம்? நாலு பேருக்கு உபகாரம் பண்றதிலே இருக்கிற சந்தோஷம் வேறெதிலே உண்டு?" என்பான். ஆனால், அவன் புது வியாபாரம் ஆரம்பிக்காததற்குக் காரணம் அதுவல்ல; தன்னுடைய வியாபாரத்தில் வேறு எவனாவது கமிஷன் அடித்துவிட்டுப் போகிறானே   என்பதுதான் அவனுக்குள்ள பயம்!  

[ நன்றி : விகடன்  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 24 மார்ச், 2015

நாடோடி -1 :

" அப்பவே சொன்னேனே, கேட்டாயா?”
நாடோடி 

ஆனந்தவிகடனில் 1936-இல் அதிகமாக எழுதியவர்கள் மூன்று பேர்கள் என்கிறது ‘விகடன்’ பொக்கிடம் என்ற நூல் : அவர்கள் “ கதிர்”, “சசி”, “நாடோடி”. மூன்று பேருக்கும் இயற்பெயர் ஒன்றே! வெங்கடராமன் ! 

விகடன், கல்கி, விகடன் என்று மாறி மாறிப் பணியாற்றியவர் நாடோடி. (எம்.வெங்கடராமன்)

’கல்கி’யில் 40-களில் அவர்  எழுதிய “எங்கள் குடும்பம் பெரிது”, "இதுவும் ஒரு பிரகிருதி"  போன்ற ஹாஸ்யத் தொடர்கள் மிகப் பிரபலம். அடுத்த வீட்டு அண்ணாசாமி அய்யர், மனைவி சரசு, மகள் அனு ...இவர்கள் அவர் கட்டுரைகளில் அடிக்கடி உலா வருவார்கள்.  50-களில் விகடனில் ஒவ்வொரு வாரமும் அவருடைய கட்டுரை ஒன்று வரும்! 

சென்னையில் தியாகராய நகரில்  சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் பக்கத்தில் அவர் குடியிருந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன். ஷெர்வானி அணிந்து மோட்டார் சைகிளில் ‘ஜம்’மென்று போவார்.  கடைசியில் அவர் தினமணி, ராமகிருஷ்ண விஜயம் இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி வந்தார். எனக்குத் தெரிந்து அவருடைய எந்த நூலும் இப்போது அச்சில் இல்லை. 

அதனாலேயே அவருடைய சில கட்டுரைகளை இங்கிடுவேன்! [ நன்றி : விகடன் ; நாடோடியின் படம்: “அது ஒரு பொற்காலம்” நூல் ]

தொடர்புள்ள பதிவுகள்: 
நாடோடி படைப்புகள்

செவ்வாய், 17 மார்ச், 2015

சங்கீத சங்கதிகள் - 51

பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
 உ.வே.சாமிநாதய்யர்


[ நன்றி: ஹிந்து ]


தமிழ்நாட்டிலே சென்ற நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற சங்கீத வித்துவான்களில் ஒரே பெயருடைய பலர் இருந்தனர். ஒருவருக்கு மேற்பட்ட வைத்தியநாதையர்களும், கிருஷ்ணையர்களும், சுப்பராமையர்களும் சங்கீத தேவதையின் உபாசனை புரிந்து வந்தனர். சுப்பராமையர்களுள் வைத்தீசுவரன் கோயிலில் இருந்த சுப்பராமையர் ஒருவர்; பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் மற்றொருவர்.

அவர்களுள் காலத்தால் முந்தியவராகிய பெரிய திருக்குன்றம் சுப்பராமைய்யரென்பவர் கனமார்க்கத்தைத் தமிழ்நாட்டில் முதன் முதலில் அனுபவத்திலே கொணர்ந்துகாட்டிப் புகழ்பெற்ற * கனம் கிருஷ்ணருடைய தமையனார். அவர் சங்கீதத்திலும் ஒருவாறு சாஹித்தியத்திலும் ஒருங்கே திறமையுடையவராக இருந்தார்.
-----
*இவரது சரித்திரம் தனியே என்னால் எழுதப் பெற்று வெளிவந்திருக்கிறது.

பெரிய திருக்குன்றமென்பது திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார் பாளையம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம். அங்கே பரம்பரையாகவே சங்கீத வித்தையில் மேம்பட்டுவந்த ஒரு குடும்பத்தில் சுப்பராமையர் உதித்தார். அவர் அந்தணர்களுள் அஷ்டஸஹஸ்ரமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்.

அவருடைய தந்தையார் இராமசாமி ஐயரென்பவர். இராமசாமி ஐயருக்கு ஐந்து குமாரர்களும் ஒரு பெண்ணும் உண்டு. அவர்களுள் மூத்தவரே சுப்பராமையர். அக்குடும்பத்தில் பரம்பரையாக இருந்துவந்த இசைச் செல்வத்தால் பல சிற்றரசர்கள் வழங்கிய பொருட்செல்வமும் பூமியும் கிடைத்தன. அதனால் சுப்பராமையருடைய தந்தையாருக்கு வறுமைப்பிணியின் துன்பம் இல்லை. தம்முடைய நில வருமானங்களை வைத்துக்கொண்டு அவர் சங்கீதக் கலையையும் வளர்த்து வாழ்ந்திருந்தார். அக்காலத்தில் கபிஸ்தலத்தில் இருந்த ஸ்ரீமான் முத்தைய மூப்பனாருக்கும் இராமசாமி ஐயருக்கும் மிக்க நட்பு இருந்து வந்தது. அவ்விரண்டு குடும்பத்தினரும் தொடர்ந்து பலகாலம் நண்பர்களாகவே வாழ்ந்து வந்தனர். இராமசாமி ஐயருக்கு அவ்வப்போது மூப்பனாருடைய உதவி கிடைத்துவந்தது.

அங்ஙனம் வாழ்ந்து வந்த இராமசாமி ஐயருக்குப் புத்திரராகத் தோன்றிய சுப்பராமையர் யாதொரு குறைவுமின்றி வளர்த்துவந்தார். அவருடைய தந்தையார் அவருக்கு இன்றியமையாத தமிழ்க்கல்வியையும் சங்கீதப்பயிற்சியையும் அளித்தார்.

நாளடைவில் சுப்பராமையாருக்குப் பின் தோன்றிய சகோதரர்களுள், சுந்தரையர் கிருஷ்ணையர் என்னும் இருவரும் சுப்பராமையரைப் போலவே சங்கீதத்தில் நாட்டமுடையவர்களாக இருந்தனர்.

அம்மூவருக்கும் சிறந்த சங்கீதப் பயிற்சியை அளித்து, 'அவையகத்து முந்தியிருப்பச் செய்ய வேண்டுமென்பது தந்தையாருடைய விருப்பம். அதற்குமுன் அடிப்படையாகத் தமிழறிவு அவசியமென்பதை அவர் உணர்ந்தவராதலின், அரியிலூரில் அக்காலத்தில் வாழ்ந்திருந்த ஸ்ரீ சண்பக மன்னாரென்னும் ஸ்ரீவைஷ்ணவ வித்துவானிடம் தமிழ் பயிலும்படி செய்தனர். சண்பகமன்னார் தமிழிலும் இசையிலும் சிறந்த திறமை வாய்ந்தவர்; பல கீர்த்தனங்களை இயற்றியவர்; சமரஸ ஞானி; மிக்க அடக்கமான குணம் வாய்ந்தவர்.

அவரிடம் தமிழ் பயின்ற காலத்தில் மற்றவர்களைக்காட்டிலும் அதிகமாக அதில் ஈடுபட்டவர் சுப்பராமையரே. மற்றவர்களுக்கும் ஓரளவு சிரத்தை இருந்தாலும் சுப்பராமையாருக்கு இருந்த ஊக்கம் அவர்களுக்கு உண்டாகவில்லை. சண்பக மன்னாருடைய பழக்கத்தினால் விசேஷ நன்மையடைந்தவர் சுப்பராமையரே. தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் வேதாந்த சாஸ்திரங்களையும் அப்பெரியாரிடம் சுப்பராமையர் ஊன்றிப் பயின்று வந்தார். அப்பெரியாரைப் போல அடக்கமாக வாழ வேண்டுமென்ற கருத்து அவருக்கு உண்டாயிற்று. இளமையிலேயே ஏற்பட்ட அக்கருத்து அவர் நெஞ்சில் ஊறி அவருடைய வாழ்வில் அவருக்குப் பெருமையை அளித்தது. அவருடைய சகோதரர்கள் தங்கள் சங்கீதப் பயிற்சியினாலும் உண்ண உடுக்கக் குறைவில்லாத குடும்ப நிலை முதலியவற்றாலும் மிக்க திருப்தியோடு காலங்கழித்தனர்; அத்திருப்தி சில சமயங்களில் பிறருக்கும் புலனாயிற்று. கனம் கிருஷ்ணையர் அந்தத் திருப்தியினால் சிறிது செருக்குடையவராகவும் காணப் பட்டனர். ஆனால் சுப்பராமையரோ அடக்கத்திலே சிறந்தவராக விளங்கினார்.

இராமசாமி ஐயர் தம்முடைய குமாரர்களுள் முன்னே கூறிய மூவருக்கும் பின்னும் உயர்ந்த சங்கீதப்பயிற்சியை அளிக்க வேண்டுமென்று எண்ணினார். தஞ்சாவூர் ஸமஸ்தானத்தில் பச்சை மிரியன் ஆதிப்பையரென்பவர் பெரும்புகழ் பெற்ற சங்கீத ஆசிரியராக அக்காலத்தில் விளங்கினார். அவரிடம் தம் குமாரர் மூவரையும் இராமசாமி ஐயர் ஒப்பித்தார். மூவரும் சங்கீத வித்தையிலே தேர்ச்சி பெற்று வந்தனர்.

சுப்பராமையர் சங்கீதத்தோடு தமிழையும் இடைவிடாமல் பயின்று வந்தார். அவ்வப்போது சில கீர்த்தனங்களையும் பாடல்களையும் இயற்றிப் பழகினார். அவருக்கு முருகக்கடவுளிடத்தில் பக்தி அதிகம். அக்கடவுள் விஷயமாக அவ்வப்போது தாம் பாடிய கீர்த்தனங்களைத் தம் குருமூர்த்தியாகிய ஆதிப்பையரிடம் காட்டுவார். அக்கீர்த்தனங்களைக் கேட்டு அம் மகாவித்துவான் அளவற்ற மகிழ்ச்சியடைவார்; சங்கீதமும் சாஹித்தியமும் ஒன்றனோடு ஒன்று நன்றாக இயைந்து விளங்குவதைப் பாராட்டுவார். அன்றியும் அக்கீர்த்தனங்களில் உள்ள பக்திச்சுவையை உணர்ந்து, "நீ சின்ன ஸ்ரீநிவாஸன்" என்று மனங்குளிர்ந்து கூறி அவரை ஆசீர்வாதஞ்ச செய்வார்.

ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்திருந்த சங்கீத வித்துவான்; தமிழிலும் வடமொழியிலும் தெலுங்கிலும் பயிற்சியுள்ளவர்; அவர் பல அருமையான கீர்த்தனங்களை ஸ்ரீரங்கநாதர் விஷயமாக இயற்றியிருக்கின்றார். அவர் பெரிய பக்தராதலால் அவருடைய கீர்த்தனங்களிலே பக்திச்சுவை ததும்பி நிற்கும்; சங்கீத அமைப்புகள் மிகவும் செவ்விய நிலையிலே பொருந்தி விளங்கும்.

அவற்றைப் பச்சை மிரியன் ஆதிப்பையர் நன்கு உணர்ந்தவர். சங்கீதமும் சாஹித்தியமும் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டாலன்றிச் சிறப்புடையனவல்ல வென்பது நம்முடைய பெரியோர் கொள்கை. நம்நாட்டில் எத்தனையோ கலைஞர்களும் புலவர்களும் வாழ்ந்திருந்தாலும், காலவெள்ளத்தில் அவர்களுடைய சிற்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. தெய்வ பக்தியாகிய கனம் அவற்றில் இருந்தால் அவை மாத்திரம் பலகாலம் காலவெள்ளத்தை எதிர்த்து நின்று விளங்குகின்றன. நூற்றுக்கணக்கான வித்துவான்கள் தமிழ் நாட்டிலே வாழ்ந்து ஆயிரக்கணக்கான சாஹித்தியங்களை இயற்றினார்கள். அவற்றிற் பெரும்பாலன அழிந்துபோயின. அதற்கு முக்கியமான காரணம் வித்தையைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யாமல் ஜமீன்தார்களையும் பிரபுக்களையும் பாடினமையே. ஸ்ரீ தியாகையர் முதலிய மகான்களோ தெய்வபக்தி மணம் கமழும் பாமலர்களை இறைவன் திருவடிகளிலே அணிந்தனர். அதனால் அம்மலர்கள் வாடாமல் விளங்குகின்றன.

தம் கீர்த்தனங்களிலே தெய்வபக்தி நிறைந்திருப்பதையறிந்து ஆதிப்பையர் பாராட்டியதனால், சுப்பராமையருக்கு மேலும் மேலும் ஊக்கமுண்டாயிற்று. முருகக்கடவுள், அம்பிகை, பரமசிவன், திருமால் முதலியவர்கள் விஷயமாக அவ்வப்போது அவர் செய்த கீர்த்தனங்கள் பல.

தஞ்சாவூர் ஸமஸ்தானத்து வித்துவான்கள் வரிசையிலே சேரும் சிறப்பைச் சுப்பராமையரும், சுந்தரையரும், கனம் கிருஷ்ணையரும் பெற்றனர். சரபோஜி அரசர் காலத்தில் சுப்பராமையர் தஞ்சாவூரிலே இருந்துவந்தார். அப்போது பிருஹதீசுவரர் மீது அவர் ஒரு குறவஞ்சி நாடகம் இயற்றினார். இடையிடையே பெரிய திருக்குன்றம் சென்று சில காலம் இருந்துவருவார். கபிஸ்தலம் சென்று தம்முடைய குடும்ப நண்பராகிய முத்தைய மூப்பனாருடன் சம்பாஷணை செய்து வருவார். அம் மூப்பனாருடைய அன்பிலே ஈடுபட்டு அக்காலத்தில் சுப்பராமையர் அவர்மீது ஒரு குறவஞ்சிப் பிரபந்தம் இயற்றினார்.

சுப்பராமையருடைய தம்பியாராகிய கனம் கிருஷ்ணையர் திருவிடைமருதூரில் முதலில் இருந்து அப்பால் உடையார்பாளையம் ஸமஸ்தான வித்துவானாக விளங்கலாயினர். அக்காலத்தில் சுப்பராமையரும் சுந்தரையரும் தஞ்சையிலே இருந்தனர். அவ்விருவரையும் வித்துவான்கள் முறையே பெரிய துரை, சின்னதுரை என்று அழைப்பது வழக்கம்.

சரபோஜி அரசருக்குப் பின்பு சிவாஜி அரசர் பட்டத்திற்கு வந்தார். சரபோஜி அரசரோடு பழகி யதுபோல அவருடைய குமாரரோடு பழகுவதற்குச் சுப்பராமையருக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆயினும் ஸமஸ்தானத்தின் பெருமையை எண்ணி அங்கே இருந்துவந்தார்.

சரபோஜி அரசர்மீது கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர் ஒரு குறவஞ்சி நாடகம் இயற்றி யிருக்கிறார். அது யாவராலும் பாராட்டப் பெற்றது. சிவாஜி அரசர்மீதும் ஒரு குறவஞ்சி இயற்ற வேண்டு மென்று சில நண்பர்கள் சுப்பராமையரிடம் வற் புறுத்திக் கூறினார்கள். அப்படியே அவர் ஒரு குறவஞ்சி இயற்றினார். ஆயினும் அது பிரசித்தமாக வழங்கவில்லை. சில கீர்த்தனங்களை மாத்திரம் நான் இளமையில் கேட்டிருக்கிறேன். பிறகு சில அதிகாரிகள் விரும்பியபடியே சிவாஜி மன்னர்மீது ஐந்து ராகங்களில் பஞ்சரத்தினமாக ஐந்து கீர்த்தனங்களை இயற்றினார். அக்கீர்த்தனங்களைக் கேட்டவர்கள் அவற்றின் அமைப்பைப் பாராட்டினர். சிவாஜி அரசரும் கேட்டு மகிழ்ந்தனர். அதற்குப் பரிசாக ஒரு கிராமம் வழங்க வேண்டுமென்று அவர் எண்ணியிருந்தார்.

அதையுணர்ந்த சில பொறாமைக்காரர் கள், "மகாராஜா அவர்கள் தமிழ்ப் பாட்டைக் கேட்கக் கூடாது. கேட்டால் வம்சம் அழிந்து விடும்" என்று பயமுறுத்தினார்கள். வரவரத் தம்முடைய சுதந்திர நிலையையும் சௌகரியங்களையும் இழந்துவந்த சிவாஜியரசர் அவர்கள் வார்த்தையை நம்பினார். இயல்பாக அதிர்ஷ்டக் குறைவுள்ள தமக்கு அந்தக் கீர்த்தனங்கள் ஏதேனும் தீமையை உண்டாக்கினால் என்ன செய்வதென்று அஞ்சினார். அவருக்கு உண்மையிலேயே சங்கீதத்திலும், சங்கீத வித்துவான்களிடத்திலும் அன்பு இருந்தால் அந்தப் பொறாமைக்காரர்களுடைய வார்த்தைகளைச் செவியில் வாங்கியிருக்கமாட்டார். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதுபோல அவர் நிலை பலஹீனமாக இருந்தமையால், அவருக்கு எதைக் கண்டாலும் சந்தேகமும் அச்சமும் உண்டாயின. உண்மையில் வித்தையினிடத்தில் அன்பு இருந்தமையால் எந்த இடையூற்றையும் கவனியாமல் அதை வெளியிட்ட பெரு வள்ளல்கள் தமிழ்நாட்டில் விளங்கவில்லையா? 'புகழெனின் உயிரும்' கொடுக்கும் தமிழ்வள்ளல்கள் எத்தனை பேர்! தன் இன்னுயிர் போவதாக இருப்பினும், தமிழினிமையை நுகருவதற்கு இடையூறு இருத்தல் கூடாதென்று நந்திக்கலம்பகத்தைக் கேட்டுத் தமிழின்பத்திலே உயிரை நீத்த பல்லவ மன்னனுடைய வரலாறு கலையின்பத்தை மதிக்கும் அறிஞர்களின் இயல்பாய் நன்றாக விளக்குகின்றதன்றோ?

சிவாஜி மன்னர் தமக்கு மான்யம் அளிப்பாரென்ற விஷயம் பலர் வாயிலாகச் சுப்பராமையருக்கு எட்டியது. பிறகு அந்த எண்ணம் மாறிப்போனதையும் உணர்ந்தார். 'நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை இழந்தோமே' என்று அவர் வருந்தவில்லை. 'இத்தகைய இடத்தில் இருப்பதாலன்றோ நமக்கு இழிவு உண்டாவதோடு தெய்வத் தமிழுக்கும் இழுக்கு உண்டாயிற்று? இனி இங்கே இருப்பது தகாது' என்று கருதித் தம் ஊருக்கு உடனே புறப்பட்டு விட்டார்.

அது முதல் அவர் ஈசுவர பக்தி பண்ணிக் கொண்டு சங்கீத சாஹித்திய இன்பத்தை நுகர்ந்து வாழ்ந்து வந்தார். அவர் தஞ்சை ஸமஸ்தானத்தின் தொடர்பை விட்டு விட்டாலும் சங்கீத உலகத்தில் அவருக்கு இருந்த மதிப்பு ஒரு சிறிதும் குறையவில்லை. சங்கீத வித்துவான்கள் அவருடைய கீர்த்தனங்களைப் பெரிய சபைகளிலெல்லாம் பாடி ஜனங்களை இன்புறுத்தி வந்தனர். ராகபாவங்களை நன்றாக வெளிப்படுத்தும் முறையில் அவருடைய கீர்த்தனங்கள் அமைந்திருப்பதையறிந்து அவர்கள் மகிழ்ந்தனர். அவருடைய உருப்படிகள் பெரும்பாலும் இலக்கணவழுவின்றி எளிய நடையில் நல்ல பொருளுடையனவாக இருத்தலை அறிந்த தமிழ் வித்துவான்கள் பாராட்டினர்.

அவ்வப்போது தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து இன்புறுவதும் அவ்வத்தல விஷயமாகக் கீர்த்தனங்களை இயற்றிப் பாடுவதும் சுப்பராமையருக்கு உவப்பைத் தரும் செயல்களாக அமைந்தன. அவருடைய கீர்த்தனங்கள் பெரியனவாகவே இருக்கும். அவற்றில் தலசம்பந்தமான வரலாறுகளைக் காணலாம். 'திருவாரூர் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரவர்கள் வடமொழியில் இயற்றியுள்ள கீர்த்தனங்களைப்போல இவை தமிழில் விளங்குகின்றன' என்று அக்காலத்தில் வித்துவான்கள் பாராட்டினர்.

ஒரு சமயம் சுப்பராமையர் கும்பகோணம் சென்றிருந்தார். அங்கே உபயஸமஸ்தான திவானாக விளங்கிய ஸ்ரீ வாலீஸ் அப்புராயரென்பவர் வசித்து வந்தார்; அவர் வித்துவான்களிடத்தில் அன்புடையவராக விளங்கினார். அவருக்கும் சுப்புராமையருக்கும் பழக்கம் உண்டு. சுப்புராமையர் அப்புராயர் வீட்டிற்குப் போனார். சங்கராபரணத்தைச் சிலகாலம் அடகு வைத்தவராகிய *நரஸையரென்னும் வித்துவானும் அங்கே ஆஸ்தான வித்துவானாக இருந்தார். அப்புராயர் வீடே ஓர் அரசருடைய மாளிகைபோல விளங்கும். அடிக்கடி விருந்துகளும் சங்கீத வினிகைகளும் அங்கே நடைபெறுவதுண்டு. அன்று நரஸையருடைய வினிகை நடைபெற்றது. அப்போது வாலீஸ் அப்புராயர் சுப்பராமையரைப் பார்த்து, "சங்கராபரணத்தில் இப்போது புதிதாக ஒரு கீர்த்தனம் பாடவேண்டும்" என்று கூறினார். அப்புராயர் சுப்பராமையருடைய ஆற்றலை நன்கு உணர்ந்தவர். அதைப் பலரும் அறியும்படி செய்ய வேண்டுமென்பது அவருடைய அவா. ராயருடைய விருப்பத்தின்படியே சுப்பராமையர் அங்கு அப்போதே அந்த ராயர் விஷயமாகவே சங்கராபரண ராகத்தில் திரிகாலமும் அமைத்து ஒரு கீர்த்தனம் பாடினார். 'மிஞ்சுதே விரகம்' என்பது அதன் பல்லவி. நரஸையரும் மற்றவர்களும் கேட்டு மகிழ்ந்தார்கள். சுப்பராமையர் ஆடம்பரமின்றி அடங்கி யிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றார்கள்.
-----------------------
* இவர் சங்கராபரணத்தை அடகு வைத்த வரலாறு தனியே எழுதி அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது.

சுப்பராமையர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார். தூய்மையான ஒழுக்கமுடையவராதலின் அவர் தேக வன்மையோடு விளங்கினார். கனம் கிருஷ்ணையரும் வேறு சில சகோதரர்களும் அவருக்கு முன்பே காலமாயினர்.

ஒருவர் பின் ஒருவராக மூன்று மனைவியரை அவர் மணந்தனர். முதல் தாரத்திற்குச் சுப்பையரென்ற பிள்ளை ஒருவர் பிறந்தார். அவருக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு. அவரையன்றி மூன்று பெண்களும் பிறந்தனர்.

சுப்பராமையருக்குத் தேங்காய்ப் பாலில் மிக்க விருப்பம் உண்டாம். தம் முதிய பிராயத்தில் அவருடைய மூன்றாந் தாரத்தினிடம், 'தேங்காய் இருக்கிறதா?' என்று கேட்பாராம். அந்தப் பெண்மணி அவர் கருத்தை அறிந்து தேங்காய் இல்லாவிடினும் வருவித்துத் துருவிப் பால்காய்ச்சிக் கற்கண்டு சேர்த்து அவருக்குத் தருவது வழக்கமாம்.


சுப்பராமையருடைய கீர்த்தனங்களை அவர் சகோதரராகிய சுந்தரையருடைய புதல்வியார் தம் எழுபதாவது பிராயத்திலே பாட நான் கேட்டிருக்கிறேன். என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் வேறு பலரும் அவற்றைப் பாடுவார்கள். சுப்பராமையர் என் தந்தையாருடைய தாயாருக்கு அம்மானாவார். காலம் மாறிக் கொண்டே வருகின்றது. பழைய சிருஷ்டிகளை நாம் மறந்து விடுகின்றோம். சுப்பராமையருடைய கீர்த்தனங்களை இப்போது பாடுவாரே இல்லை. ஆனாலும், அவருடைய கீர்த்தனங்கள் முத்துசாமி தீக்ஷிதருடைய கீர்த்தனங்களை ஒப்ப அறிஞர்களால் மதிக்கப்பெற்ற காலம் ஒன்று இருந்ததென்பதை இவ்வரலாறு ஞாபகப்படுத்துகின்றது.

[ “ நினைவு மஞ்சரி” நூலிலிருந்து ]

செவ்வாய், 10 மார்ச், 2015

எஸ். எஸ். வாசன் - 2

விகடனின் மழலைப் பருவம்! 


மார்ச், 10, 1903எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள். 

அவர் நினைவில் ஆனந்த விகடனின் தொடக்க கால இதழ்களிலிருந்து சில துளிகளை இங்கிடுகிறேன்.  
1926- பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழ்ப் புல்வர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையைத் துவக்குகிறார்.    மாதம் ஒரு முறை வருகிறது விகடன். ஆண்டுச் சந்தா இரண்டு ரூபாய். 
விகடனின் முதல் இதழின் முதல் பக்கம் இதோ:

( விகட விநாயகர் துதி கந்தபுராணத்தின்  காப்புச் செய்யுள் ) 

அந்த வருடம் விகடனில் வந்த ஒரு “விகட சம்பாஷணை”:
=================

முத்தண்ணா: அப்பா சுப்பண்ணா, ஊரில் என்ன விசேஷம்?

சுப்பண்ணா: ஓர் ஆச்சரியம் உண்டு. அதாவது, இறந்துபோனவர்கள் மறுபடி திரும்பி வருகிறார்கள்.

முத்தண்ணா: எப்போ! எப்போ!! எங்கே?

சுப்பண்ணா: ஓட் போடும் போலிங் ஸ்டேஷனில்தான் 
==================
.  அந்தக் காலத்தில் பலரும் வி.பி.பி. முறையில் பத்திரிகையை அனுப்பச் சொல்வர். ஆனால், வி.பி.பி. வந்ததும், பலர் மனம் மாறி, இரண்டு ரூபாய் தராமல் விகடனைத் திரும்பி அனுப்பி விடுவார்கள். அப்படிச் செய்பவர்களை ஏசி, ‘விகடகவி’ வைத்தியநாதய்யர் ஏதாவது எழுதுவார். காட்டாக, 1926- நவம்பர் இதழில் ஓர் ஔவையார் பாட்டின் பகடி:
கொடியது கேட்கின் கூறுவேன் கேளீர்
கொடிது கொடிது கூத்தி கொடிது
அதனிலுங் கொடிது அற்பர்கள் நேயம்
அதனிலும் கொடிது அருந்துதல் மதுவை
அதனிலும் கொடிது அன்பிலார் நேயம்
அதனிலும் கொடிது ஆனந்த விகடனை
அனுப்பச் சொல்லி அன்றே திருப்புதல்! 

நிதிப் பிரச்சினையால் 1927- டிசம்பர் விகடன் இதழ் வெளிவரவில்லை!
1928-ஜனவரியில் விகடனைத் தனக்கு விற்றுவிடும்படி கேட்டுக்கொள்கிறார் வாசன் ( டி.எஸ்.சீனிவாசன்) . அப்போது வாசன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கித் தரும் வேலையில் இருந்தார். பத்திரிகையின் வியாபார விஷயங்களை ‘ஆனந்த போதினி’ அதிபர் முனுசாமி முதலியாரிடமும், எழுத்துத் தொடர்புள்ள விஷயங்களைப் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பரிடமும் வாசன் அறிந்து வைத்திருந்தார்.

1928-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில். பூதூர் வைத்தியநாதய்யரிடமிருந்து ஆசிரியர் வாசன்  கைக்கு ஆனந்த விகடன் பத்திரிகை மாறுகிறது,  அப்போது முக்கியமாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனந்த விகடன் தலைப்பு கீழே உள்ளது போல் அலங்கார எழுத்துக்களோடு, இடையில் பாரத மாதாவின் உருவம் தாங்கி வரத் தொடங்கியது. முன்பு தலைப்பில் இருந்த 'குலை - காய்' என்பவை  'மாலை - மணி' என்று மாற்றப்பட்டன. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்னும் தாயுமானவரின் ’பராபரக் கண்ணி’ வரிகள் விகடனின் குறிக்கோளாகியது. ( 1980-இல் நடந்த விகடனின் பொன்விழாவில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இப்பாடலின் சில கண்ணிகளைப் பாடினார் என்பது என் நினைவு.) 
1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்ட முதல் வணிக விளம்பரம் ஆசிரியர் வாசனுடையதுதான்! ” இல்வாழ்க்கையின் ரகசியங்கள்” என்ற புத்தகத்தின் விளம்பரம் தான் அது! 
விகடனுக்கென ஓர் அச்சகமும் தொடங்குகிறார் வாசன். 48-இலிருந்து 64-பக்கங்களாகிறது விகடன். ஆண்டு சந்தா ரூபாய் இரண்டை ஒன்றாய்க்   குறைக்கிறார் வாசன்.
‘விகடன் சம்பாஷணைகள்’ என்ற தலைப்பில் அதுவரை வந்துகொண்டிருந்த துணுக்குகள் ‘ விகடன் பேச்சு’ என்ற தலைப்பில் வரத் தொடங்கின. இதோ ஒரு காட்டு:
==========
ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட வந்தவர்:| என்ன ஐயா, இந்தப் பாயசத்தில் ஈ விழுந்திருக்கிறதே!
ஹோட்டல்காரன்:| அதனால் என்ன குறைந்து போய்விட்டது? இந்த சிறிய ஈ எவ்வளவு பாயசத்தைக் குடித்திருக்க முடியும்?
=====

 'இந்திர குமாரி' என்னும் தொடர்கதை 1930 பிப்ரவரி இதழில் தொடங்குகிறது. இதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். ஆனால், அப்போது பெயர் குறிப்பிடப்படவில்லை. கதைகளுக்குப் படங்களும் இல்லை.
________________________________________
 இந்திரகுமாரி
1-வது அத்தியாயம்
 மாய மனிதன்
அந்த மின்சார மாயவன் சிவாஜியைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்னும் விஷயம் தென்னாடெங்கும் ஆச்சரியம், அச்சம், அவமானம், ஆர்ப்பாட்டம் முதலியனவை யுண்டாக்கித் திரள்திரளாகக்கூடும் ஜனங்களுக்குப் பிரமையைக் கொடுத்தது. மகாத் தந்திரமும், அதிகூரிய புத்தியுடைய அந்த தைரியசாலி சிவாஜியின் செயல்களைக் கண்டும் கேட்டும் ஜனங்கள் மயிர்க்கூச்சலெறிந்தனர். சிலர் அவனது ஆழ்ந்த புத்திக்காகப் பெருமை பேசினர்; சிலர் அவன் மனிதனோ அல்லது தெய்வலோகத்திலிருந்து குதித்திறங்கிய இந்திர ஜாலனோவென்று சந்தேகப்பட்டுக் கிசுகிசுவென்று பேசிக் கொண்டனர்; இன்னுஞ்சிலர் அவன் சுயநலங் கருதியே தனது அதி சாமர்த்தியத்தைக் காண்பிக்கிறானென்று 'சூ' கொட்டிப்பேசினர்; பலர் இதை ஆமோதித்தனர்; ஆனால் பெரியோரும் புத்திசாலிகளும் அல்லவென்றார்ப்பரித்தனர்  ...
[ நன்றி : விகடன் ’காலப்பெட்டகம்’, விகடன் பவழவிழா மலர், “பொன்னியின் புதல்வர்” (சுந்தா) ] 
தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 4 மார்ச், 2015

லா.ச.ராமாமிருதம் -9: சிந்தா நதி - 9

லா.ச.ராமாமிருதம் -9: சிந்தா நதி - 9
5. சொல் 
லா.ச.ரா 

“ கவிதைக்கும் வசனத்துக்கும் என்ன வேறுபாடு? பொருளின் முலாம் ஓசையா? ஓசையையும் அடக்கித்தான் பொருளா? ஓசைக்கும் பொருளுக்கும் நிக்கா மேல் இழுத்த திரைதான் வார்த்தை? அது கவிதையோ, வசனமோ எதுவானால் என்ன? எல்லாம் கவித்வமே” -
     --- -  லா.ச.ரா 


  அன்றொரு நாள்.

  தெருவில் போய்க்கொண்டிருக்கையில், மாலை யிருளில் யாரோ ஒருத்தி இன்னொரு ஆளிடம் பேசும் குரல் பிரிந்து வருகிறது.

  "அந்த ஆசாமியா, நீ சொல்றதை நம்ப முடியல்லியே! அவன் முதுகைத் தடவினால் வவுத்திலிருக்கிறதைக் கக்கிக் கொடுத்திடுவானே!" ஸ்தம்பித்துப் போனேன். இந்த நாட்டுப்புறத்தாளிடம் இத்தனை கவிதையா?

  போன வாரம் அடுப்புக்கரி வாங்க விறகு மண்டிக்குப் போனேன். நாடார், 'போன வாரம் கிலோ ரூ.1-50. கிஸ்ணாயில் தட்டுப்பாடு ஆனவுடனே கரி மேலே மார்க்கெட் பிரியமாயிட்டுது!" பிரியமாம். விலை உயர்வை உணர்த்தும் நேர்த்தி எப்படி?

  சமீபத்தில் ஒரு கலியாணத்துக்குப் போயிருந்தேன். மணப்பெண்ணின் தம்பி, சின்னப் பையன், பதினாலு வயதிருந்தால் அதிகம். என்னைப் பந்தியில் இடம் தேடி உட்கார வைத்து, உபசரித்து, பேச்சோடு பேச்சாக:

  "மாமா, வந்தவாளை உபசாரம் பண்ணி, திருப்திப்படுத்தி, இந்தச் சமயத்தைப் பரிமளிக்கச் செய்வதை விட எங்களுக்கென்ன வேலை?"

  இவ்வளவு ஓசை இன்பத்துடன், மனத்துடன் சொல்லிக் கொடுத்த வார்த்தையா? இராது!' Sponaneous ஆக, இந்த வாண்டினிடமிருந்து எப்படி வருகிறது? அப்பவே பாயசம், அதில் போடாத குங்குமப்பூவில், பரிமளித்தாற்போல் பிரமை தட்டிற்று.

  இன்னொரு சமயம். குழந்தை அம்மாவைக் கேட்கிறது. "அம்மா, இந்த மூக்கை (முறுக்கை)த் தேந்து (திறந்து) தாயேன்!" இதில் ஸ்வரச் சொல், 'திறந்து'.

  இவை என் எழுத்துப் பிரயாசையில் நான் கோர்த்த ஜோடனைகள் அல்ல. தற்செயலில் செவியில் பட்டு, நினைவில் தைத்து, தைத்த இடத்தில் தங்கி, 'விண், விண், விண்...'

  குளவிகள்.

  வாய்ச் சொல்லாகக் கண்ட பின்னர், வார்த்தை எழுத்தில் வடித்தாகிறது. வாய்ச் சொல்லுக்கும் முன்னாய உள்ளத்தின் எழுச்சியின் உக்கிரத்தை மழுப்பாமல் எழுத்தில் காப்பாற்றுவது எப்படி?

  இதுதான் தேடல்.

  தேடல் என்றால் டிக்ஷனரியில் அல்ல.

  உன் விதியில் தேடு.

  பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன்மையை அதனதன் ஓசையினின்று தவிர்த்து, அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஒவியங்கள் பயங்கும் மயக்கம். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும்.

  பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக்.

  தருக்களின் இலைகளினூடே, காற்றின் உஸ்!.....

  அந்தி வேளையில் விண்மீன்கள் ஜரிகை கட்டிய இருள் படுதாவின் படபடப்பு.

  நடு நிசி. கடற்கரையில் ஓடத்தடியில், அலை மோதிப் பின் வாங்குகையில், கரையில் விட்டுச் சென்று, கண் சிமிட்டும் நீல நுரைக் கொப்புளங்களின் மின் மினுக்கு.

  சமயங்களில், கிராமத்தில், நக்ஷத்ர ஒளியினாலேயே செண்டு கட்டினாற் போலும் கருவேல மரத்தின் மேல் நெருக்கமாகப் படர்ந்து அப்பிய மின்மினிப் பூச்சிக் கூட்டங்கள்.

  கிசுகிசு என்னவோ இன்னதென்று தெரியாது. ஆனால் என்னவோ நேரம் நலுங்குகிறது. இதோ என் ராஜா வரப் போகிறார் என்கிற மாதிரி மகத்துவத்தை எதிர் நோக்கும் அச்சத்தில் இரவின் ரகஸ்ய சப்தங்கள். பூவோடு பூ புல்லோடு புல். காயோடு இலையின் உராய்வுகள்-

  சப்த மஞ்சரி.

  செம்பருத்திச் செடியடியில் சலசல- புஸ்.....ஸ்.

  உச்சி வேளை, தாம்பு சரிந்து, கிணற்றுள் வாளி விழும் 'தாடல்.'

  மறுக்கப்பட்ட காதல், தன் வேட்கையின் தீர்வைத் தேடி அடி மேல் அடி வைக்கும் கள்ளத்தனத்தில், கதவுக் கீலின் க்ற்...றீ...ச்.....'

  திடு திடு. புழக்கடையில் திருடன் ஒடுகிறான்.

  இல்லை.

  பிரமை-
  * * *

  கம்யூனிகேஷனில் எத்தனை விதங்கள், ஸ்வரங்கள், ஸ்ருதிகள், அதிர்வுகள், உருவங்கள், உருவகங்கள், நயங்கள், நயனங்கள்!
  * * *

  திடீர் திடீர் எனக் காரணம் தெரியா மகிழ்ச்சி.

  இனம் தெரியா-துக்கம். உடனே ஏக்கம்.

  ராக் ரஞ்சித்.

  ராக் துக்.

  வரிகளை மடித்து எழுதினால் மட்டும்

  பிராசத்தால் மட்டும்

  கவிதை உண்டாகி விடாது. வசன கவிதை ஆகி விடாது.

  கேட்கிறேன். உள்ளபடி கவிதைக்கும் வசனத்துக்கும் என்ன வேறுபாடு?

  பொருளின் முலாம் ஓசையா? ஓசையையும் அடக்கித் தான் பொருளா?

  ஓசைக்கும் பொருளுக்கும் நிக்கா மேல் இழுத்த திரைதான் வார்த்தை?

  அது கவிதையோ வசனமோ எதுவானால் என்ன?

  எல்லாம் கவித்வமே.

  கெளரி கல்யாண வை போ க மே

  நித்ய கல்யாண வை போ க மே

  கவிதா கல்யாண வை போ க மே

  முதன் முதலில், ஒசை வயிறு திறந்ததும், அதனின்று பிரிந்தது வார்த்தை அல்ல. சொல்தான் பிறந்தது.

  சொல் வேறு. வார்த்தை வேறு.

  சொல் என்பது நான். என் தன்மை, என் பொருள், என் தேடல், என் சுழி, என் ஆரம்பம், என் முடிவு, முடிச்சு, முடிச்சின் அவிழ்ப்பு. அதற்கும் அப்பால் என் மறு பிறப்பு. எல்லையற்ற பிறவி மூலம் என் புதுப்பிப்பு.

  ஆதிமகனும் ஆதிமகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட முதல் சமயம் கண்ட உள்ள எழுச்சி தேடிய வடிகால், இருவரும் கண்ட முதல் சொல்லின் தரிசனத்தை அனுமானத்தில் காணக்கூட மனம் அஞ்சுகிறது.
  * * *

  சிந்தா நதி தலைக்கு மேல் ஆழத்தில், மண்டை ஒடுள் தோற்றங்கள்.
  -----------------


[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்,  ஓவியம்: உமாபதி ]

தொடர்புள்ள பதிவுகள்:
லா.ச.ரா: சில படைப்புகள்