தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 மார்ச், 2018

1017. தினமணிக் கவிதைகள் -3

புதுமைப் பொங்கல் (11)  முதல்  ஏழ்மையின் எதிர்பார்ப்பு   (15 ) வரை

பசுபதி

11. புதுமைப் பொங்கல்

தொன்மைத் திருநாள் பொங்கலின்முன்
 . . தொல்லை களைதல் முறையன்றோ?
இன்னல் கக்கும் வன்முறையை
. . எரித்து மகிழ்வோம் போகியன்று;
இன்பத் தையை வரவேற்போம்
. . எல்லோன் அறத்தைக் கும்பிட்டே!
பொன்னார் வையம் சமைத்திடுவோம்!
. . புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் !

பதக்கு வாய்மை அரிசியுடன்
. . பண்பாம் அன்புப் பால்சேர்த்து
மதநல் லிணக்கச் சீனியுடன்
. . வாழ்க்கைப் பானை தனிலிடுவோம்!
முதியோர் நூல்கள் பருப்புடனே
. . மொழியில் ஆர்வத் திராட்சையிட்டுப்
புதுமைப் பொங்கல் படைத்திடுவோம் !
. . பொருந்தாப் பழமை தவிர்த்திடுவோம்!


18-01-2016 

12. தொலைந்து போன கடிதம்

பாரதி அகத்தியருக்கு எழுதிய மடல்:

இலக்க ணத்தின் தந்தையே! - முன்பு
. . இலங்கை ஆண்ட மன்னனை
இசையில் வென்ற முனிவரே! - இதோ
. . இங்கென் ஓலை காண்கவே!

சேமம் கேட்டு வணங்குகிறேன்ஓர்
. . சிறிய உதவி வேண்டுகிறேன் 
நாமம் எனக்குச் சுப்பய்யா இங்கு
. . நானோர் எளிய மாணாக்கன்

சங்கத் தமிழைப் போற்றுகின்றார்  -- இங்கே
. . சாமி நாத அய்யரென்பார்
பொங்கும் ஆசை ஒன்றுளது ! – பல
. . புதிய நூல்கள்  கற்றிடவே!   

தொல்காப் பியமெனும் சொல்லார் நிதியும்
தெட்பம் கொண்ட எட்டுத் தொகையும்
வித்தகம் உடைய பத்துப் பாட்டும்
கீழ்க்க ணக்குச்சொல் வாழ்க்கை நீதியும்
இலக்கியக் கடலென என்முன் விரியுதே!
எஞ்சிய வாழ்வினில் எப்படிப் பருகுவேன்?

கடல்நீர் முழுதும் கையிலே ஏந்திக்
குடித்து முடித்த கும்ப முனியே!என்
முன்விரி நூற்கடல் மொண்டு குடித்திடும்
வித்தை ஒன்றை விரைவில் சொல்லுக!
உம்மையே நம்பினேன், உதவி புரிவீரே!


25-01-16 

13. எந்தேசம் என்சுவாசம்

நேசர் போல்நு ழைந்து நாட்டில்
. . நின்று போன ஆட்சியைப்
பூச லின்றி அன்பு வழியில்
. . போக வைத்த புண்ணியர்;
தேச மென்சு வாச மென்று
. . சேவை செய்த தியாகிநற்
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே       (1)

இந்தி யாவின் விடுத லைக்கு,
. . இம்மை வாழ்வை ஈந்தவர்;
எந்த சமய மென்றில் லாமல்
. . இறையின் உண்மை ஏற்றவர்;
சிந்தை முழுதும் வாய்மை என்ற
. . செஞ்சொல் தீபம் கொண்டவர்;
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே       (2)

எள்ளி நின்ற ஆங்கி லேயர்
. . இதயம் நிற்க வைத்தவர்;
வெள்ளை யான புன்சி ரிப்பு
. . மிளிரும் வதன சந்திரர்;
தெள்ளு தமிழின் வள்ளு வத்தின்
. . தெட்பம் நன்க றிந்தவர் ;
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே        (3)

01-02-16

14. காதல் எனும் ஒருவழிப் பாதை

காதலர் நாளும்பி றந்ததடி -- நம்
. . கண்ணியம் பண்பாடி றந்ததடி!
மேதினி போகுமிப் பாதைதனை, -- பார்த்து
. . வெட்கியே வானம் சிவக்குமடி! (1)

ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு,  --அது
. . அன்றாட வாழ்விலோர் அங்கமடி!
வேண்டாப் பொருள்களை அங்காடிகள் -- சேர்ந்து
. . விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி!  (2)

நேர்மை இலாதது காதலன்று -- வெறும்
. . நேரம் கழிப்பது காதலன்று !
ஈர்க்கும் உடையும், உடற்பசியும் -- பருவ
. . ஏக்க விளைவுகள் காதலன்று !     (3)

கொச்சைப் படுத்துதல் காதலன்று -- பூங்காக்
. . கொட்டம் அடிப்பது  காதலன்று !
இச்சை உணர்வைப் புனிதஞ்செய்து -- பின்
. . ஈருயிர்ச் சங்கமம் காதலடி !      (4)

காதல் ஒருவழிப் பாதையடிஅதில்
. . கடுகும் சுயநலம் இல்லையடி !
கோதில்லா அன்பதன் ரூபமடிஅதைக்
. . கொடுப்பதே உண்மையில் காதலடி!  (5)

15-02-16

15. ஏழ்மையின் எதிர்பார்ப்பு

என்னை நம்பி வந்த மனைவி
. . ஏக்கத் துடனே பார்க்கிறாள்
சின்னஞ் சிறிய பெண்ணும் பசியில் 
. . தேம்பித் தேம்பி அழுகிறாள்        (1)

மேட்டுக் குடியின் சொகுசு வாழ்வின்
. . மேலே ஆசை எனக்கிலை
வீட்டுப் பசியை விரைவில் போக்கும்
. . வேலை கிட்டின் போதுமே!          (2)

உண்ண உணவும் இருக்க இடமும்
. . உடுக்க உடையும் வேணுமே
பண்ணும் வேலை நேர்மை யான
. . பாதை போக வேணுமே              (3)


பள்ளிக் கூடம் பெண்ணை அனுப்பப்
. . பணத்தைச் சேர்க்க முடியணும்
மெள்ள என்றன் மனைவி யார்க்கும்
. . வேலை ஒன்று கிட்டணும்!            (4) 



22-02-16 

தொடர்புள்ள பதிவுகள் :


புதன், 26 அக்டோபர், 2016

தினமணிக் கவிதைகள் -2

தீபாவளி (6) முதல் இன்று புதிதாய்ப் பிறந்தோம்(10) வரை




6. தீபப் பெருவிழா போற்றுவோம்!

தெய்வக் கண்ணனைக் கொண்டாடும்இந்தத்
  தீபா வளித்திரு நாளினிலே
பொய்மை இருட்டினைப் போக்கிடுவோம்நம்
  புந்தி எனுமகல் விளக்கெடுத்தே !

குளிக்கும் நீரினில் கங்கையெனஅன்பு
  கொடுக்கும் நற்குணம் பொங்குகவே !
களிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில்நாம்
  அளிப்போம் உதவியை வறியவர்க்கே!

அரக்கன் நரகனின் வதத்தினிலேஉதவி
  அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும்தீக்
  கயமை அழிப்பதில் முன்வரட்டும் !   

வெட்டிச் செலவுகள் தவித்திடுவோம்இன்று
  வெடிப்போம் சினத்தினைப் பட்டாசாய்!
நட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம்இந்
  நாட்டின் பெருவிழாப் போற்றிடுவோம் !

07-11-15 

7. . தேர்தல்

தேர்தல் முடிந்து போச்சு தம்பி!
  திரையும் தூக்கி ஆச்சு!
தில்லு முல்லு திரைப்ப டத்தைத்
  திடுக்கி டாமல் பாரு!

வாக்குத் தேடி வீடு வந்த
  மனிதர் மறைந்து போவார்!
சாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்   
. . தட்டிக் கழிப்பார் பாரு!

எனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்
  என்ற வெற்றி வீரர்
தினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை
  செய்யும் காட்சி பாரு!

இனிமேல் ராம ராஜ்யம் தருவேன்
  என்று சொன்ன ஹீரோ
சினிமா முடிவில் வில்ல னாதல்
  சினப்ப டாமல் பாரு!


விளக்கு மாறு பழசாய்ப் போனால்
  வேலை செய்யு மாப்பா?
களைத்த மக்கள் புதுசு வாங்கக்
  காத்தி ருத்தல் பாரு!
  
17-11-15

8. நெல்மணி, கற்றோர் ; சிலேடை

உண்மை உழைப்பால் உயர வளர்வதால்,
தண்மைப் பணிவுடன் சாய்தலையால்மண்ணுலகில்
பல்லோர் பசி*தீர்க்கும் பண்பால், அகச்சத்தால்,
நெல்மணிக்குக் கற்றோர் நிகர்.

* (வயிற்று/அறிவு)ப் பசி
23-11-15 

9. பேயெனப் பெய்யும் மழை 


"வானம்பார் பூமியென்றெம் மண்ணுலகை ஏன்படைத்தாய்?!”

வானத்தை எட்டியதே மழைவேண்டும் கதறல்கள்.


சொக்கட்டான் நிறுத்திவிட்டுத் துயருற்ற தேவிக்குப்

பக்கத்தில் இருந்தவனோ பதிலிறுத்தான் சலிப்புடனே.


“ஒருகாசு கொடுத்தாலென்? ஒருகோடி கொடுத்தாலென்?

உருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு! “


“போதாதோ ஒருசூடு புத்தியுள்ள மாட்டுக்கு?

தாதாவே! தந்திடுவாய்! “ தர்மபத்னி சொல்கேட்ட


மாயவனும் ஆழிமழை வருணனுக்கோர் ஆணையிடப்

பேயெனவோர் கனமழையும் பெய்ததுகாண் சென்னையிலே!
             30-11-15

10. இன்று புதிதாய்ப் பிறந்தோம்


இன்று புதிதாய்ப் பிறந்தோம் – எம்
   எஞ்சிய வாழ்விற் கிதுவே முதல்நாள் ”
என்றே தினமும் உரைப்போம் ! – நம்
    யந்திர வாழ்வின் சுமையைக் குறைப்போம்!

துன்பத்தின் வேரைத் தகர்ப்போம் ! – நம்
   சோர்வை மறக்கக் கரங்கள் இணைப்போம் !
அன்பின் பெருமை உணர்வோம்! – எமை
   ஆளும் நெறியாய் அவிரோதம் ஏற்போம்!

பார்க்க ஒளிர்ந்திடும் யாவும் – பொற்
   பாளத் துகள்கள் எனவெண்ணல் வேண்டா!
தேர்வுகள் செய்திடக் கற்போம்! – நல்ல
   தேன்மலர் தேடிடும் வண்டுகள் போல!

முப்பால் தினமும் குடிப்போம்! – நம்
   முன்னோரின் நூல்களைப் பட்டாய் மதிப்போம்!
ஜப்பான் மொழியையும் கற்போம் – மேலைச்
   சாத்திரச் சாற்றை வாழ்வில் கலப்போம்!

மின்வான் தனிலே உலாவி – விண்
   மீன்கள் பறித்துத் தமிழில் பதிப்போம்!
வன்பால் சகத்தினை மாற்றி – நம்
   வாழ்வின் வளத்தைப் பெருக்குவோம் வாரீர்!


[ நன்றி: http://www.dinamani.com/kavithaimani/  ]

தொடர்புள்ள பதிவுகள் :


வெள்ளி, 20 நவம்பர், 2015

தினமணிக் கவிதைகள் -1

மழை(1) முதல் சினிமா(5) வரை! 

தினமணி நாளிதழ் இந்த வருட காந்தி ஜெயந்தி ( 02/10/15) அன்று   கவிதைமணி என்ற ஒரு பகுதியை தங்கள் இணைய தளத்தில் தொடங்கியது. 


வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதப்படும் கவிதைகளில் சில  தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு திங்களன்றும் அப்பகுதியில் வெளியாகின்றன.

அப்படி அண்மையில் வெளியான என் சில கவிதைகள்.
  
1. மழை

யாருக்கு வேண்டுமய்யா இந்த அடைமழை?
பாரதமே நாறுதே பாதிப்பால்! -- கோரிக்கை
வாய்த்துநம் நாட்டினில் வந்திடா தோவறட்சி?
ஓய்ந்திடுமோ ஊழல் மழை?

                                                                                        12-10-15
2.மது ஒழிப்பு

குட்டிச் சுவராய்ப் போகும் அய்யா
  குடியில் மூழ்கும் நாடு!
சட்ட திட்டம் போதா துங்க
  சாரா யத்தை ஒழிக்க!
வெட்டிப் பேச்சு மேடைப் பேச்சால்
  வெற்றி வந்தி டாது! 
திட்ட வட்ட மாகச் சொல்றேன்
  திருந்தும் வழியும் ஒன்றே!
பட்ட துன்பம் சொல்லும் ஜனங்க
  பள்ளி எல்லாம் சென்று
சுட்டிப் பசங்க மனத்தில் உண்மை
  சுட்டுப் போட வேணும்
குட்டிப் பசங்க வீடு போயி
  குடியின் கேடு சொன்னால் 
புட்டி போடும் வீடும் மாறும்
  புள்ளை கெஞ்சல் கேட்டே!

                                                 19-10-15

 3. தண்ணீரின் கண்ணீர்

கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க
வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.
வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.
விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: மானுடனே! 
பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?
அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?
ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;
நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்! 
பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!
மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “
                 
                    26 /10/15 


4. பெற்ற மனம்

பெண்ணின் மணமென்னும் போதினிலே அந்தப்
  பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?
கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ தாலி
  கட்டி யவனுடன் செல்வதனால்.

மைந்தன் திருமணம் ஆனபின்பும் தாய்
  தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?
மந்திரம் போட்டவள் சொற்படியே பிள்ளை
  வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.

உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் இந்த
  உன்னதக் கல்யாண தீபவொளி
தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ ஒரு
  தாபத் தனிமை இருட்டினிலே
                        
                           02/11/15

5.சினிமாவில் வெற்றி

சினிமாவில் வெல்லுவழி ஒன்றே
  சிந்தித்துக் கடைப்பிடிப்பாய் இன்றே
அஞ்சாமல் திரைகடல் ஓடு
  அங்குள்ள திரவியத்தைத் தேடு
என்றவ்வை பொன்மொழியைச் சொல்லு!
  இவ்வழியில் உறுதியாய் நில்லு!
சுயமாக யோசித்தல் எதற்கு?
  துட்டொன்றே போதும் நமக்கு!
பிறமொழிகள்திரைக்கடலில் தேடு!
  பிடித்ததற்குத் தமிழ்வேடம் போடு!
கலகலப்பாய்ப் பாடல்கள் போடு!
  காசுவந்து குவியும்கண் கூடு!
                09-11-15 

=============
நன்றி: http://www.dinamani.com/kavithaimani/  ]


தொடர்புள்ள பதிவுகள் :

கவிதைகள்