வியாழன், 22 நவம்பர், 2012

லா.ச.ராமாமிருதம் -1: சிந்தா நதி - 1

17. மணிக்கொடி சதஸ் - 1

லா.ச.ரா

என்னை மிகவும் கவர்ந்த பல எழுத்தாளர்களில் லா.ச.ராமாமிருதம் ஒருவர். அவருடைய சுயசரித்திர நினைவுகள் ‘சிந்தா நதி’ என்ற பெயரில் தினமணி கதிரில் 1985-இல் ஒரு தொடராக வந்து என்னை உலுக்கியது. அதை 86-இல் நூலாக வானதி பதிப்பகம் வெளியிட்டது. அந்த நூல்  1989-இல் சாஹித்ய அகாதமியின் பரிசு பெற்றது.

’சல சல’ என்று தலைப்பிட்ட நூல்முன்னுரையில் லா.ச.ரா எப்படி இந்தத் தொடர் எழுந்தது என்று விளக்குகிறார். 1984-இன் கடைசியில் ‘தினமணி கதிரின்’ ஆசிரியர் ( கி.கஸ்தூரிரங்கன் ?), வாராவாரம் இரண்டு பக்கங்கள் அவருக்கு ஒதுக்குவதாய்ச் சொல்கிறார். எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிறார். ஒரு சிறுகதைக்கே சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும் லா.ச.ரா எப்படி வாரா வாரம் ‘கதிரின்’ பசிக்குத் தீனி போட முடியும் என்று வியக்கிறார். கடைசியில், வாசகர்களின் அமோகமான ஆதரவே ‘சிந்தா நதி’ வற்றாமல் ஒரு வருடம் ஓடியதற்குக் காரணம் என்கிறார்.

அதிலிருந்து சில அத்தியாயங்களை ( உமாபதியின் அழகான ஓவியத்துடன்) இங்கிடுகிறேன். மூல ஓவியங்களுடன் இத்தொடர் அச்சில் வந்ததாகத் தெரியவில்லை.   ( நூலில் சில மாற்றங்கள் இருக்கலாம்; உதாரணமாக, ‘கதிரில்’ வரும்போது தலைப்புகள் இருக்கவில்லை. இவற்றைக் கவனிக்கும் பொறுப்பை லா.ச.ரா.வின் ஒரு தீவிர ரசிகரிடம்  விட்டுவிடுகிறேன்.)

இனி லா.ச.ரா.வே உங்களுடன் பேசட்டும்!


தி.ஜ.ர, சிட்டி, சி.சு. செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி , கு.ப.ரா.,க.நா.சு போன்ற பல இலக்கிய முன்னோடிகள் இந்த ‘நினைவலையில்’  தலைகாட்டுகிறார்கள். ( இதன் தொடர்ச்சியாக இன்னொரு கட்டுரையும் பின்பு எழுதினார் லா.ச.ரா; அதைப் பின்னர் இடுகிறேன்.)
[ஓவியம்: உமாபதி]

இந்தக் கட்டுரை வந்த அடுத்த வாரம், கதிரின் “வாரம் ஒரு கடிதம்” என்ற பகுதியில் , “தேவகுமார்” என்பவர் எழுதியது:

“ அற்புதம்! வெகு அற்புதம்! சென்னையின் பிரசித்தி வாய்ந்த மெரீனாக் கடற்கரையில் “மணிக்கொடி” காலத்துப் பிரமுகர்கள் கூடிப்பேசும் காட்சியை தத்ரூபமாகச் ” சிந்தா நதி”ப் பகுதியில் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ள திரு லா.ச.ரா வின் சாதனையைக் குறிப்பிடுகிறேன். அந்த சம்பாஷணைகளின் சில பகுதிகளையேனும் லா.ச.ரா. தன் நினைவுப் பேழையிலிருந்து பொறுக்கி எடுத்து தந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? “

நமக்கும் அப்படித்தானே தோன்றுகிறது ? ஒரு வேளை இந்தக் கடிதத்தைப் படித்தபின் தான் லா.ச.ரா இன்னும் கொஞ்சம் ‘ மணிக்கொடி சதஸ்’ பற்றி எழுதலாம் என்று எண்ணி, அதற்கடுத்த வாரம்  இன்னொரு கட்டுரையை . .  தன் 19-ஆவது பதிவாக . . . எழுதினாரோ?

[ நன்றி: தினமணி கதிர் ]

( தொடரும் )

பி.கு.

கட்டுரையைப் படித்த ஆசுகவி சிவசூரியின் மறுமொழி


சிந்தை என்னும் நதிகாட்டி -அது
   தெளிவாய் ஓடும் கதிகாட்டி
விந்தை புரியும் மதிகாட்டி-கதை
   விரியும் விதத்தின் முதல்காட்டி
முந்தை நாளின் கதைகாட்டி- அதில்
   முற்றும் எம்மைக் குளிப்பாட்டி -ஒலி
சிந்தும் கடலின் கரைகாட்டும் - அது
   செம்மை மிகுந்த நாட்காட்டி.

சுற்றுப் புறத்தின் எழில்காட்டி -அன்று
   துடிப்பாய் வரைந்த முகம்காட்டி
வெற்றுத் தாளில் உயிரூட்டி- எமை
   வேகம் வளர்த்த பயிர்காட்டி
கற்றுக் கொடுக்கும் கலைகாட்டி- அவர்
   கதையும் தொடுக்கும் நிலைகாட்டி
பற்றி நடந்திடும் வழிகாட்டும்-அது
   பண்டை நாளின் மொழிகாட்டும்.


மால்குடி நாளைக் கண்டுள்ளேன் -அதில்
   மையல் மிகவும் கொண்டுள்ளேன்
லால்குடி யார்என் முனம்கண்டேன் - அந்த
   ராமா அமுதின் இனம்கண்டேன்
பால்குடி நாட்களின் வலம்கண்டேன்-என்
   பள்ளிப் பருவ நலம்கண்டேன்
கோல்பிடித் தவரின் பதம்கண்டேன் -நான்
   கொஞ்சும் தமிழின் இதம்கண்டேன்.


சிவ சூரியநாராயணன்.

===========

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

4 கருத்துகள்:

அ. பசுபதி சொன்னது…

சிறப்பு.

Siva Suryanarayanan சொன்னது…சிந்தை என்னும் நதிகாட்டி -அது
தெளிவாய் ஓடும் கதிகாட்டி
விந்தை புரியும் மதிகாட்டி-கதை
விரியும் விதத்தின் முதல்காட்டி
முந்தை நாளின் கதைகாட்டி- அதில்
முற்றும் எம்மைக் குளிப்பாட்டி -ஒலி
சிந்தும் கடலின் கரைகாட்டும் - அது
செம்மை மிகுந்த நாட்காட்டி.

சுற்றுப் புறத்தின் எழில்காட்டி -அன்று
துடிப்பாய் வரைந்த முகம்காட்டி
வெற்றுத் தாளில் உயிரூட்டி- எமை
வேகம் வளர்த்த பயிர்காட்டி
கற்றுக் கொடுக்கும் கலைகாட்டி- அவர்
கதையும் தொடுக்கும் நிலைகாட்டி
பற்றி நடந்திடும் வழிகாட்டும்-அது
பண்டை நாளின் மொழிகாட்டும்.

மால்குடி நாளைக் கண்டுள்ளேன் -அதில்
மையல் மிகவும் கொண்டுள்ளேன்
லால்குடி யார்என் முனம்கண்டேன் - அந்த
ராமா அமுதின் இனம்கண்டேன்
பால்குடி நாட்களின் வலம்கண்டேன்-என்
பள்ளிப் பருவ நலம்கண்டேன்
கோல்பிடித் தவரின் பதம்கண்டேன் -நான்
கொஞ்சும் த்மிழின் இதம்கண்டேன்.


சிவ சூரியநாராயணன்.Bhanumathy Venkateswaran சொன்னது…

லா.ச.ரா.வின் எழுத்தின் மீது எனக்கு பக்தி. 'நெருப்பு என்று எழுதியதை படித்தால் வாய் வெந்து போக வேண்டும்' என்று சொன்னவர் அல்லவா? சிந்தா நதியும், பாற்கடலும் என்னுடைய கலெக்ஷனில் உண்டு!. இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தால்தான் என்ன?

Pas Pasupathy சொன்னது…

நன்றி, பானுமதி வெங்கடேஸ்வரன். மீண்டும் ... மூலப் படங்களுடன் .... லா.ச.ரா வை ரசியுங்கள்!

கருத்துரையிடுக