புதன், 27 நவம்பர், 2013

இந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ

’தேவன் நூற்றாண்டு விழாவில் நான் செப்டம்பர், 2013 -இல் சந்தித்த எழுத்தாளர் ‘அம்பை’ , 25 ஆண்டுகளாக அரும் பணியாற்றிவரும்  ‘ஸ்பேரோ’ ( SPARROW) என்ற ஒரு சிறந்த காப்பகத்தைப் பற்றிச் சொன்னார்; இப்போது அந்நிறுவனத்திற்கு எல்லோரிடமும் நன்கொடை கேட்டு , ஒரு வேண்டுகோளை எனக்கு அனுப்பியுள்ளார்.

இது ஒரு முக்கிய வேண்டுகோள் என்பதால் அதை அப்படியே இங்கு இடுகிறேன்.

சொல்வனம் இணைய இதழ் இந்தக் காப்பகத்தைப் பற்றி அண்மையில் எழுதியதை இங்கு மீண்டும் பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுவே என் வேண்டுகோளும் ஆகும்.

“ இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது.  அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.
இந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.
படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்” 
ஞாயிறு, 24 நவம்பர், 2013

சாவி - 9: ’சிக்கனம்’ சின்னசாமி

’சிக்கனம்’ சின்னசாமி
 சாவி 

[ ஓவியம்: நடனம்]

சைக்கிள் என்ற நாமதேயத்தில் உயிர் வைத்துக் கொண்டிருக்கும் அந்த ஜங்கமப் பொருளுக்குப் பச்சை வர்ணம் ஒரு கேடு!

பெடலின் வலது பாதம் தேய்ந்து மாய்ந்து கழன்று விட்டதால், அந்த நஷ்டம் மரக்கட்டையால் ஈடு செய்யப்பட்டிருந்தது. 'லொடக் லொடக்' என்று சத்தம் போடும் பல், ஆடிப் போன பெல். காயலான் கடை 'வா வா' என்று அழைக்கும் கிழடு தட்டிப்போன தோற்றம்.

'கர்க்க்.... சர்க்க்.... கிறீங்... சர்ர்ர்...!' - அந்தச் சைக்கிள் ஒரு தபாலாபீஸ் முன்னால் போய் நிற்கிறது.

அதோ, அந்த அபூர்வ வாகனத்திலிருந்து கீழே இறங்கிச் செல்கிறானே அவன் வேறு யாருமில்லை. 'சிக்கனம்' சின்னசாமிதான்! வெளியே போகும்போது வரும்போதெல்லாம் போஸ்டாபீசுக்குள் நுழைந்து அங்கே சும்மா கொடுக்கப்படும் மணியார்டர் பாரத்தை வாங்கி வருவது அவன் வழக்கம்.
[ மூலம்: கோபுலு நகல்: சு.ரவி ]

மணியார்டர் பாரத்துக்கு விலை கிடையாதல்லவா? இனாமாக எது கிடைத்தபோதிலும் சின்னசாமி அதை விட மாட்டான். அது மட்டுமல்ல; மலிவாக எந்தப் பொருள் எங்கே கிடைத்தாலும் வாங்கத் தவற மாட்டான். அந்தப் பொருள் தேவைதானா, அவசியந்தானா என்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை கிடையாது. எப்போதாவது உபயோகப்படாமலா போய் விடும்? காயலான் கடையிலும், மூர் மார்க்கெட்டிலும் அவன் வாங்கி வாங்கிச் சேகரித்து வைத்துள்ள பொருள்களைக் கொண்டே ஒரு பொருட்காட்சி நடத்திவிடலாம். அந்தச் சைக்கிள்கூட, பல பாகங்களைத் தனித் தனியாக வாங்கி, ரிப்பேர் ஷாப்பில் கொடுத்து உருவாக்கப்பட்டதுதான்.

காலையில் எழுந்ததும் சின்னசாமி டி.யு.சி.எஸ்.(1)  வாசலில் போய் உட்கார்ந்துகொண்டு, அங்கு வரும் தினப்பத்திரிகையை இலவசமாகப் படித்துவிட்டு, அப்படியே கறிகாய் மார்க்கெட்டுக்குப் போய் ஒவ்வொரு கடையாக, காய்களின் விலையை விசாரித்து வாங்கி வருவான். அன்று மார்க்கெட்டில் எந்தெந்தக் காய்கள் மலிவு என்பதைச் சுலபமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சின்னசாமி வாங்கும் கறிகாய்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
           
சின்னசாமி துணிகளைச் சலவைக்குப் போடமாட்டான். தானே துவைத்துத் தானே இஸ்திரி போட்டுக் கொள்வான். அந்த இஸ்திரிப் பெட்டிகூட அவனுடைய சொந்த 'மேக்'தான்!
மளிகைக் கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வந்தால் சாமான்கள் கட்டப்பட்டு வரும் காகிதங்களைக் கிழியாமல் மடித்து வைப்பதோடு சணல் கயிற்றையும் பத்திரமாகச் சுற்றி வைப்பான்.

தனக்கு வரும் தபால் கவர்களைக்கூட அவன் வீணாக்குவதில்லை. உறைகளைப் பிரித்து அடுக்கி வைத்துக்கொண்டு அவற்றின் பின்பக்கத்தை குறிப்பு எழுத உபயோகப்படுத்திக் கொள்வான்.

ஞாயிற்றுக்கிழமை வந்தால் சின்னசாமியை ஏலக் கம்பெனி ஏதாவது ஒன்றில்தான் பார்க்க முடியும். நூறு ரூபாய் பெறுமானமுள்ள பொருளை மிகத் துணிந்து ஐந்து ரூபாய்க்குக் கேட்பான். சில சமயம் அவன் கேட்கும் விலைக்கே அவை சல்லிகாசுக் கிடைத்து விடுவதும் உண்டு.

தெருவில் போகும்போது அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு போக மாட்டான். கீழே ஏதாவது கிடக்கிறதா என்றுதான் பார்த்துக்கொண்டு செல்வான். ஆணி, குடைக்கம்பி, இரும்புத் துண்டு எது கிடைத்தபோதிலும் அவற்றைப் பொறுக்கிப் பையில் போட்டுக் கொண்டு வந்து சேர்ப்பான்.

சின்னசாமி குற்றாலத்துக்குப் போகும்போதுதான் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது வழக்கம். காரணம், குற்றாலம் அருவியில் எண்ணெய் ஸ்நானம் செய்வதென்றால் சீயக்காய்த் தூளுக்குச் செலவு கிடையாதல்லவா?
           
சின்னசாமியிடம் வெகு காலமாக ஒரு பழைய டைம்பீஸ் இருந்தது. ரயில் தண்டவாளத்தில் வைத்து நசுக்கி மோட்சம் கொடுக்க வேண்டிய அந்த வஸ்துவை அவன் தானாகவே ரிப்பேர் செய்து எப்படியோ ஓட வைத்து விட்டான்.

கடிகாரம் பழுது பார்ப்பதற்கு வேண்டிய உபகரணங்களையும், கடியாரத்துக்கு வேண்டிய ஸ்பிரிங் முதலிய கருவிகளையும் எங்கெங்கோ அலைந்து கடை கடையாகத் தேடி, பேரம் பேசி விலைக்கு வாங்கி வந்தான்.

ஒரு சனிக்கிழமை அந்தக் கடியாரத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து எதிரில் பரப்பிக்கொண்டான். ஏதோ ஒரு ஸ்பிரிங்கை எடுத்து மாட்டினான். அதிலிருந்து பல் சக்கரங்களை கழற்றினான். வேறு இரண்டைப் பொருத்தினான். கடைசியில் பழையபடியே கடியாரத்தை மூடிச் சாவி கொடுத்து ஓட்டினான். கடியாரம் ஓடத் தொடங்கிவிட்டது! ஆனால், என்ன ஆச்சரியம்! சாமான்களில் நாலு மிஞ்சி விட்டன. அப்படியும் கடியாரம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது! சின்னசாமிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சாமான்களிலும் நாலு மிஞ்சி, கடியாரமும் ஓடினால் மகிழ்ச்சி இருக்காதா?

''ஜெர்மன் டைம்பீஸ்; இப்போதெல்லாம் இந்த மாடல் வருவது கிடையாது. விலை கொடுத்தாலும் கிடைக்காது'' என்று பெருமையோடு சொல்லி மகிழ்ந்து கொண்டான் அவன்.
ஆனால், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் டைம்பீஸைப் பார்த்தபோது பெரிய முள் அப்பிரதட்சணமாகச் சுற்றிக் கொண்டிருந்தது!

மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு இப்போது சாமான்கள் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறான். பழைய ஹாரன், பல்பு ஒன்று மூர்மார்க்கெட்டில் (2) மலிவான விலைக்குக் கிடைத்து விட்டது. விடுவானா? இனி மற்ற பாகங்கள் கிடைக்க வேண்டியதுதான் பாக்கி!

சிக்கனம் சின்னசாமிக்குச் சிக்கனமாக இரண்டே குழந்தைகள்தாம். தீபாவளி வந்தால் அந்தக் குழந்தைகளுக்குப் பட்டாசு, மத்தாப்பு எதுவூம் வாங்கித் தரமாட்டான். அடுத்த வீட்டுச் சிறுவர்கள் வெடிக்கும்போது தன் குழந்தைகளை அங்கே அழைத்துச் சென்று வேடிக்கை காட்டிவிட்டு வந்து விடுவான்!

அஸ்ஸாம் காடுகளில் மலிவாக யானை கிடைக்கிறது என்று யாரோ கூறினார்களாம். அஸ்ஸாமுக்குச் சைக்கிளிலேயே போய் யானையைத் தன் சைக்கிளின் பின்சீட்டில் உட்கார வைத்துக்கொண்டு வந்துவிடலாமா என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறான்
=====

பி.கு.
(1)  சாவியின் ஒவ்வொரு கட்டுரையிலும் மிகச் சுவையான வரலாறுகள் பொதிந்துள்ளன என்றால் மிகையாகாது. உதாரணம், டி.யூ.சி.எஸ் . அப்படி என்றால் என்ன? திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் ( Triplicane Urban Co-operative Society) .
இது 1904-இல் சென்னையில்   தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம்,  பண்டகசாலை !  அதைப் பற்றிய ஒரு  பதிவை இங்கே பார்க்கலாம்.

(2) மூர்மார்க்கெட். அடடா!  இந்தப் பேரைக் கேட்டாலே என்முன் பொக்கிஷங்கள் நிறைந்த ஒரு தேவலோகமன்றோ தெரிகிறது! 50-களில் மூர்மார்க்கெட் புத்தகக் கடைகள் இல்லாமலிருந்தால் என் உலகே இருண்டிருக்கும்! மூர் மார்க்கெட் பற்றி இங்கே படியுங்கள் .

[நன்றி: ‘சாவி’யின் ‘கேரக்டர்’ நூல்  ]

தொடர்புள்ள பதிவுகள்: 

சாவியின் படைப்புகள்

ஞாயிறு, 17 நவம்பர், 2013

தேவன் - 15: ‘அம்பை’ யின் கட்டுரை

’தேவன்’ கதைகளில் பெண்கள்
 ‘அம்பை’ 


தேவனின் நாவல்களின் தலைப்புகளைப் பார்த்தால் பாதிக்கு மேல் பெண்களின் பேர்கள் தாம்!  மாலதி, மைதிலி, கல்யாணி, மிஸ் ஜானகி, கோமதியின் காதலன், லக்ஷ்மி கடாக்ஷம் !  ‘பார்வதியின் சங்கல்பம்’ , 'நடனராணி இந்திரா’ போன்ற குறுநாவல்கள், கதை-கட்டுரைத் தொடர் 'ராஜத்தின் மனோரதம்’ இவை வேறு உண்டு!    ஐந்து நாவல்களின் பெயர்களில் தான் ஆண்கள் தலைதூக்குவார்கள் : துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி சந்துரு! இப்படி இருக்கும்போது, யாராவது ‘தேவ’னின் கதைகளில் வந்த பெண்களைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதினால் நன்றாய் இருக்குமே என்று தோன்றுகிறதல்லவா? அதைத் தான் பிரபல எழுத்தாளர் “அம்பை” செய்தார்!  ’தேவன்’ நூற்றாண்டு வருடத்தில் இது நமக்குக் கிட்டிய ஒரு ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ தான் என்று சொல்லவேண்டும் ! ( ஆம், “அம்பை” யின் இயற்பெயர் ‘லக்ஷ்மி’தான்! மேலும், அவருடைய புனைபெயரான “அம்பை”க்கும் “தேவ”னின் ஒரு பாத்திரத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது! பொருத்தம், தகுதி  போதுமா?  )

அண்மையில் சென்னையில் நடந்த தேவன் நூற்றாண்டு விழாவில் ‘அம்பை’ இந்தக் கட்டுரையைத் தான் சமர்ப்பித்தார். கூடவே “லக்ஷ்மி கடாக்ஷ”த்தில் வந்த ‘கோபுலு’வின் பல சித்திரங்களையும் காட்டி அவையினரை ( கோபுலுவும் அங்கிருந்தார்! ) மகிழ்வித்தார்!

’அமுதசுரபி’ 2013 தீபாவளி மலரில் வந்த ’அம்பை’யின் அந்தக் கட்டுரையை இங்கே மீண்டும் இடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! ’தேவன்’ நூற்றாண்டு விழாத்தருணத்தில் மிகப் பொருத்தமாக இந்தக் கட்டுரையை வெளியிட்ட அமுதசுரபி ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு என் நன்றி![ நன்றி : அமுதசுரபி, நவம்பர் 2013 ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நூற்றாண்டு விழா -2

தேவன் நூற்றாண்டு விழா -1
 
தேவன் படைப்புகள்

துப்பறியும் சாம்புபுதன், 13 நவம்பர், 2013

தேவன் - 14 : தேவன் நூற்றாண்டு விழா -5 : ’தினமணி’யில் ‘கலாரசிகன்’

'தேவன்'

கலாரசிகன்
=====

நவம்பர் 10, 2013 ’தினமணி’யில் ‘தேவ’னைப் பற்றி ஒரு 

 கட்டுரையைப் படித்தேன். 

அதைப் பார்த்ததும் என் மனத்தில் ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு  முன்பு ‘தினமணி’யில் தேவனைப் பற்றி வந்த இன்னொரு  கட்டுரையின் நினைவு எழுந்தது. 


‘தேவன்’ இருமுறை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக 
 இருந்தார்; ‘தினமணி’ துணை ஆசிரியர் 
 ஏ.ஜி.வெங்கடாச்சாரியார் அச்சங்கத்தின் துணைத் 
 தலைவராக இருந்தார். மேலும் அவர் ‘தேவ’னின் நெருங்கிய 
 நண்பரும் கூட.  ‘தேவன்’  மறைந்தவுடன், 9-5-57 ‘தினமணி’
  இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. தமிழ்
 எழுத்தாளர் சங்கம் கூட்டியிருந்த கூட்டத்தில்
 ’தேவ’னைப்பற்றிப் பேசிய பல எழுத்தாளர்களின்
 மனமுருக்கும் உரைகளை அந்தத் ‘தினமணி’க் கட்டுரை
 விவரமாகப் பதிவு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தைப் பற்றி
 நாளேடுகளில் வந்த கட்டுரைகளில் அதுவே மிக நீண்ட
 கட்டுரை எனலாம். இதற்கு ஏ.ஜி.வெ அவர்களே காரணம்.

அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி :

 அக்கூட்டத்தில் பேசிய ஏ.ஜி.வெங்கடாச்சாரியார் தேவனின்
 மறைவு சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத நஷ்டமென்றார்.
 
எழுத்து வன்மையால் மட்டுமின்றி சிறந்த பண்பாட்டினாலும்
 தமிழகத்திற்குச் சிறந்த தொண்டினைத் தேவன்
 செய்துள்ளார். ..எழுத்து வன்மையும் பண்பாடும் சேர்ந்து
 தேவனிடம் அமைந்திருந்தது போல் வேறு யாரிடமும்
 அமையவில்லை எனலாம். எப்போதும் மலர்ந்த முகம்,
 இனிமையான பேச்சு, ஆழ்ந்த அனுபவம் பிறருடன் அதைப்
 பகிர்ந்து கொள்வதில் இன்பம் கொண்டவராகத் திகழ்ந்தார்.

 “ என்று கூறி அன்னாரின் கடைசி காலத்தில் நான்கு மாத
 காலம் கூட இருந்து அவர் பட்ட கஷ்டங்களை  ஒரு அளவுக்கு
 தாம் பார்த்ததைப் பற்றிக் குறிப்பிடுகையில்
 வெங்கடாச்சாரியாருக்குத் துக்கம் தொண்டையை அடைக்க
 நா தழதழத்து சிறிது நேரம் பேச முடியாமல் போயிற்று.


இப்போது கலாரசிகன் என்ற புனைபெயரில் எழுதும்
 ’தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் , அவருடைய ‘ இந்த
 வார கலாரசிகன்’ பத்தியில் ’தேவ’னுக்குப் புகழாரம்
 சூட்டியுள்ளார். அந்தக் கட்டுரையைக் கீழே இட்டிருக்கிறேன்.
 அவருக்கு என் மனமார்ந்த நன்றி!


அதன் கீழே ’தினமணி’யில் வந்த என்னுடைய  பின்னூட்டம். 
( இதுவே  தேவன் நூற்றாண்டு விழாவில் நான் பேசியபோது, 
 நான் விடுத்த முக்கிய வேண்டுகோள்!  நீங்களும் இங்கு
 உங்கள் பின்னூட்டத்தைத் தரலாமே!  ) 

கலாரசிகனின் கட்டுரையைத் தினமணி வலைப்பதிப்பில்
 படிக்க: 

தேவன் 

‘கலாரசிகன்’ [ 10-11-2013; தினமணி ]
நினைவு தெரிந்து என்னை பத்திரிகைகள் படிக்கத் தூண்டிய
 எழுத்துகள் இருவருடையது. நடுநிலைப் பள்ளி மாணவனாய்
 வீட்டிற்கு வரும் ஆனந்த விகடனைப் படிக்க
 அப்போதெல்லாம்  போட்டி நடக்கும். தேவனின் மறைவுக்குப்
 பிறகு கோபுலுவின் படங்களுடன் சித்திரக் கதையாக
 வெளிவந்த துப்பறியும் சாம்புவும், சாவியின் வாஷிங்டனில்
 திருமணமும்தான் அந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் காரணம்.
உயர்நிலைப் பள்ளி மாணவனான பிறகு, "கல்கி' வார இதழில்
 மறுபதிப்பாக வெளிவந்த "பொன்னியின் செல்வன்',
 "சிவகாமியின் சபதம்', "பார்த்திபன் கனவு' போன்ற
 கல்கியின் படைப்புகள் கதை படிக்கும் பழக்கத்தை
 நிலைநிறுத்தின. இன்றுவரை, வார சஞ்சிகைகள்
 ஒன்றுவிடாமல் படித்து விடுகிறேன், குறைந்தபட்சம் புரட்டிப்
 பார்த்துவிடுகிறேன் என்றால் மேலே குறிப்பிட்ட மூன்று
 பேரும்தான் அதற்குக் காரணம்.
தேவன் நூற்றாண்டு விழாவையொட்டி
 தொகுக்கப்பட்டிருக்கும் "தேவன் வரலாறு' என்கிற
 புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தபோது,
 துப்பறியும் சாம்புவும், இன்ஸ்பெக்டர் கோபாலனும் கண்
 முன்னே நடமாடும் கதாபாத்திரங்களாக இன்றைக்கும்
 மனதில் பதிந்திருப்பதை உணர்ந்தேன்.


44 வயதில் தேவன் என்கிற மகாதேவன் காலமாகிவிட்டார்.
 முழுநேர எழுத்தாளனாக அவர் இருந்தது என்னவோ ஏறத்தாழ
 கால் நூற்றாண்டு காலம் மட்டுமே. அதற்குள் அவர்
 படைத்திருக்கும் படைப்புகள் 31. துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ்
 ஜகந்நாதன், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம்,
 கோமதியின் காதலன் முதலியவை காலாகாலத்திற்கும்
 தேவனின் பெயரை நிலைநிறுத்தும் படைப்புகள்.
"கல்கி ஒரு காந்த சக்தி. அந்த சக்தி எழுத்தாளர் உலகத்தில்
 என்றென்றும் இருக்கும்' என்று கல்கியின் மறைவின்போது
 எழுதினார் தேவன். அது அவருக்கும்தான் பொருந்தும்.
கல்கியைப் போலவே, தேவனுக்கும் நகைச்சுவை என்பது
 இயல்பாகவே பேனாவில் வந்து கொட்டும். தேவன்
 ஆசிரியராக இருந்தபோது விகடனில் ஒரு துணுக்கு. ""என்ன
 சார், இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டீர்களா?'' என்கிற
 கேள்விக்குத் தரப்பட்ட பதில் ""இல்லை. இப்போதுதானே
 விமர்சனம் எழுதி முடித்திருக்கிறேன்'' என்பது. பல புத்தக
 விமர்சனங்கள் இப்படித்தான் இப்போதும் எழுதப்படுகின்றன
 என்பதுதான் வேடிக்கை.

ஏனைய படைப்பிலக்கியவாதிகளுக்கும் தேவனுக்கும் ஒரு
 வித்தியாசம் உண்டு. அவருடைய கதாபாத்திரங்கள்
 அந்நியப்பட்டவையாக இருக்காது. நாம் சந்திக்கும், அல்லது
 நமக்கு எங்கேயோ தெரிந்த நபர்களின் சாயல் அவரது
 கதாபாத்திரங்களில் இருக்கும். சம்பவங்களும் சரி,
 யதார்த்தமாக இருக்கும்.

"கல்கி' என்கிற மிகப்பெரிய ஆளுமை அமர்ந்திருந்த
 நாற்காலியில் அமர்வது என்பது எளிதான ஒன்றல்ல. கல்கி
 விலகியதுடன் ஆனந்த விகடன் அழிந்துவிடும் என்று
 எதிர்பார்த்தவர்கள் ஏராளம். 1940-இல் கல்கி
 வெளியேறியபோது துமிலனும் அவருடன் வெளியேறினார்
 எனும்போது, இனி என்னவாகும் என்கிற பயம் ஆனந்த
 விகடன் அதிபர் ஜெமினி எஸ்.எஸ். வாசனையேகூட சற்று
 நிலைகுலைய வைத்தது என்பார்கள். அப்படிப்பட்ட சூழலில்
 ஆனந்த விகடனைத் தாங்கிப் பிடித்தவர் தேவன். விகடனின்
 பொறுப்பாசிரியராக தேவன் மட்டும் இல்லாமல்
 போயிருந்தால்...

"தேவன் வரலாறு' புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் பதிவு
 நிஜமாகவே யோசிக்க வைக்கிறது. ""தேவன் ஒரு
 காலகட்டத்தில் வெகுஜன எழுத்துக்கு முக்கியமான
 முன்னோடி. கல்கி அளவுக்கு அவருக்கும் பல திறமைகள்
 இருந்திருக்கின்றன. அவரும் கல்கியைப் போல் ஒரு
 நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்து
 தனியே ஒரு பத்திரிகை துவங்கியிருந்தால் என்ன
 ஆகியிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது'' என்பதுதான்
 சுஜாதாவின் பதிவு. அதை நானும் வழிமொழிகிறேன்.
கல்கியில் "கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தியும், ஆனந்த விகடனில்
 "தேவன்' என்கிற மகாதேவனும் ஆசிரியராக இருந்த
 காலகட்டம் தமிழ் பத்திரிகை உலகின் பொற்காலம்.

தேவனின் சகோதரி மகனான கே. விஸ்வநாதன் (அன்னம்)
 எழுதுகிறார்-- ""எனக்குத் தெரிந்து மாமாவுக்கு இருந்த
 மனக்குறை ஒன்றுதான். அவர் தனது படைப்புகளைப்
 புத்தகங்களாகக் கொண்டு வர "ஆனந்த விகடன்' நிறுவனம்
 அனுமதி மறுத்துவிட்டது. சொல்லிச் சொல்லி
 வருத்தப்படுவார். இப்போது, தேவனின் நூற்றாண்டு
 விழாவையொட்டி அவர் நினைவால் அமைந்திருக்கும்
 அறக்கட்டளை மூலம் அவரது ஆசை நிறைவேற்றப்பட்டதே
 அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்'' என்கிறார் அன்னம்.
எனக்கும் நீண்ட நாளாக ஒரு மனக்குறை இருந்தது. தேவனின்
 அத்தனை புத்தகங்களும் எனது தனி நூலகத்தில் இடம் பெற
 வேண்டும். கல்கியின் படைப்புகளை அவ்வப்போது எடுத்துப்
 படித்து மகிழ்வது போல, தேவனின் படைப்புகளையும்
 நினைத்தபோதெல்லாம் படித்து மகிழ வேண்டும் என்கிற
 அந்தக் குறை இனி தீர்ந்தது - அல்லயன்ஸ் சீனிவாசனுக்கும்,
 சாருகேசிக்கும் நன்றி!
[ நன்றி : தினமணி ] 

பின்னூட்டம்: 
தேவனின் பல படைப்புகள் இன்னும் அச்சில் வராமல்

 இருக்கின்றன. எடுத்துக் காட்டுகள்; மிஸ்டர் ராஜாமணி,

 கண்ணன் கட்டுரை, பிரபுவே!உத்தரவு, புஷ்பக விஜயம்,

 அதிசயத் தம்பதிகள், போடாத தபால்..... இவற்றை விகடன்

 பதிப்பகம் வெளியிட வேண்டுகிறேன். மேலும், தேவனின்

 நாவல்களை ராஜு, கோபுலு அவர்களின் மூல

 சித்திரங்களுடன் வெளியிட்டால் ஒரு பொற்காலத்தை

 மீண்டும் சுவைக்கலாம்.