புள்ளூர் குருபரன்
குருஜி ஏ.எஸ்.ராகவன்
வைதீஸ்வரன் கோயில் என்று சொன்ன மாத்திரத்தில் அங்கே உறைகின்ற வைத்தியநாதசுவாமியும் அவனது தேவியான தையல்நாயகியும்தான் ஞாபகம் வருவார்கள். இந்த ‘வைத்யபதி’யும் அவனது ‘ஹ்ருதய விஹாரிணி’யான பாலாம்பிகையும், ஏராளமான தமிழர்களின் குலதெய்வம்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் திருமந்திரத்தில் சொன்னதை மறந்து நாம் இரண்டையுமே போட்டு படாதபாடு படுத்திக் கொள்ளும் நேரத்தில், உடல் ரோகத்தையும் பவரோகத்தையும் (வினைப் பயன்) நீக்கி ஆட்கொள்வோர் இந்த தெய்வ தம்பதி!
அதனால்தான் அப்பர் சுவாமிகள்,
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை... என்று வைதீஸ்வரனைப் பாடுகிறார்.
உண்மையில் சிவனும் உமையும் இத்திருத்தலத்தில் வைத்தியர்களாக அமர்வதற்குக் காரணமாயிருந்தவன் அவர்களுடைய செல்லப் பிள்ளையான பால முத்துக்குமாரன்தான்!
தாரகாசுரனோடு போர் புரிந்த நேரத்தில் முருகனுடைய பூதப்படை வீரர்கள் பலர் காயமுற்றுச் செயலிழந்தனர். அவர்களைக் குணப்படுத்திக் காப்பாற்றியாகவேண்டும். அந்த ஆற்றல் முருகனுக்கே இருந்தபோதிலும் அதனை அம்மையப்பர்களின் பொறுப்பாக்கி, அவர்களே உலகம் உய்யச் செய்பவர்கள் என்று உணர்த்த விரும்பினான் முருகன். இருவரையும் வேண்டி அழைக்க, அவர்கள் வைத்தியநாதராகவும் தையல் நாயகியாகவும் வந்தமர்ந்த இடம்தான் வைதீஸ்வரன் கோயில்.
ஜடாயு என்கிற புள், ரிக் வேதம், முருகப் பெருமான் (வேள்), சூரியன் (ஊர்) ஆகிய நால்வரும் வழிபட்ட ஸ்தலம் என்பதால் இதற்குப் புள்ளிருக்குவேளூர் என்று பெயர். ‘வைதீஸ்வரன் கோயில்’ என்று ஆலயத்தின் பெயரால் ஊர் அழைக்கப்படுகிற தனிச் சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.
மிகப்பெரிய கோயில். தருமை ஆதினத்தின் மேற்பார்வையில் நாளொரு விழாவும் பொழுதொரு சிறப்பும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ராஜகோபுரங்களைத் தரிசித்து, உயர்ந்த மதில்சுவர்களைத் தாண்டி உள்ளே போனால், சிறிய கோபுரங்களுடன் உள் பிராகாரங்கள்.
ஸ்தல விருக்ஷமாக வேம்பு நிற்கிறது. வேம்படிமால் என்றழைக்கப்படுகிறது. ஆதிவைத்யநாத ஸ்வாமி இதனடியில் ஒரு மிகச் சிறு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார். சுற்றிலும் ஆதிபுராணேஸ்வரர், வீரபத்ரர், அன்னபூரணி தேவி சந்நிதிகள். தெற்குப் பாகத்தில் தையல்நாயகி சன்னிதி எதிரில் சித்தாமிர்த தீர்த்தம் இருக்கிறது. கிருதயுகத்தில் காமதேனு வைத்தியநாத பெருமாளுக்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்ய, பெருகியோடிய அந்தப் பாலே தீர்த்தமாயிற்று என்பது புராணம். கலியுகத்து சித்தர்கள் தேவாமிர்தத்தால் செய்த அபிஷேகம் இங்கு கலந்ததாகவும் நம்பிக்கை. சித்தாமிர்த தீர்த்தம் என்ற பெயர் அதனால்தான் ஏற்பட்டது!
ஈசன் முதல் பிராகாரத்தில் மேற்கு நோக்கி இருக்க, அவனை இத்தலத்துக்கு வருவித்த முருகன், ‘குமரகுருபரன்’ என்ற மிக அழகான திருப்பெயருடன் இரண்டாம் பிராகாரத்தில் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை சமேதனாக ஆறுமுகங்களிலும் அழகு துலங்க, பன்னிரு விழிகளிலும் கருணை பெருக காட்சி தருகிறான். இந்த ஆறுமுகப் பெருமானின் உத்ஸவ மூர்த்திக்குத்தான் செல்வ முத்துக்குமாரசாமி என்று பெயர்!
பூமி மெச்சிடும் பெற்றோரின் செல்வத் திருக்குமரன் என்பதால் மட்டுமா அப்பெயர்? உடலாரோக்கியமாகிற செல்வத்தையும் மன ஆரோக்கியமாகிற செல்வத்தையும் அருளவல்ல தெய்வ தம்பதியை வந்தமரச் செய்த செல்வன்.
தமிழால் அவனைத் துதித்து இந்நாட்டின் இலக்கிய ஆன்மிகச் செல்வத்தைப் பெருக்கிய அருணகிரிநாதரையும் குமர குருபரரையும் ஆட்கொண்ட அருட்செல்வன்.
இசையுலகுக்கு, இணையற்ற மாணிக்கமாக ஒரு வாக்கேயக்காரரை வழங்கி ஞானக் கடவுளாக அவர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற செல்வன். அவன் பெயரையே தாங்கிய அந்த வாக்கேயக்காரர், முத்துஸ்வாமி தீக்ஷிதர். வடமொழி கீர்த்தனைகளில் திருத்தலச் சிறப்புகளையும் மூர்த்தி சிறப்பையும் தெய்வீக ஆற்றலுடன் பதிவு செய்து, ‘குருகுஹ’ என்று தமது இஷ்டதெய்வத்தின் நாமத்தையே முத்திரையாக்கிய பக்தர்.
முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெற்றோரான ராமஸ்வாமி தீக்ஷிதர் - சுப்புலட்சுமி அம்மாள் தம்பதி, நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாதிருந்தனர். வைதீஸ்வரன்கோயில் பாலமுத்துக்குமார ஸ்வாமி சன்னதியில் மனமுருக வேண்டி, விரதமிருந்து புத்ர பாக்கியம் அடைந்தனர். அந்த முருகன் நினைவாகவே மூத்த மகனுக்கு முத்துஸ்வாமி என்று பெயரும் வைத்தனர். பிற்காலத்தில் இந்த முத்துஸ்வாமி திருத்தணி முருகன் அருளால் கீர்த்தனைகள் இயற்ற ஆரம்பித்து, முருகனை மட்டுமின்றி அனைத்து தெய்வங்களையும் பாடினார். இதே வைதீஸ்வரன் கோயில் ஈசுவரனான வைத்தியநாதன் பெயரிலும் பாலாம்பிகையின் பெயரிலும் கிருதிகள் அமைத்துள்ளார். அவற்றில் முத்துக்குமாரனையும் மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார். ‘ரூப முத்துக்குமார ஜனனி’ என்று ‘பஜரே ரேர்சித பாலாம்பிகா...’ கீர்த்தனையில் அந்த முருகனின் ரூப லாவண்யத்தை அழகாக ஞாபகப்படுத்துகிறார். குமரகுருபரனும் சரி, முத்துக்குமார சாமியும் சரி, சொல்லொணா அழகுடன் பொலிகிறார்கள்!
குமரகுருபர ஸ்வாமிகள் இந்த பால முத்துக்குமாரனுக்குப் பிள்ளைத்தமிழ் இயற்றி, கொண்டாடியிருக்கிறார். தருமை ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் இயற்றிய ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருவருட்பாகூட பிள்ளைத் தமிழைப் போலத்தான் அவனைக் கொண்டாடி அழைக்கிறது:
மதிவதன மாடவிரு காதில்நவ ரத்னமணி
மகரகுண் டலமாடநாள்
மலர்ப்புண்ட ரீகவிழி யாட அருளாட
மனமகிழ்மந்த காசமாடக்
கதிருதயம் ஆயிரம் கோடியென வேயிலகு
காருண்ய மேனியாடக்
கனவஜ்ர புயவலயம் ஆடவண் டாடக்
கடப்பமலர் மாலையாட
விதமணி இழைத்தபரி புரமாட சரணார
விந்தங்க ளாட நீள்கை
வெற்றிவே லாடமயி லாடவென் கண்முன்நீ
விளையாட ஓடிவருவாய்
முதுமறைக ளாகம முழங்கு புள்ளூரனே
முக்கட் குருக்கள் குருவே
முத்தர்குரு வேயோக சித்தர்குரு வேபால
முத்துக் குமாரகுருவே
என்று குழந்தை முருகனை விளையாட அழைக்கும் ஆடல் பருவச் செய்யுள் போலவே அமைந்திருக்கிறது.
கதிருதயமாயிரம் கோடி ஒத்த அவன் அழகு எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், அவன் உள்ளத்தின் காருண்யத்திலிருந்து அல்லவா அது பெருகுகிறது! அதனால்தான் அவன் மேனியையே ‘காருண்ய மேனி’ என்று வர்ணித்துப் பாடுகிறார் சுவாமிகள்.
கிருத்திகை, சஷ்டி தினங்கள் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக நாட்கள். அர்த்தஜாம வழிபாடு முதலில் இந்த முருகனுக்குத்தான். அதன் பிறகுதான் வைத்தியநாதருக்கு வழிபாடு நடைபெறுகிறது! பங்குனி மாத உத்ஸவத்தின்போது ஐந்தாம் நாள், செல்வ முத்துக்குமாரர் அம்மாவையும் அப்பாவையும் சென்று வழிபட்டு, ‘செண்டு’ பெறும் காட்சி மிக அழகான வைபவம்.
‘திருச்சாந்துருண்டை’ என்று இத்தலத்தில் வழங்கப்படும் பிரசாதம் 4448 வித நோய்களைக் குணப்படுத்த வல்லது என்பர். இந்தப் பிரசாதம் தயாரிக்கும் பந்ததியே விசேஷமானது. சுக்ல பக்ஷத்தில், நல்ல நாழிகை பார்த்து அங்கசந்தான தீர்த்தம் என்ற இத்தல தீர்த்தத்தில் நீராட வேண்டும். அதிலுள்ள மண்ணை எடுத்து, புதுப் பாத்திரத்தில் வைத்து, இங்கே உள்ள ஜடாயு குண்டத்திலிருந்து விபூதியையும் சித்தாமிர்த தீர்த்தத்திலிருந்து நீரையும் கலந்து பஞ்சாக்ஷர தியானம் செய்து கொண்டே பிசைய வேண்டும். அதை முத்துக்குமாரசுவாமி சந்நிதியிலுள்ள குழியம்மியிலிட்டு அரைத்து, சிறு கடுகளவு உருண்டைகளாக்கி தையல் நாயகி அம்மன் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் இம்மருந்தை சித்தாமிர்த தீர்த்தத்துடன் உண்ண வேண்டும். ஈசனும் அம்மையும் இங்கே மருத்துவர்கள் எனில், மருந்தாளர் முத்துக்குமார சுவாமிதான்! அதனால்தான் அருணகிரிநாதர் அவரை வைத்திய நாதப் பெருமாளே! என்றே பாடுகிறார்:
உரத்துறை போதத் தனியான
உனைச் சிறிதோதத் தெரியாது
மரத்துறை போலுற் றடியேனும்
மலத்திருள் மூடிக் கெடலாமோ
பரத்துறை சீலர் தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் றருள்வோனே
வரத்துறை நீதர்க் கொருசேயே
வயித்திய நாதப் பெருமாளே.
[ நன்றி: கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்: