வெள்ளி, 30 செப்டம்பர், 2016

இராய.சொக்கலிங்கம் -1

 "தமிழ்க்கடல்" இராய.சொக்கலிங்கனார்
புலவர் இரா.இராமமூர்த்திசெப்டம்பர் 30.  இராய.சொக்கலிங்கனாரின் நினைவு தினம்.


சென்னையிலிருந்து காரைக்குடிக்கு வந்த புகைவண்டியில் இருந்து பலர் இறங்கி நடந்தனர். அவர்களுள் சிலர்,காரைக்குடி கம்பன் விழாவுக்கு வந்த ஒருவர்,"இந்த ஊர்ப்பக்கம் கடல் இருக்கிறதா?" என்று, தம்முடன் வந்த புலவர் ஒருவரிடம் கேட்டார்.

"இருக்கிறதே! அதோ அங்கே வண்டியிலிருந்து இறங்கி நடக்கிறதே! என்றவர், திகைத்து நின்ற நண்பரிடம்" ஆமாம்! அவர்தாம் தமிழ்க்கடல் இராய. சொ.! காரைக்குடியைச் சேர்ந்த கடல் அவரேதாம்! என்று பதில் உரைத்தார்" என்று மூத்த பத்திரிகையாளர் விக்கிரமனால், அறிமுகப்படுத்தப்பட்ட"தமிழ்க்கடல்" சிவமணி" "சிவம்பெருக்கும் சீலர்" முதலியபட்டத்துக்குரிய இராய.சொக்கலிங்கனாரின் பெருமைகளை இக்கால இளைய தலைமுறை அறிந்துகொண்டு,பயன்பெற வேண்டும்.

செட்டிநாடு,தமிழகத்துக்கு அளித்த பெருங்கொடைகளாகிய தமிழ்ப் பெரும்புலவர்கள் சிலருள், தலையாயவர் "தமிழ்க்கடல்" இராய.சொ.

காரைக்குடிக்கு அருகிலுள்ள அமராவதிபுதூரில்,நாட்டுக்கோட்டை செட்டியார் மரபில்,1898ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி இராயப்ப செட்டியார் - அழகம்மை ஆச்சி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

இளமையில்,காரைக்குடியில் சுப்பையா என்ற ஆசிரியரிடம் அரிச்சுவடியும், ஐந்தொகைக்கணக்கும் கற்றுக் கொண்டார்.தம் தந்தையார் கடைவைத்து வாணிகம் புரிந்த பாலக்காட்டில் தம் ஒன்பதாம் வயது வரையிலும் மலையாளத்துடன், தமிழையும் கற்றார்.

பதின்மூன்றாம் வயதில் பெற்றோருடன் பர்மாவுக்குச் சென்ற அவர், அங்கு "பிலாப்பம்" என்ற ஊரில் கடையில் பணிபுரிந்து பர்மிய மொழியுடன், ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டார். தம் பதினேழாம் வயதில் காரைக்குடி திரும்பிய அவர், இருபதாம் வயது வரை பண்டித ஐயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாகக் கற்றுக்கொண்டார்.

1918ஆம் ஆண்டு பள்ளத்தூரில், உமையாள் ஆச்சி என்பவரை மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். தமக்கு மகப்பேறு வாய்க்காத போதும், இராயவரம் குழந்தையன் செட்டியாரைத் தம் மைந்தனாகவும், அவர் மகள் சீதையைத் தம் பெயர்த்தியாகவும் கருதி மகிழ்ந்தார்.

1960ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அவர் தம் மனைவியார் சிவபதம் பெற்றார். அதன்பிறகு,தாம் வாழ்ந்த அமராவதிபுதூர் வீட்டில் தனித்து வாழ விரும்பாமல் காரைக்குடி சிவன்கோயிலில் திருப்பணிகள் புரிந்தும்,சமய இலக்கிய விரிவுரைகள் ஆற்றியும் இறைச்சூழல்,தமிழ் இலக்கியம் மற்றும் நட்புச் சூழலில் மனஅமைதியை நாடினார்.

1917ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சொ.முருகப்பாவுடன் இணைந்து "காரைக்குடி இந்துமதாபிமான சங்க"த்தை உருவாக்கினார்.

மகாகவி பாரதியார், அந்த இந்துமதாபிமான சங்கத்துக்கு வந்திருந்து காலத்தால் அழியாத ஏழு கவிதைகளை இயற்றி அச்சங்கத்தைப் போற்றினார். காரைக்குடி இந்துமதாபிமான சங்கம் ஒன்றே பாரதியாரின் பாடல்பெற்ற சங்கம் ஆகும்.

இராய.சொ.,வ.உ.சிதம்பரனார்,பாரதியார்,சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர் முதலிய தேசியவாதிகளுடனும் மற்றும் பல தமிழறிஞர்களுடனும் நட்பும்,  அன்பும் பாராட்டி உறவாடினார். இந்துமதாபிமான சங்கத்தில் விவேகானந்தர் நூலகத்தை உருவாக்கி, அன்றாட உலக அரசியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் வகையில் படிப்பகம் ஒன்றையும் நிறுவினார்.

1938ஆம் ஆண்டு முதல் 1941ஆம் ஆண்டுவரை காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பதவியேற்ற இராய.சொ. நான்காக இருந்த நகரசபை ஆரம்பப்பள்ளிகளை,பதினேழு பள்ளிகளாக விரிவாக்கம் செய்தார். தெருவிளக்குகளை நீலரச விளக்குகளாக மாற்றி நகருக்கே ஒளியூட்டினார்.

நகரசபையில்,"காந்தி மாளிகை" என்ற பெயரில் நகராட்சி அலுவலகக் கட்டடம் அவர் காலத்தில் தான் உருவாகி வளர்ந்தது.

பிரபந்தங்களுள் ஒன்றான "மடல்" என்ற சிற்றிலக்கிய வடிவில், பிழைகள் மலிந்து கிடந்த "வருணகுலாத்தித்தன் மடல்",என்ற நூலைப் பிழைநீக்கித் திருத்தமுறப் பதிப்பித்து, தம் தமிழ்ப்பணியை இராய.சொ.தொடங்கினார்.

1947ஆம் ஆண்டு திருக்குறள் - காமத்துப்பால் கருத்துகளைச் சிறப்புற விளக்கி, "வள்ளுவர் தந்த இன்பம்",என்ற நூலாக வெளியிட்டார். "தேனும் - பாலும்", என்ற திருவாசக விளக்கம், "காதற்பாட்டு",என்ற அகத்திணை விளக்கம்,"திருக்காரைப்பேர் மாலை",என்ற காளையார்கோயில் திருமுறை,"இராகவன் இசைமாலை",என்ற கம்பரின் பாடல்கள்,"மீனாட்சி திருமணம்" என்ற பெயரில் பரஞ்ஜோதியார் பாடல்கள், "சீதை திருமணப்பாடல்கள்",என்ற பெயரில் கம்பரின் பாடல்கள், "ஆழ்வார் அமுது", என்ற பெயரில் 400 பாசுரங்கள், "பிள்ளைத்தமிழ்"ப் பாடல்கள், "திருமணப்பாட்டு" என்ற பெயரில் திருமண நிகழ்ச்சிகள் பற்றிய பாடல்கள்,"தெய்வப் பாமாலை" என்ற பெயரில் தெய்வங்களுடன் பாரத மாதாவையும் போற்றிய பாடல்கள்,"அங்கங்களின் பயன்" என்ற பெயரில் உடலுறுப்புகளால் இறைவழிபாடு செய்தல் குறித்த  பாட ல்கள்,"தேவாரமணி",என்ற பெயரில் மூவரின் முந்நூறு பாடல்கள், "திருப்பாவைப்பாட்டு", என்ற பெயரில் திருப்பாவை - திருவெம்பாவைப் பாடல்கள் ஆகிய தொகுப்பு நூல்களை, அவ்வப்போது உருவாக்கி வழங்கினார்.

தேசிய விடுதலைப் போரில் தாம் பெற்ற சிறைத் தண்டனையை பெரும் பரிசாகக் கருதி, காந்தியடிகளைப் பற்றிய 30 பகுதிகள் கொண்ட பாடல்களையும், தனித்தனியே பாடிய 8 பகுதிகள் கொண்ட பாடல்களையும் சேர்த்து, "காந்திய கவிதை" என்ற தாமே படைத்த தமிழ்ச் செய்யுள் நூலை வழங்கினார்.

இவற்றுடன், பல திருத்தலங்களுக்கும் பயணம் செய்ததன் பயனாக "திருத்தலப் பயணம்",என்ற உரைநடை நூலையும் இயற்றினார். இத்தலங்களுள்,ஒன்றாக காந்தியடிகள் பிறந்த "போர்பந்தர்" என்ற ஊரையும் இணைத்துப் போற்றியது இவர்தம் காந்தியப்பற்றைப் புலப்படுத்தும். எழுத்தால் மட்டுமல்லாமல் பேச்சாலும் பெரும்பணி புரிந்தவர் இராய.சொ.

நாட்டில் கம்பன் கழகங்கள் பலவற்றிலும், சமய மாநாடுகளிலும், விரிவுரையாற்றியதோடு,பட்டிமன்ற நடுவராய் விளங்கி ஆய்வு நோக்கில் தமிழ்ப்பாடல் நயங்களை நாட்டோர் மகிழக்காட்டினார். ஆயிரக்கணக்கான பாடல்களை கடல்மடை திறந்தாற்போல் மேடைகளில் கூறும் திறத்தைப்பாராட்டியே அவருக்குக் காரைக்குடி இந்துமதாபிமான சங்கம் "தமிழ்க்கடல்" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.

1930ஆம் ஆண்டில் மலேயா - 1935,1936ஆம் ஆண்டுகளில் பர்மா, மலேயா, இலங்கை, சுமத்ரா, இந்தோனேஷியா -1961ஆம் ஆண்டு பர்மா -1963 கோலாலம்பூர் ஆகிய உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சமய விரிவுரை நிகழ்த்தினார். இரங்கூன் தர்மபரிபாலன சபை "சிவமணி" என்ற பட்டத்தையும், கோலாலம்பூர் அருள்நெறித் திருக்கூட்டம் "சிவம்பெருக்கும் சீலர்" என்ற பட்டத்தையும் வழங்கின.

காரைக்குடி இந்துமதாபிமான சங்கத்தின் மேல்தளத்தில் தம் சொந்தச் செலவில் ஓர் அரங்கத்தைக் கட்டி, அதற்கு தம் மனைவியின் பெயரால்,  "உமையாள் மண்டபம்" என்ற பெயரைச்சூட்டிச் சங்கத்துக்கு வழங்கினார்.

"தனவைசிய ஊழியன்" என்ற பெயருடன் விளங்கிய பத்திரிகையின் ஆசிரியப்பணி ஏற்ற இராய.சொ. அதை "ஊழியன்" என்று பெயர்மாற்றம் செய்து காங்கிரஸ் கொள்கைவிளக்க ஏடாக்கினார். பத்திரிகை உலகின் முன்னோடிகளான வ.ரா, தி.ஜ.ர, புதுமைப்பித்தன், ஆகியோரைத் துணை ஆசிரியர்களாக்கினார். கொத்தமங்கலம் சுப்பு ஊழியனில் ஊழியம் புரிந்தார். எஸ்.எஸ்.வாசன் அந்தப் பத்திரிகையின் சென்னை விளம்பர முகவராகி பணி புரிந்தார்.

அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆராய்ச்சித்துறை கெளரவத் தலைவராகப் பணியேற்ற இராய.சொ. தாம் அரிதின் முயன்று சேகரித்த அனைத்து நூல்களையும் பல்கலைக்கழகத்துக்கே வழங்கிவிட்டார்.

கவிஞராய், இதழாசிரியராய், சொற்பொழிவாளராய், தொகுப்பாசிரியராய், நூலாசிரியராய், நினைவுக் கலைஞராய், சமுதாயத் தொண்டராய், அரசியல் போர்வீரராய் பன்முகப்பரிமாணம் கொண்ட வைரம் போன்ற இராய.சொ. நூற்றாண்டை 1998ஆம் ஆண்டு காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் கொண்டாடியது. நாடெங்கும் உள்ள கம்பன் கழகங்களும், சமய மன்றங்களும் கொண்டாடி மகிழ்ந்தன.

ஏறத்தாழ,எழுபத்தாறாண்டுகள் வாழ்ந்து,1974ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இறையடி சேர்ந்தார்.

இராய.சொ. தம்பாட்டாலும், பேச்சாலும், தொண்டாலும் தமிழ் உலகுக்கே பெருமை சேர்த்தவர்."தமிழ்க்கடல்" என்ற பட்டத்துக்கு முழுக்க முழுக்க சொந்தக்காரரான இராய.சொ.தம் நூல்களிலும், அனைவர் எண்ணங்களிலும் இன்றும் வாழ்கிறார்.

[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
இராய.சொக்கலிங்கம்

வியாழன், 29 செப்டம்பர், 2016

சி.சு.செல்லப்பா -1

சுதந்திர ( தாக ) மனிதர் சி.சு.செல்லப்பா
கலைமாமணி விக்கிரமன் 


செப்டம்பர் 29.  ‘மணிக்கொடி’ எழுத்தாளர்  சி.சு.செல்லப்பாவின் பிறந்த தினம். 
=====

எழுத்து, மொழியின் ஆத்மா. எழுத்தாளன் அதன் துடிப்பு. ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் ஓர் இலக்குண்டு. அவன் கனவுகள் எப்போதும் மக்கள் வாழ்க்கை, இலக்கியம் இவற்றைப் பற்றித்தான் இருக்கும்.

1998-ஆம் ஆண்டு வரையில் எழுத்தாளர்களுடனும் வாசகர்களுடனும் வாழ்ந்த சி.சு. செல்லப்பா மறைந்து ஒரு மகாமகம் ஆகிறது என்றாலும் அவர் இன்றும் வாழ்கிறார்.


மதுரை மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள வத்தலகுண்டு எனும் சிற்றூரில், 1912-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி பிறந்தார். ஊர் சின்னமனூர் என்பதால் சி.எஸ்.செல்லப்பா என்று தலைப்பு எழுத்துகளை ஆங்கிலத்தில் எழுதி வந்தார். அறிஞர் வ.ரா., தமிழில் எழுதுமாறு சொல்ல, அது முதல் சி.சு.செல்லப்பா என்றே எழுதலானார்.

மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். வாழ்க்கை முறைகளைக் நெறி பிசகாமல் கடைப்பிடித்து எளிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். எழுத வேண்டும் என்ற ஆர்வம் அப்போதே அவருக்குப் பிறந்துவிட்டது.


நான் சிறுகதை எழுத்தாளனாக மலர்ச்சி பெற்றதும் என் கதைகள் சுதந்திரச் சங்கு, மணிக்கொடி இதழ்களில் வெளிவரத் தொடங்கியதும் நான் ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்த நாள்களில்தான். அதனாலே நானும் திருநெல்வேலி எழுத்தாளர்களோடு சேர்ந்தவன்தான். தாமிரபரணி தண்ணீர்தான் என்னுள் இலக்கிய உணர்வையும் எழுத்தாற்றலையும் ஊட்டி வளர்த்தது என்று வல்லிக்கண்ணனிடமும் ஏ.என்.எஸ்.மணியிடமும் கூறியுள்ளார்.

 "சுதந்திரச் சங்கு' இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி' கை கொடுத்தது. அந்தக்காலச் சூழ்நிலையில் ஆரம்பகால எழுத்தாளர்களுக்குச் சற்று வித்தியாசமான எண்ணத்துடன் பார்வையுடன் எழுதுபவர்களுக்கு இடமும் ஊக்கமும் தந்த இதழ் மணிக்கொடி. மணிக்கொடியில் வெளிவந்த எழுத்துகள் எல்லாம் காலத்தால் அழியாதவை என்று சொல்ல முடியாது என்றாலும் பெருமையுடன் "நான் மணிக்கொடி எழுத்தாளன்' என்று சொல்ல வைத்தன.


பி.எஸ்.ராமையா, கு.ப.ராஜகோபாலன், சிட்டி போன்றவர்கள் "மணிக்கொடி' முத்திரையுடன் உலா வந்தார்கள். சி.சு.செல்லப்பாவும் தன்னை "மணிக்கொடி எழுத்தாளர்' என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்வார். அவர் எழுதிய "சரசாவின் பொம்மை' சி.சு.செல்லப்பாவுக்குச் சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

÷எழுத்தார்வம் கொண்டவர்களால் சும்மாயிருக்க முடியாது. பத்திரிகை அலுவலகங்களில் படையெடுத்து, தங்கள் எழுத்துகளை வெளியிடச் செய்வது அல்லது சொந்தமாகப் பத்திரிகை ஒன்று தொடங்கித் தன்னுள் மூண்ட கனலை எழுதித் தணித்துக் கொள்வது என்ற போக்குத் தவிர்க்க முடியாதது.

1937-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. பின்னர் மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1947-ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். தினமணி வெளியிட்ட "சுடரை'க் - கதிர் ஆகப் பெயர் சூட்டிய பெருமை செல்லப்பாவினுடையது என்று அந்நாளில் கூறுவார்கள். பிடிவாத குணம் உடைய சி.சு.செ. தமிழ் இலக்கணக் கட்டுப்பாட்டிலும் நம்பிக்கை இல்லாதவர், தினமணி கதிர் என்பதை "தினமணிக் கதிர்' என்று "க்' போடுவதை தொடக்கத்திலேயே ஆதரிக்கவில்லை. அந்த நாளில் அது ஒரு விவாதப் பொருள்.

ஒரு கால கட்டத்தில் லட்சக்கணக்கில் விற்பனையான வார இதழாக கதிர் திகழ்ந்தது. புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். அவருக்கு முன்பே (க.நா.சுப்பிரமணியம்) க.நா.சு. திறனாய்வுக் கலைக்கு ஒரு வடிவம் கொடுக்க முனைந்தார். க.நா.சு.வின் அணுகுமுறைக்கும் செல்லப்பாவின் அணுகுமுறைக்கும் வித்தியாசம் இருந்தது. விமர்சன எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் விமர்சனக் கலையை வளர்க்காமல் தனிப்பட்ட முறையில் போராடியதை வாசகர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.


சிறுசிறு குழுக்களாகக் கூட்டம் கூடி காரசாரமாக விவாதிக்கும் எழுத்தாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட சி.சு.செல்லப்பா, விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து' என்ற இதழைத் தொடங்கினார்.

"சோதனை' "புதிய வழித்தடம்' என்ற வார்த்தைகளை சி.சு. செல்லப்பா அடிக்கடி பயன்படுத்துவார். அவருடைய எழுத்தின் நோக்கமும் அதுதான். இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமான மாறுபட்ட கருத்துகளுக்குக் களமாக "எழுத்து' அமைவது போலவே இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனைக்கும் "எழுத்து' இடம் தரும் என்று எழுத்துவின் (எழுத்தின் என்று எழுதமாட்டார்) கொள்கையை அழுத்தம் திருத்தமாக விவரித்துள்ளார்.

விமர்சன விவாதத்திலிருந்து சி.சு.செல்லப்பா "புதுக்கவிதை' வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

க.நா.சு. "சந்திரோதயம்' இதழில் பணியாற்றிய போதுதான் அவருக்கு விமர்சன ஈடுபாடு ஏற்பட்டது. அந்த எண்ண வளர்ச்சியே "எழுத்து' இதழ். விமர்சனத்துக்கு என்று "எழுத்து' தொடங்கப்பட்டபோதிலும் புதுக்கவிதை பற்றிய கட்டுரைகளும் விமர்சனங்களும் எதிர் விமர்சனங்களும் இடம் பெறலாயின.

பலவித இன்னல்களுக்கிடையே 1970-ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை வெளிக்கொண்டுவந்த "எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பாவின் சாதனை வரலாற்றில் அழியாதது. ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து' காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. பத்திரிகையின் கொள்கையை அடிக்கடி மாற்றுவதோ, அளவை மாற்றுவதோ விலையைக் கூட்டிக் குறைப்பதோ ஓர் இளம் பத்திரிகையின் வளர்ச்சிக்குத் தடையாகும் என்பதை செல்லப்பா உணரவில்லை.

119 இதழுடன் "எழுத்து' நிறுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பெரும் இழப்பு செல்லப்பாவுக்கு ஏற்பட்டாலும் பல புதுக்கவிதைப் படைப்பாளிகள், கவிஞர்கள் தமிழுக்குக் கிடைத்தனர்.


சென்னை அக்னி அட்சர விருது, சிந்து அறக்கட்டளை விருது, இலக்கியச் சிந்தனையின் ஆதி, லட்சுமணன் நினைவுப் பரிசு, தஞ்சைப் பல்கலைக்கழகத் தமிழன்னை விருது, கோவை ஞானியின் அன்பளிப்பு, உதவிகள், நன்கொடை முதலிய எதையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

அவர் தமது முதிய வயதில், (எழுபத்தைந்துக்கு மேல் எண்பத்தைந்துக்குள்) ந.பிச்சமூர்த்தி கதையைப் பற்றிய கருத்து, பி.எஸ்.ராமையாவின் கதைக்களம்... எண்ணூறு ஆயிரம் பக்ககங்கள் கொண்ட நூலாக வெளியிட்டது மிகப்பெரும் சாதனை என்றே கூறலாம்.


[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

சி.சு.செல்லப்பா

அரங்க. சீனிவாசன்

"காந்தி காதை பாடிய கவிக்கடல்" அரங்க.சீனிவாசன்
புலவர் இரா.இராமமூர்த்திசெப்டம்பர் 29. கவிஞர் அரங்க. சீனிவாசனின் பிறந்த தினம்.


20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் தலைசிறந்த கவிஞராகத் திகழ்ந்தவர் "கவித்தென்றல்" அரங்க.சீனிவாசன். 

பர்மா நாட்டில் "பெகு" மாவட்டத்தின் "சுவண்டி" என்ற சிற்றூரில் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார்.

தந்தை அரங்கசாமி நாயுடு; தாய் மங்கம்மாள்.

மங்கம்மாள், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி இராணி படைப்பிரிவில் போர் வீராங்கனையாகத் துப்பாக்கி ஏந்திப் போரிட்டவர். 

தேசபக்தி, தெய்வபக்தி, கவிதையாற்றல் மூன்றையும் கருவிலேயே திருவாகப் பெற்றுப் பிறந்தவர் அரங்க.சீனிவாசன்.

தாய் ஏந்திய துப்பாக்கி முனையைவிட இவர் ஏந்திய பேனா முனை சாதனை பல புரிந்ததை இவருடைய வரலாறு நமக்குக் காட்டுகிறது. 

அரங்க.சீனிவாசன் பத்தாம் வயதிலேயே பற்பல கவிதைகள் எழுதினார்.

அவை "சுதேச பரிபாலினி", "பர்மா நாடு", "பால பர்மர்", "சுதந்திரன்", "ஊழியன்", என்ற இதழ்களில் வெளிவந்தன.

தம் 14ஆம் வயதில் தேசிய கீதம், சரஸ்வதி துதி முதலிய சிறு நூல்களை இயற்றினார்.

15ஆம் வயதில், வடமலை சீனிவாச மாலை, மணவாள சதகம் முதலான பல பிரபந்தங்களை இயற்றினார். 

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பழனி மாம்பழக் கவிராயரின் தலை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளின் திருவடிகளின் கீழ் அமர்ந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பல்லாண்டு பயின்றார்.

திண்டுக்கல் "தோப்புச்சாமிகள்" என்ற பி.எஸ்.இராமாநுஜ தாசரிடம் வைணவ நூல்களின் விளக்கங்களைக் கேட்டு அறிந்துகொண்டார். 

1942இல் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது பர்மாவிலிருந்து கால்நடைப் பயணமாகவே, பாரதநாடு நோக்கி வந்தார். வழியில் பற்பல இடையூறுகள் குறுக்கிட்டன. குண்டர்களின் தாக்குதலால், கெளஹாத்தி மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். 

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார். அங்கிருந்து வெளிவந்த "ஜோதி" மாத இதழிலும், திருச்சி "தொழிலரசு" இதழிலும் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 

தமிழகத்துக்கு வந்து முதன் முதலாக "சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை" என்ற நூலை இயற்றி, அரங்கேற்றிப் பரிசும் பணமும் பெற்றார். தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். 

இவர் எழுதிய "தியாக தீபம்" என்ற வரலாற்றுப் புதினத்துக்கு அணிந்துரை எழுதிய நாரண.துரைக்கண்ணன், 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி இரவில், சென்னை வானொலி நிலையத்தில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். 

"எனக்கு ஓர் ஆசை. நம்ம மகாத்மா காந்தியை வைத்து இராமாயணம் போல ஒரு காவியம் பாடினீர்களானால், வருங்காலச் சந்ததிகள் அம்மகானைப் புரிந்துகொண்டு அவர் விரும்புகிறபடி நல்ல பிரஜைகளாக விளங்குவார்கள்''

என்று மாநில முதல்வராக இருந்த ஓமந்தூரார் கேட்டுக்கொண்டார்.

கவிஞர் அரங்க.சீனிவாசன் இந்த நிகழ்ச்சியை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், 1979ஆம் ஆண்டில் அரங்க.சீனிவாசன் இயற்றிய "மனித தெய்வம் காந்தி காதை" அரங்கேறியபோது, ஓமந்தூரார் வாக்குப் பலித்தது. 


"காந்தி காதை" திருச்சிராப்பள்ளி திருக்குறள் கழகத்தின் தலைவர் ஆ.சுப்புராயலு செட்டியாரின் ஆதரவில் எழுதப்பட்டது. அந்தக் காவியத்தை எழுதுவதற்காக, கவிஞர் அரங்க.சீனிவாசனை பாரத நாடெங்கும் காந்தியடிகளின் வரலாற்றுப் பதிவு பெற்ற ஊர்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றார். 

"மனித தெய்வம் காந்தி காதை" ஐந்து காண்டங்களில், எழுபத்தேழு படலங்களையும், 5,183 பாடல்களையும் கொண்ட சிறந்த காவியம். 

மனித தெய்வம் காந்தி காதை, பாரதிய வித்யா பவனின் இராஜாஜி நினைவுப் பரிசும், பத்தாயிரம் ரூபாயும் பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்கம், கோவை இராமகிருஷ்ணா வித்யாலயம் ஆகிய நிறுவனங்கள் வழங்கிய பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிப் பட்டப் படிப்புக்கும், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புக்கும், தன்னாட்சிக் கல்லூரிகள் சிலவற்றின் பட்டப் படிப்புக்கும், காந்தி காதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் காந்தி காதைப் படலம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 

அரங்க.சீனிவாசன் இயற்றிய "காவடிச் சிந்தும், கவிஞன் வரலாறும்" என்ற ஆய்வு நூல், தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. வங்கதேசப் போரைப் பற்றிய இவரது "வங்கத்துப் பரணி" என்ற நூல், பட்டப்படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 

இவரது எழுத்துப் பணிகளைப் பாராட்டி, அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால், "அருட்கவி" என்ற விருதும், ம.பொ.சி. தலைமையில் இயங்கிய நாமக்கல் கவிஞர் நினைவுக் குழுவினரால், "கவித்தென்றல்" என்ற பட்டமும் பரிசும் கேடயமும், பொள்ளாச்சி மகாலிங்கத்திடமிருந்து பாராட்டும் பெருந்தொகையும் கேடயமும் பெற்றுள்ளார்.

வாகீச கலாநிதி கி.வா.ஜ. இவருக்குக் "கம்பன் வழிக் கவிஞர்" என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியுள்ளார். சென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றம் "கவிதைச் செம்மல்" என்ற விருதளித்துள்ளது. திருச்சி கலைப்பண்ணை "கவிக்கடல்" என்ற பட்டமும், உலகப் பல்கலைக்கழகம் "டாக்டர்" பட்டமும் அளித்து கெளரவித்துள்ளது. 

இராஜா சர் முத்தையா செட்டியார் நிறுவிய தமிழ் - சம்ஸ்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் ஆராய்ச்சி முனைவராகப் பணிபுரிந்தார். பல ஆண்டு மலர்களுக்கும், நினைவு மலர்களுக்கும், பற்பல சிறந்த தமிழ் நூல்களுக்கும் பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழக அரசு தொல்பொருள் துறையின் "வானர வீர மதுரைப் புராணம்" என்ற நூலைத் திருத்திப் பதிப்பித்தார். 

அரங்க.சீனிவாசன், "தினமணி" இதழில் பலநூறு கட்டுரைகளையும், நூல் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். "தினமணி"யில் இவர் எழுதிய "சங்க நூல் ஆராய்ச்சி"க் கட்டுரைகளை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற இவரது நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. 

சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார். தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, "தமிழ்க் கலைக் களஞ்சியம்" உருவாக ஒத்துழைத்தார். 

"தேசிய கீதம்" முதலாக "நீலிப்பேயின் நீதிக்கதைகள்" ஈறாக இவர் படைத்த நூல்கள் இருபத்தொன்பது. "மண்ணியல் சிறுதேர்" முதலாக "அண்ணாமலையார் நினைவு மலர்" ஈறாக இவர் பதிப்பித்த நூல்கள் பன்னிரண்டு.

பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது, அண்ணாமலை ரெட்டியார் கவிதைகள், கூடற் கலம்பகம் ஆகிய பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். 

இவர் இயற்றிய வைணவத் தத்துவ அடிப்படைகள், அருள் விளக்கு அரிவையர், அறிய வேண்டிய ஐம்பொருள், திருவரங்கத் திருநூல் ஆகியவை வைணவத்தில் இவருக்கிருந்த ஆழங்காற்பட்ட ஈடுபாட்டை உணர்த்தும்.

வள்ளலார்பால் கொண்ட ஈடுபாட்டை இவரது "வான்சுடர்" என்ற நூல் புலப்படுத்தும்.

ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரக்கவி ஆகிய நாற்கவியும் புனைய வல்லவர் அரங்க.சீனிவாசன். 

தீவிர தேசபக்தி, இலக்கிய ஈடுபாடு, பன்மொழி இலக்கிய நாட்டம், காந்தியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எளிமையின் திருவுருவாக, அடக்கத்தின் உறைவிடமாக அனைவரின் அன்பையும் பெற்று வாழ்ந்தவர், 1996ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி காலமானார்.[ நன்றி:- தினமணி ]

திங்கள், 26 செப்டம்பர், 2016

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 4

அமரரான கவிமணி

செப்டம்பர் 26. கவிமணியின் நினைவு தினம்.

முதலில்,

 1954-இல் அவர் மறைந்ததும் ‘விகட’னில் வந்த கட்டுரை.
====

'கவிஞர் இறந்து போய்விட்டார்; கவிஞர் வாழ்க' என்று புதிர் போடுவதுபோல் சொல்லிக்கொண்டே ஒருவர், பல்லாண்டுகளுக்கு முன் சில குழந்தைப் பாடல்களை வாசித்துக் காட்டினார். தமிழகத்தின் தெற்குக் கோடியில் நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமத்திலிருந்த ஒருவர் பாடி, ஒரு புனைபெயரில் வெளியிட்டிருந்த பாடல்கள் அவை. உடனே அங்கிருந்த ரஸிகர்கள் ஒருமுகமாக, 'உண்மைதான். கவி பாரதி மறைந்துவிட்டார்; இந்தப் புதுமைக்கவி வாழ்க' என்று வியந்து பாராட்டினார்கள். அந்தக் குக்கிராமவாசிதான் பல வருஷங்களுக்குப் பின் 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' என்று தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தமிழர் தங்கியிருக்கும் நாடுகளிலும், வட இந்தியப் பிரதேசங்களிலும் பேரும் புகழும் பெற்றவராகி, இன்று புகழுடம்பு பெற்றிருக்கிறார்.

திருவனந்தபுரம் மகாராஜா - பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்த் தலைமைப் புலவராகத் தொண்டாற்றி, 1931-ல் ஓய்வு பெற்றுத் தேசிக விநாயகம் பிள்ளை நெற்பயிரின் வளர்ப்புப் பண்ணையான நாஞ்சில் நாட்டிலே தமிழ்ப் பயிர் வளர்த்து வந்தார். சிறந்த புலமைத்திறனும், ஆராய்ச்சித் திறனும் உள்ளவர். சேரர் வரலாறு குறித்தும், பாண்டியர் வரலாறு குறித்தும் கல்வெட்டுக்களிலிருந்து பல அரிய செய்திகளைக் கண்டு பிடித்து அவர் வெளியிட்டதுண்டு. எனினும், கவிமணியாகவே இவர் பெயர் நிலைநிற்கும், சரித்திரத்தில்!

கன்னியாகுமரிக்குப் பக்கத்தி லிருந்து இவரது கவி மலர்களைத் தமிழ்த் தென்றல் நாடெங்கும் சிதறியது. இம்மலர்கள் கடல் தாண்டி இலங்கை, பர்மா, மலாய் நாடு முதலான வெளி நாடுகளிலுள்ள தமிழர் வாழ்விற்கும் மணமும், அழகும் தந்தன. பல தமிழ்ப் பத்திரிகைகளும் போட்டியிட்டு இவரை அறிமுகப்படுத்த முயன்றன. இம் முயற்சிகளில் விகடனுக்குச் சிறப் பான பங்குண்டு. 'மலரும் மாலை யும்' என்ற புத்தக வடிவில் பாடல்கள் வெளிவருவதற்கு முன்பே, 1940-ல் 'கவிமணி' என்னும் பட்டம் கிடைப்பதற்கு முன்பே, இவர் பெயர் பிரசித்தமாகிவிட்டது.


பழந்தமிழ் இலக்கியத்திற்கும் இன்றைய தமிழுக்கும் பொற்பாலமாக அமைந்திருப்பவர் கவிமணி. இவருக்குச் சாவேது? சாகாவரம் பெற்ற கவிதையிலே இவர் அமர வாழ்வு வாழ்கின்றார்; இவரது மணிவாக்கு ஒலி செய்தவண்ணமாகவே இருக்கும்.

[ நன்றி: விகடன் ]


இரண்டாவதாக,

அவர் மறைந்ததும், ”கலைமகள்” பல கட்டுரைகளை வெளியிட்டது. அப்போது வந்த ஒரு பக்கம்:[ நன்றி: கலைமகள் ] 

கடைசியாக,

’கல்கி’ எழுதிய அஞ்சலிக் கட்டுரை:

( இதை எழுதிய சில மாதங்களுக்குப் பின் டிசம்பரில்  ‘கல்கி’யே காலமாகி விடுகிறார்.)


[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள் :

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை


சங்கீத சங்கதிகள் - 92

பாபநாசம் சிவன்
அறந்தை நாராயணன்


செப்டம்பர் 26. பாபநாசம் சிவன் அவர்களின் பிறந்த நாள்.[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி: தினமணி கதிர் ]

பாகவதர் பாடுகிறார் “ அம்பா ...”
தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்
பாபநாசம் சிவன்
நட்சத்திரங்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பெரியசாமி தூரன் - 1

செம்மல் பெரியசாமி தூரனின் செந்தமிழ்ப் பணிகள்
செ. இராசு


செப்டம்பர் 26. பெரியசாமி தூரனின் பிறந்த நாள்.
====

தமிழின் அனைத்துத் துறைகளிலும் பன்முக மாட்சியுடைய பற்பல நூல்களைப் படைத்துப் பெரும்பணி செய்த அறிஞர் ம.ப. பெரியசாமித் தூரன். ஈரோடு வட்டத்தில் மொடக்குறிச்சியை அடுத்த மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் பழனிவேலப்ப கவுண்டர் - பாவாத்தாள் தம்பதியினருக்கு 1908ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26ம் நாள் பிறந்தவர் பெரியசாமி. கொங்கு சமுதாயத்தின் வரலாற்று நாயகர்களான அண்ணன்மார், பொன்னர் -  சங்கர் இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைக்கப்பட்டது.
  
இளம் வயதிலேயே தாயாரை இழந்த தூரன் செம்மாண்டம்பாளையம் பாட்டி வீட்டில் வளர்ந்தார். மொடக்குறிச்சியில் தொடக்கக்கல்வி முடித்து ஈரோடு மாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பவரை படித்தார். தமிழாசிரியர் திருமலைசாமி அய்யங்கார் பாடம் கற்பிக்கும் நேரம் அல்லாமல் மற்ற நேரமும் மாணவர்களுக்குத் தமிழ் அறிவை ஊட்டுபவர். "அவரால் எனக்குத் தமிழில் பற்றும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது," என்று கூறியுள்ளார் தூரன்.

இளவயதில் சித்தப்பா அருணாசலக்கவுண்டர் கூறிய கதைகளும், இன்னொரு உறவினர் அருணாசலக்கவுண்டர் கற்றுக் கொடுத்த இசைப்பாடல்களும் தூரனுக்குக் கதை, இசை ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது.

கணக்கில் மிகுந்த ஆர்வமுடைய தூரன் "மின்சாரம் அப்பொழுது இல்லாததால் தெருவில் உள்ள மண்ணெண்ணெய் விளக்கின் அடியில் முக்கோணமும் வட்டமும் வரைந்து கணக்குப் படித்தேன்,"என்று கூறியுள்ளார். விடுதி வசதி இல்லாததால் ஒரு கன்னடிய நாயக்கர் வீட்டில் தங்கி உணவுண்டு படித்தார். மாணவப் பருவத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் சென்று ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியோர் எழுதிய நாவல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார்.
  
மாணவப் பருவத்திலேயே பாட்டி கற்றுக் கொடுத்து அளித்த இராட்டையில் நூற்று பெரியார் தம் வீட்டில் நடத்திய கதர்க் கடையில் நூல் சிட்டங்களைக் கொடுத்து கதர் வாங்கி அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். 01.05.1939ல் காளியம்மாளை மணம் செய்து கொண்ட தூரனுக்கு;
சாரதாமணி , வசந்தா, விஜயலட்சுமி
ஆகிய பெண்மக்களும்,
சுதந்திரக்குமார் என்ற மகனும் உள்ளனர்
மருமகள் செண்பகத்திலகம்.
1926 - 27ல் சென்னை மாநிலக் கல்லூரியில்,
கணிதம், இயற்பியல், வேதியியல்
பாடம் எடுத்து இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்று 1929ல் கணிதத்தில் பி.ஏ. தேர்ச்சி பெற்று ஆசிரியப் பயிற்சியும் (எல்.டி.) பெற்றார். சென்னையில் கல்லூரிக் கல்வி கற்கும்போதே சக மாணவர்கள்
சி. சுப்பிரமணியம், நெ.து. சுந்தரவடிவேலு, ஓ.வி. அளகேசன், 
இல.கி. முத்துசாமி, கே.எம். இராமசாமி, கே.எஸ். பெரியசாமி
கே.எஸ். பழனிசாமி
ஆகியோருடன் இணைந்து "வனமலர்ச் சங்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து பாரதி பாடல்களைப் பரப்பவும், தேசியப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் "பித்தன்" என்ற மாத இதழை நடத்தத் தூரன் காரணமாக இருந்தார்.

1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபாளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியபின் போத்தனூரிலும், பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்கிய இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் சேர்ந்து ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் 1948 வரை பணியாற்றினார். அப்போது நேர்முகமாகச் சிலரிடம் இசைப்பயிற்சி பெற்றார். ஆங்கிலத்தில் வெளிவந்த "டைம்" இதழ் அமைப்பில் "காலச்சக்கரம்" என்ற இதழை பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கத்தின் தந்தையார் ப. நாச்சிமுத்துக்கவுண்டர் ஆதரவுடன் தொடங்கிப் பல்சுவை இதழாக நடத்தினார்.


அவ்விதழில் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் துணையுடன்,
காளமேகப் புலவரின் சித்திரமடல்
வடிவேல் பிள்ளையின் மோகினிவிலாச நாட்டிய நாடகம்
அவிநாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம்
சாமிநாதக் கவிஞரின் கொன்றைவேந்தன் வெண்பா
ஆகியவைகளைப் பதிப்பித்தார். அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை உடைய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "கலைக்களஞ்சிய"த்தின் ஆசிரியராக 1948ல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்தியாவிலேயே முதன்முதலாகக் கலைக்களஞ்சியம் வெளிவந்தது தமிழ்மொழியில்தான். பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார்.

கல்லூரியில் படிக்கும்போதே திரு.வி.க.வின் அறிவுரைப்படி 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் பாரதியார் எழுதிய கவிதை - கட்டுரைகளை மிக அரிதின் முயன்று தொகுத்தார். கடுமையாக முயன்று 140 தலைப்புகளில் வெளிவராத பாரதியாரின் கவிதை கட்டுரைகளைக் காலமுறைப்படி தொகுத்து "பாரதி தமிழ்" என்று வெளியிட்டார். பாரதியார் படைப்பில் இது மூன்றில் ஒரு பகுதியாகும்.

கொங்கு வேளாளரில் இவர் "தூரன்" குலம் சார்ந்தவர் ஆனதால் "தூரன்" என்று பெயரில் இணைத்துக் கொண்டார். ஆனால் தமிழில் தொலைநோக்குப் பார்வை உடையவர் என்றும் அப்பெயரைக் கருதலாம்.


இவருடைய கதைத் தொகுதிகளாக
மாவிளக்கு
உரிமைப் பெண்
காலிங்கராயன் கொடை
தங்கச்சங்கிலி, பிள்ளைவரம்
தூரன் எழுத்தோவியங்கள்
என ஆறு வந்துள்ளன. பெரும்பாலும் கொங்கு மண் மணம் கமழும்படியாகவே எழுதியுள்ளார்.

கொங்கு நாட்டு ஊர்களும், பெயர்களுமே அவற்றில் இடம் பெறும்.
தேன்சிட்டு
பூவின் சிரிப்பு
காட்டுவழிதனிலே
முதலிய கட்டுரை நூல்களில் 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவ்வளவும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்,
மதம் அவசியமா?
மெளனப் பெரும் பேச்சு
என்பன சில தலைப்புகள்,
கானகத்தின் குரல்
கடல் கடந்த நட்பு
பறவைகளைப் பார்
முதலியன மொழிபெயர்ப்பு நூல்கள். தாகூரின் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். காற்றில் வந்த கவிதை என்பது நாட்டுப்புறத் தொகுப்பாகும்.

நாடக நூல்களாகக்,
காதலும், கடமையும்
அழகு மயக்கம்
சூழ்ச்சி
மனக்குகை
ஆதிமந்தி
பொன்னியின் தியாகம்
இளந்துறவி
ஆகியவைகளை எழுதியுள்ளார். இவை நாடகமாக நடிக்கத் தகுதியானவை.

இசைப்புலமை வாய்க்கப் பெற்ற தூரன்,
கீர்த்தனை அமுதம்
இசைமணி மஞ்சரி
முருகன் அருள்மணிமாலை
நவமணி இசைமாலை
இசைமணி மாலை
கீர்த்தனை மஞ்சரி
ஆகிய இசை, கீர்த்தனை நூல்கள் இயற்றியுள்ளார். கடைசி இரண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாகும்.

தமிழகத்தின் மிகப்பெரிய இசைவாணர்கள் தூரன் பாடல்களை மேடையில் பாடியுள்ளனர். இசைக் கல்லூரிகளில் சில பாடமாக வைக்கப்பட்டுள்ளன. டைகர் வரதாச்சாரியார், கல்கி போன்றவர்கள் தூரனின் இசைப் புலமையைப் புகழ்ந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார்கள். "பச்சைக் குழந்தையெனில் எனக்கொரு பாசம் பிறக்குதம்மா," என்று குழந்தையை நேசிக்கும் தூரன் ஏழைச் சிறுவர், சிறுமியர் விளையாட்டைக் கண்முன் நிறுத்துகிறார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் "ஓடிவா கஞ்சிகுடி, மண்வெட்டப் போகணுமாம் பண்ணையார் ஏசுகிறார்," என்று ஓடுகின்றன. "துன்பத்தில் தோன்றி தொழும்பே வடிவானோர்க்கு இன்ப விளையாட்டும் இல்லையோ இவ்வுலகில்," என்று வினவுகிறார் தூரன்.

காந்தியடிகளும், பாரதியாரும் தூரனை ஈர்த்த இரு பெருமக்கள். பாரதியார் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.
  
தூரனுடைய
இளந்தமிழா
மின்னல்பூ
நிலாப்பிஞ்சு
தூரன் கவிதைகள்
பட்டிப்பறவை
ஆகிய நூல்களில் இயற்கையை நேசிக்கும் இனிய பாடல்களையும் எளிய நடையையும் எங்கும் காணலாம்.

"ஞாயிறே இருளை என்ன செய்து விட்டாய்?
 ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?'"
என்று வினவுகிறார்.

1980ம் ஆண்டு கடுமையான வாத நோயால் வாடியவர் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் தன் தமிழ்ப்பணியை, தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

கவிதைகளில் பாரதியாரின் தாக்கத்தைக் காணுகிறோம். தமிழின் அனைத்துத் துறைகளுக்கும் தூரன் செய்த பணி மிகப் பெரியது. இந்திய அரசின் "பத்மபூஷண்", தமிழக அரசின் "கலைமாமணி" விருதும் பெற்றுள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கம், குழந்தை எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு கொண்டவர்.


அறிவுத் துறைகளைத் தமிழுக்குத் தூரன் புதுமையாகப் படைத்துள்ளார். தமிழக அரசு அவருடைய நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்கியுள்ளது.


[ நன்றி: தினமணி, 2008 ]

தொடர்புள்ள பதிவு :வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பி. யு. சின்னப்பா -1

பி.யு.சின்னப்பா 
அறந்தை நாராயணன்


செப்டம்பர் 23. பி.யு.சின்னப்பாவின் நினைவு தினம். (  இது அவர் பிறந்த நூற்றாண்டு வருடம்.)


[ நன்றி: தினமணி கதிர், கல்கி,  இரா.முருகன் ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2016

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 1

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் -1
அ.ச.ஞானசம்பந்தன்


செப்டம்பர் 22. ‘வெள்ளிநாக்கு’ வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியின் பிறந்ததினம். 

தான் படிக்கும்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் இருந்த சாஸ்திரியாரைப் பற்றி அறிஞர் அ.ச.ஞா அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி :

=======

இவ்வளவு எளிமையுடன் அனைவரிடம் பழகினார் என்றால், அதனால் அவரைத் தரம்குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. மாமனிதர்கள் குழந்தைபோல் பல நேரம் எளிதாக இருப்பார்கள். ஆனால், தேவை ஏற்படும் பொழுது அவர்களுடைய உண்மையான சொரூபத்தை அறிய முடியும். 

1936 ஆம் ஆண்டுக்குரிய பட்டமளிப்பு விழா மிகக் கோலாகலமாகவும் விமரிசையாகவும் தொடங்கிற்று. அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஸர் ஆர்ச்சிபால்ட் நை பட்டமளிப்பு விழாவுக்கு வருவதாக இருந்தது. மாணவர்களாகிய நாங்கள் மாடியின்மேல் ஏறிக்கொண்டு கவர்னர் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். புரவலர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் சாலையில் நின்றுகொண்டு கவர்னர் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். நியாயமாகத் துணைவேந்தரும் அவருடன் நின்று கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், துணைவேந்தரோ, சாலையின் வடகோடியில் நின்றுகொண்டு அங்கு வரும் வண்டிகளை 
” இங்கே நிறுத்து; அங்கே நிறுத்தாதே” என்று போக்குவரத்துக் காவல் துறைப் பணியைச் செய்து கொண்டிருந்தார். ராஜா ஸர் அவர்கள் கூப்பிடவும் முடியாமல், "கவர்னர் வருகின்ற நேரத்தில் எங்கோ போய் நிற்கிறாரே”  என்ற ஆதங்கத்துடன் சாலையைத் திரும்பிப் பார்ப்பதும் துணைவேந்தரைப் பார்ப்பதுமாகத் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாகக் கவர்னர் வண்டி வந்து நின்றது. புரவலர் ராஜாஸர் வண்டிக் கதவைத் திறக்க, கவர்னர் கீழே இறங்கினார். மிக பயபக்தியுடன் புரவலர் சற்று எட்டி நின்று கொண்டிருந்தார். ஆனால், துணைவேந்தர் வந்தபாடில்லை. கவர்னர் சாலையில் நின்றுகொண்டிருந்தார். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து, துணைவேந்தர் மிகச் சாவதானமாக நடந்துவந்தார்.

கவர்னர் மிக்க பணிவுடன் வளைந்து கொடுத்து, துணைவேந்தரை வணங்கினார். துணைவேந்தர், வளைந்து வணங்கிய கவர்னரின் முதுகில் படார் என்று ஓர் அடி கொடுத்து "இளைஞனே, எவ்வாறு இருக்கிறாய்?” என்று வினவினார். புரவலர் முதல் யாவரும் Your Excellency என்று நிமிடத்திற்கு மூன்று முறை போட்டுப் பேசும் அதே கவர்னரை முதுகில் தட்டி Young fellow என்று துணைவேந்தர் அழைப்பது, மாணவர்களாகிய எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கிற்று கவர்னர், துணைவேந்தர், படி ஏறி மாடி வர, புரவலர் பின்னே வந்தார். மேடையில் மூன்றே நாற்காலிகள், ஒரு புறம் புரவலர், மறுபுறம் துணைவேந்தர், நடுவிலே கவர்னர்.  துணைவேந்தர் சுருக்கமாக வரவேற்புரை கூறினார். கவர்னர் பேச எழுந்தார். ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. திடீரென்று ஆறடி உயரமிருந்த ர் ஆர்ச்சிபால்ட் நை வளைந்து, துணைவேந்தரின் பாதங்களை, ஒரு பழக்கப்பட்ட இந்தியனைப்போல் தொட்டு வணங்கினார். துணைவேந்தர் வடமொழியில் பெரியோர்கள் சொல்லும் ஆசீர்வாதத்தை அப்படியே சொன்னார். என்ன வியப்பு! அந்த ஸ்லோகம் முடிகின்றவரை வெள்ளைக்கார கவர்னர் வளைந்து வணங்கியபடியே நின்றார். 

அதன்பிறகு, தம் பேச்சைத் தொடங்கிய கவர்னர், பேசிய முற்பகுதியின் சுருக்கம் வருமாறு:- "மகாகனம் ஐயா அவர்களே, நான் சிறுவனாக இருக்கும்பொழுது என் தந்தையாரைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தீர்கள். அப்பொழுது என் தந்தையார் தங்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார் என் வலக் காதைத் திருகிய நீங்கள் இளைஞனே நீ நன்கு படித்து, இந்தியாவில் ஒரு மாகாணக் கவர்னராக வர வேண்டும்”  என்று என்னை ஆசீர்வதித்தீர்கள். உங்களுடைய ஆசீர்வாதம் பொய்யாகாமல், உங்களுடைய மாகாணத்திற்கே கவர்னராக வந்துவிட்டேன். மறுபடியும் என்னை ஆசீர்வதியுங்கள்என்று தம் முன்னுரையை முடித்துவிட்டுப் பிறகுதான், "ராஜா ஸர் செட்டியாரவர்களே, துணைவேந்தர் அவர்களே!” என்று விளித்துப் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கினார்.

வெள்ளைக்காரன் என்றால், அவர்கள் தெய்வப் பிறவிகள்; வெள்ளைக்கார கவர்னர் என்றால், அவர்கள் உலாவரும் தெய்வம் என்று கருதி வழிபாடு செய்யப்பட்ட அந்தக் காலத்தில் வெள்ளைக்கார கவர்னரை முதுகில் தட்டி இளைஞனே, எவ்வாறு இருக்கிறாய்?” என்று கேட்ட ஒரு தமிழர் உண்டு என்றால், அவர்தான் மகாகனம் சீனிவாஸ சாஸ்திரியார் என்ற மாமனிதர்.


65 ஆண்டுகள் ஆகியும் இந்தக் காட்சி என் மனத்தை விட்டு மறையவே இல்லை. ஆம், மகாகனம் சாஸ்திரியார் அவர்கள் ஓர் மாமனிதர் என்பதில் ஐயமே இல்லை. இத்தனைக்கும் அவர் ஒரு காங்கிரஸ்காரர்கூட அல்ல. அப்படியிருந்தும், இந்த மாமனிதர்கள் தேவை ஏற்படும்போது விஸ்வரூபம் எடுத்துக் காட்சி தருகின்றனர். 

[ நன்றி: “நான் கண்ட பெரியார்கள்” அ.ச.ஞா ] 

தொடர்புள்ள பதிவுகள் :

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

டி. ஆர். ராஜகுமாரி - 1

டி.ஆர்.ராஜகுமாரி 
அறந்தை நாராயணன்செப்டம்பர் 20.  டி.ஆர். ராஜகுமாரியின் நினைவு தினம்.

சென்னையில்  மாம்பலத்தில் வசித்த பல நடிகர்கள், நடிகையருள் இவரும் ஒருவர். இவர் வீட்டு மாடியிலிருந்து  ( ஹபிபுல்லா ரோட்?)  மாஞ்சா போட்ட  அழகான பட்டங்கள்  பறக்கப்  படுவதும் , அவற்றை ’அறுக்க’ நண்பர் பட்டாளம் ‘பதில்’ பட்டங்களைப் பறக்க விட்டதும் நினைவுக்கு வருகிறது !

பாண்டி பஜாரில்  அவர் கட்டிய  ‘ராஜகுமாரி’ தியேட்டரில் நாங்கள் பார்த்த தமிழ், ஆங்கிலப் படங்கள் ஏராளம்!   பல வருடங்களுக்கு அந்த பஸ் ஸ்டாண்ட் ‘ ராஜகுமாரி பஸ் ஸ்டாண்ட்’ என்றுதான் அழைக்கப்பட்டது!


[ நன்றி: தினமணி கதிர் ]
தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2016

கே.பி. சுந்தராம்பாள் -1

தமிழின் முதல் லட்சம் ரூபாய் கலைஞர் 
அறந்தை நாராயணன் 


செப்டம்பர் 19. ‘கொடுமுடி கோகிலம்’ கே.பி.சுந்தராம்பாளின் நினைவு தினம். 

' கல்கி' அட்டைப்பட விளக்கம் கீழே.  
எனக்குத் தெரிந்தவரை, 'கல்கி' இதற்குப் பின் தான் மற்ற பாடகர்களையோ, நட்சத்திரங்களையோ தன் அட்டைப்படத்தில் போடத் தொடங்கியது. 


[ நன்றி : தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

பரலி சு.நெல்லையப்பர் -1

பாரதி புகழ் பரப்பிய பரலி சு.நெல்லையப்பர்செப்டம்பர் 18. பரலி சு.நெல்லையப்பரின் பிறந்த தினம்.

50/60-களில் பாரதி சங்கக் கூட்டங்கள் பல சென்னையில், தி.நகரில்  வாணி மகாலில் நடைபெறும்.அப்போது பல முறைகள் அவரைப் பார்த்திருக்கிறேன். இதோ தினமணியில் வந்த ஒரு கட்டுரை:
=========

ஆனந்தவிகடன்' உரிமையாளர் எஸ்.எஸ்.வாசனிடம் "கல்கி' கிருஷ்ணமூர்த்தியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பரலி சு.நெல்லையப்பர். இல்லாவிட்டால், ஒருவேளை "கல்கி'யின் பெருமை தமிழ்நாட்டுக்குத் தெரியாமலே போயிருக்கலாம்.

ஏராளமான புலவர்களைப் பெற்றெடுத்த பொருநை வளம் சேர்க்கும் மண்ணில், திருநெல்வேலிக்கு அருகே பரலிக்கோட்டை என்ற சிற்றூரில், சுப்பிரமணியம் பிள்ளை-முத்துவடிவு அம்மையாருக்கு 1889-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி பிறந்தார்.

பாரதியாரால் "தம்பி' என்றழைக்கப்பட்ட பரலி சு.நெல்லையப்பரின் பெருமை பரவலாகத் தெரிந்திராத நாள்கள்.÷உரிமையுடன் பாரதி, "தம்பி' என்று பரலி சு.நெல்லையப்பரை அழைத்ததுபோல் மற்றும் யாரையாவது அழைத்திருக்கிறாரா என்று தெரியாது.

1908-ஆம் ஆண்டு கப்லோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கப்பல் கம்பெனியில் பரலி சு.நெல்லையப்பர் குமாஸ்தா வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் சிதம்பரனாரைச் சந்திக்க பாரதியார் அவர் வீட்டுக்கு வந்தபோதுதான் முதன்முதலில் பரலி சு.நெல்லையப்பர், பாரதியாரைச் சந்தித்தார்.

""ஓய்! நம்மோடு வாரும்'' என்றவாறு பாரதியார், இளைஞர் நெல்லையப்பர் கரத்தைப் பற்றி வெளியே அழைத்துக்கொண்டு சென்றார். தன்னை உரிமையுடன் கரம் பற்றி அழைத்துச் சென்றவர் பாரதியார் என்று அப்போது நெல்லையப்பருக்குத் தெரியாது. பிறகு பாரதியார் தங்கியிருந்த அறையில், கிருஷ்ணசாமி அய்யரின் உதவியுடன் அச்சிடப்பட்டிருந்த பாரதியாரின் சுதேச கீதங்களைப் படித்த பிறகே, தன்னை அழைத்துச் சென்றவர் சுப்பிரமணிய பாரதியார் என்பதறிந்தார். கப்பல் கம்பெனிப் பணிகளில் மூழ்கியதால் பாரதியாரைப் பற்றி நெல்லையப்பருக்கு  நினைக்க நேரமில்லை. பிறகு அவரைச் சில காலம் கழித்தே சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

பரலி சு.நெல்லையப்பரைப் பற்றி தமிழ் மக்கள் அறிய வாய்ப்பு இல்லாதபோது, நீலகண்ட பிரம்மசாரியைப் பற்றி எவ்வாறு அறியமுடியும்! புதுவையில் பாரதியின் குழுவில் இருந்த பல மேதைகளுள் நீலகண்டரும் ஒருவர். திருநெல்வேலி ஆஷ் துரை வழக்கில் சம்பந்தப்பட்ட நீலகண்டரை - நீலகண்ட பிரம்மசாரி என்று அழைப்பார்கள். சென்னையில், நெல்லையப்பர் தற்செயலாக அவரைச் சந்தித்தார். சிதம்பரனாருக்கு அரசு அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் கொடும் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு இளைஞர் நெல்லையப்பர் அடுத்து என்ன செய்வது என்று திகைத்தார். தூத்துக்குடியிலேயே நீலகண்டரை அறிவார்.

அவரைச் சந்தித்த அந்த நேரம் நெல்லையப்பர் வாழ்க்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

புதுச்சேரி பத்திரிகைத் தொழிலில் தான் ஈடுபட்டிருப்பதாகவும், விரும்பினால் அவருக்கும் பத்திரிகையில் வேலை கிடைக்கும் என்றும், "உடனே என்னுடன் புறப்படலாம்' என்றும் நீலகண்டர் தெரிவித்தார்.

மகாகவி பாரதியின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தவர் பரலி சு.நெல்லையப்பர். நீலகண்ட பிரம்மசாரியுடன் புதுவை சென்ற நெல்லையப்பர், பாரதியாரைச் சந்தித்தார். தூத்துக்குடியில் சந்தித்த பிறகு இரண்டாவது முறையாக இப்போதுதான் சந்திக்கிறார். ஆனால், இம்முறைதான் பரலி நெல்லையப்பர், பாரதியாரை முழுமையாக அறிந்தார். அதற்கு வழி வகுத்த நீலகண்டரை நாம் மிகவும் பாராட்ட வேண்டும்.

பாரதியார் ஆசிரியராக இருந்த "விஜயா' என்ற நாளிதழிலும் "சூரியோதயம்' என்ற வார இதழிலும் பாரதியாருக்கு உதவியாக - துணையாசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு நெல்லையப்பருக்குக் கிடைத்தது. இதழிகளின் துணை ஆசிரியராகத் தொண்டாற்றும் வாய்ப்பைவிட, புதுவையில் பல மேதைகளை அறிமுகப்படுத்தி கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.

இளைஞர் நெல்லையப்பரின் சுறுசுறுப்பு, அழகிய கையெழுத்து, அச்சுக் கோர்த்தவற்றைப் பிழையறப் பார்க்கும் திறமை போன்றவை பாரதியாரை மிகவும் கவர்ந்தன. அதற்கு முன்பே, விடுதலை வேள்வியில் நம்பிக்கையுடன் தொண்டாற்றக்கூடிய "நம்பிக்கைக்குரிய வீரர் இந்த இளைஞர்' என்று முடிவும் செய்துவிட்டார் பாரதியார்.

புதுவையில் இருக்கும்போதுதான் பாரதியார் பல புதிய இலக்கியங்களைப் படைத்தார். பாஞ்சாலி சபதத்தின் முதல் பகுதி புதுச்சேரியில்தான் வெளியாயிற்று; பாரதியார் தம் புதிய படைப்புகளை நெருங்கிய நண்பர்களுக்குப் படித்துக் காட்டுவது வழக்கம். குறிப்பாக பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பகுதியைத் தனக்குப் படித்துக் காட்டினார் என்ற விவரங்களையும் பரலியாரின் நூல் மூலம் அறியமுடிகிறது.

பாரதியாரின் நூல்கள் அச்சாகும்போது அதன் அச்சுப்பிழையைத் திருத்தும் பணியைப் பரலி சு.நெல்லையப்பரே செய்துவந்தார்.

சென்னையில் பல இடங்களில் வேலைக்கு முயன்ற நெல்லையப்பர், இறுதியில் "லோகோபகாரி' பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். லோகோபகாரி இதழில் சேர்ந்தவுடனே புதுவையில் இருந்த பாரதியாருடன் தொடர்பு கொண்டார். அப்போது சுதேசமித்திரன் பத்திரிகைக்கு மட்டுமே, பாரதியார் கட்டுரைகள் எழுதிவந்தார். நெல்லையப்பரின் வேண்டுகோளின்படி லோகோபகாரி இதழுக்கும் பாரதியார் எழுதத் தொடங்கினார்.

பெரும்பாலும் பாரதியாரைப் பற்றிய உரையாடல் நடைபெறும். "பாரதி' என்றொரு இதழில், (பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நடத்தியது) பிற்காலத்தில் பணியாற்றியபோது பாரதியாரின் புகழ்பெற்ற கவிதைகளான "செந்தமிழ் நாடெனும் போதினிலே', "பாருக்குள்ளே நல்ல நாடு', "பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார்' போன்ற புகழார்ந்த கவிதைகளை, தான் "பாரதி' இதழில் வெளியிட்டதையும் பெருமையாகக் கூறுவார் பரலியார்.

பிற்காலத்தில், நெல்லையப்பரைத் தன் குருவாக மதித்துப் பழகிய எதிரொலி விசுவநாதன் என்ற இளைஞர் (அப்போது) நெல்லையப்பர் கூறிய பல செய்திகளை "பாரதியின் தம்பி' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் ஒன்றுதான் பரலி சு.நெல்லையப்பரின் பாரதி தொண்டையும், பாரதியார் பாடல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்டதையும் தெளிவாகக் கூறுகிறது. அவர் அருமை பெருமை தெரிந்த பலருள் இளைஞர் எதிரொலி விசுவநாதனும் ஒருவர்.

புதுவையிலிருந்து பாரதியார் அனுப்பும் பாடல்களை நூல் வடிவில் அச்சிட எந்த அச்சகமும் அந்தக் காலத்தில் துணியவில்லை. ஆங்கில அரசாங்க அடக்கு முறைக்கு அஞ்சினர். "இந்தியா' என்ற அச்சுக் கூடத்தின் உரிமையாளர் சீனுவாச அய்யங்கார் அச்சிட்டுக் கொடுக்க முன்வந்த செய்தியை நெல்லையப்பர் கூறி, "இங்கே அருகிலுள்ள அரண்மனைக்காரன் தெருவில்தான் அந்த அச்சுக்கூடம் இருந்தது' என்றும் தெரிவித்தார்.

1917-ஆம் ஆண்டில், பாரதியின் "கண்ணன் பாட்டு'

பரலியார் எழுதிய முகவுரையுடன் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன.  

திரு.வி.க, வ.வே.சு. ஐயர் இவர்களுக்குப் பிறகு 1919-இல் நெல்லையப்பர், "தேசபக்தன்' இதழில் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றினார். அந்தக் குறுகிய காலத்தில் கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.

எந்தப் பத்திரிகையில் பணியாற்றச் சென்றாலும் பாரதியார் பாடல்களை வெளியிடவும் அச்சிடவும் மறுப்பதில்லை நெல்லையப்பர். 1919-இல் தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்றார். தேசபக்தன் மூலமாக பாரதியார் பாடல்களை அச்சிட்டு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். அதனால், தமிழ் நாடெங்கும் பாரதியார் பாடல்கள் பரவின. தமிழர்களிடையே தேசிய உணர்வு மீண்டும் பொங்கலாயிற்று.

பரலி சு.நெல்லையப்பர், தன் குருநாதரைப் போலவே வளமாக வாழ்க்கையை நடத்தவில்லை.

தூத்துக்குடியிலும், புதுவையிலும், சென்னையிலுமாக பாரதியார் பணி, பத்திரிகைப் பணி, பாரதியார் நூல்களை வெளியிடும் பணி என்றே தன் முழு உழைப்பையும் இரவு பகல் பாராமல் நல்கியதால், திருமண நினைவே வராமல், பிரம்பசாரியாகவே காலத்தைக் கழித்தார்.

இறுதி நாள்களில் பொது வாழ்க்கையில் பின்னடையவில்லை. பாரதியார் சங்கம், சைதாப்பேட்டை பாரதி கலைக்கழகம், தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என்று தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அவர்களிடையே பேசுவதும், இளைஞர்களை உற்சாகப்படுத்துவமாக சுறுசுறுப்பாக இருந்தார்.காந்தி மகானிடமும் மிகுந்த பக்தி கொண்ட நெல்லையப்பர், 1941-இல் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். 1908-லும் ஒருமுறை சிறை சென்றிருக்கிறார். பலாத்காரக் கொள்கையில் இளவயதில் ஈடுபாடு கொண்ட பரலியாரை அகிம்சாவாதியாக மாற்றியவர் பாரதியே!

பாரதியின் உயர் நண்பர்கள் என்ற பட்டியலில் - கம்பருக்குச் சடையப்ப வள்ளல் போல முதலில் இடம் பெறும் சிறந்த பத்திரிகையாளரான பரலி சு.நெல்லையப்பர், 1991-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். மகாகவியின் பெயருள்ள வரை பரலி சு.நெல்லையப்பர் பெயரும் நிலைத்து நிற்கும்.
[ நன்றி, தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்: