வியாழன், 29 செப்டம்பர், 2016

சி.சு.செல்லப்பா -1

சுதந்திர ( தாக ) மனிதர் சி.சு.செல்லப்பா
கலைமாமணி விக்கிரமன் 


செப்டம்பர் 29.  ‘மணிக்கொடி’ எழுத்தாளர்  சி.சு.செல்லப்பாவின் பிறந்த தினம். 
=====

எழுத்து, மொழியின் ஆத்மா. எழுத்தாளன் அதன் துடிப்பு. ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் ஓர் இலக்குண்டு. அவன் கனவுகள் எப்போதும் மக்கள் வாழ்க்கை, இலக்கியம் இவற்றைப் பற்றித்தான் இருக்கும்.

1998-ஆம் ஆண்டு வரையில் எழுத்தாளர்களுடனும் வாசகர்களுடனும் வாழ்ந்த சி.சு. செல்லப்பா மறைந்து ஒரு மகாமகம் ஆகிறது என்றாலும் அவர் இன்றும் வாழ்கிறார்.


மதுரை மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள வத்தலகுண்டு எனும் சிற்றூரில், 1912-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி பிறந்தார். ஊர் சின்னமனூர் என்பதால் சி.எஸ்.செல்லப்பா என்று தலைப்பு எழுத்துகளை ஆங்கிலத்தில் எழுதி வந்தார். அறிஞர் வ.ரா., தமிழில் எழுதுமாறு சொல்ல, அது முதல் சி.சு.செல்லப்பா என்றே எழுதலானார்.

மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். வாழ்க்கை முறைகளைக் நெறி பிசகாமல் கடைப்பிடித்து எளிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். எழுத வேண்டும் என்ற ஆர்வம் அப்போதே அவருக்குப் பிறந்துவிட்டது.


நான் சிறுகதை எழுத்தாளனாக மலர்ச்சி பெற்றதும் என் கதைகள் சுதந்திரச் சங்கு, மணிக்கொடி இதழ்களில் வெளிவரத் தொடங்கியதும் நான் ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்த நாள்களில்தான். அதனாலே நானும் திருநெல்வேலி எழுத்தாளர்களோடு சேர்ந்தவன்தான். தாமிரபரணி தண்ணீர்தான் என்னுள் இலக்கிய உணர்வையும் எழுத்தாற்றலையும் ஊட்டி வளர்த்தது என்று வல்லிக்கண்ணனிடமும் ஏ.என்.எஸ்.மணியிடமும் கூறியுள்ளார்.

 "சுதந்திரச் சங்கு' இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி' கை கொடுத்தது. அந்தக்காலச் சூழ்நிலையில் ஆரம்பகால எழுத்தாளர்களுக்குச் சற்று வித்தியாசமான எண்ணத்துடன் பார்வையுடன் எழுதுபவர்களுக்கு இடமும் ஊக்கமும் தந்த இதழ் மணிக்கொடி. மணிக்கொடியில் வெளிவந்த எழுத்துகள் எல்லாம் காலத்தால் அழியாதவை என்று சொல்ல முடியாது என்றாலும் பெருமையுடன் "நான் மணிக்கொடி எழுத்தாளன்' என்று சொல்ல வைத்தன.


பி.எஸ்.ராமையா, கு.ப.ராஜகோபாலன், சிட்டி போன்றவர்கள் "மணிக்கொடி' முத்திரையுடன் உலா வந்தார்கள். சி.சு.செல்லப்பாவும் தன்னை "மணிக்கொடி எழுத்தாளர்' என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்வார். அவர் எழுதிய "சரசாவின் பொம்மை' சி.சு.செல்லப்பாவுக்குச் சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

÷எழுத்தார்வம் கொண்டவர்களால் சும்மாயிருக்க முடியாது. பத்திரிகை அலுவலகங்களில் படையெடுத்து, தங்கள் எழுத்துகளை வெளியிடச் செய்வது அல்லது சொந்தமாகப் பத்திரிகை ஒன்று தொடங்கித் தன்னுள் மூண்ட கனலை எழுதித் தணித்துக் கொள்வது என்ற போக்குத் தவிர்க்க முடியாதது.

1937-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. பின்னர் மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1947-ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். தினமணி வெளியிட்ட "சுடரை'க் - கதிர் ஆகப் பெயர் சூட்டிய பெருமை செல்லப்பாவினுடையது என்று அந்நாளில் கூறுவார்கள். பிடிவாத குணம் உடைய சி.சு.செ. தமிழ் இலக்கணக் கட்டுப்பாட்டிலும் நம்பிக்கை இல்லாதவர், தினமணி கதிர் என்பதை "தினமணிக் கதிர்' என்று "க்' போடுவதை தொடக்கத்திலேயே ஆதரிக்கவில்லை. அந்த நாளில் அது ஒரு விவாதப் பொருள்.

ஒரு கால கட்டத்தில் லட்சக்கணக்கில் விற்பனையான வார இதழாக கதிர் திகழ்ந்தது. புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். அவருக்கு முன்பே (க.நா.சுப்பிரமணியம்) க.நா.சு. திறனாய்வுக் கலைக்கு ஒரு வடிவம் கொடுக்க முனைந்தார். க.நா.சு.வின் அணுகுமுறைக்கும் செல்லப்பாவின் அணுகுமுறைக்கும் வித்தியாசம் இருந்தது. விமர்சன எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் விமர்சனக் கலையை வளர்க்காமல் தனிப்பட்ட முறையில் போராடியதை வாசகர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.


சிறுசிறு குழுக்களாகக் கூட்டம் கூடி காரசாரமாக விவாதிக்கும் எழுத்தாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட சி.சு.செல்லப்பா, விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து' என்ற இதழைத் தொடங்கினார்.

"சோதனை' "புதிய வழித்தடம்' என்ற வார்த்தைகளை சி.சு. செல்லப்பா அடிக்கடி பயன்படுத்துவார். அவருடைய எழுத்தின் நோக்கமும் அதுதான். இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமான மாறுபட்ட கருத்துகளுக்குக் களமாக "எழுத்து' அமைவது போலவே இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனைக்கும் "எழுத்து' இடம் தரும் என்று எழுத்துவின் (எழுத்தின் என்று எழுதமாட்டார்) கொள்கையை அழுத்தம் திருத்தமாக விவரித்துள்ளார்.

விமர்சன விவாதத்திலிருந்து சி.சு.செல்லப்பா "புதுக்கவிதை' வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

க.நா.சு. "சந்திரோதயம்' இதழில் பணியாற்றிய போதுதான் அவருக்கு விமர்சன ஈடுபாடு ஏற்பட்டது. அந்த எண்ண வளர்ச்சியே "எழுத்து' இதழ். விமர்சனத்துக்கு என்று "எழுத்து' தொடங்கப்பட்டபோதிலும் புதுக்கவிதை பற்றிய கட்டுரைகளும் விமர்சனங்களும் எதிர் விமர்சனங்களும் இடம் பெறலாயின.

பலவித இன்னல்களுக்கிடையே 1970-ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை வெளிக்கொண்டுவந்த "எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பாவின் சாதனை வரலாற்றில் அழியாதது. ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து' காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. பத்திரிகையின் கொள்கையை அடிக்கடி மாற்றுவதோ, அளவை மாற்றுவதோ விலையைக் கூட்டிக் குறைப்பதோ ஓர் இளம் பத்திரிகையின் வளர்ச்சிக்குத் தடையாகும் என்பதை செல்லப்பா உணரவில்லை.

119 இதழுடன் "எழுத்து' நிறுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பெரும் இழப்பு செல்லப்பாவுக்கு ஏற்பட்டாலும் பல புதுக்கவிதைப் படைப்பாளிகள், கவிஞர்கள் தமிழுக்குக் கிடைத்தனர்.


சென்னை அக்னி அட்சர விருது, சிந்து அறக்கட்டளை விருது, இலக்கியச் சிந்தனையின் ஆதி, லட்சுமணன் நினைவுப் பரிசு, தஞ்சைப் பல்கலைக்கழகத் தமிழன்னை விருது, கோவை ஞானியின் அன்பளிப்பு, உதவிகள், நன்கொடை முதலிய எதையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

அவர் தமது முதிய வயதில், (எழுபத்தைந்துக்கு மேல் எண்பத்தைந்துக்குள்) ந.பிச்சமூர்த்தி கதையைப் பற்றிய கருத்து, பி.எஸ்.ராமையாவின் கதைக்களம்... எண்ணூறு ஆயிரம் பக்ககங்கள் கொண்ட நூலாக வெளியிட்டது மிகப்பெரும் சாதனை என்றே கூறலாம்.


[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

சி.சு.செல்லப்பா

கருத்துகள் இல்லை: