செவ்வாய், 13 செப்டம்பர், 2016

ஆர்.சூடாமணி -1

நின்று எரியும் விளக்கு ஆர்.சூடாமணி!
சு.இரமேஷ் 


செப்டம்பர் 13. எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நினைவு தினம்.

அவரைப்பற்றித் தினமணியில் 2012 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
===========

சமூக முன்னேற்றத்தைத் தம் எழுத்தில் அடி நாதமாக வைத்திருந்தவர்; தன் எழுத்தின் பயன் சமூக சீர்திருத்தத்துக்கு சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர். அவர் விருப்பப்படி அவரின் மறைவுக்குப் பிறகு பல கோடி மதிப்புள்ள சொத்து இராமகிருஷ்ண மடத்துக்கே எழுதி வைக்கப்பட்டது. இத்தகு சிறப்பு மிகுந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி 1931-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராகவன், சென்னை மாநில தலைமைச் செயலராக இருந்தார். தாய் கனகவல்லி  சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவர். பின்னாள்களில் சூடாமணி தன்னை ஓர் ஓவியராக நிலைநிறுத்திக் கொள்ள அவருடைய தாயும் காரணமாக இருந்திருக்கிறார். சூடாமணியோடு பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன்.

எல்லாக் குழந்தைகளையும் போல ஆரோக்கியமாக வளர்ந்த சூடாமணிக்கு, ஐந்தாம் வயதில் அம்மை நோய் தாக்கியது. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு மரணத்துக்கு மிக அருகில் சென்று மீண்டு வந்தார். ஆனாலும் அம்மை நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. இவரின் இயல்பான உடல் வளர்ச்சி தடைபட்டது. வளர்ச்சி குறைவான குழந்தையாகவே வளர்ந்தார். இதன் காரணமாக இவருடைய தந்தை இவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. தன்னுடைய அருமை மகளுக்குப் பாடம் சொல்லித்தர ஆசிரியரை வீட்டுக்கே வரவைத்தார். கற்பதில் ஆர்வம் மிகுந்த சூடாமணி, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்று விளங்கினார். சூடாமணியின் வாசிப்புத்தளம் விரிவடைந்தது. புத்தகங்களுக்குத் தன்னை அடிமையாக்கிக்கொண்டார்.

சூடாமணி 1954 முதல் எழுதினாலும், இவரது முதல் சிறுகதை "காவேரி' என்னும் பெயரில் 1957-ஆம் ஆண்டு கலைமகளில் வெளியாகி பாராட்டைப் பெற்றது. இக்கதைக்காக இவருக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு வெளிவந்த "மனதுக்கு இனியவள்' என்னும் நாவல் இவரை அனைவரும் அறியும்படி செய்தது. இந்நாவல் சூடாமணியின் வாழ்க்கையை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. தன் வரலாற்றுச் சாயல் கொண்டது. உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இந்நாவலுக்கு  சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது.

சூடாமணி, விவேகானந்தர் மீது அளவற்ற அன்பும் காந்தியத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவராக இருந்தார். எளிமையான வெண்மைநிற ஆடைகளை அணிவதையே விரும்பினார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். பெண் எழுத்தாளர் பலரை உருவாக்கிய கலைமகள் இதழ்தான் இவரையும் உருவாக்கியது. அதனால், "கலைமகள் எழுத்தாளர்' என்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தமிழைத் தவிர ஆங்கிலத்திலும் "சூடாமணி ராகவன்' என்ற பெயரில் புனைகதைகளை எழுதியுள்ளார். இவருடைய நாவலொன்று "யாமினி' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சிரத்தையான எழுத்துக்கும் வெகுஜன எழுத்துக்குமிடையே உள்ள இடைவெளியை நிரப்பியவர் சூடாமணி' என்று விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டவர். தமிழில் பெண்ணியமும் அதுசார்ந்த கோட்பாடுகளும் உருவாவதற்கு மறைமுகமாகக் களம் அமைத்துக் கொடுத்தவர் என்பதை அவரது படைப்புகளை வாசித்தவர்கள் நன்கறிவார்கள். ஆனாலும் தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர்.

சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. மனிதனின் ஆழ்மனச் சிக்கலை உளவியல் பூர்வமாக ஆராய்பவை. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அதன் குறைகளோடு ஏற்றுக்கொண்ட சூடாமணி தன் எழுத்தின் வழியே அன்பை விதைத்தவர்உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்தவர்; "உளவியல் எழுத்தாளர்' என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

ஒளியின் முன், என்ன மாயமோ, பணம் பறித்த செல்வம், அவன் வடிவம், படிகள், உடன் பிறப்பு, அந்த நேரம், ஓர் இந்தியன் இறக்கிறான், உலகத்திடம் என்ன பயம், சூடாமணி கதைகள் போன்றவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இவை தவிர, விடிவை நோக்கி, ஆழ்கடல், சோதனையின் முடிவு, வாழ்த்துவோம், உள்ளக்கடல், இரவுச்சுடர், முக்கோணம் போன்ற குறுநாவல்களும் புன்னகைப் பூங்கொத்து, நீயே என் உலகம், தீயினில் தூசு, தந்தை வடிவம், மானிட அம்சம், கண்ணம்மா என் சகோதரி போன்ற நாவல்களும் எழுதியுள்ளார். தற்போது "நாகலிங்க மரம்' என்ற பெயரில் இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு வெளியாகியுள்ளது.  புனைகதைகள் தவிர்த்து நாடகங்கள் எழுதுவதிலும் சூடாமணி ஈடுபாடு கொண்டிருந்தார். இருவர் கண்டனர், அருணோதயம், அருமை மகள் ஆகியவை நாடகத் தமிழுக்கு சூடாமணியின் பங்களிப்பு. இவரின் சிறுகதைகள் சின்னத்திரை வடிவம் பெற்றன. "காவலை மீறி' என்னும் குறுநாவல் பி. லெனின் இயக்கத்தில் தொலைக்காட்சியில் வெளியானதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்!

பரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இவருக்கு இலக்கியச் சிந்தனை பரிசை பலமுறை இவரது கதைகள் பெற்றுத்தந்தன. இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. மும்பை தமிழ்ச் சங்க விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சூடாமணிக்கு 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக் காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்புச் செய்தது. 

இத் தொகையைக்கூட பல்வேறு சேவை அமைப்புகளுக்குப் பகிர்ந்தளித்து மனநிறைவடைந்தார் சூடாமணி. தவிர, 2001-இல் வெளியான "ஆர்.சூடாமணி கதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு வழங்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி சூடாமணி காலமானார்.


அவர் தன் வாழ்நாளில் சேர்த்துவைத்த புத்தகங்கள் அனைத்தும் அவர் விருப்பப்படி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. விலை மதிப்பில்லாத இவருடைய ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கைம்மாறு கருதாமல் தன் சொத்துகளை சேவை இல்லங்களுக்குக் கொடுத்துச்சென்ற சூடாமணிக்கு அவரது எழுத்துகளைப் படிப்பதன் மூலம் நன்றி சொல்லலாம்!

தொடர்புள்ள பதிவு:

4 கருத்துகள்:

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

பயனுள்ள தகவல். நன்றி !!!

Geetha Sambasivam சொன்னது…

"புன்னகைப் பூங்கொத்து" ஆனந்த விகடனில் வந்தபோது அந்தக் கதைக்கு ஓவியர் "ஸிம்ஹா" வின் படங்கள் கதையின் போக்குக்கு உயிர் கொடுத்து வந்தன! சிறப்பான நாவல்.

Pas S. Pasupathy சொன்னது…

@Geetha Sambasivam நன்றி. மேலும் அவர் படைப்புகளை இங்கிட முயல்கிறேன்.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

என் பிஹெச்.டி ஆய்வுக்காலத்தில் இராஜமன்னார்குடி எஸ்.ஆர்.எம்.அறக்கட்டளை நூலகத்தில் கிருத்திகாவின் 'தந்தை பிம்பம்' வாசிக்கச் சென்று, கம்பு களையெடுக்கப்போனபோது தம்பிக்குப் பெண்பார்த்தாற்போல் சூடாமணியின் மென்மையும் மேன்மையும் கொண்ட எழுத்துகளை வாசித்தேன்.