தென்காசி ரதி -மன்மதன்,
ஆவுடையார் கோவில் தலக் கதை ...
’சில்பி’யின் மனைவியின் பெயர் பத்மா; சில்பியின் இயற்பெயர் சீனிவாசன்.
மனைவியின் பெயரையும் தன் பெயரின் இறுதியையும் சேர்த்து, கிரிதரனுக்குப் பத்மவாசன் என்று நாமகரணம் செய்து, தன் சீடனாக அவரை ஏற்றுக்கொண்டார் ‘சில்பி’ இன்று பிரபல ஓவியராக விளங்கும் பத்மவாசன் சொல்கிறார்:
”சில்பி அவர்கள் படம் வரைவதை ஒரு தவமாக வைத்திருந்தவர். கடுமையான ஆசார அனுஷ்டானங்களும், நியம நிஷ்டைகளும் அவருக்கு உண்டு. பயங்கரமான கோபக்காரர் வேறு! படங்கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று தன்னை வருத்திக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது.
அவர் வீட்டில் பல நோட்டுப் புத்தகங்களில் விதவிதமான முகங்கள் வரையப்பட்டிருப்பதை ஒரு சமயம் கண்டு, ‘இவை என்ன ?’ என்று கேட்டேன்.
அது, அவரது பயிற்சி முறை என்று சொன்னார்.
தினமும் பொழுது விடிந்ததும் ஒரு நோட்டுப் புத்தகம், பென்சிலுடன் ட்ராமில் ஏறி உட்கார்ந்து கொள்வாராம். (தொடக்க காலங்களில்) ‘இன்று ஐம்பது முகங்களையாவது வரையாமல் சாப்பிட மாட்டேன்’ என்று சபதம் செய்து விட்டு, ட்ராமில் தமக்கு எதிரே அமருகிறவர்களைப் பார்த்துப் பார்த்து சளைக்காமல் வரைந்து கொண்டே இருப்பாராம். ஐம்பது முகங்களைச் சரியாக வரைந்த பின்னரே உணவு! படங்கள் சரியாக அமையாவிட்டாலோ, அத்தனை பேர் அகப்படா விட்டாலோ அன்று பட்டினி தானாம்!
சிலிர்த்து விட்டது எனக்கு! எப்படிப்பட்ட ஒரு தீவிரம் இருந்தால் இத்தனை நெஞ்சுரம் வந்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்த்தேன்.
தொழிலில் வெறித்தனமான ஈடுபாடும் வெற்றி பெரும் உத்வேகமும் உள்ள யாருமே இப்படித்தான் — உழைப்பதற்கு அஞ்சுவதில்லை.“
[ நன்றி: ஜெயித்த கதை, ஔரங்கசீப் (பா.ராகவன்), மதி நிலையம், 1999.
http://balhanuman.wordpress.com/ ]
48-இல் வந்த மேலும் இரு கட்டுரைகள் இதோ:
[நன்றி: விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
தென்னாட்டுச் செல்வங்கள் -1
தெ.செ -2
தெ.செ. -3
தெ.செ. -4
’சில்பி’யின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்: மற்ற கட்டுரைகள்
~*~o0O0o~*~
கவிஞர்
சிவசூரியின் பின்னூட்டம்:
மனம் மயக்கும் மன்மதன்
1)
விண்மீது மோதுகின்ற கலசம் கொண்ட
விசுவநாதர் எழுந்தருளும் கோயில் தன்னில்
கண்காணத் தென்காசி நகரில் அங்கே
கவினழகுச் சிலயாக நிற்கும் மாரா
மண்மீது வாழ்கின்ற மக்கள் உன்றன்
வடிவழகைக் கண்டாலே காதல் தானே
உண்டாகி ஓடாதோ ஆறாய் எங்கும்
ஓரம்பை விடுவதுவும் தேவை ஆமோ!
2)
அறியாத பருவத்தார் நெஞ்சம் மீதும்
அடுக்கடுக்காய் ஐங்கணைகள் எறிவாய் நீயே
செறிவான செந்தமிழர் கோட்டம் கட்டிச்
செப்பமுடன் நினைத்தொழுதார் முந்தை நாளில்
நிறையாத இன்பங்கள் நித்தம் தந்தும்
நிலமெங்கும் உயிர்வளரும் நின்னால் அன்றோ
மறைவாக நின்றென்றும் அம்பை விட்டு
மையலென்னும் பயிர்வளர்க்கும் மன்னன் நீயே.
3)
தென்றலெனும் தேரேறி நேரில் இங்கே
தென்பாண்டி நாட்டிற்கே வந்தாய் மாரா!
தென்றலது என்றென்றும் பொதியம் என்னும்
செந்தமிழர் நன்னாட்டு நிதியம் ஆகும்
கன்னலதை வில்லாக்கிக் கண்கள் காணக்
கவினழகாய் வந்தனையே காமன் நீயே
மன்னுபுகழ் முத்தமிழாம் மொழியின் முன்னே
கன்னல்வில் செயலற்றுப் போகும் கண்டாய்.
4)
குற்றாலக் குறவஞ்சி எனுமோர் நூலில்
கொஞ்சுதமிழ் முழங்குவதைக் கேட்டால் போதும்
வற்றாத ஊற்றாகக் காதல் நெஞ்சில்
மடைதிறந்த் வெள்ளமெனப் பெருகிப் பாயும்
பற்றேதும் இல்லாத பத்தர் கூடப்
பாசத்தால் பரிதவிக்கச் செய்யு மாறு
கற்றோரும் கல்லாரும் களிக்கும் வண்ணம்
கற்கண்டாய்ப் படைத்துளதைப் பார்த்தால் போதும்.
5)
கரும்பாலே வில்செய்து மலர்கள் வைத்துக்
கணையாக விடுகின்ற வேலை வேண்டாம்
சுரும்பெல்லாம் நாணாகும் தேவை இல்லை
சுகமெல்லாம் தானாகப் பெருக்கும் காதல்
அரும்பெல்லாம் மலராகும் முப்பால் பார்த்தால்
அழகெல்லாம் கண்முன்னே தானே தோன்றும்
விருந்தாக இதையுண்ணும் மக்கள் நெஞ்சில்
வெள்ளமென இன்பங்கள் பற்றும் தானே.
6)
பாண்டியனின் சங்கத்தில் தலைமை ஏற்றுப்
பைந்தமிழை வளர்த்தவனாம் பரமன் நாடு;
ஆண்டவனே ஆடல்பல செய்த ளித்த
அழகுதமிழ் நாட்டினிலே முன்னோர் அன்று
வேண்டியுனைத் தொழுதிடவே நோன்பும் செய்து
விருப்பமுடன் பாடியதால் வந்தாய் போலும்,
ஆண்டுதொறும் உன்புகழை நெஞ்சில் வைத்தே
அழகான லாவணிகள் பாடும் நாடு.
7)
ஐந்திணையைப் பாடுகின்ற மக்கள் எங்கள்
அகமெல்லாம் காதலென்றும் ஆறாய்ப் பாயும்
ஐங்கரனின் தம்பியெனும் குமரன் கண்டார்
அனங்கனுனை ஏறெடுத்தும் பார்ப்பர் உண்டோ?
பைந்தமிழர் நன்னாட்டுப் பெண்டிர் என்னும்
பாசமுகம் இருக்கையிலே வேறென் வேண்டும்?
ஐங்கணையை வைத்திங்கே யாதே செய்வாய்
ஐந்தருவி வீழுகின்ற அழகாம் நாட்டில்?
8)
என்பதனால் நீயேதான் சிலையாய் மாறி
எழிலாகக் கண்முன்னர் உள்ளாய் போலும்
நின்விரலின் நகவழகும் கரும்புத் தோகை
நெடுகெங்கும் ஓடுகின்ற நரம்பும் கூட
மன்பதையில் கற்சிலையில் காணும் வண்ணம்
வடிப்பதுவும் இயலுவதும் உண்டோ, இல்லை
நன்கிதனை நானறிவேன் நீயே தானே
நானிலத்தில் படிவமென நிற்கின் றாயே.
===========
இரதியென்னும் எழிற்பெட்டகம்
1)
மங்கலம் பொங்கிட மன்பதை வாழ்ந்திட
மன்மதனை- அந்தத்
திங்களைச் சூடியும் தீயினை ஏந்தும்
சிவனார்முன் - உடன்
ஐங்கணை விட்டிட ஆணை கொடுத்திட
அமரரெலாம் -அவன்
அங்கம் நடுங்கி அலறிச் சிலையென
ஆனபின்னும்
2)
மீண்டும் அவனையே வேண்டிடத் தேவர்
வினயமுடன்- அவனைத்
தீண்டிடச் சொல்வது தீயை எனவே
தெரிந்ததனால்- இனி
மாண்டுயிர் போகும் மரணம் அணைக்கும்
மதனனையே- என
ஆண்டவன் பக்கம் சிலையென ஆனாள்
இரதியுந்தான் !
3)
அன்னப் பறவை எழிலார் உடல்மேல் அ
அழகுரதம் -இவள்
என்னத் தெரிய இரதியும் இங்கே
எழுந்தருள - ஒளிர்
கன்னக் கதுப்பைக் கிளியும் தடவிக்
களித்திருக்க - ஒரு
வன்னப் புதையல் வனிதையாய் இவ்விடம்
வந்ததுவே!
4)
அமுதக் கலசம் அணிமணி சூடி
அமர்ந்துளதோ- இரு
குமுதம் விழியெனக் கொஞ்சும் முகத்தில்
குடியுளவோ - ஒரு
சிமிழே மதுவைத் திரட்டிய செவ்விதழ்
ஆனதுவோ - நம்
தமிழே மகளெனத் தாரணி மீதில்
தவழ்கிறதோ!
5)
மாரன் மனத்தினில் மையல் விளைத்திடும்
மாமலரோ - இவள்
நேரில் நிலத்தினில் காதற் பயிரென
நிற்பவளோ - இவள்
பாரோர் பருக அமுதைப் பெருக்கிடும்
பால்நிலவோ - இவள்
சீரார் தமிழரின் சிற்பக் கலைஞரின்
அற்புதமோ!
===========