திங்கள், 3 டிசம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 2

கர்ணனும், அர்ஜுனனும்


தென்னாட்டுச் செல்வங்க”ளின் ஓவியர் ‘சில்பி’யை ‘இறையருள்  ஓவியர்’ என்றே பலரும் போற்றுவர்.

அவரைப் பற்றிக் ‘கோபுலு’  சொல்வதைப் பார்ப்போம். ( சில்பி, கோபுலு, சித்ரலேகா, சிம்ஹா ..நால்வரும் 1945-இல் ஒரே சமயத்தில் விகடனில் வேலைக்குச் சேர்ந்தவர்கள்.)

“  சில்பி ...இயற்பெயர் பி.எம்.சீனிவாசன். கும்பகோணம் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸிலிருந்து வந்தவர். இவருக்கு ‘சில்பி’ என்றும் கோபாலன் என்கிற எனக்கு ‘கோபுலு’ என்றும் நாமகரணம் சூட்டிப் பிரபலப் படுத்தியவர் மாலிதான்.


சில்பி வெகு ஆசாரமான மனிதர். பக்தி சிரத்தையான மனிதர். கோயில்களையும், கோபுரங்களையும், தெய்வத் திருவுருவங்களையும் வரைவதில் புதிய பரிணாமத்தைத் தொடங்கி வைத்தவர் சில்பிதான்.

தேவன் எழுதிய ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கலை, இலக்கியத் தொடருக்குப் படம் வரைந்து தொடருக்கு மேலும் சுவையூட்டியவர் ’சில்பி’தான்.

‘இறையருள் ஓவியர்’ என்ற பட்டத்துக்கு இவரைவிடத் தகுதியான ஓவியர் கிடையாது. “
                                                     ( கோபுலு , விகடன் பவழ விழா மலர், 2002 )


இப்போது கிருஷ்ணாபுரத்துச் ‘செல்வம்’ ஒன்றைப் பருகலாமா?
கர்ணனையும், அர்ஜுனனையும் சிற்பவடிவில் வேறெந்தக் கோவிலிலாவது நீங்கள் கண்டதுண்டா?

( இது 1948-இல் வந்த ஒரு கட்டுரை;  ஜெமினியின்‘சந்திரலேகா’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சமயம்.)

இப்போது உண்மையைச் சொல்லுங்கள்!

‘சில்பி’யின் ஓவியங்களை மட்டும் நீங்கள் பார்த்திருந்தால், அந்தச் சிற்பங்கள் யாவரைப் பற்றி என்று புரிந்து கொண்டிருப்பீர்களா?

 [நன்றி: விகடன்]

==========================

கட்டுரையைப் படித்த கவிஞர் சிவசூரியின் பின்னூட்டம்:

கிருஷ்ணாபுரத்துக் கர்ணன்.

1)

கலைமதி ஓர்நாள் வானில்
   காலிட 
மறக்கும் போதும்

தலையதால் நீரை மொண்டு
   தண்மழை பொழியும் மேகம்
இலையெனச் சொல்லப் பஞசம்
   இப்புவி 
தோன்றும் போதும்

அலைகடல் ஆடா தோர்நாள்
   அப்படி நிற்கும் போதும்

2)

இலையெனச் சொல்லாக் கையும்
   ஈகையை மறக்கா நெஞ்சும்
விலையிலா உயிரைக் கூட
   வேண்டிட உடனே ஈயும்
உலகெலாம் வலமும் செய்தே
   உயிரெலாம் வாழச் செய்யும்
நிலையிலே ஈசன் போலே
   நின்றிடும் கதிரின் மைந்தன்

3)

மலையெனத் திரண்ட தோளும்
   மலரெனக் காணும் முகமும்
கலையழ கொளிரச் செய்த
   கற்சிலை கையில் கொண்ட
சிலையதைக் கயவர் கூட்டம்
   சிதைத்ததன் பின்னும் நிற்கும்
நிலையிதன் சிறப்பைக் கண்டு
   நிலமெலாம் வியக்கும் என்றும்
.

4)

தருமத்தை நினையா நெஞ்சும்
   தடையறத் தீமை செய்ய
வருமத்தைக் கொண்டு நித்தம்
   வஞ்சனை செய்து வாழும்
அரவத்தைக் கொடியாய்க் கொண்ட
   ஆருயிர் நண்பர்க் காக
கருமத்தைச் செய்ய வேண்டி
   கரத்திலே அரவம் கொண்டான்.


5)

உருவத்தில் கதிரைப் போலும்
   ஒளியினைக் கொண்டான் ஆகி
பருவத்தைப் பாரா தென்றும்
   பாரினைக் காக்கும் கர்ணன்
தருணத்தில் பார்த்தன் மேனி
   தழுவிடத் துடிப்போ டுள்ள
அரவத்தைக் கையில் கொண்ட
   அழகிய நிலையைக் கண்டேன்.

6)

கொலைக்களம் தன்னில் கூட
   கொடுத்திடும் கர்ணன் தன்னைக்
கலையுடன் சிலையாய் இங்கே
   கல்லிலே நிற்கச் செய்தும்
சிலையதைக் கொடுக்க வேண்டி
   தேடியே வந்தார் கையில்
விலையிலா திருந்தும் வேகம்
   விடுத்தனன் விட்டுப் போக


*சிலை=வில்

7)

கதிரவன் மைந்தன் என்றே
   கமலங்கள் கோத்த மாலை
அதிரதன் வளர்த்த வீரன்
   அழகிய முடியின் மேலே
உதிர்ந்திடும் முன்பே வந்தே
   உவப்புடன் சுற்றிக் கொள்ள
பதியெலாம் படைத்த கண்ணன்
   பார்த்திட அரவம் கொண்டான்.

8)

பாம்பினைக் கையில் கொண்டு
   பார்த்தனின் முன்னால் கர்ணன்
ஆம்பலின் வண்ணம் கொண்டான்
   அழகையும் கண்ட வாறே
நோம்பெனச் செய்யும் தர்மம்
   நோற்றிடத் தருணம் நோக்கிக்
கூம்பிடும் முன்னம் கேட்டால்
   கொடுத்திட நின்றான் போலும்.

9)

ஆணெனச் சொல்லச் செய்யும்
   ஆண்மையே புவியில் வந்து
தூணெனப் போரில் அந்தத்
   துரியனின் துணையாய் நின்றும்
காணெனக் கையில் பாம்பைக்
   களத்திலே தூக்கிக் காட்டி
மாணெலாம் தனதாய்க் கொள்ள
   மாதவன் முன்னம் நின்றான்.


10)

கீர்த்தியில் மிக்கான் தன்னைக்
   கிருட்டிண புரத்தில் சிற்பி
நேர்த்தியாய் நிறுத்தக் கண்டே
   நெஞ்சிலே கவிதை வேகம்
ஆர்த்திடப் பெருகச் செய்யும்
   அடியனேன் குருவை வேண்டி
போர்த்தொழில் வல்லான் சீர்நான்
   புகன்றிடக் கண்டீர் நீங்கள்.


கிருஷ்ணாபுரத்து அர்ஜுனன்

1)

பங்கயக் கண்ணன் என்றும்
    பக்கலில் துணையாய் நிற்க
இங்கொரு இடரும் இல்லை
    என்னுமோர் எண்ணம் ஓங்க
அங்கத நாட்டு மன்னன்
   அரவமும் காட்டும் போதும்
பொங்கிடர் பெருகக் கூடும்
   போதிலும் கலங்கா தானாய்

2)

சிங்கமும் பரியும் யாளி
   செதுக்கிய தேரில் நன்றே
கங்கிருள் காணா தானாய்க்
     கவலையும் கொள்ளா தானாய்
அங்கையில் அம்பைக் கொண்டும்
   அழகிய சிலையைப் போலே
திங்களாய் நின்றான் பார்த்தன்
   திகழ்கதிர்ச் செல்வன் முன்னே.

3)

தம்பியே எதிரி யென்று
   தன்னெதிர் நிற்கக் கண்டும்
நம்பிய மன்னன் வேண்டும்
   நலமெலாம் அளிக்க வென்றே
அம்புவி தன்னில் கர்ணன்
   அயராமல் நிற்கக் கண்டும்
அம்புய நாபன் பின்னே
   அருச்சுனன் சிலையாய் நின்றான்.

4)

மூத்தவன் மூத்தோன் இன்று
   மூளமர் செய்ய முன்னால்
தேர்த்தடம் ஏறி நின்று
   சிலையுடன் உள்ளான் என்று
பார்த்தனே அறியா னாகிப்
   பரமனின் பாதம் எண்ணிப்
போர்த்தொழில் செய்ய வேண்டிப்
   புன்னகை புரிந்தான் போலும்.

5)

ஆதவன் மைந்தன் கையில்
   அரவமாய் நிற்கும் அம்பு
மோதிட உயிரும் நீங்கும்
   முடிந்திடும் போரும் என்றே
ஏதுமே எண்ணா னாகி
   ஈங்கிவன் நிற்ப தெல்லாம்
யாதவன் அருளின் வண்ணம்
   என்றுநாம் கொள்ள லாமோ.


6)

தானத்தில் சிறந்த வீரன்
   தன்கரப் படையே இன்று
மானத்தில் மாசுண் டாக்கும்
   மறுவதாய் நிற்கும் என்றும்
வானத்தின் வேந்தின் மைந்தன்
   மனத்தினில் தோன்றா னாகி
மோனத்தில் நின்றான் போலும்
   முறுவலைப் பூத்த வண்ணம்.


7)

வில்லுக்கு விசயன் என்றே
   வையமே என்றும் சொல்லும்
சொல்லுக்குப் பொருளாய் அம்பைத்
   தொடுத்திடல் செய்யா தின்று,
இல்லுக்குக் கேடாய் கர்ணன்
   இகழ்ந்தது மறந்தே நன்று
கல்லுக்கும் உயிரை ஊட்டக்
   கற்சிலை யானான் போலும்.


8)

முடியிடாக் கூந்தல் கொண்டாள்
   முகமதி சீற்றத் தோடு
முடித்திடும் நாளை நெஞ்சில்
   முடித்ததன் விளைவாய்த் தானோ
முடியணி வேந்தன் பார்த்தன்
   முகத்தினில் நீண்டு தொங்கும்
முடியுடன் நிற்கும் கோலம்
   முடித்தனன் சிற்பி இங்கே.


9)


தீயினில் தோன்றி வந்த
   திருமகள் அன்னாள் ஆகும்
ஆயிழை தன்னைத் தீயன்
   அரசவை தரைமேல் மேனி
தேய்த்திடக் கொணர்ந்த பின்னே
   தீயெனக் கரித்தான், தன்னை
மாய்த்திடப் பாம்பைக் கொண்டும்
   மனத்திலேன் அமைதி கொண்டான்?


10)

நீர்த்தடம் கண்ணில் கொண்டு
   நெருநல் இருந்தான் இன்று
போர்த்தடம் தன்னில் பன்னாள்
   போனதன் பின்னும் முன்னே
கார்த்தடங் கண்கள் சிந்தும்
   கடலினை மறந்தான் போலும்
தேர்த்தடம் சிலையைக் கொண்டும்
   சிலையென நின்றான் என்னே.

11)


அகமுடன் அரசும் இன்னும்
   அனைத்தையும் இழந்த பின்னும்
பகைவனைக் கண்டும் பாம்புப்
   படையினைக் கையில் கண்டும்
நகையினை முகத்தில் கொண்டான்
   நாரணன் அருளால் வெற்றி
முகிழ்த்திடும் தமக்கே என்றே
   முற்றுமே உணர்ந்த தாலே.


12)

பூவுளோர் காணும் வண்ணம்
   பொலிந்திட எழுத்தின் வண்ணம்
தேவனின் நெஞ்சின் எண்ணம்
   சில்பியின் கையின் வண்ண
ஓவியம் உடனே கண்முன்
   உலவிடும் போது தானே
காவியம் தோன்றும் என்றால்
   காரணம் யாரே ஆவார்?


சிவ சூரியநாராயணன்.

தொடர்புள்ள பதிவுகள்: 

தென்னாட்டுச் செல்வங்கள் : மற்ற கட்டுரைகள்

2 கருத்துகள்:

Muthu சொன்னது…


‘சில்பி’யின் ஓவியங்களை மட்டும் நீங்கள் பார்த்திருந்தால், அந்தச் சிற்பங்கள் யாவரைப் பற்றி என்று புரிந்து கொண்டிருப்பீர்களா?

என்னால் கட்டாயம் புரிந்து கொண்டிருக்க முடியாது. அருமையான கட்டுரைக்கு அழகான ஓவியம்.

Unknown சொன்னது…

நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு

கருத்துரையிடுக