மு.மு.இஸ்மாயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.மு.இஸ்மாயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஜனவரி, 2023

2422. மு. மு. இஸ்மாயில் - 4

சமய,சமரச இலக்கியப் புறா!

கிருங்கை சேதுபதி


ஜனவரி 17. மு.மு.இஸ்மாயிலின் நினைவு தினம்.

ஜனவரி 2022-இல் தினமணியில் வந்த கட்டுரை  இதோ.

=====

சமயம் கடந்த சமரச நோக்கோடு இலக்கியங்களைக் கண்டு உலகிற்குக் காட்டிய தமிழ் அறிஞர்கள் பலர். அவர்களுள் குறிக்கத்தக்கவர் மு.மு.இஸ்மாயில். 

நாகூரில், 08.2.1921 அன்று பிறந்த இவர், இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். ஈன்றவர்களிடமிருந்து பெறவேண்டிய இனிய மாண்புகளை இலக்கியங்களின் வழியாகப் பயின்று வளர்ந்தவர். நீதிமன்றத்தில் மட்டுமின்றி, கம்பன் கழகங்களிலும் நீதியரசராகவே இருந்து பல நல்ல தீர்ப்புகளை வழங்கிச் சுவைஞர்களைக் கவர்ந்தவர். வாழ்வியல் பாங்கோடு கம்பராமாயணத்தை கருதிப் பார்க்கும் அவர், இஸ்லாமிய நெறியோடு பிற சமய நெறிகளை இணைத்துப் பேசியும், எழுதியும் வாழ்ந்தவர்.

மொழி சமயத்திற்கு அப்பாற்பட்டது. இந்து, பௌத்தர், சமணர், கிறித்தவர், முஸ்லீம் ஆகிய பல மதத்தினரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டதன் காரணமாகவே தமிழில் பெரும் அறிஞர்களாகவும், கவிஞர்களாகவும், இலக்கியக் கர்த்தாக்களாகவும் இருந்திருக்கிறார்கள்; இன்னும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சமய பேதமின்றித் தமிழ் பொது மொழியாவதோடு, தமிழ் இலக்கியங்கள் பொதுச்சொத்தும் ஆகும் என்ற கொள்கையுடையவர். 

சென்னைக் கம்பன் கழகத்துத் தலைவராக அவர் இருந்த காலத்தில், எத்தனையோ இளந்தலைமுறைப் பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் அடையாளங்கண்டு உலகறியச் செய்வதற்குத் தானும் ஒரு காரணரானவர். திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி, இவற்றோடு சீறாப்புராணத்தையும் இளந்தலைமுறையினர் பயிலச்செய்த, செய்கிற பெருமை சென்னைக் கம்பன் கழகத்திற்கு உண்டு. 

எளிமையும், அன்பும், வாய்மையும் நிறைந்த இசுலாமியப் பெரியவர் அவர். அவர் எழுதி, சென்னைக் கம்பன் கழக நிகழ்வுகளில் வெளியிட்ட நூல்கள் பலவாகும். அவற்றுள் ஒன்று, "தாயினும்...' அதில் குறிப்பிடும் அவர்தம் அனுபவமும், இலக்கிய உண்மையும் என்றும் நினைந்து போற்றுதற்குரியனவாகும்.

'''ஒன்பது வயதில் ஈன்றவளை இழந்த எனக்கு, "அன்னையின் அன்பும் அரவணைப்பும் இல்லையே' என்ற ஏக்கமும், "அவள் இருந்து அவளுக்குப் பணிவிடை செய்தோ, நாம் வளர்ந்த நம்முடைய வாழ்க்கையைக்கொண்டு அவளை மகிழ்விக்கவோ, வாய்ப்பு அற்றவனாக ஆகிவிட்டோமே' என்ற ஆதங்கமும் கணம்கூட மறையாத ஒன்று. இந்த இயற்கையான சிந்தனைச் சூழலில், வளர்ந்துகொண்டிருக்கும் எனக்கு நான் படித்தவையும், கேட்டவையும் அந்த ஏக்க (ஆதங்க)த் தீயில் நெய் ஊற்றுவன போலவே அமைந்தன. இஸ்லாத்தின் திருத்தூதரான முகம்மது நபி (ஸல்) அவர்கள், "உங்கள் சுவர்க்கம், உங்கள் மாதாவின் பாதங்களின் அடியில் அமைந்திருக்கிறது' என்று கூறிப் போந்ததுவும், இவ்வுணர்வுக்கு ஒப்பற்ற தூண்டுகோலாக அமைந்தது. சூழ்ந்திருக்கும் இயற்கையும், இதற்கு வலுவூட்டுவதாகவே அமைந்தது. அத்தகைய தாயினுடைய தன்மையை அருளித் தந்தவன், அவளையும்விட அருளில் உயர்ந்த இறைவனாகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணமும் உள்ளத்தில் அசைக்க முடியாத இடம் பெற்றுவிட்டது.

இதன் விளைவே, "Light of Pandrimalai' என்ற இதழுக்கு ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும் என்று தன்னைக் கேட்டபொழுது அவர் எழுதித் தந்த ஒரு கட்டுரையின் தலைப்பு, "தாயினும்...'

"பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப்பரிந்து' என்ற மணிவாசகர் வாக்கையும், "தாயினும் நல்லான்' என்ற கம்பர் வாக்கையும் இணைத்து நினைக்கத் தூண்டும் இத்தலைப்புக்கு விளக்கம் அளித்து அவர் எழுதுகிற அக்கட்டுரையில், "தாய் அவன் உலகுக்கு' (1:113:2), "தாயும் நீயே தந்தை நீயே' (1:50:7), "தாயானே தந்தையுமாகிய தன்மைகள் ஆயானே' (2.151.4), ஆகிய திருஞானசம்பந்தரின் பாடல்களை மேற்கோளிட்டு விளக்குகிறார்.

"தாய் அவன் எவ்வுயிர்க்கும் (6:355) "தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை' (6.650) என்பனவான அப்பரடிகளின் அருள் வாக்குகளையும், "தாய் அவளாய்த் தந்தையாகி' (7:173) எனும் சுந்தரர் வாக்கையும், குறிப்பிட்டு, சிவபுராணத்தில் "தாயிற்சிறந்த தயாவான தத்துவனே' என்றும், திருவம்மானையில் "தாயான தத்துவனை' என்றும் மணிவாசகர் குறிப்பிடும் தொடர்களையும் விளக்குகிறார். மேலும், "அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழும் குழவி' என்ற குலசேகராழ்வார்தம் பெருமாள் திருமொழியையும், அதனோடு ஒப்பத் தோன்றும் வள்ளற்பெருமானின் "தந்தை அடித்தால் தாய் அணைப்பள்' என்ற வாக்கையும் இணைத்துச் சிந்தித்து இறைவனின் பெருங்கருணையினை நபிகள்(ஸல்) பெருமானின் வரலாற்றோடு நினைவுபடுத்திக் காட்டுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) பிரிய தோழர்களோடு ஓரிடத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவசரமாக அங்கு வந்து சேர்ந்த நண்பர் ஒருவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பார்த்து, '''பெருமானார் அவர்களே! ஒரு விசித்திரச் செய்தி" என்றார்.அச்செய்தி என்னவென்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

வந்த நண்பர் சொன்னார்: ""நான் வந்து கொண்டிருந்தபோது வழியில் புதரொன்றிலிருந்து விசித்திர ஒலி ஒன்றைக் கேட்டேன். அருகில் நெருங்கியபோது இரண்டு சின்னஞ்சிறு புறாக்குஞ்சுகள் ஒரு கூட்டில் இருப்பதைக் கண்டேன். அவற்றை எடுத்து எனது போர்வையில் சுருட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். அதற்குள் எங்கிருந்தோ தாய்ப்புறா வந்துவிட்டது. தனது குஞ்சுகளைக் காணாது வீறிட்டலறிக்கொண்டு அங்குமிங்கும் பறந்தது. எனக்கு மேலே அது வந்தபோது, எனது துப்பட்டாவை விலக்கினேன். என்ன ஆச்சரியம், தாய்ப்புறாவும் எனது துப்பட்டாவுள் புகுந்து தனது குஞ்சுககள் மீது சிறகைப் பரப்பிப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டது. இதோ பாருங்கள்" என்று திறந்து காட்டினார்.

அதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ""நீங்கள் மீண்டும் இவற்றைக் கொண்டுபோய் அவற்றின் கூட்டில் சேர்ப்பித்து விடுங்கள்' என்று கூறினார்கள். இப்படிக் கூறிவிட்டு, திடீரெனச் சிந்தனையில் ஆழ்ந்து சிறிது நேரம் மெüனமாக இருந்தபிறகு பெருமானார், தோழர்களை நோக்கி, நெகிழ்ந்த தழுதழுத்த குரலில் சொன்னார்கள்:

"தாயின் அன்புதான் எவ்வளவு உன்னதமானது! இந்தத் தாய்ப்புறா தனது குஞ்சுகளுக்காகச் செய்ய முனைந்த தியாகமும், அது செய்த முயற்சியும்தான் எத்தகையது! ஆனால் தோழர்களே, இறைவன் தனது படைப்பினங்கள் மீது கொண்டுள்ள அன்பு உண்டே, அது தாயன்பினும் மிக மிகப்பெரியது; அளவிட முடியாதது.'

இதனைப் பரிபூரணமாகவே உணர்ந்தவர்கள் இவ்வுலகில் தோன்றிய அறிஞர்களும், ஞானிகளும் ஆவார்கள். அதன் காரணமாகவே அவர்கள் தாம் பாடிய, எழுதிய பக்திப் பாடல்களிலும், பாசுரங்களிலும் இறைவனைத் தாயாகவும், தாய்க்கும் மிக்கவனாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் (மு.மு. இஸ்மாயில், தாயினும்... பக்.10-11) என்று விளக்குகிறார்.

இத்தகைய பக்திமை நிறைந்த பார்வை எல்லாச் சமயத்தார்க்கும் வாய்க்க வேண்டும். "ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள் உலகின்பக் கேளி' என்ற மகாகவி பாரதி மரபில், "என்றுமுள தென்தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட யாவருக்கும் இந்தப் பொதுமைநெறி வசப்பட வேண்டும்' என்றும், உயரிய நோக்கோடு இஸ்லாமியப் பேரறிஞர் மு.மு.இஸ்மாயில் ஆற்றிய இலக்கியப் பணிகளில் சமய சமரசப் புறா சிறகு விரித்துப் பறப்பதைப் பார்க்க முடிகிறது. 

தானே ஒரு சமய சமரசப் புறாவாக இருந்து தமிழ் வளர்த்த மு.மு.இஸ்மாயிலுக்கு, நாளை நினைவு நாள்.(17.01.2022) பெரிதாய்க் கொண்டாட முடியாமல், சென்ற ஆண்டோடு முடிந்தது, அவர்தம் நூற்றாண்டு (1921-2021).

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு.மு.இஸ்மாயில்: பசுபதிவுகள்

மு.மு. இஸ்மாயில்: தமிழ்.விக்கி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வெள்ளி, 20 மே, 2022

2120. மு. மு. இஸ்மாயில் -3

காஞ்சியில் சுரக்கும் கருணையூற்று

நீதிபதி எம்.எம்.இஸ்மாயீல் 



மே 20. காஞ்சி மகாசுவாமிகளின் பிறந்த தினம்.

1977-இல் 'கல்கி'யில் வந்த கட்டுரை.

  



பி.கு.

கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும்  துரைசாமி ஐயரைப் பற்றி மேலும் அறிய 

A lawyer who gave up his practice: Randor Guy

படிக்கவும்.   

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு.மு.இஸ்மாயில்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

1801. மு. மு. இஸ்மாயில் -2

ஒரு மறக்கமுடியாத அனுபவம்

மு.மு.இஸ்மாயில்


பிப்ரவரி 8
. மு.மு.இஸ்மாயிலின் பிறந்த தினம்.







[ நன்றி; கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு.மு.இஸ்மாயில்

வியாழன், 8 பிப்ரவரி, 2018

984. மு. மு. இஸ்மாயில் -1

கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்!


 பிப்ரவரி 8. நீதியரசர் மு.மு.இஸ்மாயிலின் பிறந்த தினம்.

அவருடைய சில நூல்களைப் படித்திருக்கிறேன்.  மிகச் சுவையான ஆழமான எழுத்துகள்.  டொராண்டோவில் அவர் வந்து கம்பனைப் பற்றிப் பேசினபோது கேட்டிருக்கிறேன்.

தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:

====

முகமதிய மதத்தைச் சேர்ந்த பலர் தமிழ் அன்பர்களாய் வாழ்ந்து, தமிழைத் தங்கள் புலமைத் திறத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அன்பர்களின் வரிசையில், அண்மைக்கால உதாரணம் 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவரும், வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தில் தோய்ந்து வாழ்ந்தவருமான பெரும்புலமை படைத்த அறிஞர் நீதிபதி மு.மு.இஸ்மாயில். 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.
அவர் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்ட பெருமைக்குரியவர். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை வளர்த்தவர்கள் உறவினர்கள்தான். (""நான் கடவுளால் வளர்க்கப்பட்ட பிள்ளை தெரியுமோ?'' என்று சொல்லி இஸ்மாயில் நகைப்பதுண்டு) நிறைந்த கடவுள் பக்தியுடன் வாழ்ந்த பெருமகன். "அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்' என்ற குறிப்பிடத்தக்க நூலை எழுதியவரும்கூட.
அவரது இளமைக்காலமும் பள்ளி வாழ்வும் நாகூரில்தான் கழிந்தது. இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அதனால் பள்ளி அவரை மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு (இரட்டைத் தேர்ச்சி) அனுப்பியது.



பாடகர் ஏ.வி.ரமணனின் தந்தையான ஆராவமுது ஐயங்கார் என்ற பெரும் தமிழறிஞரிடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாடம் கேட்ட பெருமையும் இஸ்மாயிலுக்கு உண்டு. மிகப்பெரும் புலவரிடம், தமிழறிவுக்கான அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டதால், அவருக்கு அது இறுதிவரை கைகொடுத்தது. சட்டப் படிப்புப் படித்த அவர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தம் சொந்த ஆர்வத்தால் நிறையப் படித்துத் தேர்ந்தார்.

பேராசிரியர் கே.சுவாமிநாதன் என்ற புகழ்பெற்ற காந்தியவாதியைத் தெரியாதவர்கள் இருக்க இயலாது. தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாக தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவாழ்வு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர். கல்லூரி நாள்களில் இஸ்மாயில் தனது அறிவுக் கூர்மை காரணமாக பேராசிரியர் சுவாமிநாதனின் பெறாத பிள்ளைபோல் ஆகிவிட்டார்.

காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லாம் அசைவம்தான். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது. (இளம் வயதிலிருந்தே காந்தியின் "ஹரிஜன்' இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.)

உணவில் சைவத்தைப் பின்பற்றிய அவருக்கு, மிகவும் பிடித்தது வைணவக் காப்பியமான கம்பராமாயணம். கம்பர் அவரது முழுமனதையும் கொள்ளை கொண்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.


இஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் அன்பர்கள், ஆய்வுச்சுவை தோய்ந்த அந்த இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். இஸ்மாயில், பல இடங்களில் மீண்டும் மீண்டும் கம்பன் குறித்துப்பேச அழைக்கப்பட்டார். பலர் அவர் பேசிய அதே கம்பன் கருத்தை அதே சொற்களில் மறுபடி மறுபடி அவரிடமிருந்தே "நேயர் விருப்பம்'போல் கேட்க ஆசைப்பட்டார்கள்.

சொற்பொழிவாளராக இருந்த இஸ்மாயில், புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம், "மௌலானா அபுல்கலாம் ஆசாத்' பற்றியது. அதற்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி.


கம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி - என அடுத்தடுத்து இவரது பழந்தமிழ் ஆய்வு நூல்கள் நிறைய வெளிவரலாயின.
வாலிவதை பற்றிய இவரது "மூன்று வினாக்கள்' என்ற நூல், உலகப் புகழ்பெற்ற ஓர் ஆன்மிகப் பெரியவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த நூலுக்காகவே இவருக்குப் பொன்னாடை அணியச் செய்து, பாராட்டி மகிழ்ந்த அந்தத் துறவி நூறாண்டு வாழ்ந்த காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார்.

இஸ்மாயிலுக்கும் பரமாச்சாரியார் மேல் மிகுந்த மரியாதை உண்டு. "ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ, அந்த மதத்தின் ஆன்மிக நெறிகளை அனுசரித்து வாழவேண்டும்' என்ற பரமாச்சாரியாரின் கருத்தை இஸ்மாயில் பெரிதும் போற்றியவர்.

இயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பல பட்டங்கள் இவரது இயல்புக்குப் பொருத்தமாக வழங்கப்பட்டன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாருக்கு இவர்மேல் அன்பும் மதிப்பும் உண்டு. இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, "உலகம் போற்றும் உத்தம' என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.
கம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர் இஸ்மாயில். "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன் ஆகியோர் மற்ற நிறுவனர்கள். இப்போது கம்பன் கழகத்தின் தலைவராக இயங்குபவர் ஆர்.எம். வீரப்பன்.

கம்பராமாயண மூல நூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்த பெருமை இஸ்மாயிலுக்கு உண்டு. தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன், தெ.ஞானசுந்தரம் முதலிய தமிழ் அறிஞர்கள் அந்தப் பதிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். இஸ்மாயிலின் மிகப்பெரிய சாதனை என்று இந்தப் பதிப்புப் பணியைச் சொல்லலாம்.

1976-இல் நடைபெற்ற கம்பன் விழாவில் அதன் முதல் பதிப்பு வெளியாயிற்று. ஆயிரத்துக்கும் மேலான கம்பன் அன்பர்கள் அந்தப் பதிப்பை விலைகொடுத்து வாங்க வரிசையில் நெடுநேரம் நின்றார்கள். வாங்குவதில் பெரும் போட்டி இருந்ததால், காவல்துறையினர் தலையிட்டு வரிசையை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.

மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் இஸ்மாயில். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரியவர் இஸ்மாயில். 1980-இல், முந்தைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்குப் பிறகு, தமிழகத்தின் தாற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.

தமிழின் பக்தி இலக்கியம், மதங்கடந்து தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஆற்றல் பெற்றது என்பதற்கு இஸ்மாயிலின் கம்பராமாயணப் புலமை ஓர் எடுத்துக்காட்டு.

÷2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இஸ்மாயில் காலமானார். அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் எழுதிய "இலக்கியமான நீதிபதி' என்ற தலைப்பில் 19.1.2005 அன்று "தினமணி' நாளிதழில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது.

[ நன்றி: தினமணி, 2011 ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு. மு. இஸ்மாயில் : விக்கிப்பீடியா