வியாழன், 30 ஜூன், 2016

காந்தி - 3

சேவா கிராமத்தில்
கே. அருணாசலம்


1945 -ஆம் ஆண்டு . 

“ மகாராஷ்டிராவில் உள்ள வார்தா ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமம் ஷிவ்காம். அங்கே மகாத்மாவின் சீடர்கள் சிலர் குடியேறி ஆசிரமம் ஒன்றை ஸ்தாபித்தனர். பின்னர் அந்த கிராமம் சேவா கிராமம் என்று அழைக்கப்படலாயிற்று. மகாத்மா காந்தி அங்கு தங்கியிருந்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் சங்கத்திலிருந்து எம்.பக்தவத்சலம் எம்.எல்.ஏ., வி.எம்.உபயதுல்லா, கே.அருணாசலம், மதுரை வெங்கடாசலபதி ஆகியோர் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினர். அந்த அனுபவத்தைத் தொடர் கட்டுரையாக  ( 1945-இல் ) எழுதியிருக்கிறார்  கே.அருணாசலம்.” என்கிறது விகடன் காலப் பெட்டகம் நூல் .

அந்தத் தொடரில்  என்னிடம் இருக்கும்  ஒரு கட்டுரை இதோ! [ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி

திங்கள், 27 ஜூன், 2016

அகிலன் - 1

உண்மையை உணர்த்திய அகிலன்

 க.அபிராமி


ஜூன் 27. அகிலன் அவர்களின் பிறந்த தினம்.  2010-இல் தினமணியில் வந்த கட்டுரை இதோ!
=========

நான் எழுதிய முதற் கதையும் சரி, இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக்  கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே. ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்-இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்'' என்று கூறியுள்ளார் அகிலன்.

1922-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி  புதுக்கோட்டைக்கு அருகே உள்ள பெருங்களூர் எனும் கிராமத்தில் பிறந்தார். அகிலனின் தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை, சமஸ்தான அரசின் காட்டிலாகா அதிகாரி. தாய் அமிர்தம் அம்மாள்.

அகிலனின் இளமைக்காலக் கல்வி  புதுக்கோட்டை, கரூர் மற்றும் பெருங்களூரில் கழிந்தது.

மாணவப்பருவத்தில் - 1938  முதலே அகிலன் எழுதத் தொடங்கினார். பள்ளி இதழுக்காக, பதினாறாவது வயதில் அவர் எழுதிய  "அவன் ஏழை' எனும் அவரது முதல் சிறுகதை, அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கிறது. இதை அவரே தனது "எழுத்தும் வாழ்க்கையும்' என்ற நூலில்  குறிப்பிட்டுள்ளார்.


அகிலன், பள்ளிப் பருவத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார், அவரைச் சுற்றி நிகழ்ந்த தேசியப் போராட்டங்களும், காந்திஜியின் கரூர் வருகையும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் சர்தார் வல்லபாய் படேலைச் சந்தித்ததும், அகிலனின் சுதந்திரப் போராட்ட வேட்கையைத் தூண்டின.

நாட்டு விடுதலை ஆர்வத்தில் தமது மேற்படிப்பை உதறி விட்டு, 1940-இல் வெளிவந்த இவர், தமிழகத்தின் சிறுபத்திரிகைகள் முதல் பிரபல இதழ்கள் வரை சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். 1944-இல் தட்டம்மாள் என்பவரை மணந்துகொண்டார்.

தனிமனித உணர்வுச் சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் என்று பற்பல தளங்களில் சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி, தமிழ் வாசகரிடையே தனித்த அடையாளத்துடன் வரவேற்கப்பெற்றார். முழுநேர எழுதுப்பணிக்காகத் தமது ரயில்வே அஞ்சலகப் பணியை 1958-இல்  விட்டு விலகி வந்தார்.

சில காலம் முழு நேர எழுத்துப்பணி என்ற இலக்கிய வாழ்வுச் சோதனையை நடத்திய பின், 1966-லிருந்து  சென்னை அகில இந்திய வானொலியில் சொற்பொழிவுத் துறை அமைப்பாளராகப் பணியாற்றி 1982-இல் ஓய்வு பெற்றார்.

அகிலனின் சிறுகதைகள், வாழ்வின் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை. எளிய நடையில், வலிமையான கருத்துகளை சுவாரசியமான தனது எழுத்து நடையால் வாசகரின் மனதில் பதிய வைப்பதே காலத்தை வென்ற படைப்பாளியான அகிலனின் தனித்துவம்.

ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கின்றானோ அதே உணர்வை, படிக்கும்போது வாசகரும் பெறுவதே அந்தப்  படைப்பின் வெற்றி, அத்தகு படைப்பாளி அகிலன்.

200 சிறுகதைகளை எழுதியுள்ளார் அகிலன். அவை  அனைத்தும் ஒன்றாக "அகிலன் சிறுகதைகள்' என்ற தலைப்பில் கால வரிசைப்படி இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அகிலனின் சிறுகதைகள் அடிமை இந்தியா முதல் இன்று வரை உள்ள 50 ஆண்டு கால தமிழக வரலாற்றின் மனசாட்சியாகவே படைக்கப்பட்டுள்ளன.

இவரது சிறுகதைகள், தனி மனித உணர்வுகள் மூலம் சமூகப் பிரச்னைகளை அச்சமின்றி  தோலுரித்துக் காட்டுகின்றன. வீடும் நாடும் ஒன்றை ஒன்று எப்படிப் பாதிக்கின்றன என்பதைத்    துல்லியமாகப் பேசும் கதைகள் - அகிலனின்

சிறுகதைகள்.

இவரது நிலவினிலே, எரிமலை, சக்திவேல் ஆகிய சிறுகதைத்  தொகுப்புகள் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றவை. அகிலனின் காசு மரம், மகிழம்பூ, பொங்கலோ பொங்கல் ஆகிய சிறுகதைகள் தொலைக்காட்சியில் நாடகமாக்கப்பட்டன.

 பொதுவாக இலக்கியவாதிகள் ஒரு குறிப்பிட்ட வகைப்  படைப்புகளிலேயே மிளிருவார்கள். ஆனால் அகிலன், பன்முகத் தன்மைகொண்டவர் என்பதை  அவரது நாவல்கள் மூலம் அறியலாம். அகிலனின் 20 நாவல்களும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றதோடு, பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றன. "கலைமகள்' இதழ் நாராயணசாமி அய்யர் நாவல் போட்டி துவங்கிய முதல் ஆண்டிலேயே 1946-இல் தனது முதல் நாவலான "பெண்'ணுக்கு  முதற் பரிசு பெற்றார். இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம் முதலிய இந்திய மொழிகளிலும், சீன மொழியிலும் பல அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டுப் புத்தகமாக வெளிவந்துள்ளது.

அகிலனின், "வேங்கையின் மைந்தன்' சரித்திர நாவல் 21 பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல்லான "வேங்கையின் மைந்தன்' 1963-இல் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றது. இந்நாவல் சிவாஜி கணேசன் குழுவினரால் நாடகமாக்கப்பட்டு நடிக்கப்பட்டது. அகில இந்திய வானொலியிலும் நாடகமாக்கப்பட்டது.

பாண்டிய சாம்ராஜ்யத்தைக் கதைக் களமாகக் கொண்ட அகிலனின் "கயல்விழி' எனும் சரித்திர நாவல், 1964-65-இல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த தமிழ் நாவல் பரிசைப் பெற்றது. கயல்விழி, எம்.ஜி.ஆரால்  மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாகத் திரைப்படமாக்கப்பட்டது.

1975-இல் தமிழுக்கு முதல் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்தது அகிலனின் "சித்திரப்பாவை' நாவல். அது ஆங்கிலம் மற்றும் பெரும்பாலான இந்திய மொழிகளில் புத்தகமாகவும், வானொலி, தொலைக்காட்சிகளில் தொடராகவும் வெளி வந்துள்ள இந் நாவல், பல்கலைக்கழகங்களிலும், ஐ .ஏ .எஸ். தேர்வுக்கும் பாட நூலாக உள்ளது.

அகிலனின் "பாவை விளக்கு' அவரது சுய வாழ்வின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஓர் இலக்கிய வாதியின் போராட்ட  வாழ்வை மிக இயல்பாகக்  கூறிச் செல்லும் இந் நாவல், திரைப்படமாக்கப்பட்டு சிவாஜி கணேசனால் நடிக்கப்பட்டது. கலப்புமணப் பிரச்னையை "வாழ்வு எங்கே?' நாவல் அலசுகிறது. இது "குலமகள் ராதை' - என்ற பெயரில் திரைப்படமானது.

"பொன்மலர்' நாவலின் பாடுபொருள் இன்றளவும் பொருந்தி வருவதால் பல்கலைகளிலும், கல்லூரிகளிலும் பாட நூலாகப் பயிற்றுவிக்கப் பெறுகிறது.

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு (1973) பெற்ற  "எங்கேபோகிறோம்?' என்ற நாவல், காந்திய யதார்த்தத்தின் வெளிப்பாடாய் அமைந்தது. எரிமலை சிறுகதை வெளிவந்து பரபரப்பான விமர்சனங்களுக்கு உட்பட்டது.

கலைமகள் இதழில் 1982 ஜனவரியில் அகிலனின் கடைசி நாவலான "வானமா பூமியா?' தொடங்கியது. தனது உடல் நிலை காரணமாக கடைசி அத்தியாயத்தை அவரால் நிறைவு செய்ய இயலாமல் போனது. அகிலனின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த  கி.வா.ஜ. வின் உதவியுடன், அகிலன் கண்ணன் இந் நாவலின் கடைசி அத்தியாயங்களை நிறைவு செய்தார். இது சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் வந்தது.

காமராஜர், சி.எஸ்., ஜீவா, மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், கர்பூரி தாகூர், எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, கே.முத்தையா ஆகிய தலைவர்களுடனான அகிலனின் நட்பு குறிப்பிடத்தக்கது.

அகிலனின் நட்பு மு.வ., கண.முத்தையா, கல்கி, தகழி சிவசங்கரன் பிள்ளை, சிவராம் கரந்த் என பல தளங்களில் விரிந்திருந்தது. சாகித்திய அகாதெமி தேர்வுக் குழு, தமிழ்நாடு அரசு தேர்வுக்குழுக்கள் போன்ற அமைப்புகளில் நடுவராக இருந்து மற்ற படைப்பாளிகளை, படைப்புகளைத் தேர்வு செய்து அடையாளம் காட்டிய பெருமை அகிலனுக்கு உண்டு.

காந்தியத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அகிலன், மூன்று முறை அரசு அழைப்பை ஏற்று ரஷ்யா சென்றார். தமது பயண அனுபவங்களை "நான் கண்ட ரஷ்யா', "சோவியத்  நாட்டில்' என்ற புத்தகங்களில்  பதிவு செய்தார்.

அகிலனின் மலேசிய, சிங்கப்பூர் பயணம் "பால்மரக்காட்டினிலே' நாவலாக உருப்பெற்றபோது,  கடல் கடந்த தமிழர்களின் போராட்ட வாழ்க்கை நமக்குப்  புரியத்தொடங்கியது.

தமிழ் இலக்கிய விருந்தினராக இலங்கைக்குப் பயணித்த அகிலன், பிகார், ஒரிசா, வங்க தேசம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் போன்ற அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் பயணித்து, தமது அனுபவங்களையும், அரசியல், சமுதாயப் போக்குகளையும் தமது படைப்புகளின் மூலம் பதிவு செய்துள்ளார்.

அகிலனின் தங்க நகரம், கண்ணான  கண்ணன், நல்ல பையன் ஆகிய சிறுவர் கதைகள், குழந்தைகளையும் சிந்திக்கவைக்கக் கூடியதாய் அமைகின்றன.

எளிமை, உண்மை, மனித நேயம், கலைத்தன்மை, நேர்மை, அஞ்சாமை, என்கிற சத்திய ஆளுமைப் பாதையில் தானும் வாழ்ந்து, கலையழகுக் கொள்கைப் பிடிப்பும் நிறைந்த தன் படைப்புகளின் வழி - தமிழ் வாசகர்களையும் மேம்படவைத்த படைப்பாளி அகிலன்,  1988-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி தமது 66-வது வயதில் காலமானார்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
அகிலன்

ஞாயிறு, 26 ஜூன், 2016

ம.பொ.சி -3

சிந்தனையின் கருவூலம் சிறந்து வாழ்க !
 கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
ஜூன் 26. ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம். சாட்டை இதழின் ம.பொ.சி. பொன்விழா மலரில் (1956) கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரு கவிதை இதோ!

[ நன்றி : சாட்டை ]

தொடர்புள்ள பதிவுகள்:

ம.பொ.சி

வெள்ளி, 24 ஜூன், 2016

கண்ணதாசன் - 1

கவியரசர் கண்ணதாசன்  
வெங்கடேசன் 


ஜூன் 24. கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில்  2014-இல் "  தமிழறிஞர்கள் அறிவோம்"  தொடரில் வந்த   ஒரு கட்டுரை இதோ:
===

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.

தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் முரண்பாடுகளைக் கண்டு வளர்ந்தது. தமிழ் வழங்கும் இடங்களில் எல்லாம் அவரைச் சிறப்பாகத் திகழ வைத்தவை அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களே.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியின் சிறுகூடல்பட்டியில் பெற்றோர் சாத்தப்பனார் - விசாலாட்சி ஆச்சிக்கு 1927, ஜூன் 24 ல் பிறந்தவர் முத்தையா,  பின்னாளில்  கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை அவரது 'வனவாசம்' நூலைப் படித்தால் உணரலாம்.

கல்வி: சிறிகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி, அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 15 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 17 வயதில் அவரது முதல் கவிதை வெளிவந்தது.

புனைப்பெயர் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி

தொழில் - கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்

எழுதிய காலம்: 1944 - 1981

முதல் குறுங்காவியம்: மாங்கனி. இவை டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையிலிருந்துகொண்டு படைத்தது. (1952-53)

மணவாழ்க்கை: 1950ல் கண்ணதாசனின் மண வாழ்க்கை தொடங்கியது. கவிஞருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்).

இரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது 'கண்ணதாசன் பதிப்பக'த்தின் அதிபர்).

மூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி மனோகரன் என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்). கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவு மறைவு இன்றி 'வனவாசம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அது அவருடைய மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. தன் குணச்சித்திரத்தை இரண்டே வரிகளில் பாடலாக எழுதியுள்ளார்.

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணை இருப்பு' என்பதே அப்பாடல். இப்பாடல், அவரே பாடுவது போல ரத்த திலகத்தில் இடம் பெற்றுள்ளது.

அரசியல்: 1949ல் திமுக தொடங்கி அரசியலில் பல்வேறு அனுபவங்களை தந்தது.

திமுகவிலிருந்து விலகல்: 1960-61 ஆம் ஆண்டுகளில் தி.மு.க.விலிருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று 1960-61 ஆம் ஆண்டுகளில் அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.

இவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980 ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்படல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகோர்த்தன, கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.

 பத்திரிக்கை: அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய  உருவக கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.

அரசவை கவிஞர்: தமிழ்நாட்டின் 'அரசவை கவிஞராக (ஆஸ்தான கவிஞர்) கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.

அதன் பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதம்: அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யா லகரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார்.

சுயபிரகடனம்: கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.

தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும்  உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசன். மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப்பாடல்களின் மூலம் தனது கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி அறிவுறுத்திய தேசிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.

கண்ணதாசனின் நூல்கள்:

பிரதானமானவை

இயேசு காவியம்

அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

திரைப்படப் பாடல்கள்

மாங்கனி

கவிதை நூல்கள்:

கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்

பாடிக்கொடுத்த மங்களங்கள்

கவிதாஞ்சலி

தாய்ப்பாவை

ஸ்ரீகிருஷ்ண கவசம்

அவளுக்கு ஒரு பாடல்

சுருதி சேராத ராகங்கள்

முற்றுப்பெறாத காவியங்கள்

பஜகோவிந்தம்

கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்:

அவள் ஒரு இந்துப் பெண்

சிவப்புக்கல் மூக்குத்தி

ரத்த புஷ்பங்கள்

சுவர்ணா சரஸ்வதி

நடந்த கதை

மிசா

சுருதி சேராத ராகங்கள்

முப்பது நாளும் பவுர்ணமி

அரங்கமும் அந்தரங்கமும்

ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி

தெய்வத் திருமணங்கள்

ஆயிரங்கால் மண்டபம்

காதல் கொண்ட தென்னாடு

அதைவிட ரகசியம்

ஒரு கவிஞனின் கதை

சிங்காரி பார்த்த சென்னை

வேலங்காட்டியூர் விழா

விளக்கு மட்டுமா சிவப்பு

வனவாசம்

அத்வைத ரகசியம்

பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்:

எனது வசந்த காலங்கள்

எனது சுயசரிதம்

வனவாசம்

கட்டுரைகள்:

கடைசிப்பக்கம்

போய் வருகிறேன்

அந்தி, சந்தி, அர்த்தஜாமம்

நான் பார்த்த அரசியல்

எண்ணங்கள்

தாயகங்கள்

வாழ்க்கை என்னும் சோலையிலே

குடும்பசுகம்

ஞானாம்பிகா

ராகமாலிகா

இலக்கியத்தில் காதல்

தோட்டத்து மலர்கள்

இலக்கிய யுத்தங்கள்

போய் வருகிறேன்

நாடகங்கள்:

அனார்கலி

சிவகங்கைச்சீமை

ராஜ தண்டனை

கவிஞரின் பழமொழிகள்:

கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் எழுதலாம், செய்யப் போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் செல்லலாம்!

முட்டையைக் கொடுத்துக் காசு வாங்கிறவன் வியாபாரி, காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி, எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல் வாதி.

கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்!

யாருக்காகவும் என்னை மாற்றி கொள்ளாதே

ஒருவேளை மாற நினைத்தால்

ஒவ்வொரு மனிதர்களுக்கும்

நீ மாற வேண்டி வரும்.அழும் போது தனிமையில் அழு,

சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி!

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,

தனிமையில் சிரித்தால்

பைத்தியம் என்பார்கள்.நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி

          நடந்த இளந்தென்றலேமழைகூட ஒருநாளில் தேனாகலாம்

          மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

          அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?

உணர்ச்சிகளைச் சொல்லும்போது நேராகவும் கூராகவும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை.நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்.

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.

சொல்லாத சொல்லுக்கு விலைஏது மில்லை.

தத்துவத்தைத் திரைப்பாடல்களில் மனமுருகக் காட்டியவர் கண்ணதாசன்.

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா-என்

இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா.

நூற்றுக்கணக்கான பாத்திரங்களின் ஆயிரக்கணக்கான உணர்வுகளின் நுட்ப வேறுபாடுகளைக் கண்ணதாசன் சித்திரித்ததுபோல வேறொருவர் சித்திரித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

மக்கள் மனங்களிலும் உதடுகளிலும் அன்றும் இன்றும் என்றும் அசைப்போடும் பாடல்கள்:

"கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே." என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய கவிஞர் அடுத்து...

போனால் போகட்டும் போடா .

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?

--------------------------------------------------

வீ டுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ ?

................................

மனிதன் மாறி விட்டான்

மதத்தில் எறி விட்டான்

.........................................................

உன்னைச் சொல்லி குற்றமில்லை

...........................................................................

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்

அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் .

...................................................................................

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

.................................................................................................

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

........................................................................................................

உள்ளம் என்பது ஆமை -அதில்

உண்மை என்பது ஊமை

.....................................................................................................................

பிறக்கும் போது அழுகின்றான் .

....................................................................................................................................

நிலவைப் பார்த்து வானம் சொன்னது

என்னை தொடதே .

.........................................................................................................................................................

கவலை இல்லாத மனிதன் படம் எடுத்து நஷ்டப்பட்டு  கவலைப்பட்ட வரலாறும் உண்டு.

"நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு

பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது ." என்று சொன்ன வரிகள் இன்றும் பலரின் உதடுகளில் உறவாடி வருகின்றன.

மணிமண்டபம்: தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கவிஞரின் இரங்கல் கவிதை: மறைந்த பிரதமர் நேரு மீது மிகுந்த பற்று வைத்திருந்த கண்ணதாசன். 1964-ல் நேரு மறைந்தபோது அவர் மீது கொண்டிருந்த பக்திக்கு சான்றாக கண்ணதாசன் 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா' என்று எழுதிய இரங்கல் கவிதை விளங்குகிறது.

அந்த கவிதை-----------

சீரிய நெற்றி எங்கே?

சிவந்த நல் இதழ் எங்கே?

கூரிய விழிகள் எங்கே?

குவலயம் போனதெங்கே?

நேரிய பார்வை எங்கே?

நிமிர்ந்த நன் நடைதான் எங்கே

நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்த திங்கே

ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?

எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட

தாயே எனக்கொரு வரம் வேண்டும்

தலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்

சாவே உனக்கொருநாள்

சாவு வந்து சேராதோ

சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ?

தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?

தெய்வமே உன்னையும் நாம் தேம்பி

அழ வையோமோ

கண்ணதாசனின் ஆசையும் மறைவும்:

கண்ணதாசன் பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். அப்போதெல்லாம் அவர் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணத்தைப் பற்றியும் குறிப்பிடலானார். தன்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவரே உணரலானார். 'மரணத்தை ரகசியமாக இறைவன் வைத்துள்ளதால்தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதாபிமானத்துடன் நடக்கிறான்' என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், 'காமராஜர் போல, மறைந்த பட அதிபர் சின்னஅண்ணாமலை போல மரணம் திடீர் என்று வரவேண்டும். என் கண்ணனிடம் எனது கடைசி ஆசையாக இதைத்தான் கேட்டு வருகிறேன்' என்று கூறிவந்த கவிஞர் வெள்ளித்திரையில் ஒரு முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரப்படி 10.45 மணிக்கு மறைந்தார்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கண்ணதாசன்


வியாழன், 23 ஜூன், 2016

குறும்பாக்கள்: 9,10,11 : கானம், கனவு, கல்யாணம்

கானம், கனவு, கல்யாணம்
பசுபதி 9. கானம் "மெருகுடனே பாட்டிசைக்கக் குரல் !
வீணை,குழல் மற்றதற்கு விரல் ! "
. . குருசொல்வார் சீடனுக்கு,
. . "குரல்,விரலில் வீணனுக்கு,
இருப்பதொரு தொழில்இட்லி உரல் ! "


10. கனவு 


வந்தமர்ந்தாள் என்படுக்கை ஓரம்,
மனங்கவர்ந்த நடிகைஇரா நேரம்.
. . இன்னுமொரு நொடியினிலே,
. . இருந்திருப்பாள் மடியினிலே .
என்கனவைக் கலைத்தகடி காரம்!

11.. கல்யாணம் முறைமனைவி மூன்றுடைசிங் காரம்,
மும்மணத்திற்(கு) அவன்விளக்க சாரம் :
. . "மறைசொல்லும் பெருங்கடமை !
. . மணமொன்றோ முழுமடமை !
சிறைதள்ளும் குற்றம்இரு தாரம் ! "

தொடர்புள்ள பதிவுகள்:

குறும்பாக்கள்

கவிதைகள்

செவ்வாய், 21 ஜூன், 2016

எஸ்.வி.வி. -1

நகைச்சுவை முன்னோடி எஸ்.வி.வி 


[ நன்றி : ஹிந்து ] 

எஸ்.வி.வி. என்றே பலரும் 40-50 -களில் அறிந்த எஸ்.வி.விஜயராகவாச்சாரியார்  தமிழின் நகைச்சுவை எழுத்தாளர்களின் முன்னோடி.

 அவர் தமிழில் விகடனில் எழுதத் தொடங்கியதே ஒரு சுவையான கதை!

எஸ்.வி.வி. திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தபோதே, “ஹிந்து” பத்திரிகையில் 20-களில் ஆங்கில ஹாஸ்யக் கட்டுரைக்கதைகளை ( கதைக்கட்டுரைகளை?)  இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எழுதி எல்லோரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் கட்டுரைத் தொடரின் தலைப்பு “ என் மனைவியும் நானும்” ( My Wife and I  ).

எஸ்.வி.வி க்கு இன்னொரு பொழுதுபோக்கும் உண்டு. ஆம், அது வீணை வாசிப்பது. அவருடைய ஒரு மகன் எஸ்.வி.கே. என்று அறியப்பட்ட “இந்து”வின்  முக்கிய இசை விமர்சகராய் இருந்த  எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி  ; இன்னொரு மகன் சங்கீத வித்வான் எஸ்.வி.பார்த்தசாரதி என்பதிலிருந்தே  அந்தக் குடும்பத்தின் இசைப் பாரம்பரியம் புரியும்!

’கல்கி’ விகடனில் சேர்ந்தது 1928-இல். ஆனால், அதற்கு முன்பே, ‘நவசக்தி’ இதழில் இருக்கும்போதே  எஸ்.வி.வி -யைப் பற்றி யோசித்திருக்கிறார்  என்பது “சுந்தா” எழுதிய  கல்கியின் வாழ்க்கை வரலாறாகிய “பொன்னியின் புதல்வர்”  மூலம் தெரிகிறது.  எஸ்.வி.வி. யின் ஆங்கிலக் கதைத் தொகுப்பான “சோப் குமிழிகள்” ( Soap Bubbles )  என்ற புத்தகத்தில் இருந்த “கோவில் யானை “ ( The Temple Elepahant)  என்ற கதையைப் படித்து வயிறு வலிக்கச் சிரித்ததாக விகடன் இதழில் எழுதுகிறார் கல்கி.  அதே சமயம். இவ்வளவு ஹாஸ்யத்தை இங்கிலீஷில் கொட்டியிருக்கிறாரே என்ற வருத்தமும் ஏற்படுகிறது கல்கிக்கு.

எஸ்.வி.வி-யைத் தமிழில் எழுதச் சொல்லவேண்டும் என்று எண்ணி, ஒருநாள் கல்கி, வாசன், துமிலன் மூவரும் திருவண்ணாமலைக்குச் செல்கிறார்கள்.

ஆனால், அதுமட்டும் தான் அவர்கள் சென்றதுக்குக் காரணமா?  இல்லை! “சுந்தா “ எழுதியதைப் படியுங்கள்! மர்மம் வெளிப்படும் !

கல்கி விகடனில் சேர்ந்த புதிதில் அவருடைய சகா ஒருவர், எஸ்.வி.வி -யின் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கி விகடனில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு எஸ்.வி.வி. ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார். அந்தப் பிரச்சினையைச்  சமாளிக்கவும் மூவரும் திருவண்ணாமலைக்குச் சென்றிருக்கிறார்கள். இதுவே “சுந்தா” வின் யூகம்.

( விகடனின் காலப் பெட்டகம் நூல் 1931-இல் எஸ்.வி.வி. யின் ஒரு கட்டுரை விகடனில் வந்ததாகக் குறிப்பிடுகிறது. அதாவது , எஸ்.வி.வி. அதிகார பூர்வமாய் விகடனில் எழுதத் தொடங்கிய 1933-க்கு முன்பு. அதனால் அந்த 1931 கட்டுரை தான் “சுந்தா” குறிப்பிட்ட தமிழாக்கக் கட்டுரையாய் இருக்கவேண்டும் என்பது என் யூகம். )

இப்போது கல்கியின் எழுத்தில் அந்தத் திருவண்ணாமலை விஜயத்தைப் பற்றிப் படிக்கலாம்:

“ ஒருநாள் எஸ்.வி.வி. யைப் பார்ப்பதற்காக ( இரண்டு நண்பர்களும் நானும் ) திருவண்ணாமலைக்குச் சென்றோம். இரவு பதினோரு மணிக்கு அவருடைய வீட்டைக் கண்டுபிடித்துக் கதவை இடித்தோம். எஸ்.வி.வி.யே வந்து கதவைத் திறந்தார். யாரோ கட்சிக்காரர்கள் அவசரக் கேஸ் விஷயமாய் வந்திருக்கக் கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். நாங்கள் விஷயம் என்னவென்று சொன்னதும் இடி இடியென்று சிரித்தார். இராத்திரி பதினோரு மணிக்கு வந்து கதவை இடித்துத் தூக்கத்திலிருந்து எழுப்பி, “ஒன்றும் காரியமில்லை. வெறுமனே உங்களைப் பார்ப்பதற்கு வந்தோம்” என்று சொன்னால் யாருக்குத்தான் சிரிப்பு வராது? “எங்களை எத்தனையோ தடவை காரணமில்லாமல் சிரிக்கச் சிரிக்க அடித்தீர்கள் அல்லவா? அதற்குப் பழிக்குப் பழி வாங்கிவிட்டோம்” என்று நான் சொன்னேன்.

“  இந்த எஸ்.வி.வி. எப்படி இருப்பார்?” என்று பார்ப்பதற்குத்தான் நாங்கள் முக்கியமாய்ப் போனோம் என்றாலும், மனத்துக்குள் வேறோர் அந்தரங்க நோக்கம் இல்லாமற் போகவில்லை. அவரைத் தமிழிலும் எழுதப் பண்ண வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். இதற்கு அந்தத் தடவையில் விதை போட்டுவிட்டுத் திரும்பினோம். அதற்குப் பலன் சில வருஷங்களுக்குப் பிறகு கிடைத்தது. எஸ்.வி.வி.யின் முதல் தமிழ்க் கட்டுரை , “தாக்ஷாயணியின் ஆனந்தம்” என்ற தலைப்புடன் 1-7-33 விகடன் இதழில் பிரசுரமாயிற்று. அதை ராஜாஜி படித்துவிட்டு அளவற்ற மகிழ்ச்சி தெரிவித்தார். “இவ்வளவு நன்றாய் எஸ்.வி.வி. இங்கிலீஷில் எழுதியது கிடையாது, “ என்றார். ஸ்ரீ டி.கே.சிதம்பரநாத முதலியாரும் அதே அபிப்ராயத்தைத் தெரிவித்தார். ஏதோ அரும் பெரும் காரியத்தைச் சாதித்துவிட்டது போல் எனக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. “


1933 இலிருந்து விகடனில் தமிழில் எழுதத் தொடங்கிய எஸ்.வி.வி. ஆங்கிலத்தில் எழுதுவதையே விரைவில் நிறுத்தியே விட்டார்!  1940-இல் அவருக்கு அறுபதாண்டு நிறைந்து, மணிவிழா நடந்தது. கல்கி , கி.சந்திரசேகரனின் துணையுடன் விழாவை  நடத்தினார். விகடனின் அட்டையில் எஸ்.வி.வி.யின் முகத்தை வெளியிட்டார்.


விழாவிற்கு நான்கு மாதங்களுக்குப் பின் விகடனை விட்டு விலகின கல்கி, தன் சொந்தப் பத்திரிகையான ‘கல்கி’யில் எழுத எஸ்.வி.வி.யை அழைத்தார். மறுத்த எஸ்.வி.வி. தொடர்ந்து விகடனுக்கு மட்டுமே அவர் மறையும் வரை --50 வரை --எழுதிவந்தார்.

எஸ்.வி.வி. யின் பல படைப்புகள் --- ஆங்கில நூல்கள் உட்பட --- அல்லயன்ஸ் பதிப்பகத்தில் கிட்டும்.

[ நன்றி: ”பொன்னியின் புதல்வர்”, அல்லயன்ஸ்  ]

தொடர்புள்ள பதிவுகள்:

எஸ்.வி.வி. 

திங்கள், 20 ஜூன், 2016

கவிஞர் சுரதா

"உவமைக் கவிஞர்' சுரதா
கலைமாமணி விக்கிரமன்


ஜூன் 19. சுரதா அவர்களின் நினைவு தினம்.  2010-இல் தினமணியில் வந்த கட்டுரை இதோ !
===================


இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான "சுரதா'வை அறியாதவர்கள் இருக்க முடியாது. மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர்.

கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம்-சண்பகம் தம்பதிக்கு 1921-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் இராசகோபாலன்.

பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். ""தனக்கு அதில் உடன்பாடில்லை, "அந்த நிழல் வழி வாசலை' விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்'' என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.

ராஜகோபாலன், "சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, ""பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

"இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.

1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது. சுரதாவின் முதல் கவிதை "கவி அமரன்', "பிரசண்ட விகடன்' இதழில் வெளிவந்தது.

பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.  நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்.

"உவமைக் கவிஞர்' என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. தன்னைப்போன்று "உவமை கொட்டி' எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிலும் புதுமை, புரட்சி செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் எனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.

சுரதாவின் கொள்கைகள் வித்தியாசமானவை. ஆனால் அழுத்தமானவை. ""கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை'' என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும்.

புகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது.

அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், ""மற்றொரு பாரதி பிறந்து விட்டான்'' என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார். "சிவாஜி' ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1944-ஆம் ஆண்டு "மங்கையர்க்கரசி' என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன் முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார். மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் "சுரதா' என்றே கூறலாம். சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனோவா, நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.

எழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் ""எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக'' என்று ஊக்கப்படுத்துவார்.

"மங்கையர்க்கரசி' வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார். திரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன் முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே. 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார். 1955-இல் "பட்டத்தரசி' என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.

சுரதா, "உவமைக் கவிஞர்' என்ற புகழ் பெற்றவுடன், "காவியம்' என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார். பிறகு, "இலக்கியம்', "ஊர்வலம்', "விண்மீன்' எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் "தேன் மழை' என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு பரிசளித்தது. ஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார். திரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.

1972-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது. 1982-இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார். 1990-இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார். 1995-இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "இராஜராஜன்' விருது வழங்கப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார்.

சுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன்.

ஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி நள்ளிரவு காலமானார்.

மணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர். தமிழ் உள்ளவரை வாழ்வார்.

""உண்மையில் அவர் மறையவில்லை; உவமைகள் உள்ளவரையில் வாழ்வார்'' என்று எழுதிய கவிஞர் சுரதாவின் கவிதையும் அழியாது.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்: 

சனி, 18 ஜூன், 2016

கோபுலு - 3

குழந்தையுலகம் -2

கோபுலு 

ஜூன் 18.  கோபுலு அவர்களின் பிறந்த நாள்.

மேலும் சில  ....


( தொடரும்)

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

குழந்தையுலகம் -1

கோபுலு

வெள்ளி, 17 ஜூன், 2016

மீ.ப. சோமு -4

"சித்தர் இலக்கியச் செம்மல்' மீ.ப. சோமு
 திருப்பூர் கிருஷ்ணன்


ஜூன் 17. மீ.ப.சோமு அவர்களின் பிறந்த தினம்.  தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
==============

திருநெல்வேலிப் பகுதியில் பிறந்து இலக்கியத்தைக் கணிசமாக வளர்த்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பலர் தமிழில் உண்டு. தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், டி.கே.சி., தி.க.சிவசங்கரன் என வளரும் அந்தப் பட்டியலில் அமரர் சோமுவும் இணைகிறார். திருநெல்வேலி சந்திப்பின் அருகிலுள்ள மீனாட்சிபுரம்தான் அவரது சொந்த ஊர். பிறந்த தேதி 17.6.1921.

 சிறுகதை எழுதும் சிலருக்கு நாவல் எழுத வருவதில்லை. நாவல் எழுதுபவர்களிலும் சிலருக்குச் சரித்திர நாவல் எழுத வருவதில்லை. (அதனாலேயே சரித்திர நாவல் இலக்கியமல்ல என்று சொன்ன எழுத்தாளர்களும் தமிழில் உண்டு) மீ.ப.சோமு சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, பயண இலக்கியம் என இலக்கியத்தின் பல துறைகளில் முயன்று எழுதி வெற்றிபெற்ற மிகச் சில சாதனையாளர்களுள் ஒருவர்.

 சோமு இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் மிகுந்தவர். தமிழின் பக்தி இலக்கியத்தில், குறிப்பாக சித்தர் பாடல்களில் தோய்ந்த பக்தர் அவர். நெல்லை சுந்தர ஓதுவா மூர்த்திகள் என்ற புகழ்பெற்ற தேவார இசைமணி, திருமதி சோமுவின் பெரியப்பா.

 இளைஞராக இருந்தபோதே எழுத்தார்வம் கொண்டு நிறைய எழுதினார். ஆனால் பரவலாக அவர் அறியப்பட்டது, விகடன் வழங்கிய "பாரதி தங்கப் பதக்கம்' அவரது சிறுகதைக்குக் கிடைத்தபோதுதான்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டம் பெற்ற வகையில், முறையாகத் தமிழ் கற்ற தமிழ்ப் பண்டிதரும்கூட. மு.வரதராசன், நா.பார்த்தசாரதி போன்றோர் வரிசையில் பழந்தமிழ் அறிந்து, தற்கால இலக்கியத்தில் சாதனை படைத்தவர்.

 சம்ஸ்ருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். வெளிதேச இலக்கிய அமைப்புகளில் தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலச் சொற்பொழிவுகள் செய்திருக்கிறார். அவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளின் பெருமை பற்றி "தி டைம்ஸ்' என்ற  ஆங்கில நாளேடு வியந்து பாராட்டிக் கட்டுரை எழுதியதுண்டு.

 தமிழில் அநாயாசமான சொல் வளத்தோடு தெளிந்த நீரோடைபோல் சொற்பொழிவாற்றக் கூடியவர். அகில இந்திய வானொலியில் பணிபுரிந்ததாலோ என்னவோ, அவரிடம் ஒரு வித்தியாசமான ஆற்றல் இருந்தது. பேசத் தொடங்குவதற்கு முன் அமைப்பாளர்களிடம் எத்தனை நேரம் பேசவேண்டும், அரைமணி நேரமா, இருபத்தைந்து நிமிடமா என்றெல்லாம் விசாரித்துக் கொள்வார். மேடையேறினால் கைக்கடிகாரத்தைப் பார்க்காமலே மிகச் சரியாகக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவார். அவரது அந்த ஆற்றல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு.

 "சித்தர் இலக்கியச் செம்மல்' என்று குறிப்பிட வேண்டுமானால் தமிழில் மீ.ப.சோமுவைப் பற்றி மட்டும்தான் அப்படிக் குறிப்பிட முடியும். திருமூலரின் திருமந்திரம் உள்பட ஏராளமான சித்தர் பாடல்கள் அவருக்கு மனப்பாடம். சிலப்பதிகாரம் குறித்து ம.பொ.சி. பேசிக் கேட்கவேண்டும் என்று சொல்வதுபோலவே, சித்தர் பாடல் பற்றி மீ.ப.சோமு பேசிக் கேட்க வேண்டும் என்றும் சொல்வதுண்டு. அவர் சித்தர் பாடல்களை விளக்கிப் பேசினால், அந்தத் தமிழின் குளுமையைப் பருகவென்றே ஏராளமான கூட்டம் வருவதுண்டு.


 கொஞ்ச காலம் வானொலியில் பணிபுரிந்துகொண்டே கல்கி வார இதழிலும் ஆசிரியராக இருந்தார். (1954 முதல் 1956 வரை). இவர் வானொலியில் வகித்தது, தென் மாநிலங்களுக்கான தலைமை அமைப்பாளர் என்ற பெரிய பதவி.

 கல்லறை மோகினி, திருப்புகழ்ச் சாமியார், கேளாத கானம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர். கடல் கண்ட கனவு உள்ளிட்ட பல நாவல்களை எழுதியவர். இவரது "ரவிச்சந்திரிகா' நாவல் ஏராளமான வாசகர்களால் பாராட்டப்பட்டு, பெரும்புகழ் பெற்ற நாவல். தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் அது வெளிவந்தது.

 தத்துவச் சிந்தனை சார்ந்த மரபுக் கவிதைகளைப் படைப்பதில் வல்லவர். அந்த வகையில் இவரது இளவேனில் கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கது. பிள்ளையார் சுழி, நமது செல்வம் முதலிய கட்டுரைத் தொகுதிகளின் ஆசிரியரும்கூட. பற்பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்.


 மீ.ப.சோமு, தம் சமகாலத்தில் வாழ்ந்த இருபெரும் ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகும் பேறுபெற்ற பெருமைக்குரியவர். ஒருவர் மூதறிஞர் ராஜாஜி. இன்னொருவர் கம்பன் புகழ்பாடும் டி.கே.சி. ராஜாஜியின் கடைசிப் பதினைந்து ஆண்டுகளில் பெரும்பாலும் அவரது இரவு உணவு சோமு வீட்டில்தான்.

 மீ.ப.சோமு எழுதிய நாடகங்கள் பல பிரபலமானதற்கு, அவரது தமிழால் கவரப்பட்டு டி.கே.எஸ். சகோதரர்கள் அவற்றை மேடை ஏற்றியதும் ஒரு முக்கியக் காரணம்.

 பல பரிசுகள் இவர் எழுத்தாற்றலைத் தேடி வந்தன. இவரது "அக்கரைச் சீமையிலே' என்ற பயண நூலுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது. படைப்பிலக்கியம் அல்லாத நூலுக்கு அகாதெமி பரிசு கொடுத்ததைப் பற்றி எப்போதும் போல், அப்போதும் சில விமர்சனங்கள் எழத்தான் செய்தன. ஆனால் ஏ.கே.செட்டியார், மீ.ப.சோமு போன்றோர்தான் தமிழ்ப் பயண இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை விமர்சித்தவர்களே கூட மறுக்கவில்லை.

 எம்.ஏ.எம். அறக்கட்டளைப் பரிசு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு, தமிழக அரசுப் பரிசு, பல்கலை வித்தகர், இசைப் பேரறிஞர் போன்ற பட்டங்கள் என இவரது பெருமைகள் இன்னும் பல.

 சிக்கனம்பாறை ஆசிரமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சுவாமிகள் என்ற சித்தர்தான் இவரது குரு. சித்தரிடம் நேர்முகமாக ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்றார். உடலில் உள்ள பல மையங்களில் மனத்தை ஒருமுகப்படுத்தி மானசீக பூஜை செய்யும் பயிற்சியும் அவற்றில் ஒன்று. அந்த பூஜையை நாள்தோறும் விடாமல் செய்துவந்தார். அக்காலத்தில் பெரும் பதவிகளில் இருந்த பலர் மீ.ப.சோமுவிடம் மந்திர உபதேசம் பெற்றவர்களும் கூட.

 தம் ஒரே மகளுக்கு தமது நன்றியறிதலைத் தெரிவிக்கும் வகையில், வித்தியாசமான பெயரொன்றை வைத்தார் சோமு. சிதம்பர ராஜ நந்தினி என்பது மகளின் பெயர். முதல் வார்த்தை டி.கே.சி.யையும் இரண்டாம் வார்த்தை ராஜாஜியையும் மூன்றாம் வார்த்தை கல்கியையும் ஞாபகப்படுத்துவது. (சோமுவின் புதல்வி ராஜாஜியின் மடியில் வளர்ந்த செல்லக் குழந்தையும் கூட). உயர் நீதிமன்ற வழக்கறிஞரான எஸ்.கோமதிநாயகம் மீ.ப.சோமுவின் மாப்பிள்ளை.

 தம் மனைவி காலமானபோது வயோதிகத்தால் தளர்ந்திருந்த சோமு, சற்று விரக்தி அடைந்தார். ஆனாலும், இறுதிக் காலங்களில் பண் ஆராய்ச்சி மையத்தின் கௌரவ இயக்குநராகப் பதவி வகித்துப் பணியாற்றத் தொடங்கினார். "தமிழே என்னை விட்டு என்றும் பிரியாத என் நிரந்தரத் துணை' என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொல்வதுண்டு. 1999-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி ஒரு பொங்கல் திருநாளையொட்டி அவர் மறைந்தார். ஆனால், என்றும் மறையாத தமது எழுத்துகளில் அவர் வாழ்கிறார்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

மீ.ப.சோமு

வியாழன், 16 ஜூன், 2016

டி. ஆர். மகாலிங்கம்

டி. ஆர். மகாலிங்கம் 
அறந்தை நாராயணன்ஜூன் 16. இசைக் கலைஞர், நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் பிறந்த தினம்.  80-களில் தினமணி கதிரில் வந்த ஒரு கட்டுரை இதோ!
[ நன்றி :  தினமணி கதிர் ]


1)
இது எனக்கு  மிகவும் பிடித்த ஒரு பாரதி பாடல்; திரையில் வராத  “தெருப்பாடகன்” படத்திலிருந்து .

2) மேலும் ஒரு பாடல் “ தெருப்பாடகன்” படத்திலிருந்து :  [ நன்றி : U.K.Sharma ]

தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்

புதன், 15 ஜூன், 2016

கிருஷ்ணஸ்வாமி அய்யர்

கிருஷ்ணஸ்வாமி அய்யர் என்ற மாமனிதர்
 பிரபா ஸ்ரீதேவன்


ஜூன் 15. வி.கிருஷ்ணசுவாமி ஐயரின் பிறந்த தினம். 2013-இல்  தினமணியில் வந்த ஒரு கட்டுரை இதோ!   
 =====

வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் நூற்று ஐம்பதாவது நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. பள்ளிப்படிப்பு முடித்து சென்னை வந்து பட்டப்படிப்பு முடித்தார். அவரை சட்ட படிப்பு படிக்குமாறு அறிவுரை தந்தவர் ஹிந்து பத்திரிகை நிறுவனர் கஸ்தூரிரங்க அய்யங்காரின் தமையனார் ஸ்ரீனிவாச ராகவ அய்யங்கார். 1885 இல் வக்கீல் சன்னது பெற்று பாலாஜி ராவ் சேம்பர்ஸில் சேர்ந்தார். பிறகு 1888 இல் வக்கீலாக தன் முத்திரையை பதித்து நன்கு சம்பாதிக்க தொடங்கினார். 1911 இல் அவர் வாழ்க்கைப் பயணம் முடிந்தது.

கல்வி, சமூகவியல், சுற்றுப்புறசூழல், அரசியல், வணிகவியல், மருத்துவம், சட்டம், கலாசாரம், இலக்கியம், சமயம் என்று அவர் தடம் பதித்த துறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். மறக்க முடியாத மாமனிதர். மறக்க கூடாத மாமனிதர். இன்று மெரினாவிற்கு காற்று வாங்கப்போனால் அவருக்கு நன்றி கூறவேண்டும். ஏன் என்று சொல்கிறேன்.

1890 களில் தென்னிந்திய ரயில்வே, மயிலையையும் கிண்டியையும் இணைத்து ஒரு ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தது. அதற்கு மெரினா வழியாகவே தடம் செல்லவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . 1903 இல் வேலை துவங்கும் நிலையில் ஒரு மாபெரும் கூட்டத்தை வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் கூட்டினார். அந்தக் கூட்டத்தைக்கண்டு அரசு அஞ்சியது என்று சரித்திர ஆர்வலரும் எழுத்தாளருமான வி. ஸ்ரீராம் கூறுகிறார். அங்கே வி. கிருஷ்ணஸ்வாமி "இந்த கடற்கரைதான் இந்த நகரத்தின் நுரையீரல், அதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்' என்றார். அரசு அத்திட்டத்தைக் கைவிட்டது.

எப்படிப்பட்ட தொலைநோக்குப்பார்வை? இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் . "நீ என்ன கூட்டம் கூட்டுவது நான் என்னக் கேட்பது' என்று அரசு பொதுமக்களின் உணர்வுகளை புறக்கணிக்கவில்லை. மெரினா அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது . நம் சென்னைக்கு இயற்கை அளித்த செல்வத்தை இன்றும் அவர் சிலையாக நின்று பார்த்து மகிழ்கிறார்.

நாட்டுப்பற்றும் தேசிய உணர்வும் தனது கலாசாரத்தைப்பற்றிய பெருமையும் உள்ள ஒருவர் எப்படி சிந்திப்பார் என்பதற்கு அவர் 1910 இல் அலாகாபாதில் ஒரு கூட்டத்தில் பேசியதே சான்று ""நம்மிடையே சில அதிர்வுகள் இருக்கலாம்; நம் நாட்டின் முன்னேற்றத்தை ஏதோ தடுப்பது போல தோன்றலாம்; சாதிப் பிரிவுகளோ மதப்பிரிவுகளோ இருக்கலாம்; வெளியில் தெரியும் மாறுபாடுகள் நம் மக்கள் முன்னேறி பீடு நடைபோடுவதைத் தடுப்பது போல தோன்றலாம்; ஆனால் "ஒற்றுமையான இந்தியா' என்ற அடித்தள உயிர்ப்பு இருக்கிறது அது நிச்சயம் மெய்ப்படும். அந்த நாள் வரும்பொழுது, நம் நாடு இளங்காலையாக இல்லாமல் உச்ச்சத்தில் ஜொலிக்கும் கதிரவனாக இருக்கும். கடந்த காலம் ஒரு பொற்காலமாக இருந்த நமக்கு எதிர்காலமும் நிச்சயம் ஒளிரும்''

இந்தச் சொற்பொழிவை சென்னை சம்ஸ்க்ருத கல்லூரியின் பொன் விழா மலரில் படித்தேன். அன்று அவர் பேசப்பேச கரகோஷங்கள் ஒலித்திருக்கின்றன. "நிறுத்தட்டுமா' என்று அவர் கேட்டும் அரங்கத்தினர் அவரைத் தொடரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

சென்னை சர்வகலாசாலையில் அவர் செனட், சிண்டிகேட் இரண்டிலும் அங்கத்தினராக இருந்தார். 1911 ஆம் ஆண்டு பட்டமளிப்பு உரையின் முடிவில் அவர் கூறுகிறார், "நம் கடமை நம் நலத்தைப் பேணுவதில் மட்டும் முழுமை அடையாது, நமக்குப் பின்னால் வருபவர்கள் நன்மைக்காக நாம் உழைக்க வேண்டும். புத்தன் முழுமை பெற்றது பிறர் நலனுக்காக உழைத்தபோதுதான். கப்பல் படைகளோ, ஆயுதங்களோ , பன்னாட்டு வணிகமோ, அரசியல் அமைப்புகளோ, பொருள் வளமோ இவை எதுவுமே அறிவுச்செல்வத்திற்கு ஈடாகாது. கல்வியும் அறிவுமே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உலக அமைதிக்குப் பணியாற்ற வழி வகுக்கும்'.

இன்று அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அவர் அன்றே அதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்தார். மைசூர் கலாசாலையில் முதல் முதலாக பி.ஏ பட்டம் பெற்ற இரு பெண்மணிகளை சென்னைக்கு வரவழைத்து கெüரவித்தார்.

அவர் மகன் சந்திரசேகரன் அவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றில் சொல்கிறார், "அப்பொழுது கலாசாலைகளில் தீண்டத்தகாதவர் என்றும் கீழ்சாதியினர் என்றும் கூறி பட்டம் பெறுவதில் தடைகள் இருந்தன. கள்ளிக்கோட்டையில் இருந்த ஒரு கல்லூரி சென்னை சர்வ கலாசாலையில் சேர்க்கப்படாமலே இருந்து வந்ததாம். அதை சேர்த்தால் அங்கு கல்வி பெறும் தீண்டத்தகாதவர் என்று கூறப்பட்ட இனத்தைச்சேர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்று கருதினார்கள்.

சர்வகலாசாலை ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் அந்த கல்லூரியை இணைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார். இப்படி அக்கலாசாலையை சென்னை சர்வகலாசாலையுடன் சேர்த்ததால் பிற்பாடு தீண்டத்தகாதவர்கள் என்று புறக்கணிக்கப்பட்டு வந்த சமூகத்தினரை மேல் படிப்பிலிருந்து விலக்க வழியில்லாமல் போய்விட்டது. அவருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்துடன் ராரிச்சன் மூப்பன் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி அவருக்கு ஒரு தீபஸ்தம்பம் உயர்த்தினார்கள் என்று கி. சந்திரசேகரன் எழுதுகிறார்.

அவர் இன்னும் அதிக காலம் வாழ்ந்திருப்பாரேயானால், மற்ற ஊர்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிரச்னைகளைத் தீர்க்க வழி செய்திருப்பார் என்றும் எழுதியுள்ளார்.

""ஒருமுறை ஒரு சமஸ்கிருத பண்டிதர் சமஸ்கிருதத்தின் பெருமைபற்றி பேசினாராம். கிருஷ்ணஸ்வாமி அய்யர் நானும் அவைகளைப் படித்திருக்கிறேன். உயர்ந்த அர்த்தம் அவைகளில் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் பாடிய மாத்திரத்தில் மனதைக் கவ்விக்கொண்டு உருக்குவதில் தேவார திருவாசகங்களுக்குச் சமமாக ஏதோ ஒன்று இரண்டுதான் அப்படி இருக்கலாம்'' என்று அழுத்தமாகக் கூறினார் என்று அவருடைய தமிழபிமானத்தைப்பற்றி மகாமஹோபாத்யாய டாக்டர் உ.வே சாமிநாத அய்யர் பதிவு செய்கிறார்.

வி.கிருஷ்ணஸ்வாமி அய்யர் பாரதியாரை பல பாடல்களைப் பாடச்சொல்லி அவற்றை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார். ஒருமுறை திருவாசகம் பாடிக்கொண்டிருந்த பாடகரை வேறு பாட்டை பாட சொன்னவரிடம் "தேவாமிர்தத்தைச் சாப்பிட்டுகொண்டிருக்கும்போழுது கொஞ்சம் பிண்ணாக்கு கொண்டுவா வென்று சொல்வதுபோலிருக்கிறது உம் பேச்சு' என்றாராம்.

அர்பத்னாட்டு வங்கி மூழ்கியதும் அதற்கு காரணமாக இருந்த சர் அர்பத்னாட்டை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் மிக பிரசித்தம். அந்த வங்கி திவாலான பின்தான் அவர் இந்தியர்களுக்காக இந்தியன் வங்கி துவக்க முடிவெடுத்தார்.

அக்காலங்களில் பாரிஸ்டர்கள் மட்டுமே இன்சால்வன்சி நடவடிக்கைகளை நடத்த முடியும். வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் பாரிஸ்டர் அல்ல வக்கீல்தான். ஆகையால் நீதிமன்றத்தில் வக்கீல் அங்கியைக் கழற்றி தான் சுதேச நிதியின் சார்பில் பணம் இழந்தவராக (பார்ட்டி இன் பெர்சன்) வாதிட்டார்.

அன்று வானொலி கிடையாது. தொலைக்காட்சி கிடையாது. அவருடைய குறுக்கு விசாரணையைக் கேட்க மக்கள் நீதிமன்றத்தில் கூடுவார்களாம். அவரது குறுக்கு விசாரணைகளை பத்திரிகைகள் அப்படியே பிரசுரித்தனவாம். அவருடைய கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் குற்றவாளிகள் திணறியதை சரித்திரம் பதித்துள்ளது.

ஈகைக்குணம் அவருடனே பிறந்தது என்று சொல்லலாம். ஒருமுறை அவர் உணவருந்திக்கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் பிரச்னை தீர ஒரு குறிப்பிட்ட தொகை பண உதவி கேட்டு அவர் கிராமத்திலிருந்து ஒருவர் வந்தார். கொடுக்கிறேன் என்று சொல்லி பாதி உணவிலேயே எழுந்துவிட்டாராம். ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் கேட்ட தொகை முழுவதும் கொடுக்கலாம் என்று இப்பொழுது எண்ணுகிறேன். சில நிமிடம் சென்றால் மனம் மாறிவிடலாம், அதனால்தான் என்றாராம்.

கொடுக்கவேண்டும் என்று தோன்றினால் கேட்பது எந்த ஒரு ஸ்தாபனமோ, மனிதரோ, அவர் கை கொடுத்துவிடும். சுவாமி விவேகானந்தர் சிகாகோவிற்கு உலக மதங்கள் மாநாட்டிற்கு செல்வதற்கு வழியனுப்பவும், சுவாமி திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளில் அவரும் ஒருவர். சுவாமி விவேகானந்தருக்கு நூற்று ஐம்பதாவது ஆண்டு விழா நடக்கும் இவ்வாண்டில் இந்தக் கட்டுரையின் நாயகருக்கும் விழா நடப்பது பொருத்தமே. 49 ஆண்டுகளே வாழ்ந்த அவர் எப்படி இத்தனை சாதனைகள் புரிந்தார் என்பது வியப்பாக இருக்கிறது.

கோகலே, ரானடே பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்று நாடெங்கும் அவரை அறிந்தவர் பலர். அவர் இறந்த அன்று நாள் முழுவதும் அவ்வப்பொழுது பீரங்கி வெடித்து அரசு தனது இரங்கல் மரியாதையை அறிவித்தது. நம் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் அவரை "மகாபுருஷர்' என்று வர்ணித்தார்.

எனக்கு ஏதாவது பெருமை இருக்குமானால், அது நான் வி. கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பதுதான். எனது எண்ணத்தில் தெளிவும், செயல்பாடுகளில் நேர்மையும், தீர்ப்புகளில் நியாயமும் இருக்குமானால் அதற்கும் காரணம் நான் வி. கிருஷ்ண ஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பதுதான்!

கட்டுரையாளர்: உயர்நீதின்ற நீதிபதி (ஓய்வு).

[ நன்றி : தினமணி ] 


தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 12 ஜூன், 2016

லக்ஷ்மி -2

நல்ல காலம் 
‘லக்ஷ்மி’ 

40/50-களில் விகடனில் வந்த  ஒரு கதை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

லக்ஷ்மி