ஜெயகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

2074. ஜெயகாந்தன் - 5

இலக்கிய உலகைக் கலக்கியவர்! ஜெயகாந்தன்!

ஜோதிர்லதா கிரிஜா


ஏப்ரல் 8. ஜெயகாந்தனின் நினைவு தினம்.  அவர் 2015-இல் மறைந்த பின்னர், 'அமுதசுரபி'ல் வந்த கட்டுரை.




[ நன்றி: அமுதசுரபி]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜெயகாந்தன்

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வெள்ளி, 10 ஏப்ரல், 2020

1513. ஜெயகாந்தன் - 4

எழுத்து கம்பீரம்!
ம.வெ.சிவகுமார்



ஏப்ரல் 8. ஜெயகாந்தனின் நினைவு தினம். அவர் 2015-இல் மறைந்த சமயம், கல்கியில் வந்த கட்டுரை.




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

ஜெயகாந்தன்

சனி, 2 செப்டம்பர், 2017

823. ஜெயகாந்தன் - 3

அக்கினிப் பிரவேசம்
ஜெயகாந்தன் 



விகடனில் 1966-இல் வந்த இந்தப் பிரபலமான கதைக்கு ஓவியங்கள் தீட்டியவர் ‘மாயா’.

மீண்டும் விகடனில் வந்த இந்த மீள்பதிப்பில் ஓவியங்கள் வரைந்தவர் ஸ்யாம்.
=====


மத்தியானத்திலிருந்தே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.
மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ள பஸ் ஸ்டாண்டில், வானவில்லைப் போல் வண்ணஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று, பஸ்ஸுக்காகக் காத்து நின்றுகொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தி, தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். வழக்கமாக கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு, அந்தச் சாம்பல் நிற வேனும் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப்போன பின், ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல், அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில், கொட்டும் மழையில், பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே, கட்டிப்பிடித்து நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருக்கிறது.
நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடம் இல்லாமல் மேலாடைகொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும், மழையில் நனைந்துவிடாமல் உயர்த்தி முழங்கால்களுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடும், அந்த மாணவிகள் வெகு நேரமாய் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருக்கின்றனர்.

வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நறநறவென்று கேட்கிறது.
''ஹேய்... பஸ் இஸ் கம்மிங்!'' என்று ஏககாலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.

வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக்கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்’ வந்து நிற்கிறது.

''பை... பை...''




''ஸீ யூ...''
''சீரியோ...''
- கண்டக்டரின் விசில் சப்தம்.
அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக்கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.
பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.

மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டுவருகிறது.
வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் குறுக்கே வந்து, அலட்சியமாக நின்றுவிட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப்போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும், அது ஒதுங்காததால் - அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப்படுத்தாது - அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகுதூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல், அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.

அதன் பிறகு வெகுநேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதும் இல்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப்போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்துவிட்டன.
பஸ்ஸைக் காணோம்!

அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது. அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று அதன் நெற்றியில் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர், முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி, அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.

எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக்கொண்டிருப்பது? ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லா விதங்களிலும் விதிவிலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.

- வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நறநறவென்று கேட்கிறது.
பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காக சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கி, தனக்கும் சிறிது இடம் கேட்பதுபோல் தயங்கி நிற்கிறது.
''ஹேய்... இட் இஸ் மை பஸ்'' - அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரி குதிக்கிறாள்.

''பை... பை...''
''டாடா!''
கும்பலை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி; மற்றொருத்தி பெரியவள் - இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால், கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை; கலர் மாட்ச்சே இல்லாத - அவள் தாயாரின் புடவையில் கிழித்த - சாயம்போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து பிரஸ் பட்டன் வைத்துத் தைத்த ஒரு கறுப்பு மணிமாலை. காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த - அதிலும் ஒரு கல்லைக் காணோம் - கம்மல். 'இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்’ என்பதுபோல் சுடர்விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்.

அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப்போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு சின்ன உருவமாய் குளிரில் குறுகி, ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக்கொண்டு போய்விடலாம்போலக் கூடத் தோன்றும்.

''பஸ் வரலியே... மணி என்ன?'' என்று குடை பிடித்துக்கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.
''சிக்ஸ் ஆகப் போறதுடீ'' என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின், ''அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்'' என்று குடையை மடக்கிக்கொள்கிறாள் பெரியவள்.
''ஓ யெஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்திடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேருந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா, நானும் போயிடுவேன்'' என்று ஒப்பந்தம் செய்துகொள்வதுபோல் அவள் பேசுகையில், குரலே ஓர் இனிமையாகவும் அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற, சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி... ''சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ'' என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.

பஸ் வருகிறது... ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன. முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக்கொள்கிறாள்.
''பை... பை...''

''தேங்க் யூ! என் பஸ்ஸும் வந்துடுத்து'' என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முகமாற்றத்தைக் கண்டே, இவள் நிற்பது இந்த பஸ்ஸுக்காக அல்ல என்று புரிந்துகொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களும் இல்லாததால், பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்கிறான்.

அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந்தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்த கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் - எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக்கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்றுகொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கங்களும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவதுபோல் சடக்கென நின்று, நின்ற வேகத்திலே முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.

அவள் அந்த அழகிய காரைப் பின்னாலிருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட் வரை விழிகளை ஒட்டி ஓர் ஆச்சரியம்போலப் பார்க்கிறாள்.

அந்தக் காரை ஓட்டிவந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடதுபுறம் சரிந்து படுத்து, பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான்.
''ப்ளீஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்'' என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.

அவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு, காதோரமும் மூக்கு நுனியும் சிவந்துபோகிறது: ''நோ... தேங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழித்து... மழை விட்டதும் பஸ்லேயே போயிடுவேன்.''
''ஓ! இட் இஸ் ஆல் ரைட்... கெட் இன்'' என்று அவன் அவசரப்படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...
அவள் ஒருமுறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே, மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மேல் அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப்போய்க் கையை எடுத்துக்கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன்தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான்!

இப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே...
''ம்... கெட் இன்...''
இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே...


அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பதுபோல் சாலையில் வழுக்கிக்கொண்டு அந்தக் கார் விரைகிறது.
அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வெளிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு மேல் ஓர் அடி உயரத்தில் நீந்துவதுபோல் இருக்கிறதே...

'ஸீட்டெல்லாம் எவ்வளவு அகலமா இருக்கு. தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்’ என்ற நினைப்பு வந்ததும், தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது, அவளுக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன்பாக்ஸையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர், நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்துகொள்கிறாள்.

'இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இருந்தா வீடே வேண்டாம் - இவனுக்கும்... ஐயையோ - இவருக்கும் ஒரு வீடு இருக்கும்; இல்லையா? காரே இப்படி இருந்தா, இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்? பெரீசா இருக்கும்; அரண்மனை மாதிரி இருக்கும். அங்கே யாரெல்லாமோ இருப்பா... இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே... ஹை! இது என்ன நடுவிலே? ரெண்டு ஸீட்டுக்கும் மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! இது மேலே புத்தகத்தை வச்சுப் படிக்கலாம்; எழுதலாம்... இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுகிட்டு 'ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்ன விளக்கு எவ்வளவு அழகா இருக்கு; தாமரை மொட்டு மாதிரி இருக்கு; ம்ஹும், அல்லி மொட்டு மாதிரி! இதை எரியவிட்டுப் பார்க்கலாமா... சீ! இவர் கோபித்துக்கொண்டார்னா?’
''அதுக்குக் கீழேயே இருக்கு பாரு, ஸ்விட்ச்'' - அவன் காரை ஓட்டியவாறே, முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.

அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்துப் பார்க்கிறாள். பின்னர் 'பவரை வேஸ்ட் பண்ணக் கூடாது’ என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.

பிறகு தன்னையே ஒருமுறை பார்த்து, தலையிலிருந்து வழிகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்துவிட்டுக்கொள்கிறாள்.
'ஹ்ம்! இன்னிக்கின்னு போய் இந்தத் தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுக்கொண்டு வந்திருக்கேனே’ என்று மனத்திற்குள் சலித்துக்கொண்டே தாவணியின் தலைப்பைப் பிழிந்துகொண்டிருக்கையில் - அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து - 'டப்’ என்ற சத்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் - 'அட கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே - ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.


''தேங்க்ஸ்'' - அந்த டவலை வாங்கி தலையையும் முழங்கையையும் துடைத்துக்கொண்டு முகத்தைத் துடைக்கையில் - 'அப்பா... என்ன வாசனை!’ - சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக்கொள்கிறாள்.
ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள் ஒரு பக்கம் 'அம்மா’ என்று கூவிச் சரிய, ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களும் மற்றொரு பக்கம் சரிந்து அந்த வட்டவடிவமான சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன்பாக்ஸும் ஒரு பக்கம் உருளுகிறது.

''ஸாரி'' என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்த பின், காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்துகிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக்கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.

ஜன்னல் கண்ணாடியினூடே வெளியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை, அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வெளியே பார்க்கிறாள்.

தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்து கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக்குக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது!

'இதென்ன கார் இந்தத் தெருவில் போகிறது?’
''ஓ! எங்க வீடு அங்கே இருக்கு'' என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன.
''இருக்கட்டுமே, யார் இல்லேன்னா...'' என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.
'என்ன இது வம்பாப்போச்சு’ என்று அவள் தன் கைகளைப் பிசைந்துகொண்டபோதிலும், அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.
கார் போய்க்கொண்டே இருக்கிறது.

நகரத்தின் ஜனநடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பங்களாக்களும் பூந்தோட்டங்களும் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோட்டில் கார் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்துகொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியினால் அதில் ஒரு குதூகலம் இருந்தபோதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒருவகை பீதி உணர்ச்சி, அவளது அடிவயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்துகொண்டிருக்கிறது.

சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.

தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப்போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளும் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: 'சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ.’
'நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிக்கொண்டு தனியாகப் போவது தப்பில்லையோ?... அவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரி தெரியலியே. என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது. இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது... அழுதா அவர் கோபித்துக்கொண்டு 'அசடே இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுவிட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே. நாளைக்கு ஜுவாலஜி ரெக்கார்ட் வேற சப்மிட் பண்ணணுமே... வேலை நிறைய இருக்கு.’

அவளது பார்வை எதிர்ப்புறக் கண்ணாடியின் மீது கிடந்து அவளைப்போல் தத்தளித்துக்கொண்டிருக்கும் 'வைப்பரை’யே வெறித்துக்கொண்டிருந்தது. கடைசியில் தைரியமாக அவளை அறியாமலேயே அந்த வார்த்தைகளை அவள் கேட்டுவிடுகிறாள்:
''இப்ப நாம எங்கே போறோம்?'' - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.
''எங்கேயுமில்லை; சும்மா ஒரு டிரைவ்...''
''நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவாங்க.''
''ஓ யெஸ்... திரும்பிடலாம்.''
- கார் திரும்புகிறது. டிரங்க் ரோடைவிட்டு விலகி, பாலைவனம் போன்ற ஒரு திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகுதூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைந்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில் தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.

காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.
திடீரென கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: ''ஏன் கார் நின்னுடுச்சு? பிரேக்டௌனா?''
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடி இடிப்பதுபோல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காக காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும், அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.
அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பதுபோல் எதற்கோ கெஞ்சுகிறான்.
அப்போது ரேடியோவிலிருந்து ஒரு ட்ரம்ப்பட்டின் எக்காள ஒலி நீண்டு, விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ ட்ரம்களின் தாளம்... அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்ப கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி, 'உனக்குப் பிடிக்கிறதா?’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் 'ஆம்’ என்று சொல்லி தலை அசைக்கிறாள்.

ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு காட்பரீஸ் சாக்லேட்களை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லேட்டின் மேலே சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து, ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து, ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருந்து ஒலிக்கும் இசைக்கேற்ப தாளமிட்டுக்கொண்டு ஹாயாக உட்கார்ந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.

அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ஒட்டு உயரமாய் அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும், காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும்கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போதே பயத்தை ஏற்படுத்துகிறது. அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டுகிடக்கும் அவனது இடது கரத்தில், கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவனது புறங்கையில் மொசுமொசுவென்று அடர்ந்திருக்கும் இளமயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.
''ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!''-சாக்லேட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொள்கிறான்.

காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போதுதான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கிவிட்டான்.

''எங்கே?'' என்று அவள், அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வெளியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது.
''எங்கே போறீங்க?''
''எங்கேயும் போகலே... இங்கேதான் வரேன்.'' என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பமாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறான்.
அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த, சற்று முன் ஈரத்தைத் துடைத்துக்கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக்கொண்ட பின், கையிலிருந்த சாக்லேட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லேட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக்கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து, வாயிலிட்டுக்கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.
''என்ன அது?''
''சூயிங்கம்.''
''ஐயே, எனக்கு வேண்டாம்!''
''ட்ரை... யூ வில் லைக் இட்.''
அவள் கையிலிருந்த சாக்லேட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு, அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.
''நோ!'' - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின் மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.
அவளுக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெங்கும் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததை, தன் கையிலேயே வாங்கிக்கொள்கிறான்... ''தேங்க் யூ!''
அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால், அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவன் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கிவருவது தெரிகிறது.

அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக்கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.
''ஹவ் டு யூ லைக் திஸ் கார்?'' - 'இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்தரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமாய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: ''ஓ! இட் இஸ் நைஸ்.''
அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: ''உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாடியே அலைஞ்சிண்டிருக்கு - டு யூ நோ தட்?'' என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய்ம்மறந்துபோகிறாள்.
''ரியலி..?''
''ரியலி!''
அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது; அவனது ரகசியக் குரல் அவளது ஹிருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது; ''டு யூ லைக் மீ?''- 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’
''ம்'' - விலக இடம் இல்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.
வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த ட்ரம்ப்பட்டின் இசை புதிய புதிய லய விந்நியாசங்களைப் பொழிந்துகொண்டிருக்கிறது.
''ரொம்ப நல்லா இருக்குல்லே?''- இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.
''நல்லா இருக்கு... ஆனா பயம்மா இருக்கே...''

''பயமா? எதுக்கு... எதுக்குப் பயப்படணும்?'' - அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப்பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்ததுபோன்று அவள் நிலைகுலைந்துபோகிறாள்: 'எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு...''
''எதுக்கு இந்த சர்ட்டிஃபிக்கேட் எல்லாம்?'' என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.

''மே ஐ கிஸ் யூ?''
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்து, தேகம் பதறுகிறது.
திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப்போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ''ப்ளீஸ்... ப்ளீஸ்...'' என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி...
அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப்போகிறது. அவனைப் பழி தீர்ப்பதுபோல் இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.

வெளியே...
வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது! ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.
''நான் வீட்டுக்குப் போகணும்... ஐயோ! எங்க அம்மா தேடுவாங்க...''
காரின் கதவைத் திறந்துகொண்டு பின்ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷூஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது 'சளக்’ என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.

உடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுதுகொண்டிருக்கிறாள்.
முன்ஸீட்டின் கதவைத் திறந்து டிரைவர் ஸீட்டில் அமர்ந்த அவன், சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு, மூசுமூசென்று புகை விட்டவாறு சூயிங்கம்மை மென்றுகொண்டிருக்கிறான்.

இந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும்போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு ஹோவென்று கதறி அழுது, இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டும்போலவும், அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.

அவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறான். அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டுவருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளுக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டதுபோல், ஒரு சமயம் பயமாகவும் மறுசமயம் அருவருப்பாகவும் - அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட - அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டதுபோல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே...

நரி ஊளை மாதிரி ரேடியோவிலிருந்து அந்த ட்ரம்ப்பட்டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பதுபோல் வெறியேறிப் பிளிறுகிறதே...
அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கீறிச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள்: ''என்னை வீட்டிலே கொண்டுபோய் விடப்போறீங்களா... இல்லையா?''

அவனது கை டப் என்று ரேடியோவை நிறுத்துகிறது.
''டோன்ட் ஷவ்ட் லைக் தட்'' அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான்: 'கத்தாதே!’
அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள்: ''எங்க அம்மா தேடுவாங்க... என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம்'' என்று வெளியே கூறினாலும், மனதிற்குள் 'என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ என்னென்னவோ ஆயிடுத்தே’ என்ற குழப்பமும், எங்காவது தலையை மோதி உடைத்துக்கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்க, பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.

''ப்ளீஸ்... டோன்ட் க்ரியேட் ஸீன்ஸ்'' என்று அவளைக் கெஞ்சி வேண்டிக்கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்.
அந்த இருண்ட சாலையில் கண்களைக் கூசவைக்கும் ஒளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்துகொண்டிருக்கிறது கார்.
'சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கல்லேன்னா, அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப்பொழுது பாழாகிவிட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜிலே படிச்சு என்ன பண்ணப்போகுதோ? இன்னும்கூட அழறாளே...’ - அவன், அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறான்: ''ஐ ஆம் ஸாரி... உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவுசெய்து மன்னித்துக்கொள்'' - அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு, இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்ற அவசரத்தில், அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.

இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.
சந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களும் பூந்தோட்டங்களும் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, ஜனநடமாட்டம் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார், ஒரு குறுக்குத் தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
'இங்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக்கொள்ளுகிறேன்’ என்று அவளாகச் சொல்வாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்து காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவகாரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு, அவனே ஓர் இடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான்: ''வீடு வரைக்கும் கொண்டுவந்து நான் விடக் கூடாது; அதனாலே
நீ இங்கேயே இறங்கிப் போயிடு... ம்'' - அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்றஉணர்வில் அல்லது கடன்பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில், அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கிவந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காக காரின் கதவைத் திறந்துகொண்டு மழைத் தூறலில் நின்றுகொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக்கொண்டு, கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்டவடிவமான எவர்சில்வர் டிபன்பாக்ஸைத் தேடி எடுத்துக்கொண்டு, கீழே இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.

அந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜனநடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்துகொண்டிருக்கும் தெருவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில், தன் அருகே குள்ளமாய்க் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்துகொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே தன்னை எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.


'ஆம். அடிமை! - உணர்ச்சிகளின் அடிமை!’ என்று அவன் உள்ளம் உணர்கிறது. அவன் அவளிடம் ரகசியம்போல் கூறுகிறான்: ''ஐ ஆம் ஸாரி!''
அவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள். ஓ! அந்தப் பார்வை! அவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன: ''என்ன..?'' என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப்போகிறது.
''ஒண்ணுமில்லே...'' என்று கூறி அவள் நகர்கிறாள்.

அவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில், காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வெளிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.
கூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு காற்றில் அணைந்துபோயிருந்தது. சமையலறையில் கைவேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டுபோய் ஏற்றிக்கொண்டுவந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு, திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது அவள் படியேறிக்கொண்டிருந்தாள்.

மழையில் நனைந்து தலை ஒரு கோலம், துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்த்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: ''என்னடீ இது, அலங்கோலம்?''
அவள் ஒரு சிலை அசைவது மாதிரி கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். ''அம்மா!'' என்று குமுறிவந்த அழுகையை, தாயின் தோள் மீது வாய் புதைத்து அடைத்துக்கொண்டு, அவளை இறுகத் தழுவியவாறு குலுங்கிக் குலுங்கி அழுதாள்!
அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது புரிவதுபோலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.
''என்னடீ, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு?'' தன் மீது விழுந்து தழுவிக்கொண்டு புழு மாதிரி துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையால் கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தாள்: ''ஏண்டி, ஏன் இப்படி அழறே... சொல்லு.''
தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன் மீது ஒட்டிக்கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப்பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.
அந்தப் பேதைப் பெண் சொல்லிக்கொண்டிருந்தாள். ''மழை கொட்டுக் கொட்டுனு கொட்டிச்சு! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன்... அப்புறம் எங்கேயோ காடு மாதிரி ஒரு இடம்... மனுஷாளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா, எனக்கோ வழியும் தெரியாது. நான் என்ன பண்ணுவேன்... அப்புறம் வந்து... வந்து... ஐயோ! அம்மா... அவன் என்னெ...''
- அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் புறத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன்பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.

''அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே...'' என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.
அது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.
''என்னடி, என்ன விஷயம்?'' என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக்கொண்டு சுவாரசியமாய் விசாரித்தவண்ணம் கூடத்துக்கே வந்துவிட்டாள் பின்கட்டு அம்மாள்.
''ஒன்றுமில்லை... இந்தக் கொட்டுற மழையிலே... அப்படி என்ன குடி முழுகிப்போச்சு? தெப்பமா நனைந்துகொண்டு வந்திருக்கிறாள். காசை, பணத்தைக் கொட்டிப் படிக்கவச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரித்திருப்பான்'' என்று பொய்யாக அங்கலாய்த்துக்கொண்டாள் அம்மா.
''சரி... சரி... விடு. இதுக்குப்போயிக் குழந்தையே அடிக்காதே'' - பின்கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை; போய்விட்டாள்.
வாசற்கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக்குட்டி மாதிரி சுருண்டு விழுந்து - அந்த அடிக்காகக் கொஞ்சம்கூட வேதனைப்படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக்கிடந்த மகளை எரிப்பது«பால் வெறித்து விழித்தாள் அம்மா.
'இவளை என்ன செய்யலாம்?... ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே. தெய்வமே, நான் என்ன செய்வேன்?’ என்று திரும்பிப் பார்த்தாள்.
அம்மாவின் பின்னே சமையலறையில் அடுப்பின் வாய்க்குள் தீச்சுவாலைகள் சுழன்றெரிய கங்குகள் கனன்றுகொண்டிருந்தன.
'அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று.
- அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப்போல் நெளிந்து, கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது.
'அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய்விடுமா? ஐயோ! மகளே, உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா? நானும் என் உயிரைப் போக்கிக்கொண்டால்?’
'ம்... அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?’ - அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப்பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.
நடுக்கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளிகூட்டி அதைக் கையில் எடுத்துக்கொண்டு மகளின் அருகே வந்து நின்று, அவளைத் தலை முதல் கால் வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக்கொண்டு ''ஐயோ அம்மா! என்னெ பார்க்காதேயேன்'' என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக்கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்.
'அட கடவுளே! அந்தப் பாவிக்கு நீதான் கூலி கொடுக்கணும்’ என்று வாயைப் பொத்திக்கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளை தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக்கொண்டு, தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். 'என் தலையெழுத்தே’ என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ, இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து, அவளைக் கைப்பிடியில் இழுத்துக்கொண்டு, அரிக்கேன் விளக்குடன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு, இந்த ஒன்றுமறியாப் பேதையின் மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக்கொண்டாள் அம்மா.
குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின் மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.

கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி நிற்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளையெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்திவிட்டாள். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு ஒரு யந்திரம் மாதிரி குறுகி உட்கார்ந்த அவள் தலையில், குடம் குடமாய்த் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: ''உனக்கு அவனைத் தெரியுமோ?''
''ம்ஹீம்...''
''அழிஞ்சுபோறவன். அவனை என்ன செய்தால் தேவலை!'' - பற்களைக் கடித்துக்கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக்கொண்டு கண்களில் கொலைவெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன், பற்களைக் கடித்துக்கொண்டு நிமிர்ந்து நின்றாள்.
'ம்... வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ - என்று பொங்கிவந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பதுபோல் இன்னும் ஒரு கை சீயக்காயை அவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்!
ஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாகவிட்டு இறந்துபோன தன் கணவனை நினைத்துக்கொண்டு அழுதாள்: 'அவர் மட்டும் இருந்தாரென்றால் -  மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பாக்காமல் போய்ச் சேர்ந்தாரே?’
''இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே!
தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சுபோகும். நம் வீட்டிலேயும் ஒரு பெண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே தெரியாது. பரம்பரைத் துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணி... மற்றவர்களைச் சொல்றேனே; இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு'' என்று புலம்பிக்கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையைத் துவட்டிய பின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள்கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப்பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள்.
''நீ சுத்தமாயிட்டேடி... உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி... நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே.
நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பாக்கறே? நான் சொல்றது சத்யம். நீ சுத்தமாயிட்டே... ஆமா - தெருவிலே நடந்துவரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார். எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும். ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாதத் தூளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா. ஆனா, அவ மனசாலே கெட்டுப்போகலை. அதனாலேதான் ராமரோட பாதத் தூளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா - வீணா உன் மனசும் கெட்டுப்போயிடக் கூடாது பாரு... கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு... உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே...''
கொடியில் துவைத்து உலர்த்திக்கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.
''அதென்ன வாயிலே சவக் சவக்குனு மெல்லறே?''
''சூயிங்கம்.''
''கருமத்தைத் துப்பு... சீ!... துப்பு. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்பளிச்சுட்டு வா'' என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.
சுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை, 'கொழந்தே, எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுன்னு கடவுளை வேண்டிக்கோ - இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வயசுக்கு வந்த பெண்ணை வெளியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமப்போச்சே! என் கொழந்தே காலேஜுக்கும் போறாளே என்கிற பூரிப்பிலே எனக்கு ஒன்றுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தைதானே... ஆனா நீ இனிமே உலகத்துக் கொழந்தை இல்லேடி! இதை மறந்துடு... என்ன, மறந்துடுன்னா சொன்னேன். இல்லே; இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்துலே மட்டும் வேண்டியவங்க, நெருக்கமானவங்கன்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லல்லேன்னு என் கைலே அடிச்சு சத்தியம் பண்ணு... ம்!'' - ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் தன் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது தன் கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: ''சத்தியமா... யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.''

''பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வருகிறாளே... சமத்து சமத்துன்னு நினைச்சுட்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆயிருக்கே. எப்பவும் இன்னமே சமத்தா இருந்துக்கோ'' என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.

அந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்துவிளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல, அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறையே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டுகொண்டாள்.
அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ற பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் - தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.

 [ நன்றி : விகடன்; ஓவியங்கள் : ஸ்யாம்  ]


தொடர்புள்ள பதிவுகள்:

ஜெயகாந்தன்


சனி, 23 ஏப்ரல், 2016

ஜெயகாந்தன் -2

அக்ரஹாரத்துப் பூனை 
             
ஜெயகாந்தன்


ஏப்ரல் 24. ஜெயகாந்தன் பிறந்த தினம்.

இந்தக் கதை 1968 விகடன் தீபாவளி மலரில் வந்தது.




==========




எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்... அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும்.
35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும் நினைவுகளும்தானே!
நான் பார்த்த ஊரும் - இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது என்ற உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப்போன அந்த அக்ரஹாரத்து வீடுகளும், இவர்கள் என்றைக்குமே புதுமையுற மாட்டார்கள் என்கிற மாதிரித் தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வதிலே ஓர் அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.
நான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்துகொண்டுவிட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கிவிட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களுக்கு அப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும்போது - கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா? - காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன்.
அந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலேயே நான் சற்று உட்கார்ந்துகொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும். கூழாங்கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருந்திருக்கலாமே... எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக்கொண்டோம்?
வெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லோரும், பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீது வரிசையாக வந்து நின்று ஒவ்வொருவராக 'தொபுக்’ 'தொபுக்’ என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு 'ரிப்பன்’ கோவணத்தை இழுத்து இழுத்துச் செருகிக்கொண்டு மறுபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர்.
நான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம்.
நான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள், என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் 'தேமே’னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம். 'ச்சீ, பாவம்டா! அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனாப் போறது; நீ வாடா அம்பி. அவா உன்னைச் சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சிபோயிட மாட்டே. நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்... காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா?’ என்றெல்லாம் என்மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு, எனக்கு மனசுக்கு இதமாக வெதுவெதுவென்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கிவிடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். 'போ! போ!’ என்று ஓடுவேன்.
எனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள், தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவுகூட இல்லை.
என் அம்மா என்னைக் கூப்பிடற பேரே 'ஏ! கடன்காரா’தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் 'தேமே’னென்று தோற்றமளிக்கிற நான், வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன்.
என்ன விஷமம்? ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது 'தேமே’னென்று உட்கார்ந்திருக்கும் நான் 'தேமே’னென்று குறுக்கே காலை நீட்டுவேன். கீழே விழுந்து 'ஓ’வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் 'தேமே’னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுதுகொண்டே கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான்தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்துவிடும்கள்.
''கடன்காரா! செய்றதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா?'' என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்துவிட்டுக் ''கையெல்லாம் எரியறது... எருமை மாடே!'' என்று நொந்துகொண்டு விரட்டுவாள்.



''ஏண்டி அவனை அடிக்கறே! பாவம், அவன் 'தேமே’ன்னுதானே இருக்கான்'' என்று யாராவது அடுத்த வீட்டு - எதிர் வீட்டு மாமி வந்து - அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் 'தேமே’னென்று இருந்துகொண்டே ஏதாவது செய்துவிடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக்கொள்வேன்... காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கறது. திடீர்னு, ''மாமி.. இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா''னு கத்துவேன்.
''வேற யாரு? எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்'' என்று அவர்கள் வீட்டுக் கடன்காரனைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்... ஒரு நிம்மதி.
என் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக்கொண்டே இருப்பாள்: ''அவனை நம்பாதீங்கோ... பாத்தா 'மொசுமொசு’ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம். என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்... அடிச்சா பாவம்னு அந்த மாதிரி...''
அதைக் கேட்டு 'ஏண்டா, அப்படியா?’ என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் தேமேனென்று அவளைப் பார்ப்பேன்.
''ச்சீ, போடி! என்னத்துக்குக் கொழந்தையே இப்படிக் கரிச்சிக் கொட்டறே! நீ வாடா...'' என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக! சுகமாக இருக்கும்! ஆனால், அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக்கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்!
சரி, நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன்! அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்திச் சொல்ல வந்து அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிக் கொண்டு இருக்கேன்? இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதுலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பாக்கப்போனா, நான் சொல்லிக்கொண்டு பேசிக்கொண்டு எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாருமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கௌரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லாருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா அப்ப இருந்தது. இப்ப எப்பிடி இருப்பானு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சிலபேர் எக்கச்சக்கமாப் பட்டணத்தின் 'மெர்க்குரி லைட்’ வெளிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக்கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சி போனது, உடைஞ்சி போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப் போனது, அடிபட்டும் 'ஒண்ணுமில்லை’யேனு உடம்பெத் தொடச்சிவிட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக்கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப் பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்கு சலிப்பே கெடையாது; அலுப்பே கெடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி!
ஆனா, அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப்போச்சுப்போலே இருக்கு... ம்ஹும்! பயமா இருக்குப் போலே இருக்கு. என்னமோ சங்கடப்பட்டுக்கிறா, 'என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு’னு.
நான் என்ன பண்ணுவேன்? எனக்குத் தெரிஞ்சதைத்தானே எழுதுவேன். சரி, இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு; எனக்குத் தெரிஞ்சு ஒரு பூனையைப் பற்றி எழுதப்போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ, சலிப்போ, பயமோ, சங்கடமோ வராது. பூனைகள், கதை படிக்கிறதோ கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத்தான் ஆஷாடபூதி மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரிக் குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.
எனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம்கூடப் பிடிக்கிறது இல்லை. ஓர் அவெர்ஷன்! சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல்போறது மனுஷ இயல்புதானே? அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதெயெல்லாம் யாருக்குத்தான் பிடிக்கும்? யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது. அப்போவெல்லாம் எனக்குப் பொழுதுபோக்கே கொலை பண்றதுதான்.
'தேமே’ன்னு உட்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்சு, ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது... ஒரு குச்சியிலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுனு ஆராயறது, பல்லியை அடிச்சு, வால் துடிக்கறதெப் பாக்கறது, தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி சங்கீதம் பாடவைக்கிறது, மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்துலே நான் ஒரு யமகிங்கரன்! எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்!
ஜெயா மாமி வீட்டுத் திண்ணையிலே நான் பாட்டுக்குத் 'தேமே’ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்திலே ஒரு குவியல் கருங்கல், நானே செலக்ட் பண்ணி சேர்த்துப் பொறுக்கிவெச்சது. அதோ, தூரத்திலே ஒரு நாய் வர்றது. இதுக்கு முன்னயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓடவெச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுற அதுக்கு இருக்காதா? இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்ந்துண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து! 'டேய்! அடிப்பியா? நான் பாட்டுக்குப் போயிடறேன்டா’ என்பதுபோல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பின்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண்டு பின்னங்காலுக்கும் நடுவிலேயும் வாலை இடுக்கிண்டு என் மேல் வெச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சிண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது... அடச்சீ! அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டுற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது! தலையிலே குறி வெச்சாத்தான் காலிலே படும். பட்டுடுத்து! நான் 'தேமே’ன்னு உக்காந்திருக்கேன்.
சத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. 'சடக்’னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன்.
''ஏண்டா, நாயை யாரு அடிச்சது?''
''ஐயையோ, நான் இல்லே மாமி.''
''சரி, யாரையாவது கூப்பிடு. 'வெந்நீர் உள்’ளே (நீர் கொதிக்க வைக்கும் இடம்) ஒரு பெருச்சாளி வெளியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி.''
அவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்ட்டு நான் போறேன். மாமி கத்தறா: ''வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு, அது உன் மேலே பாஞ்சுடும்.''
'வெந்நீர் உள்’ மூலையிலே அதை 'கார்னர்’ பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து 'நச்’னு ஒரு அடி, சனியன்! தம்மையே பிரதட்சணம் பண்ணிக்கிற மாதிரி சுத்தி சுத்தி வெந்நீர் உள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி 'மாமி மாமி’ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடிச்சிண்டா.. ''நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனேன்னோ... கருமத்தைப் பார்க்காதே. வா, ராக்காயி வந்தா, கழுவிவிடச் சொல்லலாம்.''
பயந்து நின்னிண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கறாள். பெரியவா அணைச்சிண்டா என்ன சுகமா இருக்கு!
அந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா, எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால், நான் அழுதிருப்பேன்.
கொலை செய்றதைத் தவிர, இன்னொரு பொழுதுபோக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வெச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே டபிள்ஸ்தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்சக் கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவனைப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்ல இருக்கும். சைக்கிள் ஹாண்ட்பார்ல ஒரு காக்கிப் பை இருக்கும். அதுலே ஒரே ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும், அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வெச்சிண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சிக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன், பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலே வெட்டுவேன்.
நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன்? அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன்? பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன்:
எங்க அக்ரஹாரத்துலே பூனையும் உண்டு. ரொம்ப 'நொட்டோரியஸ்!’ பூனைன்னா ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரிவரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வெச்சிருக்கோ? பூனை மாமிசப்பட்சிணிதானே! இது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் 'தேமே’ன்னு இருப்பேன். அதுவும் 'தேமே’ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும்.
ஒருநாள் ஜெயா மாமி 'ஓ’ன்னு அலறிண்டு சபிச்சா: ''இந்தக் கட்டேல போற பூனை ஒரு படிப் பாலையும் சாச்சிக் கொட்டிடுத்தே! அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக்கூடத் தேவலை!''
ஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: ''வாயே அலம்புடி... பாவம், பாவம்! பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகா பாவம்!''
நான் 'தேமே’ன்னு நின்னுண்டு கேட்டிண்டிருந்தேன். பெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்கும் தெரியும். பெருச்சாளி சீறித்தே - ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி... பூனை மொதல்லே பயப்படும்; கத்தும்; ஓடப் பார்க்கும். ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக்தான்! எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே... சின்னக் குழந்தையாத் தவழ்ந்துண்டு இருந்த பருவம்... பூனையைப் புடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன்.. எக்குத்தப்பா கழுத்தெப் புடிச்சிட்டேனாம்... சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டற தாம். நான் 'ஓ’ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறனாம்.. அம்மா இப்பவும் சொல்லுவா. அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு.
அன்னக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்க வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போறபோக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சிப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னாத் திரும்பிண்டு என்னையே மொறைச்சிப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே, கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். இது என்ன பயப்பட மாட்டேங்கறதேன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது. அது ஒரு மௌனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே... 'மியாவ்’னு அது கத்தினப்போ, அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது.
'அதெல்லாம் பெருச்சாளிகிட்டே வைச்சிக்கோ... நம்ம கையிலே நடக்காது.’
'இரு... இரு... ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்...’
'மியாவ் - சும்மா பூச்சி காட்டாதே; மொதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே?’ - சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலெ நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது.
'எங்கே போயிடப் போறே?’ உன்னைப் பிடிக்கலேன்னா, பேரை மாத்தி வெச்சிக்கோன்னேன் நான்.
அதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் - 'பார்ப்போமா’னு அதுக்கு அர்த்தம்.
'ம்... பார்க்கலாம்...’னேன்.
அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேலே ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்ந்துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு காச்சுமூச்சுனு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு... எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேலே ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு 'பொத்’னு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்திண்டிருந்த தாத்தா தடிய எடுத்துத் தரையிலே தட்டி 'சூச்சூ’னு வெரட்டறா. ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வெளிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன்.
அடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து 'வெந்நீர் உள்’ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்திண்டிருந்தேன். கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் 'பூனைப் பெரியவாள்’ வந்தா. சொல்லிவெச்ச மாதிரி 'வெந்நீர் உள்’ளே போனா. நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்... மெதுவா அடி மேலே அடிவெச்சுப் பூனை மாதிரி போனேன். 'அவா’ பின்னம் பக்கம் மட்டும்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. 'டப்’னு கதவை மூடிட்டேன்... உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே.
''மாமி... மாமி! ஓடி வாங்கோ ஓடி வாங்கோ! 'பெரியவா’ இங்கே சிக்கிண்டா''ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா... பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு.
''என்னடா! 'வெந்நீர் உள்’ளே பூனையெ வெச்சு மூடிட்டா, நாம எப்படி உள்ளே போறது? நாம உள்ளே போறச்சே அது வெளியே போயிடாதோ!''
''இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சி ருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்க... கடைசிக் கட்டத்திலே கூப்பிடறேன்.''
மாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு.
''அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்திற்கும் மகா பாவம், வேண்டாம்.''
''நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டுபோய் வெரட்டிவிட்டுடறேன்.''
''ஆமா.. வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக் குள்ளே அது இங்கே வந்து நிக்கும்.'' - ஜெயா மாமி பரிகாசம் செய்துவிட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன். அதைத் 'திரும்பி வராத ஊரு’க்கு அனுப்பிச்சுட்டுத்தானே வரப் போறேன்.
அக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ! விளையாடும்போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். 'ஹோ’ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா.
''ஏ, கடன்காரா! கட்டேல போறவனே..அழிஞ்சிப்போகாதே. பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்... சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி...''
அதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக்கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும்.
''கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா. வேடிக்கை காட்டலாம்டா''னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது?
''அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன்கிட்டே குடுத்தாப் போதும். அப்படியே கோணியோட வச்சு ஒரு 'சதக்’... ஆட்டம் குளோஸ்!''
''அவன்கிட்டே நீதான் கேக்கணும்'' என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை. பயந்துடுவான்கள்.
''டேய்..! நீங்கள்லாம் ஆத்துக்குப் போங்க. அவன் வெட்டறதைப் பார்த்துப் பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா!'' பையன்களையெல்லாம் வெரட்டறேன்.
''அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினாளே... நீ, காட்டினியே... நான் பயந்தேனா?... நான் இருக்கேண்டா.''
''ஆனா, ஒண்ணு... இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ!''ன்னு கேட்டேன்.
''சத்தியமா சொல்ல மாட்டோம்.'' - எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ்.
கடாமீசைக்காரனை நாங்களெல்லாம் எதிர்பார்த்திண்டிருக்கோம்.
கடைசீலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக்கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டாங்க: ''நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம், நீ போய் கேளுடா''ன்னு என்னைத் தள்ளிவிட்டான்கள். எனக்கென்ன பயம்?
கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட்மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே!
அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமயே நிக்கிறான். அம்மாடி... அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்.
''ஒரு சின்ன உதவி...''
''அதென்ன கோணியிலே?'' - அவன் குரல் கிருஷ்ணலீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது.
''பூனை... ரொம்ப லூட்டி அடிக்கிறது. அதுக்காக அதைக் கொன்னுடறத்துக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்.''
''நீயேவா புடிச்சே?'' - நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன்.
''வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?''ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேக்கறான்.
''ஊஹூம்... நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்.''
''ஓ!''ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்;
''பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே... ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே... நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?''
''உவ்வே! வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்.''



''அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப, நீ பார்த்திருக்கிறியா?''
''ஓ, பார்த்திருக்கேனே, நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே.''
''மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசுகீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை. அது பாவம். என்னா சொல்றே?''
''இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்.''
அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏத்திண்டே சொன்னான்; (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது) ''வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா? த்சு... த்சு..! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன். வெளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?''
எனக்கு உடல் வெடவெடக்கிறது.
''ம்... அந்தப் பூனை விஷமம் பண்றதே?''
''நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே, சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டிவெக்கச் சொல்லு''ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிடுத்து பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன்!
அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழறேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே... 'நான் விளையாட்டாக் கொலை செய்த வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்... எல்லாத்தையும் நெனைச்சிண்டு அழுதேன்...
நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லே. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும், இல்லையா?
[ நன்றி : விகடன்; ஓவியம் : மாயா  ]


தொடர்புள்ள பதிவுகள்:

ஜெயகாந்தன்

பி.கு.

அண்மையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்  கீழ்க்கண்ட காணொளியில் இந்தக் கதையைப் பற்றிப் பேசினதும், எனக்கு இந்தக் கதையைப் பற்றிய நினைவு மீண்டும் எழவே, அதை இங்கே இட்டேன்.