மதுரை மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரை மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஜூன், 2022

2143.சங்கீத சங்கதிகள் - 312

மதுரகான மணி


[ ஓவியம்: கோபுலு ]

1959. மதுரை மணி ஐயர் 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற வருடம். அப்போது 'கல்கி'யில் வந்த கட்டுரை.



சங்கீத வித்வத் சபையில் அவ்வருடம் எடுக்கப் பட்ட இரு படங்கள்.

விழாத் தலைவர் பேசுகிறார்.



மதுரை மணி ஐயர் தலைமை தாங்குவதை ஆதரித்து ஜி.என்.பி. பேசுகிறார்.


[நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

வெள்ளி, 2 ஜூலை, 2021

1894. சங்கீத சங்கதிகள் - 283

 சங்கீத மேதாவி 


1944-இலேயே கல்கி இவரை அட்டைப் படம் மூலம் கௌரவித்தது. படவிளக்கமும் 'கல்கி'யின் கைவண்ணம் தான் என்று எண்ணுகிறேன். 


 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

ஞாயிறு, 7 ஜூன், 2020

1556. சங்கீத சங்கதிகள் - 235

மதுர மணி


ஜூன் 8. மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.

முதலில் "கல்கி" யில் வந்த அஞ்சலி.



அடுத்துச்  'சொல்வனம்' இதழில் வந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள். 1960-இல் தி.ஜா. எழுதியது.

மதுர மணி
 தி.ஜானகிராமன் 


பதினைந்து ஆண்டுகட்குமுன் திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இலக்கிய மேதை கு.ப.ரா.வின் குடும்ப நிதிக்காக மணி அய்யர் செய்த கச்சேரி மறக்க முடியாத வகையில் அவர் செய்திருக்கும் எத்தனையோ கச்சேரிகளில் ஒன்று. கச்சேரி முடிவில் பேசிய தேசத் தொண்டர் டாக்டர் சாமிநாத சாஸ்திரியார், “மதுரை மணி அய்யர் என்பதைவிட மதுரமணி அய்யர் என்பதே பொருந்தும்” என்று கூறினார். பதினைந்து ஆண்டுகட்குப் பிறகு மதுரமாக முதிர்ந்துள்ளது அந்த மதுர சங்கீதம்.

கர்நாடக சங்கீத பரம்பரையில் இன்று மக்களை அதிகமாகக் கவர்ந்தவர் யாராவது உண்டு என்றால் அது மதுரமணி அய்யர்தான். அவருடைய கச்சேரி நடக்கும் இடத்தில் உள்ளேயும் வெளியேயும் நிறைந்து வழியும் மக்கள் திரள் ஒன்றே இதற்குச் சான்றாகும். ‘மக்களுக்குப் பிடித்தது மெத்தப் படித்தோரைக் கவராது’ என்ற பெரிய மனித முசுமுசுப்பையும் இங்கே காண முடியாது. பெரிய கலைமேதை ஒருவன் படித்தவர்களையும் நுணுக்கம் தெரிந்தவர்களையும் மட்டும் கவர்வதில்லை. செவியுள்ள, சுவையுள்ள எல்லா உள்ளங்களையும் கவர்ந்து விடுகிறான். மதுர மணி அய்யரின் சங்கீதமானது சங்கீதத்தில் முதிர்ந்த ஞானமுள்ளவர்களிலிருந்து சாதாரண ரசிகன் வரை – அத்தனை பேர் நெஞ்சையும் அள்ளக்க்கூடிய தனிப்பெருமை படைத்தது. அதாவது, உண்மையான மேதை. கலை விஷயங்களில் உண்மை மேதையானது சாஸ்திர அறிவுக்கும் மேற்பட்ட ஒரு நிலையில் நின்று உலகம் அனைத்தையும் கவர்ந்து விடுகிறது.

கச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.

இவ்வளவு சக்தி அவர் சங்கீதத்தில் ஓங்கி நிற்பதன் ரகசியம் என்ன? அவருடைய சுருதி உணர்வும், ஸுஸ்வர கானமும், அழுத்தமாக உள்ளே இழைந்து அமைந்து விட்ட லய உணர்வும்தான்.

இவ்வளவு சுருதி உணர்வு குரலில் எந்தக் கணமும் கைவிடாமல் கவ்விவரும் நற்பேறு கர்நாடக சங்கீதத்தில் இன்றுள்ள அநேக வித்வான்களுக்குக் கிட்டவில்லை. உரிய காலத்தில் போதிய சாதகமின்மை காரணமாக இருக்கலாம், பிறவிக் குணமாகவும் இருக்கலாம், சாதகமின்மை என்று ஒரேயடியாகவும் சொல்லிவிட முடியாது. இன்று முன்னணியில் நிற்கும் வித்வான்கள் சாதகத்தில் பின்வாங்கியதில்லை. ஆனால், வருங்கால வித்வான்களைப்பற்றி ஒருவிதக் கவலை பலருக்கு இருந்து வருகிறது. சாதகத்தை இரண்டாம் பட்சமாக வைத்து இன்று செய்யப்படும் சங்கீதப் பயிற்சியைப் பார்க்கும்போது சுருதி சுத்தமான கானத்திற்குக் காலம் உண்டோ என்றெல்லாம் கலக்குமுறத் தோன்றுகிறது.

மணி அய்யர் பிறவியிலேயே இனிமையான சாரீரம் படைத்தவர். குரல் உடையும் பருவத்தில் சிரமசாதகம் செய்து அதைக் காப்பாற்றித் தனி மெருகும் ஏற்றிவிட்டார்.

மணி அய்யரின் சங்கீதத்தில் இன்னொரு தனிப் பெருமை அதன் விச்ராந்தி. சுருதி, லயம் இரண்டிலும் உள்ள நிச்சயமான பிரக்ஞையினால், அவருடைய புகழ் பெற்ற, பிரமிக்க வைக்கிற ஸ்வரகல்பனைகளில்கூட ஒரு அமைதி விரவி நிற்கிறது. விரைவான கதிகளிலோ, சிக்கலான ஸ்வரப் பின்னல்களிலோ கூட இந்த அமைதி நிலை ஊடாடி நிற்பதால் கேட்போர் உள்ளத்திலும் ஒரு பிரமிப்புக் கலந்த அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்றி விடுகிறது அது. யுத்தகள ரகளை, அதட்டல், இரைச்சல், விவகார கெடுபிடி – இவைகூட சங்கீதத்தின் பகுதிகள் என்று சிலர் கூறலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக சங்கீதத்தின் உயிர் ஆனந்த அனுபவம். தன்னை மறந்த ஒரு நிலைக்கு ஏற்றுவதுதான் அதன் பயன். நீண்டகாலம் அதன் கார்வைகள் கேட்போரின் உள்ளத்தே ஒலிக்க வேண்டும். இந்த ஆனந்த அனுபவத்தை மணி அய்யரிடம் இந்நாடு கணக்கற்ற முறை அடைந்திருக்கிறது.

எந்த ராகத்தையும் தனக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்து அனுபவித்து, அதனுடைய ஜீவகளைகளையெல்லாம் சுருக்கமாகத் திரட்டி அவர் அளிப்பதால் ரசிகர்களுக்குக் குறையில்லாத ஒரு திருப்தி கிடைத்து விடுகிறது.

எல்லா மேதைகளையும் போலவே மதுர மணி அய்யரின் நடை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய ஒரு தனி நடை. இதை ஸ்வரம் பாடும்போது மட்டுமின்றி, ராக சஞ்சாரத்திலும் கீர்த்தனைகளிலும் காண முடியும். வெட்டி வெட்டி, கத்திரித்துக் கத்திரித்துப் பாடுகிறார் என்று சிலர் சொல்லலாம். அது ஒரு கலைஞனின் நடை. தனக்காக வகுத்துக் கொண்ட நடை. அது கலைஞனின் உரிமை. ஒரு குறையையே நிறைவாகவும் அழகாகவும் மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் ஒரு மேதைக்கு உண்டு. அடுக்குக் காசித் தும்பை மலரில், புள்ளிகள் கொண்ட வகை உண்டு. அந்தப் புள்ளிகள் குறைகளல்ல. மலரின் அழகைப் பெருக்குபவை. மணி அய்யரின் கத்திரிப்பு நடைகூட ஒரு தனி அழகாகவே காலப்போக்கில் அமைந்து விட்டது.

மணி அய்யரின் தோடி, காம்போதி, சங்கராபரணம், மோகனம், ரஞ்சனி, ஆபோகி முதலியவற்றை யாரும் மறக்க முடியாது. அதேபோல காபிநாராயணி, சித்தரஞ்சனி, கன்னட கௌள முதலிய அபூர்வ ரகங்களில் உள்ள மிகச் சின்ன கீர்த்தனைகளைப் பெரும் காவியங்களாக அவர் பாடிக்காட்டும் தனித்திறமையும் பலர் உணர்ந்திருக்கிறார்கள். பாரதி பாட்டுகளை அவர் பாடும்போது அந்த மந்திரச் சொற்களுக்கு ஒரு புது வேகத்தையும் அர்த்தத்தையும் ஊட்டியிருக்கிறார். சங்கீதப் பெரிய மனிதர்கள் இதெல்லாம் துக்கடா நேரத்துக்காக ஆனவை என்று கீழ்நோக்குடன் புன்னகைக்கலாம். ஸாஹித்யம் பிரதானமில்லை என்ற விதண்டாவாத நிலையினால் பிறந்த துர்ப்பாக்கியம் இது. இதற்காக நாம் மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. விவேகம் சொல்லி வராது.

மதுரமணி அய்யரின் சங்கீதம் உன்னதமானது என்று இன்னொரு வகையிலும் சொல்ல வேண்டும். அது தெய்வத்தின் முன் நிற்கும் ஒரு பரிசுத்த நிலையை, ஒரு ஆனந்த மோன நிலையைப் பல சமயங்களில் உண்டாக்கியிருக்கிறது. இத்தகைய கலைஞர் பல்லாண்டு வாழவேண்டும். இதே விச்சராந்தி, சுருதிலயப் பிரக்ஞையைச் செயலில் காட்டும் திடகாத்திரத்தை இறைவன் அவருக்கு அருள வேண்டும்.

[ நன்றி: சொல்வனம் : கட்டுரை  ]



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்



தி.ஜா.வின் முழுக்கட்டுரையைப் படிக்க :

செவ்வாய், 24 அக்டோபர், 2017

880. சங்கீத சங்கதிகள் - 134

மதுரை மணி ஐயர்
பா.சு. ரமணன் 


அக்டோபர் 25. மதுரை மணி ஐயரின் பிறந்த தினம்.
=== 
இசையுலகில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர் 'கான கலாதர' மதுரை மணி ஐயர். 'மதுர' மணி ஐயர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இவர் மதுரையில், எம்.எஸ்.ராமசுவாமி ஐயர் - சுப்புலட்சுமி தம்பதியினருக்கு அக்டோபர் 25, 1912 அன்று பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். தந்தை இசை ஆர்வலர். அக்காலத்தின் பிரபல இசைமேதை புஷ்பவனத்தின் சகோதரர். அதனால் இசைஞானம் மணி ஐயருக்குக் குடும்பச் சொத்து. சிற்றப்பா புஷ்பவனம், மதுரை பொன்னுசாமிப் பிள்ளை ஆகியோருக்கு குருவாக இருந்தவர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதர். அவருடைய மாணவரான ராஜம் பாகவதரிடம் சேர்ந்து இசை பயில ஆரம்பித்தார் மணி. ராஜம் பாகவதரின் வீட்டின் ஒரு பகுதியிலேயே வாடகைக்குக் குடியமர்ந்தது மணியின் குடும்பம். அவரிடம் பெற்ற பயிற்சியைத் தொடர்ந்து மணியின் இசைஞானம் பெருகவேண்டும் என்று தந்தை நினைத்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் மதுரை தியாகராஜ சங்கீத வித்யாலயத்தில் மணியைச் சேர்த்தார். ராஜம் பாகவதரும் அங்கேயே ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.




மணி ஐயரின் முதல் கச்சேரி 12ம் வயதில், நத்தம் சீதாராம ஐயர் (வயலின்), ராஜகோபால ஐயர் (மிருதங்கம்) பக்க வாத்தியம் வாசிக்க, ராமநாதபுரத்தில் உள்ள அலவாக்கோட்டை ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரங்கேறியது. நல்ல வரவேற்பு. சிறுசிறு வாய்ப்புகள் வரத் துவங்கின. 

1925ல் தேவகோட்டையில் காஞ்சி காமகோடி மஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் முன்பு பாடினார் மணி ஐயர். அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. பெரியவரது ஆசி மற்றும் பாராட்டுக்களுடன் தங்கப்பதக்கமும், பட்டு அங்கவஸ்திரமும் தந்து கௌரவிக்கப் பெற்றார். கச்சேரி வாய்ப்புகள் பெருகின. தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். தாம் கச்சேரிகள் செய்ததோடு, அப்போதைய ஜாம்பவான்களின் கச்சேரிகளுக்குச் சென்று கேட்டும் தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். 1927ல் சென்னையில் சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் திறப்பு விழாவில் தந்தை ராமசுவாமி ஐயர், 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி ஓர் விரிவுரை ஆற்றினார். தொடர்ந்து மணி ஐயரின் கச்சேரியும் நடந்தது. அது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

அக்காலத்தில் ஸ்வரம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர். அவர் வழியைப் பின்பற்றினார் மதுரை மணி ஐயர். ராக பாவத்தாலும், கல்பனா ஸ்வரத்தாலும், நிரவல்களாலும் பாடல்களுக்குப் புத்துயிரூட்டினார். 'நாத தனுமனிஸம்', 'சக்கனி ராஜ', 'மா ஜானகி', 'காணக் கண் கோடி வேண்டும்', 'கா வா வா', 'தாயே யசோதா', 'எப்ப வருவாரோ', 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' போன்ற பாடல்கள் அவரது குரலில் மேலும் மெருகேறின. குறிப்பாக 'கந்தன் கருணை புரியும் வடிவேல்' பாடலை அவர் பாடும் அழகே அலாதி; உள்ளத்தை உருக்கிக் கண்களில் நீரை வரவழைப்பது என்பது அக்கால ரசிகர்களின் கருத்து. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய இங்கிலீஷ் நோட்டுகளைப் பாடி பிரபலமடையச் செய்ததும் மணி ஐயர்தான். மூன்று ஸ்தாயிகளிலும் சரளமாகப் பாடும் வல்லமை பெற்ற மணி ஐயர் சாருகேசி, நளினகாந்தி, லதாங்கி, ஹம்சநந்தினி, ரஞ்சனி, சரசாங்கி போன்ற பல ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப்படுத்தினார். தமது பெரும்பாலான கச்சேரிகளில் முத்துசாமி தீக்ஷிதரின் நவக்கிரஹக் கிருதிகளைப் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மைசூர் சௌடையா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, டி.என். கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜ பிள்ளை, பாலக்காடு மணி, பழனி சுப்ரமணிய பிள்ளை, முருகபூபதி எனப் புகழ்பெற்ற இசை ஜாம்பவான்கள் பலரும் மணி ஐயருக்கு பக்கம் வாசித்துள்ளனர்.


கல்வியிலும் மணி ஐயருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. பள்ளி சென்று முறையாகக் கல்வி பயில இயலாத காரணத்தால், ஆசிரியர் ஒருவரை வரவழைத்து அவர் மூலம் ஆங்கிலக் கல்வி பயின்று தேர்ந்தார். இலக்கியங்களிலும் அவருக்கு நல்ல ஆர்வமிருந்தது. ஜானகிராமன் போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும் அவர் நட்புக் கொண்டிருந்தார்.

மணி ஐயரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவரது பெருமைக்குச் சான்று. ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் சென்னைக்கு வந்திருந்தார். ஒருநாள் அதிகாலை சுவாமி தரிசனம் செய்வதற்காக மயிலாப்பூர் வீதி வழியாக வந்து கொண்டிருந்தவர், அருகில்தான் மணி ஐயரின் வீடு இருக்கிறது என்பதை அறிந்து அவர் வீட்டு வாசலில் நின்று விட்டார். பெரியவர் வாசலில் நிற்பதை அறிந்த உறவினர்கள் அனைவரும் வந்து மஹாபெரியவரை வணங்கி தரிசனம் பெற்றுச் சென்றனர். ஆனால் மணி ஐயர் வரவில்லை. "ஏன் மணியைக் காணோம், கூப்பிடு அவனை" என்றார் மகா பெரியவர்.

மணி ஐயரின் உதவியாளரும் சகோதரியின் கணவருமான வேம்பு தயங்கியபடியே, "அவர் மடியாக உங்களை தரிசனம் செய்ய, இன்னும் ஸ்நானம் செய்யவில்லை" என்றார்.

"மடியாவது ஒண்ணாவது. அவனுக்கு சங்கீதம்தான் எல்லாம். கூப்பிடு அவனை" என்றார் பெரியவர்.

வேம்பு உள்ளே போய்த் தகவல் சொல்ல, ஓடோடி வந்து பெரியவருக்குப் பாத நமஸ்காரம் செய்தார் மணி. உடனே தம் கழுத்தில் இருந்த ரோஜா மாலையைக் கழற்றி மணியின் கழுத்தில் போட்ட மஹா பெரியவர், "டேய், உனக்கு சங்கீதம்தான் மடி, ஆசாரம், பூஜை எல்லாம்" என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

மற்றொரு சமயம் மணி ஐயரின் கச்சேரியைக் கேட்டு ரசித்த மகா பெரியவர், இரவு வெகு நேரமாகி விட்டதால் பூட்டியிருந்த கடையைத் திறக்கச் செய்து, பட்டாடை வாங்கிவரச் செய்து அதை மணிக்கு அளித்து ஆசி கூறினார்.



சபாக்களில் மட்டுமல்லாது, கோயில்கள், திருமணங்கள் எனப் பலவற்றிலும் கச்சேரிகள் செய்தார் மணி ஐயர். இவற்றோடு தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் நடத்திய சங்கர ஜயந்தி, கொத்தமங்கலம் சுப்பு நடத்திய புரட்டாசி சனிக்கிழமைக் கச்சேரி போன்றவற்றிலும் கலந்து கொண்டார். ஒருசமயம் நாகப்பட்டினத்தில் நீண்ட நாட்களாக மழையே இல்லை. அந்த ஊர் பிரபல மனிதர் வீட்டுத் திருமணத்தில் மணி ஐயரைப் பாட அழைத்திருந்தனர். அவரும் சில கீர்த்தனைகளைப் பாடி விட்டு பின்னர் மேக ரஞ்சனி ராகத்தைப் பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சில்லென்று காற்று வீச ஆரம்பித்தது. தூரத்தில் எங்கோ இடிமுழக்கம் கேட்டது. சற்று நேரத்தில் சாரலாக விழுந்த மழை அடுத்துத் தீவிரமானது. சொட்டச் சொட்ட மழையில் நனைந்தபடியே இசைப் பொழிவை ரசித்தனர் மக்கள்.

அவரைத் தேடி விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தன. 1944ல் தஞ்சை சமஸ்தானத்தினர் இவருக்கு 'கான கலாதர' என்ற பட்டமளித்தனர். 1960ல் மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி கிடைத்தது. ஜனாதிபதி விருதும் வழங்கப்பட்டது. 1962ல் தமிழ் இசைச் சங்கம் இவருக்கு "இசைப் பேரறிஞர்" என்ற பட்டத்தை அளித்தது. கொச்சி மகாராஜா தங்கத் தோடா அளித்தார். வானொலியில் தேசிய சங்கீத சம்மேளனம், அகில இந்திய இசை நிகழ்ச்சி என பலவற்றில் பாடியிருக்கிறார். இவருடைய ராகம்-தானம்-பல்லவியைக் கேட்பதற்கென்றே அக்காலத்தில் வானொலி முன் ரசிகர் கூட்டம் தவம் இருந்தது. இவை தவிர அவர் பாடி பல இசைத் தட்டுகளும் வெளியாகியுள்ளன.

இசை என்பது மக்களை இன்பப்படுத்துவதற்கும், அவர்கள் மனதை பக்குவப்படுத்தி மேன்மையுறச் செய்வதற்கும் ஓர் கருவி என்பது மணி ஐயரின் கருத்து. அதனாலேயே மங்களகரமான வார்த்தைகளைக் கொண்ட கீர்த்தனைகளையும், மகிழ்ச்சி தரும் ராகங்களையும் மட்டுமே பாடி வந்தார். எதிர்மறைக் கருத்துக்கள் கொண்ட பாடல்களை அவர் கச்சேரிகளில் பாடியதில்லை. இசையும் தமிழுமாக வாழ்ந்த அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி மகனும் சீடருமான டி.வி. சங்கரநாராயணனையே மகனாகப் பாவித்து வளர்த்தார். மணி ஐயர் ஜூன் 8, 1968 அன்று காலமானார். அவருடைய சாகித்யங்கள் உயிர்ப்புடன் விளங்கி என்றும் அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. அவரது நூற்றாண்டு விழா கர்நாடக இசை ரசிகர்களால் உலகமெங்கும் தற்போது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



(தகவல் உதவி: சு.ரா. எழுதிய இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்)


தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 25 அக்டோபர், 2016

சங்கீத சங்கதிகள் - 97

விருது, விளம்பரம், விமர்சனம் ! 


அக்டோபர் 25. மதுரை மணி ஐயரின் பிறந்த தினம். 

ஒரு விருது! 

மணி ஐயருக்குக் “கானகலாதர” என்ற பட்டம் உள்ளது என்பதைப் பலரும் அறிவர். ஆனால், இது எப்போது கிட்டியது? யார் கொடுத்தார்கள்? 
கீழே உள்ளது ‘சுதேசமித்திரன்’ 26-12-1943 இதழில் வந்த ஒரு தகவல்.


 தஞ்சை சமஸ்தானத்தின் மூத்த இளவரசர் யார்?   பெயர் தெரியவில்லை. தெரிந்தவர் எழுதினால் இங்கே சேர்த்துவிடுவேன்.  ( அவர் பெயர் பாபாஜி ராஜா போன்ஸ்லே என்கிறார் ஒரு நண்பர் )

1948 ’வெள்ளிமணி’ இதழில் வந்த ஒரு விளம்பரம்!

 இந்த இசைத்தட்டுகள் எங்கள் வீட்டில் பலவருடங்கள் இருந்தன! 


ஒரு விமர்சனம்! 

பிரபல இசை விமர்சகர் ‘நீலம்’ ( நீலமேகம் )  1948 சுதேசமித்திரன் இதழொன்றில் எழுதியது.



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 8 ஜூன், 2016

சங்கீத சங்கதிகள் - 77

எப்படிப் பாட வேண்டும்?
மதுரை மணி ஐயர் 




ஜூன் 8. மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.

‘தினமணி’யில் 2014-இல் வெளிவந்த ஒரு கட்டுரை இதோ!  ( இது மணி ஐயரின் 'சங்கீத கலாநிதி' விருது ஏற்புரையிலிருந்து ஒரு பகுதி என்று நினைக்கிறேன். )
==========


சரளி வரிசை, அலங்காரம், கீதம், வர்ணம், கீர்த்தனை இவைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்று நன்றாக வந்த பிறகே மற்றொன்று என்ற முறையில் நல்ல தாளக்கட்டுடனும், கால ப்ரமாண சுத்தத்துடனும், சாதகம் செய்து அப்பியசித்தால் வர்ணம் பாடும்பொழுது சாரீரத்தில் காலம் விவரமாகவும் தெளிவாகவும் பாடும்படியான நிலைமை ஏற்படும்.

ஒவ்வொரு மாணவனும் குறைந்த பக்ஷம் பதினைந்து வர்ணங்களாவது கற்க வேண்டும்; வர்ணம் இரண்டு காலங்கள் அழுத்தமாகப் பாட வந்த பிறகே கீர்த்தனைகள் கற்றுக் கொள்ள வேண்டும். இளம் வித்வான்கள், ஸீனியர் வித்வான்களின் கச்சேரிகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கத் தவறக் கூடாது.

மாலை நேரங்களில் தம்புரா சுருதியுடன் இணைந்து பாடிப் பழக வேண்டும்; சாஹித்யங்களைத் தெளிவாக உச்சரித்து அந்த வார்த்தைகளின் பொருளை உணர்ந்து பாட வேண்டும். இதனால் ரஸிகர்கள் சாஹித்யத்தின் கருத்தை அறிந்து சந்தோஷப்பட சந்தர்ப்பம் வாய்க்கும்.

கச்சேரி செய்யும்பொழுது பாவமுள்ள ராகங்களை அதிகமாகக் கையாள வேண்டும். அப்பொழுதுதான் ஜனங்களுக்கு இவர்கள் பாடுவது நன்றாகப் புரியும். ஏதாவது ஒன்றிரண்டு அபூர்வ ராகங்கள் பாடலாம்.

கீர்த்தனைகள் பாடும்பொழுது அநுபல்லவியையாவது, சரணத்தையாவது நிரவலுக்கு எடுத்துக் கொள்ளும் பதங்கள் கூடுமான வரையில் உயர்ந்த பாவங்களைத் தெரிவிக்கும் முறையில் அமைவது சிறந்ததாயிருக்கும். நினைத்த இடங்களில் எல்லாம் நிரவல் செய்வது பாட்டின் பாவத்தைக் கெடுத்துவிடும். பாட்டின் பொருளை அறிந்து, அதன் பாவத்தை உணர்ந்து எந்த இடத்தில் நிரவல் செய்தால் கீர்த்தனை சோபிக்குமோ அந்த இடத்தை எடுத்துக் கொள்வதுதான் நலம்.

ஸ்வரங்களை ராக பாவத்துடன் பாட வேண்டும். அப்படிப் பாடினால் சாரீரம் சுருதியைவிட்டு நகராமல் இருக்கும். எவ்வளவு பாடினாலும் தெவிட்டாமல் இருக்கும். ராக பாவம் கெடாமல் எவ்வளவு விநயமாகப் பாடினாலும் நல்லதுதான்.

தாளக்கட்டுடனும் ஸ்வரப் பிடிப்புடனும் ஸ்வரம் பாடுவது நிரம்ப முக்கியம். கமக சுத்தமாக ஸ்வரம் பாட வேண்டும். ஸ்வரத்தை ராக பாவத்துக்குப் பொருத்தமாக அசைவுகளுடன் பாட வேண்டும். ஆரோஹண, அவரோஹண கிரமங்களை நன்றாக அநுசரித்து சுருதியுடன் இணைந்து ஸ்வரங்களை நன்றாக உச்சரித்துப் பாட வேண்டும்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

மதுரை மணி

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்



திங்கள், 8 ஜூன், 2015

சங்கீத சங்கதிகள் - 53

மகத்தான கச்சேரி
'கல்கி'

                                        


ஜூன் 8. மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.

பேராசிரியர் கல்கி அவருடைய தமிழிசைக் கச்சேரியைப் பற்றி எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை  அவருக்கு ஓர் அஞ்சலியாக இங்கிடுகிறேன்.

அதற்கு முதலில் . . .

மதுரை மணி ஐயர் எப்போது சென்னையில் முதலில்  கச்சேரி செய்தார்?

பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் ‘ஆனந்த விகடனின்’ தொடக்க காலத்தில் ( 30-களில் ) உதவி ஆசிரியராய் இருந்தவர். ‘ தமிழ் இதழ்கள்’ என்ற நூலில், விகடன் அலுவகத்தைப் பற்றி விவரிக்கும்போது குறிப்பிடுகிறார்:


”. . . இந்த ஹாலில் ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தனது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”  

‘கல்கி’க்கும் மணி ஐயருக்கும் இருந்த நெடுநாள் தொடர்புக்கு ஒரு காட்டு,  கல்கி அவர்கள் மறைந்தபோது மதுரை மணி ஐயர்  ‘கல்கி’ இதழில் எழுதிய கடிதப் பகுதி :





இப்போது ’கல்கி’யின் அந்தக் கட்டுரை








[ நன்றி : ‘கல்கி’யின் கட்டுரைக் களஞ்சியம், சாரதா பதிப்பகம், 2006 ]

தொடர்புள்ள பதிவுகள்:

மதுரை மணி
சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

ஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் ?

மதுர மணி : தி.ஜானகிராமன்

’கல்கி’ கட்டுரைகள்


வியாழன், 30 ஏப்ரல், 2015

சங்கீத சங்கதிகள் - 52

ஜி.என்.பி , மதுரை மணி  சந்தித்தால் ?  




மே 1. ஜி.என்.பியின்  நினைவு நாள். ( இந்த வருடம் 50-ஆவது நினைவு நாள்) 



இதோ அவர் நினைவில் சில ‘சங்கதி’கள் !

முதல் சங்கதி:
இசை விமர்சகர் சுப்புடு ஜி.என்.பி.யைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு இசை வானிலே ‘ஜி.என்.பி’ தோன்றியபோது இசைப் பழம்புள்ளிகளெல்லாம் பெரிதும் கலங்கினார்கள். ஏனெனில் ஜி.என்.பி. மேதா விலாசம் படைத்தவர். குறுகிய நோக்கம் அவரிடம் அறவே கிடையாது. பழைய பல்லவியைப் பாடாமல், இருபதே கீர்த்தனைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளாமல், ராகங்களையும் கீர்த்தனைகளையும் எழில் நோக்குடன் கண்டு, இசை உலகில் ஒரு புரட்சியையே உண்டு பண்ணினார். நாதஸ்வரத்தை ஒத்த சாரீரம். நாலு ஸ்தாயிகளை எட்டும் சாரீரம். நினைத்ததையெல்லாம் பேசும் சாரீரம். 

அவர் ஒரு இசை வள்ளல். அண்டியவர்க்கெல்லாம் இசையை அள்ளி அள்ளி வழங்கினவர். அவருடைய சீடர்கள் அனந்த கோடி. வேறு எந்த மகா வித்வான்களுக்குள்ளும் இந்த மனப் பான்மையோ பாங்கோ அறவே கிடையாது. இதற்கு சாட்சி தேவையில்லை. இது அப்பட்டமான உண்மை. ”

இரண்டாம் சங்கதி:

ஆதௌ கீர்த்தனாரம்பத்தில் ... ‘ஆனந்த விகட’னில் 22.7.56-இல் ஒரு புதிய நகைச்சுவைத் தொடர் தொடங்கியது. “இவர்கள் சந்தித்தால்’ என்பது அதன் தலைப்பு.

முதலில் இந்தத் தொடரைப் பற்றி எழுத்தாளர் ஸ்ரீதர் ( பரணிதரன், மெரினா) , அமரர்  ‘கோபுலு’ இருவரும் என்ன சொன்னார்கள்  என்று  பார்ப்போம்.


அக்காலத்தில் ‘இவர்கள் சந்தித்தால்” என்ற பகுதியைப் படிக்காதவர்களே  இல்லை எனலாம். பத்திரிகை உலகிற்கே புது இலக்கணம் படைத்த எவரெஸ்ட் சட்டயர் அது. நான்கைந்து பேரை எழுதச் சொல்லி, அவற்றை அடித்துத் திருத்தி, செதுக்கிச் செப்பனிட்டு, இணைத்துப் பிணைத்து, ஒரு கட்டுரையைக் கடைந்தெடுக்கும் ஆசிரியரின் (வாசனின்) செப்பிடு வித்தையைக் கண்டு நான் வியந்து போனேன்.
                -- ஸ்ரீதர், ”விகடனில் நான்”,விகடன் பவழ விழா மலர் ---

அந்தக் கால கட்டம் விகடனுக்கு ஒரு லேசான இறங்குமுகமாக இருந்தது. அந்த சமயத்தில் வாசன், விகடனுக்குப் புதிய பொலிவு ஊட்டும் நோக்கத்துடன் தானே நேரடியாக விகடன் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். தினமும் விகடன் ஆபீசுக்கு வந்து, ஆசிரியர் இலாகாவினருடன் மீட்டிங் நடத்துவார். விகடனை இம்ப்ரூவ் பண்ண ஆலோசனைகள் சொல்லுவார். அனைவரிடம் ஆலோசனைகள் கேட்பார். அப்போது உதித்தது தான் ‘இவர்கள் சந்தித்தால்’ என்ற ஐடியா. இந்த வரிசையில் எழுதப் பட்ட கட்டுரைகளில் ராஜாஜி, ஈ.வே.ரா.வில் தொடங்கி பல இரு துருவ முக்கிய பிரமுகர்கள் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும்? என்ன பேசுவார்கள்? என்று சுவைபட விவரிக்கும் கற்பனைச் சந்திப்புகள் இடம்பெற்றன. அவை வாசகர்கள் மத்தியில் பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன. ‘
      --கோபுலு, “சித்திரம் பேசுதடி”,  தொடர், அமுதசுரபி, டிசம்பர் 2007.

( என் குறிப்பு:  

முதல் கட்டுரை ஈ.வே.ரா - ஆசார்ய வினோபாவுடன்  தான் தொடங்கியது. பிறகு ராஜாஜி-காமராஜர் , அண்ணாதுரை - ஸ்ரீபிரகாசா, சிவாஜி கணேசன் -எம்.ஜி.ஆர் என்ற பல சந்திப்புக் கட்டுரைகள் வந்தன.   தோராயமாக  20 கட்டுரைகள் வந்தன என்று நினைவு. ) 

முதல் கட்டுரைத் தொடர்புள்ள ஒரு படம் கீழே! )





அந்தத் தொடரில் அவ்வப்போது சங்கீதம், நடனம்  தொடர்புள்ள  சில கட்டுரைகள் வந்தன. அவற்றில் ஜி.என்.பி. தொடர்புள்ள ஒன்றை இங்கே இடுகிறேன்.  அவருடைய நண்பர் மதுரை மணிக்கும் இது ஓர் அஞ்சலி தான்!

இந்தக் கட்டுரைக்குப் போனஸ் அமரர் கோபுலு வின் ஓவியங்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? ( சில ஓவியங்களில் ‘மாலி’யின் பழைய சித்திரங்களின் சாயல் தெரியவில்லை? )







[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜி.என்.பி.

மதுரை மணி 

சங்கீத சங்கதிகள் : மற்ற பதிவுகள்