எஸ்.வி.வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.வி.வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜனவரி, 2023

2392. எஸ்.வி.வி - 6

எஸ். வி. வி.

க.நா.சுப்ரமண்யம்



"படித்திருக்கிறீர்களா? " என்ற க.நா.சு  வின் நூலில் 'உல்லாசவேளை' என்ற எஸ்.வி.வி யின் படைப்பைப் பற்றிய கட்டுரையின் சில பகுதிகள். 


======

தினசரி பழகி, விருப்பும் வெறுப்பும் கொள்கிற மனிதர்களை அறிகிற அளவுக்கு அவர்களையும் நாம் அறிந்து கொள்ள எஸ். வி. வி. யின் மேதை நமக்கு உதவுகிறது. எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனித்து, சுலபமாக மனத்தில் பதியும்படியாக விஷயங்களைச் சொல்லி யிருக்கிறார் எஸ். வி. வி.! ஹாஸ்யமாக எழுதியதால் தான் அவருக்குப் பெருமை என்று சொல்லமுடியாது. உண்மைக்கும் கலைக்கும் விரோதமில்லாமல், முரண்பாடில்லாமல், அந்த ஹாஸ்யத்தைக் கையாள முடிந்தது என்பது தான் எஸ். வி. வி. யின் தனிச் சிறப்பு.

உல்லாச வேளை என்கிற நூலை நாவல் என்று சொல்வதா? கதைத் தொகுப்பு என்று சொல்வதா? வெறும் கட்டுரைகள் என்று சொல்வதா? மூன்றுமே சொல்லலாம். இலக்கியத்தில் அது எந்த வகுப்பில் சேரும் என்பது பற்றி எஸ். வி. வி.க்கு ஒரு போதும், தன் எந்த எழுத்திலுமே கவலையிருந்ததில்லை. கலை என்கிற ஞாபகமே அற்ற ஒரு கலைஞர் அவர். இலக்கிய நண்பர்கள் கூட்டமொன்றில் அவர் தான் எழுதுகிறது எப்படி?' என்பதைப் பற்றி விவரித்துச் சொன்னார்: 

''பேனாவை எடுக்கும் போது எனக்கு என்ன எழுதப் போகிறேன் என்றே தெரியாது. கதைத் திட்டமோ , கதாநாயகன், நாயகியின் பெயரோ என் மனத்திலிராது. சட்டென்று ஏதாவது ஒரு பெயர் வரும். அவன் ஸ்டேஷனுக்குப் போவான். ஸ்டேஷ னுக்குப் போய் என்ன செய்வான்? டிக்கெட் வாங்குவான். எந்த ஊருக்கு? ஏதாவது ஒரு ஊருக்கு. தனக்கா ...? தனக்காகவும் இருக்கலாம், வேறு யாருக்காகவும் இருக்கலாம். அது ரெயில் கிளம்பும்போது தெரிந்திருந்தால் போதுமே! கதாநாயகி அநேகமாக அவன் அறிந்தவளாகவே இருப்பாள். ஆனால், அவளைக் கதாநாயகியாக அதுவரை அறிந்திருக்க மாட்டான் அவன். நான் மனசு வைத்தால்தான் அறிந்துகொள்ள முடியும்...''

எஸ். வி. வி.யை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து பிரித்து வைத்தன அவருடைய கண்களும் காதுகளும் என்று சொன்னால் அது மிகையல்ல. காண்பது பூராவையும் கண்ணில் வாங்கவும், கேட்பது பூராவையும், கொச்சை மொழி அந்தரார்த்தங்கள் உள்படக் காதில் வாங்கவும், அவருக்கு ஒரு சக்தியிருந்தது. தான் பார்த்ததையும் கேட்டதையும் அப்படி அப்படியே அழகுபெறச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் எஸ். வி. வி. 

நாம் நேரில் அறிந்து கொண்டவர்களையே பல சமயங்களில் எஸ். வி. வி.யின் எழுத்துக்களிலும் அறிந்து கொள்கிறோம். ஒரு திடமான பழங்கால அறிவுடனும், அநுபவ முதிர்ச்சியுடனும் இன்றைய வாழ்க்கையின் விசேஷங்களை, முக்கியமல்லா விட்டாலும் அநுபவிக்கக்கூடிய அதிசயங்களை, எடுத்துச் சொன்னவர் எஸ். வி. வி. இதைத் தினசரிப் பேச்சுத் தமிழில் சொன்னார் என்பதும், இயற்கையாகவுள்ள ஒரு ஹாஸ்யத்துடனும் சொன்னார் என்பதும் தனி விசேஷங்கள் தான்.

நேற்று - இன்று என்கிற இரண்டு தத்துவங்களுக்குமிடையே இவ்வுலகில் என்றுமே போராட்டம் நடந்து கொண்டு தான் வருகிறது. மனோதத்துவ நிபுணர்கள், தகப்பன் பிள்ளை, தாய் மகன் என்கிற உறவுகள் சிநேக உறவுகள் அல்ல, வெறுப்பு உறவுகளே என்று நிரூபிக்க இந்தக் காலத்தில் வெகுவாக முயன்று ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள். மனோதத்துவம் என்கிற கானல் நீரிலே எஸ். வி. விக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடை யாது. அவர் கொண்டுள்ள முடிவுகளும் வற்புறுத்துகிற தன்மைகளும் வாழ்க்கையை நேர்ப் பார்வை பார்த்து அவர் அறிந்து கொண்டவை. ஆனால் நேற்று - இன்று என்கிற தத்துவத்தின் போராட்டத்தை அவரைப்போல தம் தலை முறைக்கு விவரித்துள்ளவர்கள் வேறு யாருமில்லை என்று தான் சொல்ல வேண்டும். போராட்டம் என்றோ, தத்துவம் என்றோ , இது பெரிய விஷயம் என்றோ சொல்லாமல் (உணராமல் என்று கூடச் சொல்லலாம்) லேசாகச் சொல்லி விட்டு நகர்ந்து விடுகிறார்.

எஸ். வி. வி. ஒரு கலைஞர். அவர் எந்த விஷயத்தை எடுத்துக் கையாளலாம், எந்த விஷயத்தைக் கைவிட்டு விட வேண்டுமென்று யாரும் சட்டம் விதிக்க முடியாது. எதுவும், எவ்வளவு சிறிய விஷயமுமே, அவர் நோக்குக்கு உட்பட்டது தான் - கலைக்கு அஸ்திவாரம்தான்.

உல்லாச வேளையில் நாம் அறிந்துகொள்கிறவர்கள் எல்லோரும் நம்மைவிட்டு அகலாத தோழர்கள். முகத்தைச் சுளிக்காமல் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் கூட வருவார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

முப்பது வருஷங்களுக்கு முன் நான் கோவையில் இண்டர்மீடியேட் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது எஸ். வி. வி. என்கிற மூன்று எழுத்துக்கள் கொண்ட பெயருடன் ஒருவர் தன் முதற் கட்டுரையை ஹிந்துப் பத்திரிகையில் வெளியிட்டார். ஆங்கிலத்தில் தான் எழுதினார் என்றாலும், அது முழுக்க முழுக்கத் தமிழ்க் கட்டுரை தான் என்றே சொல்லலாம். தமிழன் ஆங்கிலம் எழுதினால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஆசை கொண்டிருந்த எனக்கு அப்போது தோன்றியது. எஸ். வி. வி. ஒரு ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழில் எழுதத் தொடங்கினார். அதனால் இன்றையத் தமிழ் இலக்கியம் ஒரு தனி வளம் பெறவே செய்திருக்கிறது. 

தொடர்புள்ள பதிவுகள்:
எஸ்.வி.வி. 



பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 14 டிசம்பர், 2019

1415. எஸ்.வி.வி - 5

விவேகம்
எஸ்.வி.வி 



'பாரதமணி'யில் 1938-இல் வந்த ஒரு படைப்பு.  







[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
எஸ்.வி.வி. 

புதன், 30 மே, 2018

1077. எஸ்.வி.வி - 4

வானவெளியிலே !

மே 31. எஸ்.வி.வி. அவர்களின் நினைவு தினம்.


எஸ்.வி.விஜயராகவாச்சாரி அல்லது எஸ்.வி.வி (25-8-1880 - 31-5-1950
) ஒரு முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர் ; 40/50-களில் விகடனில் இவருடைய  கதை, கட்டுரை, நாவல்களைப் படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது.

அவர் மறைந்தவுடன், 'கல்கி' ஒரு நீண்ட தலையங்கத்தைக்  கல்கியில் எழுதினார். ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த எஸ்.வி.வி.யைத் தமிழில் எழுதவைத்ததில் கல்கிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.  விகடனை விட்டு விலகின கல்கி, தன் சொந்தப் பத்திரிகையான ‘கல்கி’யில் எழுத எஸ்.வி.வி.யை அழைத்தார். மறுத்த எஸ்.வி.வி. தொடர்ந்து விகடனுக்கு மட்டுமே அவர் மறையும் வரை --1950 வரை --எழுதிவந்தார். ( ஓரிரு கட்டுரைகள் கல்கியில் வந்தன என்பது என் நினைவு, பின்னர் அவற்றை வெளியிட முயல்வேன்) 

இதோ கல்கியின் தலையங்கம்.



அவர் 1950-இல் மறைந்தவுடன், விகடன் இப்படி எழுதியது :
===

நாம் தெரிந்து கொண்ட சிலரை அவர்கள் ஆயுட்காலத்திலேயே மறந்துவிடுகிறோம்; இன்னும் சிலரைக் காலமானவுடனே மறந்து விடுகிறோம். ஆனால், என்றைக்கும் மறக்கமுடியாதபடி நம் மனத்தில் ஆழ்ந்து தங்கியிருப்பவர்கள் சிலர் உண்டு. அப்பேர்ப்பட்டவர்களில் காலஞ்சென்ற எஸ்.வி.வி. மிகவும் முக்கியமானவர். அவர் தமிழுக்குச் செய்த தொண்டு என்றென்றும் நிலைத்து இருந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுமார் 17 வருஷங்களுக்கு முன் ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டு இருந்த எஸ்.வி.வி.யை எப்படியும் தமிழில் எழுதும்படி செய்யவேண்டு மென்ற எண்ணத்துடன் ஸ்ரீ வாஸனும், ஸ்ரீ கல்கியும் ஒரு நாள் திடீரென்று திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அங்கே எஸ்.வி.வி. பிரபலமாக வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருந்தார். இவர்களை வரவேற்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தவர், "கல்கியின் தமிழை ரஸித்த வாசகர்கள் என் தமிழைப் படிப்பார்களா?'' என்று ஒரு போடு போட்டார்.
"உங்கள் ஹாஸ்யம் எந்த பாஷையிலும் பிரகாசிக்கும். முக்கியமாக, அது தமிழர்களின் வாழ்க்கை யையே அடிப்படையாகக் கொண்டுள்ளதால் ஆங்கிலத்தை விட, தமிழில்தான் அதிகமாகப் பிரகாசிக்கும். நீங்கள் அவசியம் தமிழில் எழுதவேண்டும். பிறகு ஆங்கிலத்தில் எழுதுவதைக்கூட நீங்கள் நிறுத்தினாலும் நிறுத்தி விடுவீர்கள்'' என்று வற்புறுத்தியதன்பேரில் அவர் ஆனந்த விகடனுக்கு எழுத ஒப்புக்கொண்டார். 'தாகக்ஷாயணியின் ஆனந்தம்' என்ற அவருடைய முதல் கட்டுரையிலேயே அவர் தமிழிலும் நன்றாக எழுதக் கூடும் என்பதை நிரூபித்துக் கொண்டுவிட்டார். அன்று முதல் அவருடைய கட்டுரைகளையும் கதைகளையும் பிரசுரிக்கும் பெருமை ஆனந்த விகடனுக்கே கிடைத்தது.
எஸ்.வி.வி. வெகு நாளாகவே நோய்வாய்ப்பட்டிருந்து, சென்ற மூன்று மாதங்களில் அது அதிகமாகிக் காலமானார். அத்தனை சிரமத்திலும்கூட அவருடைய ஹாஸ்யம் அவரை விடவில்லை. தேக நிலை கேவலமாகி, 'ஸ்ட்ரெப்டோமைஸின்' என்ற ஒளஷதத்தை இஞ்செக்ஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னாராம். அதற்கு எஸ்.வி.வி., "நன்றாகக் கொடுங்கள். எஸ்.வி.வி. ஒரு பெரிய எழுத்தாளர், ஆசிரியர் இல்லையா? கேவலம் ஒரு 'ஸ்ட் ரெப்டோமைஸின்'கூடக் குத்திக் கொள்ளாமலே அவர் இறந்து போனாரென்றால் உலகம்தான் ஒப்புக்கொள்ளுமா?'' என்று பதில் சொன்னாராம்.
எஸ்.வி.வி.யின் பிரிவினால். தமிழ்நாடு ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டது.
====
தொடர்புள்ள பதிவுகள்:
எஸ்.வி.வி. 

செவ்வாய், 24 அக்டோபர், 2017

879. எஸ்.வி.வி. -3

ஆகும் ஸார், ஆகும்
எஸ்.வி.வி.


''வாயால் சொல்லலாமேயொழிய, எங்கே ஸார் முடிகிறது? எல்லோரும் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமோ? 'மாதம் இருநூறு ரூபாய் சம்பாதிக்கிறானே, என்ன செலவு?' என்கிறார்கள். 'வீட்டிலே இருக்கிறது நான்கு பேர்கள். அவன், அவனுடைய சம்சாரம், ஒரு பிள்ளை, ஒரு பெண். விழுந்து விழுந்து செலவழித்தாலும் நூறு ரூபாய் இருந்தால் தலைக்குமேல் வெள்ளம். மற்ற நூறு ரூபாயை  அப்படியே மீக்க வேண்டியது தானே? எப்பொழுதும் பணமில்லை பணமில்லை என்று அடித்துக் கொள்ளுகிறானே. பணமெல்லாம் எங்கே போய்விடும்?' என்கிறார்கள். இருக்கிற ஸ்திதி என்ன தெரியுமோ? அந்த இருநூறு ரூபாயும் போய் மாதம் ஐம்பது ரூபாய் கடனாகிறது.''

''நானுந்தான் கேட்கிறேன். எப்படிப் போதாமல் போய்விடும்?''

''ஏன் ஸார், பாருங்களேன். முதலில் வீட்டு வாடகை எடுத்துக் கொள்ளுங்கள். முப்பத்தைந்து ரூபாய் ஆச்சா?''

''வீட்டு வாடகை முப்பத்தைந்தா? ரொம்ப அதிகம். இருநூறு ரூபாய் சம்பாதிக்கிறவன் இருபது ரூபாய் தான் வாடகை கொடுக்கலாம். வருமானத்தில் நூற்றுக்குப் பத்து ரூபாய் தான் வாடகைக்கு என்று கணக்கு. முப்பத்தைந்து என்பது, ஆனாலும் ரொம்ப அதிகம்.''

''அதிகந்தான், ஸார். மாதா மாதம் கொடுக்கும் பொழுது கஷ்டமாய்த் தானிருக்கிறது. என்ன செய்கிறது? முப்பத்தைந்துக்குக் குறைந்து நல்ல வீடு எங்கே அகப்படுகிறது? வீடு படைத்தவர்கள் நான்கு மாதங்கள் ஆறு மாதங்கள் காலியாய் வீட்டைப் பூட்டி வைத்துக்கொண்டிருந்தாலும் இருப்பார்களே தவிர வாடகையை எங்கே குறைக்கிறேன் என்கிறார்கள். இதற்கு முன் இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு வீட்டில் இருந்தேன். காற்று என்பது கொஞ்சங்கூடக் கிடையாது. வீடு ஓதம் வேறு. எல்லோருக்கும் ஜலதோஷமும் தலைவலியுமாய் வந்து விட்டது. டாக்டருக்குக் கொடுப்பதை வீட்டு வாடகையாய்க் கொடுக்கலாம் என்று அப்புறம் முப்பது ரூபாயில் ஒரு வீட்டில் இருந்தேன். அதுவும் சரிப்படவில்லை. அந்த வீட்டில் விளக்குக் கிடையாது. போதாததற்கு எதிர்வீடு ஒரு தட்டான் வீடு. இரவு இரண்டு மணி வரையில் லொட்டு லொட்டு என்று அடித்துக்கொண்டிருப்பார். இந்தச் சத்தத்தில் தூக்கம் எப்படி வரும்? அதோடு அந்த வீட்டுக்காரனை ஏதாவது ரிப்பேர் பண்ணடா என்றால் பண்ணுகிறதில்லை. வருஷத்தில் ஒருதரம் வெள்ளையாவது அடிக்க வேண்டுமோ இல்லையோ? அதைக்கூடச் செய்கிறதில்லை. அந்த வீட்டில் இன்னொரு கஷ்டம் என்னவென்றால் ராத்திரி மூலை மூலையாய்ப் பெருச்சாளி தோண்டிவிடும். காலையில் எழுந்திருந்தால் ஒவ்வொரு மூலையிலும் ஒரு கூடை மண். பெருச்சாளி வரவொட்டாமல் ஜலதாரைகளுக்கெல்லாம் இரும்புக் கம்பியாவது போடுடா என்றால் காதில் போட்டுக் கொள்ளுகிறதில்லை.



” வாடகைக்கு என்ன தெரியுமோ? முதல் தேதி காலையில் வந்துவிடுவான். சாயந்தரம் பணம் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறதற்குள் இருபது தரம் வந்து விடுவான். ஒருதரம் எனக்குக் கோபம் வந்துவிட்டது. வாயில் வந்த படி திட்டிவிட்டு வேறு வீடு பார்த்துக்கொண்டுவிட்டேன். முப்பது ரூபாய்க்கு மேல் ஓட்டக் கூடாது என்று எங்கெல்லாமோ திரிந்து பார்த்தேன்; ஒன்று செளகரியமாயிருந்தால் அதில் பத்து அசெளகரியங்கள். கடைசியில் இந்த வீட்டைப் பிடித்தேன். முப்பத்திரண்டுக்காவது குறைத்துக் கொள்ளும்படிப் பேரம் பண்ணினேன். முப்பத்தைந்துக்குக் குறைந்து முடியாது என்று சொல்லி விட்டான்.''

''இந்த மாதிரிக் கூடாது, ஸார். நீங்கள் ஒரு வீடு வாங்கிக் கட்டிவிட வேண்டும். சென்னப்பட்டிணத்தில்தான் இருக்கிறது என்று ஏற்பட்டு விட்டதே. உங்களுக்கு என்று ஒரு வீடு வேண்டியதுதான். இந்தமாதிரி வாடகை கொடுத்துக் கட்டுமா? அறுநூறு எழுநூறு ரூபாய்க்கு நல்ல மனை அகப்படும். இரண்டாயிரம் ரூபாய் போட்டு முதலில் சின்ன வீடாய்க் கட்டிக் கொள்ளுகிறது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெரிதாய்க் கட்டிக் கொண்டால் போச்சு. நமக்கு என்று ஒரு வீடு இருக்கிறதற்குச் சமானம் இல்லை. ஊர்ப்பட்ட வாடகையும் கொடுத்து, கஷ்டமும் பட்டுக் கொண்டு...''

''எல்லாம் சரிதான், ஸார். நான் இதுவரையில் கொடுத்திருக்கும் வாடகையில் இருபது வீடுகள் கட்டியிருக்கலாம். என்ன செய்கிறது ஸார்? இங்கேதான் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே.''

''சரி, அப்புறம் சொல்லுங்கள். வாடகை முப்பத்தைந்து ஆச்சா.''

''வாடகை முப்பத்தைந்து ஆச்சா? எலெக்டிரிக் சார்ஜ் ஏழெட்டு ரூபாய் கூட்டிக் கொள்ளுங்கள்.''

''ஏழாவது எட்டாவது, ஸார்? என் வீட்டில் நான்கு விளக்குகள் இரவு பகலாய் எரிந்துகொண்டிருக்கின்றன. இரண்டரை ரூபாய்க்குமேல் ஒரு மாதங்கூட ஆனதில்லை.''

''எலெக்டிரிக் விசிறி இருக்கிறதோ இல்லையோ! மூன்று விசிறிகள் இருபத்து நான்கு மணி நேரங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. நம் அறையில் ஒரு விசிறி. பிள்ளை அறையில் ஒன்று. பெண் அறையில் ஒன்று. 'சீலிங் பான்' ஒன்று இருக்கிறது. அதை நான் உபயோகிக்கிறதில்லை. அது மானவாரியாயிழுக்குமென்று மூன்று மேஜை விசிறிகள் வாங்கி வைத்திருக்கிறேன். அப்புறம் விளக்கு, பிள்ளை அறையில் பன்னிரண்டு மணிவரையில் எரியும். பெண் அறையிலும் அப்படியே. நம் அறையில்தான் கேட்க வேண்டியதில்லை. நமக்குத்தான் இரவு இரண்டு மணிவரைக்கும் எழுதுகிறது, கிழிக்கிறது என்று இருக்கிறதே. அப்புறம் தெரு விளக்கு ஒன்று இருக்கிறது. சமையலுள்ளில் இரண்டு விளக்குகள், பத்து மணி வரைக்கும் எரியும். என்ன ஆச்சுதென்று பார்த்துக் கொள்ளுங்களேன். ஆறு ரூபாய்க்குக் குறைந்து இதுவரைக்கும் நான் கட்டினதில்லை. விளக்குக்கு ஏழு ரூபாய் சராசரி வைத்துக் கொள்ளுங்கள்.''


''முப்பத்தைந்தும் ஏழும் நாற்பத்திரண்டு.''

''நாற்பத்திரண்டு ஆச்சா? பெருக்குகிறவளுக்கு மூன்று ரூபாய்; நாற்பத்தைந்து. அப்புறம் என்ன? அவ்வளவுதான். வீட்டு வாடகை வகைச் செலவு நாற்பத்தைந்து என்று வைத்துக் கொள்ளலாம். அப்புறம் தயிர், பால். பால் காலையில் ஒரு படி, சாயந்தரம் ஒரு படி.''

''இருக்கிறது நான்கு பேர்கள் தானே? என்னத்திற்கு ஸார் அவ்வளவு.''

''ஆகிறதே! வீட்டிற்கு யாராவது வந்துவிட்டால் இன்றும் நித்தியம் கால்படி கூட ஆகும். அறுபது படிக்கு என்ன ஆச்சு? ரூபாய்க்கு இரண்டரைப்படி; அறுபது படிக்கு, இருபத்திரண்டு நாற்பது, இருபது அரை பத்து. இருபது ரூபாய்க்கு ஐம்பது படியாச்சு அப்புறம் பத்து படி இருக்கிறது. அது ஒரு நான்கு ரூபாய். மொத்தம் பால் இருபத்து நான்கு ரூபாய் ஆகிறது, குறைத்து இருபது என்றே போட்டுக் கொள்ளுங்களேன். என்ன ஆச்சு மொத்தம்? நாற்பத்தைந்தும் இருபதும்...... அறுபத்தைந்து.''

''அறுபத்தைந்து ஆயிற்று.''

''அதற்கப்புறம் ஒரு பெரிய அயிடம் நெய். நான் கடையில் நெய் வாங்கிச் சாப்பிடுகிறதில்லை. நெய்யில் கொஞ்சம் வாசனை வந்தால்கூட வீட்டில் யாரும் தொட மாட்டார்கள். எப்பொழுதும் வெண்ணெயாய் வாங்கித்தான் காய்ச்சிக் கொள்ளுகிறது. அதுவும் மொத்தமாய் வாங்குகிறதில்லை. அவ்வப்பொழுது அரை வீசை ஒரு வீசை வெண்ணெய் வாங்கிக் காய்ச்சிக் கொள்ளுகிறது. நெய் 'அயிடம்' பதினாறு பதினேழு ரூபாய் ஆகிறது, ஸார்.''

''ஐயோ ஐயோ! என்ன ஸார்? நித்தியம் நாலு பலம் நெய் வைத்தால்கூட மாதம் மூன்று வீசைதானே ஸார், ஆகிறது?''

''பட்சணம்? நித்தியம் ஏதாவது ஒரு பட்சணம் பண்ணினாலொழிய குழந்தைகள் சும்மா விடமாட்டார்கள், ஸார். எண்ணெயில் பண்ணினால் கையால் கூடத் தொட மாட்டார்கள். பொய்யாகவா சொல்லுகிறேன்? நெய்யில் பதினைந்து ரூபாய்க்கு ஒரு காசு குறைக்க முடியாது.''

''சரி, நெய்யைச் சேர்த்து எண்பது ரூபாயாச்சு.''

''எண்பதாச்சா? அப்புறம் காபிக்கொட்டை, சர்க்கரை, உப்பு, புளி இல்லையா, கடை சாமான்கள்? அது ஒரு முப்பது ரூபாயாவது ஆகும்.''

''முப்பது என்னத்திற்கு ஸார்? நெய் பாலெல்லாம் தான் போச்சே? உப்புப் புளி மிளகாய் தானே? பத்துப் பன்னிரண்டு ரூபாய்க்கு வாங்கினால் உதைத்துக்கொண்டு கிடக்கும்.''

''அப்படியே இருக்கட்டும். அதற்கு இருபது ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாமாகச் சேர்ந்து நூறு ரூபாய் என்று வைத்துக் கொள்ளுவோமே.''

''சரி, நூறு ரூபாய்.''


''ஷாப்பு பில் மாதம் இருபத்தைந்து முப்பது ஆய் விடுகிறது, ஸார்.''

''ஷாப்பு பில் என்றால்?''

''இந்த ஓவல்டின், துணி, சோப்பு, டுத்பேஸ்டு, டாயிலெட்டு சோப்பு, ஸெனாடஜன், ஹேர் ஆயில், லைம்ஜுஸ், க்ளிஸரின் இல்லையா கன்னாபின்னா வென்று, எல்லாம் சேர்ந்து என்ன ஆச்சு?''

''நூற்றிருபத்தைந்து.''

''எல்லாவற்றையும்விடப் பெரிய அயிடம் பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காலேஜ் ஸ்கூல் சம்பளம், புஸ்தகம், பேனா இவைகளுக் கெல்லாம் நாற்பது ரூபாய்.''

''நூற்று அறுபத்தைந்து.''

''அப்புறம் இன்ஷூரென்ஸ். ஆறு மாதத்திற்குத் தொண்ணூறு ரூபாய் கட்டுகிறேன். அது என்ன கணக்காச்சு? மாதம் பதினைந்து ஆகவில்லையா?''

''நூற்று எண்பது. மெள்ள மெள்ள இரு நூறுக்குக் கணக்கைக் கொண்டு வந்து விட்டீர்களே?''

''நான் கணக்கைக் கொண்டு வந்து விடுகிறதாவது? இப்படித்தான் ஸார் செலவாய்க் கொண்டு வருகிறது.''

''இன்னும் பிள்ளைக்கு டிராம் சார்ஜு முதலியவைகளை யெல்லாம் எங்கே கூட்டினீர்கள்?''

''அவைகளையெல்லாம் சேர்த்தால் இரு நூறு ரூபாய் சரியாய்ப் போய்விட்டது.''

''அப்புறம், ஒரு சினிமாவுக்குப் போக வேண்டுமென்று குழந்தைகள் ஆசைப்பட்டன; ஒரு சர்க்கஸ், ஒரு 'பார்க்குபேர்' இல்லையா? ஒரு நாளைக்கு ஒரு பழம் வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டன; இதற்கெல்லாம் எங்கே பணம்?''

''அதற்கெல்லாம் இல்லைதான்.''


''ஒரு பெரிய அயிட்டம் விட்டு விட்டோமே. துணிமணிகளைக் கணக்குப் போடவில்லையே! வருஷத்தில் துணிமணி என்ன ஆகிறது என்று நினைக்கிறீர்கள்? இந்தக் காலத்தில் பெண்டுகள்தாம் ஒரு ரவிக்கைக்கு இரண்டு ரவிக்கைகளாய்ப் போடுகிறார்கள். முன் காலத்தில் நாற்பது நாற்பது கொடுத்து இரண்டு புடவைகளை வாங்கினால், பதினைந்து இருபது கொடுத்துப் பத்துப் புடவைகள் இப்பொழுது வாங்குகிறார்கள். நம் வீட்டில் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்புறம் பிள்ளைக்கு ஷர்ட்டு, கோட்டு, காலர், நெக்டை, டிராயர்ஸ்-- டிராயர்ஸ் இல்லாமல்தான் இந்தக் காலத்தில் இல்லையே-- அப்புறம் நமக்கு ஷர்ட்டு, கோட்டு துணி, இவைகளுக்கெல்லாம் தையற்கூலி, சலவைக் கூலி எல்லாம் என்ன ஆகும்?''

''ஆகும் ஸார், ஆகும்; வேண்டியவரைக்கும் ஆகும்.''

''தையற்காரனுக்கு மாதம் பத்து ரூபாய்க்குக் குறைகிறதில்லை. சலவையாளருக்கு நூற்றுக்கு நான்கு ரூபாய் என்று கணக்கு; பெண்பிள்ளைகள் புடவை ஜாக்கெட்டு இவைகளேதான் நூறு விழுகிறதே?''

''ஆகும் ஸார், ஆகும்.''

''இதெல்லாம் கணக்குப் போட்டோமே. டாக்டர் பீஸ் கணக்கப் போட்டோமா?''

''இல்லையே! நீங்கள் சொல்லுவதைப்போல் அது வேறு இருக்கிறதே?''

''வெளியார் சொல்லுவதற்கென்ன ஸார்? அவர்கள் வாய்க்குப் பூட்டா, சாவியா? எதைக் கண்டார்கள்? நான் சொல்லுகிறேன் கேளுங்கள். வாஸ்தவமாய், இரு நூறு ரூபாய் போதாமல் மாதம் ஐம்பது ரூபாயாவது கடனாகிறது ஸார்.''

''ஆகும் என்கிறேனே, ஆகும்! கணக்குத்தான் சொல்லுகிறதே!''
======
[ நன்றி : appusami.com ] 

தொடர்புள்ள பதிவுகள்:
எஸ்.வி.வி. 

திங்கள், 28 நவம்பர், 2016

எஸ்.வி.வி. -2

பால் கணக்கு
எஸ்.வி.வி          

           


"இந்த மாதம் பால் கணக்கு எவ்வளவு?" என்றேன். பால்காரன் பணத்துக்கு வருவதற்கு முன் எங்களுக்குள் கணக்கைச் சரிப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டுமென்று என் எண்ணம்.

"என்ன கணக்கு! பார்த்துக் கொள்ளுங்களேன். பதின்மூன்றாந் தேதி வரைக்கும் காலையில் மூன்றாழாக்குப் பசும்பால், மூன்றாழாக்கு எருமைப் பால், சாயந்தரம் ஒன்றரை ஆழாக்குப் பசும் பால், இரண்டரை ஆழாக்கு எருமைப் பால், இதில் ஒரு நாள், மாடு உதைத்து விட்டதென்று ஒரு கால்படி போட்டுவிட்டுப் போய் விட்டான்.

"பசும் பால், ஒரு நாள் சினிமாவிற்குப் போனோமே, அன்றையதினம் வந்து பார்த்து விட்டுப் போய் விட்டான், அன்றைக்குப் பால் வாங்கவில்லை. இது போக போன மாசம் அவன் நமக்கு ஏழு ஆழாக்குக் கொடுக்க வேண்டும். கணக்கென்ன, இதுதான் கணக்கு! பதின்மூன்றாந்தேதி வரைக்கும் இந்தக் கணக்கு..."


"ஒவ்வொரு மாதமும் நான் சொல்லுகிறேனோ இல்லையோ? அன்றன்றைக்கு வாங்கினதை ஒரு நோட்டுப் புஸ்தகத்தில் வரிசையாய் எழுதி வை என்று? எழுதி வைத்திருந்தால் சட்டென்று கூட்டிக் கணக்குப் போட்டு விடலாமோ இல்லையோ?"

"எழுதி வைக்கிறதென்ன; நித்தியம் இவ்வளவென்று கணக்காய்த் தானே வாங்குகிறோம்?"

"என்ன கணக்காய் வாங்குகிறாய்? ஒரு நாளைக்கு இரண்டாழாக்குக் குறைச்சல் என்கிறாய்; மற்றொரு நாள் மூன்றாழாக்கு அதிகம் என்கிறாய். உன் கணக்கை, இறந்த போனாரே ராமானுஜம், அவர் திரும்பி வந்தால் கூடப் போட முடியாதே. சரி, என்ன ஆச்சு இப்போ, பதின்மூன்றாந் தேதி வரைக்கும்?"

"அதுதான் சொன்னேனே. காலையில் மூன்றாழாக்குப் பசும் பால், மூன்றாழாக்கு எருமைப்பால். பதின்மூன்று நாளைக்குப் பார்த்துக் கொள்ளுங்களேன். பதின் மூன்று அரை என்ன ஆச்சு? ஆறரை."

"பசும் பாலா, எருமைப் பாலா?"

"பசும் பாலைத் தனியாவும், எருமைப் பாலைத் தனியாயும் சொல்லேன். பசும் பால் ரூபாய்க்கு இரண்டரைப்படி; எருமைப்பால் இரண்டே முக்கால்படி, இரண்டையும் வெவ்வேறாய்க் கணக்குப் போட வேண்டாமா?"

"அப்படித்தான் போடுங்களேன்."

"சரி. பசும் பாலை முன்னாடி சொல், காலையில் எவ்வளவு? சாயந்தரம் எவ்வளவு?"

"அதுதான் சொன்னேனே. காலையில் மூன்றாழாக்கு. சாயந்தரம் ஒன்றரை ஆழாக்கு. மொத்தம் நாலரை ஆழாக்கு, பதின்மூன்று நாளைக்கு இதில் சினிமா போன தினத்துக்கு ஒன்றரை ஆழாக்குக் கழித்து விடுங்கள். போன மாதத்தில் ஏழு ஆழாக்கு அவன் நமக்குக் கொடுக்க வேண்டும்..."

"கழிக்கிறதையும் கூட்டுகிறதையும், அப்புறம் பார்க்கலாமே! முன்னே இந்தக் கணக்கு அற்றுப்படியாகட்டுமே, பதின்மூன்று நாலரை யாழாக்கா? பதின்மூன்று நான்கு எழுபத்திரண்டு..."

"பதின்மூன்று நான்கு எழுபத்திரண்டா? கணக்கில் ரொம்பக் கெட்டிக்காரர்! ஐம்பத்திரண்டு."

"ஆமாம். ஆமாம். ஐம்பத்திரண்டு. உன் கணக்குப் போடுவதற்குள் மூளை சிதறிப் போய் விடுகிறது. பதின் மூன்று நான்கு ஐம்பத்திரண்டு...."

"பதின்மூன்று அரை ஆறு."

"ஆறரை."

"ஆமாம். ஆறரை. முன்னே எவ்வளவு கணக்குப் போட்டோம்
ஐம்பத்திரண்டா? ஐம்பத்திரண்டும் ஆறரையும் ஐம்பத்தெட்டரை. ஐம்பத்தெட்டரைக்கு என்ன ஆச்சு?"

"ஐம்பத்தெட்டரையில், சினிமாப் போனோமே. அந்த ஒன்றரை ஆழாக்கைக் கழிக்க வேண்டாமா?"

"ஐம்பத்தெட்டரையில் ஒன்றரை போனால் ஐம்பத்தேழு."

"போன மாசம் ஏழு ஆழாக்கு அவன் நமக்குக் கொடுக்க வேண்டுமே, அதையும் கழித்துவிடுங்கள்;"

"சரி, அதையும் கழித்தால் பதின்மூன்றாம் தேதி வரைக்கும் பசும்பால் ஐம்பது ஆழாக்கு என்று வைத்துக் கொள்ளலாம். இரண்டரைப்படி வீதம் ஐம்பதாழாக்கு என்ன ஆச்சு?"


"ஐம்பதாழாக்கைப் படி ஆக்குங்கள். எண்ணைந்து நாற்பது இல்லை. எண்ணாறு நாற்பத்தெட்டு. எட்டுப் படியும் இரண்டாழாக்கும் ஆகிறது."

"எட்டுப் படியா! ஆறுபடி என்று சொல்லு. படிக்கு எட்டாழாக்கோ இல்லையோ?"

"ஆமாம் ஆறு படி இரண்டாழாக்கு; ஆறே கால்படி என்ன ரூபாயாச்சு? ஐந்து படிக்கு இரண்டு ரூபாய் போச்சு. அப்புறம் ஒன்றே கால் படி இருக்கிறது. அதற்கு அரை ரூபாய். மொத்தம் இரண்டரை ரூபாய்."

"அது அப்படி இருக்கட்டும். எருமைப்பால் கணக்கு சொல்லு."

"எருமைப் பால் கணக்கென்ன, தெரிந்து தானே இருக்கிறது? காலையில் மூன்றாழாக்கு. ராத்திரி இரண்டரை ஆழாக்கு, இதில் இரண்டு நாள் பால் ஒரே தண்ணீராயிருந்தது. நான் அதைக் கணக்கில் வைத்துக் கொள்ள மாட்டேன், அதற்குப் பணம கிடையாது என்று அப்பொழுதே அவன் கிட்டச் சொல்லியிருக்கிறேன்; அதைக் கழித்துவிட வேண்டும்."

"அது கிடக்கட்டும். கணக்கைச் சொல். எருமைப்பால் எவ்வளவு என்றாய்?"

"காலையில் மூன்றாழாக்கு, ராத்திரியில் இரண்டாழாக்கு; இல்லை, இரண்டரை."

"இரண்டையும் சேர்த்துச் சொல்லித் தொலையேன், நித்தியம் எவ்வளவென்று."

"சேர்த்துத்தான் பாருங்களேன், மூன்றும் இரண்டரையும் ஐந்தரை."

"பதின்மூன்று நாளைக்கு என்ன ஆச்சு! பதின் மூன்றைந்து அறுபத்தைந்தும்; பதின்மூன்றரை ஆறரை. அறுபத்தைந்தும் ஆறரையும் எழுபத்தொன்றரை."

"அதில் இரண்டு நாள் தண்ணிப் பாலுக்குக் கழித்து விடுங்கள்."

"நீ கழித்துவிடச் சொன்னால் அவன் ஒத்துக் கொள்ளுவான் போல் இருக்கிறது?"

"ஒத்துக் கொள்ளாமல் என்ன பண்ணுகிறது? அன்றைக்கேதான் அந்தப் பாலுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி இருக்கிறேன்."

"இருக்கட்டும்; மேலே சொல்."

"இருக்கட்டுமாவது! அந்தப் பாலுக்குக் கண்டிப்பாய்க் காசு கொடுக்கக் கூடாது. நீங்கள் இப்படிக் கொடுத்துக் கொடுத்துத்தான் அவன் வசம் கண்டிருக்கிறான். இன்றைக்குக் கொடுத்து விட்டீர்களானால் நாளை முதல் அடத்துக்கே தண்ணீர்ப் பால்தான் கொண்டு வந்து கொடுப்பான்."

"சரி.. சரி... ஆகட்டும்; அதைக் கடைசியில் கழித்துக் கொள்ளலாம். மொத்தம் எத்தனை படி எருமைப் பாலென்றோம்? எழுபத்து நாலைரை ஆழாக்கா?"

"எழுபத்து நாலரையாவது? எழுபத்து ஒன்றரை என்று சொல்லவில்லை?"

"எப்படி எழுபத்தொன்றரை?"

"பதின்மூன்று நாளைக்கு ஐந்தரை ஆழாக்கு வீதம் கணக்குப் போட்டீர்களே?"

"ஆமாம். எழுபத்தொன்றரை, எத்தனை ரூபாய் ஆச்சு? ரூபாய்க்கு இரண்டே முக்கால் படி. எழுபத் தொண்ணரைக்கு..."

"ஆழாக்கையெல்லாம் முன்னே படி ஆக்குங்கள். எண்ணொம்பது எழுபத்திரண்டு அரையாழாக்குக் குறைய ஒன்பது படி."

"அரையாழாக்கு இருக்கட்டும். ஒன்பது படிக்குக் கணக்குப் பார்ப்போம். மூவிரண்டாறு, மும்முக்கால் இரண்டே கால், எட்டேகால் படி போனால் முக்கால்படி மிச்சம்."

"அதில் அந்த அரை ஆழாக்கைக் கழிக்க வேண்டாமா? முக்கால் படிக்கு ஆறு ஆழாக்கு. அரை ஆழாக்குப் போனால் ஐந்தரை ஆழாக்கு. மூன்று ரூபாயும் ஐந்தரை ஆழாக்கும். பசும் பால் எவ்வளவு கணக்குப் போட்டோம்? இரண்டு ரூபாயா? இரண்டரையா?"

"இரண்டரை. மூன்றும் இரண்டரையும் ஐந்தரை ரூபாய். மேலே ஐந்தரையாழாக்கு இருக்கிறது. ஒன்று விட்டு விட்டோமே! மாடு உதைத்த அன்று கால்படிதானே கொடுத்தான்? அன்றைய கணக்குக் கழிக்க வேண்டாமா?"

"மேலே ஐந்தரை ஆழாக்கு இருக்கிறதே, அதில் கழித்துக் கொண்டால் போச்சு."

"அதில் என்னமாய்க் கழிக்கிறது? அது பசும்பால், இது எருமைப்பால்."

"நன்றாய்ப் பால் வாங்கினாய்! பால் வாங்கினாளாம் பால்!"

"உங்களுக்கென்னத்துக்கு அவ்வளவு கோபம் வருகிறது? பால் வாங்க வேண்டாமென்றால் நிறுத்தி விடுகிறேன். எனக்காகத்தான் இப்போ பால் வாங்குகிறேனா என்ன?"

"யார் பால் வாங்க வேண்டாம் என்றார்கள்? பால் வாங்கினால் கணக்கெழுதி வைக்கக் கூடாதோ?"

"கணக்கு எழுதினால் என்ன, வாயால் சொன்னால் என்ன? எல்லாம் கணக்குத்தானே? கணக்கு எங்கேயாவது ஓடியா போய் விடும்?"

"எங்கேயும் ஓடாது. பதினாலாம் தேதி பிடித்து என்ன கணக்கு?"

"செல்லம்மாளும் அவள் புருஷனும் இங்கே ஐந்து தினங்கள் இருந்தார்களா, ஆறு தினங்கள் இருந்தார்களா? அவர்களிருந்த வரைக்கும் காலையில் கால்படி எருமைப் பால் அதிகம், ராத்திரி ஒன்றரை ஆழாக்குப் பசும் பால் அதிகம்."

"எத்தனை நாளைக்கு?"

"அவர்கள் எத்தனை தினங்கள் இருந்தார்களோ, பார்த்துக் கொள்ளுங்களேன்."

"நான் பார்த்துப் பாழாய்ப் போனேன்."

"அப்புறம் குஞ்சு ஜுரமாய்ப் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது கஞ்சிக்கு என்றும், காடிக்கு என்றும் நித்தியம் ஆழாக்குப் பால் அதிகமாய் வாங்கிக் கொண்டிருந்தேன். அவன் நாலு நாள் ஜுரமாய்ப் படுத்துக் கொண்டிருக்கவில்லையா? அது போனால் நாம் மூன்று நாட்கள் ஊருக்குப் போயிருந்தோமே, அப்பொழுது பால் வாங்கவில்லை. மூன்றாம் நாள் சாயங்காலந்தானே வந்தோம்? அதற்கு முன்னமேயே மங்களத்தினிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தேன். 'நாங்கள் சாயந்திரமே வந்து விடுவோம். பால் வாங்கி வை' என்று. அவள் முக்கால்படி பால் வாங்கி வைத்திருந்தாள். எல்லாம் என்ன கணக்காச்சு, பாருங்களேன்?"

"பார்த்துக் குட்டிச் சுவராய்ப் போனேன். பால்காரன் கணக்கெழுதி வைத்திருப்பானோ இல்லையோ?"

"எழுதித்தான் வைத்திருப்பான். அவன் எழுதி வைத்திருந்தால் நாம் கணக்குப் பார்க்க வேண்டியதில்லையா, என்ன? அவன் சொன்னபடியே கொடுத்து விடுகிறதா?"

"இல்லை. இல்லை. நம்ம கணக்குப் படியே கொடுக்கலாம். முன்னே நம்ம கணக்கு அற்றுபடியாகட்டும்."

"அற்றுப்படிக்கு என்ன இருக்கிறது? நான் சொன்ன கணக்குத்தான்."

"நீ சொன்ன கணக்குத்தான். இப்போ எனக்கு ஒழிவில்லை. சாயந்தரம் வரும்பொழுது என் ஆபீசில் ஒரு அகெளண்டன்ட் இருக்கிறான். கணக்கில் நல்ல கெட்டிக்காரன். அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன். கணக்கையெல்லாம் பார்த்துவிடலாம்" என்று ஆபீசுக்குப் போய் விட்டேன்.


[ நன்றி : appusami.com ] 

தொடர்புள்ள பதிவுகள்:


எஸ்.வி.வி.