ஏ.எஸ்.ராகவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ.எஸ்.ராகவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூன், 2022

2158. ஏ.எஸ்.ராகவன் - 4

மானதம்

ஏ.எஸ்.ராகவன் 


'மானதம்' என்றால் என்ன? அகராதி என்ன சொல்கிறது?

University of Madras Lexicon

மானதம்

māṉatam   n. mānasa. 
1. See மானசம், 3. மானத விகற்பமற (தாயு. மௌன. 5).(ஞானவா. உற்பத். 39.) 
2. Recitation of a mantra mentally; மனத்தாற் செபிக்கை. மானத நெஞ்சிற்செபிக்குமாறு (சைவச. பொது. 151). 
3. Imagination; பாவனை. மானதத்தால் நீராட்டி (சிலப். 5, 168,உரை). 
4. See மானசம், 4. (W.)
சரி, அண்மையில் யாரேனும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்களா? எங்கே?
பொறுமையாய்க் கடைசி வரை இந்த அரிய கட்டுரையைப் படியுங்கள். தெரியும்! புரியும்!

[ நன்றி: சிவாஜி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


திங்கள், 2 அக்டோபர், 2017

859. ஏ.எஸ்.ராகவன் - 3

 உம்மாச்சி
 ஏ.எஸ்.ராகவன்

1965-இல் விகடனில் வந்த ஒரு முத்திரைக் கதை.
====

விடி விளக்கு குழறிற்று. சன்னலைத் திறந்தால் விளக்கு அவிந்துவிடும். வெளியே அத்தனை பேய்க் காற்று!

மாடிக் குடித்தனக்காரர் சன்னலை அறைந்து மூடினார். அவரது சகதர்மிணியின் குரல் சன்னலை அறைந்து கொண்டு பாய்ந்து வந்தது. அந்த அம்மாளின் கோபத்துக்குக் காரணமாக விளங்கிய கைக்குழந்தை தனது முழு பலத்தையும் பிரயோகித்து, 'வராட், வராட்' என்று அலறிற்று.
வெளியே புயலோடு மழையும் கை கோத்துக்கொண்டுவிடவே, எங்கள் இருப்பிடமான இரண்டு மாடிக் கட்டடமே ஆடுவது போலிருந்தது. அதி லிருந்த ஏழு குடித்தனக்காரர் களின் முப்பத்திரண்டு ஜீவன்களின் உயிர்களும் ஆடுவது போலிருந்தன.

மாடியிலிருந்து முற்றத்தின் ஓரமாய் நீட்டிவிடப்பட்டிருந்த ஜலதாரைக் குழாய் சாதாரண மழைக்கே லொட லொடவென்று ஆடும். இப்போதோ காற்றோடும் தானும் ஓடுவது போலக் கதறிற்று.

மொட்டு மொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். தூக்கம் பிடிக்கவில்லை. தூக்கத்துக்கும் என்னைப் பிடிக்கவில்லை.
விடி விளக்கு குமுறினாலும் இந்தச் சின்ன அறைக்கு அதன் ஒளி போதும். பழக்கப்பட்ட இடத்துக்குப் பழக்கமில்லாத இருள் கூடத் துணைதான்; இல்லையா?


என்னவோ! சமாதானங்கள் இல்லாவிட்டால் வாழ்நாளை உருட்ட முடியாதே! பழக்கப்பட்ட இடம், பழக்கமில்லாத இருள் என்பதெல்லாம் சும்மா.

என் கட்டிலின் கீழ் மஞ்சு தூங்கிக் கொண்டிருந்தாள்; பிஞ்சுக் கைகளைக் கால்களுக்குள் இடுக்கிக்கொண்டு. அவளுக்கு அருகில் தலைமாடு, கால்மாடு தெரியாமல் தூக்கத்திலும் விரல் சூப்பிக்கொண்டு படுத்திருக்கிறான் பாலு. சுவர் அருகே என் மேசையின் மீது மஞ்சுவின் தமிழ்ப் புத்தகமும், பாலுவின் கரும்பலகையும் தெரிந்தன. பாலுவுக்கு இன்னமும் நாலு வயதுகூட ஆக வில்லை. ஆனால், அக்கா பள்ளிக்கூடம் போகிறாளே என்பதற்காக வீம்புக்குக் கரும் பலகை வாங்கிக்கொண்டிருந் தான். அதில் அவன் எழுதுகிற எழுத்தெல்லாம் அழகான குண்டலங்கள்தான்.

ஆமாம், குண்டலங்கள்தாம்!

இந்த இரண்டடுக்கு வீட்டில் ஏழு குடிகளில் ஒரு குழாய், இரண்டே இரண்டு சிற்றறைகளில் இருபத்தைந்து ரூபாய் வாடகைக்குப் போராடிக் கொண்டு, இந்த இரண்டு உயிர்களுக்காக உயிரைப் பிடித் துக் கொண்டிருக்கிறேனே, இந்த வாழ்வே ஒரு பெரிய குண்டலம்தான்!

நெஞ்சு பொருமிற்று. மஞ்சு புரண்டு படுத்தாள். நல்ல சிவப்பு அவள்... கமலியைப் போல. முகம் அதே அச்சு. பேச்சுக்கூட அம்மாவைப் போலவே.
பாலு காலை விலுக்கென்று உதைத்துக்கொண்டு பல்லை நறநறவென்று கடித்தான்.

தூங்கும்போது குழந்தைகள் பல்லைக் கடித்தால் அது வியாதியின் கூறு என்பாள் கமலி. சிரித்தால், கடவுள் குழந்தைகளோடு விளையாடுகிறார் என்று அர்த்தமாம். ஓர் ஓலைப்பெட்டி நிறைய வசம்பு, அரத்தை, கடுக்காய் என்று மருந்துச் சரக்குகளை வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு மருந்து கொடுத்துக் கொண்டிருப்பாள் அவள். ஓமவாட்டர் தயாராக இருக்கும் எப்போதும். அவளுடைய அப்பா ஒரு நாட்டு வைத்தியரானதால், கமலிக்குப் பல மூலிகைகளின் பெயரும் குணமும் தெரியும்.

''கமலி, என் உடம்பு ரொம்ப ஒல்லியாக இருக்கிறதே, பருத் துக் கொழுக்க ஏதாவது மருந்து சொல்லேன்?'' என்பேன்.

''மனசிலே வஞ்சனை இல்லாவிட்டால் உடம்பு தானே பெருக்கும்'' என்பாள் அவள் சிரித்தபடியே.

''அடி கள்ளி! நான் வஞ்சனை உள்ளவனா, என்ன?''

''மனசிலே கவலை இருந்தால் கூட உடம்பு இளைத்துப் போகும்'' என்று திருப்புவாள்.

''நீ வந்த பிறகு எனக்கு ஏதடீ கவலை?''

முகமெல்லாம் பூரித்துப் போய்விடும் அவளுக்கு. ''நீங்க ஒண்ணும் ஒல்லியாக இல்லை. அளவாகத்தான் இருக்கிறீர்கள். இதற்கு மேலே பெருத்தால் நன்றாக இருக்காது. அப்புறம் மாடி வீட்டு சுப்பராயர் மாதிரி தசக்கா புசக்கா என்று...'' மீதிப் பேச்சு சிரிப்பில் புதைந்து போகும்.
இப்படித்தான் சிரிப்பிலேயே எல்லாவற்றையும் புதைத்து விட்டுப் போய்விட்டாள் அவள். புதைகுழிக்குள்ளிருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் நான்.

மஞ்சு புரண்டு படுத்தாள். அவளுக்கு இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை. வரட்டு இருமலாக இருமிக்கொண்டுஇருந்தாள். பக்கத்துப் போர்ஷன் பிச்சுமணி அய்யரின் குடும்பத்தாரின் ஒத்தாசையோடு அரத்தைக் கஷாயம் வைத்துக் கொடுத்ததில் சற்றுத் தேவலை.
ஆயிற்று. விடிந்தால் போராட்டம்தான். காபி போட்டு, சமையல் செய்து வைத்துவிட்டு, குழந்தைகளைக் குளிப்பாட்டிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு, நான் புறப்படவேண்டும்.

என்ன வாழ்க்கை இது!

''ஓய்... எத்தனை நாளைக்கு இப்படித் திண்டாடுவீர்? பேசாம ஒருத்தியைக் கொண்டு வந்து குடும்பத்தை ஒழுங்கு செய்யு மேன்!'' - பிச்சுமணி அய்யர்.

''நீங்க சொல்றது எனக்குப் புரியறது. ஆனா மஞ்சுவும் பாலுவும் இருக்காளே..?''

''இருக்கட்டுமே! அவர்களை உத்தேசித்துத்தான் நீர் மறு கல்யாணமே செய்து கொள்ளணும்!''

''அவர்களை உத்தேசித்துத்தான் என்றால், பெண்ணையும் அவர்களேதான் தேர்ந்தெடுக்கணும்... இல்லையா? அதாவது, அவர்களுக்குத் தாயார் வேணும். அதானே?'' என்றேன்.

பிச்சுமணி அய்யர் செய்தித்தாளைப் பட்டென்று மூடினார். என்னை அவர் பார்த்த பார்வையில் ஆயிரம் ஊசிகளின் கூர்மை இருந்தது. ''ஓய்... நீர் என்ன சொல்றீர்?'' என்றார்.

''இனி எனக்கென்று எதுவும் இல்லை, பிச்சுமணி சார்! நான் இதை எல்லாம் யோசித்துப் பார்த்துட்டேன். என் குழந்தைகளை உத்தேசித்தால் இப்படியே இருக்கிறதுதான் மேல்னு பட றது. மறு கல்யாணம் எனக்கு வேண்டாம். அது என் குழந்தைகளைப் பாதிக்கும். அவர்களைப் பாதிக்காத கல்யாணமும் இருக்கலாம்.. அது என் அதிகாரத்தில் இல்லை. அவர்கள் செய்ய வேண்டிய முடிவு, தீர்ப்பு அது!''

இப்படி எந்தத் தந்தையும் பேசியிருக்க மாட்டான். நான் பேசினேன். எனக்கல்லவா தெரியும் என் குழந்தைகளின் அருமை!

''சார்..!'' - குரல் கேட்டது.

''யாரது?'' என்றேன்.

அசட்டுச் சிரிப்புடன் ஒருவர் உள்ளே வந்தார். ''உங்க அத்தைகிட்டேந்து உங்க ஜாதகம் வந்திருந்தது. உங்க விலாசத்தையும் எழுதியிருக்கார்...''

''ஓ... அதுவா?'' என்றேன். அத்தையிடமிருந்து எனக்கும் கடிதம் வந்திருந்தது, இரண்டு நல்ல சம்பந்தம் இருப்பதாக.

''பெண் நல்ல சிவப்பு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிருக்கு. பாட்டும் பாடுவாள்...''

''சமைப்பாளா?''

''என்ன இப்படிக் கேட்கிறயள்? நளபாகம்தான் சமையல். நம்ம குடும்பங்களிலே முதல்லே கத்துத் தரது அதுதானே?''

''ஓஹோ..!''

''இதோ இருக்கு விலாசம். நாளைக்குப் பெண் பார்க்க...''

''ஹை! நாளைக்கு இவாத்துக்கு நாம போகப் போறோமாப்பா?'' என்று கேட்டது மஞ்சு.

''போகலாம்ப்பா!'' என்றான் பாலுவும். ''சரி'' என்றேன்.

அவர் போன சிறிது நேரத்துக்கெல்லாம் இன்னொரு பெரியவர் வந்தார். அவரை யார் என்று நான் கேட்கவேண்டிய அவசியமில்லையே! அத்தை யின் இரண்டாவது சிபாரிசு!

எல்லாம் ஒரு நாடகம் போலத்தான் இருந்தது. என்னை விடத் துடிப்பாக இருந்தனர் மஞ்சுவும் பாலுவும். எதற்காக அந்த மாமாவின் வீட்டுக்கும், இந்தத் தாத்தாவின் வீட்டுக்கும் போகிறோம் என்பது தெரிந்தால் இவர்கள் இப்படித் துள்ளுவார்களா?

முதலில் வந்தவரின் பெண் நல்ல சிவப்புதான். பார்க்க லட்சணமாக இருந்தாள். ஓர் ஆண்மகன் விரும்புவதற்குரிய அழகியான அந்தப் பெண்ணை மணக்க நான் தயாராகக்கூட ஆகிவிட்டேன். அடுத்து வந்த வரின் வீட்டுக்குப் போகவேண் டுமா என்றும் யோசித்தேன்.

''நேத்திக்கு இன்னொரு தாத்தா வந்தாரே, அவர் ஆத்துக்குப் போகலம்பா'' என்றார் கள் பாலுவும் மஞ்சுவும் ஞாபகமாக.

இந்தக் குழந்தைகளை நம்பிப் பெண் பார்க்க ஒருவன் புறப்படுவானா? ஆயாசத்தோடு இரண்டாமிடம் சென்றேன்.

அந்தப் பெண் நல்ல கறுப்பு. குனிந்த தலை நிமிரவில்லை.

குழந்தைகள் அந்தப் பெரியவரிடம் ஒட்டிக்கொண்டு விட்டன. அவர் என்ன மாயம் செய்தாரோ, தெரியவில்லை. குழந்தைகள் சொன்னார்கள். அவள்தான் உம்மாச்சியாம் - அந்தக் கறுப்புப் பெண்! சொல்லை மீறிய ஏதோ ஒரு அனுபவத்துக்கு, உண்மைக்கு, உணர்ச்சிக்கு அவர்கள் வைத்த பெயர் - உம்மாச்சி!

நான் தலையசைத்துவிட் டேன்.

பிச்சுமணி அய்யர் பெருமூச்சு விட்டார். ''ஓய்... என்ன காரியம் பண்ணியிருக்கீர்? வாழ்க்கை என்பது பெரிய விஷயம். சின்னக் குழந்தைகளின் அசட்டுப் பிரியத்துக்கு எதைப் பலி கொடுத்திருக்கிறீர் என்று தெரியவில்லையா?'' என்றார்.

இருக்கலாம். ஆனால், அவர்களின் 'உம்மாச்சி' இந்தப் பெண்ணை எனக்குத் தந்திருக் கும்போது நான் என்ன செய்ய?

குதிரை வண்டியில் பெண் பார்க்கப்போன எங்கள் கோஷ்டி மௌனமாகவே திரும்பிற்று. இரண்டு மைல் தொலைவும் சந்திரனை நோக்கி ராக்கெட்டில் போவது போன்ற விபரீத, விசித்திர, அந்நியமான புழுக்கப் பெருவெளிக்குள் நீள்வது போலிருந்தது. இது சரி தானா என்பது புரியவில்லை. என் மனத்தளவுக்கு இது சரிதான். மஞ்சுவுக்கும் பாலுவுக்கும் இதுவே சரி!

வண்டி ஒரு தெரு முனையில் திரும்பிற்று.

அதோ... முனிசிபல் லாந்தரின் கீழ் இரு உருவங்கள் நிற்கின்றனவே, அவர்கள் யார்? விலாவைப் பொத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தது என் நெஞ்சு. ஆம்... அந்த உருவங்களில் ஒன்று, நான் முதலில் பார்த்துவிட்டு வந்த பெண். மற்றொன்று, என்னைப் போல முன்புற வழுக்கையும், கன்னக் குழிவும் கொண்ட நடுத்தர வயதினன் அல்ல; ஓர் இளைஞன்! இருவரின் நிலையும் எனக்கு விளங்கிவிட்டது.

பாலு கேட்டான்... ''ஏம்பா, அந்த முனிசிபல் விளக்கு இருக்கே, அது மாதிரித்தான் இருப்பாரா உம்மாச்சி?''

நான் பதில் சொல்லவில்லை. அவனை வாரி அணைத்தேன். கண்களில் வழிந்தோடிய நீரில் என் புன்மையைக் கரைத்தேன். உம்மாச்சி இந்தக் குழந்தைகளுக்குத்தான் விளையாட்டுக் காட்டுகிறார்; சிரிக்க வைக்கிறார்.
அவர்கள் மூலம் அந்த உம்மாச்சியை நாம் காண்பது தவிர, நமக்கு வேறு வழி இல்லை; இல்லையா?


===============

தொடர்புள்ள பதிவு:

ஏ.எஸ்.ராகவன்

சனி, 8 ஜூலை, 2017

763. ஏ.எஸ்.ராகவன் - 2

எழுத்துத் தவம் இயற்றிய ஏ.எஸ்.ராகவன்
திருப்பூர் கிருஷ்ணன்


[ நன்றி: தென்றல் ] 

ஜூலை 8. எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவனின் நினைவு தினம்.

அவர் மறைந்தவுடன் ‘தினமணி’யில் வந்த கட்டுரை இதோ:
========

அண்மையில் காலமான (08.7.12) முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் 1928-ஆம் ஆண்டு பிறந்தவர். தம் எழுத்துலக வாழ்வை 1950-களில் தொடங்கிய இவரது முதல் சிறுகதையான "சலீமா பேகம்' "ஆனந்த விகடனில்' பிரசுரமானது. அதன்பின் நாவல், சிறுகதை, நாடகம் என எழுதிக் குவித்து பெரும்புகழ் பெற்றார். கல்கி, கலைமகள், தினமணிகதிர் எனப் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார். தினமணி நிறுவனத்தின் மாத வெளியீடாக வெளிவந்து கொண்டிருந்த "கதைக்கதிர்' இதழில் நா.பா. ஆசிரியராக இருந்தபோது மாத நாவல்களும் எழுதினார்.
திருச்சி அருகில் அமராவதி நதி ஓடும் கரூர்தான் இவர் பிறந்த ஊர். அன்றைய அமராவதியின் தெளிந்த நீரோட்டம் போல் குழப்பமில்லாத தமிழ் நடை இவருடையது.

இவர் தம்முடைய கதைகளுக்கான பல கருக்களைத் தம் பிறந்த ஊரான கரூரிலிருந்தே எடுத்துக் கொண்டார். இவரின் படைப்புகளில் கரூர் "தான்தோன்றி மலை' வெங்கடேசப் பெருமாள், அருள் கடாட்சத்துடன் பற்பல இடங்களில் தானே தோன்றுவதுண்டு. அமராவதி ஆறு பல அத்தியாயங்களின் இடையிடையே புகுந்து படிக்கும் நம் நெஞ்சை ஈரப்படுத்தி ஓடுவதும் உண்டு.


இவருடைய அப்பாவின் சொந்த ஊர் கரூர் அருகில் உள்ள புதுப்பாளையம். அந்தப் புதுப்பாளையமும் இவருக்குப் பல புதுப்புதுக் கற்பனைகளை அள்ளி வழங்கியது. புகழ்பெற்ற இவரது "மனிதன்' என்ற நாவல் முழுக்க முழுக்க இவரது சொந்த ஊர் பற்றிய நாவல்தான். அன்பே அனைவருக்குமான உயர்ந்த மதம் என்பதையும் இவர் தொடர்ந்து தம் படைப்புகளின் வழியே வலியுறுத்தி வந்தார்.

"எழுத்து ஒரு தவம்' என்ற கொள்கை உடையவர் ஏ.எஸ்.ஆர். இலக்கில்லாமல் எதையேனும் எழுதுவது என்ற போக்கில் இவர் இயங்கியதே இல்லை. தம்மைப் பற்றியோ தம் எழுத்தைப் பற்றியோ தற்பெருமையாக அவர் எங்கும் எப்போதும் எழுதியதுமில்லை; பேசியதுமில்லை. கு.அழகிரிசாமி, தி.ஜா. போன்றோர் மரபில் வந்த உன்னதமான அடக்கம் என்ற பண்பாட்டை, வாழ்வின் இறுதிநாள் வரை விடாமல் காப்பாற்ற அவரால் முடிந்தது.

15 நாவல்கள், சுமார் 250 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்கள், மூன்று மேடை நாடகங்கள் எனத் தற்கால இலக்கியத்திற்கான இவருடைய பங்களிப்பு அதிகம். "மலர்ந்த மனம்', "உயிர் நோன்பு' போன்ற நாவல்களும், "அன்பின் வழி', "உணர்வின் விழிப்பு' போன்ற சிறுகதைத் தொகுதிகளும் வாசகர்களால் மறக்க முடியாதவை.

விகடன், கல்கி, கலைமகள் போன்ற இதழ்கள் நடத்திய இலக்கியப் போட்டிகள் பலவற்றில் பரிசுபெற்றவர். விகடனில் நாவல், சிறுகதை, நாடகம் என அடுத்தடுத்து மூன்று பிரிவுகளில் பரிசு பெற்று அவ்வகையில் "ஜாக்பாட்' அடித்தவர்.


இவரது "பின்னணி' என்கிற சிறுகதை, இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டுப் பரிசைப் பெற்றது. தேர்வு செய்தவர் நாணல் சீனிவாசராகவன். (பல்லாண்டுகளுக்குப் பிறகு ஏ.எஸ்.ராகவனே இலக்கியச் சிந்தனை அமைப்பின் நீதிபதியாக இயங்கும் பெருமை பெற்றார். அப்போது அவர் தேர்வு செய்த ஆண்டுச் சிறுகதை "அமுதசுரபி' மாத இதழில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய "அற்றது பற்றெனில்' என்ற கதை.)

இளம் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இயங்கினார். "விநாயகா கலைக் கழகம்' என்ற அமைப்பின் மூலம் வெளிவந்த அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் பெயரும் "விநாயகா'தான். விநாயகா இதழில் தம் எழுத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டவர், பின்னர் மற்ற இதழ்களுக்கும் தயக்கத்துடன் சிறுகதைகள் அனுப்பலானார். இவர் அனுப்பிய எல்லாக் கதைகளையும் தயக்கமே இல்லாமல் பல பத்திரிகைகள் அடுத்தடுத்துப் பிரசுரிக்கவே, மகிழ்ச்சியுடன் எழுத்தாளராகிவிட்டார்.

பாரதியிடம் மட்டற்ற ஈடுபாடு கொண்டவர். பாரதி இலக்கியத்தை இவருக்கு அறிமுகப்படுத்தி இவரை நெறிப்படுத்தியவர், கவிஞர் திருலோக சீதாராம். ஏ.எஸ். ராகவனின் கதைகளில் பாரதியார் கையை வீசிக் கொண்டு கம்பீரமாக நடந்துசெல்வதைப் பல இடங்களில் பார்க்கலாம்.
எழுத்தாளர் சங்கங்களில் மிகவும் புகழ்பெற்றது திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம். ஆண்டுதோறும் சிறந்த மாநாடுகளை நடத்திய வகையில் பெருமைபெற்ற சங்கம் அது. சுகி.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி ரெட்டியார், திருலோக சீதாராம், துறைவன், மீ.ப.சோமு ஆகியோரோடு இந்தச் சங்கத்தைத் தொடங்கியவர் ஏ.எஸ். ராகவன்தான். திருச்சி தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர், இணைச் செயலாளர், துணைத் தலைவர் எனப் பற்பல பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

குடும்பக் கதைகள் எழுதிப் புகழ்பெற்ற ஏ.எஸ். ராகவனின் குடும்பமே இப்போது எழுதுகிறது என்றால் மிகையல்ல. விகடன் வைரவிழாப் போட்டியில் சித்திரக் கதை எழுதி ரூ.30,000 பரிசுபெற்ற ஷைலஜா என்கிற மைதிலி நாராயணன் இவரது மூன்று புதல்விகளில் மூத்தவர். நிறையச் சிறுகதைகளும் நாடகங்களும் எழுதிப் பெயர் பெற்றிருக்கும் ராஜரிஷி என்கிற வெங்கடேசன் இவரது மூத்த குமாரர். எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் இவரது தம்பி மகன்.

பல முன்னோடி எழுத்தாளர்களின் இனிய நண்பராய் விளங்கிய ஏ.எஸ்.ராகவன், பண்பாடு குலையாமல் எழுதிவந்த ஒரு காலகட்ட எழுத்தாளர்களில் மிக முக்கியமான ஒரு விழுது. வேர்கள் மண்ணுக்குள் மறைவது இயல்பு. ஆனால், பாரம்பரியமான தற்கால இலக்கிய ஆலமரத்தின் ஒரு விழுதும் இப்போது மண்ணில் மறைந்துவிட்டது

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள சில பதிவுகள் :

ஏ.எஸ்.ராகவன்

ஏ. எஸ். ராகவன் தமிழ் விக்கிப்பீடியா

புதன், 11 ஜூலை, 2012

ஏ.எஸ்.ராகவன்: எங்கள் தேவன்

 எங்கள் தேவன்

ஏ.எஸ். ராகவன்

 ஜூலை 8, 2012 -இல் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் ஏ.எஸ்.  ராகவன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாக இக்கட்டுரையை இங்கிடுகிறேன்.

[ நன்றி: தென்றல் ] 



தான் பெரிதும் மதித்த ஒரு பெரும் எழுத்தாளரான ‘தேவன்’  மறைந்தபோது ராகவன் அவர்கள் எழுதிய ஓர் அஞ்சலிக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இவை. அவருடைய எழுத்துத் திறனுக்கும், நடை அழகிற்கும், சிந்தனைச் சிறப்பிற்கும்  இது ஒரு சிறந்த காட்டு.  நான் ‘தேவனைப் பற்றித் தொடர்ந்து  இட்டுவரும் பல பதிவுகளுக்கிடையே  இது மிக அரிய ஒன்றே.

திரு ஏ.எஸ். ராகவனின் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஒரு பெரிய இழப்பு.
அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
=======
எங்கள் தேவன்

ஏ.எஸ். ராகவன்

( கதை சொல்ல ஒரு மல்லாரி ராவ், துப்புத் துலக்க ஒரு சந்துரு, துப்பு தானாகத் துலங்க ஒரு சாம்பு, நீதி வழங்க ஜகந்நாதன், இல்லறம் பேண ராஜம், காதலுக்குச் செல்லம், வாழ்வை ரசிக்க ஸ்வாமி; எழுத்துக்கு ஒரு வேதாந்தம், நடுத்தர வாழ்வுக்கு ஒரு சுதர்சனம், இன்னும் எத்தனை எத்தனை சித்திரங்கள்!)





இவர்களெல்லாம் கற்பனைப் பேர்வழிகளா? ஊஹும், வாரத்தின் ஏழு நாட்களில், ஆறை உணர்வாலும், ஏழாவதை உணர்ச்சியாலும் பங்கு போட்டுக் கொண்டு நம்மைத் துடிப்புறச் செய்த அழியாத பாத்திரங்கள் இவர்கள்.

அவர் எழுத்தில்  தெய்வதம் தோய்ந்து நிற்கும். ஹாஸ்யம் விரவிப் பாயும். நம்மைப் பார்க்கலாம். நம் நிழலைப் பார்க்கலாம். உலகைக் காணலாம். அணுவில் அணுவைக் காணலாம். ஆழத்தையும் அகலத்தையும் ஒருங்கே காணலாம்.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் வரை ஓடும் (?) ரயிலோடு போட்டி போட்டுக் கொண்டு காரில் ஓடிவரும் நாகநாதய்யரைப் போன்றவர்களைத் தினசரி சந்திக்காமலா இருக்கிறோம்? “ ஏறுமையா காரிலே, நான்ஸென்ஸ் ஸ்டுபிட்!” என்று சீற்றத்தோடு தெளித்த அன்பை வாரி இறைக்கும் ஸ்வாமியை மறக்க முடியுமா?

சென்ற ஆண்டு ‘தேவன்’ எங்களோடு இருந்தார். விழாவிற்குத் தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை (1) இன்னமும் செவியில் ஒலிக்கிறது. நாங்கள் செய்தது சொல்பம்; பெற்றது மாணப் பெரிது. எங்களைப் பற்றி, எங்கள் சங்கத்தைப் (2) பற்றி, அதன் தொண்டைப் பற்றி நிறைய எழுதி ‘விகடனில்’ வெளியிட்டு ஆக்கம் அளித்தார். அடக்கத்தின் எல்லையில் வாமனராக ஆனால் விஸ்வ ரூபியாகத் தம்மை நிறுத்திக் கொண்ட பெருந்தகை அவர்.


உழைப்பால் உயர்ந்தவர் அவர். எழுத்தால் வளர்ந்தவர் அவர். ‘சூடாமணி’ ஆசிரியராக அவரே பேசினார். நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட இளங் கற்பனைச் சிற்பியாக வேதாந்தத்தை அமைத்தார். நம்மொழியின் நிலை, பத்திரிகைகளின் நிலை, எழுத்தின் தன்மை, இவற்றைத் துணிந்து எழுதினார். ‘மிஸ்டர் வேதாந்தம் ஒரு ஒப்பற்ற சிருஷ்டி.
..//...

’அஞ்சுமுகம் தோன்றில், ஆறுமுகம் தோன்றும்’ என்று கனியக் கனிய எழுதுவாரே, அந்த ஆறுமுகம் தோன்றாமலே போய்விட்டதா? தமிழ் கூறும் நல்லுலகெங்குமுள்ள லட்சக்கணக்கான உள்ளங்கள் பொருமுகின்றன. ஐந்தை அறுபதில் அடக்கி விரிவுரையாக ஓராண்டு எழுதிய கலையுள்ளம் கருகிப் போய்விட்டது. கடலையும், அதன் ஓலத்தையும், நாழிக் கிணற்றையும் பார்த்துச் சலித்த செந்திலாண்டவன், தனக்கு இட்டமுடன் கதை சொல்ல அவரைக் கொண்டு போய்விட்டானா? தமிழ் தந்த கடவுள் தமிழை எடுத்துக் கொண்டானா? மல்லாரி ராவுக்குச் சுயநலமா? இனி நமக்குச் சொல்லாமல் அவருக்கே பொடி போட்டுச் சொல்ல விழைந்தாரா?

ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்து நிற்கிறோம்.

தமிழுக்கு யோகம் பிறந்து விட்டது என்று சென்ற ஆண்டு(3) அவர் குறிப்பிட்டார். பெருவேள்வியில் ஈடுபட்டுள்ள நாம் அதற்குப் பெரும் ஆகுதி செலுத்திவிட்டோம். இனிப் பெற வேண்டியதைப் பெற முயல்வோம்.

[ நன்றி: தேவன் அறக்கட்டளை ]

பின் குறிப்பு:

(2) குறிப்பிடுவது திருச்சி எழுத்தாளர் சங்கம் என்று நினைக்கிறேன்.  ஏனென்றால் திருச்சி ரயில்வேயில் பணி புரிந்த ஏ.எஸ். ராகவன் திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.  ‘தேவன்’ 19-2-56 -இல் அச்சங்கத்தின் முதல் ஆண்டு விழாவில் ஆற்றிய தலைமையுரை மிக அருமை. அதைத்தான் (1) -இலும், கட்டுரையின் இறுதியிலும் (3) ராகவன் குறி்ப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். இன்னொரு சமயம்,  ’தேவன்’ பற்றிய இன்னொரு மடலில் அந்தத் தலைமையுரையின்  சில பகுதிகளைப்  பார்ப்போம்.

திருச்சியில் ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் பணிபுரிந்த இவர், திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார்

திருச்சியில் ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் பணிபுரிந்த இவர், திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார்

அவருடைய ‘மனிதன்’ நாவலும், அதற்கு ‘கோபுலு’ வரைந்த ஓவியங்களும் மறக்கமுடியாதவை.  அதில் ஒரு துளியைப் பின்னர்ப் பார்ப்போம். 
=================

தொடர்புள்ள சில பதிவுகள் :

ஏ.எஸ்.ராகவன்

ஏ. எஸ். ராகவன் : விக்கி கட்டுரை

தேவன் தினம், 2010

தேவன் நினைவுகள் - 1

தேவன் நினைவுகள் -2 

தேவன் படைப்புகள்