வியாழன், 30 அக்டோபர், 2014

கவிதை எனக்கோர் ஆனந்தம் ! :

கவிதை எனக்கோர் ஆனந்தம் !
பசுபதி 

கோபுர தரிசனம் 2014 தீபாவளி மலரில் வந்த கவிதை .உண்மை ஒளிர வேண்டுமென்ற
   உறுதி யுடன்தான் உட்கார்வேன்;
வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
   மண்டை முழுதும் தேடிடுவேன்;
எண்ணப் பரியோ சண்டிசெய்தும்
   என்னைத் தள்ளிப் பரிகசித்தும்
கண்ணா மூச்சி ஆடினுமே
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (1)

வேலன் மீதோர் படைதொடங்கி
   மேலும் சங்கம் ஈந்தனபோல்
மாலைப் போற்றி ராமகதை
   மாலை தொடுத்த கம்பனைப்போல்
பாலில் மூன்றும் சிலம்புமெனப்
   பாடி மகிழ்ந்த பாரதிபோல்
கால வெள்ளம் கரைக்காத
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (2)

சந்தம் என்னும் பொக்கிடத்தைத்
   தந்து தமிழ்க்கு வளம்சேர்த்த
எந்தை அருண கிரிநாதர்
   எடுத்து ரைத்த அவிரோதம்
சிந்தை தன்னை அவ்வழியில்
   தினமும் சுண்டி இழுப்பதனால்
கந்தன் புகழைப் பாடுமந்தக்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (3)

சின்னஞ் சிறிய வயதுமுதல்
   சிறந்த பாடல் பலவற்றை
இன்னி சையாய்க் கேட்பதுதான்
   இன்பம் என்று நினைத்தாலும்
கன்னல் தமிழைக் கந்தலெனக்
   கன்னா பின்னா எனக்குதறிக்
கன்னம் குழியப் பேரன்சொல்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (4)

பசப்புச் சொல்பச் சோந்தியெனப்
   பதவி பெற்ற பின்தேசம்
நசித்துப் போகும் வழிதனிலே
   நாளும் நடத்தும் அரசினர்மேல்,
நிசத்தை மறைத்து முழுங்காமல்
   நேர்மை யுடனே பயமின்றிக்
கசையைச் சொடுக்கிச் சிலர்தீட்டும்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (5)

மனதின் ஆழ்ந்த தடாகத்தில்
   மறைந்து கிடக்கும் நிழலொன்று
தனிமை என்னும் கல்லடியால்
   தருணம் பார்த்துத் தலைதூக்கும்;
புனைவும் உணர்வும் இசைபாடும்;
   புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !     (6)


===== 
தொடர்புள்ள பதிவுகள்:
6 கருத்துகள்:

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தங்கள் கவிதையை
எனது தளத்திலும்
அறிமுகம் செய்துள்ளேன்!
அதன் இணைப்புக் கீழே...

சுவையான பாக்களை படித்தால்...
http://paapunaya.blogspot.com/2014/10/blog-post.html

தொடருங்கள்

yathavan nambi சொன்னது…

நாளொரு மேனி பொழுதொரு எண்ணம்
நல்லோர் நமக்களித்த நற்கவி -
நானென்பேன், நான்முகன் படைத்திட்ட
வல்லோர் புன்னிந்திட்ட பூங் கவிதை
புதுவை வேலு
http://www.kuzhalinnisai.blogspot.fr

இளமதி சொன்னது…

வணக்கம் ஐயா!

ஒப்பற்ற கவிதை படைக்கும் உயர்க் கவிஞர் உங்களை
ஐயா யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களால்
இன்றறிந்து இங்கு வந்தேன்!

அப்பப்பா எத்தனை சிறப்பு! அற்புதம் ஐயா!
இங்குந் தந்துள்ள அறுசீர் விருத்தம் ஆனந்தம்! ஆனந்தமே!

அருமை! தொடர்கிறேன் ஐயா!

வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்!

Pas Pasupathy சொன்னது…

இங்கு வந்து , கருத்துரைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

Iniya சொன்னது…

அழகிய விருத்தப் பாக்கள் கண்டு என் வசமிழந்தேன் தங்கள் வல்லமை கண்டு. அற்புதம்.! வணங்குகிறேன் ஐயா வாழ்த்துக்கள் ...!

Pattabi Raman சொன்னது…

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே -அழகியதமிழ் கவிதைகளை படித்து சுவைப்பதும் ஆனந்தமே.

கருத்துரையிடுக