விகடன். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகடன். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 மார்ச், 2016

டி.கே.பட்டம்மாள் - 6

பாட்டம்மாள் 
வீயெஸ்வி 

ஆனந்த விகடனில் பிரபல இசை விமர்சகர், எழுத்தாளர்  வீயெஸ்வி  2007-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ! 
==============

கர்னாடக இசை உலகில் முப்பெரும் தேவியருள் ஒருவராக இருந்து பட்டொளி வீசிப் பிரகாசித்தவர் டி.கே.பட்டம்மாள். வீட்டில் செல்லமாக பட்டா!
குழந்தைப் பருவத்திலேயே பகவான் ரமணராலும், காஞ்சிப் பெரியவராலும் ஆசீர்வதிக்கப்பட்டு, குருமார்கள் பலரிடம் இசை பயின்று படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கூரை வேயப்பட்ட வீட்டில் விடியற்காலை மூன்றரை மணிக்கு எல்லாம் எழுந்து, சுலோகங்களையும் பக்திப் பாடல்களையும் பாடிப் பயிற்சி செய்யும்போது பட்டாவுக்கு வயது நான்கு!

வருடம் 1931. பட்டம்மாள் படித்த காஞ்சிபுரம் பெண்கள் பள்ளியில் 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தை மேடை ஏற்றிய சமயம். 12 வயது பட்டம்மாளுக்கு சாவித்திரி வேடம். 'தாயார் இருந்தென்ன... தந்தையார் இருந்தென்ன?' பாடலை உணர்ச்சிப்பெருக்குடன் டி.கே.பி. பாட, குழுமி இருந்தவர்கள் கண் கலங்கி இருக்கிறார்கள். இந்த நாடகத்துக்கு அனுமதிக் கட்டணம் நாலணா. அன்று வசூலான தொகை 900 ரூபாய்!

டி.கே.பி-க்குப் பதக்கம் கிடைத்தது. மறுநாள் சுதேசமித்திரன் நாளேட்டில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியது. திகைத்துப் போனார் தந்தை. ''இதென்ன அநியாயம்? பேப்பர்ல இப்படி போட்டோ எல்லாம் வந்தா உன் பொண்ணுக்கு யாரும் மாப்பிள்ளை கொடுக்கப் போறது இல்லை. பட்டாவோட எதிர்காலம் அவ்வளவுதான்...'' என்று கிருஷ்ணஸ்வாமியின் சகோதரி கள் எட்டுப் பேரும் கூச்சல் போட்டார்கள். இன்னொரு பக்கம், பேப்பரில் செய்தியைப் பார்த்துவிட்டு கொலம் பியா கிராமபோன் கம்பெனியினர் இவரை அணுகி, பட்டம்மாளின் குரலைப் பதிவுசெய்ய அனுமதி கேட்டு இருக்கிறார்கள். தந்தைக்கு விருப்பம் இல்லை. ''கவலைப்படாதே... வெளியே மாப்பிள்ளை கிடைக்கலேன்னா என் மருமானையே பட்டம்மாளுக்குக் கல்யாணம் செய்துவைக்கிறேன்...'' என்று உறுதி கொடுத்து அவரைச் சம்மதிக்கவைத்திருக்கிறார் டாக்டர் சீனிவாசன் என்ற அவரது குடும்ப நண்பர்.

திருநெல்வேலி சபாவில் டி.கே.பி. கச்சேரி. பாரதியாரின் பாடல் ஒன்றை மெய்மறந்து பாடிக்கொண்டு இருந்தவர், முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த பெண்களில் ஒருவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டு இருந்ததைக் கவனித்தார். அந்தப் பெண்மணி மகா கவியின் மனைவி செல்லம்மாள். கச்சேரி முடிந்ததும், ''என் கணவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நீங்கள் பாடியதைக் கேட்டுக் குளிர்ந்திருப்பார்...'' என்று தொண்டை அடைக்கச் சொன்னாராம் செல்லம்மாள்.

1940-ல் கீழ்த் திருப்பதியில் உள்ள திருச்சானூரில் பட்டமாவுக்குக் கல்யாணம். மணமகன் ஈஸ்வரன், முன்பே உறுதியளித்த குடும்ப நண்பர் டாக்டர் சீனிவாசனின் மருமகன். திருமண நாள் அன்று வைர அட்டிகையுடன் ஜொலித்தார் பட்டம்மாள். ''விலை மதிப்பற்ற இசை உன்னிடம் இருக்கும்போது இந்த வைர அட்டிகை உனக்கு எதற்கு?'' என்று திருமணத்துக்கு வந்திருந்த ராஜாஜி கேட்க, அதற்குப் பிறகு அந்த அட்டிகையை அணியவே இல்லையாம் டி.கே.பி!

திருமணமான புதிதில் தங்களுடன் திருநெல்வேலிக்கு வரும்படி ஈஸ்வர ஐயரை வற்புறுத்தினார்கள் இவருடைய நண்பர்கள். பட்டமாளுக்குக் கணவர் தன்னை விட்டு விட்டுத் தனியாகச் செல்வதில் விருப்பம் இல்லை. இருப்பினும், 'மனைவிதாசன்' என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்பதால் சம்மதித்தார் ஈஸ்வர ஐயர். ஆனால், சில மணி நேரத்துக்குள்ளாகவே வீடு திரும்பிவிட்ட அவர் சொன்னார்...
''நீ இல்லாம என்னால இருக்க முடியாது பட்டா!''

நன்றி: "Gana Saraswathi D.K.Pattammal:
Dimensions of a divine songster"  by Nithya Raj, Bharatiya Vidya Bhavan, 2007.

[ நன்றி: விகடன் ] 

*  பின் குறிப்பு:

டி.கே.பட்டம்மாள் பேசுகிறார் : 



==== 

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

துப்பறியும் சாம்பு - 6: ‘கோபுலு’வின் கைவண்ணத்தில் . . .

1. ஒரு வேலை போய் ஒரு வேலை வருகிறது!  




இதழியல் துறையில் ‘ஆனந்த விகடன்’ முத்தமிழின் பல   துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது  . சித்திரத் துறையிலும் அப்படியே. ‘காரிகேசர்’ முதல் ‘காமிக்ஸ்’ வரை என்று விகடன் சித்திரங்களைப் பற்றித் தனியாக ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். உதாரணமாக, தமிழ்ப் பத்திரிகை உலகில் வந்த முதல் படக்கதை  ”முத்து” எழுதிய  “ஜமீந்தார்  மகன்” என்கிறது விகடன் 'காலப்பெட்டகம்' நூல்; ஆனந்த விகடனில் தான்  அது  1956-இல் வெளியானது. படங்களை வரைந்தவர் “மாயா” என்ற “ ’இன்னொரு’ மகாதேவன்”. ( அப்போது “தேவன்” விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்தார்.) "முத்து” என்ற பெயரில் பல அருமையான சிறுவர் கதைகளை எழுதியவர் விகடன் உதவி ஆசிரியர்களில் ஒருவரான, “கோபு” கோபாலகிருஷ்ணன்.
[ ஓவியர் ‘மாயா’ ஒரு நேர்காணலில் , தான் ”பாலபாரதி” என்ற பத்திரிகையில்  ஓவியங்கள் வரைந்த “ வீர சிவாஜி” என்பதுதான் தமிழில் வந்த முதல் படக்கதை என்கிறார். ]

1957-இல் “தேவன்” மறைந்தபிறகு,  “தேவனி”ன் “துப்பறியும் சாம்பு” படக்கதை வடிவில் 58 ஏப்ரல் முதல் விகடனில் பவனி வந்தது.  கோபுலுவின் கைவண்ணத்தில் படக்கதை மின்னியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய தலைமுறையில் பலருக்கு “ராஜு” என்ற ஓவியர் தான் முதலில் “சாம்பு” வுக்கு உயிரூட்டியவர் என்றே தெரியாது! (அதாவது, என் ”சாம்பு” பதிவுகளையும், ராஜுவின் படங்களையும் பார்க்காதவர்கள்!:-)  “சாம்பு” என்றவுடனே அவர்களுக்குக் “கோபுலு”வின் படங்கள் தான் நினைவுக்கு வரும்!

எனக்குத் தெரிந்து “கோபுலு”வின் கைவண்ணத்தில் இந்தப் படக்கதை மீண்டும் ஒருமுறை ஒரு விகடன் பிரசுரத்தில் ஜொலித்தது. எந்த இதழில் தெரியுமா? 1997- முதல் 99- வரை  மாலைக் கதிரவனாய் ஒளிவிட்ட ( மாலையில் வெளியான)  “ விகடன் பேப்பர்” என்ற நாளேடு! ( ”சுஜாதாட்ஸ்”, “சுப்புடு தர்பார்” போன்ற  பிரபலமான பத்திகள்  வந்ததும் அதில்தான்!)

படக்கதை என்று தெரிந்து ஒரு கதையை உருவகிப்பது ஒரு வழி; ஏற்கனவே பிரபலமான ஒரு சிறுகதைத் தொடரைப் படக்கதையாக்குவது இன்னொரு, மிகக் கடினமான விஷயம். அதுவும், “தேவ”னின் ஹாஸ்யம் குலுங்கும் சம்பாஷணைகள் நிறைந்த ஒரு கதை வேறு!  செய்யுளில் “உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்” என்ற ஒரு வகை என் நினைவுக்கு வருகிறது. செய்யுளின் நடு நடுவே உரைநடை வரும். சிலப்பதிகாரம் ஒரு நல்ல முன்னோடி, எடுத்துக் காட்டு. அப்படித்தான்,  நம் படக் கதைகளும்! “உரையிடை இட்ட படமுடைக் கதை” !

எனக்கு ஓர் ஆசை! பத்து ஓவியர்களை ஒன்றாய்த் திரட்டி, ஒவ்வொருவருக்கும் அதே ‘சாம்பு’ கதையைக் கொடுத்து, இத்தனை  படங்களுக்குள், இத்தனை மணிகளுக்குள்  கதையைச் சித்திரிக்கவேண்டும் என்று நிபந்தனை போட்டு, விளைவுகளைப் பார்க்க வேண்டும்.....  படக் கதைகள் மேலும் மேலும் வளர பல விதமான யுக்திகள் வெளியாகலாம்! தமிழ் காமிக்ஸ் இன்னும் தவழும் குழந்தையாகத்தானே இருக்கிறது !  மேலும் வளர வேண்டிய கலை அல்லவா?

சரி! ஓர் எடுத்துக் காட்டாகச் “சாம்பு”வின் முதல் கதையைப் பார்க்கலாமா?  பிறகு, நீங்களே புரிந்து கொள்ளலாம்.  இந்தச் சாம்புவைக் காமிக்ஸ் அவதாரத்தில் உலவ விடுவது  எவ்வளவு கடினம் என்று?  ( இந்தப் படக்கதை ஒரு நூலாக இன்னும் வெளிவரவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்! )

1. ஒரு வேலை போய் ஒரு வேலை வருகிறது!  
என்ற முதல் கதை இதோ!

மானேஜர் செய்தார்தி ருட்டு -- சாம்பு
  வாசனை மோந்துடைத் தானவர் குட்டு !
ஆனால் கிடைத்ததோ திட்டு! -- துப்(பு)
  அறியத் தொடங்கினான் வேலையை விட்டு!    









சரி, ‘சாம்புவை’ நெட்டுருப் போட்ட வாசகர்களுக்கு  ஒரு கேள்வி:

இந்த முதல் கதையில் சாம்புவை வேலையிலிருந்து நீக்கிய  அதே முதலாளி --- கதையில், பாங்கி டைரெக்டர் பரமேஸ்வர முதலியார்... பிறகு தனக்கு வந்த ஒரு பிரச்சினையிலிருந்து விடுபட, அப்போது பிரபல துப்பறியும் நிபுணனாகியிருந்த  சாம்புவைக் கூப்பிடுவார், தெரியுமா?

அது என்ன ‘கேஸ்’? எந்தக் கதையில் இது நடக்கிறது?


[நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

துப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்

தேவன் படைப்புகள்