மணிக்கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிக்கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 மே, 2016

பி.எஸ். ராமையா -2

சொந்தக் கதை
பி.எஸ். ராமையா



 கட்டுரைக்கு ஓர் அறிமுகம், பின்புலம்:
'மணிக்கொடி’  பத்திரிகை 33-இல் தொடங்கியது.






38-இல் அதன் ஆசிரியராய் இருந்த ராமையா  அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பின் சில மணிக்கொடி இதழ்களே வந்தன; பத்திரிகையே நின்றுவிட்டது. 1950-இல் கணேசன் என்ற இளைஞர் ‘மணிக்கொடி’யை மீண்டும் தொடங்கினார். ராமையா மீண்டும் பொறுப்பேற்றார். 

பிறகு நாலைந்து இதழ்களே வந்தன. கணேசனுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டதால், பத்திரிகையை நிறுத்தவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி  ராமையா விலகிவிட்டார்.  ( ’முதல் மணிக்கொடி’ யைப் பற்றிய  தகவல்களுக்கு ‘மணிக்கொடிக் காலம்’ என்ற நூலைப் படிக்கவும்.) 

இரண்டாவது தோற்றம் பெற்ற மணிக்கொடியின் முதல்  மூன்று இதழ்களைப் பற்றிச் சுவையாக  இங்கே எழுதுகிறார் ராமையா.( இது மணிக்கொடியில் அவர் எழுதிய கடைசிக் கட்டுரையோ? )
===========

'மணிக்கொடி வெளிவரப் போகிறதென்று அறிந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சி யெல்லாம் பிரதி மாதமும் அது என்று வெளிவரும் என்று எதிர்பார்த்து ஏமாறுவதிலேயே தீர்ந்து விடுகிறது' என்று குறை கூறிப் பல அன்பர்கள் கடிதங்கள் எழுதினார்கள். சொந்தமாக அச்சகமும் இதர வசதிகளும் அமைத்துக் கொள்ளாமலே பத்திரிகையைத் தொடங்கி விட்டதால் அவர்கள் அப்படிக் குறை கூற இடம் ஏற்பட்டது.

'பிரதி மாதமும் முதல் தேதியிலேயே பத்திரிகையைக் கொண்டு வர முயற்சி செய்யக் கூடாதா?" என்று ஒரு ஏஜண்டு நண்பர் வற்புறுத்திக் கடிதம் எழுதினார்.

வேறு வகைகளில் முயன்று, சாத்தியமாகாது என்று தோன்றியதால், ஒரு இதழையே இடைமறித்து, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே பத்திரிகை வெளிவர ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்தோம். ஆகையால் ஏப்ரல் 1950 என்று முகவரி போட்டுக் கொண்டு வர வேண்டிய இதழ் வரவில்லை. இந்த இதழின் விலாசம் மே, 1950. ஆனாலும் முதல் கொடியில் நான்காவது மணிதான். இனி பிரதி மாதமும் இதழ்கள் முதல் தேதியன்றே வெளி வந்து விடும். இடையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அன்பர்கள் பாராட்ட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

'மணிக்கொடி இலக்கியப் பத்திரிகை. தமிழில் அசலாக எழுதப்படும் கதை இலக்கிய வளர்ச்சிக்கென்றே தோன்றியது. வசன நடையிலேயே கவிதா வேகமும் மேதா விலாசமும் காட்டி எழுதும் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்குமிடையே ஒட்டிய உறவைத் தோற்றுவிப்பது அதன் லட்சியங்களில் ஒன்று.

'மணிக்கொடி'யின் புதிய தோற்றத்தில் சென்ற மூன்று இதழ்களிலேயே இந்த வகையில் அது நல்ல சாதனை கண்டிருக்கிறது.

"ஸ்ரீ தி. ஜானகிராமனின் கதை ஒவ்வொன்றும் வியப்பை யூட்டும் படைப்புகள். அவற்றிலே உள்ளடங்கியிருந்தே படிப்பவர் நெஞ்சையள்ளும் அழகும், ஹாஸ்யமும் அதிசயமானவை. முதல் சில வரிகளுக்குள்ளேயே அவருடைய கதாபாத்திரங்கள் உருவம் பெற்றுக் கண்முன் எழுந்துவிடுகின்றன. அவற்றின் வளர்ச்சியிலே அவர் காட்டும் நகாஸ் வேலைகள் படிப்பவரை அபூர்வமான அனுபவங்களுக்கு உள்ளாக்குகின்றன, என்றும், "ஸ்ரீ எல்லார்வி நம்முடைய கிராமங்களில் சகஜமாக வழங்கும் சொற்களைச் சுலபமாகக் கையாளுகிறார். அவருடைய கதைகளிலும், பாத்திரங்களிலும் காணும் அழகுகளுக்கு அவருடைய நடை ஒரு தனிச் சோபையளிக்கிறது, ' என்றும் ஒரு நண்பர் என்னிடம் நேரில் சொல்ல வந்திருந்தார்.

மூன்றாவது இதழில் வெளியான கதை ஒவ்வொன்றும் ஒரு தனி “மணிக்கதை' என்று பலர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒன்றிருவர் ஒவ்வொரு கதையையும் அலசி ஆராய்ந்து விமரிசனமே எழுதியிருக்கிறார்கள்.
அந்த இதழில் வந்த 'மாப்பிள்ளை என்ற கதையைப் பற்றிச் சொல்லாத கடிதமே இல்லை. அதை யெழுதிய 'ரஜனி'யின் உண்மைப் பெயர் என்ன என்பதையறிய ஒருவர் தீவிர ஆவல் கொண்டு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஸ்ரீ பி. வி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள "அவள் வாழ்க்கை' என்ற கதையை அபாரமாகப் புகழும் ஒரு அன்பர், "மகரம் எழுதியுள்ள தரை மீன் எங்கள் காரியாலயத்திலும் ஒன்று இருக்கிறது,' என்று எழுதியிருக்கிறார்.
வாசகர்களிடம் தோன்றியுள்ள இந்த உற்சாகம் தமிழில் உயர்தர இலக்கியப் படைப்புகள் பெருக வைக்கும் தூண்டு கோலாக வளர வேண்டும் என்பதே என் ஆசை.

'மணிக்கொடி"யில் கதைகளுடன் சில கட்டுரைகளுக்கும் இட மளிக்கலாம் என்ற கருத்தைப் போன இதழில் வெளியிட்டிருந்தேன். அதற்குப் பலமான ஆட்சேபணைக் கடிதங்கள் வந்துள்ளன. ஒரு இலங்கை யன்பர், ''எக்காரணத்தைக் கொண்டும், எல்லாம் கதைகள் என்ற தனிச் சிறப்பை மணிக்கொடி இழந்து விடக் கூடாது' என்கிறார். மதுரையிலிருந்து ஸ்ரீ துரைசாமி நாடார் என்ற அன்பரும் அதே கருத்தைத்தான் எழுதியிருக்கிறார். அவ்விருவரும், அதைப் பற்றி எழுதியுள்ள மற்றவர்களும், "இப்போது ஒவ்வொரு இதழிலும் வரும் ஸ்ரீ. கு. ஸ்ரீநிவாஸனின் கட்டுரை யொன்றே போதும்,' என்று சொல்லுகிறார்கள். எனவே 'மணிக்கொடி"யை எல்லாம் கதைப் பத்திரிகையாகவே வைத்து விடுவதென்று முடிவு செய்து விட்டோம்.

இந்த இதழில் உள்ள சில கதைகளில் தற்செயலாக ஒரு விசித்திரமான கருத்து ஒற்றுமை அமைந்து விட்டது. "மரணபயம்", 'மனக்குரங்கு', 'நினைப்பதும் நடப்பதும்', 'வெறி” ஆகிய இந்த நான்கு கதைகளிலும் மரணம் என்ற கருத்து, அதிலிருந்து எழும் பயம் மனித நெஞ்சை எப்படியெல்லாம் ஆட்டி வைத்து, எந்த எல்லை வரை இழுத்துச் சென்று விடுகிறது என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு தனி அழகு உருவமாக அமைந்திருக்கிறது.

"மரண பயத்தில் சாவின் பிடியிலிருந்து தப்பி வந்தவரின் மனைவி, 'இன்னொரு உயிரை எமனிடம் காட்டிக் கொடுத்துத் தன் கணவன் உயிரை மீட்டுக் கொண்டாள் என்ற கருத்து ஒரு அதிசயமான அழகு.

மீ. ரா. என்ற இளைஞர் - இதுதான் அவருடைய முதல் கதை என்று நினைக்கிறேன் - 'மனக்குரங்கில் அதிசயிக்கத்தக்க லாகவத்துடன் 'மரண பயத்தைக் கதைத்திருக்கிறார் சில வினாடிகளுக்குள் பல வருஷ வேதனையை அனுபவித்து விடும் அவருடைய மனத் தத்துவப் படைப்பு அபாரமாக இருக்கிறது.

 'நினைப்பதும் நடப்பதும்" என்ற  கதையின் ஆசிரியை, நேரிடையாகத் தொடாமல் மறை முகமாக 'மரணம்' என்ற கருத்து எப்படி ஒருத்தியின் மனோ பலத்தையே குடித்து, அவளையும் பலி கொண்டு விட்டது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்.

'வெறியில் ரஜனி தேர்ந்த கதாசிரியரின் திறமையைக் காட்டி விட்டார். சாவு தன்னைத் தொட வருகிறது என்ற பயத்தில் பிறந்ததா, அல்லது தன்னை மற்றவர்கள் அலட்சியம் செய்து விட்டார்கள் என்ற ஆத்திரத்திலும் கசப்பிலும் பிறந்ததா மீனாவின் வெறி என்பதைப் படிப்பவர்களே யூகித்துக் கொள்ளும்படி விட்டு விட்டார். மீனாவின் அந்த மனோ நிலையைப் புலி உதாரணத்தில் தொட்டுக் காட்டுவது ஒரு அபூர்வமான அழகுப் படைப்பு.

மற்றொரு மொழி பெயர்ப்புக் கதை முதலில் ஸிந்தி மொழியில் எழுதப்பட்டது. அதன் இங்கிலீஷ் மொழி பெயர்ப்பி லிருந்து தமிழாக்கப்பட்டிருக்கிறது. அப்துல் ரஹ்மான் பாயி என்ற பாத்திரம் அபூர்வமான ஒரு சிருஷ்டி.

 ''ஸ்ரீ லா.ச. ராமாமிருதம் அபூர்வமாகத்தான் எழுதுகிறார். ஆனால் ரொம்ப அருமையாக எழுதுகிறார்' என்று என்னிடம் ஒரு பத்திரிகைப் பிரசுரகர்த்தர் அடிக்கடி சொல்லுவதுண்டு. 'கண்ணிலே விழுந்த தூசியை நீ இங்கே நெஞ்சகத்துக்குள் ஊதி விட்டாய்!: என்று கதாநாயகன் சொல்லும் அழகு அருமையானதுதானே அவன் அந்தத் தூசியை வெளியேற்றி மீளும் சம்பவ அமைப்பு அதைவிட அருமையாக இருக்கிறது.

'இதுதான் வாழ்க்கை' என்ற கதை ஒரு சொல் சித்திரம். கணவன் மனைவி இருவர் உள்ளங்களும் பரஸ்பரம் அன்பில் பிணைபட்டு, சர்வ தியாகங்களுக்கும் சித்தமாக இருக்கும் நிலை யிலும், வாழ்க்கை முறையை அறியாமல், அந்த அன்பையெல்லாம் வீணாக்கிப் பாழ்படுத்தும் பரிதாபத்தை நாம் தினசரி எத்தனை குடும்பங்களில் பார்க்கிறோம்!

ஸ்ரீ நாகராஜன் தமது 'மனமும் மருந்தும்' என்ற கதைக்கு, சமீபத்தில் டாக்டர் ராஜன் பேசியதாகப் பத்திரிகையில் வந்த ஒரு வரிதான் தூண்டு கோல் என்கிறார். வியாதியஸ்தரின் மனோ நிலையை ஆராய்ந்து, அங்குள்ள வியாதிக்கு மாற்றுக் கண்டால் உடல் வியாதியைச் சுலபமாகக் குணப்படுத்தி விடலாம் என்ற கருத்தை வைத்துத் திறமையுடன் ஒரு துப்பறியும் கதையையே படைத்து விட்டார்.

மூன்றாவது இதழில் வெளியான படங்களைப் பற்றிப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். 'சாகரின் படங்களே கதைகளுக்கு ஒரு தனியழகைக் கொடுக்கின்றன என்று ஒருவர் சொன்னார். அவருடைய கண் திருஷ்டி தானோ என்னவோ இந்த இதழில் வரும் கதைகளுக்குச் சரியான படங்கள் எழுதி வாங்கிச் சேர்க்கக் கூட அவகாசமில்லாமல் போய் விட்டது!

பிரதி மாதமும் இதழ் முதல் தேதியில் வர ஏற்பாடு செய்து விட்டதே பெரிய சாதனை என்று எனக்குப் படுகிறது. மற்ற அம்சங்களையும் அதே மாதிரிச் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

– 1950

[ நன்றி: மணிக்கொடி இதழ்தொகுப்பு ] 

பி.கு. 

“ இரண்டாவது முறை தொடங்கியபோது ‘மணிக்கொடி’க்கு முந்திய கௌரவம், மதிப்பு, கனம் எதுவுமே கிட்டவில்லை. அதற்கு வேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை. ஆனால் புது மணிக்கொடியின் வழியாக எனக்கு லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன் ஆகிய இரண்டு மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது “
                        பி.எஸ்.ராமையா, “மணிக்கொடிக் காலம்”, தீபம், அக்டோபர் 1971.

தொடர்புள்ள பதிவுகள்:

மணிக்கொடி சிற்றிதழ்

மணிக்கொடி: விக்கிப்பீடியா கட்டுரை

பி.எஸ்.ராமையா

புதன், 18 மே, 2016

பி.எஸ்.ராமையா -1

மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா
கலைமாமணி விக்கிரமன்


மே 18. பி.எஸ்.ராமையாவின் நினைவு தினம்.

அவர் நினைவில் விக்கிரமன் அவர்கள் தினமணியில் 2010 -இல் எழுதிய கட்டுரையை இங்கிடுகிறேன்.
===========


வத்தலகுண்டு' தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம். அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது.

வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள்  தம்பதிக்கு கடைக்குட்டிமகனாக, 1905-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி பி.எஸ்.ராமையா பிறந்தார்.

படிக்க வசதியில்லை. ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட ராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார். வேலை தேடி சென்னைக்குப் புறப்பட்டார். படித்த படிப்பு நாலாவது பாரத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) மதிப்பு இருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது, திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவரவில்லை.

மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்யபவன் உணவுச்சாலையில் சர்வர் வேலையில் சேர்ந்தார். 18 வயது வாலிபரான ராமையா, செய்யாத தொழிலில்லை. பார்க்காத வேலையில்லை.

முன்பே நெஞ்சில் கனலை வளர்த்துக்கொண்டிருந்த தேசிய இயக்கம், ராமையாவைச் சிலிர்த்து எழச் செய்தது. காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

சிறையில், வ.ரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. சிறைத் தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார். மனதில் புதுத் தெம்பு ஏற்பட்டது.

காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தொண்டர் படை முகாமிலிருந்து தொண்டாற்றினார். ஓரணா விலையுள்ள சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார். தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்கள் அமைத்தார்.

1932-இல் மீண்டும் சென்னைக்கு வந்த ராமையாவுக்கு அடுத்து என்ன செய்வதென்ற  குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார்.

முன்பே ஜே.ஆர்.ரங்கராஜு நாவல்கள், ராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம் முதலியவற்றைப் படித்திருந்ததால், படைப்பிலக்கிய ஆர்வமும் சேர்ந்திருந்தது.

"ஆனந்த விகடன்' சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார். அதற்குக் கதை எழுதத் தூண்டியவர் சங்கு சுப்பிரமணியம்தான். அவர் தீவிர தேசிய இயக்கக் கொள்கை உடையவர். பாரதி பக்தர். ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குக் கதை அனுப்பினார் ராமையா. முதலிடம் பெற்ற கதைக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. ராமையா எழுதிய "மலரும் மணமும்' கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.

கதையை அனுப்பிய அவசரத்தில் எழுதியவர் பெயரை எழுத மறந்துவிட்டார் ராமையா. கதையை வெளியிட்டு, எழுதியவர் பெயரைத் தெரிவிக்கவும் என்று பத்திரிகையில் எழுதிய பிறகே, எழுதியது தான்தான் என்று தெரிவித்து அந்தப் பத்து ரூபாயைப் பெற்றார்.


அதன்பிறகு, பத்திரிகை உலகப் பணி அவரைக் கவர்ந்தது. "ஜயபாரதி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்களின் லட்சியத்தை வெளியிடும் ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, காந்தி ஆகிய இதழ்களைப் பற்றி இந்தத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும்.

1933-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டதுதான் மணிக்கொடி. ஸ்டாலின் சீனிவாசனின் ஆர்வமும், லட்சியமும்தான் மணிக்கொடி பிறக்கக் காரணம். "மணிக்கொடி' இதழ் பி.எஸ்.ராமையாவை மிகவும் கவர்ந்தது. "மணிக்கொடி'க்குத் தொடர்ந்து எழுதினார். மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார்.

""மணிக்கொடி காலத்துக்குப் பின் தமிழ்நடையில் படிப்பவர், கேட்பவர் உள்ளங்களில் கனல் மூட்டும் விசையும் வேகமும் திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர் சிலரிடம் இருக்கின்றன. இந்த வகையில், அறிஞர் அண்ணாதுரை மற்றவர்களுக்கு ஒருபடி மேலே நிற்கிறார். ப.ஜீவானந்தத்துக்கு எழுத்திலும் பேச்சிலும் விசையும் வேகமும் கொண்ட தமிழ்நடை கூடியிருக்கிறது; கனல் இருக்கிறது'' என்ற தம் தூய கணிப்பை தாம் எழுதிய "மணிக்கொடி காலம்' என்ற தொடரில் எழுதி, தமிழுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா.

"மலரும் மணமும்' வெளிவந்தபோது அவருக்குச் சிறுகதை எழுதும் நுணுக்கங்கள் தெரியாது. "மலரும் மணமும்' பிரசுரமான பிறகு அவருக்குப் புதிய உற்சாகம் ஏற்பட்டது. "மணிக்கொடி'யின் வளர்ச்சியில் நகமும் சதையுமாக இருந்த ராமையா, பல சிறுகதைகள் எழுதிக் குவித்தார்.

ராஜாஜியிடமிருந்து கட்டுரை வாங்கி "மணிக்கொடி'யில் வெளியிட்டார் ராமையா. பலருக்கு அதில் அதிருப்தி. "கல்கி'யைத் தவிர வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதாத ராஜாஜி, "மணிக்கொடி'யில் தொடர்ந்து எழுதுவதாக வாக்களித்தார். ஆனால், அதை வெளியிடும் பேறு "மணிக்கொடி'க்கு இல்லை.

சிறுகதை இலக்கியத்தைப் பற்றி பி.எஸ்.ராமையா அழுத்தமான கொள்கை உடையவர். "இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்' என்றார்.

சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையாவின் பண்பு, எழுத்து, வாழ்க்கை மூன்றையும் அறிந்தவர். தன் புதினம் வெளிவருவதற்கு முன்பே தன் சொந்தச் செலவில், "ராமையாவின் சிறுகதைப் பாணி' என்ற நூலை வெளியிட்டார். சிறுகதை இலக்கியத்தைப் பெரிதும் விரும்புபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும். ராமையாவின் வாழ்க்கைச் சரிதத்தை விவரமாக அறிய, சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற "மணிக்கொடி காலம்' என்ற நூலைப் படிக்க வேண்டும்.

அவர் வளர்த்த, தியாகம் செய்த, சிறிது காலத்துக்குக் (மணி) கொடியைத் தாங்கிப்பிடித்த "மணிக்கொடி' என்று வாசகர்களும் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் மார்தட்டிக் கொள்பவர்களும் பேசும்படியாகச் செய்த "மணிக்கொடி'யிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

பின்னர், ராமையா தன் புது வாழ்க்கையை முடிவு செய்துவிட்டார். திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார்; நாடகம் எழுதினார்; திரைப்படத் தயாரிப்புக்கு உதவினார். ஆனால், அவர் வாழ்க்கையை நடத்தியது, சிறுகதைக் கலைக்குத் தொண்டு செய்வதன் மூலமாக ஆனந்த விகடன், தினமணி கதிர் (முதல் ஜன்மம்), குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி, சன்மானத் தொகையைப் பெற்றார். சி.சு.செல்லப்பாவின் பட்டியல்படி அவர் 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதியுள்ளார்.

1957-இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்' என்ற நாடகம் எழுதியுள்ளார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. "போலீஸ்காரன் மகள்' என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

பி.எஸ். ராமையா, வெற்றிலை, சீவலுடன் புகையிலை போடும் பழக்கத்தால், அவரது தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது.

பி.எஸ்.ராமையா, 1983-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி (78வது வயதில்) காலமானார் என்ற செய்தியைக் கேட்டு எழுத்துலகமும், வாசகர் உலகமும் கண்ணீர் விட்டது.

சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டதையும் மணிக்கொடிக்காக அவர் செய்த தியாகத்தையும் எழுத்தில் அடக்கிவிட முடியாது.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.எஸ்.ராமையா