வாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

2220. எஸ். எஸ். வாசன் - 5

 விகடன் ஆசிரியர் 


ஆகஸ்ட் 26. வாசனின் நினைவு நாள்.

வாசன் மறைந்த பின், விகடனில் வந்த தலையங்கம். 

=== 

விகடனின் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும், லட்சக்கணக் கான வாசக நேயர்களையும் ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு, மீளாத்துயில் கொண்டுவிட்டார் ஆசிரியர் திரு எஸ்.எஸ். வாசன். ஓய்வு என்பதே அறியாமல் அல்லும் பகலும் உழைத்தவர், இறுதியாக ஒய்வு எடுத்துக்கொண்டு விட்டார். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்றே காலமெல்லாம் வாழ்ந்தவர், எல்லோரையும் கண்ணீ ர் பெருக்கி, கதறி அழும்படி விட்டுவிட்டு மறைந்துவிட்டார்.

எளிமையான குடும்பத்தில் பிறந்து வறுமையின் மடியில் வளர்ந்து, தன்னந்தனி சிறுவனாக தன்னருமைத் தாயே ஆதரவாக தன்மானம் மிக்க இளைஞராக, தன்னம்பிக்கையே துணையாக உழைத்து உழன்று இவர் உயர்ந்த கடந்த அறுபதாண்டு வரலாற்றுடன் கலந்து விட்ட தனிமனிதனின் ஒப்பற்ற வாழ்க்கை சரிதமாகும். பத்திரிகை விற்பனையாளராகவும் விளம்பர சேகரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் படிப்படியாக உயர்ந்து சமூகத்தில் தமக்கு என்று ஓர் இடத்தைத் தேடிக்கொண்டார்.கலாரசனையில் ஊறித் திளைத்த அவரது உள்ளம், படவுலகில் நாட்டம் கொண்டது.தமக்கே உரிய மதிநுட்பத்துடனும், புதுமைகளைப் படைக்கும் சாதனைத் திறனுடனும் சினிமாத் துறையில் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்று அகில இந்திய அரங்கில் புகழ்க்கொடி நாட்டினார். விகடன் ஆசிரியராகப் பெற்ற அனுபவத்தின் காரணமாகவே தாம் திரைப்பட டைரக்டராகவும், 'எடிட்டராகவும் விளங்க முடிந்தது என்று ஆசிரியர் வாசன் அடிக்கடி கூறிப் பெருமைப் படுவது உண்டு.

ஆசிரியர் வாசன் இளமைப் பருவத்தில் இருந்தே நாட்டு அரசியலில் அதிக அக்கறை காட்டி வந்தார். தேசிய நோக்குடனேயே எந்தப் பிரச்னையையும் அலசி ஆராய்வார். நாட்டின் எதிர்காலத்தை மனத்தில் கொண்டு விருப்பு வெறுப்பின்றி தம் எண்ணங்களைக் கூற வேண்டும் என்பதில் கடைசிவரையில் உறுதியாக இருந்தார். தமது இறுதி நாட்களில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலைமை யைப் பற்றி அடிக்கடி நினைத்து வேதனைப் படுவார். காலன் வந்து கட்டிலருகில் காத்திருந்த நேரத்திலும் காங்கிரஸ் காரிய கமிட்டி என்ன முடிவு செய்யப் போகிறது என்பதே அவர் கவலையாக இருந்தது.

நாற்பத்தோரு ஆண்டுகளாக விகடனை வளர்த்து உருவாக்கிய அவர் சமூக அரசியல் சூழ்நிலைக்கும் மக்களின் ரசனைக்கும் ஏற்ப  அவ்வப்போது பத்திரிகை மாற்றங்களைச் செய்யத் தயங்கியதேயில்லை. இருப்பினும் விகடனுக்கென்று ஒரு தரம் உண்டு, ஒரு வழி உண்டு, ஒரு கொள்கையுண்டு அவற்றைப் பறிகொடுக்காமல் நாம் வளர வேண்டும். கடினமாயிருந்தாலும் அந்த வழியில்தான்  முன்னேற வேண்டும் என்பதை நேரம் கிடைத்த போதெல்லாம் சக ஊழியர்களுக்கு  நினைவு படுத்துவார்.

பத்திரிகை உலகுக்கு உன்னத லட்சியங்களையும் உன்னத நெறிகளையும் உயரிய  கோட்பாடுகளையும் வகுத்துத் தந்த  வழிகாட்டி இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் காட்டிச் சென்ற வழி பளிச்சென்று நம் கண் முன் தெரிகிறது.  தளராத நம்பிக்கையுடனும் நேயர்களின் பேராதரவுடனும் அவ்வழி செல்லுவதே மறைந்த ஆசிரியரின் நினைவுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

[ நன்றி: விகடன் ] 
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

1345. எஸ். எஸ். வாசன் - 4

கலை  உலகின் பெரு நஷ்டம்



ஆகஸ்ட் 26. எஸ்.எஸ்.வாசனின் நினைவு தினம்.  அவர் மறைந்தவுடன் 'கல்கி'யில் வந்த அஞ்சலிக் கட்டுரை.



[ நன்றி: கல்கி ] 
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 10 மார்ச், 2016

எஸ். எஸ். வாசன் - 3

வாசனைப் பற்றி 
தமிழ் அறிஞர் வ.ரா. , பெரியார் ஈ.வே.ரா 

மார்ச் 10. எஸ். எஸ். வாசன் அவர்களின் பிறந்த தினம்.





1) முதலில், அவரைப் பற்றி வ.ரா. எழுதியது:

============================
மறைந்த தமிழ் அறிஞர் வ.ரா.  'தமிழ்ப் பெரியார்கள்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினார். அதில் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் இங்கே இடம் பெறுகின்றன.
''எனக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கிடையாது. எதைச் செய்ய நினைத்தாலும் அதைப் பற்றித் தீர்க்கமாக யோசித்து முடிவு கண்ட பிறகுதான் அதில் இறங்குவேன். ஒன்றைத் துவக்கி, அதைப் பாதி வழியில் நிறுத்துவது என்பது என் இயற்கைக்குப் பொருந்தியது அல்ல.''
- இவ்வாறு சொல்பவர் எஸ்.எஸ்.வாசன். வெற்றியின் ரகசியங்கள் என்பதை விளக்கிக் காட்டும் நூலைப் போல, வாசன் தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்று சொன்னால், அது மிகையாகாது. வாழ்க்கை என்ற போர்க்களத்தில் அங்குலம் அங்குலமாகப் போராடி, முன்னேறி வந்தவர் வாசன்.
'என் அன்னையால்தான் நான் இந்தப் பெரும் பதவிக்கு வந்தேன்' என்று சத்ரபதி சிவாஜியும், நெப்போலியன் சக்கரவர்த்தியும் சொன்னதில் உண்மை இருக்குமோ இருக்காதோ, எனக்குத் தெரியாது. வாசனின் தற்போதைய சிறந்த நிலைக்குக் காரணம் 'தாயும் தகப்பனும்' ஆன அவருடைய தாயார்தான்.
வாசன் உயரமுமல்ல; ரொம்பக் குள்ளமுமல்ல.  உடல் கனம் கொண்டவருமல்ல; மெலிந்தவ  ருமல்ல. சிவந்த மேனி உடையவர். புன்னகை பூக்கும் முக விலாசம் படைத்தவர். கணீர் என்று பேசும் குரல், அவரது தனிப் பொக்கிஷமாகும். பதற்றமில்லாத நாக்கு; அவசரப்படாத மனது. அலட்சியம் செய்து அவதூறு பேசும் தன்மைக்கும் அவருக்கும் வெகு தூரம்.
தாம் தேச பக்தன் என்றாவது, சமூகத் தொண்டன் என்றாவது, கலா ரசிகன் என்றாவது, இலக்கியப் பிரியன் என்றாவது வாசன் பறைசாற்றியதே இல்லை. படாடோபம் என்பதே அவருக்கு இனிப்பில்லாத ஒன்று. பலாத்காரத்திலும் இனிப்பு இல்லை. கட்டாயப்படுத்திக் காரியத்தைச் சாதித்துக் கொள் வது அவருக்குப் பிடித்தமே இருப்பதில்லை.
காக்காய் பிடிக்கிறவனைக் கண்டால் அவருக்கு எல்லை யில்லாத அவமதிப்பு. ரசிகர்களுடனும், புத்திசாலிகளுடனும், காரியவாதிகளுடனும் கபடமில் லாத மனத்தர்களுடனும் பழகு வதில் வாசனுக்கு அளவு கடந்த பிரியம். சங்கீதத்திலும் சித்திரத்திலும் நகைச்சுவையிலும் ஆழ்ந்து கிடக்கும் இவருடைய உள்ளம், சுருதி பேதத்தைக் காணப் பொறுப்ப தில்லை.

வாழ்க்கை என்ற போர்க்களத்தில் அங்குலம் அங்குலமாகப் போராடி முன்னேறி வந்தவர் வாசன். அவரைத் தட்டிக் கொடுக்க அன்று யாரும் முன் வரவில்லை. ஆனால், அவரை மட்டப்படுத்த முன் வந்தவர்கள் எத்தனை பேர்களோ? அவரைப் பற்றி ஆரம்பத்தில் நாலு நல்ல வார்த்தை சொல்ல ஈ, காக்கை கூடக் கிடையாது. யாரும் வாசனைத் தூக்கிவிடவில்லை. தன் கையே தனக்குதவி என்ற கொள்கையில் ஊறிப்போனவர் வாசன்.


வாசனுடைய உயர்வுக்குக் காரணம், அவருடைய தாயார்தான்! ''அம்மா வீட்டில் இல்லாமல் போனால் எனக்கு என் வீட்டிற்குப் போக மனமில்லை'' என்று வாசன் பச்சைக் குழந்தையைப்போல அபரிமிதமான வாஞ்சையோடு சொல்லும்போது, அவரைப் படம் பிடிக்க நீங்கள் எல்லோரும் ஆசைப்படுவீர்கள். தாயாரிடம் அவருக்கு இருக்கும் வாஞ்சை உணர்ச்சி அவ்வளவையும் அவருடைய (குழந்தை) முகத் தில் அப்படியே காணலாம்.
'''தாய்’ என்று சினிமாப் படம் பிடிப்பதற்கு நல்ல கதையாகச் சொல்லுங்கள். அந்தப் படம் பிடித்ததும், நான் சினிமாத் தொழிலிலிருந்து விலகிக் கொள்கி றேன்'' என்று வாசன் என்னிடம் ஒரு சமயம் சொன்னபோது, எனது உள்ளம் கலங்கிக் கலகலத்துப் போனது.

அந்தக் காலத்தில் அவருக்கு நண்பரும் துணையாகவும் இருந்தவர் 'தேச பந்து’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த, காலம் சென்ற கிருஷ்ணசாமிப் பாவலர். வாசனை பாவலரோடுதான் பல காலும் பார்க்க முடியும். சம்பாஷணை காலத்தில், தான் கொண்டிருந்த கொள்கைக்கும் கட்சிக்கும் எதிரிடையாக இருந் தாலும் பிறர் சொல்வது அனுபவத்துக்குப் பொருந்தின உண்மையாயின், அதை ஒப்புக்கொள்ள வாசன் தயங்கினதே இல்லை. அது மட்டுமல்ல, அந்த உண்மையை எடுத்துக் காண்பித்தவரை அப்பொழுதே கருமித்தனமில்லாமல் பாராட்டுவார். தமக்குத் தெரியாததை மற்றவர் கண்டு பிடித்துவிட்டாரே என்று சிறிதும் பொறாமைப்படமாட்டார்.

ஆனந்த விகடனுக்கு சொந்த அச்சுக்கூடம் வாங்க வாசனிடம் போதிய பணமில்லாமல் இருந்தது. உடைந்த அச்சுயந்திரம் விலைக்கு வந்தது. சரியானபடி 'ரீபில்ட்’ செய்தால், அது நன்றாக உழைக்கும் என்று நிபுணர்கள் சொன்னார்கள். பத்திரிகைத் தொழிலை அப்போதுதான் ஆரம்பித்திருந்த வாசன், அச்சுத் தொழிலில் அனுபவமில்லாத வாசன், நிபுணர்களின் வார்த்தையை நம்பி அந்த மிஷினை விலைக்கு வாங்கினார். அது உழைத்த உழைப்பு பூரணமாகச் சொல்லலாம். உடைந்த யந்திரத்தை வாங்கலாம் என்ற வாசனின் துணிச்சலையும் நம்பிக்கையையும் பாருங்கள். அந்தத் துணிவுக்கும் தன்னம்பிக்கைக்கும்தான் வாசன் என்று பெயர். 


2) பெரியார் ஈ.வே.ரா. எழுதியது:

அந்தக் காலத்திலே 'கேடிலாக் வியாபாரம்’னு ஒண்ணு உண்டு. அதாவது, எல்லா ஷாப்பிலே இருக்கிற சாமான்களோட பெயர்களையும் பட்டியல் எடுத்து, புஸ்தகமாப் போட்டு, தபால்லே அனுப்பி வைக்கிறது. அந்தப் புத்தகத்திலே சில பொருள்களோட பொம்மையும் இருக்கும். புஸ்தகத்தைப் பார்த்துவிட்டு ஆர்டர் வரும். கடையிலே போய் அந்தந்த சாமான்களை வாங்கி அனுப்பி வைக்கிறது. இதிலே கிடைக்கிற கமிஷன்தான் லாபம். இதுக்குத்தான் 'கேடிலாக் வியாபாரம்’னு பேரு.


அந்தக் காலத்திலே எஸ்.எஸ்.வாசன் இந்த வியாபாரம் பண் ணிக்கிட்டிருந்தாரு. ஒரு நாளைக்கு என்கிட்டே வந்து, உங்க 'குடியரசு’ பத்திரிகையிலே என் வியாபாரத்தை விளம்பரம் பண்ணணும்னாரு. அப்போ 'குடியரசி’லே ஓர் அங்குலத்திற்கு இரண்டணா விளம்பர சார்ஜ். நான் இதைச் சொன்னதும், 'இரண்டணாதானா?’ன்னு கேட்டார் வாசன். 'ஆமாம்’னேன். 'எவ்வளவு விளம்பரம் கொடுத்தாலும் எடுத்துப்பீங்களா?’னு கேட் டார். எனக்கு அந்தக் கேள்வியே புதுசா இருந்தது. யாராவது விளம்பரம் வேண்டாம்பாங்களா? 'சரி’ன்னேன். இந்தப் பிள்ளை என்ன பண்ணிச்சு... எங்கெங்கேயோ போய் விளம்பரம் சேகரிச்சிட்டு வந்து, 'குடியரசு’க்குக் கொடுக்க ஆரம்பிச்சுது. எனக்கு அங்குலத்துக்கு இரண்டணாதான் கொடுக் கும். ஆனா, மத்தவங்க கிட்டேருந்து நிறைய வாங்கிப்பாரு. இப்படிக் கொஞ்ச காலம் என் கிட்டே விளம்பர ஏஜென்ட்டா இருந்தார் வாசன்.

ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது, நமக்குத் தோண்ற விஷயத்தையும் மக்களுக்குச் சொல்ல முடியுதுங்கறதைப் பார்த்தபோது, நாமே ஒரு பத்திரிகை நடத்தினா என்னன்னு வாசனுக்குத் தோணியிருக்கு. அதனால்தான் ஆனந்த விகடன் ஆரம்பிச்சாரு. ஆரம்ப காலத்திலே என் சங்கதிங்களுக்கு நிறைய இடம் கொடுத்தாரு. அப்ப அடிக்கடி பார்க்கிறதும் உண்டு.  எப்போதும் எங்கிட்டே ஒரு மரியாதை!

அவர் ஒரு ராஷனலிஸ்ட்; பகுத் தறிவுவாதி! சோஷியலாஜிகலி என் கருத்துக்கு ஒத்து வருவாரு. அவர் எடுக்கிற எல்லா சினிமா படத்துக்கும் 'விடுதலை’ பத்திரிகைக்கு விளம்பரம் உண்டு. கேட்காமலே விளம்பரமும் வரும்; பணமும் வரும். புராணப்படம் தவிரத் தான்!

பத்திரிகைத் துறையிலும் சரி, பொது வாழ்விலும் சரி, ஒரு குற்றம்கூட சொல்ல முடியாதபடி பெரிய மனுஷனா வாழ்ந்தார் அவர். மூணு நாலு வருஷத்துக்கு முந்தி, என் பிறந்த நாளுக்கு மீரான் சாகிப் தெரு வீட்டுக்கு வந்தார். வழக்கப்படி மரியாதையா நின்னுகிட்டேயிருந்து, பேசிட்டுப் போயிட்டாரு. போனப்புறம் பார்த்தா, ஒரு கவர் இருக்குது. அதிலே இரண்டாயிரம் ரூபாய் பணம்! எனக்கு ஆச்சரியமாப் போச்சு! கொடுக்கிறதை யாருக்கும் தெரியாம கொடுக்கணும்கிற பெரிய குணம் அது. ரொம்பப் பெரிய மனுஷன் அவர்.

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 10 மார்ச், 2015

எஸ். எஸ். வாசன் - 2

விகடனின் மழலைப் பருவம்! 


மார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள். 

அவர் நினைவில் ஆனந்த விகடனின் தொடக்க கால இதழ்களிலிருந்து சில துளிகளை இங்கிடுகிறேன்.  
1926- பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழ்ப் புல்வர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையைத் துவக்குகிறார்.    மாதம் ஒரு முறை வருகிறது விகடன். ஆண்டுச் சந்தா இரண்டு ரூபாய். 
விகடனின் முதல் இதழின் முதல் பக்கம் இதோ:

( விகட விநாயகர் துதி கந்தபுராணத்தின்  காப்புச் செய்யுள் ) 

அந்த வருடம் விகடனில் வந்த ஒரு “விகட சம்பாஷணை”:
=================

முத்தண்ணா: அப்பா சுப்பண்ணா, ஊரில் என்ன விசேஷம்?

சுப்பண்ணா: ஓர் ஆச்சரியம் உண்டு. அதாவது, இறந்துபோனவர்கள் மறுபடி திரும்பி வருகிறார்கள்.

முத்தண்ணா: எப்போ! எப்போ!! எங்கே?

சுப்பண்ணா: ஓட் போடும் போலிங் ஸ்டேஷனில்தான் 
==================
.  அந்தக் காலத்தில் பலரும் வி.பி.பி. முறையில் பத்திரிகையை அனுப்பச் சொல்வர். ஆனால், வி.பி.பி. வந்ததும், பலர் மனம் மாறி, இரண்டு ரூபாய் தராமல் விகடனைத் திரும்பி அனுப்பி விடுவார்கள். அப்படிச் செய்பவர்களை ஏசி, ‘விகடகவி’ வைத்தியநாதய்யர் ஏதாவது எழுதுவார். காட்டாக, 1926- நவம்பர் இதழில் ஓர் ஔவையார் பாட்டின் பகடி:
கொடியது கேட்கின் கூறுவேன் கேளீர்
கொடிது கொடிது கூத்தி கொடிது
அதனிலுங் கொடிது அற்பர்கள் நேயம்
அதனிலும் கொடிது அருந்துதல் மதுவை
அதனிலும் கொடிது அன்பிலார் நேயம்
அதனிலும் கொடிது ஆனந்த விகடனை
அனுப்பச் சொல்லி அன்றே திருப்புதல்! 

நிதிப் பிரச்சினையால் 1927- டிசம்பர் விகடன் இதழ் வெளிவரவில்லை!
1928-ஜனவரியில் விகடனைத் தனக்கு விற்றுவிடும்படி கேட்டுக்கொள்கிறார் வாசன் ( டி.எஸ்.சீனிவாசன்) . அப்போது வாசன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கித் தரும் வேலையில் இருந்தார். பத்திரிகையின் வியாபார விஷயங்களை ‘ஆனந்த போதினி’ அதிபர் முனுசாமி முதலியாரிடமும், எழுத்துத் தொடர்புள்ள விஷயங்களைப் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பரிடமும் வாசன் அறிந்து வைத்திருந்தார்.

1928-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில். பூதூர் வைத்தியநாதய்யரிடமிருந்து ஆசிரியர் வாசன்  கைக்கு ஆனந்த விகடன் பத்திரிகை மாறுகிறது,  அப்போது முக்கியமாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனந்த விகடன் தலைப்பு கீழே உள்ளது போல் அலங்கார எழுத்துக்களோடு, இடையில் பாரத மாதாவின் உருவம் தாங்கி வரத் தொடங்கியது. 



முன்பு தலைப்பில் இருந்த 'குலை - காய்' என்பவை  'மாலை - மணி' என்று மாற்றப்பட்டன. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்னும் தாயுமானவரின் ’பராபரக் கண்ணி’ வரிகள் விகடனின் குறிக்கோளாகியது. ( 1980-இல் நடந்த விகடனின் பொன்விழாவில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இப்பாடலின் சில கண்ணிகளைப் பாடினார் என்பது என் நினைவு.) 
1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்ட முதல் வணிக விளம்பரம் ஆசிரியர் வாசனுடையதுதான்! ” இல்வாழ்க்கையின் ரகசியங்கள்” என்ற புத்தகத்தின் விளம்பரம் தான் அது! 
விகடனுக்கென ஓர் அச்சகமும் தொடங்குகிறார் வாசன். 48-இலிருந்து 64-பக்கங்களாகிறது விகடன். ஆண்டு சந்தா ரூபாய் இரண்டை ஒன்றாய்க்   குறைக்கிறார் வாசன்.
‘விகடன் சம்பாஷணைகள்’ என்ற தலைப்பில் அதுவரை வந்துகொண்டிருந்த துணுக்குகள் ‘ விகடன் பேச்சு’ என்ற தலைப்பில் வரத் தொடங்கின. இதோ ஒரு காட்டு:
==========
ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட வந்தவர்:| என்ன ஐயா, இந்தப் பாயசத்தில் ஈ விழுந்திருக்கிறதே!
ஹோட்டல்காரன்:| அதனால் என்ன குறைந்து போய்விட்டது? இந்த சிறிய ஈ எவ்வளவு பாயசத்தைக் குடித்திருக்க முடியும்?
=====

 'இந்திர குமாரி' என்னும் தொடர்கதை 1930 பிப்ரவரி இதழில் தொடங்குகிறது. இதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். ஆனால், அப்போது பெயர் குறிப்பிடப்படவில்லை. கதைகளுக்குப் படங்களும் இல்லை.
________________________________________
 இந்திரகுமாரி
1-வது அத்தியாயம்
 மாய மனிதன்
அந்த மின்சார மாயவன் சிவாஜியைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்னும் விஷயம் தென்னாடெங்கும் ஆச்சரியம், அச்சம், அவமானம், ஆர்ப்பாட்டம் முதலியனவை யுண்டாக்கித் திரள்திரளாகக்கூடும் ஜனங்களுக்குப் பிரமையைக் கொடுத்தது. மகாத் தந்திரமும், அதிகூரிய புத்தியுடைய அந்த தைரியசாலி சிவாஜியின் செயல்களைக் கண்டும் கேட்டும் ஜனங்கள் மயிர்க்கூச்சலெறிந்தனர். சிலர் அவனது ஆழ்ந்த புத்திக்காகப் பெருமை பேசினர்; சிலர் அவன் மனிதனோ அல்லது தெய்வலோகத்திலிருந்து குதித்திறங்கிய இந்திர ஜாலனோவென்று சந்தேகப்பட்டுக் கிசுகிசுவென்று பேசிக் கொண்டனர்; இன்னுஞ்சிலர் அவன் சுயநலங் கருதியே தனது அதி சாமர்த்தியத்தைக் காண்பிக்கிறானென்று 'சூ' கொட்டிப்பேசினர்; பலர் இதை ஆமோதித்தனர்; ஆனால் பெரியோரும் புத்திசாலிகளும் அல்லவென்றார்ப்பரித்தனர்  ...
[ நன்றி : விகடன் ’காலப்பெட்டகம்’, விகடன் பவழவிழா மலர், “பொன்னியின் புதல்வர்” (சுந்தா) ] 
தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 11 மார்ச், 2014

எஸ். எஸ். வாசன் - 1

எங்கள் ஆசிரியர் 
கொத்தமங்கலம் சுப்பு

மார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள். 


அவர் நினைவில், கொத்தமங்கலம் சுப்பு விகடனில் 1969-இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.




"கொத்தமங்கலம் சுப்பு ஒரு குழாய்; அதைத் திறந்து விட்டால், கற்பனை கொட்டும் என்று மாலி கூறினார். அதனால், உங்களை மாசம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்கிறேன்" என்றார் வாசன்.

அன்பர் பி.எஸ்.ராமையாவும் நானும் 'மதன காமராஜன்' படத்தில் உழைக்கத் துவங்கினோம். வாசனின் மேதாவிலாசத்தை அந்தப் படத்திலேயே கண்டேன்.

'இந்தப் படத்தில் மொத்தம் 31 கரகோஷங்கள் கிடைக்கும்' என்று மதிப்பிட்டார் வாசன். படத்தை முடித்து ஸ்டுடியோவில் பலர் முன்னிலையில் போட்டுக் காட்டியதில், 30 கரகோஷங்கள் தான் கிடைத்தன; மீதி ஒன்று எதனால் விட்டுப்போனது என்று ஆராய்ந்தார். அதைக் கண்டு பிடித்து, அந்தக் காட்சியை மறு படியும் டி.எஸ்.துரைராஜ் அவர் களைக் கொண்டு 'ரீ டேக்' எடுத்துப் பிறகு போட்டுக் காட்டினார். 31 கரகோஷங்களும் கிடைத்தன. 'ஒரு கரகோஷத்திற்கா இந்தப் பாடு' என்று எல்லோரும் எண்ணினார்கள். ஆனால், அந்த ஒரு கரகோஷத்தின் வசூல் ஒரு லட்சம் என்பது அவருக்குத் தெரியும்.

வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில் வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப் பார். அதிலும், 'சந்திரலேகா' படப்பிடிப்பின்போது அவர் பட்டபாடு சொல்லத் தரமன்று.
ஸ்டுடியோவில் மூலைக்கு மூலை யானைகளும் குதிரைகளும் கட்டிக்கிடக்கும். அகழிகளின் அருகில் காவலர்கள் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும் அரண்மனைகளாக இருக்கும். அந்தப்புரப் பணிப் பெண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். போர்ட்டிகோக்களில் அரண்மனைக் கோச்சுகளும், 'நான்கு குதிரை சாரட்'டுகளும் நிற்கும். 'மெஸ்'ஸிலிருந்து அரண்மனைச் சமையல் மணம் வந்துகொண்டே இருக்கும். வாத்தியக்காரர்களும் சங்கீத வித்வான்களும் கொண்ட ஜெமினி ஆர்கெஸ்ட்ரா முழங்கிக்கொண்டே இருக்கும். 'நம்பர் ஒன்' ஸ்டுடியோவில் ஜெர்மன் மாது ஒருத்தி 100 நாட்டிய வனிதைகளை ஆட்டி வைத்துக்கொண்டு இருப்பாள். ஆயுத சாலைகளில் கத்திகள் தயார் ஆகும். ஸ்டன்ட் வீரர்களும், ரஞ்சன், ராதா, சியாம்சுந்தரும், சோமுவும் வாட்போர் நடத்திக் கொண்டே இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய சமஸ்தானமாகக் காட்சி அளிக்கும். ஆனால், 'எங்கே அந்த சமஸ்தான மன்னர்? ராஜா எங்கே?' என்று கேட்டால், ஒரு தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல் மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு, அவர் எங்கும் இருப்பார். 

புதிதாய் அமர்த்திய தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்... "எங்கே தம்பி, முதலாளி? இதைப் பார்க்கவே வரமாட்டேங்கறாரே?"

"பட முதலாளி இல்லியா... எத்தினியோ வேலை இருக்கும்!"
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள் அருகில் நிற்கும் எளிய மனிதர் தான் முதலாளி என்பது தெரியவில்லை. அந்த முதலாளிக்கும், "நான்தான் உங்கள் முதலாளி" என்று சொல்லத் தோன்றவில்லை. ஏன் என்றால், தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை. 

[ நன்றி : விகடன் ] 


தொடர்புள்ள பதிவுகள்; 


’கல்கி’ பற்றி வாசன் 

எஸ்.எஸ்.வாசன்


கொத்தமங்கலம் சுப்பு

வியாழன், 28 ஜூன், 2012

’கல்கி’: பேனா மன்னன்

பேனா மன்னன்
 எஸ். எஸ். வாசன்



பேராசிரியர் கல்கி 1954-இல் மறைந்தவுடன், எஸ். எஸ். வாசன் விகடனில்  ‘உபயகுசலோபரி’ என்ற தலைப்பில், தன் கையொப்பமுடன்,  நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையின் முதல் பக்கம் இதோ:




அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் மட்டும் கீழே உள்ளன:


பேனா மன்னன்

 எஸ். எஸ். வாசன்


நேயர்களுக்கெல்லாம் 'கல்கி'க்கும் ஆனந்தவிகடனுக்கும் பல ஆண்டுகளாக உள்ள உறவு நன்கு தெரியும். விகடனி லேதான் முதன்முதலாகப் பெருவாரியான தமிழ் மக்கள் அவருடைய எழுத்தின் சுவையை நுகர்ந்தார்கள்.

1928-ம் வருஷம் ஜூலை மாதம், ஒரு நாள்  பரலி சு.நெல்லையப்ப பிள்ளை 'கல்கி'யுடன் கூட, ஒரு நன்கொடை பற்றி என்னைக் காண வந்தார். அந்தச் சமயம் நெல்லையப்ப பிள்ளை 'கல்கி'யை எனக்கு அறிமுகம் செய்வித்து, ''இவர் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. 'நவசக்தி'யில் 'தேனீ' என்ற புனை பெயருடன் கட்டுரைகள் எழுதி வருகிறார். தங்கள் ஆனந்த விகடனுக்கும் எழுத வேணும் என்று விரும்புகிறார். கட்டுரை அனுப்பினால் பிரசுரிக்கிறீர்களா?'' என்று கேட்டார். ''தாராளமாக'' என்று பதில் சொன்னேன்.


அதன் பிறகு, 'ஏட்டிக்குப் போட்டி' என்ற தமது முதல் கட்டுரையை 'கல்கி' எனும் பெயரில் எனக்குத் தபாலில் அனுப்பி வைத்தார். நான் அதை மூன்று நான்கு முறை திரும்பத் திரும்பப் படித்து, ஹாஸ்யத்தை அனுபவித்து, விழுந்து விழுந்து சிரித்தேன். என் தாயாருக்கும் படித்துக் காட்டினேன். அவரும் மிகவும் அனுபவித்துச் சிரித்தார். நாங்கள் அப்போது, 'இந்த மாதிரியும் தமிழில் எழுத முடியுமா?' என்று ஆச்சர்யப்பட்டோம். அந்த நாளில், பண்டித நடையில் கடுமையான தமிழிலேயே கட்டுரைகள் படித்து அனுபவப்பட்ட எங்களுக்கு, அந்தக் கட்டுரை ஓர் ஆச்சர்யமாக இருந்தது. 'கல்கி' என்ற பெயரில் அவர் எழுதிய முதல் கட்டுரையும் அதுதான். அதையடுத்து, 'பூரி யாத்திரை' முதலான பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். விகடனில் ஆசிரியர் பதவியை அவர் ஏற்ற பின்பே, மாதம் ஒரு இதழாக இருந்த விகடன் இரண்டு மூன்று என்று வளர்ச்சி அடைந்து, வாரப் பத்திரிகையாகியது. ஏராளமான வாசக நேயர்களும் ஏற்பட்டார்கள்.

 தமிழ்நாட்டில் ஆங்கில மொழியின் மீது மோகம் தலை விரித்தாடிய காலம் அது. தமிழைத் தமிழரே குறைவாக எண்ணினர். தமிழிலே பத்திரிகை என்றால், தொட்டுப் பார்க்கவும் கூசுவார்கள் படித்த மக்கள். 'தமிழ்மொழியில் அரசியல், பொருளாதார விஷயங்களைத் தெளிவுறச் சொல்வது சாத்தியம் இல்லை' என்று முடிவு கட்டிவிட்டார்கள் அரசியல்வாதிகள். தமிழ் என்றாலே அலட்சிய பாவத்துடன் நடந்து கொள்ளப் பழகிவிட்டது மாணவர் உலகம். இந்த மாதிரியான சூழ்நிலையிலே, பத்திரிகை வாயிலாக மொழிச் சேவையைத் திறம்படச் செய்யமுடியும் என்று நிரூபித்துக் காட்டும் சக்தி 'கல்கி'யுடைய கையிலே இருந்தது. அதை அவர் வேறெவரும் சாதிக்க முடியாத வகையிலே செய்துகாட்டி விட்டார்.

 படித்தவரும் பாமரரும் அறிந்து அனுபவிக்கும் தெளிவுடன், எளிமையுடன் தூய தமிழில் எந்தச் சிக்கலான அரசியல் விஷயங்களையும் விளக்கலாம் என்பதை அவர் நிரூபணம் செய்தார். அன்னிய சர்க்கார் பிசகு செய்தால், கண்டிக்கும் உரிமை பத்திரி கைகளுக்கு உண்டு என்பதற்கு ஆதாரமாக அவரது தலையங்கங்கள் விளங்கின. ''ஐயோ, இப்படி எழுதிவிட்டாரே! சர்க்கார் சும்மா விட்டுவிடமாட்டார்களே!'' என்று அஞ்சியவர்கள் எத்தனையோ பேர். அப்போதிருந்த சர்க்காரும் ஹாஸ்யத்தை உணர்ந்துகொள்ள முடியாதவர்களாகவே இருந்தார்கள். விகடனை அடிக்கடி ஜாமீன் கட்டும்படி கேட்டு வற்புறுத்தும் அளவுக்குக் கூடத் தொந்தரவு கொடுத்தார்கள்.


விகடனை மேலும் மேலும் ரஞ்சகமாக்கும் இலட்சியத்துடன் கலைவிமர்சனங்களை 'கர்நாடகம்' எனும் புனைபெயரில் எழுதினார் 'கல்கி'. நுண்கலைகளில் ஈடுபட்டுள்ள வித்வான்கள் அவருடைய புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் பாத்திரமாகத் தவறியதில்லை. பாடகரானாலும் நடிகரானாலும் வேறெவ்வகையில் புனிதரானாலும் பொதுமக்களின் அறிமுகத்தை 'கல்கி'யின் பேனா வாயிலாகச் செம்மையுடன் அவர்கள் பெற்றார்கள்.

வாரப் பத்திரிகைக்கு நிரந்தரமான வாசகர்களை உண்டாக்கி விடத் தொடர்கதை என்பது ஓர் இன்றியமையாத அங்கம் என்பதை அவருடைய முதல் நீண்ட தொடர் நாவல் 'தியாக பூமி' ஸ்தாபித்துவிட்டது. இன்றைக்கும் எனக்கு நினைவிலிருக்கிறது... 'தியாக பூமி'யைப் படித்துவிட் டுத்தான் வெள்ளிக்கிழமை இரவு படுப்பது என்று பிடிவாதமாகக் காத்திருக்கும் விரதம் கொள்ளும்படி செய்த முதல் எழுத்தாளர் 'கல்கி'தான். தமிழ் நாடெங்கும், தமிழ் பேசும் மக்கள் வாழுமிடமெங்கும் 'தியாக பூமி' அன்று அடைந்த செல்வாக்கு வேறெந்தத் தொடர்கதைக்கும் கிட்டியிருப்பதாகச் சொல்லமுடியாது.

சட்டசபை நிகழ்ச்சிகளைக் கண்ணெதிரில் பார்ப்பது போல் தீட்டினார். அதுவரையில் ரஸமற்ற சட்டசபை நடப்புகளைப் படித்த வாசகர்கள், ரஸபாவத்துடன், ஒரு மேதை அளிக்கும் ஜீவனுடன் 'கல்கி'யின் எழுத்துக் களில் விவரங்களை வாசிக்க விரைந்தார்கள். தமிழ் இலக்கியத்திலே முதல்முறையாகப் பிரயாணக் கட்டுரையில் 'கல்கி' சுவை காட்டினார்.  'மாலி'யுடன் அவர் இலங்கைப் பிரயாணம் செய்து வந்ததை மறக்கமுடியாது. ஆகாய விமானம் அந்த நாளிலே ஒரு புதுமை. இன்று ஒரு விமானத்தில் 50, 60 பிரயாணிகள் செல்வது சகஜம் எனினும், அப்போது 'கல்கி'யையும் 'மாலி'யையும் தவிர விமான ஓட்டிகளே இருந்தார்கள்! 'கல்கி'யின் கண்களின் தீக்ஷண்யத்தை, இலங்கையின் சுவையை யெல்லாம் ஒற்றிக்கொண்டு வந்து விடும் திறனை அவருடைய தொடர் கட்டுரைகள் வெளியாக்கின.

 சமீப காலத்தில் அவருடைய சொந்தப் பத்திரிகையான 'கல்கி' யில் நீண்ட சரித்திரக் கதைகள் எழுதி, பழங்கால சரித்திரத்தை, வீர மரபினர் வரலாற்றையெல்லாம் தமிழுலகம் முழுதும் வியாபிக்கும் இலக்கியமாகத் தீட்டினார். ஒவ்வொரு கதையையும் நாலு வருஷம் ஐந்து வருஷம் தொடர்ந்து படிக்க வைத்த பேனா மன்னன் அவர். அவரைத் தமிழ்நாட்டு 'வோட் ஹவுஸ்' என்றும், 'ஸ்காட்' என்றும் மற்றும் மேனாட்டு பாணியில் சிறப்புப் பட்டம் அளித்துக் கூறுவார்கள். ஆனால், 'கல்கி' எனும் மேதையை எந்தத் தனி மனிதனுடனும் ஒப்பிட்டுச் சொல்ல இயலாது என்பது என் நம்பிக்கை. 'கல்கி'யைக் 'கல்கி' யுடனேதான் ஒப்பிட வேண்டும் என்றால், நேயர்கள் அதை முழு மனத்துடன் ஆமோதிப்பார்கள் என்றும் நான் அறிவேன். அவர் ஈடுபட்ட துறைகள் அனைத்திலுமே மிகச் சிறந்தவர்களின் கூர்மை அவரிடம் ஒன்று சேர்ந்திருந்தது. எனவே, 'கல்கி' ஒரு ஸ்தாபனமாக உருவாகிவிட்டார் என்பதில் வியப்பில்லை.


'கல்கி'யின் பிரிவினால் எழுத்துலகம் பரிதவிக்கிறது. விகடனுக்கு நீண்ட காலம் ஆசிரியராக இருந்து என்னுடன் வாழ்வில் பெரும் பகுதியும் பழகி வந்துள்ள 'கல்கி' காலமானார் என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது. நேயர்களுடன் என் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
[ நன்றி : விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி படைப்புகள்

கல்கியைப் பற்றி

’கல்கி’ பற்றி எழுத்தாளர் ’கடுகு’

’கல்கி’ பற்றி அறிஞர் அண்ணாதுரை

’கல்கி’யின் நாவல்கள், சிறுகதைகள்

’சிவகாமியின் சபதம்’ பற்றி வைகோ