விகடன் ஆசிரியர்
ஆகஸ்ட் 26. வாசனின் நினைவு நாள்.
வாசன் மறைந்த பின், விகடனில் வந்த தலையங்கம்.
===
விகடனின் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும், லட்சக்கணக் கான வாசக நேயர்களையும் ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு, மீளாத்துயில் கொண்டுவிட்டார் ஆசிரியர் திரு எஸ்.எஸ். வாசன். ஓய்வு என்பதே அறியாமல் அல்லும் பகலும் உழைத்தவர், இறுதியாக ஒய்வு எடுத்துக்கொண்டு விட்டார். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்றே காலமெல்லாம் வாழ்ந்தவர், எல்லோரையும் கண்ணீ ர் பெருக்கி, கதறி அழும்படி விட்டுவிட்டு மறைந்துவிட்டார்.
எளிமையான குடும்பத்தில் பிறந்து வறுமையின் மடியில் வளர்ந்து, தன்னந்தனி சிறுவனாக தன்னருமைத் தாயே ஆதரவாக தன்மானம் மிக்க இளைஞராக, தன்னம்பிக்கையே துணையாக உழைத்து உழன்று இவர் உயர்ந்த கடந்த அறுபதாண்டு வரலாற்றுடன் கலந்து விட்ட தனிமனிதனின் ஒப்பற்ற வாழ்க்கை சரிதமாகும். பத்திரிகை விற்பனையாளராகவும் விளம்பர சேகரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் படிப்படியாக உயர்ந்து சமூகத்தில் தமக்கு என்று ஓர் இடத்தைத் தேடிக்கொண்டார்.கலாரசனையில் ஊறித் திளைத்த அவரது உள்ளம், படவுலகில் நாட்டம் கொண்டது.தமக்கே உரிய மதிநுட்பத்துடனும், புதுமைகளைப் படைக்கும் சாதனைத் திறனுடனும் சினிமாத் துறையில் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்று அகில இந்திய அரங்கில் புகழ்க்கொடி நாட்டினார். விகடன் ஆசிரியராகப் பெற்ற அனுபவத்தின் காரணமாகவே தாம் திரைப்பட டைரக்டராகவும், 'எடிட்டராகவும் விளங்க முடிந்தது என்று ஆசிரியர் வாசன் அடிக்கடி கூறிப் பெருமைப் படுவது உண்டு.
ஆசிரியர் வாசன் இளமைப் பருவத்தில் இருந்தே நாட்டு அரசியலில் அதிக அக்கறை காட்டி வந்தார். தேசிய நோக்குடனேயே எந்தப் பிரச்னையையும் அலசி ஆராய்வார். நாட்டின் எதிர்காலத்தை மனத்தில் கொண்டு விருப்பு வெறுப்பின்றி தம் எண்ணங்களைக் கூற வேண்டும் என்பதில் கடைசிவரையில் உறுதியாக இருந்தார். தமது இறுதி நாட்களில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலைமை யைப் பற்றி அடிக்கடி நினைத்து வேதனைப் படுவார். காலன் வந்து கட்டிலருகில் காத்திருந்த நேரத்திலும் காங்கிரஸ் காரிய கமிட்டி என்ன முடிவு செய்யப் போகிறது என்பதே அவர் கவலையாக இருந்தது.
நாற்பத்தோரு ஆண்டுகளாக விகடனை வளர்த்து உருவாக்கிய அவர் சமூக அரசியல் சூழ்நிலைக்கும் மக்களின் ரசனைக்கும் ஏற்ப அவ்வப்போது பத்திரிகை மாற்றங்களைச் செய்யத் தயங்கியதேயில்லை. இருப்பினும் விகடனுக்கென்று ஒரு தரம் உண்டு, ஒரு வழி உண்டு, ஒரு கொள்கையுண்டு அவற்றைப் பறிகொடுக்காமல் நாம் வளர வேண்டும். கடினமாயிருந்தாலும் அந்த வழியில்தான் முன்னேற வேண்டும் என்பதை நேரம் கிடைத்த போதெல்லாம் சக ஊழியர்களுக்கு நினைவு படுத்துவார்.
பத்திரிகை உலகுக்கு உன்னத லட்சியங்களையும் உன்னத நெறிகளையும் உயரிய கோட்பாடுகளையும் வகுத்துத் தந்த வழிகாட்டி இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் காட்டிச் சென்ற வழி பளிச்சென்று நம் கண் முன் தெரிகிறது. தளராத நம்பிக்கையுடனும் நேயர்களின் பேராதரவுடனும் அவ்வழி செல்லுவதே மறைந்த ஆசிரியரின் நினைவுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
பி.கு. If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it will deliver my blog-updates to your e-mail regularly.
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக