சங்கச் சுரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கச் சுரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 டிசம்பர், 2022

2388. சங்கச் சுரங்கம்: ஊஞ்சல் நாடகம்

ஊஞ்சல் நாடகம்

பசுபதி 



'இருவாட்சி' 2020 பொங்கல் சிறப்பிதழில் ( ஆசிரியர்: எஸ்.சங்கரநாராயணன்)  வந்த கட்டுரைக்கதை.









[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

பசுபடைப்புகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 25 ஏப்ரல், 2020

1529. சங்கச் சுரங்கம்: குறிஞ்சிப் பாட்டு

குறிஞ்சிப் பாட்டு 
பசுபதி



[ ‘ சங்கச் சுரங்கம் -1 ‘ என்ற என் நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை! நூல் கிட்டுமிடம்:
LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241; கைபேசி : 99406 82929. ]
=====


'காதலர் தின'த்தில் 'ட்ரிங்' என்று அடித்ததுமே,  அது என் இளம் நண்பன் அருணாகத் தான்  இருக்கவேண்டும், வழக்கம்போல் அவனுக்கும் அவன் காதலிக்கும் ஏதோ ஒரு 'காதல் தின' 'லடாய்'  என்றும்  நினைத்துக் கொண்டே தொலைபேசியை எடுத்தேன்; சாக்ஷாத் அருணேதான்! அவனுக்கு உற்சாகத்துடன் நூறாயுசு 'வரம்' நான் கொடுப்பதை, நடுவில் தடைசெய்து  அலறினான் அருண். "சார், அதெல்லாம் அப்புறம்  இருக்கட்டும். இன்றைக்கு என்னை நீங்கள் காப்பாற்றா விட்டால், நான் அல்பாயுசு  தான்! என் 'காதல்' வாழ்க்கை இன்றோடு 'ஹோ கயா' ! சமாப்தி ! அழிஞ்சிடும் ! " என்றான்.

விஷயம் இதுதான். ஒவ்வோர் ஆண்டு 'காதலர் தின'த்திலும், வெவ்வேறு கடினமான நிபந்தனைகளைப் போடுவது அவன் காதலிக்கு வழக்கம். இந்தத் தடவை,  நூறு மலர்களின் பெயர்கள் கொண்ட கவிதை ஒன்றை மாலைக்குள் அவளிடம் 
சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறாளாம்.

"இவ்வளவு  தானே! அது உன் சுயமான கற்பனையாய் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையே ! நீ பிழைச்சே! போ! நான் அப்படிப்பட்ட ஒரு கவிதை தருகிறேன். உண்மையைச் சொல்லப்போனால்,  இப்படிப்பட்ட கவிதை உலக இலக்கியத்திலேயே தமிழில் தான் இருக்கிறது.  அதுவும் , எனக்குத் தெரிந்து 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்று இது ஒன்றுதான் இருக்கிறது   " என்று அருணைச் சமாதானப்  படுத்தினேன்.

 'அடேயப்பா,  அதென்ன கவிதை' என்று புருவங்களை உயர்த்துகிறீர்களா? சொல்லத்தானே போகிறேன்!

 'குறிஞ்சிப் பாட்டு'  கபிலரின் மிகச் சிறந்த  கவியாரம் . 'பத்துப் பாட்டு'  வரிசையில் 261 அடிகள் உடைய எட்டாவது நூல்.  அதன் இறுதியில் ,  " ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்ததற்குக் கபிலர் பாடியது '  என்று குறிப்பு இருப்பதால், தமிழில் ஆர்வமிருந்த ஒரு வடநாட்டு அரசனுக்குத்  தமிழுக்கே உரிய சிறப்பான அகப்பொருளின் பெருமையை விளக்கக் கபிலர் இயற்றிய பாடல் இது என்பதும் புரிகிறது.

அகப்பொருளை ஐந்து திணைகளாகப் பிரித்தனர் தமிழர். இது தமிழிலக்கியத்திற்கே உரிய ஒரு சிறப்பு. அந்த ஐந்தில் முதல் திணை குறிஞ்சி; குறிஞ்சித் திணையைப்  பற்றிப் பாடும் இலக்கியம் காதலனும், காதலியும் சேர்வதற்குக் காரணமாக
இருப்பவற்றையும், அவர்கள் இன்புற்றிருப்பதையும்  விவரிக்கும்.

" அப்படியானால் , டொராண்டோ  போன்ற மலையற்ற நகரங்களில்  காதலர் சேரமுடியாது என்கிறீர்களா?  நான் ஆல்பெர்டா போன்ற மாகாணத்திற்கு வேலையை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா?" என்று அலறினான் அருண்.

"அசடே! எல்லா இடங்களிலும் காதல் நடைபெறும். ஆனால், இயற்கை பூத்துக் குலுங்கும் மலைப் பிரதேசத்தில் காதலும் செழித்து வளருமல்லவா? அதனால் தான்  " பாட்டுக்கு ஏற்றபடி சுருதி அமைத்துக் கொள்வதுபோல் ,  காதலுக்கு ஏற்ற நிலைக்களனை வகுப்பதால் இலக்கியச் சுவை அதிகரிக்கின்றது " என்று சொல்கிறார்  அறிஞர் கி.வா.ஜகந்நாதன்” என்றேன்.

பாடலின் பொருளைச் சுருக்கிக் கூறத் தொடங்கினேன்.

 " 'அன்னையே! வாழிவேண்டு அன்னை'

என்று தொடங்குகிறது பாடல். தலைவியின் நோய்க்குக் காரணம் தெரியாமல்  வருந்தும் செவிலித் தாய்க்குத் தோழி சொல்வது போல் அமைந்த பாடல். 

களவுக் காதலில் தன் மனத்தைப் பறி கொடுத்த தலைவி , காதலனைச் சில நாளாகப் பார்க்க முடியாதலால், வருந்துகிறாள். தன் காதலை ஊரார் அறிந்தால் என்ன நடக்குமோ  என்ற பயத்தில் அவள் உடலும் மெலிகிறது.

"சார், அந்தக்  காலத்துத் தலைவன் அதிர்ஷ்டக் கட்டை, சார். என் காதலி , நான் ஆறு மாதம் பார்க்கலையென்றாலும்,  தன் உடலைப் பக்கவாட்டுப் பரிமாணத்தில்  நன்றாய்  வஞ்சனை இன்றி  வளர்த்துக் கொண்டே .... வேணாம் , சார் ! நீங்கள் தொடருங்கள் ! "  என்று முனகினான் அருண்.

 தலைவி தோழியிடம் சொல்லியிருந்த காதல் விவரங்களைத் தோழி செவிலித்தாயிடம்  சொல்கிறாள்.   தினைப் புனத்தில் கிளி போன்ற பறவைகளை ஓட்டிவிட்டு, மலையருவியில் நன்றாகக் குளித்துவிட்டு, தங்கள் கூந்தலின் ஈரம் போக உலர்த்திக் கொள்கின்றனர் தலைவியும், தோழியும். பிறகு பாறையின் மேல் பல மலர்களைப் பரப்பினர் .

இந்த இடத்தில். . .

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்குயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கோடு வேரி, தேமா, மணிச்சிகை,
. . .
என்று தொடங்கிக் கபிலர் 35 அடிகளில் 99 மலர்களின் பெயர்களை மலையருவி போலவே  பொழிகிறார்.

'' அற்புதம்! அற்புதம்!  அந்த அடிகளை மட்டும் எழுதிக் கொடுங்கள்; நான் போகிறேன்"  என்றான் அருண்.

" இருடா, அவசரக் குடுக்கை, பாடலின் மீதியைக் கேட்டால்தான் கொடுப்பேன் " என்று தொடர்ந்தேன்.

 மலர்மாலை அணிந்து அசோக மரத்தின் அடியில் அமர்ந்த பெண்கள் முன், தோன்றினான் தலைவன். வில்லும், அம்புமாய் வந்த அவன் பின் சில வேட்டை நாய்களும் வந்தன. நாய்களைக் கண்டு அஞ்சிய பெண்களுக்கு ஆறுதல் சொல்லி,
தான் வேட்டையாடிய விலங்கு ஏதேனும் அப்பக்கம் வந்ததா என்று வினாவுகிறான் தலைவன் .

"சார் ! நான் இல்லாதபோது ஒரு சொறிநாய்ப்பயல் என் காதலியைத் துரத்துகிறான், சார்" என்று இடைமறித்தான் அருண். "அந்தப் பிரச்சினையை அப்புறம் பார்க்கலாம். நீ பேசாமல் முதலில் 'குறிஞ்சிப் பாட்'டைக் கேள்" என்று அதட்டித் தொடர்ந்தேன்.

அப்போது, மதம் பிடித்த யானை ஒன்று ஓடிவந்தது. அம்பினால் அதை ஓடும்படிச் செய்த தலைவன் , தலைவியைத் தழுவி, அவளை என்றும் பிரியேன் என்று உறுதி சொல்லி, அதற்கோர் அடையாளமாக நீரை கையில் எடுத்து ஒரு  கை குடித்தான். அந்த யானை காரணமாகத் தலைவியும், தலைவனும்
காதலில் இன்புற்றதால், இதைக் 'களிறு தரு புணர்ச்சி' என்பார்கள்.

"சார்! 'சொறிநாய் தரு புணர்ச்சி' என்று ஒன்று இருக்கிறதா, சார்? ஒரு நாள் இல்லாவிட்டால், ஒரு நாள், அந்த சொறிநாய்ப் பயலை செருப்பால் அடித்துத் துரத்தத் தான் போகிறேன் சார் " என்று கத்தி, உணர்ச்சி வசப்பட்ட அருணைத் திரும்பச் சமாதானப் படுத்தினேன். மனத்தில் ஒன்று தோன்றிவிட்டால், அந்தப்
பாதையிலிருந்து அருணை இழுப்பது கடினம்.   

 பகல் முழுதும் காதலியுடன் பொழுது போக்குகிறான் தலைவன். மாலை வருகிறது .இந்த இடத்தில் கபிலர் சொல்லும் மாலை வர்ணனை நெஞ்சைக் கவ்வும் . 

'ஏழு குதிரைகள் கொண்ட  தேரைச் செலுத்தும் சூரியன் மேற்கில் மறைகிறான். மான்கள் கூட்டமாக மரத்தின் அடியில் வந்து சேர்கின்றன. பசுக்கள் 'அம்மா' என்ற குரல் கொடுத்துக் கன்றுகளை அழைத்து, கொட்டில்களில் புகுகின்றன.
பனை மடலின் உள்பக்கம் தங்கும், ஊதுகொம்பு போல் ஒலிக்கும் ஆண் அன்றில் பெண் அன்றில் ஒன்றை அழைக்கின்றது. பாம்புகள் தம் மாணிக்கக் கற்களை உமிழ்ந்து,  அவை கொடுக்கும் ஒளியில், இரை தேடப் புறப்படுகின்றன. இடையர்கள் 'ஆம்பல்'  என்னும் பண்ணில் புல்லாங்குழல் ஊதுகின்றனர். ஆம்பல் மலர்களும் மலர்கின்றன. அந்தணர்கள் அந்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். செல்வர்கள் மனைகளில்  பெண்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். காட்டில் உள்ள வேடர்கள், விலங்குகள் வராமல் இருக்க , பரண்மீது தீக்கடை கோலால் நெருப்பு மூட்டுகின்றனர்.  மலையைக் கருமேகங்கள் சூழ்கின்றன. காட்டு மிருகங்கள் 'கல்'லென்று  முழங்குகின்றன. பறவைகள் கூட்டுக்குள் ஆரவாரிக்கின்றன. ' என்று வர்ணிக்கிறார் கபிலர்.  'குறிஞ்சிப் பாட்டில்' முப்பதுக்கு மேல் அழகான உவமைகள்  உள்ளன என்பர் அறிஞர்கள்.   இதனால் தானோ, என்னவோ, 'குறிஞ்சி  பாடக் கபிலர்' என்பார்கள்.


பிறகு, நாடறிய அவளை முறைப்படி மணம் செய்துகொள்வதாக வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டுப் பிரிகிறான் தலைவன். அதற்குப் பின் ஒவ்வோரு நாளும் இரவில் தலைவியைச் சந்தித்து , பேசிப் போவது தலைவனின் வழக்கம்.
வரும்போது, ஊர்க்காவலர்கள் வந்தாலும், நாய்கள் குரைத்தாலும், நிலாவின் ஒளி  மிகுந்தாலும் காதலியைச் சந்திக்காமல் திரும்பிச் சென்றுவிடுவான். அவன் வரும் காட்டு வழியில் உள்ள இன்னல்களை நினைத்துக் கண்ணீர் விடுவாள் தலைவி.

இந்தக் களவுக் காதலின் வரலாற்றைக் கூறி, அந்த இளம் காளைக்குத் தன் தலைவியைத் திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செவிலித் தாயிடம் ஏற்படுத்துகிறாள் தோழி.   

"பின்னே  என்ன? செவிலித்தாய் பெண்ணின் பெற்றொருக்குச் சொல்வாள். அவர்கள் 'சரி என்று   'பூம், பூம்' மாடுகள் போல் தலையாட்டுவார்கள். 'டும், டும், டும்' தான்... நாகஸ்வரம், மூன்று முடிச்சு, தமிழ்ச் சினிமா முடிவுதான் என்று சொல்லுங்கள்?
என்னைப் போலவா? " என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்த அருணிடம்  அந்த மலர்கள் வரும் பகுதியை மட்டும் எழுதிக் கொடுத்தேன்.

இரவு 11 மணி; நான் நினைத்தபடி அருணிடமிருந்து ஒரு தொலை பேசிச் செய்தி. காதலியிடம் சென்று மலர்களின் பெயர்கள் உள்ள 'குறிஞ்சிப் பாட்டின்' பகுதியைப்
படித்தானாம். ஒரே ஒரு பிரச்சினை தான் முளைத்ததாம். கண்குத்திப் பாம்பு மாதிரி மலர்களின் பெயர்களை எண்ணிக் கொண்டே வந்த காதலி, 'எங்கே? 99  தானே? ஒன்று குறைகிறதே"  என்று அவனை வெளியில் தள்ளிக் கதவைத் தாழ்ப்பாள்  போடப் போனாளாம்.

"அட, ரொம்ப சாமர்த்தியமான பெண்ணாய் இருக்கிறாளே ? எப்படிச் சமாளித்தாய்" என்று வியந்தேன்.

"அதான், 'சரோஜா!' என்று உன் பெயரை முதலில் சொல்லித் தானே இந்த மலர்ப் பட்டியலைப் படித்தேன்! நீயே ஒரு மலர் தானே! உன்னையும் சேர்த்தால் நூறு வந்து
விடுகிறதே " என்று சொன்னேன். " 

“ வாயுள்ள பிள்ளை பிழைக்கும்; உண்மைதான். ஆனால், அடுத்த வருஷம் உன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். உடனே , அடுத்த வருடம் ‘மனைவியர் தினம்’ கொண்டாடும் வழியைப் பார் !”  என்று அருணிடம் சொல்லிவிட்டுத் தொலைபேசியைக் கீழே வைத்தேன்.



~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

பசுபடைப்புகள்
 

 

வியாழன், 9 ஜனவரி, 2020

1435. சங்கச் சுரங்கம்: காதல் ஜோடிகள்

காதல் ஜோடிகள்
பசுபதி

[ ஓவியம்: எஸ்.ராஜம்]

'இருவாட்சி' 2019 பொங்கல் சிறப்பிதழில் ( ஆசிரியர்: எஸ்.சங்கரநாராயணன்)  வந்த கட்டுரைக்கதை.

கலித்தொகையில் வரும் ஒரு பாடலுக்குப் பொருத்தமான படத்தை எஸ்.ராஜம் கி.வா.ஜ -வின்  " பிடியும் களிறும்" என்ற நூலுக்கு  பல வருடங்களுக்கு முன் வரைந்திருந்தது என் பேறு!  ( முழுக் கலித்தொகைப் பாடலைப் பற்றிய கி.வா.ஜ. வின் கட்டுரையை அந்நூலில் படிக்கலாம்)










[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]



தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

பசுபடைப்புகள்

புதன், 12 டிசம்பர், 2018

1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி

தீம்புளி நெல்லி 
பசுபதி



[ ‘ சங்கச் சுரங்கம் -3 ‘ என்ற என் புதிய நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை! நூல் கிட்டுமிடம்:
LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241; கைபேசி : 99406 82929. 
கூடவே என் சங்கச் சுரங்கம் -1, 2 தொகுதிகளும் அங்கே கிட்டும். ] 

[ சங்கச் சுரங்கம் -3 -இன் பொருளடக்கம் ]

========


எனக்கு உச்சி குளிர்ந்து விட்டது. குளிர வைத்தவள் என் தமிழ் மாணவி மஞ்சுளா. தொலைபேசி மூலம் அவள் கேட்ட வேண்டுகோள் தான் காரணம். 
” சார், நீங்கள் போன மாதம் நெல்லிக்கனி வரும் ஒரு சங்கப் பாடல் பற்றி எங்களுக்குச் சொன்னீர்களே? அதை மீண்டும் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்து விளக்கிச் சொல்ல முடியுமா?”  என்று கேட்டாள் மஞ்சுளா. வாரமொரு முறை என் வீட்டிற்கு வந்து அவள் சங்கப் பாடல் ஒன்றைக் கேட்பதே பெரிய விஷயம்? மீண்டும் கேட்பதா? என்ன விஷயம் என்று விசாரித்தேன். 
“ஒன்றும் இல்லை, சார். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் புதிதாகச் சித்த, இயற்கை மருந்துகள், ஊறுகாய், மூலிகைப் பொருள்கள் போன்றவற்றை விற்கும் ஒரு கடை தொடங்கி இருக்கிறார். முக்கியமாக அவருக்கு ஊரில் ஒரு நெல்லிக்காய்த் தோப்பே இருப்பதால் நெல்லிக்காய் இருக்கும் சகல பொருள்களையும் --- ஊறுகாயிலிருந்து திரிபலா போன்ற மருந்துகள் வரை ---- அவர் விற்க எண்ணியிருக்கிறார். நம் ஊரில் அவர் கடையை அறிமுகம் செய்ய  என் தந்தையும், நானும்  பல நண்பர்களை எங்கள்  வீட்டிற்கு அழைத்திருக்கிறோம். அடுத்த வாரம் , ஞாயிறன்று ஒரு சிறு மதிய உணவு. நெல்லிக்காய்ச் சாதம்,  சாம்பார், பச்சடி, ஊறுகாய் என்று உணவு ‘சகலம் நெல்லிக்காய் மய’மாய். இருக்கும்! அப்போது முதலில், உணவுக்கு முன், நீங்கள் அந்த நெல்லிக்காய்ப் பாடலை எல்லோருக்கும்  சொன்னால் நன்றாய் இருக்குமே என்று கேட்டேன்!  அப்புறம் …. ஜெயா மாமிக்குச் சொல்லுங்கள், உணவுக்குப் பின் இரண்டு ஊறுகாய் பாட்டில்களும், ஒரு பை நிறைய நெல்லிக்காய்களும் எல்லோருக்கும் உண்டு! “ என்றாள் மஞ்சுளா.  

பின்னே என்ன? ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்தது,  எனக்குக் கிட்டப்போகும்  நெல்லிக்காய் ஊறுகாயை விடவா பெரிய விஷயம்? ( அடடா, “உங்கள் மாணவி தானே? மேலும் இரண்டு பாட்டில்கள் கேளுங்களேன்?” என்று ஜெயா அப்போது சொன்னது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. )   
அடுத்த வாரம். ஞாயிறு. எனக்குத் தெரிந்த பல தம்பதிகள்  மஞ்சுளா வீட்டில் கூடி இருந்தனர்.  அங்கிருந்த இளைஞர்கள் அவளுடைய கல்லூரி நண்பர்கள் போலும். ”சரி, என் பேச்சைக் கேட்டால் ஒருவேளை மேலும் சில மாணவர்களை என் தமிழ் வகுப்பிற்குச் சேர்க்க முடியுமோ” என்று எனக்கு ஒரு நப்பாசை பிறந்தது. 

தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினேன்.
“ நான் குறிப்பிடப் போகும் பாடல் குறுந்தொகையில் உள்ளது. மதுரைக் கண்டரதத்தன் என்ற புலவரின் இந்த ஒரு பாடல் தான் அந்நூலில் உள்ளது.  
பனிக் காலத்தில் வருவேன் என்று சொல்லிப் போனான் ஒரு தலைவன். இன்னும் வரவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள் அவள் தோழி. 

“ தலைவன் குறித்த பருவத்தில் நிச்சயம் வருவான்! கவலைப் படாதே! வட திசையிலிருந்து வீசும் வாடைக் காற்று மேகங்களைத் தென்திசையில் துரத்தும். அப்படிப்பட்ட தண்பனிக் காலத்தில் தலைவன் உன்னை விட்டு விட்டு எப்படி தனியாக இருப்பான்? நிச்சயம் உன்னிடம் வருவான்! அவனுடைய நாட்டில் மரையா என்ற ஒரு வகை மானினம் உள்ளது. தன்னினத்து பெண்மானிடம் மிகுந்த ஆசையுடைய அந்த மரையா இனத்து ஆண்மான் முதலில் நிறைய  நெல்லிக் காய்களைத் தின்னும். பிறகு, மலையில் உள்ள சுனை நீரில் விழுந்திருக்கும் மலர்களைத் தன் மூச்சுக் காற்றால் விலகச் செய்து, பின் அந்நீரைக் குடிக்கும். முதலில் உண்ணும்போது  புளிப்பாக இருக்கும் நெல்லிக்காய் நீரைக் குடித்தவுடன் இனிக்கும் அல்லவா? அந்த நெல்லிக்காய் போன்றதுதான் தலைவனுக்கு உன்னிடம் உள்ள காதலும்! முதலில் புளிப்பது போல் இருந்தாலும் கடைசியில் இனிக்கும்! “ என்கிறாள் தோழி.     


புரி மட மரையான் கரு நரை நல் ஏறு 
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது 
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து 
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் 
நம்மை விட்டு அமையுமோ மற்றே -- கைம்மிக 
வட புல வாடைக்கு அழி மழை 
தென் புலம் படரும் தண் பனி நாளே ?
     --   மதுரைக் கண்டரதத்தன்,  குறுந்தொகை, 317 
[ நரை – பெருமை, வெண்மை ; வாடை – வடகாற்று ] 

பொழிப்புரை: விரும்புகின்ற அழகுடைய மரையா என்ற மானினத்தின் கருமையும், பெருமையும் உள்ள நல்ல ஆண் மான் , இனிய புளிப்புடைய நெல்லிக் காயைத் தின்னும். பிறகு அருகில் (நீரில்) உள்ள தேன்நிரம்பிய  அழகிய மலர்களைத் தன் சூடான மூச்சால் விலக்கி, பிறகு உயர்ந்த மலையில் உள்ள சுனை நீரைக் குடிக்கும். அத்தகைய நாட்டுடைய தலைவன், வாடைக் காற்றால் மேகங்கள் தெற்கில் போகும் தண்பனிக் காலத்தில் நம்மை விட்டுப் பிரிந்திருப்பானா? இல்லை, நிச்சயமாய் இங்கு வருவான் . “ 

என் பேச்சு முடிந்ததும் யாவரும் கைதட்டினர். பிறகு  மஞ்சுளா  எழுந்து நின்று, “சூப்பர், சார்! புளிக்கும் நெல்லிக் காய் தின்றுவிட்டு ‘ஜில்லென்று ‘ தண்ணீரைக் குடித்தால் இனிப்பாக மாறும் என்று அந்தக் காலத்தில் ஆண்மானுக்குக் கூடத் தெரிந்திருக்கிறதே ! ‘ என்றாள் . கூட்டத்தில் இருந்த பெண்கள் கூட இருந்த ஆண்களைப் பார்த்துக் கேலியாக நகைத்தனர்.   
”ஆம், இந்தக் காலத்தில் , இங்கிருக்கும் பெண்மான்களுக்கும் அது தெரிந்திருக்கும் அல்லவா? “ என்றேன் நான்.

சில இளைஞர்களும், பெண்களும் கைகளைத் தூக்கி “நாங்கள் அப்படிச் செய்த அனுபவமே இல்லையே? நெல்லிக்காய் ஜாம் ஒன்றைத்தான் ரொட்டியில் தடவிச் சாப்பிட்டு எங்களுக்குப் பழக்கம்! எப்போதாவது நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறோம்! அவ்வளவுதான்! ” என்று சொல்லவே, மஞ்சுளா உடனே அங்கே மருந்துக் கடை முதலாளி கொண்டு வைத்திருந்த ஒரு கூடையிலிருந்து நெல்லிக் காய்களையும், ‘ஐஸ் வாட’ரையும் அவளுடைய நண்பர்கள் யாவருக்கும் கொடுத்தாள். ( ஏனோ தெரியவில்லை - - மஞ்சுளா மட்டும் நெல்லிக்காய் தின்னவும் இல்லை, நீர் குடிக்கவும் இல்லை என்பதைக் கவனித்தேன்.) ’தீம் புளி நெல்லி மாந்தி’ நீர் குடித்த எல்லோரும் தங்களுக்கு இனிப்புச் சுவை தோன்றியதை ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில், மஞ்சுளா என்னிடம் வந்து, “ சார், மன்னிக்கவும், நீங்கள் இங்கிருந்து எல்லோருடன் பேசிவிட்டு , நிதானமாக உணவு அருந்திவிட்டு, மெதுவாகப் போகவும். நானும் என் நண்பர்களும் பக்கத்தில் உள்ள ஒரு தமிழ்ச் சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இப்போது போய்விட்டுப் பிறகு வந்து சாப்பிடுகிறோம். வயிறு கொஞ்சம் காலியாய் இருக்கும் போதுதான் சரியாகப் பாட முடியும் . அதனால் தான்” என்றாள்.

 ” ஓ? அப்படியா? தாராளமாய்ப் போ! போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்! ஆனால், நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு, குளிர்நீரைக் குடித்து விட்டுப் போனால் , பலருக்கும் தொண்டை கட்டிக் கொண்டு, பாட முடியாமல் போகுமே! “ என்றேன்.

“உஷ்! சார், மெள்ளப் பேசுங்க, சார்! அதனால் தானே நான் இன்று இந்த விருந்தை ஏற்பாடு செய்தேன்? நான் மட்டும் நெல்லிக்காயும் சாப்பிடவில்லை! ‘ஐஸ் வாட’ரும் குடிக்கவில்லை!” என்று சொல்லிக் ‘களுக்’ கென்று சிரித்தாள் மஞ்சுளா.

அடப் பாவமே! ’என் ‘ சங்கப் பாடல் இப்படியா பயன்பட வேண்டும்?




 ~*~o0O0o~*~

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 




வெள்ளி, 19 ஜனவரி, 2018

972. சங்கச் சுரங்கம்: பொருநர் ஆற்றுப்படை

பொருநர் ஆற்றுப்படை
பசுபதி



[ ‘ சங்கச் சுரங்கம் -1 ‘ என்ற என் நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை! நூல் கிட்டுமிடம்:
LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241; கைபேசி : 99406 82929.   ] 
====

“ அண்ணா, வணக்கம்” தொலைபேசியில் ஒலித்தது ‘கஞ்சிரா’ கதிரின் குரல். “ நான் நடத்தும் சங்கீத சபாவில் ஆண்டுக்கொரு இசை விருதை இந்த வருடம் முதல் கொடுப்பதாகத் தீர்மானித்திருக்கிறோம் . பட்டத்திற்குப்  புதிதாக, தகுந்த  ஒரு  பெயரை நீங்கள் தான் சொல்லவேண்டும் ” என்று  கேட்டுக் கொண்டான் கதிர்.

“ மிகவும் மகிழ்ச்சி, கதிர். நிச்சயம் சொல்கிறேன். ‘பொருநர் ஆற்றுப்படை’ என்ற சங்க நூலில்  ஓர் அழகான சொற்றொடர் இருக்கிறது. இசை விருதுக்கு மிகவும் பொருத்தமானது. சரியான  சபாவிற்கு இதைப்  பரிந்துரைக்க வேண்டும் என்று இத்தனை நாள் காத்திருந்தேன். இப்போது நீயே கேட்கிறாய். பழம் நழுவிப் பாலில் விழுந்தது! ” என்றேன். “ ஆகா! உடனே சொல்லுங்கள், அண்ணா ! எழுதிக் கொள்கிறேன்” என்றான் கதிர்.

“ அவசரப் படேல்! என்னைத் தான் தெரியுமே உனக்கு! நீ வீட்டிற்கு  வா. அந்த சங்க நூலைப் பற்றி முதலில் உனக்கு ஓர் அறிமுகம் கொடுக்கிறேன். காபி சாப்பிடலாம்; பிறகு அந்த பட்டம் என்ன என்று சொல்கிறேன்” என்றேன்.

“ ஓ… அப்படியா... அங்கே நேரில் வரணுமா ” என்று இழுத்தான் கதிர். ‘கஞ்சிரா’வின் சுருதி ஒரு கட்டை கீழே போயிருந்தது.

“ என்ன… தயங்கறே? ‘பொருநர்’ என்றால் யார் தெரியுமா? இசைக் கருவிகள் வாசிப்பவர்கள். இந்த நூலில் வருபவன், தடாரி என்ற வாத்தியத்தை வாசிப்பவன். தடாரி ஒரு பறை, உடுக்கு போன்ற … ஏன், நீ வாசிக்கும் கஞ்சிரா போல் … ஒரு வாத்தியம் என்று வைத்துக் கொள்ளேன். உன்னைப் போன்றவர்கள் அந்த நூலை நிச்சயம் படிக்கத் தான் வேண்டும். நீ வரவில்லை என்றால் , அடுத்த முறை உன்னைப் பார்க்கும் போது உன் முதுகில் நாலு ‘ததிங்கணத்தோம்’ வைப்பேன் ” என்று அதட்டினேன்.

அரை மனசோ, முழு மனசோ தெரியாது. இரவில் கதிர் என் வீட்டிற்கு வந்தான். அவனுக்குச் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன், சரியா?

பொருநர் ஆற்றுப்படை பத்துப்பாட்டில் இரண்டாவது நூல்.  தடாரியை வாசித்துக் கரிகாற் பெருவளத்தானாகிய சோழ மன்னனிடம் நிறையப் பொருள் பெற்ற ஒரு பொருநன் , எதிரில் வந்த மற்றொரு பொருநனைப் பார்த்து, அவனையும் அரசனிடம் சென்று, தன் வறுமையைப் போக்கிக் கொள்ள ‘ஆற்றுப்படுத்தும்’ ( வழிப்படுத்தும்) வகையில் அமைந்த  பாடல் தான்  248 அடிகள் கொண்ட இந்த நூல். பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர். இவர் பெண்ணாக இருக்கலாம்,  என்று கருதுகிறார்கள் அறிஞர்கள்.( தாமம் - தலையில் சூடும் ஒரு வகை மாலை; ஆர் - என்பது பெருமையைக் காட்டும் விகுதி; கண்ணி - இயற்பெயர்; முடமாக இருந்திருக்கிறார்; ) கரிகாலன் இவருக்குத் தாம மாலை சூட்டிச் சிறப்பித்ததால் இந்தப் பெயர் என்பர். யாழ், விறலிகள், கரிகாலனின் உபசார வகை, பொருநன் முன்னே இருந்த நிலை, பின்னர் அடைந்த நிலை, சோழ நாட்டுச் சிறப்பு  முதலியவற்றை அழகுறப் பாடுகிறார் புலவர். 

ஆரம்பம் பாருங்கள்!

"அறாஅ யாணர் அகந்தலைப் பேரூர்."

தொடர்ந்து புதுப்பணம் வந்துகொண்டேயிருக்கும் அவ்வளவு பெரிய ஊர். அங்கே ஒரு திருவிழா. விழாவிற்கு வரும் பொருநர் போன்றவர்கள்  வயிறு புடைக்க உணவு உண்ணலாம்.

"சாறுகழி வழிநாள் சோறுநசை உறாது
வேறுபுலம் முன்னிய விரகறி பொருந! "

சாறுகழி வழி நாள் -- விழா முடிந்த மறுநாள் ,  சோறு நசை உறாது -- (விழா முடிந்து போன பின்பும்) அங்கேயே இருந்து,  சோற்றை  வாங்கி உண்டு கொண்டிருக்க ஆசை இல்லாமல்,  வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந! --  வேறு இடம் போவதற்கு உபாயம்(விரகு) அறிந்துள்ள பொருந!
ஆர்வமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த கதிர் உடனே நிமிர்ந்து உட்கார்ந்தான். “அடடா! ” கதிரின் உற்சாகம் கரை புரண்டோடியது. “ அண்ணா, புலவருக்கு என்ன  தூர திருஷ்டி!  சங்கீதம் தெரியாவிட்டாலும், இங்கிதம் தெரியணும் என்று எவ்வளவு நயமாகச் சொல்கிறார்!  எனக்கே தெரியுமே, இந்த ரகத்தில் பல பேரை ! நல்ல விருந்து, தீனி போடும் வீடுகளில் கல்யாணம், கார்த்திகை என்றால் உடனே மூட்டை, முடிச்சுமாய்ப் போய்ப் பல நாள்கள் ‘டேரா’ போட்டுவிடுவார்கள்!  நாளைக்கே நம் வீட்டிற்கு  யாராவது, 'வேண்டா விருந்தாளிகள்' வந்தால், அவர்களை, நைச்சியமாக,  "சோறுநசை உறாது வேறுபுலம் முன்னிய விரகறி நண்பா!" என்று கூப்பிட்டு, இடத்தைக் காலி பண்ணச் சொல்லலாம் போலிருக்கிறதே!  அதுவும், தொடக்கத்திலேயே எச்சரித்து விடுகிறார்!  நம்ப ‘கடம்’ கபாலி அடிக்கடி சொல்வான்: டேய், கதிர், ஒரு ரசிகர் வீட்டிற்குப் போனால்,  சும்மா கோந்து ஒட்டினாப் போல அங்கேயே குந்திக்கக் கூடாதுடா! சாப்பிட்ட உடனே கிளம்பு! ‘சாவு கிராக்கி’ மாதிரி நடந்துக்காதே” என்பான். அவன் இன்னிக்கும் சொல்வதை இந்தப் புலவர் அன்னிக்கே சொல்லிட்டாரே!  அண்ணா,  இந்த நூலைப் பற்றிக் கேட்க முதலில் நான்  தயங்கினதற்காக நீங்கள் என்னை மன்னிக்கணும். நூல் ஒரு பொக்கிஷம் போலிருக்கிறது ! மேலே சொல்லுங்கள் ”  

“ கதிர்,  நூல் முழுதும் பலசுவைகள் பொங்குகின்றன. நான் எதைச் சொல்வது? எதை விடுவது? இதோ ஓரிரண்டு! ”

* முதலில் ஒரு துணுக்குத் தகவல். உன் ‘ஜில்பா’வைப் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. கத்தரிக்கோல் சங்க காலத்தில் இருந்ததா? உண்டு என்கிறார் புலவர். அதற்கு 'மயிர்குறை கருவி' என்று பெயர்!  ”

“ கரிகாலன் அரண்மனையில் கள்ளை ஊற்றி, ஊற்றித் தர , பொருநரும் குடித்துக் கொண்டே இருந்தாராம். அந்த அனுபவம் எப்படி இருந்ததாம்? ‘தவசிகள் போல் மரணத்திற்குப் பின் மோட்சம் அடையாமல், உடம்புடனேயே நாங்கள் மோட்சத்தை அடைந்தது போல  இருந்தது ‘ என்கிறார் புலவர்.  ”

கதிர் இடை மறித்தான். “  இந்த அனுபவத்திற்குக் கள் குடிக்கக் கூட வேண்டாம், அண்ணா! ..சனிக்கிழமை காலை எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு,  நல்ல 'மசால் தோசை' நாலு வெட்டிவிட்டு, படுக்கையில் பிற்பகலில் படுத்தால்... ஆகா! அந்த நித்ரா தேவியின் அரவணைப்பு இருக்கிறதே! ஐயோ!  ”

நான் தொடர்ந்தேன் . “ சாப்பிட்டு, சாப்பிட்டுப் பொருநனின் பற்கள் எப்படி ஆனதாம்? புன்செய் நிலத்தை உழக்கூடிய கலப்பையின் முனை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்ந்து விடுமோ, அப்படி ஆகிவிட்டதாம்! ”

“ என் சிறுவயது நண்பன் ஒருவனுக்கு ஓர் ஆசை. சொல்லிக் கொண்டே இருப்பான். "டேய்! எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் மூவரையும்  சேர்ந்து ஒரே மேடையில் பார்க்கணும்டா " என்பான். அதேமாதிரி, மூவேந்தரையும் ஒரே இடத்தில் பார்க்கப் புலவருக்கும் ஆசை இருந்ததோ என்னவோ? ஆட்டம், பாட்டு, கொட்டு மூன்றும் சேர்ந்து ஒலித்தது மூவேந்தரும் ஒன்று சேர்ந்தது போலிருந்ததாம். ”

 “ நாம் இப்போதும் , நம் வீட்டு விருந்தினர்க்கு வாசல் வரை கூடச் சென்று வழி அனுப்புவது வழக்கம்தானே. இது பழங் கால வழக்கம் என்கிறார் புலவர். பொருநரின் ஏழிசைக்கும் மரியாதை செலுத்துவது போல், அரசன் பொருநரின் பின்னே ஏழடி நடந்து வழி அனுப்புவானாம். ”

“ அண்ணா, நூலில் சங்கீதம் பற்றி வேறு ஏதேனும் குறிப்புகள் உண்டா? ” என்று கேட்டான் கதிர்.

“ ஓர் இடத்தில்

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க
[ மண் – மிருதங்கத்தின் ‘வலந்தரையில்’ பூசிய மண் ; முழவு – மிருதங்கம் , பாணி – தாளம் ] 

என்கிறார்.  மிருதங்கத்தின் ஒரு பக்கம் தடவப்படும் கருஞ்சாந்து போன்ற பொருளை ‘மார்ச்சனை’ என்பர். பழங்காலத்தில் ஒரு வகை மண்ணை மார்ச்சனையாகப் பயன்படுத்தினர்.  அந்த மண் பூசப்பட்ட மிருதங்கத்தின் தாளத்திற்கேற்ப , அதனோடு ஒத்திசைக்கும் சிறுயாழ் உடைய விறலியர் ஆடுவர் என்கிறார் புலவர்.

இன்னொரு இடத்தில் , ‘இருசீர்ப் பாணிக்கு’ ஏற்ப ஒரு பாட்டைப் பாடினேன் என்கிறான் பொருநன். அதாவது, இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப !

கதிரின் கண்கள் விரிந்தன“ அண்ணா, இது அதிசயமாக இருக்கிறதே! இரட்டைத் தாளம் என்றால்…. ஒரு வேளை, இரண்டு கைகளில் இரு வேறு தாளங்கள் போட்டுக் கொண்டே பாடுவதைச் சொல்கிறாரோ? இது எளிதில்லையே! சில ‘பெரிசுகள்’ இம்மாதிரி இரண்டு தாளம் போட்டுப் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அந்தக் காலத்திலேயே இந்த வழக்கம் இருந்தது போல் இருக்கிறதே? ” என்றான் கதிர். “ சரி, அண்ணா, எனக்கு நேரம் ஆகிவிட்டது. இசை விருதுக்கு ஏற்ற ஒரு பட்டம் இந்த நூலில் வருகிறது என்றீர்களே , அதைச் சொல்லுங்கள்! ”என்று கேட்டான்.

“ ஓ, மறந்தே விட்டேனே…. ஓரிடத்தில் பொருநன் மற்ற பொருநனைப் பார்த்து,

ஏழின் கிழவ!

என்கிறான்.  அதாவது, ‘ஏழு சுரங்களுக்கும் உரிமை உடையவனே!’ என்று அழைக்கிறான்.  கிழவன் என்றால் பழங்காலத்தில் ‘உரிமையுடையவன்’ என்றுதான் பொருள். ‘சோலைமலை கிழவனுக்கு அரகரோகரா’ என்று முருக பக்தர்கள்  கோஷம் எழுப்புவதை நீ கேட்டிருப்பாயே? பிறகுதான் , ‘கிழவன்’ என்றால் ‘முதியவன்’ என்ற பொருள் பிறந்தது. அதனால், உன் சபையில் , ஆண்டுக்கொரு முறை ஓர் இசை விற்பன்னருக்கு , ‘ ஏழின் கிழவன் ’ என்றோ, பெண்மணியானால், ‘ஏழின் கிழத்தி’ என்றோ ஒரு பட்டம் கொடுக்கலாம் . புதிதான பெயர், அமர்க்களமாக இருக்கும் ” என்றேன்.

கதிர் ‘தடா’லென்று எழுந்து நின்று, என்னை முறை, முறை என்று முறைத்துப் பார்த்துவிட்டு, ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அவசரமாக வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் போகிற வேகத்தில், அவன் பின்னால் ‘ஏழடி’ சென்று வழி அனுப்பக் கூட எனக்கு நேரமில்லை.

என்ன முணுமுணுத்திருப்பான் கதிர் என்று யோசித்துக் கொண்டே நான் தூங்கப் போனேன். 



~*~o0O0o~*~
தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

பசுபடைப்புகள்

சனி, 4 பிப்ரவரி, 2017

சங்கச் சுரங்கம்: மோக முல்லை

மோக முல்லை 
பசுபதி 

[ சங்கச் சுரங்கம் - 2 என்ற என் புதிய நூலிலிருந்து ஒரு கட்டுரைக்கதை/கதைக்கட்டுரை! நூலை LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241  கைபேசி : 99406 82929.  - இலிருந்து வாங்கலாம் ] 





                                        




“சார், சென்னையிலிருந்து ஒரு ‘கன்ஸல்டிங்’ வேலை வந்திருக்கிறது. தமிழ் இளைஞருக்குப் பிடித்த மாதிரி ஒரு வாசனைத் திரவம் –கொலோன் அல்லது பெர்ஃப்யூம்  – தயார் செய்ய வேண்டுமாம். ஏதேனும் ஓர் ‘ஐடியா’ கொடுங்கள் ! ‘ என்றான் என் தமிழ் மாணவன், இளைஞன் விந்தன். விந்தன் வேதியல் ஆய்வில் நிபுணன். சங்கத் தமிழிலும் அலாதியான  ஆர்வம்.

“நிச்சயம் சொல்கிறேன். கேள். நேற்றுக் குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றைப்  படித்துக் கொண்டிருந்தேன். அவற்றுள் ஒன்றில் உனக்கு வேண்டிய விஷயம் புதைந்திருக்கிறது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. அதன் அடிப்படையில்  ஒரு ‘பெர்ஃப்யூமை நீ தயாரித்தால்  இளைஞர் என்ன - எல்லாத் தமிழர் மார்கெட்டையுமே பிடித்துவிடலாம்! அதற்கு ஓர் அழகான பெயரையும் வைத்திருக்கிறேன். சொல்லட்டுமா? “ என்றேன்.

 “ஐடியா இருக்கட்டும், சார்! முதலில் அந்தப் பாடலைச் சொல்லுங்கள்! சங்கப் பாடல் கேட்டு ரொம்ப நாளாச்சு! ’ என்றான் விந்தன்.

”சமர்த்துடா, நீ! “ என்று அவனை மெச்சிவிட்டுச் சொன்னேன்.

”  இந்தப் பாடல் , இன்பமாய் இல்லறம் நடத்தும் ஒரு மனைவியிடம் அவள் தோழி கேட்ட கேள்விக்கு அம்மனைவி சொல்லும் பதில் போல் அமைந்துள்ளது. ‘மணம் ஆவதற்கு முன் எப்படி நீ மனம் தளராமல், காதலனைப் பிரிந்த உன் துக்கத்தைப்  பொறுத்துக் கொண்டிருந்தாய் ? உன் மனவலிமை பெரிதே! “ என்று தோழி சொல்ல, தலைவி, “ மனவலிமை ஒன்றுமில்லை! காதலன் என்னை ஒருமுறை சந்தித்த அந்த இனிய நினைவே எனக்குத் தொடர்ந்து  ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தது” என்று சொல்கிறாள். அந்த நிகழ்வை மிக அழகாக இப்பாடலில் விவரிக்கிறாள்.

என் காதலன் தலைவனாக இருந்த நாட்டில், சிறு சுனைகள் இருக்கும். கள்ளை ஊற்றி வைக்கும் நீல நிறக் குப்பிகள் போல் சிறிய வாயுள்ளவை அச் சுனைகள். அச் சுனையில் , பிளந்த வாயுடைய தேரைகள், கிளி, குருவிகளை ஓட்டப் பெண்கள் பயன்படுத்தும் தட்டை என்ற கருவியைப் போல் ஒலிக்கும்.

அப்படிப்பட்ட நாட்டுத் தலைவனான என் காதலன் நிலா வீசும் ஓர் இரவில் என்னைத் தழுவினான். அதனால், இன்றும் அவன் மேனியிலுள்ள முல்லை மணம் என் தோளில் வீசுகிறது” என்கிறாள்.
பாடல் இதோ:

மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன் மன் நெடுந் தோளே  
இன்று முல்லை முகை நாறும்மே.

- அரிசில் கிழார்.   ( குறுந்தொகை, 193 )

[ மட்டம் – கள்; மணிக்கலம் – நீல நிறக் குப்பி; இட்டு – இடுங்கிய ; பகுவாய் – பிளந்தாற் போன்ற வாய்; கறங்கும் –ஒலிக்கும்; மணந்தனன் – தழுவினான்; முகை –அரும்பு ]

“அப்படியா! “ என்று வாய் பிளந்தான் விந்தன்.

“ஆமாம், இந்தக் கடைசி வரியில் “ஆண்களின் மேனி முல்லை மணம் உடையது” என்கிறார் கவிஞர். இதைப் போலவே பின்பு கம்பன், குமரகுருபரர் தங்கள் பாடல்களில் கூறியுள்ளதை உ.வே.சாமிநாதையர் தன் குறுந்தொகை உரையில் சுட்டியுள்ளார். அதனால், நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! நீ தயாரிக்கும் ஆடவர் பெர்ஃப்யூமில் முல்லை மணம் சேர்; அதற்கு “மோகமுல்லை” என்று பெயர் கொடு! இந்தச் சங்கப் பாடலை விளம்பரத்தில் சேர்த்து,

“மோக முல்லை அணியுங்கள்! –
முகூர்த்த நாளைக் கணியுங்கள்! ”

என்று முழங்கு! மார்க்கெட் உங்கள் கையில் “ என்றேன்.

“உங்களுக்குக் கோடானுகோடி நமஸ்காரம்” என்று சொல்லிச் சென்றான் விந்தன். பிறகு அவன்  “மோகமுல்லை”யைத் தயாரித்ததாகவும், அது தமிழ்நாட்டில் வெற்றிகரமாய் விற்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால், எனக்கு ஒரு பெர்ஃப்யூம் குப்பியாவது இலவசமாய்க் கிட்டவில்லை. கடைசியில், கோபமும், எரிச்சலும் தாங்காமல், விந்தனைக் கூப்பிட்டுத் திட்டினேன்.

“சார், தப்பாய் நினைக்காதீங்க! நான் ஒரு பெரிய 200 மில்லி  “மோகமுல்லை” பாட்டிலுடன் ஒருநாள் வீட்டிற்கு வந்தேன். மாமி என்னைப் பார்த்து, கையிலே என்ன என்று கேட்டார். அதட்டினார் என்றே சொல்லலாம்!  நான் சொன்னதும், “ ஓகோ! அப்படியா விஷயம்? இவருக்கு இந்த வயதில் என்ன “ மோகமுல்லை: வேண்டியிருக்கிறது? ஆதி சங்கரர் “மோகமுத்கரம்” என்ற நூலை எழுதியிருக்கிறார். அதை உங்கள் ‘சாரிடம்’ கொடுத்துப் படிக்கச் சொல்! என்ன, முழிக்கிறாய்? அதுதான், “பஜகோவிந்தம்” என்று சொல்லப்படும் நூலின் சரியான பெயர். மோகத்தை உடைக்கும் சம்மட்டி என்று பொருள். என்ன, உன் “மோகமுல்லை”யை எடுத்துக் கொண்டு, இங்கிருந்து போ! “கோ” விந்தா! “ என்று சொல்லிவிட்டார் மாமி. ” என்று அழுதான்.

:ஐயகோ! என் பெர்ஃயூம் கோவிந்தாவா? ” என்று நினைத்துக் கொண்டே தொலைபேசியைக் கீழே வைத்தேன்.

~*~o0O0o~*~  

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம்