வாஞ்சையுடன் பூமாலை வாங்கு !
பசுபதி
‘தமிழ்’ மொழியைப் பற்றிப் பேசுபவர்கள் மறக்காமல் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. தமிழ் மொழியின் வல்லினம் (த ), மெல்லினம் ( மி ) , இடையினம்
( ழ் ) என்று மூன்று இனங்களும் தமிழ் என்ற சொல்லிலேயே அழகாக இணைந்திருக்கிறது என்பதே. ‘முருகன்’ ஒரு தமிழ்க் கடவுள் என்று குறிப்பிடும் அறிஞரும் ‘முருகு’ என்ற சொல்லிலும் மூன்று இனங்கள் இருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.
( ழ் ) என்று மூன்று இனங்களும் தமிழ் என்ற சொல்லிலேயே அழகாக இணைந்திருக்கிறது என்பதே. ‘முருகன்’ ஒரு தமிழ்க் கடவுள் என்று குறிப்பிடும் அறிஞரும் ‘முருகு’ என்ற சொல்லிலும் மூன்று இனங்கள் இருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.
தமிழில் மூன்று வித ஓசைகளைக் குறிப்பிடும் மூன்று இனங்கள் இருப்பது
நம் மொழியின் ஒரு தனித்தன்மை. மூவினங்களை வைத்துப் பல விதமான வார்த்தை விளையாட்டுகளை
ஆடலாம். அவற்றுள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
முதல் ஆட்டம்:
மூவினங்களும் ஒரே ஒரு முறை வரும் ( தமிழ், முருகு போன்ற
) மூன்றெழுத்துச் சொற்கள் தமிழில் பல உள்ளன.
கரம், சரம், பரம், ….அல்லது காலணி, சேமியா, தாமரை என்று நிறைய சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்
பொதுவாய் எல்லா மூன்றெழுத்துச் சொற்களையும் வரிசைப் படுத்துவதற்குப் பதிலாய், மூவின
எழுத்துகள் சேர்ந்த ஆண், பெண் பெயர்களை எழுதுவது முதல் ஆட்டம்.
இதோ ஒரு மாதிரிப் பட்டியல்:
கமலா, குமார், சரண், சிவன்,
சுநீல், சேரன், சோழன், சௌம்யா, தாரிணி, நித்யா,
பரணி, பவானி, பாலன், பிரேமா, மாதவி, மாலதி,
யோகம், ரோகிணி, ரேணுகா, வனிதா, வேம்பு.
இப்படிப்பட்ட ‘மூவினப்’ பெயர்கள் கொண்ட மூவெழுத்துக்காரர்கள்
பெருமைப் படுவதோடு, தமிழ் மொழியின் ஒரு பரிமாணத்தையும்
புரிந்து கொள்வார்கள் அல்லவா?
இரண்டாம் ஆட்டம்:
மூவின எழுத்துகள் ஒவ்வொன்றும் இரு முறை மட்டும் வரும் ஆறெழுத்துச் சொற்களைக் கண்டுபிடித்து எழுதுவது
சற்றுச் சிரமமான வேலை.
முயலுங்கள்! கீழே கொடுக்கப் பட்டிருக்கும்
பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கு இந்த ஆட்டம் தெளிவாகப் புரியும்.
களஞ்சியம், தலைநகரம், நெடுந்துயில், பணியரங்கு, பயங்கரம்,
பலவந்தம், பிரயோசனம், பெரியதனம், விற்பன்னர், மகாவித்வான், சிருங்காரம், மாங்காய்கள்.
களஞ்சியம்
என்ற சொல்லில் வல்லினம் இரு முறையும் ( க, சி ) , இடையினம் இரு முறையும் ( ள, ய )
, மெல்லினம் இரு முறையும் (ஞ் , ம் ) வந்திருப்பதைக் கவனியுங்கள். இதே மாதிரி மற்ற
சொற்களும் உள்ளன. சொல்லில் ஓர் இனத்தைக் குறிக்க
ஒரே எழுத்தின் இரு வர்க்கங்கள் வராமல், வெவ்வேறு எழுத்துகள் வந்தால் இன்னும் அழகு தான். அதாவது, விற்பன்னர்
என்ற சொல்லில் அதே மெல்லின எழுத்து இரு முறை ( ன்,ன ) வருகிறது . இதை விட, களஞ்சியம்
என்ற சொல்லில் ஞ், ம் என்ற வித்தியாசமான மெல்லின எழுத்துகள் வருவது போல் வந்தால் அழகு.
மூன்றாம் ஆட்டம்:
மூவின எழுத்துகள் சமமான விழுக்காடுகளில் , ஒரு தடவை, இரண்டு தடவை , வார்த்தைகளில் வருவதை முதல்
இரண்டு ஆட்டங்களில் பார்த்தோம். ஆனால், இப்படிச் சம எடையில் மூவினங்களும் வரும் தமிழ் வாக்கியங்களை எழுதுவது மேலும் சிரமமான
ஓர் ஆட்டம். அதாவது, வாக்கியத்தில் ஒவ்வொரு இனமும் சமமான எண்ணிக்கையில் … 2,3, 4 ,… என்று வரவேண்டும்.
நான் கீழே கொடுத்திருக்கும் சில காட்டுகளைப் பாருங்கள். இதே மாதிரி சில வாக்கியங்களை
உங்களால் எழுத முடியுமா? ”
துலாம் சாயுமோ?
தரணி தாங்கு!
வந்த கனவு
நீளுதே!
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு!
பழனிநகர் மேடையொன்றில் மயிலாட்டம் காணவா.
பெரும்பாலும் சாயங்காலம் தலபுராணம் வந்துசேரும்.
பி.கு.
மேற்கண்ட கட்டுரையைப் படித்த ‘வெண்பா வீட்டு’ நம்பி
“ சார்! ”வாஞ்சையுடன் பூமாலை வாங்கு” வெண்டளை பிறழாமல், ஒரு வெண்பா ஈற்றடி போல் இருக்கிறதே?”
என்றான்..
மேற்கண்ட கட்டுரையைப் படித்த ‘வெண்பா வீட்டு’ நம்பி
“ சார்! ”வாஞ்சையுடன் பூமாலை வாங்கு” வெண்டளை பிறழாமல், ஒரு வெண்பா ஈற்றடி போல் இருக்கிறதே?”
என்றான்..
“அட! கவனித்தாயா? பலே! ஆம், ‘சம எடை மூவின’க் குறள் வெண்பாக்களைக் கூட நம் ஆட்டத்தில் இயற்ற முயலலாம். நல்ல மென்பொருள் உதவியால் ‘திருக்குறள்’ போன்ற சிறு கவிதைகளில் எங்காவது மூன்று இனங்களும் சம எடையில் ( அல்லது தோராயமாகச் சம எடையில்) வருகின்றனவா என்றும் ஆய்ந்து அறியலாம்” என்றேன்.

