வெங்கடேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெங்கடேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜூலை, 2016

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
வெங்கடேசன் 

ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள்.

‘தினமணி’ யில் 2014 -இல்  வந்த ஒரு கட்டுரை இதோ:
=============

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும். இவர் தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார்.

பிறப்பு: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27 ஆம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி: ஐந்தாவது வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

ஆசிரியர் பணி: கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணிபுரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக்கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன.

ஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாள ராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

இலக்கியப் படைப்புகள்: இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின்படியும் புதிய முறைகளின்படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தபோதும்கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது. வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்.

   - பக்திப் பாடல்கள்,

   - இலக்கியம் பற்றிய பாடல்கள்,

   - வரலாற்று நோக்குடைய கவிதைகள்,

   - குழந்தைப் பாடல்கள்,

   - இயற்கைப் பாட்டுகள்,

   - வாழ்வியல் போராட்டக் கவிதைகள்,

   - சமூகப் பாடல்கள்,

   - தேசியப் பாடல்கள்,

   - வாழ்த்துப்பாக்கள்,

   - கையறுநிலைக் கவிதைகள்,

   - பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.



கவிமணியின் படைப்புகள்: மலரும் மாலையும்(1938), ஆசிய ஜோதி(1941), நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1942), உமார்கய்யாம் பாடல்கள்(1945), கதர் பிறந்த கதை(1947), தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், கவிமணியின் உரைமணிகள் போன்றவற்றை படைத்துள்ளார். இவை மிக இலக்கியத்தரம் வாய்ந்தவை.

மலரும் மாலையும்: பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவற்றை அறியலாம்.

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
  பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்  
  கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
  துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
  கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

மருமக்கள்வழி மான்மியம்:

   கவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. இது சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற ஒரு புரட்சிக்காவியம். மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஒரு ஏற்பாடு. சட்டம்போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன்(சகோதரியின் மகன்)களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான். இவ்வாறுதான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள். இத்தகு புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார். அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'!

   'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம். கவிமணியின் சொற்பொழிவுகளும் உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது.

இனிமைக் கவிஞர்: தேசம், மொழி, மக்கள், உலகம் எனப் பெரும் வட்டத்தைத் தன் பாடல்களுக்குள் அடக்கி சத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவர். சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்.

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
  உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
  தெரிந்து ரைப்பது கவிதை.

என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.

   கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். "அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்," என வள்ளுவரையும், "நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க்கிழவி," என ஔவையாரையும், "இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக்காட்டிடுவான்," எனக் கம்பரையும், "பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா, அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா," எனப் பாரதியையும் போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.

குழந்தைக் கவிஞர்: கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார். இதுவரையிலான தமிழ் ஆளுமைகளில் குழந்தைகளின் பிரபஞ்சத்தில் சுதந்திரமாய் நுழைந்து உலவியர் கவிமணி ஒருவரே. குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இனி யாராலும் எழுதிவிட முடியாது என்பதை நிறுவியவர். "ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் குழந்தைப் பாடல்களில்லையே என்று நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் சில பாடல்களை எழுதினேன்," என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்துக் கவிமணி சொல்கிறார். அவர் சொன்னதுபடியே தன் வாழ்வில் பெரும்பகுதியைக் குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்காகவே செலவிட்டவர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.
காக்காய்! காக்காய்! பறந்து வா
கண்ணுக்கு மை கொண்டு வா
கோழி! கோழி! கூவி வா
குழந்தைக்குப் பூக்கொண்டு வா

கோழி! கோழி! வா வா
கொக்கொக்கோ என்று வா
கோழி! ஓடி வாவா
கொண்டைப்பூவைக் காட்டு வா

"தோட்டத்தில் மேயுது  வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது  கன்றுக்குட்டி 
அம்மா என்றது  வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி."

போன்ற எளிமையான வருணனைகள் அடங்கிய வரிகளின்வழி குழந்தைகளின் உலகில் சிநேகிதமாய்ச் சஞ்சரித்தவர். எளிமையான பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு அறிவு புகட்டவும் செய்தார்.


'தம்பியே பார், தங்கையே பார், 
சைக்கிள் வண்டி இதுவே பார்',

போன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.

தான்கண்ட மெய்ம்மையான காந்தியத்தை;

 "கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில்
   கொட்டை நூற்கும் பணி செய்வதை - இம்
 மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
   மாமதி யோங்கி வளருதம்மா."

என்கிற இயற்கை வர்ணனையோடு ஒட்டிக் குழந்தைகளுக்குப் புரிய வைத்தவர். பல்வேறு உத்தி முறைகளில் பாடி குழந்தைப் பாடல்களைப் பல்வேறு தளத்திற்கும் பரவச் செய்தவர் கவிமணி.

சமுதாயக் கவிஞர்: பாரதியாரைப் போலவே இவரும் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் சில நாட்டுப் பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்தித் "தீண்டாதோர் விண்ணப்பம்" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். அக்காலக் கட்டத்தின் சமூகக் கொடுமைகளுக்கும், அன்னியரின் அடிமைத்தனத்திற்கும் எதிரான கவிமணியின் பாடல்களில் தீர்க்கமான முற்போக்குப் பார்வையாளராக அவரை இனங்காண முடிகிறது.

"கண்ணப்பன் பூசை கொளும்
   கடவுளர் திருக்கோவிலிலே நண்ணக் கூடாதோ நாங்கள்
   நடையில் வரல் ஆகாதோ."

என்று தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதைப் பற்றி, சைவப்பிள்ளை ஆச்சார மரபிலிருந்து கொண்டு சிந்தித்தவர்.

"அல்லும் பகலும் உழைப்பவர்ஆர் - உள்ளத்து
   அன்பு ததும்பி யெழுபவர்ஆர்? க
ல்லும் கனியும் கசிந்துருகித் - தெய்வக்
   கற்பனை வேண்டித் தொழுபவர்ஆர்?"

எனப் பாடியதன் மூலம் அவர் காலத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.


மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:

"கண்ணுக் கினியன கண்டு - மனதைக்
   காட்டில் அலைய விட்டு 
பண்ணிடும் பூசையாலே - தோழி
   பயனொன்றில்லையடி

உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
   உணர வேண்டும் அடி 
உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
   உள்ளேயும் காண்பாயடி."

கவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லை," என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,

"மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
 மாநிலத் தோங்கும் குலத்தினராம்
 தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
 தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா." 

எனப் பாடுகிறார்.

விடுதலைக் கவிஞர்: சுதந்திர வேட்கை தீயாய்க் கொழுந்துவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் காந்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துச் சமாதானத்தை வலியுறுத்தியவர். காந்தியின் கொள்கையான மதுவிலக்கு குறித்து,

 "கள்ள ரக்கா! குலத்தோடு நீ
   கப்ப லேறத் தாமதம் ஏன்?
 வள்ளல் எங்கள் காந்தி மகான்
   வாக்கு முற்றும் பலித்ததினி."

என்று உற்சாகமாய்ப் பாடுகிறார்.

   ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்குச் சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். "பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது," என்றும் வலியுறுத்தினார். நம்நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும். "உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது." "பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்." "அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்," என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.

"ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை
 அடைய வேண்டுமெனில்
 ஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது
 உழைக்க வேண்டுமப்பா



 உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்
 உடுக்கும் ஆடைக்கும்
 மண்ணில் அந்நியரை நம்பி
 வாழ்தல் வாழ்வாமோ?



 உண்ணும் உணவுக் கேங்காமல்
 உடுக்கும் ஆடைக் கலையாமல்
 பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
 பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
 அண்ணல் காந்திவழி பற்றி
 அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்."

இந்தியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியவர். இரண்டாம் உலகப் போரினால் மக்கள் அடைந்த துயரை,

"போரில் எழுந்த பஞ்சம் - பாரத
   பூமியைத் தாக்குதைய்யா 
நேருங் கொடுமை யெல்லாம் - நினைக்க
   நெஞ்சு துடிக்குதைய்யா."

என்ற பாடலின் மூலம் விளக்குகிறார்.

உணர்ச்சிக் கவிஞர்: அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.

வக்கீல் : ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா? ரெண்டா?

சாட்சி  : குதிரைக்கு ஏதுங்க கொம்பு.

வக்கீல் : கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு பதில். கொம்பு ஒண்ணா? ரெண்டா? அதைத்தான் சொல்லணும்.

இவ்வாறுதான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங்கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

மொழிபெயர்ப்புகள்: பிறமொழிக் கவிஞர்தம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதி, தமிழிலக்கியச் சாளரத்தின் வழியாக பிற நாட்டுக் காற்று உள்ளே வர அனுமதியளித்தவர் கவிமணி. பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை ‘எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு’ ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார்.

ஆசிய ஜோதி: சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது. சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கனவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வளமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

ஆராய்ச்சிகள்: கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

வையாபுரிப்பிள்ளை, இராஜாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. சண்முகம் போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

திரைத்துறையில் கவிமணி: முதன்முதலில் என்.எஸ்.கே பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான 'மணமகள்' படத்தில் ஒரு பாடல், பின்பு 'தாயுள்ளம்' என்கிற படத்தில்

கோயில் முழுதும் கண்டேன் - உயர்   
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை நான்
தேடினும் கண்டிலனே

என்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல் வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைதவிர 1952ல் வேலைக்காரன், 1955ல் கள்வனின் காதலி, 1956ல் கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.

'கள்வனின் காதலி' படத்தில் இவரது

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வளமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

பாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது.  இவரது பல பாடல்களைத் திரையுலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. மேற்கண்ட பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. இவரது பாடல்களை திரைத்துறை பயன்படுத்தியதே தவிரே, இவராகத் திரைப்படத் துறையின் பக்கம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டுகளும் விருதுகளும்: "அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் எனப் புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.

“தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை” என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்டவர்.

 "இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துகளைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

25 டிசம்பர் 1940 இல் தமிழ்ச்சங்கம் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவர்தம் கவிபாடும் புலமையைப் பாராட்டி,  தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தனர்.

1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.

1954 இல் கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.

அக்டோபர் 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

மறைவு: 78 ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த கவிமணி மனைவியின் ஊராகிய புத்தேரி' என்கிற ஊரில் 26.09.1954 இல் வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவு :

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

வெள்ளி, 15 ஜூலை, 2016

மறைமலை அடிகள்.

மறைமலை அடிகள். 
வெங்கடேசன்

ஜூலை 15. மறைமலை அடிகளின் பிறந்த நாள்.  


அவரைப் பற்றித் தினமணியில் 2014-இல் வந்த ஒரு கட்டுரை இதோ! 
==============
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியவரும், குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்தவர். அவரை தமிழ் உலகம் 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்று தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற அந்த வரலாற்று மனிதர்தான் மறைமலை அடிகள். 
பிறப்பு: 1876 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும், அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பி 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள் என்று மாற்றிக் கொண்டார்.
கல்வி: வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தணியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினொன் கீழ்கணக்கு போன்ற சிரமமான நூல்களையும் தெளிவாக கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையானார் மறைமலை அடிகள்.
ஆசிரியர் பணி: நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார். சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோம சுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து ரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமாற் கலைஞர் என்ற தமிழறிஞர். மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். வீ. கோ. சூரியநாராயண சாஸ்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்து தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.
1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றிய பின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912-ல் "சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் பொதுநிலைக்கழகம் என பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையான தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூய தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தலம் எனும் காதல் காவியத்தை தமிழில் மொழி பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆனால் தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார். 
தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது.
மறைவு: தம் வாழ்நாளில் அவரது உள்ளம் இரு விசயங்களை காதலித்தது. அதில் ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமது 75-வது வயதில் காலமானார்.
இவர் காலத்தில் பல புகழ்பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணியம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரை வேலர், திரு.வி.கல்யாணசுந்தரனார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி.கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச.வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியருமான நாராயணசாமி, "சைவ சித்தாந்த சண்டமாருதம்" என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர் என்று பலர் வாழ்ந்த காலம்.
'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக வினாக்களை வீசலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழ் உலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதை பற்றியும் சிந்தித்து சிறக்க வேண்டும்.
தான் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து காட்டியதால் தமிழ் வரலாற்றில் தனி இடம் பெற்றும், 'தனித்தமிழ்' என்ற வானமும் வசப்பட்டது. அவரிடமிருந்த துணிவும், வைராக்கியமும், சிந்தனைத் தெளிவும், கொள்கைகளுடன் வாழ்ந்து காட்டும் திடமும் நமக்கும் ஏற்பட்டால் நிச்சயம் நாம் விரும்பும் வானமும் வசப்படும்.
நூல்கள்:
* முதற்குறள் வாத நிராகரணம் (1898)
* முனிமொழிப்ரகாசிகை (1899)
* ஞானசாகரம் மாதிகை (1902)
* முல்லைப்பாட்டு - ஆராய்ச்சியுரை (1903)
* பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் (1906)
* பட்டினப்பாலை - ஆராய்ச்சியுரை (1906)
* சாகுந்தல நாடகம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
* மரணத்தின் பின் மனிதர் நிலை (1911)
* சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
* யோக நித்திரை, அறிதுயில் (1922)
* வேளாளர் நாகரிகம் (1923)
* மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
* சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
* தொலைவில் உணர்தல் (1935)
* தமிழ் நாட்டவரும், மேல் நாட்டவரும் (1936)
* முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
* இந்தி பொது மொழியா? (1937)
* தமிழர் மதம் (1941)
* திருக்குறள் ஆராய்ச்சி (1951)
* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
* சிவஞான போத ஆராய்ச்சி (1958)
* Oriental Mystic Myna Bimonthly (1908 - 1909)
* Ocean of wisdom, Bimonthly (1935)
* Tamilian and Aryan form of Marriage (1936)
* Ancient and Modern Tamil Poets (1937)
* Can Hindi be a lingua Franca of India? (1969)
[ நன்றி : தினமணி ] 

தொடர்புள்ள பதிவு:

வெள்ளி, 24 ஜூன், 2016

கண்ணதாசன் - 1

கவியரசர் கண்ணதாசன்  
வெங்கடேசன் 


ஜூன் 24. கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில்  2014-இல் "  தமிழறிஞர்கள் அறிவோம்"  தொடரில் வந்த   ஒரு கட்டுரை இதோ:
===

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.

தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் முரண்பாடுகளைக் கண்டு வளர்ந்தது. தமிழ் வழங்கும் இடங்களில் எல்லாம் அவரைச் சிறப்பாகத் திகழ வைத்தவை அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களே.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியின் சிறுகூடல்பட்டியில் பெற்றோர் சாத்தப்பனார் - விசாலாட்சி ஆச்சிக்கு 1927, ஜூன் 24 ல் பிறந்தவர் முத்தையா,  பின்னாளில்  கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை அவரது 'வனவாசம்' நூலைப் படித்தால் உணரலாம்.

கல்வி: சிறிகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி, அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 15 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 17 வயதில் அவரது முதல் கவிதை வெளிவந்தது.

புனைப்பெயர் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி

தொழில் - கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்

எழுதிய காலம்: 1944 - 1981

முதல் குறுங்காவியம்: மாங்கனி. இவை டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையிலிருந்துகொண்டு படைத்தது. (1952-53)

மணவாழ்க்கை: 1950ல் கண்ணதாசனின் மண வாழ்க்கை தொடங்கியது. கவிஞருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்).

இரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது 'கண்ணதாசன் பதிப்பக'த்தின் அதிபர்).

மூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி மனோகரன் என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்). கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவு மறைவு இன்றி 'வனவாசம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அது அவருடைய மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. தன் குணச்சித்திரத்தை இரண்டே வரிகளில் பாடலாக எழுதியுள்ளார்.

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணை இருப்பு' என்பதே அப்பாடல். இப்பாடல், அவரே பாடுவது போல ரத்த திலகத்தில் இடம் பெற்றுள்ளது.

அரசியல்: 1949ல் திமுக தொடங்கி அரசியலில் பல்வேறு அனுபவங்களை தந்தது.

திமுகவிலிருந்து விலகல்: 1960-61 ஆம் ஆண்டுகளில் தி.மு.க.விலிருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று 1960-61 ஆம் ஆண்டுகளில் அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.

இவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980 ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்படல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகோர்த்தன, கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.

 பத்திரிக்கை: அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய  உருவக கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.

அரசவை கவிஞர்: தமிழ்நாட்டின் 'அரசவை கவிஞராக (ஆஸ்தான கவிஞர்) கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.

அதன் பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதம்: அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யா லகரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார்.

சுயபிரகடனம்: கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.

தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும்  உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசன். மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப்பாடல்களின் மூலம் தனது கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி அறிவுறுத்திய தேசிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.

கண்ணதாசனின் நூல்கள்:

பிரதானமானவை

இயேசு காவியம்

அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

திரைப்படப் பாடல்கள்

மாங்கனி

கவிதை நூல்கள்:

கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்

பாடிக்கொடுத்த மங்களங்கள்

கவிதாஞ்சலி

தாய்ப்பாவை

ஸ்ரீகிருஷ்ண கவசம்

அவளுக்கு ஒரு பாடல்

சுருதி சேராத ராகங்கள்

முற்றுப்பெறாத காவியங்கள்

பஜகோவிந்தம்

கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்:

அவள் ஒரு இந்துப் பெண்

சிவப்புக்கல் மூக்குத்தி

ரத்த புஷ்பங்கள்

சுவர்ணா சரஸ்வதி

நடந்த கதை

மிசா

சுருதி சேராத ராகங்கள்

முப்பது நாளும் பவுர்ணமி

அரங்கமும் அந்தரங்கமும்

ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி

தெய்வத் திருமணங்கள்

ஆயிரங்கால் மண்டபம்

காதல் கொண்ட தென்னாடு

அதைவிட ரகசியம்

ஒரு கவிஞனின் கதை

சிங்காரி பார்த்த சென்னை

வேலங்காட்டியூர் விழா

விளக்கு மட்டுமா சிவப்பு

வனவாசம்

அத்வைத ரகசியம்

பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்:

எனது வசந்த காலங்கள்

எனது சுயசரிதம்

வனவாசம்

கட்டுரைகள்:

கடைசிப்பக்கம்

போய் வருகிறேன்

அந்தி, சந்தி, அர்த்தஜாமம்

நான் பார்த்த அரசியல்

எண்ணங்கள்

தாயகங்கள்

வாழ்க்கை என்னும் சோலையிலே

குடும்பசுகம்

ஞானாம்பிகா

ராகமாலிகா

இலக்கியத்தில் காதல்

தோட்டத்து மலர்கள்

இலக்கிய யுத்தங்கள்

போய் வருகிறேன்

நாடகங்கள்:

அனார்கலி

சிவகங்கைச்சீமை

ராஜ தண்டனை

கவிஞரின் பழமொழிகள்:

கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் எழுதலாம், செய்யப் போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் செல்லலாம்!

முட்டையைக் கொடுத்துக் காசு வாங்கிறவன் வியாபாரி, காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி, எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல் வாதி.

கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்!

யாருக்காகவும் என்னை மாற்றி கொள்ளாதே

ஒருவேளை மாற நினைத்தால்

ஒவ்வொரு மனிதர்களுக்கும்

நீ மாற வேண்டி வரும்.



அழும் போது தனிமையில் அழு,

சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி!

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,

தனிமையில் சிரித்தால்

பைத்தியம் என்பார்கள்.



நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி

          நடந்த இளந்தென்றலே



மழைகூட ஒருநாளில் தேனாகலாம்

          மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

          அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?

உணர்ச்சிகளைச் சொல்லும்போது நேராகவும் கூராகவும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை.



நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்.

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.

சொல்லாத சொல்லுக்கு விலைஏது மில்லை.

தத்துவத்தைத் திரைப்பாடல்களில் மனமுருகக் காட்டியவர் கண்ணதாசன்.

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா-என்

இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா.

நூற்றுக்கணக்கான பாத்திரங்களின் ஆயிரக்கணக்கான உணர்வுகளின் நுட்ப வேறுபாடுகளைக் கண்ணதாசன் சித்திரித்ததுபோல வேறொருவர் சித்திரித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

மக்கள் மனங்களிலும் உதடுகளிலும் அன்றும் இன்றும் என்றும் அசைப்போடும் பாடல்கள்:

"கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே." என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய கவிஞர் அடுத்து...

போனால் போகட்டும் போடா .

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?

--------------------------------------------------

வீ டுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ ?

................................

மனிதன் மாறி விட்டான்

மதத்தில் எறி விட்டான்

.........................................................

உன்னைச் சொல்லி குற்றமில்லை

...........................................................................

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்

அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் .

...................................................................................

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

.................................................................................................

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

........................................................................................................

உள்ளம் என்பது ஆமை -அதில்

உண்மை என்பது ஊமை

.....................................................................................................................

பிறக்கும் போது அழுகின்றான் .

....................................................................................................................................

நிலவைப் பார்த்து வானம் சொன்னது

என்னை தொடதே .

.........................................................................................................................................................

கவலை இல்லாத மனிதன் படம் எடுத்து நஷ்டப்பட்டு  கவலைப்பட்ட வரலாறும் உண்டு.

"நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு

பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது ." என்று சொன்ன வரிகள் இன்றும் பலரின் உதடுகளில் உறவாடி வருகின்றன.

மணிமண்டபம்: தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கவிஞரின் இரங்கல் கவிதை: மறைந்த பிரதமர் நேரு மீது மிகுந்த பற்று வைத்திருந்த கண்ணதாசன். 1964-ல் நேரு மறைந்தபோது அவர் மீது கொண்டிருந்த பக்திக்கு சான்றாக கண்ணதாசன் 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா' என்று எழுதிய இரங்கல் கவிதை விளங்குகிறது.

அந்த கவிதை-----------

சீரிய நெற்றி எங்கே?

சிவந்த நல் இதழ் எங்கே?

கூரிய விழிகள் எங்கே?

குவலயம் போனதெங்கே?

நேரிய பார்வை எங்கே?

நிமிர்ந்த நன் நடைதான் எங்கே

நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்த திங்கே

ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?

எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட

தாயே எனக்கொரு வரம் வேண்டும்

தலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்

சாவே உனக்கொருநாள்

சாவு வந்து சேராதோ

சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ?

தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?

தெய்வமே உன்னையும் நாம் தேம்பி

அழ வையோமோ

கண்ணதாசனின் ஆசையும் மறைவும்:

கண்ணதாசன் பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். அப்போதெல்லாம் அவர் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணத்தைப் பற்றியும் குறிப்பிடலானார். தன்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவரே உணரலானார். 'மரணத்தை ரகசியமாக இறைவன் வைத்துள்ளதால்தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதாபிமானத்துடன் நடக்கிறான்' என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், 'காமராஜர் போல, மறைந்த பட அதிபர் சின்னஅண்ணாமலை போல மரணம் திடீர் என்று வரவேண்டும். என் கண்ணனிடம் எனது கடைசி ஆசையாக இதைத்தான் கேட்டு வருகிறேன்' என்று கூறிவந்த கவிஞர் வெள்ளித்திரையில் ஒரு முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரப்படி 10.45 மணிக்கு மறைந்தார்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கண்ணதாசன்


திங்கள், 25 ஏப்ரல், 2016

ரா.பி. சேதுப்பிள்ளை -2

ரா.பி. சேதுப்பிள்ளை
வெங்கடேசன்

ஏப்ரல் 25. ”சொல்லின் செல்வர் ”ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நினைவு தினம்.

அவர் நினைவில், வெங்கடேசன் அவர்கள் தினமணியில் 2011-இல் எழுதிய கட்டுரை இதோ!


================


தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர் என பன்முகம் கொண்ட பாவலர். தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.  உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.

பிறப்பு: சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2 ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதியினருக்குப் பதினோராவது பிள்ளையாகப் பிறந்து வளர்ந்தார்.

கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்கு சேது என்று பெயர் சூட்டினர். இரா. பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த 'இரா' என்பது இராசவல்லிபுரத்தையும் 'பி' என்பது 'பிறவிப்பெருமான்பிள்ளை' அவர்களையும் குறிப்பன.

கல்வி: ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங் கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்கு தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேது, நெல்லையப்ப பிள்ளையின் மகள் ஆழ்வார்ஜானகியை மணந்தார்.

பணிகள்:  சேதுப்பிள்ளை 1923 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். நெல்லையில் வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்ட சேதுப்பிள்ளை ,நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பணியின் போது இவர் நெல்லை நகரில் தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை மாற்றி அத்தெருக்களின் உண்மையான பெயர்கள் நிலை பெறுமாறு செய்தார்.

வழக்குரைஞராக இருப்பினும் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். இவரின் செந்தமிழ்த் திறம் அறிந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவரைத் தமிழ் அறிஞராக ஏற்றுக் கொண்டு தமிழ்த் துறையில் தமிழ்ப் பேரறிஞர் பதவியை அளித்தது. சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர் சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணிபுரிந்தார். தம் மிடுக்கான செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார். மொழி நூலை இளங்கலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பித்துத் தமிழுக்கு இணையான தம் ஆங்கிலப் புலமையையும் வெளிப்படுத்தினார்.


1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி இனிது நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.


சொற்பொழிவுகள்: பல்கலைக்கழகப் பணிகளை சிறப்பகச் செய்த சேதுப்பிள்ளை, தமதுசெந்தமிழ்ப் பேச்சால் சென்னை மக்களை ஈர்த்தார். இவரின் மேடைப் பேச்சு ஒவ்வொன்றும் மேன்மை மிகு உரைநடைப் படைப்பாக அமைந்தது. அவரின் அடுக்குமொழித் தமிழுக்கு உலகமெங்கும் அன்பான வரவேற்பும், ஆர்வம் மிகுந்த பாராட்டும் கிடைத்தன. சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் அவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது. சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.


படைப்புகள்: இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு கட்டுரை நூல்கள் மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்தார். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் தமிழக வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கியப் பொழிவுகளின் தொகுப்புக்களாகும். இன்னும் சில நூல்கள் அவர் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புக்களாக அமைந்தவை. எனவே அவரது உரைநடை மேடைப் பேச்சின் இயல்பினில் அமைந்ததாக உள்ளது. ஆதலின் அவரது எழுத்தும்பேச்சும் வேறுபாடின்றி அமைந்துள்ளன. இலக்கிய அமைப்புகளில் அவர் ஆற்றிய எழுச்சி மிகுந்த பொழிவுகளே இனிய உரைநடையாக வடிவம் பெற்றன.

இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் "திருவள்ளுவர் நூல் நயம்" என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, "தமிழகம் ஊரும் பேரும்" என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்,

    சிலப்பதிகார நூல்நயம்

    தமிழின்பம்

    தமிழ்நாட்டு நவமணிகள்

    தமிழ்வீரம்

    தமிழ்விருந்து

    வேலும்வில்லும்

    வேலின்வெற்றி

    வழிவழி வள்ளுவர்

    ஆற்றங்கரையினிலே

    தமிழ்க்கவிதைக் களஞ்சியம்

    செஞ்சொற் கவிக்கோவை

    பாரதியார் இன்கவித்திரட்டு போன்ற நூல்கள் இவரின் படைப்புகளாகும்.


சிறப்புகள்: சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.

அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது. சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது.

உரைநடை நயங்கள்: இரா.பி. சேதுப்பிள்ளையின் உரை நடைகளில் அடுக்குத் தொடர், எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகியன அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு - அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?

“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடம்புரிய, எதுகையும் மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக, எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்”அன்பழகன் குறிப்பிடுகின்றார்.

    "வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியம்போல் பொலிவிழந்திருக்கின்றன."

    "அறம் மணக்கும் திருநகரே! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசிநோயும் மிகுந்தது; நாளுக்குநாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையார் நெஞ்சில் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி. 'கார்தட்டினால் என்ன? கருப்பு முற்றினால் என்ன? என் களஞ்சிய நெல்லை அல்லா தந்த நெல்லை - எல்லார்க்கும் தருவேன்’ என்று மார்தட்டினார் - இதுவன்றோ அறம்?"

    "தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்."

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

    ஆற்றங்கரையினிலே (நூல்)

    கடற்கரையினிலே (நூல்)

    கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் (நூல்)

    தமிழ் விருந்து (நூல்)

    தமிழக ஊரும் பேரும் (நூல்)

    தமிழர் வீரம் (நூல்)

    தமிழின்பம் (நூல்)

    மேடைப் பேச்சு (நூல்)

    வேலின் வெற்றி (நூல்)

மறைவு: தமிழ் வளர்ச்சிக்காகத் தமது இறுதிக்காலம் வரை பாடுபட்ட சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை 1961 ஏப்ரல் 25 இல் 65 -ஆம் வயதில் மறைந்தார்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ரா.பி.சேதுப்பிள்ளை

புதன், 30 மார்ச், 2016

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளை

 மார்ச் 30. ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம். 


அவரைப் பற்றியும், அவருடைய நாட்குறிப்பைப் பற்றியும் வந்த இரண்டு கட்டுரைகள் இதோ ! 


முதலில் வெங்கடேசன் என்பவர் தினமணியில் எழுதிய கட்டுரை:
===== 

தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்குப் பெரிய செல்வந்தர். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" எனும் கப்பலுக்குச் சொந்தக்காரர். வெளிநாட்டு வணிகங்களுக்கு இக்கப்பலை அவர் பயன்படுத்தியுள்ளார். ஆனந்தரங்கரின் காதோ எலிக்காது. கண்ணோ கருடனின் கண். இந்த நாள்குறிப்பின் உயிர்நாடியே இவைகள்தான்.

பிறப்பு: சென்னையில் உள்ள பெரம்பூரில் 30.03.1709 அன்று பிறந்தார். மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.

இயற்பெயர்: ஆனந்தரங்கப் பிள்ளை

பெற்றோர்: திருவேங்கடம்

தொழில்: வணிகம், அரசியல், மொழிபெயர்ப்பாளர்

மொழிப்புலமை: தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், போர்ச்சுகீசியம் எனப் பல மொழிகளை அறிந்தவர்.

பணி: டியுப்லெக்ஸ் பிரபு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்ததால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747 இல் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

1736 செப்டம்பர் 6ம் தேதி தொடங்கப்பட்ட நாள்குறிப்பு 1760 செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிகிறது.

இந்த நாள்குறிப்பு முழுவதும் ஒரே நடையில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

1846 ஆம் ஆண்டு கலுவா மோம்பிரன் என்ற தமிழ் அறிந்த பிரெஞ்சுக்காரர் ஆனந்தரங்கப் பிள்ளையின் மாளிகையில் நுழையும் போதுதான் அவரது நாள்குறிப்பேடுகள் மானிடக் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

இவர் அரசியலிலும், வணிகத்திலும் தீவிரமாக ஈடுபட்ட காலங்களில் எழுதப்பட்ட நாள்குறிப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இருபத்தைந்து ஆண்டு கால தமிழக, இந்திய, உலக அரசியல், பண்பாட்டு, சமயச் செய்திகளை வெளிப்படுத்தி உள்ளன.

மோம்பிரன் தான் கண்டுபிடித்த நாள்குறிப்பை தன் சொந்த உபயோகத்துக்காக ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார். பின்பு தமிழில் இருந்தவற்றை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னால், பிரெஞ்சு அரசின் கீழ் புதுவையில் செயல்பட்ட எதுவாத் ஆரியேல் என்பவர், மூல நாள்குறிப்பை பிரதி எடுத்து பாரீஸ் தேசிய நூலகத்தில் சேர்த்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சென்னை ஆவணக் காப்பகத்தின் காப்பாளராக இருந்த ஹெச். டாட்வெல்லின் உதவியோடு நாள்குறிப்பு முழுதும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அது 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த வேலை 1917ல் தொடங்கப்பட்டு 1928ல் முடிக்கப்பட்டது.

ஆனந்தரங்கப் பிள்ளை பல மொழிகள் அறிந்திருந்தும், தனது நாள்குறிப்பை தாய்மொழியான தமிழில்தான் எழுதினார் என்பதில் தமிழ்த்தாய்க்குப் பெருமையே. இருந்தும் அவரது நாள்குறிப்பு பிரெஞ்சு மொழியில்தான் முதன்முதலில் மக்களுக்குப் படிக்கக் கிடைத்தது. பின்னர் ஆங்கிலத்தில் கிடைத்தது.

நாள்குறிப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தமிழில் கிடைத்தது. அதுவும் முழுமையாக இல்லை.

அன்று வரை நாள்குறிப்பு தமிழில் கிடைக்காதது குறித்து வருத்தப்பட்ட புதுவையில் உள்ள பிரெஞ்சுத் துணைத் தூதரகம் முழு முயற்சி எடுத்து 1948 ஆம் ஆண்டு வேலையைத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதன்பின் அந்த அச்சுவேலை கிடப்பில் போடப்பட்டிருக்க வேண்டும்.

தமிழில் படிக்க ஆனந்தரங்கப் பிள்ளை நாள்குறிப்பு கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புண்ணியம் கட்டிக் கொண்டது.

1998ம் ஆண்டு நாள்குறிப்பின் முதல் எட்டு தொகுதிகளை ஒன்பது நூல்களாகப் பதிப்பித்தது. கடைசி நான்கு தொகுதிகளை 2005ல் பதிப்பித்து 2006ல் வெளியிட்டது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாள்குறிப்பைப் பற்றித் தெரிந்தவர்கள் அது விலை மதிப்பில்லா அரிய பொக்கிஷம் என்று அறிவர்.

கலுவா மோம்பிரன் மட்டும் ஆனந்தரங்கரின் மாளிகை அழகை மேம்போக்காக இரசித்துக் கொண்டு சென்றிருப்பாரேயானால், இந்த நாள்குறிப்பு மக்கி மண்ணாய்ப் போயிருக்கும். தமிழ்த்தாயின் மகுடத்தில் ஒரு வைரக்கல் குறைந்து போயிருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டுப் புதுச்சேரியின் வரலாறு இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடந்திருக்கும்.

புதுவை மாநில ஆளுநர்களில் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்படும் டூப்ளேயின் வாழ்க்கை வரலாற்றில் நமக்குப் பல அத்தியாயங்கள் கிடைக்காமலே போயிருக்கும். 1741 மார்ச்சில்,

    மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது

    இலஞ்சம் கொடுத்துப் பணி பெறுவது

    கண்ட இடங்களில் மலம் கழிப்பவர்க்குத் தண்டனை தருவது

    கிறிஸ்தவ கோயிலில் தாழ்த்தப்பட்டவருக்கும் ஏனையவர்க்கும் தனித்தனி இடம் ஒதுக்கியதால் பிரச்னை ஏற்பட்டது

    பிரமாண்டமாக நடந்த திருமண நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள்

    சாதிச் சண்டைகள் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட விசித்திரமான தண்டனைகள்

    வணிகம் பற்றிய ஏராளமான செய்திகள்

அரசியல் சதுரங்கத்தில் ஆனந்தரங்கர் நகர்த்திய காய்கள் எவ்வாறு வெற்றியைத் தந்தன முதலிய பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது.

அரசாங்கத்தில் துவிபாசி பதவி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆளுநர் கூடவேயிருந்து அரசாங்க நடப்புகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்புடையவர் அவர். அரசாங்கம் என்று ஒன்றிருந்தால், அதன் இரகசியம் என்று பல இருக்கும். இவற்றை வேறு யார் காதிலும் போடக்கூடாது என்ற எண்ணத்தோடு, தன் குறிப்பேடுகளுக்கு மட்டும் கூறியிருக்கிறார் ஆனந்தரங்கர்.

ஆனந்தரங்கரின் காதோ எலிக்காது. கண்ணோ கருடனின் கண். இந்த நாள்குறிப்பின் உயிர்நாடியே இவைகள்தான். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரியின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு அது "டூப்ளே கால" இந்தியாவையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

தம் நாட்குறிப்புகளுக்கு தினப்படிச் செய்திக்குறிப்பு. சொஸ்த லிகிதம் என்றே பெயரிட்டார்.

அரசியல் சூழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், கலகங்கள், முற்றுகைகள், கப்பல் போக்குவரவு, வாணிபநிலை, முகல் மன்னர் நடத்தை, நவாப் தர்பார், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரரின் அரசாளும் முயற்சி, அக்கால மக்கள் பட்டபாடு, அந்நியர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆர்க்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஐதராபாத், தில்லி முதலிய இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், டூப்ளே, டூப்ளே மனைவி, இலபூர்தோனே, பராதி, இலாலி தொல்லாந்தால் போன்றவர்களின் வீரப் பராக்கிரமங்கள், அவர்களின் உரையாடல்கள் ட்யுப்லெக்ஸ் பிரபு, இல்பூர்தோனே, பாரதி, தாமஸ் ஆர்தர்(பேரோன்-டி-தொல்லென்டால்), முதலிய பிரெஞ்சுத் தலைவர்களின் தன்மை, அக்காலப் பிரமுகர் வரலாறுகள், நீதியுரைகள், ஜோதிட குறிப்புகள், புலமையளவு முதலிய பலவற்றையும் தன் நாள்குறிப்பில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் புரியும் வண்ணம் தமிழிலே எழுதப்பட்டிருக்கிறது.

ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு அக்காலப் பேச்சுத்தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளை எடுத்துரைக்கிறது.

பிறமொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்கள், அன்று வழங்கி, இன்று வழக்கிழந்த சொற்கள் முதலியவற்றையும் அவ ரது நாட்குறிப்புகள் வாயிலாக அறியலாம்.

அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றிய பிறகு, மீண்டும் ஒரு முறை ஆனந்தரங்கம் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று குறிப்பிடுவர்.

பல மொழிகளில் ஆனந்தரங்கர் புலமையுடையவர் என்பதை நாள்குறிப்பை நாம் புரட்டும்போதே தெரிந்து கொள்ளலாம். புலமைப்பற்று கொண்டு பல புலவர்களுக்கு உதவிய புரவலராயிருந்த ஆனந்தரங்கர், தன் நாள்குறிப்பை பண்டிதத்தமிழில் எழுதாமல் மக்கள் தமிழிலேயே எழுதினார் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

ஆனந்தரங்கரின் ஜூன் இருபத்தொன்றாம் நாள் சேதிக் குறிப்பு தேவனாம்பட்டினம் போர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முன்வைக்கிறது. ஆளுநரைப் பார்க்கச் செல்லும் ஆனந்தரங்கரிடம், "நம்முடையவர்கள் நேற்று இராத்திரி போனவர்கள் கூடலூர் பிடிச்சுக் கொண்டார்களாம். செவுரோடு விழுந்தார்கள். தன் பேரிலே உள்ள சிறுது இராணுவுகள் கறனட்டகஸ்தானிருந்தார்கள். அவர்களையெல்லாம் வெட்டினார்களாம். கொஞ்சநஞ்சம் பேரிருந்தவர்கள் கதவைத் திறந்து ஓடச்சே வெளியிலே நம்முடையவர்கள் பிடித்துக்கொண்டு சரி கட்டிப் போட்டதாகவும் சிறிதுபேர் தப்பி ஓடிப்போனதாகவும் இப்படியாக ஒருத்தன் வந்து இப்போதான் மதாமுடனே சொன்னான். ஆனால் வெகுபேர்கள் செத்துப்போயிருப்பார்கள். வெகு சாக்குகளிருக்குமென்று" கடலூர் பிடிபட்ட தகவலைக் கூறுகிறார் ஆளுநர்.

ஆளுநரின் இந்த வெற்றி எக்களிப்பிற்குப் பின் அவர் மனத்திலோடும் எண்ணங்களை அறிந்தவர்போல் "துரையவர்களுக்கு பெண்சாதியித்தனை நிர்வாகம் பண்ணிக்கொண்டு தமக்கு அலுவலில்லாமல் பண்ணி நடப்பித்துக் கொண்டு போரானே யென்கிற உச்சாகம் ஒரு பாரிசம் தோற்ற, மற்றொரு பாரிசம், தன் பெண்சாதியைத் தொட்டு கூடலூர் தேவனும் பட்டணம் பிடச்சோமென்கிறது, சீர்மையிலே பிராஞ்சு இராசா முதலான இராசாக்கள் யெல்லாம் கொண்டாடலும், இந்தியாவிலே இருக்கப்பட்ட துலுக்கர் முதலான நபாபுகள், அமீர்கள், இராசா முதலாகிய பேர்கள், முன் சென்னப்பட்டணம் முசியே இலபுர்தொன்னே பிடித்துப் போட்டுபோக, யிவரைக் கொண்டாட கிடைச்சாப்போலே, இப்போதான் பெண்சாதியைக் கொண்டாடுவார்கள் என்கிற உச்சாகம் சரீரம் பூரிக்கப்பண்ண, யிந்தமட்டிலே இவள் யோசனையின் பேரிலே யல்லோ கூடலூர் சுறாயசமாய் கைவச மாச்சுதென்று சந்தோஷம்'' என்று எழுதுகிறார் அரங்கர்.

ஆனந்தரங்கத்தினுடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என கே.கே.பிள்ளை பாராட்டியுள்ளார்.

ஆனந்தரங்கம் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்:

ஆனந்தரங்கம் இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்துள்ளார். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ்ப் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் தெரிகிறது. இவரின் நாட்குறிப்பில் வேதபுரீசுவரர் கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனந்தரங்கம் பிள்ளை குறித்து வெளிவந்த நூல்கள்:

ஆனந்தரங்க கோவை

ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்

கள்வன் நொண்டிச் சிந்து

ஆனந்தரங்கம் பிள்ளைத் தமிழ் எழுதியவர் - அரிமதி தென்னகன்

ஆனந்தரங்கம் புதினங்கள்

ஆனந்தரங்கம் விஜயசம்பு எழுதியவர் - சீனிவாசர் (வடமொழி நூல்)

சரித்திரம் படைத்த இந்தியர்களின் சரித்திரத்தை வெள்ளைக்காரன்தான் எழுதினான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியர்களுக்கு சரித்திரக் கருத்தில்லை என்பதை ஏற்பதற்கில்லை. 1761 ஜனவரி திங்கள் 10 ஆம் தேதி இன்னுயிர் நீத்த ஆனந்தரங்கப் பிள்ளைகூட பொக்கிஷம் போன்ற நாள்குறிப்பினை விட்டுத்தானே சென்றிருக்கிறார்.

===========

அடுத்து, விகடனில் பூ.கோ. சரவணன் எழுதிய இன்னொரு கட்டுரை:
===============
·         


ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள் நாட்குறிப்புகள் என்பவை கூட சுவையான ஒரு ஆவணமாக, வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான ஆவணமாக ஆகக்கூடும் என்பதை உறுதி செய்பவை. பிரெஞ்சுக்காரர்கள் புதுவையை ஆண்ட காலத்தில் இவரின் மாமா நைனியாப்பிள்ளை அவர்களிடம் துபாஷாக இருந்தார். பெரம்பலூரில் இவர் பிறந்தார். இவரின் அப்பாவை மாமா புதுச்சேரிக்கு அழைக்கவே குடும்பம் அங்கே பெயர்ந்தது. அங்கே சிறிய அளவில் ஆனந்தரங்கம் பிள்ளையின் அப்பா வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
நைனியாப்பிள்ளை அப்பொழுதைய கவர்னர் எபேருக்கு லஞ்சம் தர மறுத்து அவரை பதவி நீக்கம் செய்ய காரணமானார். கவர்னரின் மகன் இளைய எபேர் கவர்னரானதும் நைனியாப்பிள்ளை மீது பொய்யான குற்றச்சாட்டுகளை உள்ளாகி சவுக்கடி வழங்கப்பட்ட பொழுது அந்த அடி தாங்காமல் அங்கேயே இறந்து போனார். அவருக்கு நியாயம் தேடி அவரின் மகன் குருவப்பா பிரான்ஸ் தேசத்தில் அலைந்து நீதி பெற்றார்
இந்தக்காலத்தில் ஆனந்தரங்கம் பிள்ளை பாக்கு வியாபாரத்தில் இருந்து தன்னுடைய தொழிலை விஸ்தரித்து கொண்டு போனார். சாராய ஆலை, நீலத்துணி ஏற்றுமதி என்று அவரின் தொழில்கள் நீண்டன. ஆனந்தப்புரவி என்கிற பெயரில் பெரிய கப்பலை சொந்தமாக வைத்து வியாபாரம் செய்கிற அளவுக்கு அவர் வளம் மிக்கவராக இருந்தார். இவருக்கு முன்னரே இவரின் மாமா குருவப்பா குறிப்புகள் எழுதி வைத்திருந்தாலும் அவை கிடைக்காமல் போனதால் இவரின் குறிப்புகளே பிரெஞ்சு ஆட்சியை அறிந்து கொள்ள பயன்படும் மிக முக்கிய குறிப்புகளாக திகழ்கின்றன. இருபத்தி ஐந்து ஆண்டுகள் எழுதப்பட்ட அந்த குறிப்புகளில் பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
1743 ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை தன்னுடைய டைரியில் பதிவு செய்கிறார் பிள்ளை. இருண்ட அறைக்குள், திடகாத்திரமான இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட அடிமை வேலை செய்வதற்காக மொரிஷியஸ், பிரெஞ்சு கயானா முதலிய பகுதிகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டார்கள் என்று நேர்மையாக பதிகிறார்.
கடலோரம் போய் காலைக்கடன் போகக்கூடாது என்று கவர்னர் போட்ட உத்தரவு, எப்பொழுதும் மதுவுக்கு தடை என்பதையே அறியாத மிதத்தல் மாநிலமான புதுவையில் மராத்தியர் தாக்குதலின் பொழுது ஆறு மாதம் மட்டும் விதிக்கப்பட்ட மதுவிலக்கு, சாந்தா சாகிபுக்கு அடைக்கலம் தந்திருந்த கவர்னர் துய்மாவை மிரட்டி தூதுவரை அனுப்பி ஆறு கோடி கப்பம் கேட்ட மராத்திய தளபதி ரகுஜி நாற்பது பாட்டில் பிரெஞ்சு மதுவோடு காதலியின் மது மோகத்தால் சமாதானம் ஆகிக்கொண்ட கதை நம்ப முடியாததாக இருக்கலாம். துப்ளேக்ஸ் புதுவையை ஆண்ட காலத்தில் பிள்ளை தலைமை துபாஷ் ஆக இவரிடமே லஞ்சம் கேட்ட அவரின் மனைவி ழானின் ஊழல் முகம் என்று பலவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதே ழான் இடங்கை எனப்படும் இழிவாக நடத்தப்பட்ட மக்களுக்கு வலங்கை பிரிவினரின் பகுதிகளுக்குள் நுழைய வசதி ஏற்படுத்தி தந்ததும் பிள்ளையால் குறிக்கப்படுகிறது.
துப்ளே இவரையே தலைமை துபாஷாக நியமிக்கிறார். ஒரு துபாஷ் மக்கள் ஒழுங்காக வரி செலுத்துவதை கண்காணிப்பது,கவர்னருடன் அதிகாரப்பூர்வ தொடர்பு கொள்ளுதல், கிரிமினல் வழக்குகளில் தீர்ப்புகளை தீர்மானிப்பதில் ஆலோசனை வழங்குதல் என்பன மாதிரியான முக்கியமான பணிகளை செய்து வந்தார். அப்பொழுது கூடலூர் எனப்படும் கடலூரை வெள்ளையருடன் ஏற்பட்ட போரில் உடனே கைப்பற்ற வேண்டும் என்று துப்ளே துடிக்க ,"காபி சாப்பிடுகிற இடைவெளியில் கைப்பற்றக்கூடிய அளவுக்கு எளிய இலக்கில்லை அது ! என்றாலும் அங்கே இருக்கும் புனித டேவிட் கோட்டையை கைப்பற்றினால் ஆங்கிலேயரின் கப்பல்கள் நிற்க துறைமுகம் இல்லாமல் செய்து விடலாம் ! " என்று ஆலோசனை தருகிற அளவுக்கு அவர் அதிகாரத்தின் முக்கிய புள்ளியாக இருந்தார்.
பிரான்கோயிஸ் மார்ட்டின் எனும் கவர்னரின் காலத்தில் இருந்து வேதபுரீஸ்வரர் ஆலயத்தை சம்பக்கோயில் எனும் தேவாலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லை தரும் வகையில் பூஜைகளின் மூலம் சப்தம் எழுப்புகிறது என்று இடிக்க சொல்லி தொடர்ந்து பாதிரியார்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதை துப்ளே தன்னுடைய மனைவியின் மீதான ஈர்ப்பால் செய்து முடித்தார். இதுவும் இவரின் டைரிக்குறிப்புகளிலேயே காணக்கிடைக்கிறது.
1742-43 இல் சென்னையை பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி படைகள் கைப்பற்றிய பொழுது துப்ளே மகிழ்ச்சிப்பெருக்கில் துபாஷ் ஆன ஆனந்தரங்கம் பிள்ளையிடம் "என்ன வேண்டும் ?" என்று கேட்ட பொழுது "ஒரு காசுக்கு பன்னிரெண்டு வெற்றிலை கிடைத்தது. இப்பொழுது போர்க்காலம் என்பதால் ஆறு காசு,எட்டு காசு என்று வெற்றிலையின் விலை ஏறி மக்கள் துன்பப்படுகிறார்கள் ! குறைக்க முயலுங்கள் " என்று கேட்கிறார். மீண்டும் இவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டதும் ,"இருவரை தவறாக கைது செய்திருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யலாம் கவர்னர் !" என்றே சொல்கிறார். அடுத்த முறை அழுத்தி கேட்டதும் ,"எல்லாம் வல்ல இறைவன் மற்றும் நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன குறை ?" என்று எந்த பரிசும் பெறாமல் விலகிக்கொண்டார் பிள்ளை.
இவரின் டைரி வெகுகாலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்து எண்பது வருட காலத்துக்கு பின்னர் பிரான்சில் பிரதி எடுத்தனர். அதன் பின்னர் ஆங்கிலேயரும் அதை மொழிபெயர்த்து வெளியிட்டனர். வ.வே.சு ஐயர் அவரின் டைரியின் சில பகுதிகளை சித்திரகுப்தனைப் போல ஒன்று விட்டிடாமல் குறித்து வைத்த புஸ்தகமே இப்பிரதாப தினசரியாகும்என்று குறிப்பிட்டு வெளியிட்டார். தமிழ் மொழியில் பற்றுடையவராக திகழ்ந்து தமிழிலேயே கையெழுத்திட்ட பிள்ளை தன்னுடைய நாட்குறிப்புகளை பிரெஞ்சு,உருது மொழிகளை கலந்தே எழுதினார். அவரை இந்தியாவின் சாமுவேல் பெப்பீஸ் என்று அவரின் அற்புதமான நாட்குறிப்பு பதிவுகளுக்காக அழைக்கிறோம். அவரின் பிறந்தநாள் இன்று
(இந்தக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் பிரபஞ்சன் அவர்களின் நாவல்களான மானுடம் வெல்லும்,வானம் வசப்படும் மற்றும் அவரின் பல்வேறு கட்டுரைகளை படித்ததன் தாக்கத்தில் எழுதப்பட்டது. அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் )


[ நன்றி: தினமணி, விகடன் ]