யாப்பிலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாப்பிலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 செப்டம்பர், 2020

1642. யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்

யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்

பசுபதி 


அண்மையில் ( 20-9-2020)  ஓர் இணைய வழிப் பன்னாட்டு மரபுக் கவியரங்கில்   நான் வழங்கிய  சிற்றுரை   இன்று கட்டுரையாகத் "திண்ணை" இதழில் வந்துள்ளது.

அந்தச் சிற்றுரையை இந்தக் காணொளியில்  கேட்கலாம். 

[ நன்றி: அகில் சாம்பசிவம் ]

=======

1. அறிமுகம்


யாப்பிலக்கண நூல்களின் வரலாறு தமிழிலக்கிய வரலாற்றுடனும், கவிதை வடிவங்களின் வளர்ச்சியுடனும் இணைந்து நடைபோடும் ஒரு களம். சங்க காலத்தின் ஆசிரியப்பாக்கள், நீதிக் காலத்தின் வெண்பாக்கள், காப்பிய காலத்தின் விருத்தங்கள், சிற்றிலக்கிய காலங்களின் சந்தங்கள், பிரபந்தங்கள் முதலியவற்றின்  வளர்ச்சிகள் புதிய யாப்பு நூல்கள் எழக் காரணங்களாய் இருந்தன. கால வரிசைப்படி அத்தகைய வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையாய்ப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின்  முக்கிய நோக்கம். நூல்களில் ஏற்பட்ட வளர்ச்சிகளும், மாற்றங்களும்  யாப்பின் வள்ர்ச்சியை மட்டுமின்றி,  காலத்திற்கேற்றபடி யாப்பிலக்கணக் கல்வியில் ஏற்பட்ட  மாற்றங்களையும் குறிப்பிடும். 


யாப்பிலக்கண நூல்களை யாப்பருங்கலக் காரிகை வரை தோன்றியவை, காரிகைக்குப் பின் எழுந்தவை என்று பட்டியலிடுவது ஒரு வசதியான முறை. இந்த நூல்களையும் முழுதும் கிட்டியவை, கிட்டாதவை, செய்யுள் வடிவில் உள்ள மூல நூல்கள், அவற்றின் உரைகள், தமிழிலும், ஆங்கிலத்திலும் தோன்றிய ஆய்வு நூல்கள், உரைநடையில் உள்ளவை, இலக்கணச் சுருக்கங்கள் என்றெல்லாம் பிரிக்கலாம். தொல்காப்பியம் போன்ற மூல நூல்களின் உரைகள் காரிகைக்குப் பிந்தைய காலத்தில் எழுந்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 


மேலும் படிக்க:

[ நன்றி: திண்ணை ]

தொடர்புள்ள பதிவுகள் :

யாப்பிலக்கணம்

பசுபடைப்புகள் 

புதன், 21 மே, 2014

கவிதை இயற்றிக் கலக்கு - 10

கவிதை இயற்றிக் கலக்கு: நூல் மதிப்பீடு
கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

’கவிதை உறவு’ கவிதைகளுக்கு ஒரு சிறப்பான இடம் கொடுத்து வெளிவரும் ஒரு மனித நேய இலக்கியத் திங்களிதழ். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிவரும் அந்த இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள். அண்மையில் கனடாவிற்கு வந்தபோது அவரைச் சந்திக்கும் பேறு கிட்டியது.

என் நூலைப் பற்றிய இந்த விமர்சனம் “கவிதை உறவு” பிப்ரவரி, 2014 இதழில் ’நூல் மதிப்பீடு’ என்ற பகுதியில் வெளியானது 




தொடர்புள்ள சில பதிவுகள்:
நூல் விவரங்கள்:
கவிதை இயற்றிக் கலக்கு -5

மற்ற சில அறிஞர்களின் மதிப்புரைகள் :
டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ( ‘அமுதசுரபி’ ஆசிரியர்),
கவிமாமணி இலந்தை இராமசாமி, பேராசிரியர் அனந்தநாராயணன்.
க. இ. க -6 

கவிமாமணி குமரிச்செழியன் ( தலைவர், பாரதி கலைக் கழகம் ) 
க. இ. க -7

முனைவர் மு.இளங்கோவன்
https://muelangovan.blogspot.ca/2018/05/blog-post_20.html

நூலில் உள்ள ‘என்னுரை’
க.இ.க -9

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கவிதை இயற்றிக் கலக்கு - 9

” கவிதை இயற்றிக் கலக்கு” 

என்ற நூலைப் பற்றிய தகவல்கள், 
  

நூலின் பொருளடக்கம்

நூலைப் பற்றிச் சில அறிஞர்களின்  கருத்துகள்


அந்நூலில் உள்ள என்னுரை  நூலின் பின்புலத்தை விளக்கும் என்று நம்புகிறேன்.

என்னுரை
           
இணைய மடற்குழுக்களில் பங்கேற்கும் பல தமிழ் அன்பர்களின் ஆர்வமே இந்நூல் வெளிவர முக்கியக் காரணம். கவிதை இலக்கணத்தை முறையாக இணையம் வழியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற பலரின் விருப்பத்தை நிறைவேற்றப் பல கட்டுரைகளை ‘மரபிலக்கியம்’, ‘சந்தவசந்தம்’ போன்ற மடற்குழுக்களிலும், மன்றமையத்தின் (Forumhub) ’மையம்’ ( Hub Magazine)  என்ற இணைய மின்னிதழிலும் எழுதத் துணிந்தேன். டொராண்டோவில் கவிதை இலக்கணத்தைப்  பற்றிச் சில பயிலரங்கங்களும் நடத்தினேன். கட்டுரைகளைப் படித்து, பயிற்சிகளை முனைந்து செய்த பலர் எழுப்பிய ஐயங்களும்  என் கல்விப் பயணத்தில் மிகவும் துணையாக இருந்தன. ஒரு கல்லூரியில் பாடம் நடத்துவது போன்ற அனுபவத்தையே மடலாடற் குழுக்கள் எனக்கு அளித்தன! இவற்றின் மூலம் , என் கட்டுரைகள் கீழ்க்கண்டவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

1) கட்டுரைகள் தொடக்க நிலை மாணவர்க்கும், அதே சமயம் கவிதை இலக்கணம் சிறிது தெரிந்தோர்க்கும் பயனுள்ளவையாக இருக்கவேண்டும்.

2) முடிந்தவரை, ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் பல பயிற்சிகள் வேண்டும். முக்கியமாக, இலக்கணப் பகுதிகளிலாவது இவை கட்டாயம் இருக்கவேண்டும். [ என் சில கேள்விகளுக்கு விடை தேடத் திருக்குறள் முழுவதையும் படித்த மாணவ, மாணவிகள் உண்டு!]

3) பல இலக்கண நூல்களில் இல்லாத விருத்தங்கள், சந்தப் பாக்கள், வண்ணப் பாக்கள், சிந்துகள்  பற்றிய விவரமான விளக்கங்கள் இக் கட்டுரைகளில் இருக்கவேண்டும். 

எனக்கு உதவ அச்சில் இருக்கும் பல கவிதை இலக்கண நூல்களை வாங்கினேன். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் மிக அருமையாக இருந்தது. ஆனால், எந்த நூலும் இணைய வாசகர்கள் கேட்கும் எல்லா விஷயங்களையும் கொண்டதாக இல்லை. அதனால், நானே என்னறிவுக்குப் புலப்பட்ட வகையில்  இக் கட்டுரைகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து, மாதமொரு கட்டுரையாக, எழுதி வந்தேன். அவற்றை, இப்போது நூலுக்காக, பல திருத்தங்கள் செய்து, புதிய முறையில் கோத்து, மேலும் பல பயிற்சிகள், சில விடைகள் இவற்றைச் சேர்த்து உங்களுக்கு அளிக்கிறேன். கட்டுரைகளை எழுதும்போது, மேலும் சில விஷயங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன.

4) முன்னோர்களின் பல பாடல்கள் முன்மாதிரிக் காட்டுகளாகக் கொடுக்கப் படவேண்டும்.  ( இவற்றுடன், என்னுடைய சில முயற்சிகளையும் சேர்த்திருக்கிறேன். ‘ஆர்வக் கோளாறு’ என்று இதை மன்னிக்கக் கோருகிறேன்!) புலவர் குழந்தையின் “தொடை அதிகாரம்”  இந்தப் பணியை அற்புதமாய்ச் செய்யும் ஒரு மாபெரும் பாடற் களஞ்சியம். முனைவர் சோ.ந.கந்தசாமியின் “தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல்களும் எனக்குப் பெரும் பொக்கிடமாக உதவின. இந்நூலில் முடிந்தவரை நான் பாரதி, கவிமணி, பாரதிதாசன்  போன்ற அண்மைக் காலக் கவிஞர்களின்  பாடல்களையும்,  பக்தி, காப்பியக் கால இலக்கியப் பாடல்களையும் பயன்படுத்தி உள்ளேன். கூடவே, யாப்பிலக்கண உதாரணச் செய்யுள்கள் நிறைந்த குமரகுருபரரின் 'சிதம்பரச் செய்யுட் கோவை”யையும், பாம்பன் சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்”டையும், யாப்பருங்கலத்தையும் பயன்படுத்தி உள்ளேன்.  
5) யாப்பிலக்கணம், பாக்கள், பாவினங்கள் என்று பல இலக்கண நூல்கள் கையாளும் வழக்கமான வரிசையை விட, எளிமையான, சில சீர்களே உள்ள பாடல்களிலிருந்து படிப்படியாக முன்னேறிக்  கடினமான, அதிக சீர்கள் கொண்ட பாடல் வடிவங்களைப் பின்பு கற்பது நலம் என்பது என் கருத்து.  முனைவர் இரா.திருமுருகனின் “ பாவலர் பண்ணை”யும், புலவர் குழந்தையின் “தொடை அதிகார”மும்  பெரும்பாலும் இந்நோக்கத்தை ஆதரித்தது போல் அமைந்திருந்தது  என் முயற்சிக்கு ஊக்கம் அளித்தது.

6) வெண்பா வடிவத்தில் இணைய அன்பர்களுக்கு இருந்த அளவுகடந்த ஆர்வத்தையும் நான் மிக விரைவில் உணர்ந்தேன்.  ( என் முதல் கட்டுரைக்குப் பின்னரே, “எப்போது வெண்பாப் பற்றி விவரமாக எழுதுவீர்கள்?” என்று பலரும் கேட்டனர்.) வெண்டளை வெண்பாவில் மட்டும் இன்றி, விருத்தங்கள் முதல் சிந்துகள் வரை பற்பல பாடல் வகைகளிலும் இருப்பதைக் கவனித்தேன். அதனால், இவற்றை  மனத்தில் வைத்து நூலில் என் கருத்துகளையும் , இயல்களின் வரிசையையும் இணையக் கட்டுரைத் தொடர் வரிசையிலிருந்து மாற்றி அமைத்தேன். பல கட்டுரைகள், பயிற்சிகள் நூலுக்காகப் புதிதாக எழுதப் பட்டன. தளைக் கட்டுப்பாடுடன் சிறு சிறு வாக்கியங்கள், சொற்றொடர்கள் இயற்றும் பயிற்சிகளை நான் நூலின் ஆரம்ப இயல்களிலேயே தருவதற்கும் இது வழி வகுத்தது. கவிதை எழுதுவதற்கு மோனை, எதுகை, தளை இவை உள்ள உரைநடைப் பயிற்சிகள் அமைப்பதற்கும் இது உதவியது.


7) பெரும்பான்மை யாப்பிலக்கண நூல்கள் சந்தப் பாடல் இலக்கணத்தையோ, வண்ணப் பா இலக்கணத்தையோ விரிவாகச் சொல்வதில்லை என்பதைக் கவனித்தேன். அதனால், இவை யாவையும் என் நூலுக்குள் சேர்த்திருக்கிறேன்; ஆனால்,  வாசகர்கள் எல்லா இலக்கணத்தையும் முதலிலேயே படித்துச் சோர்வடையாமல் இருக்க, யாப்பிலக்கணத்தையும், பெரும்பாலும் ‘சந்தமற்ற’ பாடல் வடிவங்களையும் முதல் பகுதியிலும், சந்த இலக்கணம், வண்ணப் பா இலக்கணம், சந்தப் பாடல்கள், சிந்துகள் போன்ற இசைப்பாக்கள் ஆகியவற்றை இரண்டாம் பகுதியிலும் அமைத்தேன். ( என் அமைப்பினால், சில சமயங்களில் நான் “கூறியது கூறல்” என்ற குற்றத்திற்கு  ஆளாகி உள்ளேன் என்பதை அறிவேன். இதைப் பெரும்பான்மை  வாசகர்கள் மன்னிப்பர் என்றும் நம்புகிறேன்!)

நூலில் குற்றங்கள், குறைகள் இருப்பின், அவற்றைத் தயைசெய்து  எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். யாவருக்கும் பயன்படும்படி பிழைதிருத்தங்களை  என் வலைப்பூவில் இடுவேன். புதிய பயிற்சிகளையும், வினாக்களையும் அங்கே இடவும் ஒரு வாய்ப்பு உள்ளது. 

கட்டுரைத் தொகுப்பைக் கூர்ந்து படித்துப் பல திருத்தங்களையும், நூலின் அமைப்புப் பற்றிப் பல முக்கியமான யோசனைகளையும்  கூறிய  கவிமாமணி இலந்தை சு. இராமசாமிக்கும் பேராசிரியர், டாக்டர்,  கவிஞர் வே.ச.அனந்தநாராயணனுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

வையவலையில் தமிழ்க்கவிதைக்கென்றே ’சந்தவசந்தம்’ என்ற ஒரு தனிக் குழுமத்தை நடத்திவரும் இலந்தை சு. இராமசாமி  சென்னைப் ’பாரதி கலைக் கழக’த்தின்  கவிமாமணி பட்டமும், ‘சந்தத் தமிழ்க்கடல்’, ‘பாரதி பணிச்செல்வர்’ போன்ற பட்டங்களும் பெற்றவர்;  பேராசிரியர் அ.சீனிவாசராகவனின் மாணவர்.  இவருடைய சந்தப்பாக்கள் சந்தப் பாடல்களுக்கு ஓர் இலக்கணம் . விருத்தங்கள், சிந்துகள் –இவற்றைப் பற்றிப் பல ஆய்வுகள் செய்தவர். ‘பொருனை வெள்ளம்’ ’சந்தவசந்தம்’, ‘வள்ளுவ வாயில்’   போன்ற பல கவிதை நூல்களின் ஆசிரியர்.  என் நூலுக்குச் சிறந்த  அணிந்துரை வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

பேராசிரியர் டாக்டர் அனந்தநாராயணன் மதுரையில் வித்துவான் மீ.கந்தசாமிப் புலவரிடம் தமிழ் கற்றவர். ஹாமில்டன் நகரிலுள்ள மக்மாஸ்டர் பல்கலைக் கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார். பல்வகைக் கவிதைகளை இயற்றும் ஆற்றல் கொண்ட சிறந்த கவிஞர். கவிதை இலக்கணத்திலும், தமிழ் இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டவர். இவருடைய கவிதைகள் பல தமிழிதழ்களிலும், இணைய மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இந்நூலுக்கு ஒரு சிறந்த நட்புரையை வழங்கிய இவருக்கு என் அன்பார்ந்த நன்றி. மனமுவந்து அவர் இந்நூலுக்கு ஒரு ‘சாற்றுக் கவிதை’யையும் வழங்கியுள்ளார்.     

நூல் வெளிவரப் பல உதவிகள் புரிந்த நண்பர் கவிமாமணி, கவியோகி வேதம் அவர்களுக்கும், நூலை அழகாகப் பதிப்பித்த திரு கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றி.

 இந்நூல் சிலரையாவது தமிழ்க் கவிதை இலக்கணத்திலும், இலக்கியத்திலும் ஆர்வம் கொள்ள வைத்து, கவிதைகள் புனைய வைத்தால் அதுவே இந்நூலின் வெற்றி என்று கருதுவேன்.

============== 

முக்கியமான சில பிழைதிருத்தங்கள் 
-இல் உள்ளன. 

கூடிய விரைவில் நூலில் இடம்பெற முடியாத சில தகவல்களையும் இங்கே அவ்வப்போது எழுத எண்ணியிருக்கிறேன். 

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

நூல் விவரங்கள்


LKM Publication
10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.
கவிதை இயற்றிக் கலக்கு 
பக்கங்கள்: 384 விலை: Rs.180.00


திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கவிதை இயற்றிக் கலக்கு - 8

பிழை திருத்தம்

” கவிதை இயற்றிக் கலக்கு” என்ற நூலைப் பற்றிய தகவல்கள்

கவிதை இயற்றிக் கலக்கு - 5 

என்ற பதிவில் உள்ளன. 

அந்நூலின் முன்னுரையில் சொன்னபடி, அந்நூலில் உள்ள ( நான் இதுவரை பார்த்த ) சில முக்கியமான பிழைகளின் திருத்தங்களை மட்டும் இங்கிடுகிறேன். ‘பிழை’ யும், ‘திருத்தம்’ என்று இரண்டையும் இடாமல், சரியான சொற்றொடரை மட்டும் இடுகிறேன்.

பக்கம்        வரி /இடம்/பகுதி                                             திருத்தம்

50                  10                                                  றொருத்தி

53                  பயிற்சி 8.2 அ)                          எரிபுகு மகளி ரேய்க்கும்

57             கீழிருந்து 8                                   [ சூடிய + அரசரை என்பது வகர ....]

82            அளபெடை பகுதி            கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

92             15.3                                       விட்டுப் போன மூன்றாம் அடி :
                                                                யானும் நீயும் எவ்வழி யறிதும்

101            17.7            ....கட்டளை அடிகளாய்ப்  பல வஞ்சி விருத்தங்கள்  அமையும்

121            7                                             இட்டலி எண்ணெய்நற்

124           23.3            ஓசைவிந்து ... ( பட்டினத்தார் )

129        24.1.2 , ஐந்தடி வெண்பா                  செருவென்ற

133         24.3.1                                 கெட்டாலும் மேன்மக்களே மேன்மக் களேசங்கு

134           கடைசி                                 கடைநோக்கிற்

149            தலைப்பு                                27. கட்டளைக் கலித்துறை

152          பலபட்டடைச் சொ. பாடல்       பெருவா    ( மூன்றாம் அடி முதல் சீர்)

164         28.5                               அடி = மா + நான்கு விளம் + காய்

173    * சிறிது வேறுபட்ட வாய்பாடு
                                    காய், காய், காய், காய்
                                    காய், மா, மா
202                4                                            .....கொலைசெய்த மதர்வேர்கண்

231             கடைசியில்                               [சேர்க்க வேண்டியவை :]
                                                                   வஞ்சிப்பா ( 32), கலிப்பா ( 33-35 ) 

260          40.4.1 கம்பன் பாடல்              மிளையானொடு .... ( இரண்டாம் அடியில்)

265           சிலம்பு,கந்துக வரி            வாய்பாட்டில் ஒரு தேமா(3) 
                                                                   குறைகிறது.

268           42.5, 3-ஆம் காட்டு,                  செருவிளை 

270             42.3   முதல் அடி                   ..... உண்மைஎ   னும்போதே                            

285             பயிற்சி எண் 38.2                                44.2   என்று இருக்கவேண்டும்.

295              பயிற்சி 45.6, முதல் அடி                             பரவை

318              கீழிருந்து 12                       என்பதை 25-26 இல் பார்க்கலாம்.

        

342            கீழிருந்து 8                                   விளங்காய்ச் சீர்கள் வரும்.

351              கீழிருந்து 4                                    வள்ளி கணவன்

355            கடைசிப் பாடல்          சூழ்ந்தது பகைப்படை சூழ்ந்தது சூழ்ந்ததென்று
                                                 தொடர்மதில் காக்கநொச்சி சூடினார் சூடினார் --ஆடி
                                                       வீழ்ந்திடப்   பகையின்மேல் .....

362            6.1                                     செயற்/பா/ல தோ/ரு மற/னே யொரு/வற்
                                                         குயற்/பா/ல/ தோ/ரும்/ பழி.

364            6.6                         11 21 22 121

 ============
அன்பர்கள் நூலில் வேறு பிழைகள் பார்த்தால், கருத்துரைகளின் மூலம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அவற்றை இங்கே சேர்த்துவிடுவேன்.
நூலில் விளங்காதவற்றையும், மற்ற யாப்பிலக்கணக் கேள்விகளையும் இங்கே கேட்கலாம்.  தெரிந்தால் தொடரும் பதிவுகளில் விடை சொல்கிறேன். நேரம் கிட்டினால், நூலில் இடாத சில பகுதிகளையும் இங்கே இட முயல்வேன்.

தொடர்புள்ள பதிவுகள்:
கவிதை இயற்றிக் கலக்கு!

சனி, 30 ஜூன், 2012

கவிதை இயற்றிக் கலக்கு -7

கவிதை இயற்றிக் கலக்கு : ஒரு மதிப்புரை

கவிமாமணி குமரிச்செழியன்

 “கவிதை இயற்றிக் கலக்கு” என்ற யாப்பிலக்கண நூலைப் பற்றிய
சில விவரங்கள்

க.இ.க -5   -இலும்

அதைப் பற்றி “அமுதசுரபி”யில் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது

 க.இ.க -6  -இலும் உள்ளன.

நூல் வெளியீட்டு விழா நடந்ததும், எனக்குப் பாரதி கலைக் கழகத் தலைவர் கவிமாமணி குமரிச் செழியன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். என் நூலை மிக ஆழமாகப் படித்து எழுதிய ஒரு மதிப்புரையாக அது விளங்குகிறது என்பதால், அந்தக் கடிதத்தை தட்டச்சுச் செய்து, இங்கு வெளியிடுவதில் மகிழ்கிறேன். குமரிச்செழியன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கடிதத்தை எனக்கு அனுப்பின நண்பர் வேதத்திற்கும் என் நன்றி.
==========


கவிமாமணி குமரிச்செழியன்                             
                                                        
தலைவர், பாரதி கலைக் கழகம், சென்னை                            
                               
           
அன்புள்ள நண்பர் கவிஞர் டாக்டர் பசுபதி அவர்கட்கு,
வணக்கம். வாழ்த்துகள்.

தாங்கள் எழுதியுள்ள “ கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் கவிதை இலக்கண நூல் பாரதி கலைக் கழகத்தின் சார்பில் 27.03.2011 அன்று வெளியிடப் பெற்றது. விழா மிகச் சிறப்பாக நடந்தது. டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் நூலின் ஒவ்வொரு எழுத்தையும் படித்து மிகச் சிறந்த ஓர் ஆய்வினை வழங்கி நூலுக்குப் பெருமை சேர்த்தார். நூலுள் மிளிரும் சில நுட்பங்களை அவர் எடுத்துக் காட்டியது அருமை. தொடர்ந்து புலவர் வெற்றியழகன், சந்தக் கவிமாமணி தமிழழகன், கவிமாமணி இலந்தை இராமசாமி ஆகியோர் நூலின் நுட்பங்களை எடுத்துக் காட்டி அரங்கை ஆட்சி செய்தனர்.

கவிஞர் வேதம் அவர்கள் தனது சொந்த நூலைப் போல தனிக்கவனம் செலுத்தி மிகச்சிறப்பாக பெருமுயற்சியில் வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவருடைய உழைப்பு மிகப்பெரிது. கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசிகள் வாயிலாகவும் குறிப்புகளை அனுப்பி, நூலை அனுப்பி உதவி மிகப் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். அவருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் உரியன.

L.K.M. பப்ளிகேஷன் அந் நூலை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துத் தெளிவாகவும் அழகாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

நூல் எழுத்தில் தொடங்கி அசை, சீர், தளை, அடி, தொடை என நடந்து கவிதை நலம் தோயப் பாவகைகளில் தொடர்ந்து விரிவது அருமை. கவிதை இலக்கணம் பாடத்தில் தொடங்கி மாடத்தில் நிறைகிறது. ஓடத்தில் மிதந்தாலும் கரைசேர்வதே நோக்கம். அதுபோல பாடத்தில் தொடங்கினாலும் நல்ல மரபுக் கவிஞர்களை உருவாக்க வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது. உணவுக்கு மீனே தேவை எனினும் தூண்டிலிட்டு மீனைப் பிடித்து உணவாக்கிக் கொள்ளக் கற்றுக் கொடுக்கும் நோக்கம் பளிச்சிடுகிறது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலன்றோ சிறப்பு. அஃது இந்நூலில் இழையோடுகிறது.

நேரசை நிரையசை என அலகிடுதலில் தொடங்கி வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என விரிகிறது. ஒவ்வொரு பாவினமும் துறை, தாழிசை, விருத்தம் என மேலும் விரிகிறது. மரபுப் பாவகைகள் இலக்கணக் கடலில் மூழ்கியெடுத்த முத்துப்போல மின்னுகின்றன.

இந்நூலூள் பல நுட்பங்கள் செறிந்து கிடக்கின்றன. எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமெனில், “ சொற்புணர்ச்சிக்குப் பின்னர்தான் வெண்பா இலக்கணம் சரியா என்று பார்க்கவேண்டும். இதை எல்லா மரபுப் பாக்களுக்கும் உரிய பொது விதியாகவே கொள்ளலாம், “ ( ப.79) என்பது மிகச் சிறப்பு.

மருட்பாவும் விளக்கப் பட்டிருப்பது மிக அருமை.

மலர்கள் தோறும் அமர்ந்து மதுவை நுகர்ந்து தன்மயமாக்கிக் கொண்டு மருத்துவக் குணமுள்ள தித்திக்கும் தேனை வழங்கும் தேனீ போலத் தமிழ்க் கவிதைக் கடலில் மூழ்கித் திளைத்துச் சிறந்த பாடல்களைத் தேர்ந்து எடுத்துக் காட்டுகளாக வழங்கியிருக்கும் நுட்பம் தங்களை ஒரு ‘செந்தமிழ்த் தேனீ’ என அடையாளம் காட்டுகிறது.

யாப்பருங்கல விருத்தி கூட எடுத்துக் காட்டுகளுக்குப் பாடல்கள் கிடைக்காத நிலையில் பாடல்கள் ஆசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டதாக அமைந்துள்ளது. ஆனால் இந்நூலுள் அனைத்து வகைப் பாக்களுக்கும் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுகள் வழங்கி இருப்பது அருமை. அது புலமையின் வெளிப்பாடு.

பரிமேலழகர் திருக்குறளை மாணவர்களுக்குப் பாடம் நடத்தி, மாணவர்களுடைய வினாக்களுக்கு விடையளித்துப் பெற்ற அனுபவத்தில் மலர்ந்த திருக்குறள் உரை இன்று அனைத்துப் பிற்கால உரைகளுக்கும் அடிப்படையாக அமைந்து மிளிர்வது போல, மாணவர்களுக்கு இணையத்தின் வழி நடத்திய பாட அனுபவங்கள் வாயிலாக மலர்ந்துள்ள தங்களுடைய “கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் நூலும் ஒளிரும் என்பது உறுதி.

முதற்பகுதி பழைமையில் தொடரும் இலக்கணத்தை உணர்த்த இரண்டாம் பகுதி அண்மைக் கால வளர்ச்சியின் அடையாளங்களாக அமைந்திருப்பது அனுபவத்தின் சுவடுகள். சந்தப்பா வகைகள், கும்மி, சிந்து, கண்ணி, ஆனந்தக் களிப்பு, இசைப்பாடல் என அனைத்தையும் அலசியிருப்பது மிகச் சிறப்பு. இன்றைய நிலையில் அமைந்துள்ள முழுமை வடிவம் என்று கூடச் சொல்லலாம். இவை பழைய இலக்கண அடிப்படையில் அமைந்திருந்தாலும், அவற்றின் உயிரோட்டமாகத் திகழும் இசைக் குறிப்புகளுடன் விளக்கியிருப்பது தான் தங்களுடைய இசைப் புலமைக்கு மற்றொரு சான்று.

லிமெரிக் என்னும் அண்மைக் காலப் பாடல் வகையையும் எடுத்துக் காட்டி அதனைக் குறும்பா என எடுத்துக் காட்டி இலக்கணமும் தந்திருப்பது நிகழ்காலக் கட்டுக் கோப்பு. ( பக். 239) .

பரணி இலக்கியங்கள் தாழிசையில் அமைந்திருக்கும். அதனை இனம் காட்டும் வகையில் பரணித் தாழிசை ( பக். 316) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் “குறள் வெண்செந்துறையே பிற்காலத்தில் சிந்துவாக வளர்ந்தது/இன்னும் வளரும் என்று கூடச் சொல்ல்லாம் “ ( 316) என்று புதிய நுட்பம் ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.

வெண்பாக்களில் விளங்காய்ச் சீர்களுக்குப் பதிலாக விளாங்காய்ச் சீர்கள் இடம்பெற்றால் செப்பலோசை சிதைந்து சிறப்பிழக்கும் என்பதனால் விளாங்காய்ச் சீர்களைப் பொதுவில் வெண்பாவில் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் வகையுளியைப் பயன்படுத்தலாம் ( பக்.72) என்பன மிகமிக நுட்பமான செய்திகள். சவலை வெண்பாவையும் சுட்டத் தவறவில்லை. ( பக். 133)

சந்த மாத்திரையை அடிப்படையாக்க் கொண்டு அசைச் சந்த விருத்தங்கள் நடைபோடுவது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது அருமை. ( பக். 326). வண்ணப் பாடல்களில் அவை பயின்று வருதலும் ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

இப்படி எத்தனையோ புதுமைகளும் விளக்கங்களும் எடுத்துக் காட்டுகளும் அமைந்த அற்புதமான புதிய வரவு “கவிதை இயற்றிக் கலக்கு”. எல்லாரும் படித்துத் தெளியவும், தெளிந்ததை எழுத்தில் பிழியவும் எளிமையாக அமைந்த இலக்கண நூல் என்பது உறுதி.

சிந்து பற்றிய ஆய்வில் ‘மாதமாய்க் குயவனை’ என்றிருப்பதை ‘மாதம் குயவனை’ என்றிருந்தால் சிறப்பு என்னும் ஆய்வு அருமை ( 354 ).

காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, இலாவணி, கீர்த்தனை போன்றவற்றை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அலகிடுதல்: சில நுண்மைகள் என்பதைச் சில நுட்பங்கள் என ( பக். 81) இருந்தால் இனிமை தோன்றும் எனத் தெரிகிறது.

92-ஆம் பக்கத்தில் நேரிசை ஆசிரியப்பாவுக்கான எடுத்துக் காட்டான “ யாயும் ஞாயும் ….தாம் கலந்தனவே” என்னும் குறுந்தொகைப் பாடலில் மூன்றாம் அடியான “ யானும் நீயும் எவ்வழி, அறிதும்” என்னும் ஓரடி முழுமையாக விடுபட்டுள்ளதை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

சவலை வெண்பாவைப் பற்றிச் சொல்லும்போது இருகுறள் வெண்பாக்களைச் சேர்த்தால் 2-ஆம் அடியின் மூன்றாம் சீர் நாள், மலர், காசு, பிறப்பில் அல்லவா அமையும்? அதனை இன்னும் சற்று தெளிவுபடுத்தினால் நலமாக இருக்கும் ( பக். 133).

ஆங்காங்கு சில எழுத்துப் பிழைகள் தலை காட்டுகின்றன. அவை கால நெருக்கடியைக் காட்டுகின்றன எனலாம்.

அற்புதமான அரியதொரு நூலைத் தந்துள்ள நண்பர் பசுபதி அவர்கட்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். அதனை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ள கவியோகி வேதம் அவர்கட்கு மனப்பூர்வமான நன்றிகள்.

அன்புடன்
குமரிச்செழியன்
                         
 தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

வெள்ளி, 6 மே, 2011

கவிதை இயற்றிக் கலக்கு - 6

’ கவிதை இயற்றிக் கலக்கு!’ : சில மதிப்புரைகள்:




1) ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஏப்ரல் 2011 ‘அமுதசுரபி’ இதழில் எழுதிய நூல் விமரிசனம்:



2)   கவிமாமணி இலந்தை சு. இராமசாமியின் அணிந்துரையிலிருந்து சில பகுதிகள் :

. . . பேராசிரியர் பசுபதி ”கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் தலைப்பில் பாடம் நடத்தி மாணவர்கள் தெளிவாய் அறிந்து கொண்டு கவிதைகள் எழுதி, பாடங்களின் செழுமையையும் பாடம் நடத்தியவரின் திறமையையும் நிரூபித்திருக்கிறார்கள். அவர் நடத்திய பாடங்கள், அதன் பின் பலத்த ஆராய்ச்சியின் விளைவாக அவர் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுதியாக இந்நூல் வெளிவருகிறது. நானறிந்த வரையில் இது ஆறாண்டு கால உழைப்பின் தொகுப்பு . . . . கவிதை இலக்கணம் பற்றி என்னென்ன நூல்களெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து தனது ஆய்வின் பயனாகக் காலப்போக்கில் நிகழ்ந்துள்ள மாறுபாடுகளுக்கேற்ப யாப்பிலக்கண ஆய்வு நூலாக இதை அளித்திருப்பதுதான் இதன் சிறப்பு. . . . . பசுபதி அவர்கள் பேராசிரியராக இருக்கிற காரணத்தால் இதைப் பயில்வோருக்கு என்னென்ன ஐயங்கள் வரலாம் என்பதை முன் கூட்டியே ஆராய்ந்து அவ்வையங்களைத் தானே எழுப்பி விளக்கம் அளித்துவிடுகிறார். . . . அசை விருத்தங்கள், சந்த விருத்தங்கள், வண்ணம் ஆகியவற்றின் வேறுபாடுகளை இவ்வளவு விளக்கமாக நான் வேறு எந்த நூலிலும் கண்டதில்லை. அவற்றைப் பற்றிய எல்லா நூல்களையும் அலசி ஆராய்ந்து அவற்றிற்கான சரியான எடுத்துக்காட்டுகளுடன் அவர் விளக்கியிருப்பது பாராட்டிற்குரியது. . . இந்நூல் தமிழ் பேசும் இடங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒன்று.

3) பேராசிரியர் வே.ச. அனந்தநாராயணனின் நட்புரையிலிருந்து சில பகுதிகள்:

. . . அடிப்படைத் தமிழறிவுடன் முறையாகக் கவிதை எழுதுவதில் ஆர்வங் கொண்டவர்களோடு தோழமை கொண்டாடி அவர்கள் உள்ளப் பாங்கிற்கேற்பத் தற்கால அணுகு முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட இந்நூல் இவ்வகையில் ஒரு திசை திருப்பம் என்று கூறலாம். . . ஒரு நூலுக்குப் பெருமை தருவது அதன் கருப்பொருள் மட்டுமன்றி அதற்கான உண்மையானதும் தெளிவானதுமான விளக்கத்தைக் கூறும் நூலாசிரியனின் திறனும் ஆகும். பல்கலைக் கழக ஆசிரியராகப் பணியாற்றிய தமது அனுபவத்தின் முழுப்பயனையும் இந்த நூலில் பசுபதி தர முயன்றிருக்கிறார். அதன் விளைவாக, நூலாசிரியரே மாணவனாக மாறிக் கற்போரின் உள்ளத்தை அறிந்து எழுதும் அரிய நிகழ்ச்சியை நாம் நூலின் எல்லாப் பகுதிகளிலும் தெளிவாகக் காண்கிறோம். . . . நூலின் பிற்பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ள சந்தப்பாக்கள், வண்ணப் பாக்கள் பற்றிய இலக்கண விளக்கம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்த ஒன்று. இயற்றமிழை இசை, நாடகத் தமிழோடு இணைப்பது எழுத்துச் சேர்க்கைகளின் காலஅளவு ஆகும். குரு, லகு என்னும் கால அளவு கொண்ட குறிப்புகள் கொண்ட இப்பாவடிவங்கள் பற்றி எழுதப்பட்டுள்ள பண்டைய நூல்களைப் போல அன்றி, பசுபதி தமக்கே உரிய எளிய, ஆயின் கருத்துச் செறிந்த நடையில் தமது விளக்கங்களை அமைத்த விதம் மிகவும் அருமையானது. . . மற்ற யாப்பிலக்கண நூல்களில் காண இயலாத இந்தப் பயிற்சிப் பகுதியை இந்த நூலின் மிகச் சிறந்த தகுதிகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். தரப்பட்டுள்ள பயிற்சிகளின் பரப்பும் ஆழமும் அவற்றைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் தீவிரத்தைக் காட்டுகின்றன. . . . இறுதியாக, இலக்கண நூல்கள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றது பேராசிரியர் பசுபதியின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’. யாப்பிலக்கணத்தை எளிதில் படித்துத் தேர்ச்சியடைந்து தரமான கவிதைகள் படைக்க விரும்பும் யாவருக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.


======
கவிதை இயற்றிக் கலக்கு 
பக்கங்கள்: 384 விலை: Rs.180.00


LKM Publication

10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.

=====
 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

திங்கள், 21 மார்ச், 2011

கவிதை இயற்றிக் கலக்கு - 5

'கவிதை இயற்றிக் கலக்கு!’ நூல் வெளியீட்டு விழா : 





அன்றெடுக்கப் பட்ட சில படங்கள் :

படத் தொகுப்பு-1

படத் தொகுப்பு-2

விழாவுக்கு வந்தவர் ஒருவரின் விமரிசனம்
=============
                             



பொருளடக்கம்

பகுதி 1
========
1. அறிமுகம்
2. கவிதை உறுப்புகள்
3. எழுத்துகள்
குறில், நெடில், ஒற்று, மாத்திரை
4. நேரசை
5. நிரையசை
6. பாடலை அலகிடுதல்
7. சீர்கள்
ஓரசை, ஈரசை, மூவசை, நான்கசைச் சீர்கள்,
8. தளை, அடி, ஓசை
9. தொடை -1: மோனை
10. தொடை -2: எதுகை
வருக்க, இன, உயிர், நெடில், இரண்டடி எதுகைகள்;
இடையெட்டெதுகை, மூன்றாம் எழுத்தொன்றெதுகை,
வழியெதுகை, ஆசிடை இட்ட எதுகை, இயைபு.
11. குறள் வெண்பா : முதலடி
12. வெண்பாவின் ஈற்றடி
13. அலகிடுதல் : சில நுண்மைகள்
குற்றியலிகரம், அளபெடை, ஆய்தம். ஐகாரக் குறுக்கம்
ஒற்று நீக்கி அலகிடல்.
14. குறள் வெண்செந்துறை
15. ஆசிரியப்பா
நிலை மண்டில ஆசிரியப்பா, ( தனிச்சொல் பெற்றுவந்த ) நிலை மண்டில ஆசிரியம். நேரிசை ஆசிரியப்பா, (அடிக்குள் எதுகை பெற்று வரும் ) ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா , அடிமறி மண்டில ஆசிரியப்பா
16. வஞ்சித் துறை
வஞ்சித் தாழிசை
17. வஞ்சி விருத்தம்
18. கலிவிருத்தம்
19. தரவு கொச்சகக் கலிப்பா
20. ஆசிரியத் தாழிசை
21. கலித்தாழிசை
22. வெண்பா - 1 : குறள், சிந்தியல்
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா (நேரிசை, இன்னிசை )
23. வெண்பா - 2: அளவியல்
நேரிசை, இன்னிசை, முடுகு, இருகுறள் நேரிசை,
ஆசிடை நேரிசை வெண்பாக்கள்.
24. வெண்பா – 3
பஃறொடை வெண்பா(நேரிசை, இன்னிசை), கலிவெண்பா (இன்னிசை, நேரிசை ), சவலை வெண்பா, மருட்பா, வெண்கலிப்பா.
25. கலித்துறை - 1
கலிமண்டிலத் துறை,
26. கலித்துறை - 2
வெளிவிருத்தம்,
27. கட்டளைக் கலித்துறை
விதிகள், நேரசைக் கட்டளைக் கலித்துறை,
நிரையசைக் கட்டளைக் கலித்துறை, கட்டளைக்
கலித்துறையில் வகையுளி
28. அறுசீர் விருத்தம்
வெண்டளை அறுசீர்
29. எழுசீர் விருத்தம்
30. எண்சீர் விருத்தம்
31. கட்டளைக் கலிப்பா
32. வஞ்சிப் பா
33. கலிப்பா -1
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
34. கலிப்பா -2
தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா,
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்
கலிப்பா.
35. கலிப்பா -3
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, வெண்கலிப்பா,
உறழ்கலிப்பா .
36. மற்ற சில பாவினங்கள்
பாக்கள், பாவகைகள், பாவினங்கள், குறள் தாழிசை (குறட்டாழிசை), வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை,
வெண்டுறை, ஆசிரியத் துறை, மேல் வைப்பு,
குறும்பா

பகுதி 2
========

37. சந்தப் பாக்கள்: இலக்கணம்
38. சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம்
39. சந்தக் கலிவிருத்தங்கள் -1
40. சந்தக் கலிவிருத்தங்கள் -2
41. சந்தக் கலித்தாழிசை
42. சந்தக் கலித்துறை
43. சந்த அறுசீர் விருத்தம்
44. சந்த எழுசீர் விருத்தம்
45. சந்த எண்சீர் விருத்தம்
46. விருத்தங்களில் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள்
47. பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு சீர் விருத்தங்கள்
48. பரணித் தாழிசை
49. வண்ணப் பாடல்கள் – 1
சந்தங்கள், தொடர் சந்தங்கள், சந்தங்களும், தாள ஜாதிகளும்
50. வண்ணப் பாடல்கள் – 2
வண்ண வஞ்சித் துறை, வண்ண வஞ்சி விருத்தம், வண்ணக் கலி விருத்தம், வண்ணத் தரவு கொச்சகம், வண்ணக் கலிநிலைத் துறை, அறுசீர் வண்ண விருத்தம் .
51. வண்ணப் பாடல்கள் – 3
7 – 26 சீரடி வண்ண விருத்தங்கள்
52. சிந்துகள்- 1
53. கும்மி
இயற்கும்மி, ஒயிற்கும்மி, ஓரடிக் கும்மி .
54. சிந்துகள் -2
சமனிலைச் சிந்து, வியனிலைச் சிந்து.
55. கிளிக்கண்ணி
56. சிந்துகள் – 3
ஆனந்தக் களிப்பு, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, இலாவணி
57. இசைப்பாடல்
58. முடிவுரை

பின்னிணைப்பு :
பயிற்சிகளிலுள்ள சில வினாக்களுக்குரிய விடைகள்

==================

நூல் கிடைக்குமிடம்:

LKM Publication
10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017

தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.
கவிதை இயற்றிக் கலக்கு 
பக்கங்கள்: 384 விலை: Rs.180.00



தொடர்புள்ள பதிவுகள்:

கவிதை இயற்றிக் கலக்கு!

வெள்ளி, 8 அக்டோபர், 2010

கவிதை இயற்றிக் கலக்கு! - 4

கவிதை இயற்றிக் கலக்கு! : 45 -- 51




[ 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி் நான் வலையில் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது ]


நூல் விவரத்தை

கவிதை இயற்றிக் கலக்கு -5     

என்ற சுட்டியில் படிக்கலாம்.

 45. வஞ்சிப் பா 

46. கலிப்பா -1


47. கலிப்பா - 2


48. கலிப்பா -3


49. வண்ணப் பாடல்கள் - 1
( " கலப்புச் சந்தத்திற்கு ஒரு காட்டு" ; (திஸ்ரம்+சதுரஸ்ரம்+கண்டம்) என்ற அமைப்பு.
'தத்த தானா தனாதன' என்று திருத்திக் கொள்ளவும் )


50. வண்ணப் பாடல்கள் - 2


51. வண்ணப் பாடல்கள் - 3


தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

வியாழன், 7 அக்டோபர், 2010

கவிதை இயற்றிக் கலக்கு! - 3

கவிதை இயற்றிக் கலக்கு! : 33 -- 44

[ 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி வலையில் நான்  எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது.  ]


நூல் விவரத்தை

கவிதை இயற்றிக் கலக்கு -5 

என்ற சுட்டியில் பார்க்கலாம்.





33. கட்டளைக் கலித்துறை -1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலித்துறை என்ற பாவினத்தை ஆராய்கிறது. முக்கியமாக, கட்டளைக் கலித்துறையின் விதிகளையும், நேரசையிலும், நிரையசையிலும் தொடங்கும் பல காட்டுகளையும் வழங்குகிறது.

34. கட்டளைக் கலித்துறை - 2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலித்துறை என்ற பாவினத்தை மேலும் ஆராய்கிறது. கட்டளைக் கலித்துறையில் வகையுளி, சந்தம் என்ற இரு பகுதிகளையும், பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.

35. அறுசீர் விருத்தம் - 1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி அறுசீர் விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. அறுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, கட்டளை அடிகள், வெண்டளை பயின்றவை போன்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.

36. அறுசீர் விருத்தம் -2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி சந்த அறுசீர் விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில சந்த அறுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைகள், சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாகப் பார்த்து, சில பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.

37. எழுசீர் விருத்தம் -1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எழுசீர் ஆசிரிய விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படும் சில எழுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடுகள், வெண்டளை பயின்றவை என்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

38. எழுசீர் விருத்தம் -2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எழுசீரடிச் சந்த விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைகள், சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாக விளக்கி, பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது

39. எண்சீர் விருத்தம் -1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எண்சீர் ஆசிரிய விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படும் சில எண்சீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடுகள், வெண்டளை பயின்றவை என்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

40. எண்சீர் விருத்தம் - 2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எண்சீர்ச் சந்த விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாக விளக்கி, பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

41. கட்டளைக் கலிப்பா
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலிப்பா என்ற பாவினத்தின் இலக்கணத்தை ஆராய்கிறது. இதற்கும் எண்சீர் விருத்தத்திற்கும், கலி விருத்தத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கி, முக்கியமான சில எடுத்துக் காட்டுகளையும் வழங்குகிறது.

42. விருத்தங்களில் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள் கொண்ட விருத்தங்களின் இலக்கணத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளின் காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

43. பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு சீர் விருத்தங்கள்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி பன்னிரண்டு, பதினான்கு, பதினாறு சீர்கள் கொண்ட விருத்தங்களின் இலக்கணத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளின் காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

44. மற்ற சில பாவினங்கள்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி குறட்டாழிசை, வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை, வெண்டுறை, ஆசிரியத்துறை, மேல்வைப்பு என்ற பாவினங்களின் இலக்கணங்களை ஆராய்கிறது. பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.

(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

புதன், 6 அக்டோபர், 2010

கவிதை இயற்றிக் கலக்கு! - 2

கவிதை இயற்றிக் கலக்கு! : 17 -- 32





[ 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி இணையத்தில் பல ஆண்டுகளாக நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது நூலாகவும் வந்துள்ளது
]


நூல் விவரத்தை 

கவிதை இயற்றிக் கலக்கு -5    

என்ற சுட்டியில் படிக்கலாம்.


17.வஞ்சி விருத்தம்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வஞ்சி விருத்தம் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணங்களும், எடுத்துக் காட்டுகளும் உள்ளன.

18. கலிவிருத்தம்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் கலிவிருத்தம் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

19. தரவு கொச்சகக் கலிப்பா
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் தரவு கொச்சகக் கலிப்பா என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

20. பரணித் தாழிசை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் பரணித் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன..

21. ஆசிரியத் தாழிசை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ஆசிரியத் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

22. கலித்தாழிசை
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் கலித் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

23. சந்தப் பாக்கள்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் சந்தப் பாக்களின் இலக்கணமும், பல காட்டுகளும் உள்ளன.

24. சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் பதினாறு அடிப்படைச் சந்தங்களைப் பற்றிய மேலும் சில விளக்கங்களும் சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம் என்ற இரண்டு பாவினங்களின் பல காட்டுகளும் உள்ளன.

25. வெண்பா - 1 : குறள், சிந்தியல்
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வெண்பாவின் பொது இலக்கணமும், குறள், சிந்தியல் வெண்பாக்களின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

26. வெண்பா - 2:
அளவியல் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் அளவியல் வெண்பாவின் பொது இலக்கணமும், நேரிசை, இன்னிசை, முடுகு, இருகுறள், ஆசிடை வெண்பா வகைகளின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

27. வெண்பா - 3; ப·றொடை, கலி, சவலை, மருட்பா, வெண்கலிப்பா

கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ப·றொடை, கலி வெண்பாக்களின் பொது இலக்கணமும், மருட்பா, சவலை, வெண்கலிப்பா ஆகிய பாடல் வகைகளின் இலக்கணமும், காட்டுகளும், வெண்பாப் பயிற்சிகளும் உள்ளன.

28. சந்தக் கலிவிருத்தங்கள் -1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி சில சந்தக் கலிவிருத்தங்களை சீர் வாய்பாடு, சந்த மாத்திரைக் கணக்கு, சந்தக் குழிப்பு, எழுத்துக் கணக்கு என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. பத்து முதல் பதின்மூன்று எழுத்தடிகள் கொண்ட சில அளவியற் சந்தங்களின் காட்டுகளையும், பயிற்சிகளையும் விவரிக்கிறது இந்தப் பகுதி.

29. சந்தக் கலிவிருத்தங்கள் - 2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி மேலும் சில சந்தக் கலிவிருத்தங்களைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைக் கணக்கு, சந்தக் குழிப்பு, எழுத்துக் கணக்கு என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. மாத்திரைக் கணக்கு வரிசையின் அடிப்படையில், பதினாறு முதல் இருபத்திரண்டு மாத்திரையடிகள் கொண்ட சில சந்தங்களின் காட்டுகளை விவரித்து, பல பயிற்சிகளையும் தருகிறது.

30. கலித்துறை - 1
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைச் சீர் வாய்பாடு, கட்டளை அடிகள், வெண்டளை என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. பல பயிற்சிகளையும் தருகிறது..

31. கலித்துறை - 2
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைத் தொடர்ந்து ஆராய்கிறது. முக்கியமாக, கலிமண்டிலத் துறை, சந்தக் கலித்துறை இவற்றின் இலக்கணத்தைச் சில காட்டுகளின் மூலமாக அறிமுகப் படுத்தி, பல பயிற்சிகளையும் தருகிறது.

32. கலித்துறை - 3
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைத் தொடர்ந்து ஆராய்கிறது. முக்கியமாக, வெளிவிருத்தத்தின் இலக்கணத்தைச் சில காட்டுகளின் மூலமாக அறிமுகப் படுத்தி, பல பயிற்சிகளையும் தருகிறது.

(தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!