ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

'தேவன்' : நினைவுகள் - 2

வாழ்க்கை வரலாறு


’தேவன்’ --ஆர்.மகாதேவன் -- 1913-ஆம் ஆண்டில் செப்டம்பர் 8-ஆம் தேதியன்று திருவிடைமருதூரில் பிறந்தவர். அதே ஊரில் இருந்த திருவாவடுதுறை ஆதீனம் உயர்தரப் பள்ளியில் படித்தார். பள்ளியில் சாரணப் படையில் சேர்ந்திருந்தார். சாரணத் தலைவர் திரு. கோபாலசாமி ஐயங்கார் பல கதைகளைச் சொல்வார்; மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இதனால் கதை கட்டுவதில் ‘தேவ’னுக்கு ஓர் ஆர்வமும், சுவையும் தோன்றின.


பின்பு, ‘தேவன்’ கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அங்கே இருந்த திரு. எம்.ஆர். ராஜகோபால ஐயங்கார் என்ற ஆங்கில ஆசிரியர் மூலம் தேவனுக்கு இலக்கியத்தில் நாட்டமும், இலக்கியச் சிருஷ்டியில் ஈடுபாடும் ஏற்பட்டன. ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற பெயரில் அவர் ‘ஆனந்த விகட’னுக்கு அனுப்பிய கதை அப்போது பிரசுரமாயிற்று.

தனது 18-ஆம் வயதில், ஆத்தூர் உயர்தரக் கல்லூரியில் சுமார் மூன்று மாதம் ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த ஆண்டே பட்டமளிப்பு விழாவிற்குச் சென்னை வந்த ‘தேவன்’ ஆனந்த விகடன் காரியாலயத்திற்குச் சென்றார். இதோ, அவருடைய சொற்களிலேயே நடந்ததைப் பார்ப்போம்:

“ விளையாட்டாக நான் ஒரு கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பி, அதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று அசிரத்தையாக இருந்த சமயத்தில் ‘கல்கி’ அவர்களிடமிருந்து முதலில் கடிதம் வந்தது.

அன்புடையீர்!
உங்கள் கட்டுரை ‘மிஸ்டர் ராஜாமணி’யை ஆனந்த விகடனில் பிரசுரிக்க உத்தேசித்திருக்கிறோம்.உன்களுடைய கட்டுரையின் நடையும், போக்கும் விகடனுக்கு ஏற்றதாக இருக்கின்றன. சாதாரணமாகக் காணப்படும் இலக்கணப் பிழைகளை நீக்கி எழுதப் பயிலுவது தங்களுக்கு நலம்.
தங்கள்,
ரா.கிருஷ்ணமூர்த்தி


இதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஆனந்த விகடன் காரியாலயத்தில் ‘கல்கி’ என்பவர் எப்படி இருப்பார் என்று பார்க்கவே காரியாலயத்தினுள் நுழைந்தேன். பார்வைக்கு மிக எளிமையுடனும் பேச்சில் வெகு சௌஜன்யமாகவும் இருந்த கல்கியைக் கண்டு, “ இவரா இத்தனை அற்புதமாக எழுதுகிறார்!” என்று நான் ஆச்சரியப்பட்டது உண்மை. நான் அறிமுகம் செய்து கொண்டதும் என்னை உட்காரச் சொல்லி அவர் முதல் முதலாகக் கேட்ட கேள்வி எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

" கட்டுரை எழுதினீர்களே, அது நீங்கள்தான் எழுதினீர்களா? உங்கள் தகப்பனார் மற்றும் யாராவது உதவி செய்தார்களா? “ என்று அவர் கேட்டார்.

“நானேதான்!” என்று சற்றுக் கடுமையாகவே பதில் சொல்லியதும் அவர் சிரித்துக் கொண்டே, “ எதற்குக் கேட்கிறேன் என்றால், இந்த ஊரில் இருந்து கொண்டே எழுதலாமா என்பதற்குத்தான் ” என்றார். அதற்கு மேல் ஒரு நாள் அவர் கைப்பட எனக்கு ஒரு கார்டு வந்தது. நான் சற்றும் எதிபார்க்கவில்லை அதை. “ தங்களுக்கு விகடன் காரியாலயத்தில் சேர்ந்து வேலை செய்யச் சம்மதம் இருக்குமானால் புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு வரவேணுமாய்க் கோருகிறேன்” என்ற விஷயம் அதில் வந்தது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.

“ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். “

அதன்பின் ஒன்பது வருஷங்கள் ( 1933-42) கல்கியின் வலது கையாகப் பணியாற்றினார் தேவன். ஆரம்ப நாட்களில் ‘சரஸ்வதி காலண்டர்’ , ‘எங்கள் ஊர்ச்சந்தை’ முதலிய கதைகளை தேவன் எழுதியபோது, கல்கி அவரை மிகவும் பாராட்டி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

தன் அனுபவங்களைத் தேவன் ‘கல்கி என்னும் காந்த சக்தி’ என்ற கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்:

“ கல்கியிடம் என் பக்தி ஒரு புறம் இருக்க, ஒரு பயமும் உண்டு. ‘இத்தனை பெரிய எழுத்தாளரிடம் எப்படி நாம் எழுதுவதை வைப்பது?’ என்று நான் அஞ்சியிருக்கிறேன். ஒரு சமயம் இப்படித்தான் பயந்து கொண்டு, “எங்கள் ஊர்ச்செய்திகள்” என்று ஒரு கட்டுரையை வைத்துவிட்டு, கீழே அச்சாபீஸுக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டேன்.

சற்று நேரத்துக்கெல்லாம் கூப்பிட்டார். போனேன். என் கட்டுரையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, “இதை நீயா எழுதினே?” என்றார். “ஆமாம்!” என்று சொன்னேன். “நீ போகலாம்!” என்றார்.

சற்று நேரத்துக்கெல்லாம் ‘கல்கி’ ஒரு உபயகுசலோபரி எழுதிக் கொண்டிருந்தார். ‘ஷீட்’’ஷீட்டாக அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்தது. நான் படித்துப் பார்த்தேன்.”இந்த இதழில் ‘எங்கள் ஊர்ச்செய்திகள்’ என்றொரு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. நேயர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நான் அறிவேன். அதை எழுதியவர் இருபது வயது நிரம்பாத ஓர் இளைஞர் என்றால் எத்தனை ஆச்சரியப்படுவீர்கள் என்றும் நான் அறிவேன்....” இதைப் படித்தபோது --இன்றுபோலவே -- அன்றும் நான் கண்ணீரைக் கொட்டி விட்டேன்.எத்தனை பெரிய அறிமுகம்!”

இதோ, வேறொரு சமயம், ‘கல்கி’ தேவனைப் பற்றி 29.4.1934 விகடன் இதழில் எழுதியது:

“ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில் தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகி விட்டவர். அல்லது, அவருடைய மருமான் ‘மிஸ்டர் ராஜாமணி’ அவரை பிரசித்திபடுத்தி விட்டான் ...நமது நாட்டில் இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் இந்த ஆசாமி யார்? .. என்று எண்ணி வியப்படைந்தேன்... குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையுப் பற்றியும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர்தான் என்று தேவன் காட்டிக் கொண்டு வருகிறார்... ”

விகடனிலிருந்து கல்கி விலகியதும், தேவன் சுமார் ஓராண்டு காலம் உதவி ஆசிரியராய் இருந்து பின்னர் 1942 முதல் நிர்வாக ஆசிரியராகப் பணி புரிந்தார்.

த.நா.குமாரஸ்வாமி எழுதுகிறார் ( ‘உயர்ந்த மனிதர், விகடன் பொன்விழா மலர், 1980):

”கொள்கை வேற்றுமையால் கல்கி விகடனிலிருந்து விலகி விட்டார். வாசன் அவர்கள் இதனால் இடிந்து போகவில்லை. பத்திரிகையின் பெரும் பொறுப்பைத் தேவனிடம் முழு நம்பிக்கையுடன் ஒப்படைத்தார். பலர் அஞ்சினர். தேவன் என்ன சாமானியர், கல்கியைப் போல் ஒரு வார இதழை நடத்துவதற்கான ஆற்றலோ அனுபவமோ உள்ளவரோ என்று. 1942-ஆம் ஆண்டிலிருந்து 1957-இல் தம் உயிர் போகும் வரை விகடனை எவ்வளவு செம்மையாகத் தேவன் நடத்தினார் என்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் வெளிவந்த தீபாவளி மலரும், அவருடைய நவீனங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும் சான்று பகரும்.”

‘கல்கி’ தனிப் பத்திரிகை தொடங்கியபோது, தேவனும் விகடனை விட்டுவிட்டுக் கல்கியில் சேர்ந்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்வியைத் த.நா.குமாரஸ்வாமி தேவனிடம் கேட்டபோது, தேவனின் பதில் இதோ:

“இன்னும் அந்த மாமேதையிடம் எனக்கு நீங்காத பற்றுள்ளது. ஆனால் நான் இரண்டாம் நிலையிலேயே வாழ்நாளெல்லாம் எவ்வாறு இருப்பேன்..என் காலில் நிற்க வேண்டாமா? என் இலக்கியச் சாதனைக்கு ஏற்ற நிலைக்களனும் தனிச் சூழலும் வேண்டாமா? நான் அவருக்கு எவ்வகையிலும் துரோகம் செய்யவில்லை. எழுத்துத் துறையில் எனக்கிருந்த அச்சத்தைப் போக்கி, என்னை வளர்த்து உருவாக்கினவர் அவர். அவரை என்றும் மறவேன்.

விகடனில் 23 ஆண்டுக் காலம் பணி புரிந்த தேவன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.


துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான நகைச்சுவை நாவல்; இது சின்னத் திரையிலும் வந்தது. இவருடைய நாவல்களில் கோமதியின் காதலன் மட்டும் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய கோமதியின் காதலன், மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய பத்துப் படைப்புகள் மேடை நாடகங்களாகப் பல இடங்களில் நடிக்கப் பட்டன. அநேகமாக நாடக வசனங்களை அவரே எழுதினார்.மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் என்ற இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன.

ஐம்பதுகளில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதியது ’ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற கட்டுரைத் தொடர். தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நாவல், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

அண்மையில் அல்லையன்ஸ் பதிப்பகம் தேவனின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

தேவன், தமது 44-ஆவது வயதில், 1957 மே 5 ஆம் தேதி அன்று மறைந்தார்.

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நினைவு நாள், 2010

தேவன் நினைவுகள் -1

தேவன் படைப்புகள்

துப்பறியும் சாம்பு

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்:

தேவன் சீர்

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிமூன் றென்னும்
  ஆண்டுவந்த செப்டம்பர் எட்டாம் நாளில்
பாயுமது போலெழுத்தால் படிப்போர் தம்மைப்
  பரவசத்தில் தள்ளவென்றே சிரிப்பாம் தேனில்
தோய்த்தெடுத்துக் கதைபலவே சொல்ல வென்றே
  துறுதுறுக்கும் எழிலார்ந்த தோற்றம் கொண்டே
சேயெனவே திருவிடையான் மருதூர் தன்னில்
  திருவருளால் மகாதேவன் தோன்றி னாரே!

அம்பி,விச்சு, காயத்ரி, மயூரம்,கேட்டை
  ஆரெமென்றும் சிம்மமென்றும் தேவ னென்றும்
அம்புவியில் பேர்பலவும் பூண்டோ ராக
  அனுதினமும் நமைமகிழ்த்த எழுதித் தள்ளி
நம்மனத்தில் நீங்காத இடத்தில் வாழும்
  நற்றமிழர் மகாதேவன் நூற்றாண் டைநாம்
அம்மையப்பன் அருளாலே கொண்டாடும் வேளை
  அவர்புகழைப் பாடியின்பம் கொள்வோம் வாரீர்!

சிவ சூரியநாராயணன்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு - 4 : ராசரத்தினம் நாதசுரத்திலே ...

 ராசரத்தினம் நாதசுரத்திலே 
கொத்தமங்கலம் சுப்புஆகஸ்ட் 27. டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம். 

சென்னையில் 1953 சங்கீத ஸீஸன்.

புல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளைக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு. ‘ஆனந்த விகடனில்’ வழக்கமாக வரும் ஆடல் பாடல் பகுதியில் இப்படி ஒரு குறிப்புக் காணப்படுகிறது:

“அசாதாரணமான கற்பனையுடன் இன்ப நாதத்தைப் பொழிந்து ரஸிகர்களை மூன்று மணி நேரம், மந்திரத்தால் கட்டுண்ட சர்ப்பம் போல், மெய்ம்மறக்கச் செய்துவிட்டார் ஸ்ரீ ராஜரத்னம். இந்த சங்கீத விழாவுக்கே இந்தக் கச்சேரி ஒரு தனி சோபையை அளித்தது என்று கூடச் சொல்லலாம் .” திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வரக் கச்சேரியை ரேடியோவில் கேட்டுப் பரவசமடைந்த கொத்தமங்கலம் சுப்பு உடனே எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பிய  கவிதை இதோ:[நன்றி: ஆனந்த விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள் :

சீசன் 53 -1
சீசன் 53 -2
சீசன் 53 -3

கொத்தமங்கலம் சுப்பு

டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு - 3

மண்ணை நம்பி வாழ்கிறோம் 
கொத்தமங்கலம் சுப்பு
இந்தக் கவிதை 1954 -இல் பொங்கல் சமயத்தில் விகடனில்  வந்தது என்று நினைக்கிறேன்.
[நன்றி: ஆனந்த விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
கொத்தமங்கலம் சுப்பு

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு -2 : காந்தி மகான் கதை

[கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டு விழா 2010-ஆம் ஆண்டில்
பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது .
.அவர் நினைவில் சில மடல்கள். இது விகடனில் வந்த ஒரு கட்டுரை ]

காந்தி மகான் கதை

--இரா.நக்கீரன்

'முப்பக்கம் சூழ்ந்த கடல்
முத்திருக்கும் ஆழ்ந்த கடல்
இப்பக்கம் வந்தாலும்
இமயம் வடக்கினிலே
கட்டாத கோட்டையுண்டு
கடலும் மலைகாவல்
எட்டாது அசலானுக்
கிடங்கொடுக்கா திந்நாடு'


- என்று தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையிலிருந்து இந்திய விடுதலைக் காவியத்தின் நாயகனான காந்தி மகானின் கதை ஆரம்பமாகிறது. காந்தி மகான் பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்து போக வேண்டுமென்றபோது அவரது அன்னை, சீமைக்குப் போவதனால் உண்டாகும் கெடுதிகளைக் கூறி, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும் என்று மறுப்புத் தெரி வித்தபோது, காந்திஜி கீழ்க்கண்ட வாறு தம் அன்னைக்குச் சத்யப் பிரமாணம் செய்து தந்துவிட்டுப் பயணமானார்.

'அம்மா தாயே பெத்தவளே
நான் அப்படி மகனல்ல
அண்டமிடிஞ்சு விழுந்திட்டாலும்
ஆணைமீறுவேனோ?
கனவில்கூடக் கள்ளுக்குடியைக்
கருதிடவே மாட்டேன்
கஸ்தூரிபாயிதவிர ஒருத்தியைக்
கையால் தொடமாட்டேன்
மாமிசந்தின்னு முட்டை குடிக்க
வாய்திறக்க மாட்டேன்
மாதாவேயிது தவறுவதில்லை
மகாதேவன் சாட்சி'
இந்த வரிகளிலே காந்திஜியின் வருங்கால இலட்சியத்தின் சத்ய ஒளி பிரகாசிப்பதைப் பார்க்கி றோம்.

தென்னாப்பிரிக்காவிலே காந்தி மகானுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அநேகம். அவற்றில், நிறவெறி பிடித்த முரட்டு வெள்ளைக்காரன் அண்ணலைத் தனது பூட்ஸ் காலால் உதைத்ததும் ஒன்று. அந்தக் கொடுமையைக் கவிதை யிலே கவிஞர் வடித்துள்ளார்.


'கருப்புப் பூட்சால்
எட்டி உதைச்சான்
காந்தி மகாத்மாமேல்
கட்டின தலைப்பா
தட்டிவிட்டான்
காந்திமகாத்மா மேல்'


அப்போதும் அந்தக் கொடிய வன் மீது காந்தியண்ணலுக்குச் சினமேற்படவில்லை. மாறாக, பகைவனுக்கு அருளும் மேலான பண்பு தவழ்கிறது அவரது முகத்தில்.

'சாந்தம் பொங்கி
வழியுது ஐயா
காந்திமகானுக்கு
சனங்களைக் கண்டு
கருணை பெருகுது
காந்தி மகானுக்கு!'


இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் ஏற்பட்ட வகுப்பு வாதக் கலகத் தைப் பற்றிக் குறிப்பிடுகையில்...

'என்னத்துக்காக அடிச்சுக்கறான்
என்பது கூடத் தெரியாமல்
சின்னத்தனமான சண்டையிலே
செத்து விழுந்தது தேசச்சனம்'


- என்று மக்களின் அறியாமையை விளக்கிச் சாடியுள்ள போக்கானது, இன்றைய நிலையில் கூடப் பொருத் தமாகத்தானே இருக்கிறது?

நவகாளிக்குப் பயணமான காந்திஜியைப் பற்றிக் குறிப்பிடும் கவிதை வரிகள் இலக்கிய நயம் உடையவை.

'முள்ளும் மொரும்பும்
நிறைந்த வயல்
மொய்க்கும் கொசுக்கள்
நிறை காட்டில்
கல்லும் பயந்து நடுங் கிடவே
கடுமத வெறி
கொண்டவர் நாட்டில்
போதிமரத்து நிழல்வீற்ற
புத்தன் புறப்பட்டுப்
போனது போல்
ஆதியில் ராமச் சந்திரனும்
ஆரணியவாசம் போனது போல்
பாதுகைதன்னையும்
தான்கழட்டி
பரதன்கையில் கொடுத்துவிட்டு
மோதிக்கிழிக்கிற முள்காட்டில்
முன்னர் நடந்த கதை போலே
காந்தி மகானும் தன் செருப்பை
கழட்டித்தூர வைத்துவிட்டு
சாந்திவிளக்கும் திருவடியாம்
தாமரைப்பாதம் தடம்படவே' '


செல்கிறார் என்று படிக்கும்போது நமது மெய் சிலிர்க்கவில்லையா?

எல்லாவற்றுக்கும் சிகரமான தாக அமைந்திருப்பது காந்தி மகானின் துர்மரணம். புற்றிலிருந்து பாம்பானது பதுங்கி வந்து கடிப்ப தைப் போல், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த அண்ணலைக் கும்பிடுங் கரங்க ளால் கொன்று தீர்த்தானே கொடியவன். அவன் துப்பாக்கியி லிருந்து புறப்பட்ட குண்டுகள், அண்ணலை மட்டுமா துளைத்தன? இல்லவேயில்லை. எந்தச் சமுதா யத்தின் விடுதலைக்காகப் பாடு பட்டு, அல்லும் பகலும் தொண் டாற்றினாரோ அந்தத் தொண் டுக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்ட ஒவ்வொருவரது நெஞ்சையுமே அந்தக் குண்டுகள் 12துளைத்தன.

'வழியை அமைத்துக்
கொடுத்த மகான்
வந்த கடமை முடிந்ததென்றே
அழியும்உடம்பை அழித்துவிட்டே
ஆதிபரம்பொருள் ஆகிவிட்டார்'


- என்று கூறி காந்தி மகான் சரிதையை முடித்து வைத்துள்ளார் கவிஞர்.

காந்திமகானின் கதையைக் காவியமாக்கிய பெருமை, கவிஞர் சமுதாயத்தின் பெருமையாகும். அந்தப் பெருமைக்கு வித்திட்ட சிறப்பு, கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடையது.

வானமும் பூமியும் உள்ள மட்டும், வாரிதியாழிகள் உள்ள மட்டும், ஞானமும் நீதியும் உள்ள மட்டும், ஞாயந் தரையினில் உள்ள மட்டும்... காந்தி மகான் கதையும் சிரஞ்சீவித்துவம் பெற்றிருக்கும்.[நன்றி: ஆனந்த விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொ.சுப்பு: மற்ற பதிவுகள்

மகாத்மா காந்தி

சனி, 7 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு -1 : பல்கலைச் செல்வர்

பல்கலைச் செல்வர் - கொத்தமங்கலம் சுப்பு

கலைமாமணி விக்கிரமன்
"சுப்பு பிறவிக் கவிஞன். ரச பேதமும் ரசக் குறைவும் இல்லாத ஹாஸ்ய புருஷன். வாழ்க்கையை இன்பமும், ரசமும் ததும்ப சித்திரித்துக் காண்பிக்க வேண்டும் என்ற அவரோடு கூடப்பிறந்த ஆவல், அவரை இலக்கிய உலகத்திலிருந்து அறவே விலக்கிவிட முடியவில்லை. தான் வாழ்க்கையில் கண்ட காட்சிகளை அவ்வப்போது சிறுகதைச் சித்திரங்களாக வரைந்து வந்தார். இந்தச் சிறுகதைகளை விலைமதிக்க முடியாத மாணிக்கங்கள் என்று சொன்னாலும் என் ஆவல் தணியாது. நோபல் பரிசைப் போல் தமிழ்நாட்டில் பாரதியார் பெயரால் ஒரு பரிசு இருக்குமானால் அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்குக் கொடுப்பேன்'' என்று மூத்த எழுத்தாளர் அறிஞர் வ.ரா., கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "மஞ்சுவிரட்டு' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

""அவர் ஒரு கவிஞர், அவர் ஒரு கதாசிரியர், அவர் ஒரு இயக்குநர், அவர் ஒரு நடிகர்...அதற்கும் மேலாகச் சிறந்த மனிதர்'' என்று கவிஞர் வாலி தன் கவிமாலையில் கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டியுள்ளார்.

கொத்தமங்கலம் சுப்பு, மக்களிடையே புகழ் பெற்றதோ, நடிகர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என்ற வகையில்தான்.

ஆவுடையார்கோயிலுக்கு அருகேயுள்ள கன்னரியேந்தல் என்ற சிற்றூரில், மகாலிங்கம்-கங்கம்மாள் தம்பதிக்கு 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சுப்பிரமணியன். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார்.

அத்தை மகளை மணந்து அவர்கள் வாழ்ந்த கொத்தமங்கலத்துக்கு வந்து, தனவணிகர் ஒருவர் வீட்டில் கணக்கு எழுதும் பணியில் அமர்ந்தார்.

பள்ளத்தூரில் நாடகக் கம்பெனி ஒன்றில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு நாடகங்களில் நடித்து கதாநாயகனாகப் புகழ்பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, சீனுவின் பரிந்துரையால் சென்னைக்கு வந்தார். சிவனால் பாபநாசமும், ராமலிங்கம் பிள்ளையால் நாமக்கல்லும் புகழ்பெற்றது போல் சுப்புவால் "கொத்தமங்கலம்' பிரபலமானது.

சென்னையில் ஜெமினி நிறுவனம் அவர் ஆற்றலைக் கண்டுகொண்டது. தன் திறமையால் படிப்படியாகத் திரை உலகில் முன்னேறி பல துறைகளில் பிரபலமானார். செல்வமும் செல்வாக்கும் பெருகின. இயற்கையாகவே எழுத்துக் கலை அவருக்குக் கைவரப் பெற்றிருந்ததனால் காட்சிகளை அமைப்பதில் நயமிருக்கும். நகைச்சுவையும் அவருடனே ஒட்டியிருந்ததால், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் திறமை மிகுந்திருக்கும். கருத்தாழம் மிக்க காட்சிகளுக்கு வசனம் எழுதும்போது அவை நெஞ்சை அள்ளுவனவாக அமையும்.

அவர் திறமையை, கலைஞானத்தை உணர்ந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், சுப்புவுக்கு வாய்ப்புகள் பல அளித்தார். ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்கு அவருக்குக் கிடைத்தது. "மிஸ் மாலினி', "தாசி அபரஞ்சி', "கண்ணம்மா என் காதலி', "வள்ளியின் செல்வன்' ஆகிய படங்களில் இயக்குநராகப் பணியாற்றினார்.

தேசப்பற்று மிக்க அவர் எப்போதும் கதரே அணிவார். காந்திமகான் மீது பக்தியும் மரியாதையும் கொண்டிருந்ததால், காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் அமைத்தார். வில்லுப்பாட்டில் திறமைமிக்கவர் என்.எஸ்.கிருஷ்ணனும், சுப்பு ஆறுமுகமும். கொத்தமங்கலம் சுப்புவும் அந்த வரிசையில் சேர்ந்து புகழ் பெற்றவர்.

""சுப்புவின் "காந்திமகான் கதை' வில்லுப்பாட்டு தேசபக்தி உணர்வை நாட்டில் சிலமணி நேரங்களில் ஊட்டின'' என்று பிரபல தலைவர்களே ஒப்புக்கொள்வர்.

ஔவையார் கதை தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்ததுபோல் வேறு எந்தக் கதையும் கவரவில்லை. எஸ்.எஸ்.வாசன், ஔவையாராக நடிக்க கே.பி.சுந்தராம்பாளை ஒப்பந்தம் செய்து கொண்டார். டைரக்ஷன் பொறுப்பை எஸ்.எஸ்.வாசன் ஏற்றிருந்தாலும் கொத்தமங்கலம் சுப்புவின் வசனங்களும், யோசனைகளும்தான் படம் மகத்தான வெற்றிபெறக் காரணமாக அமைந்தன. படம் நூறு நாள்களுக்கு மேல் தமிழ் நாடெங்கும் வெற்றி நடைபோட்டது. படத்தின் வெற்றிக்குக் காரணம் சுப்புவாக இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் பத்திரிகையாளருக்கு அவர் அளித்த மிக அடக்கமான பேட்டி இன்றும் நினைவிருக்கிறது.

ஔவையார் திரைப்படக் கைவண்ணத்துக்குப் பிறகு சுப்புவின் எழுத்தாற்றல் "தில்லானா மோகனாம்பாள்' புதினத்தால் வெளிப்பட்டது. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாரந்தோறும் அந்தத் தொடரைப் படித்து மகிழ்ந்தனர். கதைக்கு "கோபுலு'வின் சித்திரங்கள் மேலும் பெருமை சேர்ந்தன. தில்லானா மோகனாம்பாள் திரைக் காப்பியமாகவும் புகழ்பெற்றது.

தில்லானா மோகனாம்பாளுக்குப் பிறகு அவர் பல புதினங்களை எழுதினார். சமூகக் கதை எழுதுவதில் புகழ்பெற்ற சுப்பு, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதியும் புகழ்பெற்றார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையரை மிகத் துணிவுடன் எதிர்த்த வீரர்களின் கதை தமிழ் நாடெங்கும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கிராமங்களில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் வரலாறு மக்களிடையே பரவக்காரணம், மக்களுக்குப் புரியும் மொழியில் "கும்மி' மெட்டில் வீரர்கள் வரலாறு அமைத்ததுதான். அவற்றை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. தமிழகத்தில் அப்பாடல்கள் பாடப்பட்டன. அவற்றுள் ஒன்று "கட்டபொம்முவின் கதை'.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பே அத்தகைய வீரனான கட்டபொம்மன் கதையை ஓலைச்சுவடியிலிருந்து எடுத்துத் தன் கை வண்ணத்துடன் வாரப் பதிப்பில் பாடல்களாக எழுதினார் கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ணத்துடன் கூடிய கட்டபொம்மன் கதையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மிகவும் பாராட்டினார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்று புத்தகம் எழுதி, கட்டபொம்மனை நாடறியச் செய்தார்.

சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, சிறு கிராமத்திலிருந்து பெரிய நகரமான சென்னைக்கு வந்த சுப்புவின் வளர்ச்சி, அவருடைய உழைப்பு, திறமை, அணுகுமுறை, மனித நேயம், எழுத்தாற்றல் என்றும் தமிழ்மக்களால் மறக்க முடியாதவை. கொத்தமங்கலம் சுப்பு இளங் கவிஞர்களை உற்சாகமூட்டுவதுடன், அவர்கள் அழைக்கும் கவியரங்கங்களில் கலந்துகொண்டு பாராட்டுவார். கவிஞர்களை அழைத்து விருந்துபசாரம் செய்து ஊக்கமூட்டுவார்.

காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் தயாரித்த சுப்பு, ராமாயணக் கதையையும் பாடி மகிழ்வித்தார். பாரதியார் கதையை "பாட்டிலே பாரதி' என்ற பெயரில் அரங்கேற்றினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இப்போது வழங்கப்படும் "கலைமாமணி' விருதுபோல், "கலாசிகாமணி' என்ற விருது பெற்றவர் சுப்பு.

சுப்பு எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். ஆனால், தன் குழந்தைகளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். எட்டமுடியாத புகழை கலைத்துறையில் அடைந்தார். ரசிகமணி டி.கே.சி., சுப்புவின் கிராமிய மொழிப் பாடல்களை மிகவும் ரசித்தவர். "மண்ணாங்கட்டி கவிஞர்' என்ற பட்டமளித்து மகிழ்ந்தவர். பொறியியல், வேளாண்துறை மேதை ஜி.டி. நாயுடு, சுப்புவின் சிறந்த நண்பர். ஜி.டி.நாயுடுவின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை சுப்பு புகழ்வார்.

பன்னிரண்டு புத்திரச் செல்வங்களுக்கு (இருவர் மறைந்தனர்) தந்தையாக இருந்து அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை எல்லாம் பொறுப்புடன் செய்து அவர்கள் ஒவ்வொருவரையும் கலை உணர்வுடன் வளர்த்து ஆளாக்கினார் சுப்பு.

தனக்கு வாழ்வளித்த எஸ்.எஸ்.வாசனின் புகைப்படத்தை தன் வீட்டின் முகப்பில் பெரிய அளவில் அலங்கரிக்கச் செய்து நாள்தோறும் மரியாதை செலுத்துவாராம். கொத்தமங்கலம் சுப்புவின் பல்கலைத் திறமையை நாடறியச் செய்த மேதை எஸ்.எஸ்.வாசனின் "ஜெமினி மாளிகை' இன்று இல்லாவிட்டாலும், "கொத்தமங்கலம் ஹவுஸ்' என்ற பெயருடன் புதுப்பித்துக் கட்டிய சுப்புவின் இல்லம், வாசன் பெயரையும் பல்கலைச் செல்வர் சுப்புவின் திறமையையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

பத்மஸ்ரீ முதலிய உயர் விருதுகளைப் பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அமரரானார். அவரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலம் அவ்வறிஞருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்.

[ நன்றி: தினமணி ]