விக்கிரமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்கிரமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 நவம்பர், 2022

2334. விக்கிரமன் - 8

மாந்தோப்பு மரகதம்

'வேம்பு'

டிசம்பர் 1. விக்கிரமன் அவர்களின் நினைவு தினம்.


தன் இயற்பெயரில் விக்கிரமன் 1948-இல் எழுதிய இந்தக் கதை. ஓவியங்கள்: ராகவன்.




[நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 18 அக்டோபர், 2022

2273. ஆர்.ஷண்முகசுந்தரம் - 2

 "நாகம்மாள்' படைத்த ஆர். சண்முகசுந்தரம்

 கலைமாமணி விக்கிரமன்



காங்கேயத்துக்கு வடக்கில் உள்ள நாலுரோடு என்னும் இடத்திலிருந்து மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் கீரனூர். அந்தச் சிற்றூரில், 1917-ஆம் ஆண்டு, எம்.இரத்தினசபாபதி முதலியாருக்கும், ஜானகி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் சண்முகசுந்தரம். இவருடைய சகோதரர் திருஞானசம்பந்தம். 

எழுத்தாளர் உலகில், கொங்கு மணம் வீசும் படைப்புகளை ஈந்த சகோதரர்களான இவ்விருவரின் பெயர்களும் நினைவில் நிற்கக்கூடிய பெயர்கள். இருவரும், எழுத்து ஒன்றையே மூச்சாகக் கொண்டவர்கள். 

இளம் வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை வழிப் பாட்டியின் அரவணைப்பில் இருவரும் வளர்ந்தனர். 

"உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு மேல் படிக்காவிட்டாலும், வாழ்க்கைப் படிப்பை விரைவிலேயே கற்றுக்கொண்டேன்' என்று பிற்காலத்தில் இலக்கியச் சந்திப்பு ஒன்றில் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார். 

செல்வாக்குமிக்க - வசதியுள்ள குடும்பம். அந்தக்காலப் பாட்டிகளும் தாய்மார்களும் நல்ல நல்ல கதைகளைச் சொல்லி மகன், மகள், பெயரன், பெயர்த்திகளுக்கு தெய்வபக்தி, தேசபக்தி, ஒழுக்கம் இவற்றை ஊட்டுவர். சண்முகசுந்தரத்துக்கு, பாட்டியார் சொன்ன கதைகளும், அந்நாளைய இலக்கியங்களான வடுவூரார், ஆரணியாரின் நாவல்களும் தமிழ் ஆர்வத்தை வளர்த்தன. 

கம்பராமாயண வசனம், மகாபாரத வசனம், விக்கிரமாதித்தன் கதைகள், தனிப்பாடல் திரட்டு இவற்றைப் படித்தார். கல்கியின் கதைகள், பாரதியார், கே.எஸ்.வேங்கடரமணி ஆகியோரின் நூல்களையும் விரும்பிப் படித்தார். 

அஞ்சாநெஞ்சர் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய "காந்தி' பத்திரிகையைப் படித்தார். இயற்கையாக உள்ளத்தில் சுரந்த தமிழ் ஆர்வம், எழுத்துத் தாகத்தை மேலும் வளர்த்தது. 

"மணிக்கொடி' இதழ் உதயமான நேரம். கீரனூரிலிருந்து கோயம்புத்தூருக்கு சைக்கிளில் சென்று அந்த இதழை வாங்கி ஆவலுடன் படித்தார். இதனால், கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு உதயமானது. 

"பாறையருகில்' என்ற சிறுகதையை எழுதி மணிக்கொடிக்கு அனுப்பினார். அப்போது மணிக்கொடிக்கு பி.எஸ்.ராமையா ஆசிரியராக இருந்தார். முதல் கதை மணிக்கொடியில் பிரசுரமானது. முதல் கதையை அச்சில் பார்த்த எந்த எழுத்தாளனுக்குத்தான் ஆனந்தம் ஏற்படாது? "அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணை ஏது?' என்று ஒருமுறை சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார். 

"நந்தா விளக்கு' என்ற மற்றொரு கதையையும் மணிக்கொடியில் எழுதினார். 

இவருடைய தம்பி ஆர்.திருஞானசம்பந்தம், சகோதரனைப்போலவே எழுத்தார்வம் உடையவர். "புதுமலர்' என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி, பிரபல பொருளாதார நிபுணர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் சிலப்பதிகாரம் - புகார்காண்டத்தை தெளிவான உரையுடன் வெளியிட்டார். 

சண்முகசுந்தரம், கோயம்புத்தூரில் "வசந்தம்' என்ற வார இதழை நடத்தினார். ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் ஆதரவு அந்தப் பத்திரிகைக்கு இருந்தது. தமிழ்மணி, ஹநுமான், ஹிந்துஸ்தான் போன்ற மேலட்டையின்றி எட்டுப் பக்கங்களில் இரண்டணா விலையில் "வசந்தம்' வெளிவந்ததாக நினைவு. ஆர்.கே.சண்முகம் செட்டியார் அந்தப் பத்திரிகையின் கெüரவ ஆசிரியராகத் திகழ்ந்தார். ஆர்.சண்முகசுந்தரத்தின் பல சிறுகதைகளும், வசன கவிதைகளும் அதில் வெளிவந்தன. 

ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் மாளிகையில் பெரிய நூலகம் இருந்தது. அந்த நூலகத்திலிருந்த ஆங்கிலம், தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் சண்முகசுந்தரம் படித்தார். சண்முகசுந்தரத்துக்கு மிகவும் பிடித்தவை டால்ஸ்டாயின் நாவல்கள்தான். 

திருஞானசம்பந்தம், "ஹநுமான்' வார இதழின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, அவருக்காக சண்முகசுந்தரத்தின் தந்தை இரத்தின சபாபதி முதலியார், சென்னைக்குக் குடியேறினார். அப்போதுதான் சண்முகசுந்தரம் இந்தி மொழி கற்றார். பிரபல எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பும் சண்முகசுந்தரத்துக்குக் கிடைத்தன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சொற்பொழிவைக் கேட்டதால் தேசபக்தி உணர்வு அதிகமானது. 


பிறகு, கு.ப.ரா.வுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. அப்போது அவர் "பாரததேவி'யில் உதவி ஆசிரியராக இருந்தார். ஒருமுறை, திருவல்லிக்கேணி கடற்கரையில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, ""கிராமிய மணம் கமழும் வகையில் உங்கள் சிறுகதைகள் அமைந்திருப்பதால், நாவல் ஒன்று எழுதுங்களேன்'' என்று கு.ப.ரா. கேட்டு ஊக்கமளித்ததால், இரண்டே மாதங்களில் "நாகம்மாள்' என்ற நாவலைப் படைத்தார். கு.ப.ரா.வுக்கு வியப்பு ஏற்பட்டது. பெரிய நாவல் ஒன்று எழுத வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த இளைஞர் திடீரென நாவல் ஒன்றை எழுதி முடித்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். சண்முகசுந்தரத்துக்கு அப்போது வயது 22. 


"மணிக்கொடி எழுத்தாளர்களில் சண்முகசுந்தரம்தான் முதன் முதலில் நாவல் எழுதியவர்' என்று திறனாய்வாளர் சிட்டியும், சிவபாத சுந்தரமும் புகழ்ந்து எழுதியுள்ளனர். 

"வட்டாரம்' என்று எல்லை வகுப்பதற்கு ஆதரவாகவும், எதிர் மறையாகவும் அதிர்ச்சி விமர்சகர் க.நா.சு., ஆங்கில ஆசிரியர்களின் மேற்கோள்களுடன் தன் கருத்தைத் தெரிவித்தபோதிலும், "நாகம்மாளுக்கு' முன்பே மண்வாசனை கமழும் நாவல்கள் தமிழில் வெளிவந்துவிட்டன. கரிசல்மண் பூமி, தாமிரபரணித் தமிழ், வண்டல்மண் மணம் வீசும் கதைகள் என்று பாகுபாடு செய்வதற்கு, பாத்திரப் படைப்புதாம் முன் நிற்க வேண்டுமே தவிர, ஊர் வர்ணனை, மக்கள் பேசும் தமிழ் இவை மட்டும் உதவாது. வட்டாரம் என்று பிரிக்கக்கூடாது என்று வாதிடுபவர்களும் அந்நாளில் இருந்தனர். மண்ணின் மணத்துடன் வட்டார நாவல் எழுதிப் புகழ்பெற்றவர் எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம். 

சண்முகசுந்தரத்தின் "நாகம்மாளு'க்கு முன்பே "முருகன் ஓர் உழவன்', "சங்கரராமின் மண்ணாசை' ஆகிய நாவல்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும், "நாகம்மாள்' குறிப்பிட்ட வட்டாரத்தின் மண்வாசனை வீசும் நாவல் வேறு ஒன்றுக்கும் அமையவில்லை என்று திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்தத் தலைமுறையினர் "நாகம்மாளை' படித்தறிய வேண்டும். ÷"நாகம்மாள்' நாவலைப் பற்றி கு.ப.ரா., தி.க.சிவசங்கரன், எஸ்.தோதாத்ரி போன்ற சிறந்த திறனாய்வாளர்கள் சிறப்பாக விமர்சித்துள்ளனர். 

"நாகம்மாள்' 85 பக்கங்களே உள்ள நாவல். குறைந்த பக்கத்தில் கிராமியக் காவியத்தை நம் கண்முன்னே நிறுத்தும் நாகம்மாளையும், சண்முகசுந்தரத்தின் மற்ற படைப்புகளையும் கிராமிய நாவலுக்கு முன்மாதிரியாகக் கொள்ளலாம். 

"நாகம்மாள்' நாவலுக்குப் பிறகு 1944-இல் "பூவும் பிஞ்சும்' என்ற நாவலும், 1945-இல் "பனித்துளி'யும் அவரால் எழுதப்பட்டன. நாகம்மாள், பூவும் பிஞ்சும் ஆகிய இரு நாவல்களையும் "இரட்டை நாவல்கள்' என்று விமர்சகர்கள் குறிப்பிடுவர். கொங்கு மணம் கமழும் "நாகம்மாள்' ஆர்.சண்முகசுந்தரத்தின் பெயரை தமிழ்நாட்டில் முன் நிறுத்திய பெருமைக்குரிய நாவல். பார்சி, உருது மொழிகளைக் கற்றுக்கொண்ட சண்முகசுந்தரம், சரத் சந்திரரின் நாவல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். "கல்கி' ஆசிரியராக இருந்தபோது, ஆனந்த விகடனில் இவர் மொழிபெயர்த்த "சந்திரநாத்' என்ற சரத் சந்திரரின்  நாவல் தொடராக வெளிவந்தது. 

கு.ப.ராஜகோபாலனால் தூண்டப்பட்டு, கடுமையான திறனாய்வாளர் க.நா.சு.வால் ஊக்கப்படுத்தப்பட்ட ஆர்.சண்முகசுந்தரத்தின் இளவல் ஆர்.திருஞானசம்பந்தமும் பத்திரிகையாளராக, பதிப்பாளராக இருந்தவர். சகோதரர் திருஞானசம்பந்தம் இறந்தபிறகு, தனக்கென வாழாமல், தன் தம்பிக்காகவும், தம்பியின் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்தார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு தெரிவிக்கும். 

""பணத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு என்னை மதிப்பவர்களை நான் மதிப்பதில்லை. வறுமையை நான் விரும்பியே ஏற்றுக்கொண்டேன். நான் போய்விட்டாலும், என் எழுத்துகள் நிற்க வேண்டும்'' என்று தன் நெருங்கிய நண்பரும் உறவினருமான டி.சி.இராமசாமியிடம் பேசும்போது குறிப்பிட்டாராம். 

1977-ஆம் ஆண்டு தம் அறுபதாவது வயதில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு, சண்முகசுந்தரம் கொங்கு மண்ணுடன் கலந்தார்

தொடர்புள்ள பதிவு:



பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

1857. எஸ்.ஏ.பி. -1

குமுதத்தின் வெற்றிக்குப் பின்னால்... எஸ்.ஏ.பி.அண்ணாமலை!

கலைமாமணி விக்கிரமன்  

====

1947-இல் குமுதம்தொடங்கியது. அப்போது 'ரவி'யின் அழகான கோட்டோவியங்களுடன் வந்த அவருடைய முதல் நாவல், 'பிரம்மசாரி'  என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. பிறகு, 'காதலெனும் தீவினிலே'. மணிமேகலைப் பிரசுரம் மூல ஓவியங்களுடன்  அவருடைய படைப்புகளை வெளியிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! 

=====

நாளிதழ்களின் முன்னோடி ஆசிரியர்கள் போன்று 20-ஆம் நூற்றாண்டில் வார இதழ்களில் புதுமை கண்டவர்களைக் குறிப்பிடுவதென்றால் "கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி, சாவி, எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்னும் மூவரைத்தான் முதலில் குறிப்பிடலாம். 

இவர்கள் படைப்பாளர்களாக இருந்ததுடன் புதிய வாசகர்களைப் படிக்கத் தூண்டி, பல எழுத்தாளர்களையும் அடையாளம் கண்டு வளர்த்தவர்கள். எஸ்.ஏ.பி.யின் தந்தையார் பெயர் பழனியப்ப செட்டியார். தாயார் லட்சுமி ஆச்சி. இவர் காரைக்குடியை அடுத்துள்ள கோட்டையூரில் 1924 -ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் தேதி பிறந்தார். எஸ்.ஏ.பி. ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையார் காலமாகிவிட்டார். 

எஸ்.ஏ.பி. அண்ணாமலைக்கு இளம் வயதிலேயே எழுத வேண்டும் என்னும் லட்சியம் இதயத்தில் கொழுந்துவிட்டது. எழுத்தாளராக வேண்டும் என்று தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம்.

ஒருநாள் அவருடைய மதிப்பிற்குரிய நண்பரும் உறவினருமான ஒருவர், ""ஏன் தம்பி, இப்படி சும்மா சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? கதை எழுதிப் பாருங்கள், ஏதாவது பத்திரிகைக்கு அனுப்புங்கள். பிரசுரமாகட்டும். நீங்கள் எழுத்தாளர் என்பது நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா?'' என்று அன்புடன் தூண்டினார். அந்த ஊக்கத்தால் "மளமள'வென்று மூன்று கதைகள் எழுதினார் எஸ்.ஏ.பி. இரண்டை "பிரசண்ட விகடன்' பத்திரிகைக்கும், ஒன்றை "சுதேசமித்திரன்' வார இதழுக்கும் அனுப்பினார். உடனே அவை பிரசுரமாயின.

அச்சில் பிரசுரமான கதைகள் எஸ்.ஏ.பி.யின் ஆர்வத்தை வளர்த்தன. கல்வியில் கவனம் செலுத்தி கல்லூரிப் படிப்பு முடித்துச் சட்டம் படித்துத் தேர்ந்த பிறகு அவருக்குள் மறைந்திருந்த எழுத்துத் தணல் ஊதப்பட்டு நெருப்பானது. சட்டக் கல்லூரியில் அவருடன் படித்த பி.வி.பார்த்தசாரதி, நாராயணன் ஆகிய இரு உயிர் நண்பர்களுடன் நாள்தோறும் புதிய பத்திரிகை ஒன்றைத் தொடங்குவதைப் பற்றியே ஆலோசித்தார்.

புதிய இதழ் தொடங்கும் திட்டம் முடிவானதும், தன் உறவினரையே பங்குதாரராகக் கொண்டு "தேவி அச்சகம்' என்னும் அச்சகத்தை விலைக்கு வாங்கினார் எஸ்.ஏ.பி. அச்சகம் மட்டுமே நடத்தும் நோக்கம் அவருக்கில்லை. அவருடைய லட்சியமான பத்திரிகை நடத்தும் ஆர்வத்தின் முதல்படி அது.

"குமுதம்' என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் "கல்கி' இதழைப் போன்று மாதம் இருமுறை வெளியிடத் திட்டமிட்டனர். மதிப்பும், மரியாதையும் பத்திரிகைக்கு ஏற்பட்டு மக்கள் விலை கொடுத்து வாங்க வேண்டுமென்றால், நாடறிந்த பெரிய மனிதர் ஒருவரின் ஆதரவு இருப்பது நலமென்று எஸ்.ஏ.பி.க்குத் தோன்றியது. எஸ்.ஏ.பி.யின் பெரியம்மா கணவர் டாக்டர் அழகப்ப செட்டியாரை அணுகினார். அழகப்ப செட்டியார் "வள்ளல்' என்று புகழப் பெற்றவர். "வள்ளல்' மட்டுமல்லர்; கல்வியிலும், ஈகையிலும் வள்ளல் அவர்.

எஸ்.ஏ.பி., தான் தனித்துவமுள்ள மனிதனாகத் தலைநிமிர்ந்து வாழ ஆசைப்படுவதை விவரித்து, நான்கு பக்கங்கள் அழகப்ப செட்டியாருக்குக் கடிதம் எழுதினார். தான் புதிதாகத் தொடங்க இருக்கும் பத்திரிகைக்கு அவர் கௌரவ ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடிதத்தைப் படித்த அழகப்ப செட்டியார் மனம் நெகிழ்ந்து, எஸ்.ஏ.பி.யைக் கூப்பிட்டு அனுப்பினார். ""ஏற்கெனவே நிறைய பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. நீ வேறு ஆரம்பித்தால் எப்படி நடக்கும்?'' என்று கேட்டார். நியாயமான கவலைதான்.

""மற்ற பத்திரிகைகள் மாதிரி இல்லாமல் நான் வித்தியாசமாக நடத்தப் போகிறேன்'' என்று எஸ்.ஏ.பி. உறுதியுடன் கூறினார்.

அழகப்பருக்கு அரைமனதுதான் என்றாலும், அந்த இளைஞரின் ஆர்வத்தையும் உள்ளொளியையும் புரிந்துகொண்டு ""சரி செய்'' என்று அனுமதி கொடுத்தார். இந்தச் செய்தியைத் தன் துணை ஆசிரியரிடம் எஸ்.ஏ.பி. சொன்னதாக நினைவு.

"குமுதம்' என்ற பெயர் சூட்டியாகிவிட்டது. சொந்த அச்சகம். போதிய பணவசதி இவை மட்டும் பத்திரிகை வெளியிடப் போதுமா? இதற்கு முன்பு பத்திரிகை நடத்திய அனுபவம் சிறிதுமில்லை. முதல் இதழை, அவர் பள்ளித் தோழர்கள் நாராயணன், ஆனந்ததீர்த்தன், சில எழுத்தாளர்கள் உதவியுடன் வெளிக்கொணர்ந்து விட்டார்.

எஸ்.ஏ.பி.யின் விடாமுயற்சி, தன்னால் முடியும் என்ற நம்பிக்கை, எழுத்தின் மீதுள்ள ஆர்வம் அவரை மகத்தான சாதனை புரிய வைத்தது. பிற்காலத்தில் விற்பனையின் உயர்வுக்கும், வடிவமைப்புக்கும், புதுமையான உள்ளடக்கம் தரும் புதுமைக்கும் மற்ற பத்திரிகைகள் "குமுதத்தைப் பார்' என்று பேசத்தொடங்கின.

"குமுதம்' வெற்றிக்கு, நிர்வாகத்தில் பெரும் பங்கு வகித்த பி.வி.பார்த்தசாரதியின் நட்புடன் கலந்த உழைப்பும் ஒரு காரணம். "ராமருக்கு லட்சுமணர் போல்' எஸ்.ஏ.பி.யின் லட்சியம் வெற்றிபெற பி.வி. பார்த்தசாரதி உதவினார் என்பது இலக்கிய உலகம் அறிந்த உண்மை.

இதழ் தயாரிப்பு ஒன்றையே சிந்தனையாகக் கொண்டு இரவு பகலாக உழைத்தார். புதிய புதிய பகுதிகளைக் கற்பனை செய்து ஒவ்வொரு பக்கத்தையும் தானே இருந்து எழுத்து எழுத்தாகப் பார்த்துப் படித்து "குமுதம்' என்னும் குழந்தையை வளர்த்தார். தொடக்க காலத்தில் எழுத்தாளர் சங்கம் போன்ற கூட்டங்களில் கலந்துகொண்டு நறுக்குத் தெறித்தாற்போல பேசுவது என்று வாசக மக்களிடையே தன் பெயரை நிலைநாட்ட விரும்பினார்.

1951-இல் மறுமலர்ச்சியுடன் மீண்டும் தொடங்கிய தமிழ் எழுத்தாளர்கள் சங்க நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டார். தன் மாநாடுகளின் வெற்றிக்குப் பாடுபட்டார். வரவேற்புக் குழுவில் சேர்ந்து உழைத்தார்.

விவேகானந்தரின் நூற்றாண்டு விழாக் கூட்டங்களுக்காகப் பல ஊர்களுக்குப் பேசச் சென்றார். "மிகச் சிறந்த பேச்சாளர்' என்று அவர் பெயர்பெறத் தொடங்கிய சமயம் திடீரென்று ஒருநாள் உதவி ஆசிரியர் ரா.கி.ரங்கராஜனிடம் ""இனிமேல் மேடைப் பேச்சுகளுக்குப் போகப் போவதில்லை'' என்று சொன்னார். ரா.கி.ரங்கராஜன் திகைத்தார். அதை "எஸ்.ஏ.பி.' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஏ.பி. அப்படியொரு முடிவுக்கு வரக்காரணம் -நான்தான்!

எஸ்.ஏ.பி. அத்தகைய முடிவெடுத்த சமயம்.. எஸ்.ஏ.பி.யை நான் இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குத் தலைமை வகிக்க அழைத்திருந்தேன். அறிஞர் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை பேசிய கூட்டம். இரண்டரை மணி நேரம் திரிகூடசுந்தரம் பேசினார், பேசினார், பேசிக்கொண்டே இருந்தார். எஸ்.ஏ.பி. இருக்கையில் தவித்தார், நெளிந்தார், கைக்கடிகாரத்தைப் பார்த்தார், கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த என்னைப் பார்த்தார். கடுமை இல்லை; பரிதாபம் இருந்தது. இப்படியாகிவிட்டதே என்ற கவலை இருந்தது. ஒரு வழியாகத் திரிகூடசுந்தரம் பேசி முடித்ததும், தலைமை உரையை எஸ்.ஏ.பி. சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் முடித்துக்கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு வழியனுப்ப வந்த என்னைத் தனியே அழைத்து, ""குமுதம் இப்போது வளர்ந்து வரும் பத்திரிகை. குறித்த நேரத்தில் எந்தப் பணியையும் செய்யும் வழக்கம் உடையவன் நான். எட்டரை மணிக்கு அலுவலகத்தில் இருந்து குமுதம் "பாரத்'தைச் சரி பார்த்து அச்சிடக் கொடுக்க வேண்டும். உதவி ஆசிரியர்கள் என்னைக் காணாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். கடமையிலிருந்து தவற ஒரு நாளும் நான் விரும்பமாட்டேன். பத்திரிகை அலுவலத்தில் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது என்பது உங்களுக்குத் தெரியும். பொதுக் கூட்டத்தில் கிடைக்கும் கை தட்டலுக்காக என் லட்சியம், கடமை சிதைந்து விடக்கூடாது. தயவுசெய்து இனி என்னை எந்தப் பொதுக் கூட்டத்துக்கும் பேசவோ, தலைமை வகிக்கவோ அழைக்காதீர்கள்'' என்றார். என் கண்கள் கலங்கின. அப்போது அவர் சொன்னதை இறுதிவரைக் கடைப்பிடித்தார்; வென்றார். விற்பனையில் இந்தியாவின் முதல் இடத்தைப் பெற்றார்; இமாலய சாதனையை செய்து காட்டினார்.

குமுதத்தின் தொடக்க காலத்தில் அவர் விறுவிறுப்பாகத் தொடர்கதைகள் எழுதினார். நூல் வடிவில் வந்தபோது அதன் சுவை மிகவும் கூடியிருப்பது தெரிந்தது. காதலெனும், தீவினிலே, நீ, சித்தி, இன்றே இங்கு இப்போதே போன்ற தொடர்கதைகளை எழுதினார்.

காதலெனும் தீவினிலே புதினத்தைப் படித்த ஏவி.எம்.செட்டியார், திரைப்படமாக்கும் யோசனையைத் தெரிவித்தார். ஆனால். எஸ்.ஏ.பி., சில காரணங்களைக் கூறி, ஒருநாளும் திரைப்படத்துக்குக் கதை எழுதுவதில்லை என்று கூறிவிட்டார்

தன் மனைவியார் கோதை ஆச்சியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு சென்றதும் எஸ்.ஏ.பி.யின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரியும் தன் ஒரே மகன் ஜவகர் பழனியப்பன் பணியாற்றிவந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி காலமானார். அமெரிக்காவிலிருந்து அவரது உடலைச்சுமந்து மகனும் மனைவியும் சென்னை வந்தனர்.

ஓர் இலக்கிய எழுத்தாளர், பிறப்பிலேயே செல்வந்தர், கண்டிப்பு, நேர்மை, காலந்தவறாமை, ஒழுக்கம், வெற்றியிலிருந்து மாறுபடாமல் வாழ்ந்த அவரை படைப்புலகம், பத்திரிகை உலகம், வாசகர் உலகம் எப்படி மறக்கும்?

 [ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

எஸ். ஏ. பி. யும் (நன்றியுடன்) நானும் - கடுகு 

எஸ்.ஏ.பி.

செவ்வாய், 9 மார்ச், 2021

1820. விக்கிரமன் - 7

கல்கி நூற்றாண்டு விழா: கட்டுரை -5
கலைமாமணி விக்கிரமன் 






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 2 டிசம்பர், 2020

1708. விக்கிரமன் - 6

விக்கிரமனைப் பற்றி விக்கிரமன் 


டிசம்பர் 1. விக்கிரமனின் நினைவு தினம். 2015-இல் தினமணி கதிரில் வந்த கட்டுரை இதோ.






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 17 அக்டோபர், 2020

1658. ஜெகசிற்பியன் - 2

"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன்
கலைமாமணி விக்கிரமன் 


துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதித்தவர்களுள் அமரர் ஜெகசிற்பியனுக்கு சிறந்த இடமுண்டு. அவர் எழுதுகோலை ஏந்தியபோது தக்க வரவேற்பு அவருக்கு இல்லை. துப்பறியும் நாவல்கள், ஒழுக்கம் குலையாத பாக்கெட் நாவல்கள் என்று வியாபார நோக்கமுடைய இதழாசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப "ஆர்டர் இலக்கியங்கள்' எனத் தொடக்க காலத்தில் அவர் எழுதினாலும், ஒரு கால கட்டத்தில் சரித்திரப் புதினங்கள் தாம் அவரைத் தமிழ் வாசகர் உலகுக்கு அடையாளம் காட்டியது.

பெரும் வருவாய் அவருக்குக் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்பாராத பரிசும் பாராட்டும், வாசகர் வரவேற்பும் கிடைத்தன. இறுதிநாள் வரை ஆடம்பரமின்றி, தக்க வசதிகளின்றி, எழுத்து ஒன்றையே ஆராதித்து வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெகசிற்பியன்.

மயிலாடுதுறையில், 1925-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பொன்னப்பா - எலிசபெத் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர்கள் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவராயினும் ஜெகசிற்பியன் எழுத்துகளில் சமயச் சார்பு, காழ்ப்புணர்ச்சி, தூஷணை ஏதுமில்லை. சைவ-வைணவ சமய வரலாறு தொடர்பான புதினங்களை எழுதியபோதுகூட அவருடைய எழுத்துகளில் சமயச் சார்பு, வெறுப்பு எள்ளளவுக்குக்கூடப் புலப்படவில்லை.

அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலையன். "நல்லாயன்' இதழில் 1939-ஆம் ஆண்டு முதல் கதை வெளிவந்தபோதும், தொடர்ந்து சில இதழ்களில் அவர் எழுதியபோதும் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் என்ற பெயரில் எழுதினார்.

தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். தொழிற் கல்வியைப் பயன்படுத்தி பணம் பண்ணாமல் எழுத்தை "தமக்குத் தொழில்' ஆக்கிக் கொண்டார்.

முதல் புதினமான "ஏழையின் பரிசு' எழுதிய 1948-ஆம் ஆண்டிலிருந்து நான் அவரை அறிவேன். "காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் அவர் எழுதிய "கொம்புத் தேன்' முதல் பரிசைப் பெற்றது. அந்தப் புதினத்தைத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று ஜெகசிற்பியன் புகழப்பட்டார். அந்த முதல் போட்டியில் அவர் பெற்ற முதற்பரிசு ஒரு சவரன், ஜெகசிற்பியனின் வளர்ச்சிக்குக் கொடியேற்றம் அந்தப் பரிசு.


பிற்காலத்தில், "ஆனந்த விகடன்' நடத்திய வரலாற்று நாவல் போட்டியில் அவருடைய சரித்திரப் புதினம் "திருச்சிற்றம்பலம்' முதல் பரிசு பெற்றது. சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றார்.

ஜெகசிற்பியன் பரிசுகள் பல பெற்றாலும் தன் இயற்கையான, அடக்கமான குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதிவரை எழுத்து ஒன்றையே தெய்வமாக நினைத்து வாழ்ந்தவர்.

"திருச்சிற்றம்பலம்' நாவலுக்கு முன்பே கனமான வரலாற்று நாவல்களும் சமூக நாவல்களும் அவர் படைத்திருக்கிறார். அவர் எழுதி பரிசு எதுவும் பெறாத ஆனால், வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட "நந்திவர்மன் காதலி' படிப்பதற்கு விறுவிறுப்பான வரலாற்று நாவல். 

சங்க இலக்கியச் சம்பவங்களுக்குப் பாடல் ஆதாரம் சிறிது இருக்கும். மற்றவை ஆசிரியரின் கற்பனை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் கொடி பதித்த மாவீரன் - அவரைக் கதையுடைத் தலைவராகக் கொண்ட "நாயகி நற்சோணை' என்ற புதினத்தை ஜெகசிற்பியன் படைத்தார். இந்த வரலாற்று ஆதாரம் குறித்து விவாதம் ஏற்பட்டது.

 கால வழுக்களைக் கூறுபவர்களுக்கு அவர் அமைதியாக, ""அது என் தவறன்று. ஆராய்ச்சியாளர்கள் பலர் தந்த குறிப்பேயாகும்'' என்று அடக்கமாகக் கூறியுள்ளார். "ஆலவாய் அழகன்' என்ற ஜெகசிற்பியன் படைப்பு உன்னதமானது என்று பாராட்டப்பட்டது.



நாவல் எழுதப் புகுவதற்கு முன்பு ஜெகசிற்பியன் சிறுகதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தார். பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன.

1958-இல் அவருடைய "அக்கினி வீணை' என்ற கதைத் தொகுதி 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. இலக்கியத் தரத்துடன் கூடிய சிறுகதைகள் படைத்தவரும், கவிஞருமான மீ.ப.சோமு அந்தத் தொகுதிக்கு முன்னுரை வழங்கியுள்ளார். தொடர்ந்து ஊமைக்குயில், பொய்க்கால் குதிரை, நொண்டிப்பிள்ளையார், நரிக்குறத்தி, ஞானக்கன்று, ஒருநாளும் முப்பது வருடங்களும், இன்ப அரும்பு, காகித நட்சத்திரம், கடிகாரச் சித்தர், மதுரபாவம், நிழலின் கற்பு, அஜநயனம், பாரத புத்திரன் என்ற தொகுதிகள் வெளிவந்தன. இப்படி ஏழத்தாழ 14 சிறுகதைத் தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. "பாரத புத்திரன்' சிறுகதைத் தொகுதிக்கு, தமிழ் வளர்ச்சித் துறை பரிசளித்துச் சிறப்பித்தது (1979-1981).


"நரிக்குறத்தி' சிறுகதைத் தொகுதியைப் பாராட்டிய கி.வா.ஜகந்நாதன், ஜெகசிற்பியன் கதைகளின் உள்ளுணர்வைப் பாராட்டி அந்தக் கதையின் பெயரில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கு அளித்த முன்னுரையில் சரியான மதிப்பீடு வழங்கியுள்ளார்.

வரலாற்றுப் புதினங்களால் பெரும் புகழ் பெற்ற ஜெகசிற்பியனின் சமூக நாவல்களைப் பற்றித் தனியே ஆராயலாம். 16 சமூகப் புதினங்கள் எழுதியிருக்கிறார். கொம்புத்தேன், தேவ தரிசனம், மண்ணின் குரல், ஜீவகீதம், மோக மந்திரம், ஞானக்குயில் ஆகிய புதினங்கள் பாராட்டப்பட வேண்டியவை. அவரது கதைகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றவை.

சிறுகதை, புதினங்கள், சமூகம் - வரலாறு மற்றும் மூன்று நாடகங்களையும், வானொலிக்காகப் பல நாடகங்களையும் படைத்திருக்கிறார். ஜெகசிற்பியன், "நாடகத்துறைக்கு முழு மூச்சுடன் தன் கவனத்தைச் செலுத்தவில்லை' என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.  எழுதியே வாழ்ந்த எழுத்தாளர்களைக் கணக்கிட்டால், ஜெகசிற்பியன் வளமாக வாழ்ந்தவர் இல்லை. "எழுத்தே ஜீவன்; நாட்டுக்கு உழைத்தல்' என்கிற லட்சியத்தோடு வாழ்க்கைத் தோணியை வெற்றிகரமாகக் கரைசேர்க்க சோம்பலின்றி உழைத்தவர்.

கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய புகழ் பெற்ற மொழியாக்கப் புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரை "செகப்ரியர்' என்று பெயரிட்டு எழுதியிருந்தார். பாலையனுக்கு அந்தப் பெயர் பிடித்தது. அதையே தன் புனைபெயராக வைத்துக்கொள்வது என்று முடிவு செய்தார்(1). இதனால்,  மற்றொரு ஷேக்ஸ்பியர் தமிழ் உரைநடைக்குக் கிடைத்தார்.

""இந்த உலகத்தில் நான் என் உயிரைவிட மேலாக நேசிப்பவை இரண்டு. ஒன்று என் அருமைப் பிள்ளைகள். மற்றொன்று என் அழகான புனைபெயர்'' என்று ஜெகசிற்பியன் ஓரிடத்தில் குறிப்பிட்டதாகப் பேராசிரியர் வேலுச்சாமி எழுதியுள்ளார்.

பொருளாதாரத்தில் அவர் சிறக்கவில்லையே தவிர, வாழ்க்கையில் அவர் சிறப்பைக் கண்டார். வாழ்க்கைத் துணைவி தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்ற பெயருடைய மூன்று மகள்கள். திருமணத்தின்போது பயிற்சி பெற்ற ஆசிரியராக தவசீலி இருந்தாலும், அவரைப் பள்ளி ஆசிரியர் பணிக்கு அனுப்பாமல் உள்ளதைக் கொண்டு நிறைவடைந்தார் ஜெகசிற்பியன்.

எழுத்தாளர்களுக்கே உரித்தான "சொந்தமாக பத்திரிகை' நடத்திய முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், தொடர்ந்து நடத்தமுடியவில்லை.

அவருடைய "ஊமத்தைப் பூக்கள்' என்ற சமூகப் புதினம் "குமுதம்' வார இதழில் தொடராக வெளிவரத் தொடங்கிய சில வாரங்களிலேயே அதாவது, 1978-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி ஜெகசிற்பியன் காலமானார்.

அவர் மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர் சங்கம் நினைத்தது. சங்கத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்த அன்றைய அமைச்சராய் இருந்த இராம.வீரப்பனால் "திரு.வி.க. பரிசு' மற்றும் ரூ. 5000 தமிழக அரசால் ஜெகசிற்பியன் குடும்பத்துக்கு  வழங்கப்பட்டது.

"எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன், 53 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் ஆழமும், அகலமுமுள்ள அவர் படைப்புகள் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

(1)  அதன் தாக்கத்தில், 'ஜெர்வாஸ்'   ஜெகசிற்பியன்' என்று தன் புனைபெயரை வைத்துக் கொண்டார் என்பர்.

[  நன்றி: தினமணி ]


தொடர்புள்ள பதிவுகள்:

ஜெகசிற்பியன்

ஞாயிறு, 14 ஜூன், 2020

1563. விக்கிரமன் - 5

விக்ரமன் எடுத்த விசுவரூபம்!

விக்கிரமன் அவர்களின் மணிவிழாவை ஒட்டிக் கல்கியில் 88-இல் வந்த ஒரு கட்டுரை.



[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

1023. திருலோக சீதாராம் -1

"கந்தர்வ கானம்" படைத்த திருலோக சீதாராம்!
கலைமாமணி விக்கிரமன்



ஏப்ரல் 1. திருலோக சீதாராமின் பிறந்த தினம்.
=====

1944ஆம் ஆண்டில் ஓர் அதிகாலையில் நான் கோயம்புத்தூரில், அவிநாசி சாலையில் நடந்து கொண்டிருந்தேன். புகழ்பெற்ற பெரிய மனிதர் ஒருவரின் மாளிகை வாசலுக்கு வந்ததும், உள்ளே நுழைந்து அவரைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்ற எண்ணம் எழுந்தது. அந்த மாளிகையில் நுழைவது அவ்வளவு எளிதன்று. முதியவரான வாயிற்காவலர் வழி மறித்து ஒரு நீண்ட காகிதத்தை நீட்டினார். அதைப் பூர்த்தி செய்து மாளிகைக்குள் அனுப்பி, எஜமானர் அனுமதி கிடைத்த பிறகுதான் உள்ளே நுழைய அனுமதி என்பது அங்கிருந்த விதி.

வந்திருப்பவர் யார்?, என்ன தொழில்?, மாளிகை எஜமானரைக் காண விரும்பும் காரணம் என்ன?, முன்னறிவிப்பு அல்லது அழைப்பு உண்டா? என்பன போன்ற பற்பல வினாக்களுக்கு அதில் விடையளிக்க வேண்டும் என்று கவிஞர் திருலோக சீதாராம் தாம் முதலில் அந்தப் புகழ்பெற்ற மனிதரைக் காணச்சென்ற அனுபவத்தைத் தம் "இலக்கியப் படகு" என்னும் கட்டுரைத் தொகுப்பில் எழுதியுள்ளார்.


"இலக்கியப் படகு" - கவிஞரின் எண்ண அலைகளில் அசையாது நின்ற சிந்தனைப் படகின், சுவையான விவரங்கள் அடங்கியத் தொகுப்பு. 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பாரதி புகழ்ப் பரப்பிய எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர் திருலோக சீதாராம். சொற்பொழிவிலே கம்பீரம், எழுத்திலே ஆவலை எழுப்பும் சுவையுடன் கூடிய ஆற்றல் படைத்த திருலோக சீதாராம், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி - தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவைப் பற்றிய அறிமுகக் கட்டுரையில் வரிக்கு வரி ஆவலைத் தூண்டும் வகையில் எழுதிய சொற்சித்திரம் அனைவரையும் கவர்ந்தது.

கவிஞர் அந்தப் படிவத்தை வாங்கிப் படித்தார். "பார்க்க விரும்பும் காரணம்?" என்ற கேள்விக்கு "சும்மா" என்று எழுதியிருந்தார்.

தொழில் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அந்தப் படிவத்தைப் பார்த்தார். "சும்மா" என்று துணிவுடன் எழுதியவரைச் சந்திக்க அனுமதி அளித்தார்.

அந்தக் கணம் - அந்த விஞ்ஞானியுடன் கவிஞருக்கு ஏற்பட்ட அறிமுகமும், பிறகு பலமுறை சந்திக்கும் வாய்ப்பையும், ஆழ்ந்த நட்பையும் ஏற்படுத்தின. ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைப் பலர் எழுதியிருக்கலாம். ஆனால் கவிஞர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர் என்று பல தகுதிகள் படைத்த திருலோக சீதாராம் எழுதிய நூல்தான் முதன்மையானது.

1917ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தார் திருலோக சீதாராம். "திருலோக" என்று இதுவரையில் பெயர் புனைந்தவர்கள் யாருமிலர். திருவையாறு லோகநாத சாஸ்திரியின் மகனாகப் பிறந்த சீதாராம், திருவையாறு ஊரின் முதல் எழுத்து "திரு"வையும், தந்தையின் பெயரில் உள்ள "லோக"த்தையும் சேர்த்துக்கொண்டார். தாயார் பெயர் மீனாட்சிசுந்தரம் அம்மையார்.

ஒருமுறை கோயம்புத்தூரில் சன்மார்க்க சங்க விழாவில், சுத்தானந்த பாரதியார், "இவர் சாமான்யப்பட்டவரல்லர், திரிலோக மின்சாரப் புயல், திரிலோக சஞ்சாரி'' என்று கூறிப் பாராட்டினார். திரிலோக சஞ்சாரியாக அவர் பல ஊர்களுக்குப் பலரைக் காணச் செல்வார். ஓரிடத்திலேயே இருக்கமாட்டார்.

தன் கருத்தைச் சுவையாக வெளிப்படுத்த "தேவசபை" என்னும் அமைப்பை நிறுவினார். இருபது, முப்பது பேர்தான் கூடுவர். இதையே அவர் "அமரர் சங்கம்" என்றார். திருப்பராய்த்துறை காவிரிக் கரையில் தொடங்கப்பட்ட அந்தத் திருக்கூட்டங்களில் அவர் பேசக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்.

மகாகவி பாரதியாரின் புதல்விகள் சகுந்தலா பாரதியையும், தங்கம்மாள் பாரதியையும், நான் நடத்திய மாத இதழ் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, எனக்கு அவர்களை அறிமுகப்படுத்தியதோடு, இரண்டு சிறந்த வரலாற்றுப் பதிவு பெறத்தக்க கட்டுரைகளை எழுதுமாறு செய்த, (குறிப்பாக முற்றுப்பெறாத "சந்திரிகையின் கதை"யைப் பற்றி தங்கம்மாள் பாரதி எழுதிய கட்டுரை) மறக்க முடியாத நிகழ்ச்சி.


திருலோகம், மகாகவியைப் பரப்புவதை மட்டும் தம் இலட்சியமாகக் கொள்ளவில்லை. மகாகவி பாரதியின் மறைவுக்குப் பிறகு செல்லம்மாள் பாரதி, திருச்சி - தில்லை நகரில் வசித்து வந்தார். அங்கு பாரதி குடும்பத்தாரின் நலன்களையும் கவனித்துக்கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டார். அவருடைய எண்ணங்களின் தொகுப்பு, "இலக்கியப் படகு" என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. அவை, "சிவாஜி" இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அது ஒன்றுதான் ஓரளவுக்கு அவர் வாழ்க்கை இலட்சியத்தை இந்தத் தலைமுறைக்கு விவரிக்கிறது.

எட்டாம் வகுப்பு வரையில்தான் படித்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். இளம் பருவத்தில் புரோகிதராகவும் இருந்திருக்கிறார். அதில் பிடிமானமில்லாமல், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். எத்தகைய பொருளானாலும் அவர் குறிப்பு ஏதுமில்லாமல் பேசத் தொடங்கிவிடுவார். திருச்சி தமிழ்ச் சங்கமானாலும் சரி; கொல்கத்தா தமிழ்ச் சங்கமானாலும் சரி, அவர் பேசும் தலைப்புக்குக் குறிப்பு ஏதும் தயாரிக்க மாட்டார். மடைதிறந்த வெள்ளம், சொல்மாரி என்பார்களே அதைப்போன்றே பேச்சமையும்.


ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட சித்தார்த்தாவைக் கவிஞர், தமிழில் மொழிபெயர்த்தார். மூலம் எது, மொழியாக்கம் எது என்று பாகுபாடு சொல்ல முடியாத அளவுக்கு மொழிபெயர்ப்பு ஆற்றல் அவருக்குள் இருந்தது.திருச்சியிலிருந்து எழுத்தாளர் ஏ.எஸ்.இராகவனுடன் எஸ்.எஸ்.வாசனைச் சந்திக்கச் சென்று, தன் சொல்லாற்றலால் சம்மதிக்க வைத்ததோடு, வாசன் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நடத்த வைத்த திறமை, ஆற்றலை அன்றிருந்த எழுத்தாளர்கள் சொல்வர். இன்று திருச்சியில் சங்கம் வைத்து நடத்துபவர்கள் அறியமாட்டார்கள்.

அவருடைய சொல்லாற்றலை - பாரதியைப் பற்றிய புலமையை அறிந்த எஸ்.எஸ்.வாசன், ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதச்சொன்னார். 100 கட்டுரைகள் எழுதவேண்டும் என்ற இலட்சியத்துடன் தொடங்கி, 23 கட்டுரைகளுக்கு மேல் எழுதமுடியவில்லை. அக்கட்டுரைகள், "புதுயுகக் கவிஞர்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.

36 ஆண்டுகள் "சிவாஜி" இதழை இடைவிடாமல் நடத்தினார். இறுதியாக "கவிஞர் அச்சகம்" என்னும் அச்சகத்தை ஏற்படுத்தி நூல்களை அதில் அச்சிட்டு வெளியிட்டார்.

திருலோக சீதாராமின் உயிர் நண்பர் அறிஞர் டி.எஸ்.இராமச்சந்திரன் ஆங்கிலக் கவிதையில் மிக்க புலமை பெற்றவர். பாரதியை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர். திருலோக சீதாராமைப் பற்றி உள்ளும், புறமும் சொல்லக்கூடியவர் அவர். கவிஞர் திருலோக சீதாராம் எழுதிய "கந்தர்வ கானம்" என்னும் ஒப்பற்ற காவியத்துக்கு முன்னுரையும் விரிவான அணிந்துரையும் எழுதியுள்ளார். அணிந்துரையில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:-

"எல்லாம் மேல்நாட்டுக் கவிதையின் தாக்கம்" என்று இந்நாளில் எளிதில் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், திருலோகம் எழுதியுள்ள கந்தர்வ கானத்தில் கருத்தும் சொற்றொடரும் அப்படி அப்படியே ஆங்கிலக் கவி மேதைகளின் கவிதைகளில் இருக்கின்றன என்ற வியப்பான செய்தியைப் படிக்கும்போது, ஆங்கில அறிவு போதுமானதாக இல்லாத திருலோகத்தின் கவிதை கருத்துகள் பிரான்ஸின் தாம்ஸனோ, டி.எஸ்.எலியட்டோ கூறியவற்றை நம் கவிஞர் எவ்வாறு கூறினார்? (1967).

கவிஞர் திருலோகம் சொல்வதுபோல் நேரில் பாடிக் காட்டுவதிலும் கேட்பதிலும்தான் கவி இன்பம் முழுமை பெறுகிறது. கந்தர்வ கானத்தைக் கவிஞர் பாடியதைக் கேட்ட பிரமிப்பு எவ்வளவு முறை படித்தாலும் வராது என்பது உண்மையே''.

திருலோக சீதாராமை 20ஆம் நூற்றாண்டின் புரட்சிக் கவிஞர் - புதுமைக் கவிஞர் - புதிரான கவிஞர் - பாரதி புகழ்ப் பரப்பிய கவிஞர் - பிறவி மேதை என்று எதைச் சொல்லிப் பாராட்டுவது?

திருலோக சீதாராம், 1973ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி தம் புகழுடம்பை நீத்தார். பாரதி புகழ் பரப்பிய அவர், நம்மிடையே என்றும் வாழ, நாம்தான் அவரது புகழைப் பரப்ப வேண்டும்.

[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்: