வியாழன், 27 மார்ச், 2014

சங்கீத சங்கதிகள் - 33

டி.கே.பட்டம்மாள் -1 


டி.கே.பட்டம்மாளைப் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளிலேயே இன்றும் உயிருடன் துடிப்பவை ‘கல்கி’யின் விமர்சனங்களே! ’கல்கி’ யின் பாடல்களை முதலில் கச்சேரிகளில் பாடிப் பிரபலப் படுத்தியவர் பட்டம்மாள் அவர்கள் தான் என்பதையும் குறிப்பிடவேண்டும். அவை இசைத்தட்டுகளாகவும் பிறகு வந்தன.  


முதன் முதலாக 1936-இல் அவருடைய கச்சேரியைக் கேட்ட ‘கல்கி’ விகடனில் இப்படி எழுதினார் :


அகாடமி, காங்கிரஸ் காட்சி இரண்டிலும் , இளம் பாடகர்கள் பலர் இம்முறை கச்சேரி செய்தனர். அவர்களில் எல்லாம் மிகச் சிறந்த பெயர் வாங்கியவர் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள்.


சென்ற மாதத்தில் முதன் முதலாக ஜகந்நாத பக்த சபையில் இவருடைய கச்சேரி கேட்டேன். ”இவ்வளவு நன்றாகப் பாடுகிறாரே: இதுவரை நாம் கேட்டதில்லையே “ என்று வியப்பு உண்டாயிற்று. முன்னணி வித்வான்களைப் போல் சவுக்க காலத்தில் பெரிய பெரிய தீக்ஷிதர் கீர்த்தனங்களை எல்லாம் அழுத்தமாகவும் பிடிப்புடனும் பாடுகிறார். வித்வத்துடன் குரல் இனிமையும் சேர்ந்திருக்கிறது அதனால் கச்சேரி செய்யும்போது விகாரப் படுத்திக் கொள்ளாமல் புன்னகை தவழும் முகத்துடன் பாடுதல் சாத்தியமாய் இருக்கிறது. வருங்காலத்தில் இவருடைய பெயர் பெரிதும் பிரசித்தி அடையும் என்று எதிர்பார்க்கிறேன்”  

( நன்றி : பொன்னியின் புதல்வர், “சுந்தா” ) 

பிறகு 4-1-1936 - இல் ‘கல்கி’ விகடனில் விரிவாக எழுதிய ஒரு கட்டுரை மேலும் டி.கே.பட்டம்மாளுக்குப் புகழாரம் சூட்டியது. 


பட்டம்மா பாட்டு 
‘கர்நாடகம்’ ( கல்கி ) 


.
ந்த 1936-ம் வருஷத்தில் சங்கீத வானத்தில் ஒளி வீசும் புதிய நட்சத்திரம் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள். சென்னையில் இவ் வருஷம் அடிக்கடி ஏதேனும் ஒரு சபையில் இவருடைய கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் மயிலாப்பூர் சங்கீத சபையிலும், கோகலே ஹாலிலும் இவர் செய்த கச்சேரிகள், இவ் வருஷ ஆரம்பத்தில் நமக்கு இவரைப் பற்றி ஏற்பட்ட நம்பிக்கையை மெய்ப்படுத்தின.

தென்னிந்தியாவில் ரஸிகத் தன்மை சரியான நிலையில்தான் இருக்கிறது. ஒருவரிடம் நல்ல வித்வத் மட்டும் இருந்தாலும், கட்டாயம் மேன்மையடைந்தே தீர்வார் என்பதற்குச் செம்மங்குடி சீனிவாசய்யர் ஒரு சிறந்த உதாரணமாவார்.

மூன்று வருஷத்துக்கு முன்னால், சென்னையில் நடந்த இரண்டு பெரிய சங்கீத உற்சவங்களில் ஒன்றுக்கும் அவரைக் கூப்பிடவில்லை. இப்போது அவரை யார் முதலில் கச்சேரி வைப்பது என்று போட்டியாக இருக்கிறது.
பொதுவாக, நமது சங்கீத உலகில், ரஸிகர்களுடைய செல்வாக்குத்தான் மேலோங்கி நிற்கிறது என்பதற்குச் செம்மங்குடி சிறந்த உதாரணம் என்றால், சிறு அளவில், ஸ்ரீமதி பட்டம்மாளும் அதற்கு உதாரணமாகிறார்.

காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களுக்கு சங்கீதத்தில் ரொம்பக் ‘கிறுக்கு’ உண்டென்பது நேயர்கள் அறிந்ததே. சட்டசபையில் பக்கத்து ஆசனத்தில் படுத்திருந்தவரைப் பார்த்து, “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா!” என்று இவர் பாடத் தொடங்கியதாகக் கேள்வி. சங்கீதம் சம்பந்தமாகச் சில திட்டமான அபிப்ராயங்கள் அவருக்கு உண்டு. அவைகளை அப்பட்டமாகப் போட்டு அவர் உடைத்தும் விட்டார்.

சென்ற வருடம் கடைசியில் காங்கிரஸ் மண்டபத்தில் நடந்த சங்கீத விழாவின்போது, ஒருநாள் அவர்  “ஸ்திரீகள்தான் பாடவேண்டும்; புருஷர்கள் பாடக் கூடாது; புருஷர்கள் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாம்! “ என்றார். அதற்கு, ஸம்ஸ்கிருத ஸ்லோகத்திலிருந்து ஆதாரமும் எடுத்துக் காட்டினார். ஸ்திரீ சாரீரத்தில் தான் இனிமை உண்டென்பது அவர் கருத்து.

இது ஒரு கட்சி. இதற்கு மாறான கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள், “சிவ சிவா! ஸ்திரீகள் பாடுவதும் பாட்டா? வழவழ குழகுழவென்று இழுத்தால் பாட்டாகி விடுமா? தாளம் வேதாளம்தான்! தாளக்கட்டு இல்லாத பாட்டு என்ன பாட்டு ?” என்பார்கள்.

இந்த இரண்டு கட்சிக்காரர்களும் ஸ்ரீமதி பட்டம்மாள் பாட்டில் திருப்தி அடைய இடமுண்டு. நலங்கிலும், ஊஞ்சலிலும் தவிர , ஸ்திரீகள் பாட்டு என்று வாய் திறக்கக் கூடாது என்று சொல்பவர்கள் கூட, ஸ்ரீமதி பட்டம்மாள் பாடலாம் என்று ஒப்புக் கொள்வார்கள்.
உயர்தர சங்கீதத்தில் செவிக்கு இன்பமும், மூளைக்கு உற்சாகமும் இருதயத்துக்கு உணர்ச்சியும் அளிக்கும் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று பார்த்தோம். இந்த மூன்று முக்கிய அம்சங்களுக்கும் அஸ்திவாரம், ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் அமைந்திருக்கிறது.


சாரீரம்:- இவருடைய சாரீரத்தில் இனிமையும் கம்பீரமும் கலந்திருப்பதைக் காண்கிறோம். ஸ்திரீகளுக்குள் இத்தகைய சாரீரம் அமைவது மிகவும் துர்லபம்.

எது இனிமையான சாரீரம் என்பதைப் பற்றிக்கூட , அபிப்ராய பேதத்துக்கு இடமுண்டு என்று சொல்லியிருக்கிறேன். சிலருக்குக் கீச்சுக் குரல்தான் இனிமையான குரலாகத் தோன்றும். வேறு சிலரோ கீச்சுக் குரலைக் கேட்டால் காதைப் பொத்திக் கொள்வார்கள். இரட்டை நாத சாரீரத்தில் தான் சிலர் பூரண சுகபாவத்தைக் காண்பார்கள். வேறு சிலர் இதையே “மூக்கால் பாடுவது” என்பார்கள். அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் சிலருக்குத்தான் உண்டு.

ஸ்திரீகளுக்குள் இன்னும் இது அருமை. உதாரணமாக, ஸ்ரீமதி பாலசரஸ்வதியின் தாயார் ஸ்ரீமதி ஜயம்மாள்  அத்தகைய மேலான சாரீரம் பெற்றிருக்கிறார்.

அதுபோலவே, அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் ஸ்ரீமதி பட்டம்மாளுடையது.  கீச்சுக் குரல் இல்லாமல் சுகபாவம் உள்ளது. துரித காலத்தில் பிர்காக்கள் போடுவதற்கும், சவுக்க காலத்தில் நின்று பாடுவதற்கும் ஏற்றதாய் அமைந்தது. பெரிய சபைகளில் கடைசி வரையில் கேட்கும்படியான கம்பீரமும் பொருந்தியது.

வித்தை:- சுருதி, லயம் இரண்டிலும் அணுவளவு குறை சொல்வதற்கும்        இடமில்லாமலிருப்பது மட்டுல்ல; ஸ்வரங்களைக் கையாளுவதிலும், தாள வித்தையிலும் இவரிடம் சில அபூர்வ வேலைப் பாடுகளைக் காண்கிறோம்.

இவர் ஸ்வரஜதிகள் பாடும்போது, ஸ்ரீமான் ராஜரத்தினத்தைப் போல், இனிமை குன்றாமல் வக்கிரமான ஸ்வரங்களைச் சேர்க்கும் சக்தி வெளியாகிறது. நாலு களைச் சவுக்கப் பல்லவி மூன்றாவது அட்சரத்தில் எடுத்து, அதை மூன்று காலங்களிலும் பாடுகிறார். சதுச்ர நடையிலிருந்து திச்ர நடைக்கும், திச்ர நடையிலிருந்து சதுச்ர நடைக்கும் மாறுகிறார். இது மிகவும் அபூர்வமான திறமை! காலஞ் சென்ற நாயனாப் பிள்ளை அவர்களினால் சமீப காலத்தில் திறமையுடன் கையாளப்பட்டு அவருக்கு இது அழியாத புகழைத் தந்தது. உண்மையில் ஸ்ரீமதி பட்டம்மாள், தாள வித்தையைப் பொறுத்தவரை நாயனாப் பிள்ளையைப் பின்பற்றுகிறார் என்று சொல்லலாம். 

[ படம்: மாலி நன்றி : விகடன் ] 


ஸ்ரீமதி பட்டம்மாளின் மற்றொரு விசேஷ திறமையையும் காண்கிறோம். உயர்தர வித்வான்களை அப்படியே பின்பற்றிப் பாடும் சக்தி அவரிடம் இருக்கிறது. 

ஸ்ரீமான்கள் நாயனாப் பிள்ளை, அரியக்குடி இராமானுஜ அய்யங்கார், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் இவர்களிடம் நாம் ரொம்பவும் அநுபவித்திருக்கும் பாட்டுக்கள் சிலவற்றை இவர் போட்டோ பிடித்ததுபோல் பாடுகிறார். சுய ஞானம் இல்லாமல் வெறும் 'இமிடிஷேன்' செய்வதாக மட்டுமிருந்தால், நமக்குச் சிரிப்புத்தான் உண்டாகும். அப்படியின்றி இவர் அந்தச் சரக்குகளையெல்லாம் தம்முடையதாகவே ஆக்கிக்கொண்டு அநுபவத்துடன் பாடுகிறபடியால், நமக்கு வியப்பும் உவகையும் உண்டாகின்றன. ஒவ்வொரு வித்வானிடத்தும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் ஏற்க வேண்டுமென்னும் ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் அந்த ‘போட்டோ’ பாட்டுக்கள் அறிகுறியாகின்றன. மேற்கண்ட வித்வான்களுடைய பாணிகளெல்லாம் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு நிற்பவை. அப்படி மாறுபட்ட வழிகளையெல்லாம் கற்றுக் கொண்டு, பாடி வெற்றியடைவது ஓர் அதிசயமான திறமையென்பதில் சந்தேகமில்லை.   

ஹிருதய பாவம்:- பிரசித்த வித்வான்களில்கூட இரண்டொருவரிடந்தான் நாம் கண்டிருக்கும் இந்த அம்சத்தை இந்த யுவதியிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த அம்சமும் வருங் காலத்தில் இவருடைய பாட்டில் நன்கு பிரகாசிக்கும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஸாஹித்யத்தில் கவனம் செலுத்தி அக்ஷரங்களைச் சுத்தமாக உச்சரித்துப் பாடுகிறார். அவற்றின் பொருளையும் உணர்ந்து, சொற்களை இசையுடன் கலந்து பாடத் தொடங்கும்போது, உயர்தர சங்கீதத்தில் நாம் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இவருடைய பாட்டில் பொருந்தி விளங்குவதைக் காண்போம்.


இளம் வயதிலேயே சங்கீத வித்தையில் பிரசித்தியடைபவர்களின் அபிவிருத்திக்கு ஒரு பெரிய தடை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு அடிக்கடி கச்சேரிகள் கிடைக்கின்றன; பக்கத்திலுள்ளவர்கள் அசாத்தியமாய்ப் புகழ்கிறார்கள். ஆகவே, மற்ற சிறந்த வித்வான்களின் பாட்டுக்களைக் கேட்பதற்குச் சந்தர்ப்பமும், ஊக்கமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றன. ஆகவே, ஓரிடத்திற்கு வந்ததும் அதற்கு மேல் அபிவிருத்தியடையாமலே நின்றுவிடுகிறார்கள். ஸ்ரீமதி பட்டம்மாள் விஷயத்தில் அப்படி ஏற்படக்கூடாதென்பது நம்முடைய கோரிக்கை. இது வரையில் அத்தகைய தடை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சென்ற ஒரு வருஷ காலத்தில் இவருடைய கச்சேரிகளில் சிறந்த அபிவிருத்தியைக் காண்கிறோம். 'முன்னு ராவணா', 'சிவே பாஹிமாம்', 'மானஸ குரு குஹ', 'அக்ஷயலிங்க விபோ' முதலிய கீர்த்தனங்கள் வர வர மெருகு பெற்று வருகின்றன. கல்யாணி, தோடி, கரகரப்ரியா, ஜகன் மோஹினி, மலய மருதம் முதலிய ராகங்களின் ஆலாபனமும் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. 

புதிய கீர்த்தனங்களும் கற்றுப் பாடி வருகிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு கச்சேரிகளில் ஸ்ரீமான் கோடீசுவரய்யர் அவர்களின் ‘வாரணமுக’ என்னும் ஹம்ஸத்வனி கீர்த்தனமும், ‘ஐயனே - எனை ஆட்கொள் மெய்யனே” என்னும் காம்போதி கீர்த்தனமும் மிகவும் நன்றாய் சோபித்தன. இப்படியே அபிவிருத்தியடைந்து வந்தால், சங்கீத உலகத்தில் ஸ்ரீமதி பட்டம்மாள் தனிச் சிறப்பு வாய்ந்த பதவியை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.

[ நன்றி : ஸரிகமபதநி’ டிசம்பர் 2000 இதழ் ]

இத்துடன் நிறுத்தினாரா ‘கல்கி’ ? இல்லை, விகடனை விட்டு 40-இல் விலகிச் சொந்தமாக ‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்கியபின், பட்டம்மாளைப் பற்றி அருமையாக எழுதினார்.


(  தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

டி.கே.பட்டம்மாள் -2

டி.கே.பட்டம்மாள்

சங்கீத சங்கதிகள்

DKPATTAMMAL-FILM-SONGS

வியாழன், 20 மார்ச், 2014

பி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6

365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை
பி.ஸ்ரீ


பி.ஸ்ரீ. ஆசார்யாவுக்கும் ‘ஆனந்தவிகட’னுக்கும் நெடுநாள் தொடர்பு உண்டு. 1930- இல் தொடங்கிய அந்த அனுபவங்களைப் பற்றிப் பி. ஸ்ரீயே “நான் அறிந்த தமிழ்மணிகள்” என்ற நூலில் விவரமாய்ச் சொல்லியிருக்கிறார்.

சட்டக் கல்லூரியில் படித்து வந்த பி.ஸ்ரீயின் சகோதரர் ஏ.என்.மகரபூஷணம் மூலமாகத் தான்  ‘கல்கி’யின் நட்புக் கிடைத்தது பி.ஸ்ரீக்கு. பிறகு வாசனின் நட்பும் கிட்டியது. முதலில் கல்கி அவரை விகடன் ஆண்டுமலர் ஒன்றில் ஓர் இலக்கியக் கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொண்டார். பி.ஸ்ரீ ’குற்றாலக் குறவஞ்சி’யில் வரும் குறிகாரியான குறத்தியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்; பத்து ரூபாய் சன்மானமும் கிடைத்தது!  பிறகு, ஆழ்வார்களைப் பற்றி” திவ்யப்பிரபந்த சாரம்”, வியாச பாரதத்திலிருந்து கதைகள், நாயன்மார்களைப் பற்றிச் “சிவநேசச் செல்வர்கள்” , “கம்ப சித்திரம்” என்ற தலைப்பில் கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதினார். இக் கட்டுரைகளைப் பொதுமக்கள் பாராட்டியதால் , “சித்திர ராமாயண’க் கட்டுரைகளை பல வருடங்களாக எழுத பி.ஸ்ரீக்கு இன்னொரு வாய்ப்புக் கிட்டியது.

பேராசிரியர் 'கல்கி' பி.ஸ்ரீ அவர்களைவிட வயதில் சிறியவர். இருந்தாலும், 1938-இல் வெளியான பி.ஸ்ரீ -யின் " திவ்ய பிரபந்த ஸாரம்" என்ற நூலுக்கு கல்கியை முன்னுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார் பி.ஸ்ரீ.

அந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதி { நன்றி: பொன்னியின் புதல்வர், சுந்தா ]

" இந்தப் புத்தகத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கும் திவ்வியப் பிரபந்தக் கட்டுரைகள் ஆனந்த விகடனில் பிரசுரமாகிக் கொண்டு வந்தபோது, ஒரு நண்பர், "இந்த ஆழ்வார் கட்டுரைகளை யாராவது படிக்கிறார்களா? " என்று கேட்டார். "படிக்காமற் போனால், ஆழ்வார்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை" என்று பதில் சொன்னேன். "

சரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த பகுதியைக் காண்போமா?
மகேந்திர மலையின் மீது, பேருருவம் கொண்ட அனுமன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான்.

365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை

பி.ஸ்ரீ


[ நன்றி ; விகடன் ]

தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்; 

360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா
364. முகஸ்துதியா , சக்தி ஸ்துதியா?பி. ஸ்ரீ படைப்புகள்

(தொடரும்) 

செவ்வாய், 11 மார்ச், 2014

எஸ். எஸ். வாசன் - 1

எங்கள் ஆசிரியர் 
கொத்தமங்கலம் சுப்பு

மார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள். 


அவர் நினைவில், கொத்தமங்கலம் சுப்பு விகடனில் 1969-இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.
"கொத்தமங்கலம் சுப்பு ஒரு குழாய்; அதைத் திறந்து விட்டால், கற்பனை கொட்டும் என்று மாலி கூறினார். அதனால், உங்களை மாசம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்கிறேன்" என்றார் வாசன்.

அன்பர் பி.எஸ்.ராமையாவும் நானும் 'மதன காமராஜன்' படத்தில் உழைக்கத் துவங்கினோம். வாசனின் மேதாவிலாசத்தை அந்தப் படத்திலேயே கண்டேன்.

'இந்தப் படத்தில் மொத்தம் 31 கரகோஷங்கள் கிடைக்கும்' என்று மதிப்பிட்டார் வாசன். படத்தை முடித்து ஸ்டுடியோவில் பலர் முன்னிலையில் போட்டுக் காட்டியதில், 30 கரகோஷங்கள் தான் கிடைத்தன; மீதி ஒன்று எதனால் விட்டுப்போனது என்று ஆராய்ந்தார். அதைக் கண்டு பிடித்து, அந்தக் காட்சியை மறு படியும் டி.எஸ்.துரைராஜ் அவர் களைக் கொண்டு 'ரீ டேக்' எடுத்துப் பிறகு போட்டுக் காட்டினார். 31 கரகோஷங்களும் கிடைத்தன. 'ஒரு கரகோஷத்திற்கா இந்தப் பாடு' என்று எல்லோரும் எண்ணினார்கள். ஆனால், அந்த ஒரு கரகோஷத்தின் வசூல் ஒரு லட்சம் என்பது அவருக்குத் தெரியும்.

வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில் வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப் பார். அதிலும், 'சந்திரலேகா' படப்பிடிப்பின்போது அவர் பட்டபாடு சொல்லத் தரமன்று.
ஸ்டுடியோவில் மூலைக்கு மூலை யானைகளும் குதிரைகளும் கட்டிக்கிடக்கும். அகழிகளின் அருகில் காவலர்கள் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும் அரண்மனைகளாக இருக்கும். அந்தப்புரப் பணிப் பெண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். போர்ட்டிகோக்களில் அரண்மனைக் கோச்சுகளும், 'நான்கு குதிரை சாரட்'டுகளும் நிற்கும். 'மெஸ்'ஸிலிருந்து அரண்மனைச் சமையல் மணம் வந்துகொண்டே இருக்கும். வாத்தியக்காரர்களும் சங்கீத வித்வான்களும் கொண்ட ஜெமினி ஆர்கெஸ்ட்ரா முழங்கிக்கொண்டே இருக்கும். 'நம்பர் ஒன்' ஸ்டுடியோவில் ஜெர்மன் மாது ஒருத்தி 100 நாட்டிய வனிதைகளை ஆட்டி வைத்துக்கொண்டு இருப்பாள். ஆயுத சாலைகளில் கத்திகள் தயார் ஆகும். ஸ்டன்ட் வீரர்களும், ரஞ்சன், ராதா, சியாம்சுந்தரும், சோமுவும் வாட்போர் நடத்திக் கொண்டே இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய சமஸ்தானமாகக் காட்சி அளிக்கும். ஆனால், 'எங்கே அந்த சமஸ்தான மன்னர்? ராஜா எங்கே?' என்று கேட்டால், ஒரு தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல் மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு, அவர் எங்கும் இருப்பார். 

புதிதாய் அமர்த்திய தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்... "எங்கே தம்பி, முதலாளி? இதைப் பார்க்கவே வரமாட்டேங்கறாரே?"

"பட முதலாளி இல்லியா... எத்தினியோ வேலை இருக்கும்!"
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள் அருகில் நிற்கும் எளிய மனிதர் தான் முதலாளி என்பது தெரியவில்லை. அந்த முதலாளிக்கும், "நான்தான் உங்கள் முதலாளி" என்று சொல்லத் தோன்றவில்லை. ஏன் என்றால், தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை. 

[ நன்றி : விகடன் ] 


தொடர்புள்ள பதிவுகள்; 


’கல்கி’ பற்றி வாசன் 

எஸ்.எஸ்.வாசன்


கொத்தமங்கலம் சுப்பு

ஞாயிறு, 9 மார்ச், 2014

பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5

364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?

பி.ஸ்ரீ  கம்பனின் இசைச் செல்வத்தை நாளதுவரை யாரேனும் முழுவதும் கண்டுவிட்டதாகச் சொல்லமுடியுமா? இசைக்கு அடுத்தபடியாக மனோபாவந்தான் கவிஞனுக்கு மூலதனம். அந்த மூலதனம் இல்லாமல் --கவிக்கடை போடுவதெல்லாம் வீண்முயற்சியே. கம்பனது மனோபாவம் ( imagination)  பல்வேறு வடிவங்களைக் கொண்டு ஒரு அற்புத சித்திரசாலையைப் படைத்திருக்கிறது. எனவேதான் இதைக் ’கம்பசித்திரம்’ என்கிறோம். இதற்கு மேலாக கம்பனிடம் நாம் காண்பது நாடகப் பண்பு. “கம்ப நாடகம்” என்று மணவாள மாமுனிகள் கூறுவது சிந்திக்கத் தக்கது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதும், ஊடுருவிப் பார்க்கும்போதும் நமக்குத் தோன்றுவதுதான் என்ன? 

இது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “

        --பி.ஸ்ரீ,ஆசாரியா, சரசுவதி ராமநாதன்,
       “ கம்பன் கலைக்கோயிலுக்கு ஒருகைவிளக்கு “ என்ற நூலில்.

சரி, நம் “சித்திர ராமாயண”ப் பயணத்தில் பி. ஸ்ரீ-யின் அடுத்த கட்டுரையைப் பார்ப்போமா? ஜாம்பவான் அனுமனின் சக்தியைப் புகழ்ந்து பேசும் கட்டம்.

ஒரு குறிப்பு: சரியாக, 70 -ஆண்டுகளுக்கு முன் ( ஆம், 1944 -இல் ) விகடனில் தொடங்கப்பட்ட இத் தொடரில் முதலில் ஆர்ட் டைரெக்டர், ஓவியர் ‘சேகர்’ தான் ஓவியங்களை வரைந்தார் . பிறகு தான் ‘சித்திரலேகா’வின் ஓவியங்கள்.)
======


[ நன்றி: விகடன், படம்: சித்திரலேகா ]

தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்:

360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா


பி. ஸ்ரீ படைப்புகள்

( தொடரும் )