கம்பராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மார்ச், 2017

பி.ஸ்ரீ. - 17: ராம ராஜ்ய அரசியல்

ராம ராஜ்ய அரசியல்

பி.ஸ்ரீ. 

1945-இல் ’ சுதேசமித்திர’னில் வந்த ஒரு கட்டுரை. 






[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

சனி, 22 அக்டோபர், 2016

ரா.பி.சேதுப்பிள்ளை -3

மிதிலைக் காட்சி
பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை

ரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடைக்கு இதோ ஒரு காட்டு!
=====================

மாலைப் பொழுதில் மெல்லிய தென்றல் மிதிலை மாநகரில் வீசுகின்றது. மாடங்களில் அமைந்த மணிப் பூங்கொடிகள் அசைந்தாடுகின்றன. அரச வீதியின் இருமருங்கும் வரிசையின் விளங்கிய வீடுகளினின்றும் எழுந்த வீணையொலி வானின் வழியே தவழ்ந்து வருகின்றது.முத்துப்போற்பூத்து, மரகதம்போற் காய்த்து, பவளம்போற் பழுத்து இலங்கும் கமுகு மரத்திற் கட்டிய ஊஞ்சலில் பருவ மங்கையர் பாடி ஆடுகின்றார். பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்துப் பாவையர் விளையாடுகின்றார். அரங்குகளில் நடனமாதர் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்லக் களிநடம் புரிகின்றார். இத்தகைய இன்பம் நிறைந்த அணிவீதியில் கோமுனிவர் முன்னே செல்கின்றார்.மஞ்செனத் திரண்ட மேனியும் கஞ்சமொத் தலர்ந்த கண்களும் வாய்ந்த இராமன் அவர் பின்னே செல்கின்றான். பொன் மேனி வாய்ந்த இலக்குவன் அவன் பின்னே போகின்றான்.
                                                                      1
அப்பெரு வீதியில் அமைந்த கன்னிமாடத்தின் மேடையிலே மிதிலை மன்னன் மகளாய சீதை மெல்லிய பூங்காற்றின் இனிமையை நுகர்ந்து இன்புறுகின்றாள். அருகே அமைந்த அழகிய துறையில் அன்னம் பெடையோடு ஆடக் கண்டு களிக்கின்றாள். அந்நிலையில் கன்னிமாடத்தின் மருங்கே செல்லும் கமலக்கண்ணன் மேடையிலே இலங்கும் மின்னொளியை நோக்குகின்றான். பருவமங்கையும் எதிர் நோக்குகின்றாள். இருவர் கண்நோக்கும் இசைகின்றன; காமனும் ஒரு சரம் கருத்துற எய்கின்றான். பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணிப்புற்ற இராமன், காதலை மனத்திற் கரந்து, வீதியின் வழியே சென்று மறைகின்றான்.

சீதையின் கண்வழிப் புகுந்த காதல் நோய் பாலுறுபிரை யெனப் பரவுகின்றது. வீதிவாய்க் கண்ட வீரனது கோலத்தைத் தன் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கின்றாள்.

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மையல் நோயால் நையலுறுகின்றாள். அகத்தில் நிறைந்து நின்ற அஞ்சன வண்ணத்தை அந்திமாலையிற் கண்டு நெஞ்சம் தளர்கின்றாள். இராப் பொழுதில் எங்கும் அமைதி நிலவுகின்றது. உறக்கமின்றி வாடி வருந்துகின்றாள். அருகிருந்த சோலையில் ஓர் அன்றிற் பறவை அரற்றுகின்றது. துணையின் பிரிவாற்றாது அரற்றிய பறவையின் குரல் சீதையின் காதலைக் கிளருகின்றது. அப்போது மங்கை அக் குரலெழுந்த திசையை நோக்கி,

வெளிநின் றவரோ போய்மறைந்தார் 
  விலக்க ஒருவர் தமைக்காணேன் 
எளியள் பெண்என் றிரங்காதே 
  எல்லி யாமத் திருளூடே 
ஒளியம் பெய்யும் மன்மதனார் 
  உனக்கிம் மாய முரைத்தாரோ 
அளியன் செய்த தீவினையே 
  அன்றி லாகி வந்தாயோ' 

என்று பழிக்கின்றாள். அந்நிலையில் வெண்திங்கள் வானத்திற் கதிர் வீசி எழுகின்றது. சீதையின் காதல் மேன்மேலும் பொங்குகின்றது. கரு நெருப்பாய்த் தோன்றிய இருளின் இடையே எழுந்த வெண்ணெருப்பே என்று வெம்மை விளைத்த விண்மதியை வெறுக்கின்றாள். அடியுண்ட மயில் போல் அமளியிற் குழைந்து விழுகின்றாள். இராப் பொழுது இவ்வாறு கழித்தொழிகின்றது. காலையில் எழுந்த கதிரவன் ஒளியால் கன்னிமாடத்தினருகே அமைந்த பொய்கையில் செங்கமலங்கள் இதழ் விரிந்து மலர்கின்றன. இரவு முழுவதும் கண்ணுறங்காது வருந்திய சீதை சிறிது களைப்பாறுமாறு அக் கமலப் பொய்கையின் அருகே செல்கின்றாள்.





 ஆண்டு மலர்ந்து நின்ற செந்தாமரை மலர்களில் தன் காதலனது கண்ணின் நிறத்தைக் காண்கின்றாள். அம்மலர்களைச் சூழ்ந்து படர்ந்திருந்த தாமரை யிலைகளில் தன் அன்பனது மேனியின் நிறத்தைக் காண்கின்றாள். கண்ணுளே நின்ற காதலனது கண்ணின் நிறமும் மேனியின் வண்ணமும் காட்டி ஒருவாறு மனவாட்டம் தீர்த்த கமலப் பொய்கையை நோக்கி,

பெண்இவண் உற்ற தென்னும் 
  பெருமையால் அருமை யான 
வண்ணமும் இலைக ளாலே 
  காட்டலால் வாட்டத் திர்ந்தேன் 
தண்ணறுங் கமலங் காள்! என் 
  தளிர்நிற முண்ட கண்ணின் 
உண்ணிறம் காட்டி நீர் என் 
  உயிர்தர உலாவினீரே!’ 

என்று முறையிடுகின்றாள்.
                                                                       2
மிதிலை மாநகர் வீதியில் நடந்து சென்ற மூவரும் மன்னன் மாளிகையை அடைந்து தனித்தனியே கண்ணுறங்கச் செல்கின்றார்கள். கன்னிமாடத்திற் கண்ட மயிலுடைச் சாயலாளை மனத்திடை வைத்த நம்பியின் கண்ணிலும் கருத்திலும் அக் கன்னியே இலங்குகின்றாள். யாரும் யாவையும் இனி துறங்கும் இராப்பொழுது முழுவதும் நெடுந் துயரால் நலிகின்றான். அவன் காணும் பொருளெலாம் அவள் பொன்னுருவாகின்றன. அந்நிலையில் நம்பியின் உள்ளத்தில் ஒர் ஐயம் பிறக்கின்றது. மாடத்திற் கண்ட மங்கை தான் காதலித்தற்குரிய கன்னியோ அல்லளோ என்று திகைக்கின்றான். அல்லளாயின் எல்லையற்றதன் காதல் என்னாகும் என் றேங்குகின்றான். சிறிது சிந்தனையில் ஆழ்கின்றான்.' என் உள்ளம் நல்வழியிற் செல்லுமே யல்லாது அல்வழியிற் செல்லாது. ஆதலால் என் மனம் பற்றிய மங்கை யான் காதலித்தற்குரிய கன்னியேயாதல் வேண்டும் என்று தடுமாறும் உள்ளத்தைக் தேற்றுகின்றான். பொழுது புலர்ந்ததும் முனிவரும் மைந்தரும் நீராடி நியமம் முடித்து மிதிலை மன்னனது வேள்விச் சாலையை அடைகின்றார்கள்.

தன் வேள்வியைச் சிறப்பிக்க வந்த தவமுனிவனை மிதிலை மன்னன் உரிய முறையில் வரவேற்கின்றான். மூவரும் முறையாக அமர்ந்த பின்னர் மைந்தர் இருவரையும் மன்னன் மனமகிழ்ந்து பார்க்கின்றான். அவர் முகத்தின் அழகினைக் கண்ணால் முகந்து பருகுகின்றான். அவர் யாரென்று முனிவரிடம் வினயமாக வினவுகின்றான். ”அரசே இவர் விருந்தினர்; உன் வேள்வி காண வந்தார்; வில்லும் காண்பார்; பெருந்தகைமைத் தசரதன் தன் புதல்வர்”  என முனிவர் மாற்ற முரைக்கின்றார். அவர் கருத்தறிந்த மன்னன் அகமகிழ்ந்து சீதையின் மணவில்லை எடுத்துவரப் பணிக்கின்றான். மலைபோன்ற வில் மைந்தர் முன்னே வருகின்றது. அவ்வில்லின் தன்மையையும் அதனை வளைக்கும் திறலோன் அடையும் பரிசின் .பெருமையையும் சதானந்த முனிவன் விரித்துரைத்து,

அன்றுமுதல் இன்றளவும் ஆரும்.அந்தச் சிலையருகு
சென்றுமிலர் போயொளித்தார் தேர்வேந்தர் திரிந்துமிலர்
என்றுமினி மணமுமிலை என்றிருந்தேம் இவனேற்றின்
நன்றுமலர்க் குழற்சிதை நலம்பழுதா காது'

என்கின்றான். எல்லாமறிந்து கோமுனிவர் சடைமுடி துளக்கி இராமன் திருமுகத்தை நோக்குகின்றார். குறிப்பிற் குறிப்புணரும் வீரன், முனிவர் நினைந்தவெல்லாம் நினைந்து, நெடுஞ்சிலையை அனைவரும் அசைவற்றுக் கண்ணிமையாது நோக்குகின்றார். மலையெனக் கிடந்த சிலையை வீரன் மாலை போல் எடுக்கக் காண்கின்றார். இற்ற பேரோசை கேட்கின்றார். மாநிலம் நடுங்க முறிந்து விழுந்த சிலை கண்டு மண்ணவர் கண்மாரி பொழிகின்றார். விண்ணவர் பூமாரி சொரிகின்றார்.


                                                      3.
மணவில்லை வீரன் இறுத்தான் என்னும் செய்தியைச் சீதையிடம் அறிவிக்குமாறு நீலமாலை யென்னும் தோழி விரைந்தோடிச் செல்கின்றாள். ஆடையும் அணிகளும் அலைந்து குலையக் கன்னிமாடத்தை யடைந்த நீலமாலை, வழக்கம் போல் அடிபணிந்து அடங்கி நில்லாது, அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடுகின்றாள். பாடுகின்றாள். மதுவுண்டவள் போல் களித்தாடும் மாலையை நோக்கி, 'கந்தரி, என்ன நிகழ்ந்தது, சொல்' எனச் சீதை வினவுகின்றாள். வில்லொடிந்த செய்தியை நேராகக் கூறாது, நீலமாலை நெடுங்கதை நிகழ்த்துகின்றாள். 'மாதரசி, தசரதன் என்னும் பெயர் வாய்ந்த மன்னன் ஒருவன் உள்ளான்; அவன் கரி, பரி, தேர், காலாள் என்னும் நால்வகைச் சேனையுடையான்; சிறந்த கல்வி கேள்வியுடையான் நீதிவழுவாத நிருபன். மாரி போல் வழங்கும் வள்ளல். அன்னவன் மைந்தன் அனங்கனையும் வெல்லும் அழகுடையான்; மரா மரம் போல் வலிய தோளுடையான்; திருமாலின் குறியுடையான். இராமன் என்னும் பெயருடையான். அவன் தம்பியோடும் முனிவரோடும் நம் பதி வந்தெய்தினான். திரிபுரமெரித்த புனிதன் எடுத்த வரிசிலையைக் காண விரும்பினான். வில்லை எடுத்து வருமாறு நம் மன்னன் பணித்தான். அது வந்தடைந்தது. முன் பழகியவன் போல் நொடிப் பொழுதில் அதனை எடுத்தான். வளைத்தான். கண்டோர் நடுங்குற வரிசிலை முறிந்து வீழ்ந்தது” என்று சொல்லி முடிக்கின்றாள்.



இவ்வாறு நீலமாலை நெடுங்கதை நிகழ்த்தும் பொழுது சீதையின் மனம் ஊசலாடுகின்றது. முனிவனோடும் தம்பியோடும் போந்த தசரத ராமன் மணவில்லை இறுத்தான் என்று நீலமாலை கூறுகின்றாள். ” வில்லை வளைக்கும் திறல் வாய்ந்த வீரனுக்கு என்னை மணஞ்செய்து கொடுப்பதாக வாய்மை தவறாத மன்னன் வாக்களித்துள்ளான். இன்று வில்லை யிறுத்த வீரன் நான் வீதிவாய்க் கண்டு காதலித்த தலைமகனோ? அன்றி வேறொருவனோ? முனிவனோடு வந்த மேக வண்ணன், தாமரைக் கண்ணன், சிலையை ஒடித்தான் என்று தோழி கூறினாள். ஆம், நான் கண்ட காதலனே அவன்!” என்று உள்ளம் தேறி உடல் பூரிக்கின்றாள். ” ஒரு கால் இவ் அடையாளம் எல்லாம் அமைந்த வேறொரு வீரன் வில்லை ஒடித்திருப்பானோ? அவன் வேறு, இவன் வேறு என்றால் என் செய்வேன்? நான் வீதியிற் கண்ட காதலனும் வில்லை யொடித்த வீரனும் ஒருவனே யெனில் அவனை மணம் புரிவேன்; இன்றேல் ஆவி துறப்பேன்! “ என்று உறுதி கொள்கின்றாள்.
                                                                  4
வில்லை யொடித்தமையால் மிதிலை மன்னன் மங்கையை மணத்தற்குரியனாய இராமன் மாளிகையில் விருந்தின னாயிருக்கின்றான். மண மகனாக அனைவராலும் மதிக்கப்படுகின்றான். எனினும் அவன் உள்ளம் அமைதியுறவில்லை; வில்லிறுத்ததன் பயனாகப் பெற்ற மங்கை, மேடையிலே கண்ட மாதோ, அல்லளோ என்னும் ஐயத்தால் அலமருகின்றது. அம் மங்கையை நேராகக் கண்டாலன்றி ஐயம் தீருமாறில்லை எனக் கருதி அவ்வேளையை எதிர்பார்க்கின்றான். திருமணத்தைச் சிறப்பித்தற்குரிய அரசரும் பிறரும் மிதிலையில் வந்து நிறைகின்றார்கள். தசரத மன்னன், மிதிலையர்கோன் அழைப்பிற்கிணங்க, நால்வகைச் சேனையோடும் உற்றார் உறவினரோடும் எழுந்து வருகின்றான். கோசலநாட்டு வேந்தனை மிதிலை வேந்தன் அன்புடன் வரவேற்கின்றான். இருபெரு வேந்தரும், குறுநில மன்னரும், அருந்தவ முனிவரும் அரச சபையில் நிறைத்திருக்கிறார்கள்.

சீதையை அலங்கரித்துச் சபைக்கு அழைத்துவருமாறு மிதிலை மன்னன் பணிக்கின்றான். இயற்கை யழகு வாய்ந்த சீதையை நல்லணிகளால் அழகு செய்து தோழியர் அழைத்து வருகின்றார்கள். அன்னமும் அரம்பையரும் நாண அழகுற நடந்து சீதை மணி மன்றத்தினுள்ளே வருகின்றாள். அங்கு நிறைந்திருந்த மாந்தர் விழித்த கண்ணிமையாது நோக்குகின்றார். வில்லை யிறுத்த வீரன் மங்கையைக் காண்கின்றான். தான் முன்னமே கண்டு காதலித்த கன்னியே அவள் என்றறிந்து உளங் குளிர்ந்து விம்முகின்றான். திருமகளுக்குரிய திருமாலே தலைமகனாக வந்தான் என்று வசிட்டமா முனிவர் வாயார வாழ்த்துகின்றார். ”நலமெலாம் ஒருங்கேயமைந்த இந்நங்கை பரிசென்றால் இராமன் இச்சிலையை மட்டுமோ ஒடிப்பான்? ஏழு மலையையும் தகர்ப்பானே”  என்று கோசிக முனிவர் இறுமாந்திருக்கின்றார். அங்கிருந்த குறுநில மன்னர் முதலாயினோர் கைகூப்பித் தொழுகின்றார்கள். சீதை அழகுற நடந்து தாதையருகில் இட்ட தனியாசனத்தில் அமர்கின்றாள்.

மன்றத்தின் நடுவே யமர்ந்தும் சீதையின் மனத்தில் நிகழ்ந்த ஐயம் தீரவில்லை. வில்லிறுத்த வீரனை நேராகக் கண்டு ஐயத்தை அகற்ற ஆசைப்படுகின்றாள். அவ் வாசையை நாணம் இடைநின்று தடைசெய்கின்றது. கண்ணெடுத்துப் பார்க்குமாறு உந்தும் காதலைப் பெண்மைக்குரிய நாணம் எதிர்த்து அடக்குகின்றது. ஆசையும் அழிவுறாது பெண்மையும் வசையுறாது கடைக்கண்ணால் நோக்குதல் சாலும் என்றெண்ணுகின்றாள். நடந்து வருகையில் நிலை குலைந்திருந்த கை வளைகளைத் திருத்தத் தலைப்படுகின்றாள். சீதையின் திருமுகச் செவ்வியை நோக்கியிருந்த கண்களெல்லாம் அவள் கை வளை வரிசையில் ஈடுபடுகின்றன. அந்நிலையில் எதிரே இருந்த இராமனைக் கடைக்கண்ணால் கண்டு இன்புறுகின்றாள். கன்னிமாடத்தின் மேடையிலே நின்று கண்ட காதலனே வில்லை யொடித்த வீரன் என்று தெளிகின்றாள். கண் வழிப்புகுந்த தன் கருத்தில் உறைந்த காதலன் வடிவத்தைத் தன்னெதிரே அமர்ந்திருந்த இராமனிடம் கண்டு களிக்கின்றாள். இத்தகைய காதலர் இருவருக்கும் மறுநாட் காலையில் திருமணம் நிகழ்கின்றது.

மிதிலைக் காட்சியென்னும் காதலர் காட்சியில் கம்பர் அமைத்துள்ள நாடகக் கூறுகள் யாவருக்கும் நன்கு விளங்கும். உருவிலும் திருவிலும் ஒத்த தலைமகனும் தலைமகளும் ஊழ்வினைப் பயனால் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுக் காதலுறுதலும், அம் மையலை மனத்திலடக்கி நையலுறுதலும், பின்பு அதனை யறிந்த பெற்றோர் காதலர் இருவருக்கும் திருமணம் முடித்தலும் தமிழ்நாட்டுப் பழைய மணமுறையாகும். இன்னும் ஓர் ஆடவனைக் காட்சியாற் காதலுற்ற பின்னர் மற்றொருவனை மனத்திலும் தீண்டாத மாட்சி நிறையமைந்த மங்கையர்க்குரியதாகும். அறநெறி திறம்பாத அருங்காதலை மங்கையர் உயிரினும் உயர்வாகப் போற்றுவர். இத்தகைய அறநெறிக்குச் சான்றாக நின்ற சீதையின் காதலை ஒர் களவியல் நாடகமாக அமைத்தருளிய கம்பர் கவித்திறம் அறிந்து போற்றத் தக்கதாகும்.

[ நன்றி. கம்பன் கவிதை- நவயுகப்பிரசுராலயம் ;  கம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995; ஓவியங்கள்: சக்தி விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பி.ஸ்ரீ. - 14: கம்பர் யார்?

கம்பர் யார்? 
பி.ஸ்ரீ.






 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

சனி, 13 ஆகஸ்ட், 2016

பி.ஸ்ரீ. -13 : கம்பன் திருநாள்

கம்பன் திருநாள்

பி.ஸ்ரீ.

சென்னையில் 42- ஆம் ஆண்டு கம்பன் விழா நடக்கும் தருணம் இது.

கம்பன் திருநாளைப் பங்குனி உத்திரத்தில் கொண்டாடுவோம் என்கிறார் பி.ஸ்ரீ. சுதேசமித்திரனில்  1945 -இல் வந்த கட்டுரை ஒன்று இதோ!



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பி.ஸ்ரீ. -12 :கம்பன் கண்ட சித்திரசாலை

சித்திர ராமாயணம்   
கம்பன் கண்ட சித்திரசாலை  
பி.ஸ்ரீ

ஏப்ரல் 16. பி.ஸ்ரீ. அவர்களின் பிறந்த நாள்.

அவர் நினைவில், இதோ அவர் விகடனில் எழுதிய ‘சித்திர ராமாயணம்’ தொடரின் முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: ( சித்திர ராமாயணம் 1944-இல் தொடங்கினது. முதலில் ஓவியங்கள் வரைந்தவர் ஏ.கே.சேகர்; பின்னர் ‘சித்திரலேகா’.]
=============
[  ஓவியம்: ஏ.கே.சேகர் ]

கும்பகோணத்திலுள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலின் உட்சுவர்களில் ராமாயணக் காட்சிகள் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. அந்தக் கோயில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது என்றும், அந்த ராமாயணச் சித்திரங்கள் விஜயநகர மகாராஜ்ய காலத்துச் சித்திரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். ராமாயணக் கதை முழுவதும் 220 சித்திரங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கும்பகோணம் கோயிலில் உள்ள சித்திரங்கள் சில நூற்றாண்டுகளுக்குள்ளே ஒளி மழுங்கிப் போய்விட்டன. அவற்றைச் சமீப காலத்திலேதான் புதுப்பித்து வைத்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் கழிந்தும் ஒளி குன்றாத  அழகு மங்காத  சித்திரங்களும் உண்டு; அவை நமது நாட்டிலும் காணப்படுகின்றன. எனினும், எந்தச் சித்திரமும் எப்போதும் அப்படியே பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

ஆனால், ஒரு சித்திரக்காரன்  சுமார் 800 வருஷங்களுக்கு முன் இருந்தவன்   என்றும் அழியாத சித்திரங்கள் எழுத வேணுமென்று ஆசைப்பட்டான். அவன் அந்தச் சித்திரங்களை உண்மையில் எழுதிவைக்கவில்லை; பாடி வைத்தான்! ''ஓஹோ! கவிச் சித்திரங்களா!' என்று உடனே கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம்; அவனுடைய சித்திரங்கள் 'பாடும்’ சித்திரங்கள்  'ஆடும்’ சித்திரங்கள் என்றும் சொல்லலாம். என்ன? அந்தச் சித்திரக்காரன் யார்?

மேடும் குளமும்
கும்பகோணத்திலிருந்து சுமார் பதினெட்டு மைல் தூரத்திலே தேரழுந்தூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. பெரிய கிராமந்தான்; கும்பகோணம்போல் பிரசித்தமான ஊரன்று. அதன் சரியான பெயர் திருஅழுந்தூர் அல்லது திருவழுந்தூர்; அழுந்தை என்று தேவாரத்திலே திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். அந்த ஊரைச் சேர்ந்தவன்தான் மேலே சொன்ன சித்திரக்காரன். அவ்வூரில் கம்பன் மேடு என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கேதான் கம்பன் வீடு இருந்தது என்கிறார்கள். ஆம்; அந்தச் சித்திரக்காரன் கம்பன்தான். சரி; ஊர் தெரிந்தது, பேர் தெரிந்தது; இன்னும் ஏதாவது தெரிகிறதா?

திருவழுந்தூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் விஷயமாகத் திருஞானசம்பந்தர் பாடியிருக்கும் தேவாரப் பதிகத்திலே, அது வேத கோஷம் நிரம்பிய ஊர் என்று வருணிக்கப்பட்டிருக்கிறது. கம்பன் காலத்திலே அவ்வூரில் வடமொழிப் பயிற்சியும் தமிழ்மொழிப் பயிற்சியும், வேத வேதாந்தங்களோடு கலைகளும் ஒருங்கே விளங்கின என்று கருதலாம்; சைவமும் வைஷ்ணவமும் சமரஸமாகச் சிறந்து வளர்ந்தன என்று ஊகிக்கலாம். திருவழுந்தூருக்கு வடக்கே சுமார் ஆறு மைல் தூரத்தில் வெண்ணெய் நல்லூர் என்ற ஊர் இருக்கிறது. அதைச் 'சடையப்ப பிள்ளை கிராமம்’ என்றும் சொல்லுகிறார்கள். கம்பனுடைய தோழனான சடையப்ப வள்ளலைத்தான் 'சடையப்ப பிள்ளை’யென்றும் 'சடையப்ப முதலியார்’ என்றும் சொல்லுகிறார்கள். அந்தக் கிராமத்திலே ஒரு குளம். அந்தக் குளத்தையும், அந்த ஊரையும், சடையப்ப வள்ளலையும் ஒருங்கே சேர்த்துச் சிறப்பித்துக் கம்பன் பாடியிருப்பதாக ஒரு பாட்டு.



மோட்டெருமை வாவிபுக, முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே:  நாட்டில்
அடையா நெடுங்கதவும், 'அஞ்சல்’ என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்.

(மோட்டெருமை  பருத்த எருமை மாடுகள்; வாவி  குளம்; முட்டுவரால்  முட்டுகின்ற வரால் மீன்; வெண்ணை  வெண்ணெய் நல்லூர். அஞ்சல் என்ற சொல்  'அஞ்சாதே’ என்ற அபய வாக்கு; சரராமன்  சடையப்பனுடைய புனைபெயர்.)

எருமை மாடுகள் குளத்துத் தண்ணீரில் கிடப்பது கிராமாந்தரங்களில் இன்றும் நாம் சாதாரணமாய்க் காணும் காட்சி! அழுக்கை உண்ண வரும் மீன்கள் அந்த எருமைகளின் உடம்பிலும் மடுக்களிலும் முட்டுவதும் யாரும் பார்த்திருக்கக்கூடியதுதான். ஆனால், மூன்று அல்லது நாலு அடி வளர்ச்சியுள்ள வரால் மீன்கள் வந்து மடுக்களில் முட்டியதும் அந்த எருமைகள் கன்றை நினைத்துக் கொண்டு அங்கேயிருந்து வீடுவரையிலும் பால் சொரிந்துகொண்டே போகுமென்று கவிஞர் கற்பனை செய்யும்போது, அவ்வூரின் பால் வளத்தை  பஞ்சத்தை அறியாத அவ்வூரின் உணவு வளத்தை  நாமும் மனக் கண்ணால் ஒருவாறு பார்க்க முடிகிறது. ஆம்; பொருள் என்பதே ஸாராம்சத்தில் உணவுப் பொருள்தானே? 'பால் சொரியும் வெண்ணையே’ என்று அந்த வளம்தான் எவ்வளவு சமத்காரமாய்க் குறிக்கப்படுகிறது!

வால்மீகி காட்டிய சித்திரசாலை

கம்பனும் சடையப்பனுமாகிய இரண்டு நண்பர்களும் இளமையிலேயே ராம கதையில் ஈடுபட்டிருக்க வேண்டும். சடையப்பனுடைய அரண்மனை போன்ற மாளிகையிலே அடிக்கடி வால்மீகி ராமாயண காலட்சேபங்கள் நடைபெற்றிருக்கும் என்று ஊகம் செய்யலாம். அந்தக் காலட்சேபங்களைக் கேட்டுக் கேட்டுக் கம்பன் ராம சரித்திரத்தில் ஆழ்ந்து ராம பக்தனானதுடன், வால்மீகியின் கவிதை அழகிலும் மூழ்கி மோகித்துப் போயிருக்கவேண்டும். அந்தக் கவியின்பத்தை உள்ளத்திலும், அந்த இசை வெள்ளத்தைச் செவிகளிலும் தேக்கிக் கொண்டான் என்றே சொல்ல வேண்டும். அந்தக் கதையும் கவிதையும் பக்தியும் கம்பனை வெறி கொள்ளச் செய்து, இந்த மண்ணுலகத்திலேயே லட்சிய பூமியாகிய ஒரு பொன்னுலகத்தையும் காணும்படி செய்துவிட்டன. இதனால்தான் கம்பன் சொல்லுகிறான்:

வாங்கரும் பாதம் நான்கும்
  வகுத்தவான் மீகி என்பான்,
தீங்கவி செவிகள் ஆரத்
  தேவரும் பருகச் செய்தான்!
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை
  அன்பெனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான்
  என்ன, யான் மொழிய லுற்றேன்.

(வாங்கரும்  (ஒன்றை) எடுத்துவிட்டு (வேறொன்று) போட முடியாத பாதம்  (சுலோகங்களின்) அடி. தீங்கலி  இனிய கலிகள், ஆரநிரம்பும்படி. ஆங்கவன்  ஆங்கு அவன். நறவம்  கள். மாந்தி  குடித்து (முங்கையான்  ஊமையன்.)

'மகாகவியாகிய மகரிஷி புகழ்ந்த ராம ராஜ்யத்தை (கோசல நாட்டை) நானும் புகழ்ந்து பேசத் தொடங்குகிறேனே, ஊமை பேசத் தொடங்குவது போலே!' என்று எவ்வளவோ அடங்கிப் பேசுகிறான் கம்பன்! ஊமை பேசத் தொடங்கினால், அது கேவலம் உளறலாகத்தானே வரும்? ''அப்படியானால் நீ ஏன் பேசத் தொடங்குகிறாய்?' என்ற கேள்வியும் வரக் கூடுமல்லவா? அதற்குத்தான், ''அன்பு என்ற கள்ளைக் குடித்துவிட்டு (நறவம்கள்) நான் பேசத் தொடங்கினேன்!' என்கிறான். கள்ளுக்குச் 'சொல் விளம்பி’ (அதாவது, பேசச் செய்வது) என்று ஒரு பெயர். 'பேசாமடந்தை’யையும்  பேச வைக்கும் அந்தச் 'சொல் விளம்பி’தான் ஊமையைப் பேச வைக்க முடியுமா?

வால்மீகியின் 'சப்த சித்திரங்கள்’ மூலமாகக் கம்பன் ஒரு சித்திரசாலையைப் பார்த்துவிட்டான் என்றே சொல்லவேண்டும். அந்தச் சித்திரசாலையிலே வால்மீகிக்குப் பின் ஏற்பட்ட ராமாயண வளர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்க விரும்பினான். தமிழோடு வளர்ந்த கலைப் பண்புகளுக்கும் இடம் அளித்தான். விசேஷமாக, ராமாயண பாத்திரங்களையெல்லாம் தமிழ்நாட்டிலே தமிழருள்ளங்களிலேயே கண்டு, அந்தக் காட்சிகளைத் தமிழ்மயமாகிச் சித்திரித்தான்.

என்றும் வாடாத கவிச் சித்திரங்கள் நிறைந்த கம்பனின் இந்தப் புதிய சிருஷ்டி, என்றும் புதுமை வாய்ந்த சித்திரசாலையாகவே இருக்கிறது. இதைத்தான் கம்ப ராமாயணம் என்றும், கம்ப நாடகம் என்றும் சொல்லுகிறோம். இந்தக் கம்ப நாடகத்துலே, பிரபஞ்ச நாடகத்தையெல்லாம் பார்க்கலாம்.

சித்திரசாலையாகவும் நாடகசாலையாகவும் ஒருங்கே காட்சிதரும் கம்ப ராமாயணத்தின் மூலமாகக் கவிதைப் பேரின்பத்தை அனுபவிப்பது தமிழராய்ப் பிறந்தவர்களுக்கெல்லாம் கடமையும் உரிமையும் பாக்கியமுமாகும்

[ நன்றி: சக்தி விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்;

திங்கள், 5 மே, 2014

பி.ஸ்ரீ -7 : சித்திர ராமாயணம் -7

366.  கிஷ்கிந்தா காண்டத்தின் ஸ்தானம்
பி. ஸ்ரீ



கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதியை விவரிக்கும் இக்கட்டுரையில், பி.ஸ்ரீ கம்பனின் எல்லாக் காண்டங்களையும் பற்றித் தன் கருத்துகளைச் சுருக்கமாய்க் கூறுகிறார்.

1944 -இல் விகடனில் தொடங்கிய இத்தொடரில், 50-இல் எழுதிய ‘கிஷ்கிந்தா காண்டம் இறுதிவரையே 366 கட்டுரைகள் ( 7 ஆண்டுகள்! ) எழுதி இருக்கிறார் பி.ஸ்ரீ! அப்படியானால், மீதி எவ்வளவு கட்டுரைகள் எழுதியிருப்பார்? நீங்களே யூகித்துக் கொள்ளலாம். என்னிடம் அந்தக் கணக்குத் துல்லியமாக இல்லை! 1956/57 - ஆண்டில் தொடரில் (யுத்த காண்டத்தில் , “ மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்து நீ முடித்தி! ... போன்ற பாடல்கள் ) அசோகவனத்தில் நடக்கும் ராவணன் -சீதை சம்பாஷணையைப் படித்த நினைவு இருக்கிறது.  14 ஆண்டுகள்; சுமார் 700+ கட்டுரைகள்; 1957- செப்டம்பர் 22 இதழில்  நிறைவு பெற்றது. ( இவ்வளவு ஆண்டுகள் தொடர்ச்சியாக வேறெந்தத் தொடராவது எந்தத் தமிழ்ப் பத்திரிகையிலாவது வந்துள்ளதா ? தெரிந்தால் சொல்லுங்கள்! )

 பி.ஸ்ரீ கம்பனைப் பற்றி எழுதிய சில தொடர்கள்/ நூல்கள் .

‘கம்ப சித்திரம்’, ‘சித்திர ராமாயணம்’ என்ற முதல் இரண்டு தொடர்கள் விகடனில் வெளிவந்தன.

பிறகு, பி.ஸ்ரீ தன் 95-ஆம் வயதில் , சரஸ்வதி ராமநாதனுடன் இணைந்து எழுதிய ‘கம்பன் கலைக்கோயிலுக்கு ஒரு கைவிளக்கு’ என்ற நூல் 1980 -இல் ‘வானதி பதிப்பக’ நூலாக வந்தது. ( தன் வாழ்நாளில் ‘சித்திர ராமாயண’த்தை நூல்களாகப் பார்க்கமுடியாது என்று அவருக்குத் தோன்றியதோ, என்னவோ?) இந்தக் கடைசி நூல்  பி.ஸ்ரீ என்ற மாபெரும் கம்பராமாயண ஆய்வாளரை நினைவுபடுத்த இன்று என்னிடம் நூலாக உள்ளது. அதை வெளியிட்ட ’வானதி’க்கு என் நன்றிகள்!


**தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் இந்நாளில் கூடிய விரைவில், விகடன் பதிப்பகம் முழுத் தொடரையும் , ’சித்திரலேகா’வின் படங்களுடன் நூல்களாக வெளியிடும் நாளை எதிர்நோக்குகிறேன். 

பி.ஸ்ரீ -யின் ‘கம்ப சித்திரம்’ தொடரையும் நான் படித்ததில்லை. அதனையும் விகடன் வெளியிட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியே!




**

பின் குறிப்பு:

‘ சக்தி விகடன்’  இதழ்  2015 -2018 வருடங்களில் ‘ சித்திர ராமாயண’த் தொடரைச் சுருக்கி, படங்களுடன் வெளியிடத் தொடங்கினார்கள். அருமையான தொண்டு. ஆனால், என்ன காரணமோ , தொடரை ஆரணிய காண்டத்தின் நடுவில் நிறுத்தி விட்டார்கள்.  சிறு வயதில் நான் உன்னிப்பாகப் படிக்காத தொடரை இப்போதாவது படிக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன். என் ஆசையில் மண்!  ‘சக்தி விகட’னுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்தேன். ஊஹும் ...இதுவரை சித்திர ராமாயணம் அவ்விதழில் தொடர்ந்ததாகத் தெரியவில்லை. 

 தொடர் அவ்விதழில் வருவதானால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்! நான் மீண்டும் ‘சக்தி விகட’னைப் படிக்கத் தொடங்குவேன்!  

தொடர்புள்ள பதிவுகள் ;

360. தமிழகத்தில் ராம தூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா
364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?
365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை



பி. ஸ்ரீ படைப்புகள்

வியாழன், 20 மார்ச், 2014

பி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6

365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை
பி.ஸ்ரீ


பி.ஸ்ரீ. ஆச்சார்யாவுக்கும் ‘ஆனந்தவிகட’னுக்கும் நெடுநாள் தொடர்பு உண்டு. 1930- இல் தொடங்கிய அந்த அனுபவங்களைப் பற்றிப் பி. ஸ்ரீயே “நான் அறிந்த தமிழ்மணிகள்” என்ற நூலில் விவரமாய்ச் சொல்லியிருக்கிறார்.

சட்டக் கல்லூரியில் படித்து வந்த பி.ஸ்ரீயின் சகோதரர் ஏ.என்.மகரபூஷணம் மூலமாகத் தான்  ‘கல்கி’யின் நட்புக் கிடைத்தது பி.ஸ்ரீக்கு. பிறகு வாசனின் நட்பும் கிட்டியது. முதலில் கல்கி அவரை விகடன் ஆண்டுமலர் ஒன்றில் ஓர் இலக்கியக் கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொண்டார். பி.ஸ்ரீ ’குற்றாலக் குறவஞ்சி’யில் வரும் குறிகாரியான குறத்தியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்; பத்து ரூபாய் சன்மானமும் கிடைத்தது!  பிறகு, ஆழ்வார்களைப் பற்றி” திவ்யப்பிரபந்த சாரம்”, வியாச பாரதத்திலிருந்து கதைகள், நாயன்மார்களைப் பற்றிச் “சிவநேசச் செல்வர்கள்” , “கம்ப சித்திரம்” என்ற தலைப்பில் கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதினார். இக் கட்டுரைகளைப் பொதுமக்கள் பாராட்டியதால் , “சித்திர ராமாயண’க் கட்டுரைகளை பல வருடங்களாக எழுத பி.ஸ்ரீக்கு இன்னொரு வாய்ப்புக் கிட்டியது.

பேராசிரியர் 'கல்கி' பி.ஸ்ரீ அவர்களைவிட வயதில் சிறியவர். இருந்தாலும், 1938-இல் வெளியான பி.ஸ்ரீ -யின் " திவ்ய பிரபந்த ஸாரம்" என்ற நூலுக்கு கல்கியை முன்னுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார் பி.ஸ்ரீ.

அந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதி { நன்றி: பொன்னியின் புதல்வர், சுந்தா ]

" இந்தப் புத்தகத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கும் திவ்வியப் பிரபந்தக் கட்டுரைகள் ஆனந்த விகடனில் பிரசுரமாகிக் கொண்டு வந்தபோது, ஒரு நண்பர், "இந்த ஆழ்வார் கட்டுரைகளை யாராவது படிக்கிறார்களா? " என்று கேட்டார். "படிக்காமற் போனால், ஆழ்வார்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை" என்று பதில் சொன்னேன். "


சரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த பகுதியைக் காண்போமா?

மகேந்திர மலையின் மீது, பேருருவம் கொண்ட அனுமன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான்.

365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை

பி.ஸ்ரீ







[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

ஞாயிறு, 9 மார்ச், 2014

பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5

364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?

பி.ஸ்ரீ



  கம்பனின் இசைச் செல்வத்தை நாளதுவரை யாரேனும் முழுவதும் கண்டுவிட்டதாகச் சொல்லமுடியுமா? இசைக்கு அடுத்தபடியாக மனோபாவந்தான் கவிஞனுக்கு மூலதனம். அந்த மூலதனம் இல்லாமல் --கவிக்கடை போடுவதெல்லாம் வீண்முயற்சியே. கம்பனது மனோபாவம் ( imagination)  பல்வேறு வடிவங்களைக் கொண்டு ஒரு அற்புத சித்திரசாலையைப் படைத்திருக்கிறது. எனவேதான் இதைக் ’கம்பசித்திரம்’ என்கிறோம். இதற்கு மேலாக கம்பனிடம் நாம் காண்பது நாடகப் பண்பு. “கம்ப நாடகம்” என்று மணவாள மாமுனிகள் கூறுவது சிந்திக்கத் தக்கது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதும், ஊடுருவிப் பார்க்கும்போதும் நமக்குத் தோன்றுவதுதான் என்ன? 

இது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “

        --பி.ஸ்ரீ,ஆசாரியா, சரசுவதி ராமநாதன்,
       “ கம்பன் கலைக்கோயிலுக்கு ஒருகைவிளக்கு “ என்ற நூலில்.

சரி, நம் “சித்திர ராமாயண”ப் பயணத்தில் பி. ஸ்ரீ-யின் அடுத்த கட்டுரையைப் பார்ப்போமா? ஜாம்பவான் அனுமனின் சக்தியைப் புகழ்ந்து பேசும் கட்டம்.

ஒரு குறிப்பு: சரியாக, 70 -ஆண்டுகளுக்கு முன் ( ஆம், 1944 -இல் ) விகடனில் தொடங்கப்பட்ட இத் தொடரில் முதலில் ஆர்ட் டைரெக்டர், ஓவியர் ‘சேகர்’ தான் ஓவியங்களை வரைந்தார் . பிறகு தான் ‘சித்திரலேகா’வின் ஓவியங்கள்.)




======

[ நன்றி: விகடன், படம்: சித்திரலேகா ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்:

360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா


பி. ஸ்ரீ படைப்புகள்

( தொடரும் ) 

திங்கள், 17 ஜூன், 2013

கம்ப ராமாயண அகராதி

அகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர்! 


[அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)]
ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘இயல் விருதை’ப்  பெற்றபின் திரு நாஞ்சில் நாடன் தன் ஏற்புரையில் கம்பனைப் பற்றிப் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கம்பன் எவ்வளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பான் என்று தோராயமாகக் கணக்குப் போடும் போது, இப்போது அச்சில் இல்லாத கம்பன் அகராதி ஒன்றைக் குறிப்பிட்டார். மேலும், தான் ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற தலைப்பில் ஒரு நூலை அண்மையில் எழுதி முடித்திருப்பதாகவும் சொன்னார். இது என்னை  அச்சில் இல்லாத ‘அந்த அகராதி’ பற்றியும், அதன் ஆசிரியரைப் பற்றியும் எனக்குத் தெரிந்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. 

‘கம்ப ராமாயண அகராதி ‘ என்ற பெயரில்  5 பாகங்கள் வெளியிட்டவர் பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன். என்னிடம் மூன்றாம் பாகம் மட்டும் உள்ளது. (ஆகஸ்ட் 1978 பதிப்பு)  ( இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய -- சுந்தரராஜன் அவர்களிடம் யாழ்ப்பாணத்தில் தமிழ் கற்ற -- அகராதியை வெளியிட பணஉதவி செய்த -- டாக்டர் நல்லம்மா சேனாதிராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ) இதோ அதன் அட்டை, பின்பக்கப் படங்கள்.



ஆசிரியரைப் பற்றிச் சில தகவல்கள். (இவருடைய இன்னொரு நூலில் பேராசிரியர் வே.குருசாமி எழுதிய குறிப்புகளிலிருந்து தொகுத்தது.) 

இவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில். பிறந்த ஆண்டு 1899. திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலங்கையில் -யாழ்ப்பாணத்தில் 1922 முதல் 42 ஆண்டுகள் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார். 

இவர் எழுதிய சில நூல்கள்: கம்பன் கவிதைக் கோவை 1-3, இராம காதை (சுருக்கம்), நளன் சரிதம் (சுருக்கம்), தமிழ் அமுதம், வில்லி பாரதம் (சுருக்கம்), கம்பராமாயண அகராதி 1-5, கம்பரும் உலகியலும் . இவற்றில் பல நூல்கள் சென்னை, அண்ணாமலை, இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப் பட்டிருந்தன. இலங்கை வானொலியில் பல இலக்கியப் பொழிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.

 இந்த அகராதியைப் பற்றித் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் கலைமாமணி பேராசிரியர் திரு க.வெள்ளைவாரணர் அவர்கள் ஒரு நூலில் சொல்கிறார்:

”பல்கலைக் கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரும் பொருட் செலவில் அறிஞர் பலர் உதவியைக் கொண்டு செய்து நிறைவேற்ற வேண்டிய இப்பெரும் பணியினை இவர் தாம் ஒருவராகவே அரிதின் முயன்று செய்து முடித்துள்ளமை, இவரது தமிழார்வத்துக்கும் ஆழமான புலமைத் திறத்துக்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த சான்றாகும்.” 

இந்த அகராதி எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இரு பக்கங்களின் படங்களைத் தருகிறேன்.

நாஞ்சில் நாடன் குறிப்பிட்ட  ’தூணி’ ‘புட்டில்’ ( தூணி = அம்பு வைக்கும் கூடு)  என்ற இரு சொற்களைக் குறிக்கும் இரு பக்கங்கள் இதோ!



தூணிக்கு ஆசிரியர் எடுத்துக் காட்டாகக் கொடுத்த பாடல் பாலகாண்டத்தில் உள்ள ஓர் அருமையான பாடல்:

வென்றி வாள் புடை விசித்து. மெய்ம்மைபோல
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து. இரு
குன்றம் போன்று உயர் தோளில். கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான்

   
( அகராதியில் அச்சுப் பிழைகள் உள்ளன. மேலும் பாடல் எண்களும் கம்பராமாயணப் பதிப்புக்குப் பதிப்பு வேறுபடும், இருப்பினும் இவ்வகராதி மிக அருமையான நூல் என்பதில் ஐயமில்லை) 

மெய்ம்மை போல என்றும் தேய்வுறாத் தூணி”! 

எத்தகைய அற்புதமான சொற்றொடர்! இங்கே “ ’மெய்ம்மை’ என்றால் , 
கடவுளின் மூல தத்துவப் பொருள்: அதிலிருந்தே எல்லாச் சிருஷ்டிப் பொருள்களும் வந்தன” என்பார் ரசிகமணி டி.கே.சி அவருடைய “கம்பர் தரும் ராமாயணம்” நூலில்.

இப்போது வலையில் உள்ள கம்ப ராமாயணத்தில் சொற்களைத் தேடுதல் போன்றவற்றைச் செய்ய முடிந்தாலும், இந்தப் பெரியவர் தொகுத்த அற்புதமான அகராதி ( பிழைகள் களையப் பட்டு ) மீண்டும் ஒரு செம்பதிப்பாக வந்தால் கம்பன் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. 

ஒரு கம்பன் கழகமாவது இதுவரை ஏன் இவ்வகராதியை மீண்டும் வெளியிடவில்லை என்பது ஒரு புதிராக இருக்கிறது.

பி.கு.

இந்தப் பதிவு ஜெயமோகன்  தளத்திலும் மீள்பதிவு ஆகியுள்ளது.
https://www.jeyamohan.in/37214/#.Xul2ikVKhPY


வெள்ளி, 22 மார்ச், 2013

பி.ஸ்ரீ -3 : சித்திர ராமாயணம் -3

362. வானரர் கற்ற வைத்திய பாடம்
பி.ஸ்ரீ.


பி.ஸ்ரீ. ஆசார்யா அவர்களின் நூல்களின் பட்டியலை இட்டால் அதுவே ஒரு கட்டுரையாகும்! மேலும், பல்வேறு  துறைகளிலும் அவர் எழுதியுள்ள படைப்புகளைப் படித்தால் நமக்குப் பிரமிப்பு இன்னும் அதிகரிக்கும்! உதாரணமாக, அவர் தன் பெயரை வெளியிடாமல் ‘விகட’னில் எழுதிய கட்டுரைத்தொடர்கள் பலவற்றில் இரண்டு காட்டுகள்: 

1) “துள்ளித் திரிகின்ற காலத்திலே”  என்ற தலைப்பில் குழந்தை வளர்ப்பு முறை , மாண்டிசோரி கல்வி முறை  பற்றி அழகாக எழுதி இருக்கிறார். ( இதை அல்லயன்ஸ் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.)

2) ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை ‘ என்ற சரித்திர வரலாறு இன்னொன்று. கிளைவ், ராஜாஜி இருவரின் கையெழுத்துகளுடன் கம்பீரமாய் விகடனில் 1948 -இல் வெளியான தொடர் இது. ( இதை அசோகா பப்ளிகேஷன்ஸ் ஹவுஸ், ( மதுரை) 1954 -இல் நூலாக வெளியிட்டது என்ற ஒரு தகவல் கிட்டுகிறது. நூல் இப்போது அச்சில் இருக்கிறதாய்த் தெரியவில்லை.)

இப்படிப்பட்ட தொடர்களை நாங்கள் சிறுவயதில் ( 40/50-களில்) படிக்கும் போது, இவற்றின் ஆசிரியர் யார் என்று யூகிக்க முயன்றதுண்டு. பல வருடங்களுக்குப் பின்னர் தான் இவற்றை எழுதியவர் பி.ஸ்ரீ. என்று அறிந்தோம். (இப்போதும் சிலர் அறியாமலிருக்கலாம்! ‘விகடன்’ வெளியிட்ட ‘காலப்பெட்டகம்’ என்ற நூலில் இரண்டாம் தொடரைப் பற்றித் தகவல் இருக்கிறது.ஆனால், அதன் ஆசிரியர் யார் என்று ஏனோ குறிப்பிடப் படவில்லை! )

எழுத்தாளராக இவர் ஆவதற்கு முந்தைய இவருடைய  வாழ்க்கையைப்  பற்றிச் “சுந்தா” ( பொன்னியின் புதல்வர் நூலில்) எழுதியதைப் படித்தால், உங்களுக்கே ஆச்சரியமாய் இருக்கும்!  ‘சுந்தா’ எழுதுகிறார்:

டி.கே.சியைப் போலவே பி.ஸ்ரீயும் பொருனை தந்த செல்வர்களிலே ஒருவர். விட்டலபுரம் கிராமத்தில் இலக்கியச் செல்வம் படைத்த குடும்பம் ஒன்றில் பிறந்து, அந்தச் செல்வத்தை அனுபவித்துக் கொண்டே வளர்ந்தவர். அவர் முதலில் வகித்தது உளவறியும் போலீஸ் உத்தியோகம். அரவிந்தரின் நடவடிக்கைகளை உளவறியும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் அவருடைய உள்ளத்தில் மாறுதல் உண்டான காரணத்தால் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, தேசிய உணர்ச்சியையும் , இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் எழுத்தாளராய்ப் பரிணமித்தார்


சரி, நாம் ராமாயணத்தில் ’வானரர் கற்ற வைத்திய பாடம் ‘ என்னவென்று பார்க்கலாமா?





[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

வியாழன், 8 நவம்பர், 2012

பி.ஸ்ரீ. -1 : சித்திர ராமாயணம் - 1

தமிழகத்தி்லே ராமதூதர்கள்
பி.ஸ்ரீ.


சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் ஆனந்த விகடனில் 40/50-களில் வந்த ‘சித்திர ராமாயணம் ‘என்ற தொடர்தான்  என்னைப் போன்ற அன்றைய பல இளைஞர்களுக்குக் கம்பனை அறிமுகம் செய்து வைத்தது. பி.ஸ்ரீ என்று அழைக்கப் பட்ட பி.ஸ்ரீநிவாசாச்சாரி எழுதிய தொடர் அது. அவர் எழுதிய பல படைப்புகள் இன்று பதிப்பில் இருந்தாலும், ‘சித்திர ராமாயணம்’ இன்னும் முழு நூலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சித்திரலேகாவின் இயற்பெயர் நாராயணசாமி .


அந்தத் தொடரிலிருந்து இதோ ஓர்  அத்தியாயம்!






 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

ஒப்பிலக்கியச் செம்மல்!