திங்கள், 17 ஜூன், 2013

கம்ப ராமாயண அகராதி

அகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர்! 


[அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)]
ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘இயல் விருதை’ப்  பெற்றபின் திரு நாஞ்சில் நாடன் தன் ஏற்புரையில் கம்பனைப் பற்றிப் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கம்பன் எவ்வளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பான் என்று தோராயமாகக் கணக்குப் போடும் போது, இப்போது அச்சில் இல்லாத கம்பன் அகராதி ஒன்றைக் குறிப்பிட்டார். மேலும், தான் ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற தலைப்பில் ஒரு நூலை அண்மையில் எழுதி முடித்திருப்பதாகவும் சொன்னார். இது என்னை  அச்சில் இல்லாத ‘அந்த அகராதி’ பற்றியும், அதன் ஆசிரியரைப் பற்றியும் எனக்குத் தெரிந்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. 

‘கம்ப ராமாயண அகராதி ‘ என்ற பெயரில்  5 பாகங்கள் வெளியிட்டவர் பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன். என்னிடம் மூன்றாம் பாகம் மட்டும் உள்ளது. (ஆகஸ்ட் 1978 பதிப்பு)  ( இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய -- சுந்தரராஜன் அவர்களிடம் யாழ்ப்பாணத்தில் தமிழ் கற்ற -- அகராதியை வெளியிட பணஉதவி செய்த -- டாக்டர் நல்லம்மா சேனாதிராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ) இதோ அதன் அட்டை, பின்பக்கப் படங்கள்.ஆசிரியரைப் பற்றிச் சில தகவல்கள். (இவருடைய இன்னொரு நூலில் பேராசிரியர் வே.குருசாமி எழுதிய குறிப்புகளிலிருந்து தொகுத்தது.) 

இவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில். பிறந்த ஆண்டு 1899. திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலங்கையில் -யாழ்ப்பாணத்தில் 1922 முதல் 42 ஆண்டுகள் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார். 

இவர் எழுதிய சில நூல்கள்: கம்பன் கவிதைக் கோவை 1-3, இராம காதை (சுருக்கம்), நளன் சரிதம் (சுருக்கம்), தமிழ் அமுதம், வில்லி பாரதம் (சுருக்கம்), கம்பராமாயண அகராதி 1-5, கம்பரும் உலகியலும் . இவற்றில் பல நூல்கள் சென்னை, அண்ணாமலை, இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப் பட்டிருந்தன. இலங்கை வானொலியில் பல இலக்கியப் பொழிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.

 இந்த அகராதியைப் பற்றித் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் கலைமாமணி பேராசிரியர் திரு க.வெள்ளைவாரணர் அவர்கள் ஒரு நூலில் சொல்கிறார்:

”பல்கலைக் கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரும் பொருட் செலவில் அறிஞர் பலர் உதவியைக் கொண்டு செய்து நிறைவேற்ற வேண்டிய இப்பெரும் பணியினை இவர் தாம் ஒருவராகவே அரிதின் முயன்று செய்து முடித்துள்ளமை, இவரது தமிழார்வத்துக்கும் ஆழமான புலமைத் திறத்துக்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த சான்றாகும்.” 

இந்த அகராதி எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இரு பக்கங்களின் படங்களைத் தருகிறேன்.

நாஞ்சில் நாடன் குறிப்பிட்ட  ’தூணி’ ‘புட்டில்’ ( தூணி = அம்பு வைக்கும் கூடு)  என்ற இரு சொற்களைக் குறிக்கும் இரு பக்கங்கள் இதோ!தூணிக்கு ஆசிரியர் எடுத்துக் காட்டாகக் கொடுத்த பாடல் பாலகாண்டத்தில் உள்ள ஓர் அருமையான பாடல்:

வென்றி வாள் புடை விசித்து. மெய்ம்மைபோல
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து. இரு
குன்றம் போன்று உயர் தோளில். கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான்

   
( அகராதியில் அச்சுப் பிழைகள் உள்ளன. மேலும் பாடல் எண்களும் கம்பராமாயணப் பதிப்புக்குப் பதிப்பு வேறுபடும், இருப்பினும் இவ்வகராதி மிக அருமையான நூல் என்பதில் ஐயமில்லை) 

மெய்ம்மை போல என்றும் தேய்வுறாத் தூணி”! 

எத்தகைய அற்புதமான சொற்றொடர்! இங்கே “ ’மெய்ம்மை’ என்றால் , 
கடவுளின் மூல தத்துவப் பொருள்: அதிலிருந்தே எல்லாச் சிருஷ்டிப் பொருள்களும் வந்தன” என்பார் ரசிகமணி டி.கே.சி அவருடைய “கம்பர் தரும் ராமாயணம்” நூலில்.

இப்போது வலையில் உள்ள கம்ப ராமாயணத்தில் சொற்களைத் தேடுதல் போன்றவற்றைச் செய்ய முடிந்தாலும், இந்தப் பெரியவர் தொகுத்த அற்புதமான அகராதி ( பிழைகள் களையப் பட்டு ) மீண்டும் ஒரு செம்பதிப்பாக வந்தால் கம்பன் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. 

ஒரு கம்பன் கழகமாவது இதுவரை ஏன் இவ்வகராதியை மீண்டும் வெளியிடவில்லை என்பது ஒரு புதிராக இருக்கிறது.

பி.கு.

இந்தப் பதிவு ஜெயமோகன்  தளத்திலும் மீள்பதிவு ஆகியுள்ளது.
https://www.jeyamohan.in/37214/#.Xul2ikVKhPY


6 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

Most interesting and useful information. Sir. If we can get his books, I can arrange for digitilization and then return the books in good condition.

Pas S. Pasupathy சொன்னது…

One has to search in Tamilnadu Libraries or among Kamban Scholars who gather at Kamban VizhA-s.... I know that Thiru Naanjil Naadan has only 3 parts;
(including the one I have). An advertisement in a popular Tamil magazine may produce results. Unfortunately, I am unable to help further than arousing the curiosity of people like you. Thanks for your interest. ( Just digitization is not really beneficial; the entire book has to be proofread and mistakes corrected . Also a uniform way of referring to poems etc has to be done to be useful to present-day readers. )

SiSulthan சொன்னது…

நாஞ்சில் நாடன் எழுதிய கம்பனின் அம்பறாத் தூணி: சில பாகங்கள்,
http://nanjilnadan.com/category/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BF/

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, சுல்தான். உங்கள் தளத்தில் நாஞ்சிலைப் பருகியிருக்கிறேன்...பலமுறை.

Kaala Subramaniam சொன்னது…

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நூலகத்தில் கம்பராமாயண அகராதி 5 பாகங்களும் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அருமையான பதிவு.