சனி, 30 ஜூன், 2012

கவிதை இயற்றிக் கலக்கு -7

கவிதை இயற்றிக் கலக்கு : ஒரு மதிப்புரை

கவிமாமணி குமரிச்செழியன்

 “கவிதை இயற்றிக் கலக்கு” என்ற யாப்பிலக்கண நூலைப் பற்றிய
சில விவரங்கள்

க.இ.க -5   -இலும்

அதைப் பற்றி “அமுதசுரபி”யில் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது

 க.இ.க -6  -இலும் உள்ளன.

நூல் வெளியீட்டு விழா நடந்ததும், எனக்குப் பாரதி கலைக் கழகத் தலைவர் கவிமாமணி குமரிச் செழியன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். என் நூலை மிக ஆழமாகப் படித்து எழுதிய ஒரு மதிப்புரையாக அது விளங்குகிறது என்பதால், அந்தக் கடிதத்தை தட்டச்சுச் செய்து, இங்கு வெளியிடுவதில் மகிழ்கிறேன். குமரிச்செழியன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கடிதத்தை எனக்கு அனுப்பின நண்பர் வேதத்திற்கும் என் நன்றி.
==========


கவிமாமணி குமரிச்செழியன்                             
                                                        
தலைவர், பாரதி கலைக் கழகம், சென்னை                            
                               
           
அன்புள்ள நண்பர் கவிஞர் டாக்டர் பசுபதி அவர்கட்கு,
வணக்கம். வாழ்த்துகள்.

தாங்கள் எழுதியுள்ள “ கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் கவிதை இலக்கண நூல் பாரதி கலைக் கழகத்தின் சார்பில் 27.03.2011 அன்று வெளியிடப் பெற்றது. விழா மிகச் சிறப்பாக நடந்தது. டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் நூலின் ஒவ்வொரு எழுத்தையும் படித்து மிகச் சிறந்த ஓர் ஆய்வினை வழங்கி நூலுக்குப் பெருமை சேர்த்தார். நூலுள் மிளிரும் சில நுட்பங்களை அவர் எடுத்துக் காட்டியது அருமை. தொடர்ந்து புலவர் வெற்றியழகன், சந்தக் கவிமாமணி தமிழழகன், கவிமாமணி இலந்தை இராமசாமி ஆகியோர் நூலின் நுட்பங்களை எடுத்துக் காட்டி அரங்கை ஆட்சி செய்தனர்.

கவிஞர் வேதம் அவர்கள் தனது சொந்த நூலைப் போல தனிக்கவனம் செலுத்தி மிகச்சிறப்பாக பெருமுயற்சியில் வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவருடைய உழைப்பு மிகப்பெரிது. கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசிகள் வாயிலாகவும் குறிப்புகளை அனுப்பி, நூலை அனுப்பி உதவி மிகப் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். அவருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் உரியன.

L.K.M. பப்ளிகேஷன் அந் நூலை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துத் தெளிவாகவும் அழகாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

நூல் எழுத்தில் தொடங்கி அசை, சீர், தளை, அடி, தொடை என நடந்து கவிதை நலம் தோயப் பாவகைகளில் தொடர்ந்து விரிவது அருமை. கவிதை இலக்கணம் பாடத்தில் தொடங்கி மாடத்தில் நிறைகிறது. ஓடத்தில் மிதந்தாலும் கரைசேர்வதே நோக்கம். அதுபோல பாடத்தில் தொடங்கினாலும் நல்ல மரபுக் கவிஞர்களை உருவாக்க வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது. உணவுக்கு மீனே தேவை எனினும் தூண்டிலிட்டு மீனைப் பிடித்து உணவாக்கிக் கொள்ளக் கற்றுக் கொடுக்கும் நோக்கம் பளிச்சிடுகிறது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலன்றோ சிறப்பு. அஃது இந்நூலில் இழையோடுகிறது.

நேரசை நிரையசை என அலகிடுதலில் தொடங்கி வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என விரிகிறது. ஒவ்வொரு பாவினமும் துறை, தாழிசை, விருத்தம் என மேலும் விரிகிறது. மரபுப் பாவகைகள் இலக்கணக் கடலில் மூழ்கியெடுத்த முத்துப்போல மின்னுகின்றன.

இந்நூலூள் பல நுட்பங்கள் செறிந்து கிடக்கின்றன. எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமெனில், “ சொற்புணர்ச்சிக்குப் பின்னர்தான் வெண்பா இலக்கணம் சரியா என்று பார்க்கவேண்டும். இதை எல்லா மரபுப் பாக்களுக்கும் உரிய பொது விதியாகவே கொள்ளலாம், “ ( ப.79) என்பது மிகச் சிறப்பு.

மருட்பாவும் விளக்கப் பட்டிருப்பது மிக அருமை.

மலர்கள் தோறும் அமர்ந்து மதுவை நுகர்ந்து தன்மயமாக்கிக் கொண்டு மருத்துவக் குணமுள்ள தித்திக்கும் தேனை வழங்கும் தேனீ போலத் தமிழ்க் கவிதைக் கடலில் மூழ்கித் திளைத்துச் சிறந்த பாடல்களைத் தேர்ந்து எடுத்துக் காட்டுகளாக வழங்கியிருக்கும் நுட்பம் தங்களை ஒரு ‘செந்தமிழ்த் தேனீ’ என அடையாளம் காட்டுகிறது.

யாப்பருங்கல விருத்தி கூட எடுத்துக் காட்டுகளுக்குப் பாடல்கள் கிடைக்காத நிலையில் பாடல்கள் ஆசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டதாக அமைந்துள்ளது. ஆனால் இந்நூலுள் அனைத்து வகைப் பாக்களுக்கும் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுகள் வழங்கி இருப்பது அருமை. அது புலமையின் வெளிப்பாடு.

பரிமேலழகர் திருக்குறளை மாணவர்களுக்குப் பாடம் நடத்தி, மாணவர்களுடைய வினாக்களுக்கு விடையளித்துப் பெற்ற அனுபவத்தில் மலர்ந்த திருக்குறள் உரை இன்று அனைத்துப் பிற்கால உரைகளுக்கும் அடிப்படையாக அமைந்து மிளிர்வது போல, மாணவர்களுக்கு இணையத்தின் வழி நடத்திய பாட அனுபவங்கள் வாயிலாக மலர்ந்துள்ள தங்களுடைய “கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் நூலும் ஒளிரும் என்பது உறுதி.

முதற்பகுதி பழைமையில் தொடரும் இலக்கணத்தை உணர்த்த இரண்டாம் பகுதி அண்மைக் கால வளர்ச்சியின் அடையாளங்களாக அமைந்திருப்பது அனுபவத்தின் சுவடுகள். சந்தப்பா வகைகள், கும்மி, சிந்து, கண்ணி, ஆனந்தக் களிப்பு, இசைப்பாடல் என அனைத்தையும் அலசியிருப்பது மிகச் சிறப்பு. இன்றைய நிலையில் அமைந்துள்ள முழுமை வடிவம் என்று கூடச் சொல்லலாம். இவை பழைய இலக்கண அடிப்படையில் அமைந்திருந்தாலும், அவற்றின் உயிரோட்டமாகத் திகழும் இசைக் குறிப்புகளுடன் விளக்கியிருப்பது தான் தங்களுடைய இசைப் புலமைக்கு மற்றொரு சான்று.

லிமெரிக் என்னும் அண்மைக் காலப் பாடல் வகையையும் எடுத்துக் காட்டி அதனைக் குறும்பா என எடுத்துக் காட்டி இலக்கணமும் தந்திருப்பது நிகழ்காலக் கட்டுக் கோப்பு. ( பக். 239) .

பரணி இலக்கியங்கள் தாழிசையில் அமைந்திருக்கும். அதனை இனம் காட்டும் வகையில் பரணித் தாழிசை ( பக். 316) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் “குறள் வெண்செந்துறையே பிற்காலத்தில் சிந்துவாக வளர்ந்தது/இன்னும் வளரும் என்று கூடச் சொல்ல்லாம் “ ( 316) என்று புதிய நுட்பம் ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.

வெண்பாக்களில் விளங்காய்ச் சீர்களுக்குப் பதிலாக விளாங்காய்ச் சீர்கள் இடம்பெற்றால் செப்பலோசை சிதைந்து சிறப்பிழக்கும் என்பதனால் விளாங்காய்ச் சீர்களைப் பொதுவில் வெண்பாவில் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் வகையுளியைப் பயன்படுத்தலாம் ( பக்.72) என்பன மிகமிக நுட்பமான செய்திகள். சவலை வெண்பாவையும் சுட்டத் தவறவில்லை. ( பக். 133)

சந்த மாத்திரையை அடிப்படையாக்க் கொண்டு அசைச் சந்த விருத்தங்கள் நடைபோடுவது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது அருமை. ( பக். 326). வண்ணப் பாடல்களில் அவை பயின்று வருதலும் ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

இப்படி எத்தனையோ புதுமைகளும் விளக்கங்களும் எடுத்துக் காட்டுகளும் அமைந்த அற்புதமான புதிய வரவு “கவிதை இயற்றிக் கலக்கு”. எல்லாரும் படித்துத் தெளியவும், தெளிந்ததை எழுத்தில் பிழியவும் எளிமையாக அமைந்த இலக்கண நூல் என்பது உறுதி.

சிந்து பற்றிய ஆய்வில் ‘மாதமாய்க் குயவனை’ என்றிருப்பதை ‘மாதம் குயவனை’ என்றிருந்தால் சிறப்பு என்னும் ஆய்வு அருமை ( 354 ).

காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, இலாவணி, கீர்த்தனை போன்றவற்றை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அலகிடுதல்: சில நுண்மைகள் என்பதைச் சில நுட்பங்கள் என ( பக். 81) இருந்தால் இனிமை தோன்றும் எனத் தெரிகிறது.

92-ஆம் பக்கத்தில் நேரிசை ஆசிரியப்பாவுக்கான எடுத்துக் காட்டான “ யாயும் ஞாயும் ….தாம் கலந்தனவே” என்னும் குறுந்தொகைப் பாடலில் மூன்றாம் அடியான “ யானும் நீயும் எவ்வழி, அறிதும்” என்னும் ஓரடி முழுமையாக விடுபட்டுள்ளதை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

சவலை வெண்பாவைப் பற்றிச் சொல்லும்போது இருகுறள் வெண்பாக்களைச் சேர்த்தால் 2-ஆம் அடியின் மூன்றாம் சீர் நாள், மலர், காசு, பிறப்பில் அல்லவா அமையும்? அதனை இன்னும் சற்று தெளிவுபடுத்தினால் நலமாக இருக்கும் ( பக். 133).

ஆங்காங்கு சில எழுத்துப் பிழைகள் தலை காட்டுகின்றன. அவை கால நெருக்கடியைக் காட்டுகின்றன எனலாம்.

அற்புதமான அரியதொரு நூலைத் தந்துள்ள நண்பர் பசுபதி அவர்கட்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். அதனை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ள கவியோகி வேதம் அவர்கட்கு மனப்பூர்வமான நன்றிகள்.

அன்புடன்
குமரிச்செழியன்
                         
 தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

வியாழன், 28 ஜூன், 2012

’கல்கி’: பேனா மன்னன்

பேனா மன்னன்
 எஸ். எஸ். வாசன்பேராசிரியர் கல்கி 1954-இல் மறைந்தவுடன், எஸ். எஸ். வாசன் விகடனில்  ‘உபயகுசலோபரி’ என்ற தலைப்பில், தன் கையொப்பமுடன்,  நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையின் முதல் பக்கம் இதோ:
அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் மட்டும் கீழே உள்ளன:


பேனா மன்னன்

 எஸ். எஸ். வாசன்


நேயர்களுக்கெல்லாம் 'கல்கி'க்கும் ஆனந்தவிகடனுக்கும் பல ஆண்டுகளாக உள்ள உறவு நன்கு தெரியும். விகடனி லேதான் முதன்முதலாகப் பெருவாரியான தமிழ் மக்கள் அவருடைய எழுத்தின் சுவையை நுகர்ந்தார்கள்.

1928-ம் வருஷம் ஜூலை மாதம், ஒரு நாள்  பரலி சு.நெல்லையப்ப பிள்ளை 'கல்கி'யுடன் கூட, ஒரு நன்கொடை பற்றி என்னைக் காண வந்தார். அந்தச் சமயம் நெல்லையப்ப பிள்ளை 'கல்கி'யை எனக்கு அறிமுகம் செய்வித்து, ''இவர் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. 'நவசக்தி'யில் 'தேனீ' என்ற புனை பெயருடன் கட்டுரைகள் எழுதி வருகிறார். தங்கள் ஆனந்த விகடனுக்கும் எழுத வேணும் என்று விரும்புகிறார். கட்டுரை அனுப்பினால் பிரசுரிக்கிறீர்களா?'' என்று கேட்டார். ''தாராளமாக'' என்று பதில் சொன்னேன்.


அதன் பிறகு, 'ஏட்டிக்குப் போட்டி' என்ற தமது முதல் கட்டுரையை 'கல்கி' எனும் பெயரில் எனக்குத் தபாலில் அனுப்பி வைத்தார். நான் அதை மூன்று நான்கு முறை திரும்பத் திரும்பப் படித்து, ஹாஸ்யத்தை அனுபவித்து, விழுந்து விழுந்து சிரித்தேன். என் தாயாருக்கும் படித்துக் காட்டினேன். அவரும் மிகவும் அனுபவித்துச் சிரித்தார். நாங்கள் அப்போது, 'இந்த மாதிரியும் தமிழில் எழுத முடியுமா?' என்று ஆச்சர்யப்பட்டோம். அந்த நாளில், பண்டித நடையில் கடுமையான தமிழிலேயே கட்டுரைகள் படித்து அனுபவப்பட்ட எங்களுக்கு, அந்தக் கட்டுரை ஓர் ஆச்சர்யமாக இருந்தது. 'கல்கி' என்ற பெயரில் அவர் எழுதிய முதல் கட்டுரையும் அதுதான். அதையடுத்து, 'பூரி யாத்திரை' முதலான பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். விகடனில் ஆசிரியர் பதவியை அவர் ஏற்ற பின்பே, மாதம் ஒரு இதழாக இருந்த விகடன் இரண்டு மூன்று என்று வளர்ச்சி அடைந்து, வாரப் பத்திரிகையாகியது. ஏராளமான வாசக நேயர்களும் ஏற்பட்டார்கள்.

 தமிழ்நாட்டில் ஆங்கில மொழியின் மீது மோகம் தலை விரித்தாடிய காலம் அது. தமிழைத் தமிழரே குறைவாக எண்ணினர். தமிழிலே பத்திரிகை என்றால், தொட்டுப் பார்க்கவும் கூசுவார்கள் படித்த மக்கள். 'தமிழ்மொழியில் அரசியல், பொருளாதார விஷயங்களைத் தெளிவுறச் சொல்வது சாத்தியம் இல்லை' என்று முடிவு கட்டிவிட்டார்கள் அரசியல்வாதிகள். தமிழ் என்றாலே அலட்சிய பாவத்துடன் நடந்து கொள்ளப் பழகிவிட்டது மாணவர் உலகம். இந்த மாதிரியான சூழ்நிலையிலே, பத்திரிகை வாயிலாக மொழிச் சேவையைத் திறம்படச் செய்யமுடியும் என்று நிரூபித்துக் காட்டும் சக்தி 'கல்கி'யுடைய கையிலே இருந்தது. அதை அவர் வேறெவரும் சாதிக்க முடியாத வகையிலே செய்துகாட்டி விட்டார்.

 படித்தவரும் பாமரரும் அறிந்து அனுபவிக்கும் தெளிவுடன், எளிமையுடன் தூய தமிழில் எந்தச் சிக்கலான அரசியல் விஷயங்களையும் விளக்கலாம் என்பதை அவர் நிரூபணம் செய்தார். அன்னிய சர்க்கார் பிசகு செய்தால், கண்டிக்கும் உரிமை பத்திரி கைகளுக்கு உண்டு என்பதற்கு ஆதாரமாக அவரது தலையங்கங்கள் விளங்கின. ''ஐயோ, இப்படி எழுதிவிட்டாரே! சர்க்கார் சும்மா விட்டுவிடமாட்டார்களே!'' என்று அஞ்சியவர்கள் எத்தனையோ பேர். அப்போதிருந்த சர்க்காரும் ஹாஸ்யத்தை உணர்ந்துகொள்ள முடியாதவர்களாகவே இருந்தார்கள். விகடனை அடிக்கடி ஜாமீன் கட்டும்படி கேட்டு வற்புறுத்தும் அளவுக்குக் கூடத் தொந்தரவு கொடுத்தார்கள்.


விகடனை மேலும் மேலும் ரஞ்சகமாக்கும் இலட்சியத்துடன் கலைவிமர்சனங்களை 'கர்நாடகம்' எனும் புனைபெயரில் எழுதினார் 'கல்கி'. நுண்கலைகளில் ஈடுபட்டுள்ள வித்வான்கள் அவருடைய புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் பாத்திரமாகத் தவறியதில்லை. பாடகரானாலும் நடிகரானாலும் வேறெவ்வகையில் புனிதரானாலும் பொதுமக்களின் அறிமுகத்தை 'கல்கி'யின் பேனா வாயிலாகச் செம்மையுடன் அவர்கள் பெற்றார்கள்.

வாரப் பத்திரிகைக்கு நிரந்தரமான வாசகர்களை உண்டாக்கி விடத் தொடர்கதை என்பது ஓர் இன்றியமையாத அங்கம் என்பதை அவருடைய முதல் நீண்ட தொடர் நாவல் 'தியாக பூமி' ஸ்தாபித்துவிட்டது. இன்றைக்கும் எனக்கு நினைவிலிருக்கிறது... 'தியாக பூமி'யைப் படித்துவிட் டுத்தான் வெள்ளிக்கிழமை இரவு படுப்பது என்று பிடிவாதமாகக் காத்திருக்கும் விரதம் கொள்ளும்படி செய்த முதல் எழுத்தாளர் 'கல்கி'தான். தமிழ் நாடெங்கும், தமிழ் பேசும் மக்கள் வாழுமிடமெங்கும் 'தியாக பூமி' அன்று அடைந்த செல்வாக்கு வேறெந்தத் தொடர்கதைக்கும் கிட்டியிருப்பதாகச் சொல்லமுடியாது.

சட்டசபை நிகழ்ச்சிகளைக் கண்ணெதிரில் பார்ப்பது போல் தீட்டினார். அதுவரையில் ரஸமற்ற சட்டசபை நடப்புகளைப் படித்த வாசகர்கள், ரஸபாவத்துடன், ஒரு மேதை அளிக்கும் ஜீவனுடன் 'கல்கி'யின் எழுத்துக் களில் விவரங்களை வாசிக்க விரைந்தார்கள். தமிழ் இலக்கியத்திலே முதல்முறையாகப் பிரயாணக் கட்டுரையில் 'கல்கி' சுவை காட்டினார்.  'மாலி'யுடன் அவர் இலங்கைப் பிரயாணம் செய்து வந்ததை மறக்கமுடியாது. ஆகாய விமானம் அந்த நாளிலே ஒரு புதுமை. இன்று ஒரு விமானத்தில் 50, 60 பிரயாணிகள் செல்வது சகஜம் எனினும், அப்போது 'கல்கி'யையும் 'மாலி'யையும் தவிர விமான ஓட்டிகளே இருந்தார்கள்! 'கல்கி'யின் கண்களின் தீக்ஷண்யத்தை, இலங்கையின் சுவையை யெல்லாம் ஒற்றிக்கொண்டு வந்து விடும் திறனை அவருடைய தொடர் கட்டுரைகள் வெளியாக்கின.

 சமீப காலத்தில் அவருடைய சொந்தப் பத்திரிகையான 'கல்கி' யில் நீண்ட சரித்திரக் கதைகள் எழுதி, பழங்கால சரித்திரத்தை, வீர மரபினர் வரலாற்றையெல்லாம் தமிழுலகம் முழுதும் வியாபிக்கும் இலக்கியமாகத் தீட்டினார். ஒவ்வொரு கதையையும் நாலு வருஷம் ஐந்து வருஷம் தொடர்ந்து படிக்க வைத்த பேனா மன்னன் அவர். அவரைத் தமிழ்நாட்டு 'வோட் ஹவுஸ்' என்றும், 'ஸ்காட்' என்றும் மற்றும் மேனாட்டு பாணியில் சிறப்புப் பட்டம் அளித்துக் கூறுவார்கள். ஆனால், 'கல்கி' எனும் மேதையை எந்தத் தனி மனிதனுடனும் ஒப்பிட்டுச் சொல்ல இயலாது என்பது என் நம்பிக்கை. 'கல்கி'யைக் 'கல்கி' யுடனேதான் ஒப்பிட வேண்டும் என்றால், நேயர்கள் அதை முழு மனத்துடன் ஆமோதிப்பார்கள் என்றும் நான் அறிவேன். அவர் ஈடுபட்ட துறைகள் அனைத்திலுமே மிகச் சிறந்தவர்களின் கூர்மை அவரிடம் ஒன்று சேர்ந்திருந்தது. எனவே, 'கல்கி' ஒரு ஸ்தாபனமாக உருவாகிவிட்டார் என்பதில் வியப்பில்லை.


'கல்கி'யின் பிரிவினால் எழுத்துலகம் பரிதவிக்கிறது. விகடனுக்கு நீண்ட காலம் ஆசிரியராக இருந்து என்னுடன் வாழ்வில் பெரும் பகுதியும் பழகி வந்துள்ள 'கல்கி' காலமானார் என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது. நேயர்களுடன் என் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
[ நன்றி : விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி படைப்புகள்

கல்கியைப் பற்றி

’கல்கி’ பற்றி எழுத்தாளர் ’கடுகு’

’கல்கி’ பற்றி அறிஞர் அண்ணாதுரை

’கல்கி’யின் நாவல்கள், சிறுகதைகள்

’சிவகாமியின் சபதம்’ பற்றி வைகோ

புதன், 27 ஜூன், 2012

’தேவன்’ - 3 : நாகப்பன்

நாகப்பன்    

தேவன்       
           

நாகப்பனுடைய தொழில் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளக்
கூடியதுமல்ல; நாலு பேர் அறியச் செய்யக் கூடியதுமல்ல, அவன் செய்தது திருட்டுத் தொழில். அவனுடைய ஆயுளில் எத்தனையோ பொருள்களை எவ்வளவோ சிரமப்பட்டுக் களவாடியிருக்கிறான்; ஆனால் அவனுடைய மனைவியின் இதயத்தைக் கொள்ளை கொள்வது மட்டும் அவனுக்கு அசாத்தியமாகவே இருந்து வந்தது.

அவளுடைய வசவுகளுக்கும் பிரசங்கங்களுக்கும் எல்லையே இல்லாமல் இருந்தது. பேசும்போதே அவளுக்கு ஒரு கால் மூச்சு நின்றுவிடுமோ என்று அவன் வியந்தது உண்டு.

அன்று அவன் சோறு தின்ன உட்கார்ந்த பொழுதே ஒரு பெரிய வசைமாரி காத்திருக்கிறதென்று ஊகித்துக் கொண்டான். அவன் சாப்பிடும் பீங்கான் தட்டு தடாரென்று வீசியெறியப்பட்டது. உடனே அவளுடைய 'அகராதி'யும் வேகமாகப் படிக்கப்பட்டது. அவன் பாட்டனார் குடும்பத்தில் பூர்வோத்தரங்களை ஓர் அலசு அலசிக்கொண்டு , அவன் தாயார் தகப்பனாரைப் பற்றியும் காரமாகச் சொல்லி, கடைசியாக அவனையும் அவன் சோம்பேறித் தனத்தையும் சவிஸ்தாரமாக ஆராய்ந்தாள். அவன் கிஷ்கிந்தை வாசிகளின் வம்சத்தைச் சேர்ந்தவன் என்றும், அவனால் அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் என்னவெல்லாம் சங்கடங்கள் நேர்ந்தனவென்றும் விவரமாகக் கூறி முடித்த பிறகே, சற்று ஓய்ந்தாள்.

நாகப்பன் அதற்கெல்லாம் பதிலே சொல்லவில்லை. அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவள் ஆத்திரத்துடன் மேலும் ஆரம்பித்து விட்டாள் :-

"நீ பாட்டுக்குத் தினம் சோற்றுக்குத் தவறாமல் உக்கார்ந்தா எங்கிருந்து வந்து விழும்னு நினைச்சிக்கிட்டிருக்கே? மூணு வாரமா ஊட்டுக்குக் காலணா காசு கொண்டார்லே. உனக்குக் கண் இல்லையா? ஊரிலே ஒருத்தொருத்தனும் பெண்டாட்டியை இப்படியா துன்பப்படுத்தறான்?... மாரியைப் பாரு! அவன் ஊட்டிலே ஒரு குறைச்சல் இருக்கா? நீயும் மனுஷன், அவனும் மனுஷன் அவன் அல்ல ஆண்பிள்ளை?... அவன் பொஞ்சாதி என்னைப் பார்த்துச் சிரிக்கிறா.

ஏன் சிரிக்க மாட்டா? உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு ஒரு களுதைகூட
என்னைப் பார்த்துச் சிரிக்கும்..."

நாகப்பனுக்கு ரொம்ப ரோஸம் வந்துவிட்டது. "இன்று இரவு எங்கேயாவது போய், எதையாவது எப்படியாவது திருடிக் கொண்டு வருவேன்" என்று முடிவு செய்தான்.

சென்னைக் கார்ப்பரேஷன் கடியாரத்தில் அன்றிரவு இரண்டு முள்ளும் நெட்டுக் குத்தலாக ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு நின்றன. உடனே டணார் டணார் என்று பன்னிரண்டு மணி அடித்துத் தீர்ந்தது. அப்போது நாகப்பன் இருட்டில் பல தெருக்களைக் கடந்து ஒரு மெத்தை வீட்டு வாசலில் வந்து நின்றான். எங்கும் நிசப்தம் நிலவியது.

வீடு சிறிய வீடுதான்; அதிகம் அகப்படும் என்று தோன்றவில்லை. ஆனாலும், "இனியும் பெண்டாட்டியின் வார்த்தைகளைச் சகிப்பது முடியாது. ஏதாவது, ஐந்து பத்து பெறுமானதாக இருந்தாலும் எடுத்துக்கொண்டு போகலாம்" என்ற முடிவுக்கு வந்தான். அடுத்த நிமிஷம் ஒரு நீர்க்குழாயைப் பிடித்துக்கொண்டு மாடியில் ஏறி விட்டான்.

ஒரு வராந்தாவைக் கடந்து, மாடிப்படிகளை ஒட்டினாற்போலிருந்த ஓர் அறைக்குள் நுழைந்தான். ஒரு கட்டிலும் இரண்டு பீரோக்களும் அந்த அறையில் காணப்பட்டன. அந்த அறை வீட்டுக்காரருடைய சயன அறையாக இருக்க வேண்டும் என்று நாகப்பன் ஊகித்தான். "அவர்கள் இப்போது எங்கே? ஒரு கால் இன்னும் வரவில்லையோ? அல்லது ஊரிலேயே இல்லையோ?"

இப்படி அவன் நினைத்துக் கொண்டிருந்தபோதே அந்த வீட்டு வாசலில் ஒரு ஜட்கா வந்து நின்ற சப்தம் கேட்டது. நாகப்பன் திடுக்கிட்டான். அப்போதே ஜட்காவிலிருந்து இறங்கிய ஒருவர் மாடிப்படி ஏறி வந்தது கேட்டது. இனி அறையை விட்டு அவன் வெளியேறுவது இயலாத காரியம்; வெளியே வந்தால், மாடிப்படி ஏறி வருபவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருக்கும்! ஒரே பாய்ச்சலாக, பீரோவுக்கும் சுவருக்கும் இடையில் இருந்த சந்திற்குள் தன் உடலைத் திணித்துக் கொண்டான். ஊளச்சதை, தொந்தி தொப்பை எதுவும் இன்றி பகவான் அவனை வைத்திருந்ததற்கு அப்போது மனதார நன்றி செலுத்தினான்.

நாகப்பன் நுழைந்த அதே க்ஷணத்தில் அறைக்குள் ஒருவர் நுழைந்ததையும் எலெக்ட்ரிக் விளக்கு ஏற்றப்பட்டதையும் அறிந்து கொண்டான். வந்தது ஒரு ஸ்திரீ; அவளுக்குச் சுமார் முப்பது வயதிருக்கும். கம கமவென்று 'ஸெண்ட்' வாசனையும், புதுப் புடவையின் சலசலப்பு ஓசையும் அவளைப் பின் தொடர்ந்தன. "அப்பாடா!" என்று அவள் கட்டிலின் மேல் உட்கார்ந்தாள். கட்டில் 'கிறீச்' என்றது. அப்போது அறைக்குள் இன்னொருவரும் நுழைந்ததை நாகப்பன் அறிந்தான்.

அந்த ஸ்திரீ உடனே மடமடவென்று பேச ஆரம்பித்து விட்டாள். கடைசி வரையில் அவள் பின்னால் வந்த புருஷனுடைய குரலை நாகப்பன் கேட்கவே இல்லை.

"அப்பாடா! ஒரு வழியாய் வீட்டைக் கண்டேன்! இந்த ஜன்மத்திலே உங்களைப் போல 'வெறுவாய்க்கலங்கெட்ட' புருஷனைக் கட்டிண்டப்புறம் வெளிக் கிளம்பவே படாது. எத்தனையோ தடவை பார்த்தாச்சு! சாமர்த்தியமில்லாத புருஷன்னால், முதல் பிரைஸ் உங்களுக்குத்தான். உங்களண்டே கொண்டு எங்கப்பா என்னைத் தள்ளினாரே... அவர் என்ன பண்ணுவார்? பி.., பி.எல். என்று மயங்கிப் போயிட்டார். 'அருணாசலம் அட்வகேட்'ன்னு போர்ட் போட்டிருந்ததைக் கண்டு பூரித்துப் போயிட்டார்.

"உங்களைக் கண்டு அத்தனைப் புருஷர்களும் சிரிச்சா. முண்டியடிச்சிண்டு போய் ஒரு டிக்கெட் வாங்க சாமர்த்தியமிருக்கா? நாலு பேரோடே பேசத்தான் ஒரு சாதுர்யம் இருக்கா? ஒரு வண்டி பேச உங்களுக்கு வழி தெரியல்லியே! என்னைப் பதினைந்து நிமிஷம் நிறுத்தி வைச்சு, அத்தனை வண்டிகளையும் மற்ற எல்லாரும் பேசிண்டு போன அப்புறம் ஒரு நொண்டிக் குதிரை வண்டி பேசினேளே, போறும்டி அம்மா, போறும்!" என்று நீட்டினாள். உடனேயே மறுபடி தொடங்கி விட்டாள்.

"உங்களோடு நான் குடித்தனம் பண்ணினத்துக்கு, தங்கத்தினாலே ஒரு திருகாணியைக் காணல்லே! ஒடிஞ்சதை ஒக்கப் பண்ண ஒரு வழியைக் காணல்லே; இந்த மட்டும் எங்கப்பா பண்ணிப் போட்டதையாவது கெட்டுப் போக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறேனே, அதுவே பெரிசு; பெரியவாள் பண்ணின புண்யம். அதையும் உங்கள் கிட்டே ஒப்பிச்சிருந்தால் போயே போய், போன இடமும் புல் முளைச்சுப் போயிருக்கும். நான் ஒருத்தி இருந்து, அதை இதை கவனித்துக் கொண்டிருக்கப் போக, நாலு பேர் முன்னே நகைக்க இடம் இல்லாமே இருக்கு..."

அவள் ஒரு பெரிய பெருமூச்சு விட்டதையும், தன் நகைகளைக் கழற்றிப் புருஷன் கையில் கொடுத்ததையும் நாகப்பன் கவனித்தான். எல்லாம் கொடுத்தான பிறகு அவள் மீண்டும் பேசினாள்:-

"சரி, சரி... எல்லாத்தையும் ஜாக்கிரதையாகப் பொட்டியிலே பூட்டிட்டுத்தானே படுங்கோ. ஒரு தரத்துக்கு இரண்டு தரமாய்ப் பாருங்கோ. யாரானும் திருடன் கூட, உங்கள் புத்திசாலித்தனத்தைத் தெரிஞ்சுண்டு இங்கே திருட வந்துடுவான்... இந்த வீட்டிலே ஏதானும் திருட்டுப் போனா, அதுக்கு நீங்கதான் காரணம். உங்களைக் கண்டுதான் திருட வரவனும் வருவான். நன்னாப் பூட்டை இழுத்துப் பார்த்துட்டுத்தானே படுங்கோ. ஆமாம்... எதையானும் பறி கொடுத்து விட்டு நாளைக்குத் திருதிருன்னு முழிக்க வேண்டாம்..."

இத்தனைக்கும் அந்தப் புருஷன் பதிலே சொல்லவில்லை. பீரோவைத் திறந்து, அவள் நகைகளை வைத்துப் பூட்டியதும் நாகப்பனுக்குக் காதில் விழுந்தது. அந்தப் புருஷன் சட்டையைக் கழற்றி, கோட் ஸ்டாண்டில் மாட்டி, தன் மணி பாக்ஸை அதில் வைத்தான். அந்த ஸ்திரீயின் கையிலிருந்த தங்க செயினுடன் கூடிய ரிஸ்ட் வாட்சை வாங்கி ஜேபியில் வைத்தான். பிறகு விளக்கை அணைத்துப் படுத்தான்.

அந்த ஸ்திரீயின் குரல் வர வர அடங்கிற்று; பிறகு பெரிய குறட்டைகள் அவள் தூங்கி விட்டாள் என்பதை தெரியப்படுத்தின.

சுமார் அரை மணி நேரங் கழித்து மறைவிடத்திலிருந்து வெளியே வந்த நாகப்பன் சட்டை ஜேபியிலிருந்த மணி பாக்ஸையும் கெடியாரத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டான். பீரோவைத் திறக்க அவனுக்குத் தைரியப்படவில்லை. பிறகு பூனைபோல் அடி வைத்து, தூங்குகிற தம்பதிகளைத் தாண்டிக் கொண்டு, வெளியே வந்தான்.

வராந்தாவைக் கடந்து மாடியின் கைப்பிடிச் சுவரண்டை வந்ததும் சற்றுத் தயங்கினான். அவன் மனக்கண் முன் ஒரு பரிதாபகரமான காட்சி தோன்றிற்று. மறுநாள் காலை அட்வகேட் அருணாசலத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்பதுதான் அது. களவுபோன சமாசாரம் காலையில் அறிந்து அவருடைய மனைவி என்னவெல்லாம் பேசுவாள், ஏசுவாள் என்று நினைத்துப் பார்த்தான். கைகளைப் பிசைந்து கொண்டு மனோ வேதனை தாங்காமல் அவர் நின்று கண்ணீர் விடுவது போல் தோன்றிற்று.

நாகப்பன் தயங்கினான். அவன் முகத்தில் இரக்கக் குறி தெரிந்தது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் தோன்றிற்று. பிறகு சட்டென்று வந்த வழியே திரும்பித் தைரியமாகச் சென்றான். தம்பதிகள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தான் எடுத்த பண்டங்களைச் சட்டை ஜேபியின் முன்போல் வைத்து விட்டுத் திரும்பினான். மனைவியைப் பற்றியும், அவள் அவனை ஏசப் போவதையும் நினைத்தபோது, மனத்திலே பெருங் கவலை குடிகொண்டது. ஆனால், "என்னைப் போலவே குடும்பத்திலே சிரமப்படும் ஒருவருக்கு உதவி செய்தோம்" என்ற திருப்திதான் மேலோங்கியிருந்தது. வெறுங்கையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.

~*~o0O0o~*~

[ நன்றி ; ‘ஜாங்கிரி சுந்தரம்’, அல்லயன்ஸ் ]

தொடர்புள்ள சில பதிவுகள் :

தேவன் நினைவு நாள், 2010
தேவன்’: துப்பறியும் சாம்பு
தேவன் படைப்புகள்
தேவன்' : நினைவுகள்