சனி, 23 ஜூன், 2012

மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்

மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்
மணியம் செல்வன் சொற்பொழிவு


 எனக்குப் பிடித்த ஆறு ஓவியர்களுள்  ஐந்து பேரைப் பற்றி ஆறாம் ஓவியர் சென்னையில்  நவம்பர் 2011-இல்  பேசினார் என்பதைப் படித்தபோது

” சிறிய வயதினிலே - இவர்கள்
        சித்திரங்கள் கண்டு மயங்கிவிட்டேன்”

என்று பாடத்தான் தோன்றியது. அடடா! நாம் அன்று அங்கு இருக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று பெருமூச்சு விட்டேன்.  நல்ல வேளை! எழுத்தாளர் இரா.முருகன் நமக்காக அந்தப் பேச்சைப் பற்றி ஒரு சொற்சித்திரம் ‘திண்ணை’யில் வரைந்திருக்கிறார். அதை இங்கு உங்கள்முன் வைத்து மகிழ்கிறேன்.
=========
இரா. முருகன் ’திண்ணை’ இதழில் எழுதியது:

மழையாக இருந்தாலும் இருபது பேர் எப்படியோ வந்து சேர்ந்திருந்த கூட்டம். மணியம் செல்வன் சாஸ்திரத்துக்கு நாலு வார்த்தை பாரம்பரிய சித்திரக் கலை, ரவிவர்மா, கோட்டோவியம், சித்தன்ன வாசல் என்று ஒப்பித்து விட்டு ‘அவை நிறைந்து சாவகாசமாக ஒரு கூட்டம் போடுங்கள், வந்து நிறையப் பேசறேன்’ என தப்பித்திருக்கலாம். வந்திருந்த இருபது பேரையே இருநூறு பேராகப் பாவித்து கிட்டத்தட்ட ரெண்டரை மணி நேரம் உற்சாகத்தோடு சொற்பொழிந்தார் அவர்.

எழுத்தாளர் யாராவது இருபது நிமிடத்துக்கு மேல் பேசினால் முன்னால் உட்கார்ந்து அரை குறையாகக் காதில் வாங்கிக் கொண்டு மொபைலில் மன்மோகன் சிங்கை கிண்டல் செய்து ட்வீட் அனுப்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் ம.செ மொபைலை சட்டைப் பையில் இருந்து எடுக்கவே விடவில்லை. ரெண்டரை மணி நேரம் என்ன, ராத்திரி ரெண்டு வரைக்கும் அவர் பேசினாலும் கேட்கக் கேட்க அலுப்பே தட்டாத பேச்சு. வெறும் பேச்சு மட்டும் இல்லை. லேப்டாப் கம்ப்யூட்டரில் கொண்டு வந்த ஓவியங்களையும் காட்டி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதால் மனம் தானே ம.செ பொழிந்ததில் லயித்து விட்டது.

மொத்தம் ஐந்து ஓவியர்கள்மாதவன், எஸ்.ராஜம், சில்பி, கோபுலு, மணியம். அப்புறம் ஆறாவதாக மணியம் செல்வனும். இவர்கள் தான் டாபிக்.ஒற்றைப் பார்வையில் இவர்கள் எல்லோரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் தொடர்ந்தோ தீபாவளி, பொங்கல் மலர்களில் மட்டுமோ படம் வரைந்த ஓவியர்கள். ‘முப்பது பைசா விலைக்கு விற்கிற பத்திரிகைக்காக’ உசிரைக் கொடுத்து நுணுக்கமாக மரபு ஓவியம் வரைவதில் வல்லவர்கள். அதாவது அறுபதுகளில். இப்போதென்றால் பத்து ரூபாய்க்கு விற்கிற பத்திரிகைகள்.

இலக்கிய வாதி எழுத்தாளர்கள் ஜனரஞ்சக எழுத்தாளர்களோடு ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டால் அனாசாரம் என்று வெகு சமீப காலம் வரை நினைத்தது உண்டு. அது போல், ஆர்ட் காலரிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி பத்து லட்சம் இருபது லட்சம் விலைக்கு நவீன பாணி ஓவியங்களை விற்று லண்டன் – நியுயார்க் பறக்கிற குறுந்தாடி ஓவியப் பிரபலங்கள் இந்த ஜனரஞ்சக ஓவியர்களை ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. ஓவிய விமர்சகர்ளும் அப்படியே.

ஆனாலும் முப்பது பைசா ஓவியர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது என்பது உண்மை. கதைக்குப் படம் போட்டும், கார்ட்டூன் போட்டும் சராசரி வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் இவர்கள். ‘தமிழ் சரியா படிக்கத் தெரியாது. பத்திரிகையிலே ஜோக் மட்டும் பார்ப்பேன்’ என்று மேட்டுக்குடி தமிழர்கள் போன நூற்றாண்டு முழுக்க ஆடம்பரமாக அறிவித்தது உண்டு. இப்போது நடுத்தர வர்க்கமும் அதே போல் பேச ஆரம்பித்து விட்டது. அவர்களுக்கும் பரிச்சயமான பெயர்கள் மேலே குறிப்பிட்ட எல்லோரும்.

மாதவன் பத்திரிகை ஓவியத்தோடு கூட பிரதானமாக, சினிமா கட் அவுட்டும் பேனரும் வரைந்து பிரபலமான ஓவியர்.
மாதவன்
ஆனாலும், இருபது பேர் வந்த கூட்டத்தில் பத்து பேருக்கு அவரைத் தெரியவில்லை. அறிமுகப்படுத்துகிற வேலையை கச்சிதமாகச் செய்தார் ம.செ. அழுத்தமான நிறங்கள், அழுத்தமான கோடுகள். ஆற்றில் பளிங்கு நீரையும், மேலே நீல வானத்தையும் வண்ணமும் தூரிகையின் துடிப்பும் வெளிப்படுத்த அவர் வரைந்த பத்திரிகை ஓவியங்கள் காலண்டர் ஆர்ட் என்று ரெண்டே வார்த்தையில் தள்ளி விடலாம். நஷ்டம் நமக்குத்தான்.

பேனர் ஆர்ட்டிஸ்களின் கலை வெளிப்பாட்டுச் சூழல் மற்ற கலைஞர்களுடையதை விடக் கஷ்டமானது. பரபரப்பான வீதியில் சாரம் கட்டி உச்சியில் உட்கார்ந்து, எப்படியோ பிரஷ்ஷயும் வண்ணங்களையும் அங்கே பக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு, உள்ளங்கையில் வைத்திருக்கிற புகைப்படத்தைப் பார்த்து அதைப் பல மடங்கு பிரம்மாண்டமாக அச்சு அசலாக அதேபடிக்கு வரைய வேண்டும். மாதவன் சாரம் கட்டி வரைந்தாரா தெரியவில்லை. ஜெமினியின் இந்தி ‘சந்திரலேகா’வுக்காக அவர் வரைந்து கொடுத்து பம்பாய்க்கு எடுத்துப் போன பேனரில் கதாநாயகி ராஜகுமாரியின் லோலாக்கு மட்டும் ஆறு அடி உயரம் என்றால் பேனரின் நீள அகலம் மற்றும் உயரத்தைக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.

எஸ்.ராஜத்தின் பாட்டு மாதிரி ஓவியமும் அடக்கமான அழகு கொண்டது.

எஸ்.ராஜம்
மாதவன் போல் பளிச்சென்ற நிறங்கள் கிடையாது. கண்ணுக்கு இதமான வண்ணங்கள் பெரும்பாலும். வண்ணங்களோடு மனதில் நிற்பது அவர் பிடிவாதமாகக் கடைப்பிடித்த அஜந்தா ஓவியப் பாணி. சாவி பத்திரிகை மலரில் படம் போட கொஞ்சம் பாணியை மாற்றுங்கள் என்று கேட்டபோது மறுத்து விட்டாராம் இந்த ஓவிய-இசை மேதை. பெரும்பாலும் தீபாவளி மலர்களிலேயே இவர் திறமை வெளிப்பட்டது என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட அறுபது தீபாவளிகள்!

ராஜம் இன்னொரு புதுமையும் செய்திருக்கிறார். அமரரான காஞ்சி மூத்த சங்கராச்சாரிய சுவாமிகள், மடத்தில் சிவபூஜை செய்கிற ஓவியத்தை கல்கி தீபாவளி மலருக்காக வரைய ஆரம்பித்தவர் தன் பாணியில் பூஜையில் பிரத்யட்சமான மூன்று தேவியரையும் வரைந்திருக்கிறார். விண்ணுலகத் தேவதைகளை சுலபமாக வரைந்தவர் மண்ணுலக சங்கராச்சாரிய சுவாமிகளின் உருவத்தை அதே பாணியில் வரையத் தயங்கி, மணியம் செல்வத்திடம் ஓவியத்தைக் கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்லி இருக்கிறார். தலைமுறை இடைவெளி கடந்த இந்த நட்பைச் சொன்னபோது ம.செ நெகிழ்ந்துதான் போனார்.

ஓவியர் சில்பி தத்ரூபம் என்பதின் மறு பெயர்.
சில்பி
அவருடைய மயிலைக் கற்பகாம்பாள் ஓவியத்தைக் காட்டினார் ம.செ. கோவில் கர்ப்பகிருஹத்தில் போய் நின்றால் கூட இந்த அற்புத தரிசனம் கிடைக்காது என்று பக்தர்களைக் கன்னத்தில் போட்டுக் கொள்ளவைக்கும் நேர்த்தி. இருக்காதா பின்னே? காலையில் கோவிலுக்குள் போய் வரைய ஆரம்பித்து, உச்சி காலம் முடிந்து கோவிலைப் பூட்டும்போது அவரை உள்ளேயே வைத்துப் பூட்டிப் போய், சாயந்திர பூஜைக்கு திரும்பத் திறந்தபோது முடிந்த ஓவியமாம் அது. முடித்தாலும் திருப்தி இல்லாமல், கற்பகாம்பாளுக்கு அணிவிக்கும் எல்லா நகைகளையும் ஒரு தடவை வாங்கிப் பார்த்து நுணுக்கமான திருத்தங்கள் செய்து தான் சில்பி ஓவியத்தை முடித்தாராம். மரபு ஓவியத்தில் ஒரு மைல்கல் அவர்.

கோபுலுவைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை.
கோபுலு-1
அந்தப் பெயரைச் சொன்னாலே நமக்கு ஜெயகாந்தனின் சாரங்கனும், ஹென்றியும், கொத்தமங்கலம் சுப்புவின் சிக்கல் சண்முகசுந்தரமும் தில்லானா மோகனாம்பாளும், வாஷிங்டனில் திருமணக் காட்சிகளும் இன்னும் ஏகமான கோட்டோவியங்களும், வண்ண ஓவியங்களும் நினைவில் வரும். முக்கியமாக அந்தக்கால ஆனந்த விகடன் அட்டைப்பட சிரிப்புத் துணுக்குகள்.

கோபுலு வரைந்த ஆனந்த விகடன் அட்டைப்பட நகைச்சுவை ஓவியத்தை ம.செ காட்டினார். மனதிலேயே நிற்கிறது. 1940-களின் நடுத்தர வர்க்க வீடு. வீட்டு வாண்டுகளுக்கு ‘மாசாந்திர விளக்கெண்ணெய்’ கொடுக்கும் வைபவம்.
கோபுலு-2

 விளக்கெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் விளக்கெண்ணெய் குடித்த மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு நிற்க, மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பையனை அம்மா விசிறிக் கட்டையைக் காட்டி மிரட்டுகிறாள். பக்கத்தில் அன்பே உருவான பாட்டி சர்க்கரை டப்பாவோடு நிற்கிறாள். வீட்டுக்கு உள்ளே இன்னொரு அறை. ரெண்டு டைமன்ஷன் படத்தில் எப்படி இந்த மேதை இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்தார்?நம்மால் அந்த உள்ளறையை உணர முடிகிறது. உள்ளறையில் அப்பா எதைப் பற்றியும் கவலைப் படாமல் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். இனி படத்தில் வரும் மறக்க முடியாத பாத்திரம் – அடுத்து விளக்கெண்ணெய் குடிக்க வரிசையில் நிற்கும் இன்னொரு குட்டிப் பையன். அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கோபுலு தவிர வேறே யாராலும் சித்தரிக்க முடியாது.
கோபுலு இன்னும் நம்மிடையே இரு
க்கிறார் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தின் பெரும் பேறு.

‘சேர்க்கச் சேர்க்க சிற்பம், எடுக்க எடுக்க ஓவியம்’ என்றார் மணியம் செல்வன். சிற்பத்தில் இம்மி இடம் கூட விடாமல் நுணுக்கமாகச் செதுக்கும்போது கிடைக்கும் காட்சி அனுபவத்துக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை ஓவியத்தில் அங்கங்கே வெறும் வெளியை அப்படியே விட்டு கற்பனையில் நிரப்ப வைப்பது. மணியம் இதில் வல்லவர் என்று ம.செ காட்டிய அவருடைய ஓவியங்கள் கூறின.
மணியம்
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைக் கூட மறந்து விடலாம். ஆனால் மணியன் வரைந்த பழுவேட்டரையரையும் நந்தினியையும் மறக்க முடியுமா என்ன? அவர் மேல் கல்கிக்கு விசேஷப் பிரியம் இருந்திருக்கிறது. ஓவியக் கல்லூரியில் டிப்ளமா முடித்து விட்டு ஆறு மாதம் கழித்து கல்கி பத்திரிகையில் வேலைக்கு சேர்கிறேன் என்று மணியம் சொன்னபோது கல்கி கேட்டிருக்கிறார் – பத்திரிகையில் நீ வேலை பார்க்கப் போறியா, டிப்ளமா வேலை பார்க்கப் போறதா? படிப்பை முடிக்காமலே வேலைக்குச் சேர்ந்த மணியம் அதை ஒரு குறையாகவே கருதினாலும் கல்கி பத்திரிகை வேலையை கடைசி வரை ரசித்தே செய்திருக்கிறார். பத்திரிகைப் பெயர், விலை முப்பது காசு முதற்கொண்டு அட்டைப்பட ஓவியத்தோடு கூட வரைந்து எழுத வேண்டியிருந்த காலம் அது.

மேலே சொல்லிய எல்லா ஓவியர்களின் கலைச் சிறப்பையும் உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறை ஓவியரான மணியம் செல்வனின் படைப்புகள் மிளிர்கிறதை அவர் சொல்லாமலேயே உணர்ந்து கொள்ளலாம்.

மணியம் செல்வன்
சிவராத்திரி நேரத்தில் சிவபிரானை கருப்பு வண்ணத்தில் ஒரு நிழல் போல் தான் வரைந்த ஓவியத்தை ம.செ திரையில் காட்டினார். சிவனுக்கு முக்கண்னோ, மூக்கோ, நாசியோ செவியோ வாயோ எதுவுமில்லை. ஆனாலும் கற்பனையில் நிரப்பிக் கொள்ள சராசரி பத்திரிகை வாசகன் எந்த கஷ்டமும் படவில்லை.ஆனாலும் அந்த ஓவியத்துக்கு உள்ளே ஓவியருக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறதாம். இதை மணியம் செல்வனுக்குச் சொன்னவரும் ஒரு வாசகரே.
‘படத்தைத் திருப்பிப் பாருங்க சார்’ என்றாராம் வாசகர் ஓவியரிடத்தில்.
திரையில் வந்த தன் சிவராத்திரி சிவன் ஓவியத்தைத் தலைகீழாகத் திருப்பிக் காட்டினார் மணியம் செல்வன். அங்கே துல்லியமாக ஒரு வினாயகர் தெரிந்தார். மணியம் செல்வனின் டாவின்சி கோட் இது என்று சந்தேகப் படுகிறவர்கள் அவருடைய மற்ற ஓவியங்களையும் தலைகீழாகப் பார்க்கவோ யோகாசனம் செய்தபடி பார்க்கவோ செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

[  நன்றி: இதுவும் அதுவும் உதுவும்   ]

எழுத்தாளர் சாருகேசியும் மணியம் செல்வனின் இந்த உரையைப் பற்றி
ஆங்கிலத்தில் ‘ஹிந்து’வில் அருமையாக எழுதி இருக்கிறார்.

[ நன்றி : ஓவிய உலகின் ஐவர் ]

( ஹிந்து கட்டுரையில் மேல் பகுதியில் இருக்கும் அறுவரின் ஓவியங்களைப் பார்க்க மறந்து விடாதீர்கள்! )

தொடர்புள்ள சில வலைச்சுட்டிகள்:

எஸ்.ராஜம் -1
எஸ்.ராஜம்-2
எஸ்.ராஜம்-3
எஸ்.ராஜம்-4

சில்பி-1
சில்பி-2
சில்பி-3
சில்பி-4

கோபுலு -1
கோபுலு-2
கோபுலு-3
கோபுலு-4

மணியம்-1
மணியம்-2
மணியம்-3

மணியம் செல்வன்-1
மணியம் செல்வன்-2
மணியம் செல்வன்-3

மாதவன்-1
மாதவன்-2
மாதவன்-3


தொடர்புள்ள சில பதிவுகள்:

பாடலும் படமும்


’சில்பி’யின் அமர ஓவியங்கள்

கோபுலு

துப்பறியும் சாம்பு - 6: ‘கோபுலு’வின் கைவண்ணத்தில்


S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

4 கருத்துகள்:

Siva Suryanarayanan சொன்னது…

அழகானக் கட்டுரைகள், கவிதை, காதை
அளிக்கின்ற பசுபதியார் வலைப்பூ விற்கே
வழிகாட்டும் தினமணியைக் கண்டேன் கண்டேன்
மகிழ்ந்தளிக்கும் வாழ்த்திதனை ஏற்றுக் கொள்க!
மொழியார்வம் உள்ளோர்கள் பயன டைய
முன்வந்து உதவுவலைப் பூநீ வாழ்க!
எழுஞாயிற் றைப்போலே நீயும் நன்றே
எஞ்ஞான்றும் இதுபோலத் தொண்டு செய்க!

சிவ சூரியநாராயணன்.

Thangamani சொன்னது…

அந்த நாளில்,சிறுவர் சிறுமியருக்கு,வீட்டில் பெரியவர்கள்
மாதத்தில் ஒருநாள்னு நினைக்கிறேன்...விளக்கெண்ணைய்
கொடுக்கிற நிகழ்வு...நடக்கும்.அப்போது
தப்பித்து ஓட்டம் பிடிப்போம்.துரத்திப்பிடித்து
மூக்கை பிடித்து,வாயில் ஊற்றி'முழுங்கு! முழுங்கு'ன்னு
கத்திக் கூச்சலிட்டு எங்களை விளக்கெண்னையைக் குடிக்க வைக்க
பெரியவர்கள் பட்டபாடும்,விளக்கெண்ணை குடிக்க
நாங்க பட்டபாடும்....திண்ணையிலிருந்து குதிக்கணும்
அப்போதான் விளக்கெண்ணைஉள்ளே செல்லும்.
நினைவில் நிழலாடுகிறது..
கோபுலுவின் சித்திரம் பார்த்து...
மிக்கநன்றி.பசுபதிஜி.

அன்புடன்,
தங்கமணி.

Arima Ilangkannan சொன்னது…

சில்பி திருச்சி மவைக் கோட்டையை வரையும் போது பார்த்துள்ளேன். மணியன்
செல்வனுக்கு எங்கள் "பொற்றாமரை" விருது வழங்கி கவுரவித்துள்ளது. பொற்றாமரை சரஸ்வதி ஓவியம் அவர் வரைந்ததுதான்
- அரிமா இளங்கண்ணன்

G Swaminathan சொன்னது…

மிக அருமையான பதிவு. எனக்கும் மிகவும் பிடித்த ஓவியர்கள்; இவர்களின் சித்திரங்கள் தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தவை என்பதை எவராலும் மறுக்க முடியாது.

கருத்துரையிடுக