ஞாயிறு, 10 ஜூன், 2012

'தேவன்’ - 1: ஸரஸ்வதி காலெண்டர்

ஸரஸ்வதி காலெண்டர்                            
தேவன்                     


          

[  ஜெரோம் கே.ஜெரோம் என்பவர் ஒரு பிரபல ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்; அவர் எழுதிய ‘ஒரு படகில் மூன்று மனிதர்கள்’ ( Three men in a boat) என்ற நாவலில், ஓர் அத்தியாயத்தில் ‘ பாட்ஜெர்( Podger ) எப்படி ஒரு சட்டம் போட்ட படத்தைச் சுவரில் ஆணியடித்து மாட்டினார் என்பதை நகைச்சுவையுடன் விவரித்திருப்பார். அதன் தாக்கத்தில், தேவன் எழுதியது இது என்று நினைக்கிறேன்.]
                                   


போஸ்டாபீஸ் பத்மநாபையரை ஊரில் தெரியாதவர் கிடையாது. அவர் வேலை பார்ப்பதுதான் போஸ்டாபீஸ் என்றாலோ, அவர் சட்டை வேஷ்டிகளிலும் பல ஆபீஸ்களைத் திறந்து வைத்திருந்தார். சம்சாரி என்பதற்கு இல்லை; ஒரு பெண்டாட்டியும் இரண்டு குழந்தைகளுந்தான். ஆனாலும் அநாவசியமான செலவுகள் ஒன்றுமே செய்ய மாட்டார். சிக்கனம் என்பதற்கு ஓர் அத்தாட்சியாய் நின்றவர் பத்மநாபையர்தான். தீபாவளி சமயத்தில் எவனாவது மெயில் பியூனை மிரட்டி ஒரு வேஷ்டியும் சம்பாதித்து விடுவார். மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டாலோ, எல்லாக் கறிகாய்க் கடைக்காரர்களிடமும் சண்டை. ''காசுக்கு எட்டுக் கொடுப்பியா? இல்லாவிட்டால் இன்னொருவன்கிட்டே வாங்கட்டுமா?'' என்று இன்னொருவன் இல்லாதவரைக்கும் கேட்டுக்கொண்டே போவார். இவ்வளவு கடிசலாயிருந்தபோதிலும் தம்மை அறியாமல் எவ்விடமாவது ஒரு கால் ரூபாயை உதறிவிட்டு வந்துவிடுவார், பிறகு வீட்டுக்கு வந்து, ''கொண்டுபோனேனோ, இல்லையோ?... இருக்காது. கொண்டு போயிருந்தால் எங்கே போய்விடும்?'' என்று சமாதானம் செய்து கொள்வார்.

இந்தப் பிரபுவுக்கு யாரோ ஒருவர் புது வருஷத்து ஸரஸ்வதி காலெண்டர் ஒன்று கொடுத்துவிட்டார். படத்தைப் பார்த்தாலோ வெகு அழகாய் இருந்தது. அவசியம் கண்ணாடி போடவேண்டும். தகரக் கடைக்காரனிடம் காண்பித்து உத்தேசமாய் என்ன ஆகுமென்று கேட்டார். ''ஒரு ரூபாய் சுவாமி!'' என்றான். ''அப்பாடா!'' என்று மூக்கின்மேல் விரலை வைத்து வீட்டுக்குத் திரும்பினார்.

''அடியே, இத்தைக் கேட்டியோடி, இந்தப் படம் கண்ணாடி போட ஒரு ரூபாய் கேட்கிறான். அந்தப் பயல் என்னைக் கையாலாகாதவன் என்று நினைத்துவிட்டான். இருக்கட்டும். இன்னிக்கி சனிக்கிழமையோன்னோ, 3 மணிக்கு வந்துடறேன். நானே போட்டுடறேன். 8 அணாவுக்குமேல் ஆனால் ஏனென்று கேளு'' என்று மீசையை முறுக்கக் கையெடுத்து, அது இல்லாதபடியால், அது இருக்க வேண்டிய இடத்தை ஒருவாறு தடவிக் கொடுத்தார்.                               
   அன்றைய தினம் ஆபீஸில் வேலையே ஓடவில்லை. மணி 3 அடித்திருக்குமோ என்னவோ, வீட்டை நோக்கிக் கிளம்பினார். வரும் வழியில் கண்ணாடி போடுவதற்கு வேண்டிய சாமக்கிரியைகளை விலை விசாரித்தார். ஒரு ஷீட் தகரத்தின் விலை 5 அணாவுக்குக் கம்மி இல்லை. இரண்டு போட்டோக்களுக்குப் போடலாம். மிஞ்சினால் வீட்டில் கிடந்துவிட்டுப் போகிறது என்று எண்ணி ஒன்று வாங்கினார். கண்ணாடி ஒன்று 7 அணாவுக்கும், பிரேம் கட்டை 4 அணாவுக்கும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். இந்த சாமான்களே 1 ரூபாயாகி விட்டதை நினைத்து, ''போனால் போகிறது. அந்தக் காலாடிப் பயல் கையில் கொடுப்பதைக் காட்டிலும் நாமே செய்வது பெரிதல்லவா? என்ன கடையில் வாங்கினாலும் நம்ம புழக்கடையில் காய்க்கும் கத்தரிக்காய் ருசி ஒசத்தி இல்லையா?'' என்று சமாதானம் சொல்லிக் கொண்டார். படத்தை அளவு பார்த்துக் கட்டையை நறுக்க ஆரம்பித்தார்.

''அடியே, ஆத்திலே உளி, கிளி இருக்கா?'' என்று கேட்டார்.

உள்ளிருந்தபடியே, ''வாங்கினால்தானே இருக்கும்!'' என்று மூக்கால் ஒரு ஸ்வரம் முணுமுணுத்தது.

 ''கழுதை, அந்த அதிகப்பிரசிங்கித்தனமெல்லாம் உன்னை யார் கேட்டா? உண்டென்றால் கொணர்ந்து வைக்க, இல்லாவிட்டால் பேசாமலிருக்க'' என்று கரிஜித்தார். பிறகு தாமே சென்று தம்முடைய பேனாக் கத்தியைக் கொண்டு வந்து கட்டையின் மீது வைத்து ஒரு கற்குழவியால் தட்டினார். முதல் அடியில் கழி சற்றுக் குறுக்கே விரிந்து கொண்டது. இரண்டாவது அடியில் கத்தி இரண்டாகத் தெறித்தது.

''ஐயையோ, ராஜர்ஸ் கத்தி ஆச்சே, ரூபாய் ஒன்றரை அல்லவா?'' என்று அலறினார் பத்மநாபையர். பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்த அவர் இல்லாள், ''எனக்கு அப்பவே தெரியும். நான் நினைச்சுண்டேன்'' என்றாள்.

பத்மநாபயைருக்கு ஆத்திரம் பொங்கிற்று.

 ''மூதேவி, நீ நினைச்சுண்டுட்டியோல்லியோ, அப்புறம் கேட்கவேணுமா? அதுதான் உடைஞ்சு போச்சு'' என்றார்.

''பண்றதெல்லாம் பண்ணிப்பிட்டு என்னைத்தானே தூறத் தெரியும் உங்களுக்கு!'' என்றாள் மனைவி.

 ''நாயே, பதில் சொல்றயா?'' என்று ரோஷத்துடன் பாய்ந்தார் பத்மநாபையர்.

''என்னை அடிச்சுக் கொல்லுங்கோ! நான்தானே கையில் ஆப்பிட்டுண்டிருக்கேன்! கையாலே ஒரு புடவே, ரவிக்கே, ஒரு பொன் தோச்ச மணி செய்ய யோக்கியதை இல்லாவிட்டாலும், என்னை அடியுங்கோ'' என்று தைரியமாய் ஒரு டோஸ் விட்டாள்.                                  


 பார்த்தார் பத்மநாபையர். ''இந்தக் கட்டையை நறுக்க நம்மாலியலாது. இதை மாத்திரம் கடையில் அறுத்து வந்துவிடுவோம்'' என்று உத்தரீயத்தை மேலே வீசிக் கொண்டு நடந்தார். கடைக்காரன். ''சுவாமி நம்ம தொழிலைக் கெடுக்கறாப்பலேயிருக்கு'' என்று சொல்லி இரண்டணாக் கேட்டான். என்ன செய்யலாம்! சரியென்று கொடுத்துக் காரியத்தை முடித்துக்கொண்டு வீட்டை அடைந்தார். கண்ணாடியைத் துடைத்து வைத்து, அதன் மீது படத்தை வைத்து நான்கு புறமும் பெருமையாய்ப் பார்த்தார். தகர வீட்டை அளவெடுத்துக் கத்தரிக்கோலால் நறுக்கினார்.

2
 பள்ளிக்கூடம் வீட்டுக் குழந்தைகள் ராமுவும், பட்டுவும் வந்து விட்டார்கள். கடியாரத்தை நோக்கினார். மணி நாலரைதான். நறுக்கின தகரத்தைப் படத்துக்குப் பின்னால் வைத்தால் போதவில்லை. 'பார்த்துத்தானே நறுக்கினேன், என்னமாக் குறையும்?' என்று எவ்வளவோ யோசனை செய்தும் தகரம் பொருந்துகிற வழியாயில்லை. பிறகு மிகுதியாயிருந்த தகரத்தில் வேண்டுமான அளவு ஜாக்கிரதையாய்க் கத்தரித்துக்கொண்டார். உடனே ஆணி வாங்காத ஞாபகம் வந்தது.

''அடே ராமு, இங்கே வா! கடைக்குப் போய்ப் படம் அடிக்கும் ஆணியென்று கேட்டுக் காலணாவுக்கு வாங்கிக் கொண்டு வா'' என்றார்.

ராமு மிகவும் புத்திசாலி. இரண்டு வீடு தாண்டினதும் அங்கே இருவர் பச்சைக் குதிரை ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர்களுடன் விளையாடச் சேர்ந்துகொண்டான். ''கடை பத்தடியில் இருக்கிறது. போய் விட்டு வர அரைமணியா, காமாட்டிப் பயலுக்கு?'' என்று உறுமுகிறார் பத்மநாபையர். பிறகு பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் பயனில்லாமல், வெளிக் கிளம்பிப் பையனைக் கண்டு இழுத்துப் பளீர் பளீரென்று இரண்டு அறை வைத்துக் கடைக்கு அனுப்பினார்.

பத்து நிமிஷத்தில் சந்தோஷமாய் உள்ளே நுழைந்தான் குழந்தை ராமு. பத்மநாபையரும் மலர்ந்த முகத்துடன், ''என்னடா, பெரிய பொட்டலம்? காலணாத்தானே?'' என்று ஆவலுடன் பிரித்தார். உள்ளே 3 அங்குல ஆணிகளில் சுமார் பதினைந்து இருந்தன.

''அட மட்டி ராஸ்கல். உன்னை என்ன வாங்கச் சொன்னேன்?'' என்று பலமான குட்டு ஒன்று வைத்தார். '

'படம் மாட்ற ஆணிதானே, அப்பா?'' என்று ராமு விம்மினான்.

''ஏதாவது பண்ணப்போய்க் குழந்தைகளைப் போட்டு அடிக்கிறது. நீ இங்கே வந்துடுடா, என் கண்ணே'' என்று கூவினாள் அவன் தாயார்.

 பத்மநாபையர் தாமே கிளம்பிப் போய் ஆணி வாங்கி வந்தார்.

ஐந்தரை மணிக்குப் படம் அநேகமாய்ப் பிரேம் போட்டாகி விட்டது. தகரத்தில் ஆணியை அடித்து உயர மாட்டி விட வேண்டியதுதான் பாக்கி.                              


 ஐயர் ஆணியை வைத்துக் கற்குழவியால் ஓங்கி ஒரே ஓர் அடிதான் அடித்தார். ஏதோ நொறுங்குவதுபோல் சப்தம்! சட்டென்று திருப்பிப் பார்த்தார். அந்தச் சனியன் பிடித்த கண்ணாடி 2 சுக்கலாகப் போகக் கூடாதா, 200 சுக்கலாகவா ஆகவேண்டும்? எல்லாம் காலத்தின் கூறு'' என்று தம்மை வெறுத்துக் கொண்டார். ''அடியே, பட்டு. இந்தா'' என்று கத்தவே, பெண் ஓடோடி வந்து நின்றாள்.

''6 அணா எடுத்துக்கொண்டு போய் 10x8 கண்ணாடி வாங்கி வா'' என்றார்.

 குழந்தையும் 10 நிமிஷத்தில் வீட்டுக்குத் திரும்பினாள்.

''அப்பா, கண்ணாடி 6 அணா இல்லை, 4 அணாத்தான்'' என்று தான் மிகவும் லாபகரமாய்ச் செய்திருக்கும் வியாபாரத்தை நீட்டினாள். அவருக்கு வந்த கோபத்தை அளவிட முடியாது.

''சீ கழுதை! படத்துக்குக் கண்ணாடி வாங்கச் சொன்னால், வீட்டுமேல் வைக்கும் கண்ணாடியை வாங்கியிருக்கிறாயே!'' என்றார்.

குழந்தை நடுநடுங்கிவிட்டாள். கண்ணாடியைத் திருப்பிக் கொடுக்க வெளிக் கிளம்பினாள். குழந்தைதானே? வாசலில் போய் விட்டால் பூலோக ஞாபகமே போய் விடும். இருந்தால்தானென்ன? அந்தப் படுபாவி ஸைகிள்காரன் ஒதுக்கித்தான் ஓட்டினால் என்ன? கடைசியில் கண்ணாடி நொறுங்கிவிட்டது. நல்ல வேளையாய்ங்க குழந்தை காயம் ஒன்றும் இல்லாமல் கண்ணும் கண்ணீருமாய் வீடு சேர்ந்தாள்.

பத்மநாபையருக்கு உண்மையிலேயே ரோஷம் பொங்கிற்று. ''இதற்காச்சு, நமக்காச்சு, ஒரு கை பார்த்து விடுவது'' என்று வேகமாய்ச் சென்றார். அந்த அயோக்கியன் தகரக் கடைக்காரனுக்கு இதுதானா சமயம்? ''எசமான் வேலைலே ரொம்ப மும்மரமாட்டம் இருக்கு'' என்று சிரித்தான்.

 ஊர் முழுவதும் விளக்கேற்றி வைத்தாகிவிட்டது. ஐயரவர்கள் கிருகத்தில் மறுபடியும் கண்ணாடி வாங்கி வைத்து ஆணிகளும் சரிவர அடித்தாகிவிட்டது.

 ''சுவரில் மாட்டவேண்டும், ஸ்டூலைக் கொண்டா'' என்றார்.

 ''ஆளைக் கொண்டா, அக்ஷதையைக் கொண்டா என்று சொல்லிவிட்டால்? உள்ளே இருந்தால்தானே வெளியில் வரும்?'' என்று அம்மாளின் பொதுவான உத்தரம் வந்தது. உடனே வெளியிற் சென்று பழைய பீப்பாய் ஒன்று கொண்டு வந்து அதன்மேல் ஏறி நின்றார். ''ராமு! விளக்கைத் தூக்கிப் பிடி'' என்று சொல்லிக்கொண்டே ஆணியைச் சுவரில் அடிக்க ஆரம்பித்தார். குழந்தை பட்டுவும் ஆவலுடன் தந்தை செய்யும் காரியத்தைப் பார்த்துக் கொண்டு பரவசமடைந்து உயரப் பார்த்தபடி அடியில் நின்றாள்.                                  
                                
ஞாபகமறதியாய்க் கற்குழவியைக் கையில் போட்டுக் கொண்டு விட்டார், பாவம்! அவருக்குப் பாதி பிராணனே போய்விட்டது. கையிலிருந்த குழவியும் நழுவி அந்தோ அந்தோ, குழந்தை பட்டுவின் காலில் வீழ்ந்தது! குழந்தை வீரிட்டுக் கதறுகிறாள். அவருடைய விரல் வலி அவருக்கல்லவா தெரியும்? ''தரித்திரப் பிணமே, உனக்கு இங்கென்ன வேலை?'' என்று ஆசீர்வாதம் கொடுத்து, மெதுவாய்ப் படத்தை எடுத்து மாட்டிவிட்டார். அப்பாடா!

படம் மாட்டும் வளையம் நடு மையத்தில் இல்லாதபடியால் அந்தப் படம் சற்றுச் சாய்ந்து நின்றது. கையினால் தள்ளித் தள்ளிவிட்டால் அதற்குத் தெரிகிறதா? இச்சமயம் பையன், ''அப்பா, அப்பா'' என்று அவசரமாய்க் கூவினான். ''என்னடா?'' என்பதற்குள் தான் தூக்கிப் பிடித்த லாந்தரைப் பொத்தென்று கீழே போட்டுவிட்டு, கைவிரல்களை 'உஸ், உஸ்' என்று ஊதிக்கொண்டு நின்றான். விளக்கு அணைந்து, கண்ணாடி நூறு சுக்கலாய் உடைந்து விட்டது.... உள் முழுவதும் இருள் சூழ்ந்தது.

பத்மநாபையரின் வாயினின்றும் வார்த்தை கிளம்புவது அசாத்தியமாயிற்று. கீழே இறங்குவோம் என்றாலோ இருள்;கண்ணாடி குத்திவிடும். பீப்பாய்மேல் குதிக்கிறார்.பீப்பாய் அடுத்த வீட்டுக்காரனுடையது; அது வெகு நாட்பட்டதாகையால் பலகைகள் உளுத்திருந்தன. கறையான் பிடிக்கிறதென்று இவர்கள் வீட்டு வாசலிற்கொணர்ந்து போட்டிருந்தான். பத்மநாபையரோ அவ்வளவாக இளைத்த சரீரமுடையவரல்ல. இவ்வளவு நேரம் அது அவரைத் தாங்கியதே பெரியோர் செய்த பூஜாபலம். இவர் குதியெல்லாம் தாங்கவேண்டும்மென்பது அதன் தலையிலெழுத்தா? பலகை 'மளக்'கென்று நடுவில் முறிய ஐயரவர்கள் நின்றபடி விழுந்தார்.

அந்தச் சமயம் தற்செயலாய் எலெக்டிரிக் டார்ச்சுடன் நான் நுழைந்தேன். அவரை வெளியில் எடுத்துவிட்டுக் கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்கி எறிந்து ஒருவாறு சமாதானம் செய்து, ''என்ன சமாசாரம்'' என்று வினவினேன். அவர் வாய் திறவாமல் சுவரைச் சுட்டிக் காட்டினார்.

நிமிர்ந்து பார்த்ததில் ஓர் அசிங்கமான படம் கோணல்மாணலாய் ஆடிக்கொண்டிருந்தது. அது ஸரஸ்வதி பமாய் இருந்தபோதிலும், அவள் வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு' வீற்றிருக்கவில்லை. படத்தின் குறுக்கே ஒரு சிவப்புக் கறை கோரமாய் ஓடியிருந்தது. பத்மநாபையர், ''அடடா என் கட்டை விரல் காயமா அப்படிப் பண்ணி விட்டது!'' என்று விசனப்பட்டார்.

இன்றைய தினம் பத்மநாபையரைப் படம் விஷயமாய் கேட்டால், ''என்னையா! போனால் போகிறதே; நான் போட்டேன் என்கிறது இருக்கோன்னோ'' என்பார். ஆனால், சென்ற மூன்று வருஷமாய்க் கடைத் தெருவுக்குப் போகும்போதெல்லாம், 'அந்த ரூ 3-5-6யும் படத்தில் போடாமலிருந்தால், காபி ஹோட்டலில், பால் போறல்லை, டிகாஷன் போறல்லை என்று பிசுகிப் பிசுகி இரண்டு மாதம் ஜில்லென்று காபி குடிக்கலாமே' என்று நினைக்காமலிருந்திருப்பாரெனச் சொல்ல முடியாது.                                

தொடர்புள்ள பதிவுகள்:


தேவன் படைப்புகள்

5 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

சிரிச்சு மாளலை.

Angarai Vadyar சொன்னது…

Good "read", But not great! "B" grade. I often wonder if I had written this and sent to anada Vikatan for publishing, a month before this, would Devan have accepted it?

Thanks fro posting.

Pas S. Pasupathy சொன்னது…

My guess: At the time this was written ( perhaps 30-s?) , Kalki was the Editor who accepted this and he would be the one you had to please! Note: Though Devan was an Asst Editor , Kalki did not accept all of Devan's writings.. In fact, He rejected Devan's first novel !

Angarai Vadyar சொன்னது…

Thanks for the information. You are unbelievable! By the by, do you know the name if Devan's rejected first novel. I am sure he would have modified it an published in Ananda Vikatan. Thanks again.

Pas S. Pasupathy சொன்னது…

” Mythili". He published it in Naradar immediately, at the suggestion of Thumilan, who consoled Devan .
Some dialogs from it at : http://s-pasupathy.blogspot.com/2013/12/16.html