செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

என்.எஸ். கிருஷ்ணன் -1

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்ஆகஸ்ட் 30. என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவு தினம்.

முதலில், ‘ஆனந்த விகடன்’ 1940 தீபாவளி மலரில் வந்த ஒரு பக்கம் :

  அடுத்ததாக, 1984 -இல் தினமணி கதிரில் அறந்தை நாராயணன் எழுதிய ஒரு கட்டுரை:
[ நன்றி: விகடன், தினமணி கதிர் ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்
என்.எஸ். கிருஷ்ணன்

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

ஆர்வி

'அணையா விளக்கு' ஆர்வி!
கி.குருமூர்த்தி


ஆகஸ்ட் 29. தமிழ் எழுத்தாளர், “கண்ணன்” ஆசிரியர்,  ஆர்வி அவர்களின் நினைவு தினம்.

அவரைப் பற்றித் தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:
====
இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் - படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்வி என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன்.

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், 1918-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள், இராமையர்-சீதாலட்சுமி இணையருக்குப் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்குகொண்டு துண்டுப் பிரசுரங்கள் எழுதித் தருவது, பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்புவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் விடுதலைப் போராட்டத்துக்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1956-ஆம் ஆண்டு வெளிவந்த இவருடைய "அணையா விளக்கு' நாவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. "ஆதித்தன் காதல்' என்ற சரித்திர நாவலில் கொஞ்சி விளையாடிய தமிழ் நடையையும், "திரைக்குப் பின்' நாவலின், புயல் வர்ணனைகளையும் படித்தவர்களால் மறக்க முடியாது.


வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், ஆர்வி.யின் இளம் உள்ளத்தில் சுதந்திர வேட்கையைக் கிளர்ந்து எழச்செய்தது. 12-ஆம் வயதில் கதராடைக்கு மாறிய ஆர்வி, வாழ்நாள் முழுவதும் கதராடையே அணிந்து வந்தார்.

1941-இல் நடைபெற்ற தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு மூன்று மாதம் சிறைத்தண்டனை பெற்றார். அப்போது, இவருடைய பள்ளிச் சான்றிதழ்களைப் போலீசார் பறித்துச் சென்றுவிட்டனர். நாட்டு விடுதலைக்காக ஊர் ஊராகச் சென்று, தீவிரமாகப் பிரசாரம் செய்து, போராட்டங்களில் கலந்துகொண்டு, சான்றிதழ்களை இழந்து, சிறைத்தண்டனை அனுபவித்து பல இன்னல்களுக்கு ஆளாகியும்கூட சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தையோ, சலுகைகளையோ அனுபவிக்கவில்லையாம்.

ஆர்வி., பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எழுதிய முதல் சிறுகதைதான் "தனிக் குடித்தனம்'. பள்ளிப் பருவத்திலேயே ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பிரபல பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார் ஆர்வி.

1942-ஆம் ஆண்டு அப்போதைய "இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் ஆசிரியரான கே.சந்தானம், ஆர்வியை சென்னைக்கு அழைத்துவந்து, கல்கியிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். கல்கியில் பணியில் சேர இருந்த ஆர்வி, தற்செயலாகக் கலைமகள் காரியாலயத்தில் கி.வா.ஜ.வைச் சந்திக்க நேர்ந்ததும், அதன் பயனாகக் கலைமகள் அலுவலகத்திலேயே பணியில் அமர்ந்ததும் தனிக் கதை. கலைமகள் பத்திரிகையை இலக்கியத் தரம் வாய்ந்த உயர்ந்த பத்திரிகையாக வளர்த்ததில் ஆர்வியின் பங்கு மகத்தானது. மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று பிரபலமாகப் பேசப்படும் பல மூத்த எழுத்தாளர்களைக் கலைமகளில் எழுதவைத்த பெருமையும் ஆர்வியைச் சேரும்.

கலைமகள் நிறுவனம் 1950-இல் "கண்ணன்' என்ற சிறுவர்களுக்கானப் பத்திரிகையைத் தொடங்கியபோது அதன் ஆசிரியர் பொறுப்பு ஆர்வியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்வியின் அனுபவம், கற்பனை வளம், எழுத்தாற்றல் இவை தமிழில் சிறுவர் இலக்கியம் வளர உரமாக அமைந்தன. புதுமையான நடையில் அற்புதமானச் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் கண்ணனில் எழுதினார். கண்ணன் வாயிலாக, பாரபட்சமின்றி பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, ஊக்கமூட்டி எழுத வைத்தார். குழந்தை இலக்கியத்திற்காகக் கலைமகள் நடத்திய "கண்ணன்' இதழ் வெளிவந்த 22 ஆண்டுகள், தமிழில் குழந்தை இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.

கல்கியைத் தலைவராகக்கொண்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாகி, அதில் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். விக்கிரமன், சாண்டில்யன், த.நா.குமாரசுவாமியுடன் சேர்ந்து எழுத்தாளர்கள் தங்கள் நூல்களைத் தாங்களே வெளியிட்டுக்கொள்ள உதவும் வகையில் "தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்' அமையவும் காரணமாக இருந்தவர் ஆர்வி.

குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதோடு, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர், ஜாகிர் ஹுசேன் முன்னிலையில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் குழந்தை இலக்கிய மாநாட்டை நடத்தினார்.

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் கிளையைச் சென்னையில் தொடங்கியதோடு, "ஆதர்ஸ் கில்டு' என்ற இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக் கிளை உருவாகக் காரணமாக இருந்து, அதன் செயல் உறுப்பினராகவும் இருந்தார்.

ஆர்வியின் அணையா விளக்கு, குங்குமச் சிமிழ், சந்திரகிரிக் கோட்டை ஆகிய நூல்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசுகள் கிடைத்தன. காரைக்குடியில் நடைபெற்ற குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் ஏழாவது குழந்தை இலக்கிய மாநாட்டில், கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் ஆர்வி.

2004-ஆம் ஆண்டு 27-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான விருது ஆர்விக்கு வழங்கப்பட்டது. 33-ஆம் ஆண்டு கம்பன் விழாவில் சிறந்த எழுத்தாளருக்கானப் பாராட்டும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.

ஆர்விக்குத் திருமணம் நடந்தபோது அவருடைய வயது 18; மனைவி பட்டம்மாவின் வயது 13. தமது எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து, நான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்துவைத்து, தம் 90-வது அகவை வரை நிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஆர்வி, 2008-ஆம் ஆண்டு ஆகஸ்டு 29-ஆம் தேதி காலமானார்.

தமிழ்ப் படைப்பிலக்கியம் வாழ-வளர உழைத்த சில மூத்த எழுத்தாளர்களுள் முன்னிலையில் இருக்கும் ஆர்வியின், நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே பலரது பேரவா!

தொடர்புள்ள பதிவுகள்:


ஆர்வி

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் -1

தெ.பொ.மீ. தமிழ்த்துறைத் தலைவரான வரலாறு 
அ.ச.ஞானசம்பந்தன் 


ஆகஸ்ட் 27. தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் நினைவு தினம்.

அவர் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரான வரலாறு சுவையானது. அதில் திரு.வி.க., ராஜாஜி, காமராஜர் ஆகியோர் முக்கியப் பங்கேற்றனர். அந்தக் கதையை அ.ச.ஞா சொல்கிறார்; படியுங்கள்!
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

சனி, 27 ஆகஸ்ட், 2016

அ.ச.ஞானசம்பந்தன் - 1

ஞானசம்பந்தர் 
திரு.வி.க.
ஆகஸ்ட் 27. அ.ச.ஞானசம்பந்தரின் நினைவு தினம்.  அவரைப் பற்றித் திரு.வி.க. எழுதியது இதோ!   ( அ.ச.ஞா. திரு.வி.க. வைப் பற்றி ஒரு நூலே எழுதியுள்ளார்!)
தொடர்புள்ள பதிவுகள்:

திரு. வி.க
அ. ச. ஞானசம்பந்தன்: விக்கிப்பீடியா
அ.ச.ஞானசம்பந்தன்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சங்கீத சங்கதிகள் - 89

எஸ்.ஜி.கிட்டப்பா பற்றி அரியக்குடி
” நீலம்” 
ஆகஸ்ட் 25.  எஸ்.ஜி.கிட்டப்பாவின் பிறந்த தினம்.

சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் கந்தர்வ கான எஸ்.ஜி. கிட்டப்பாவின் 25-வது நினைவு நாள். தலைமை தாங்கிய கர்நாடக சங்கீத சக்கரவர்த்தி அரியக்குடி ராமானுஜய்யங்கார் தன் தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:

""நான் நாடகங்களுக்கோ சினிமாக்களுக்கோ போவதில்லை. ஆயினும் கிட்டப்பா உயிருடன் இருந்தபோது அவருடைய நாடகங்கள் காரைக்குடியிலோ தேவகோட்டையிலோ நடந்தால் போவதுண்டு. வேறு ஊர்களுக்கு நான் கச்சேரி செய்யப் போகிற இடங்களில் கிட்டப்பா நாடகம் நடந்தால் போகத் தவறுவதில்லை. கிட்டப்பாவின் நாடக மேடை சங்கீத வித்வான்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்கமாக இருந்தது.


தெய்வத்தின் அருளால் நம் நாட்டுக்குக் கிடைத்தவர் கிட்டப்பா. சாஸ்தீரியமாக அவர் சங்கீதத்தைப் பாடிக் கொண்டிருந்தார் என்பது அந்தக்காலத்தில் எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.

அவர் நாடகங்களுக்கு நான் மட்டும் ரசிகன் இல்லை. அக்காலத்தில் மகாவித்வான்களான கோவிந்தசாமிப் பிள்ளை, நயினாப் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, முத்தையா பாகவதர், மகாராஜபுரம் விசுவநாதய்யர் எல்லோருமே கிட்டப்பாவின் நாடகத்திற்குச் சென்று வருவோம்.

எதற்காகப் போனோம்?

கிட்டப்பாவின் அருமையான சாரீரத்திலே நமது கர்நாடக ராகங்கள் ஜொலிக்கின்ற அழகைக் காது குளிரக் கேட்பதற்காகவே! சங்கராபரணம், பைரவி, காம்போஜி முதலிய கர்நாடக ராகங்களை கிட்டப்பா பாடியபோது கர்நாடக சுத்தம் தவறவே தவறாது. அந்தக் காலத்தில் மைக்  கிடையாது. ஆயிரக்கணக்கில் அன்றாடம் அவர் நாடகத்திற்குக் கூட்டம் வரும். அத்தனை ஜனங்களின் காதுகளிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் நாலரைக் கட்டை சுருதியில் அந்தப் பாலகன் பாடிய அழகை நான் எப்படி வர்ணிப்பது?''


(இசை விமர்சகர் "நீலம்' எழுதிய "சங்கீத மணம் கமழும் கதம்பமாலை' என்ற புத்தகத்திலிருந்து)

தொடர்புள்ள பதிவுகள்:

" தசரத ராஜகுமாரா “ : எஸ்.ஜி.கிட்டப்பா

சங்கீத சங்கதிகள்

திரு. வி. க - 2

 வைர விழாக் கட்டுரைகள் - 1  


ஆகஸ்ட் 26, 1883. திரு.வி.க. வின்  பிறந்த நாள்.

1943-இல் நடந்த அவருடைய சஷ்டி அப்த பூர்த்தி விழாவைக் கொண்டாடும் முறையில் பழம்  பெரும் இதழான ‘ சுதேசமித்திரன்’ பல கட்டுரைகளை அதன் 29-8-1943 இதழில்  வெளியிட்டது.

அவற்றிலிருந்து சில பக்கங்கள் இதோ:
அட்டைப் பட விளக்கம்,  ’ சுதேசமித்திரன்’ ஆசிரியர் சி.ஆர்.ஸ்ரீனிவாசன், வையாபுரி பிள்ளை, ராஜாஜி, சுத்தானந்த பாரதி ஆகியோர் எழுதின கட்டுரைகளைக் கீழே காணலாம்.[ நன்றி: சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவு:

திரு. வி.க

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

நாமக்கல் கவிஞர் -2

தமிழர்களுக்கு ஆபத்து! 
நாடோடி 


ஆகஸ்ட் 24. நாமக்கல் கவிஞரின் நினைவு தினம்.

நாடோடி’ ‘கல்கி’யில் எழுதிய கட்டுரை ஒன்று, 11-8-1945 -இல் நாமக்கல் கவிஞருக்கு ஒரு நிதித் தொகை வழங்கப் பட்ட நிகழ்ச்சியைச் சுவைபடச் சொல்கிறது. ஓர் அரிய கட்டுரை .[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

நாமக்கல் கவிஞர்

நாடோடி படைப்புகள்


புதன், 24 ஆகஸ்ட், 2016

பி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை 
பி.ஸ்ரீ.

ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்டுரைகளை எழுதி உள்ளார் தமிழறிஞர் பி.ஸ்ரீ.

அப்படி 1940 தீபாவளி மலரில் அவர் எழுதிய படவிளக்கக் கட்டுரை இதோ!

பழைய உலகம், புதிய உலகம் - ஏசும் உலகம், ஏசாத உலகம் - எல்லாவற்றையும் பட்சபாதமில்லாமல் வைத்து இரட்சிக்க.

உலகங்களையெல்லாம் உண்டும், பசி தீர்ந்தபாடில்லை. 


அந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளையின் வயிற்றில் இன்னும் இடம் இருக்கிறதாம். 

வேண்டிய இடம் இருக்கிறதாம்இன்னும் எத்தனை எத்தனை உலகங்கள், அண்டங்கள் தோன்றினாலும் அவற்றையெல்லாம் ஒருங்கே வைத்து இரட்சிப்பதற்கு.

தோன்றிய உலகம், தோன்றுகிற உலகம், தோன்றப் போகும் உலகம், தோன்றாத உலகம் - எல்லாவற்றையும் வாரி உண்டு நிறையாத வயிறு. 


என்றென்றும் நிறையாத வயிறு.

நிறையாத வயிறு; எனினும் குறையாத திருப்தி - ஆம்; இந்தத் தீராத விளையாட்டிலே! 


உலக சிருஷ்டி, உலகரட்சை, உலக அழிவு எல்லாம் இந்த விளையாட்டே!

ஆக்கத்துக்காகவே அழிவு; அழிவுக்காகவே ஆக்கம்; இரட்சைக்காகவே ஆக்கமும் அழிவும்! ஆ ஆ... என்ன விளையாட்டு!

கண்ணன் தயிரைக் கொட்டியும் உண்டும் விளையாடுவது போன்றது, என்றும் தீராத இந்த முத்தொழில் - விளையாட்டும். 


அறக் கருணையும் விளையாட்டே; மறக் கருணையும் விளையாட்டே; சாதலும் திருவிளையாடல்; காதலும் திருவிளையாடலே.

எவ்வளவு பெரிய தத்துவத்தை - எவ்வளவு பெரிய சமய உண்மையை - எவ்வளவு எளிமையாகவும் வேடிக்கையாகவும் வெளியிடுகிறது கள்ளக் கிருஷ்ணன் விளையாட்டு!

நரகாசுரவதம் செய்து உலகத்துயர் தீர்த்துத் தீபாவளி கொண்டாடுவதும் இந்தத் தீராத திருவிளையாட்டின் ஓர் அம்சமே.

இன்றும் இந்த விளையாட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்தத் தீராத விளையாட்டு, நமது காலத்தில் உலகத்தை நரகமாக்கும் அசுர சக்திகளையும் எப்படியாவது திருத்திவிடும் அல்லது தீர்த்துவிடும் என்பது திண்ணம்.

வயிற்றில் இடமும் இருக்கிறது; ஜீரண சக்தியும் இருக்கிறது!

தீராத விளையாட்டில், தீராத காதலும் இருக்கிறதல்லவா
?!

[படம் :  நன்றி : சக்தி விகடன் ] 


தொடர்புள்ள பதிவுகள் :

பி. ஸ்ரீ படைப்புகள்

நாரண துரைக்​கண்​ணன் - 1

முது​பெ​ரும் எழுத்​தா​ளர் -​ நாரண துரைக்​கண்​ணன்

கலை​மா​மணி விக்​கி​ர​மன் தெய்வப் புலவர் திருவள் ளுவர்சரிதை
மெய்வண்ண மாக விளம்பினரால் – உய்வுபெற
நாரணது ரைக்கண்ண நற்புலவர் நாடகமாய்க்
காரணங்கள் காட்டிக் கனிந்து.
    
---   நாரண துரைக்கண்ணனின் “ தெய்வப் புலவர் திருவள்ளுவர்” நாடக நூலுக்குக் கிருபானந்த வாரியார் எழுதிக் கொடுத்த வாழ்த்து.         

ஆகஸ்ட் 24. நாரண துரைக்கண்ணன் அவர்களின் பிறந்த தினம். 2010-இல் தினமணியில் அவரைப் பற்றி வந்த ஒரு கட்டுரை இதோ! 
===========

நாரண துரைக்கண்ணன் - ஜீவா இலக்கிய உலகில் மறக்க முடியாத பெயர்.

சிறுகதைகள், நாவல்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் தனக் கென்று தனி வழி வகுத்துக் கொண்டவர்.

இதழாசிரியராக இருந்ததால் பல்வேறு பகுதிகளை எழுதும் போது வெவ் வேறு புனைப் பெயர்களை அமைத்துக் கொள்ள நேர்ந்தது. தான் ஆசிரியராக இருந்த ஆனந்த போதினி, பிரசண்ட விகடன் மாத, மாதமிரு முறை இதழ்களில், மைவண்ணன், வேள், துலாம், தராசு, திரு மயி லைக் கவிராயர், துரை, லியோ எனப் பல் வேறு புனைப் பெயர் களில் கதை, தொடர்கதை, அரசியல் தலையங்கம், விமர்சனங்கள், விவாதங்கள், நாடகங்கள் எழுதிக் குவித்தார். அவ்வாறு எழுதும் போது பல் வேறு பெயர்களைச் சூட்டிக் கொண்டாலும் "ஜீவா' என்ற பெயர் தான் வாசகர்கள், எழுத்தாளர்களிடையே அன்று பிரபலமானது.

பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம் "ஜீவா' என்று அழைக்கப் படத் தொடங்கியதும் நாரண துரைக்கண்ணனாரை "ஜீவா' என்று அழைப்பது குறைந்தது. இதில் நாரண துரைக்கண்ணனுக்கு வருத்தமே.

சென்னை, திரு மயிலையில், 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, க.வே.நாராயணசாமி- அலர்மேல் மங்கை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் நடராசன். ஆனால், அவர்கள் "துரைக் கண்ணு' என்று செல்லமாக அழைத்தனர். துரைக்கண்ணன் என்ற பெயருடன் தந்தை பெயரில் உள்ள "நாரண'னைச் சேர்த்துக் கொண்டு நாரண துரைக் கண்ணனானார். எழுத்துலகில் அந்தப் பெயர் நிலை பெற்றது.

மறைமலையடிகள் போன்ற மேதைகளிடம் தமிழ் பயின்றார். மெய்ப்பு சரி பார்க்கும் பணியில் பல அச்சகங்களில் பணியாற்றினார். மெய்ப்பு சரி பார்ப்பதில் வல்லரானார்.

வருவாயைப் பெருக்க சில காலம் அடிசன் கம்பெனியில் பணியாற்றி னார். நாரண துரைக்கண்ணனின் முதல் கட்டுரையே "சரஸ்வதி பூஜை' என்கிற பெயரில் 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் பிரசுரமா னது.

தமிழ்ப் புலமையுடன் எழுத்தில் ஆர்வமும் பிறந்தது. கதை மாந்தர் (பாத்திரங்கள்) வாயிலாக சமூக சீர்கேடுகளை விளக்கி, அவற்றைக் களையும் ஆர்வம் இயற்கையிலேயே ஏற்பட்டது. துணிவாகவும், கற்ப னையாகவும் உண்மை என நம்பக் கூடிய வகையில் எழுதும் கலை கைவரப் பெற்றார். கற்பனையை உண்மை என நம்பும்படி எழுதும் திற மையால் அவருக்குத் தொடக்கத்திலேயே சங்கடம் ஏற்பட்டது.

"நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்? ' என்ற புதினம் தொடராக வந்து நூல் வடிவம் பெற்றது. தம் குடும்பத்தின் நிஜ வாழ்க்கையை அம்பலப் படுத்தி விட்டார் என்று சிலர் குற்றம் சாட்டினர். அவருக்கு மணம் பேசி முடிக்கப் பட்ட பெண் வீட்டாரும் அவர்களுள் ஒருவர். தம் குடும்பத்து உண்மைச் சம்பவமாக அந்தக் கதை இருப்பதாகப் பெண் கொடுக்க வந் தவர்கள் முடிவு செய்தனர். இத்தகைய குணமுடைய மாப்பிள்ளைக்குத் தன் மகளை மணம் முடித்தால் பெண்ணின் பிற்கால வாழ்க்கை என்ன ஆகுமோ என்று அவர்கள் அஞ்சி, பெண் கொடுக்க மறுத்து விட் டனர். திருமணம் நின்று போனது.

கற்பனைக்கு ஏற்பட்ட விளைவால் ஜீவா வியப்படைந்தாரே தவிர, கவலை அடையவில்லை. அவர் எழுத்து மேலும் வீறு கொண்டது. எழுத்தில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. சமூக அவலங்களைத் தம் கதைச் சம்பவமாக்கிச் சாடினார்.

அந்தத் திருமணத் தடைக்குப் பிறகு வேறு இடத்தில் 1932-ஆம் ஆண்டு, தன் 25வது வயதில் மீனாம்பாள் என்ற பெண்ணைத் திருமணம் செய் து கொண்டார். 1982-ஆம் ஆண்டு வரை ஜீவாவுக்கு உறுதுணையாக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு ஜீவா மிகவும் சோர்வடைந்தார்.

எழுத்தை முழு மூச்சாகக் கொண்ட எழுத்தாளர்களுள் நாரண துரைக் கண்ணனுக்குச் சிறப்பிடம் தரலாம். அவருடைய சமகாலத்தவரான "கல்கி'யைப் போன்று புகழ் பெற்றார். மகாத்மா காந்தியின் கொள்கைக ளில் மிகவும் பற்றுக் கொண்டவர் என்றாலும் பெரியார், அண்ணாவின் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஜீவா வின் ஆன்மிக எழுத்துக்காக மகா பெரியவர் சங்கராச்சாரியாரால் பாராட்டப் பட்டார்.

வள்ளலார் மற்றும் மகாகவி பாரதியின் நூல்களை ஆர்வத்துடன் கற் றார். திருவருட்பா பற்றிய நூலொன்றை எழுதினார். பிற்காலத்தில் பார தியின் பாடல்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்குப் பெரும் கிளர்ச்சி செய்து அதற்கென ஏற்பட்ட குழுவினர் சார்பில் பாரதியின் துணைவியார் செல்லம்மாளை திருநெல்வேலிக்குச் சென்று, கண்டு, அனுமதிக் கடிதம் வாங்கினார்.

"கல்கி'யை வாசனுக்கு அறிமுகப் ப டுத்திய பரலி சு.நெல்லையப்பர், நாரண துரைக்கண்ணனை "லோகோபகாரி' வார இதழில் துணையாசிரியராக்கினார். தேச பந்து, திராவிடன் இதழ்களில் பணியாற்றிய பிறகு 1932-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந் தார். "ஆனந்த போதினி' இதழ் அந்தக் கால கட்டத்தில் பிரபலமாக விளங்கியது. அந்த இதழில் தான் "அழகாம்பிகை' என்ற சிறு கதையை எழுதினார். அதுவே அவருடைய முதல் சிறு கதை என்று கூறலாம்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாரண துரைக்கண்ணனின், "நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்? ' என்ற நாவலைப் படித்து வ.ரா. பெரிதும் பாராட்டினார். 1942-இல் "உயிரோவியம்' என்ற புதினம் எழுதியபோது வ.ரா. அந்த நாவலுக்கு முன்னுரை வழங்கினார்.

தேவதாசிகள் என்ற இழுக்கை சமூகத்தில் இருந்து களைய வேண்டும் என்ற கிளர்ச்சி நாட்டில் பரவிய காலத்தில் எழுதப் பட்ட நாவல் தான் "தாசி ரமணி'.

பொது வாழ்வில் மிகவும் ஈடுபட்டவர். பலன் கருதாது உழைத்தவர். சென்னை எழுத்தாளர்கள் சங்கம் ஏற்படப் பெரிதும் காரணமானவர். அந்த அமைப்புக்குத் தான் தலைமை ஏற்காமல் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியை வற்புறுத்தித் தலைவராக்கினார்.

மக்கள் நாள் தோறும் பயன்படுத்தும் வகையில் தோத்திரப் பாடல் களை "அருட்கவி அமுதம்' என்ற பக்திப் பாடல்கள் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.

""தமிழ் இலக்கிய உலகுக்கு ஓர் அருமையான எழுத்தாளர் ஜீவா! '' என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை பாராட்டியுள்ளார்.

தன்னைப் புகழ்வதையும், காரியம் சாதிக்கப் பாராட்டுவதையும் ராஜாஜி ஏற்க மாட்டார் என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவார்கள். மது வி லக்குக் கொள்கை, தீண்டாமை ஒழிப்புக் கொள்கை, சீர்திருத்தக் கருத் துகள் இவற்றால் ஈர்க்கப் பட்ட ஜீவா, ராஜாஜியைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம் ஒன்றை எழுதினார். அதை ராஜாஜியிடம் வெளியிட அனுமதி கேட்ட போது வெளியிடக் கூடாது என்று ராஜாஜி கண்டிப்பாகக் கட்டளை யிட்டார். ஆனால், நாரண துரைக்கண்ணனிடம் மதிப்பு வைத்திருந்த ராஜாஜி, நூலைப் படித்துப் பார்த்து ""நானே இதை விடச் சிறப்பாக எழுதி இருக்க முடியாது'' என்று பாராட்டி ஆசி வழங்கினார். ராஜாஜியிடம் பாராட்டுப் பெறுவது அவ்வளவு எளிதன்று.

1949-இல் மகா கவி பாரதியார் இலக்கியங்களை நாட்டுடைமை யாக் கப் போராட ஏற்பட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்து வெற்றி பெற் றார்.

பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்களும், சிறுகதைத் தொகுதிகளும், கவிதைத் தொகுதிகளும், நாடகங்களும் எழுதி தமிழ் நாட்டு மக்களிடையில் படிக்கும் வழக்கத்தையும், சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்பிய நாரண துரைக்கண்ணனார், 32 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பிரசண்ட விகடன் ஆசிரியராகத் திகழ்ந்தார்.


20-ஆம் நூற் றாண்டின் புரட்சி எழுத்தாளரான நாரண துரைக்கண்ணன், இறுதிக் காலத்தில் வளமாக வாழவில்லை. பல அறிஞர்களும், மக்களும் வற்புறுத்திய பிறகே அவரது நூல்கள் அரசுடைமை ஆக்கப் பட் டன.

எழுத்தாளர் ஜீவா- நாரண துரைக்கண்ணனுக்கு தமிழ் நாட்டில் தகுந்த புகழும் மரியாதையும் அளிக்கப் படவில்லை. அவர் வாழ்ந்து வந்த "சூளை மேடு' பகுதியில் உள்ள முக்கியமான சாலைக்கு நாரண துரைக் கண்ணன் சாலை என்று பெயரிட்டுப் பெருமைப் படுத்தலாம். இப்போதும் காலம் கடந்து விடவில்லை.


1996-ஆம் ஆண்டு, ஜூலை 22-ஆம் தேதி அவர் மறையும் வரை எழு திக் கொண்டே இருந்தார். நாரண துரைக்கண்ணனின் மிக எளிமையும், தொண்ணூறு வயது நிறைந்த போதும் நினைவாற்றலுடன் ஆற்றிய பணியும் தமிழ் நாடு உள்ள வரை மறையாது.

[ நன்றி : தினமணி ]

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வ.ரா. -1

சந்தைப்பேட்டை செல்லாயி 
வ.ரா. 
ஆகஸ்ட் 23.  தமிழ் எழுத்தாளர், பாரதி சீடர்,  வ.ராமசாமி ஐயங்கார் ( வ.ரா.) ( 1889 - 1951) அவர்களின் நினைவு தினம்.  மணிக்கொடி ஆசிரியராய் இருந்தவர். நடைச்சித்திரம் என்ற உரைநடை வடிவத்தின் முன்னோடி.

சுதேசமித்திரனில் 1943-இல் அவர் எழுதிய ஒரு கட்டுரை இதோ:
( நாடோடியின் ‘ இதுவும் ஒரு பிரகிருதி’, சாவியின் ‘கேரக்டர்’  போன்ற தொடர்களுக்கெல்லாம் வ.ரா.வின் நடைச்சித்திரம் தான் முன்னோடி )


 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

அரியணை அமைப்போம் ஹார்வர்டில் !

அரியணை அமைப்போம் ஹார்வர்டில் !

ஆகஸ்ட் 20, 2016 -அன்று ஹார்வர்ட் தமிழிருக்கை நிதிக்காக “ கேட்டது ஒண்ணு, கெடச்சது ரெண்டு” என்ற தமிழ் நாடகம் டொரண்டோவில் நடத்தப் பட்டது. அப்போது வெளியிடப்பட்ட சிற்றேட்டிலிருந்து சில பக்கங்களும்,  நிகழ்ச்சிப் படங்கள் சிலவும் இதோ!

 இந்நிகழ்ச்சியின் மூலம் திரண்ட  $20,000 - மதிப்புள்ள காசோலையை  மருத்துவர்  சம்பந்தம் அவர்கள் ஹார்வர்ட் சார்பில் பெற்றுக் கொண்டார். ( மருத்துவர் சம்பந்தமும், மருத்துவர் ஜானகிராமனும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர்கள் ஏற்கனவே அளித்தது யாவருக்கும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.) நாடகக் குழு டெட்ராய்ட் போன்ற அமெரிக்க நகரங்களுக்கும் சென்று நிதி திரட்டும் என்று கேள்விப்பட்டேன். குழுவிற்கு என் வாழ்த்துகள்!
[ நன்றி : அ.முத்துலிங்கம், Limelight Services ] 

தொடர்புள்ள பதிவுகள்: