வியாழன், 25 ஆகஸ்ட், 2016

பி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை 
பி.ஸ்ரீ.

ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்டுரைகளை எழுதி உள்ளார் தமிழறிஞர் பி.ஸ்ரீ.

அப்படி 1940 தீபாவளி மலரில் அவர் எழுதிய படவிளக்கக் கட்டுரை இதோ!

பழைய உலகம், புதிய உலகம் - ஏசும் உலகம், ஏசாத உலகம் - எல்லாவற்றையும் பட்சபாதமில்லாமல் வைத்து இரட்சிக்க.

உலகங்களையெல்லாம் உண்டும், பசி தீர்ந்தபாடில்லை. 


அந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளையின் வயிற்றில் இன்னும் இடம் இருக்கிறதாம். 

வேண்டிய இடம் இருக்கிறதாம்இன்னும் எத்தனை எத்தனை உலகங்கள், அண்டங்கள் தோன்றினாலும் அவற்றையெல்லாம் ஒருங்கே வைத்து இரட்சிப்பதற்கு.

தோன்றிய உலகம், தோன்றுகிற உலகம், தோன்றப் போகும் உலகம், தோன்றாத உலகம் - எல்லாவற்றையும் வாரி உண்டு நிறையாத வயிறு. 


என்றென்றும் நிறையாத வயிறு.

நிறையாத வயிறு; எனினும் குறையாத திருப்தி - ஆம்; இந்தத் தீராத விளையாட்டிலே! 


உலக சிருஷ்டி, உலகரட்சை, உலக அழிவு எல்லாம் இந்த விளையாட்டே!

ஆக்கத்துக்காகவே அழிவு; அழிவுக்காகவே ஆக்கம்; இரட்சைக்காகவே ஆக்கமும் அழிவும்! ஆ ஆ... என்ன விளையாட்டு!

கண்ணன் தயிரைக் கொட்டியும் உண்டும் விளையாடுவது போன்றது, என்றும் தீராத இந்த முத்தொழில் - விளையாட்டும். 


அறக் கருணையும் விளையாட்டே; மறக் கருணையும் விளையாட்டே; சாதலும் திருவிளையாடல்; காதலும் திருவிளையாடலே.

எவ்வளவு பெரிய தத்துவத்தை - எவ்வளவு பெரிய சமய உண்மையை - எவ்வளவு எளிமையாகவும் வேடிக்கையாகவும் வெளியிடுகிறது கள்ளக் கிருஷ்ணன் விளையாட்டு!

நரகாசுரவதம் செய்து உலகத்துயர் தீர்த்துத் தீபாவளி கொண்டாடுவதும் இந்தத் தீராத திருவிளையாட்டின் ஓர் அம்சமே.

இன்றும் இந்த விளையாட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்தத் தீராத விளையாட்டு, நமது காலத்தில் உலகத்தை நரகமாக்கும் அசுர சக்திகளையும் எப்படியாவது திருத்திவிடும் அல்லது தீர்த்துவிடும் என்பது திண்ணம்.

வயிற்றில் இடமும் இருக்கிறது; ஜீரண சக்தியும் இருக்கிறது!

தீராத விளையாட்டில், தீராத காதலும் இருக்கிறதல்லவா
?!

[படம் :  நன்றி : சக்தி விகடன் ] 


தொடர்புள்ள பதிவுகள் :

பி. ஸ்ரீ படைப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக