வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சங்கீத சங்கதிகள் - 89

எஸ்.ஜி.கிட்டப்பா பற்றி அரியக்குடி
” நீலம்” 
ஆகஸ்ட் 25.  எஸ்.ஜி.கிட்டப்பாவின் பிறந்த தினம்.

சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் கந்தர்வ கான எஸ்.ஜி. கிட்டப்பாவின் 25-வது நினைவு நாள். தலைமை தாங்கிய கர்நாடக சங்கீத சக்கரவர்த்தி அரியக்குடி ராமானுஜய்யங்கார் தன் தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:

""நான் நாடகங்களுக்கோ சினிமாக்களுக்கோ போவதில்லை. ஆயினும் கிட்டப்பா உயிருடன் இருந்தபோது அவருடைய நாடகங்கள் காரைக்குடியிலோ தேவகோட்டையிலோ நடந்தால் போவதுண்டு. வேறு ஊர்களுக்கு நான் கச்சேரி செய்யப் போகிற இடங்களில் கிட்டப்பா நாடகம் நடந்தால் போகத் தவறுவதில்லை. கிட்டப்பாவின் நாடக மேடை சங்கீத வித்வான்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்கமாக இருந்தது.


தெய்வத்தின் அருளால் நம் நாட்டுக்குக் கிடைத்தவர் கிட்டப்பா. சாஸ்தீரியமாக அவர் சங்கீதத்தைப் பாடிக் கொண்டிருந்தார் என்பது அந்தக்காலத்தில் எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.

அவர் நாடகங்களுக்கு நான் மட்டும் ரசிகன் இல்லை. அக்காலத்தில் மகாவித்வான்களான கோவிந்தசாமிப் பிள்ளை, நயினாப் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, முத்தையா பாகவதர், மகாராஜபுரம் விசுவநாதய்யர் எல்லோருமே கிட்டப்பாவின் நாடகத்திற்குச் சென்று வருவோம்.

எதற்காகப் போனோம்?

கிட்டப்பாவின் அருமையான சாரீரத்திலே நமது கர்நாடக ராகங்கள் ஜொலிக்கின்ற அழகைக் காது குளிரக் கேட்பதற்காகவே! சங்கராபரணம், பைரவி, காம்போஜி முதலிய கர்நாடக ராகங்களை கிட்டப்பா பாடியபோது கர்நாடக சுத்தம் தவறவே தவறாது. அந்தக் காலத்தில் மைக்  கிடையாது. ஆயிரக்கணக்கில் அன்றாடம் அவர் நாடகத்திற்குக் கூட்டம் வரும். அத்தனை ஜனங்களின் காதுகளிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் நாலரைக் கட்டை சுருதியில் அந்தப் பாலகன் பாடிய அழகை நான் எப்படி வர்ணிப்பது?''


(இசை விமர்சகர் "நீலம்' எழுதிய "சங்கீத மணம் கமழும் கதம்பமாலை' என்ற புத்தகத்திலிருந்து)

தொடர்புள்ள பதிவுகள்:

" தசரத ராஜகுமாரா “ : எஸ்.ஜி.கிட்டப்பா

சங்கீத சங்கதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக