கோபுர தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோபுர தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

1227. இலக்கியத்தில் அறிவியல் : கட்டுரை

இலக்கியத்தில் அறிவியல் 
பசுபதி

‘கோபுர தரிசனம்’ 2018 தீபாவளி மலரில் வந்த கட்டுரை.








[ நன்றி : ”சின்னஞ்சிறு கோபு” ராஜேந்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 30 அக்டோபர், 2014

கவிதை எனக்கோர் ஆனந்தம் ! :

கவிதை எனக்கோர் ஆனந்தம் !
பசுபதி 

கோபுர தரிசனம் 2014 தீபாவளி மலரில் வந்த கவிதை .



உண்மை ஒளிர வேண்டுமென்ற
   உறுதி யுடன்தான் உட்கார்வேன்;
வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
   மண்டை முழுதும் தேடிடுவேன்;
எண்ணப் பரியோ சண்டிசெய்தும்
   என்னைத் தள்ளிப் பரிகசித்தும்
கண்ணா மூச்சி ஆடினுமே
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (1)

வேலன் மீதோர் படைதொடங்கி
   மேலும் சங்கம் ஈந்தனபோல்
மாலைப் போற்றி ராமகதை
   மாலை தொடுத்த கம்பனைப்போல்
பாலில் மூன்றும் சிலம்புமெனப்
   பாடி மகிழ்ந்த பாரதிபோல்
கால வெள்ளம் கரைக்காத
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (2)

சந்தம் என்னும் பொக்கிடத்தைத்
   தந்து தமிழ்க்கு வளம்சேர்த்த
எந்தை அருண கிரிநாதர்
   எடுத்து ரைத்த அவிரோதம்
சிந்தை தன்னை அவ்வழியில்
   தினமும் சுண்டி இழுப்பதனால்
கந்தன் புகழைப் பாடுமந்தக்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (3)

சின்னஞ் சிறிய வயதுமுதல்
   சிறந்த பாடல் பலவற்றை
இன்னி சையாய்க் கேட்பதுதான்
   இன்பம் என்று நினைத்தாலும்
கன்னல் தமிழைக் கந்தலெனக்
   கன்னா பின்னா எனக்குதறிக்
கன்னம் குழியப் பேரன்சொல்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (4)

பசப்புச் சொல்பச் சோந்தியெனப்
   பதவி பெற்ற பின்தேசம்
நசித்துப் போகும் வழிதனிலே
   நாளும் நடத்தும் அரசினர்மேல்,
நிசத்தை மறைத்து முழுங்காமல்
   நேர்மை யுடனே பயமின்றிக்
கசையைச் சொடுக்கிச் சிலர்தீட்டும்
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !            (5)

மனதின் ஆழ்ந்த தடாகத்தில்
   மறைந்து கிடக்கும் நிழலொன்று
தனிமை என்னும் கல்லடியால்
   தருணம் பார்த்துத் தலைதூக்கும்;
புனைவும் உணர்வும் இசைபாடும்;
   புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
   கவிதை எனக்கோர் ஆனந்தம் !     (6)


===== 
தொடர்புள்ள பதிவுகள்:




புதன், 4 டிசம்பர், 2013

சங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை

சங்கத் தமிழ்வளர்த்த நங்கை
பசுபதி



[ Picture Source : Wikipedia ] 

”கோபுர தரிசனம்” 2013 தீபாவளி மலரில் வெளியான கவிதை.



சங்கத் தமிழ்வளர்த்த நங்கை


பண்டைத் தமிழகத்தின் பாவலர்கள் பலர்நடுவில்
வண்டமிழ் ஒளிபரப்பும் மங்கைமணி ஒருவருண்டு.
சங்கத் தமிழ்வளர்த்த நங்கையந்த ஔவையின்
மங்காப் புகழ்மழையில் மனம்நனைப்போம்; மகிழ்வுறுவோம்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றாலும்
மற்றோரைப் புகழ்ந்திடுவோர் வையகத்தில் ஒருசிலரே.
பரணரென்ற பெரும்புலவர் தரமறிந்து புகழவ்வை
பெருமையைப் போற்றிடுவோம்; கரங்களைக் குவித்திடுவோம்.

புலவரவ்வை சென்றிருந்தார் புரவலனின் அவைக்களம்;
பலமணிகள் காத்திருந்தும் பரிசொன்றும் கிட்டவில்லை.
ரவுத்திரம் பழகென்ற புதுமொழிக் கிலக்கணமாய்
அவதாரம் அன்றெடுத்தார் ஔவைப் பிராட்டியார்!
“தனைமறந் தானோ?வேந்தன் எனைத்தான் அறியானோ?
வனத்திலோர் மரமிலையா மழுவேந்து தச்சருக்கு?
வித்தையுண்டு என்கையில்!” வீறுகொண்டு கூவினார்.
“எத்திசையில் சென்றாலும் எமக்குண்டு சோ”றென்ற
செருக்குள்ள புலமைமுன்நம் சிரங்களைத் தாழ்த்திடுவோம்!
அறச்சீற்றம் அன்றுகண்டோம்; ஆனந்தம் இன்றுமுண்டு!

அதியனுடன் போர்தொடுக்க ஆசைகொண்டான் தொண்டைமான்;
அதையறிந்த ஔவையார் அங்குச்சென்றார்; தொண்டையனின்
போர்க்கலங்கள் குவியல்கண்ட புலவர் புகழ்ச்சியென்னும்
போர்வையுள்ள பாடலொன்றால் புத்திமதி புகட்டினார்.
பார்வையிட்ட வேல்வாள்கள் பளபளத்தல் புகழ்ந்தார்!
போரறிந்த படைக்கலங்கள் கூர்மின்னு மாஎன்ன?
புரிந்துகொண்ட தொண்டைமான் போர்தொடங்கா முடிவுசெய்தான்.
அரசியலில் பாடலொன்றால் ஔவைசெய்த புரட்சியிது!
பார்வரலா றின்றுவரை பாராத அருமையது!
போர்மேகம் விரட்டுகவிப் புயலவ்வை பெருமையிது!

                   (வேறு)
துங்க நெல்லி பெற்ற அவ்வை தூது சென்று பண்டைநாள்
அங்க தத்தால் போர்நி றுத்தி அற்பு தம்நி கழ்த்தினாள்.
சங்க கால அவ்வை முன்பெம் தலைகள் என்றுந் தாழுமே
தங்க மான பாக்கள் தந்த நங்கை நினைவு வாழுமே!  

=========================  


தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்