திங்கள், 29 ஜூன், 2015

சங்கீத சங்கதிகள் - 54

    "கிர்ர்ர்ரனி" 
    உ.வே.சாமிநாதய்யர் 


சென்ற நூற்றாண்டில் தஞ்சாவூரில் பல சங்கீத வித்துவான்கள் தஞ்சை ஸமஸ்தானத்தின் ஆதரவு பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்களுள் துரைசாமி ஐயர் என்பவர் ஒருவர். அவர் பிறந்த இடம் திருவையாறு. அது காவிரியின் வடபால் அமைந்துள்ள சிறந்த சிவஸ்தலம். பல சங்கீத வித்துவான்கள் அவதரித்துப் புகழ் பெற்று விளங்கிய பெருமையை உடையது அது. அதில் உள்ள தெருக்களில் பதினைந்து மண்டபத் தெரு என்பது ஒன்று. அங்கே துரைசாமி ஐயர் வசித்து வந்ததால், பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயரென்றே யாவரும் அவரை அழைத்து வந்தனர்.


துரைசாமி ஐயர் சங்கீத மார்க்கங்கள் எல்லாவற்றிலும் பயிற்சியுடையவர். நல்ல உடல் வன்மையும் இனிய சாரீரமும் அமைந்தவர். அவர் வாய்ப்பாட்டில் வல்லவராக இருந்ததோடு பிடில் வாத்தியத்தையும் மிகவும் அருமையாக வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரிடம் பல மாணாக்கர்கள் இசைப் பயிற்சி செய்து வந்தனர்.


தமிழ், தெலுங்கு ஆகிய பாஷைகளிலே துரைசாமி ஐயர் தக்க அறிவுடையவர். சங்கீத அமைப்புக் கேற்ற சாஹித்தியங்களை அமைக்கும் திறமையும் அவர்பால் இருந்தது. அவர் இயற்றிய சில கீர்த்தனைகள் இன்றும் வழங்கி வருகின்றன. இவ்வாறு சிறந்த வாய்ப்பாட்டுடையவராகவும், வாத்திய வித்துவானாகவும், சாஹித்திய கர்த்தாவாகவும் விளங்கிய பெருமை தஞ்சாவூர் ஸமஸ்தான சம்பந்தத்தால் வரவர அவருக்கு விருத்தியாகி வந்தது.


தஞ்சாவூரில் அக்காலத்தில் இருந்தே சங்கீத வித்துவான்களின் கோஷ்டியைப் போன்றதொன்றை வேறு இடங்களில் பார்த்தல் அருமை. ஒவ்வொரு ஸமஸ் தானத்திலும் சிறந்த சில வித்துவான்கள் இருந்தாலும், எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய வித்துவான்களை ஒருங்கே பார்க்க வேண்டுமாயின் தஞ்சையிலே தான் பார்க்கலாம். அதனால் தஞ்சாவூர் ஸமஸ்தானத்துக்குச் சங்கீத வித்துவான்களைப் போஷித்து வளர்க்கும் தாயகம் என்ற புகழ் வளரலாயிற்று. வேறு இடங்களில் உள்ள சங்கீத வித்துவான்கள் தஞ்சாவூருக்கு வந்து அங்குள்ள சங்கீத கோஷ்டியின் பெருமையையும், அவர்களை ஆதரிக்கும் ஸமஸ்தானாதிபதியாகிய அரசரின் இயல் பையும் அறிந்து செல்ல ஆசைப்படுவார்கள். அதனால் தஞ்சாவூருக்கு அடிக்கடி பிற இடங்களி லுள்ள வித்துவான்கள் வந்து சம்மானம் பெற்றுக் கொண்டு போவார்கள். அவர்கள் தஞ்சைக்கு வந்து அங்குள்ள வித்துவான்களோடு கலந்து மகிழ்ந்து சென்ற பின்பு தம்மை ஆதரிக்கும் ஸமஸ்தானாதிபதி களிடம் சொல்லித் தஞ்சை வித்துவான்களைத் தம் மிடத்திற்கு வந்து உபசாரம் பெற்றுச் செல்லும் வண்ணம் செய்வர்.


இதனால் தஞ்சை வித்துவான்கள் மைசூர் முதலிய ஸமஸ்தானங்களுக்கும் சென்று தங்கள் வித்தையை வெளிப்படுத்திச் சம்மானமும் புகழும் அடைந்தனர். இத்தகையோரது வரிசையிலே ஒரு வராக விளங்கியவர் துரைசாமி ஐயர்.


ஒரு சமயம் ஆந்திர தேசத்திலுள்ள ஒரு ஸமஸ் தானத்திலிருந்து வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் துரைசாமி ஐயரைப்போலவே வாய்ப் பாட்டிலும், பிடில் வாத்தியத்திலும் சிறந்தவர். அவர் வந்திருந்த காலத்தில் அவரது வினிகை அரசர் முன் னிலையில் நடைபெற்றது. தம்முடைய சிறந்த ஆற்றலை அவர் காட்டினார். யாவரும் அவருடைய சங் கீதத்தைக் கேட்டு இன்புற்றனர். அரசரும் அவ்வப் போது அந்த வித்துவானைப் பாராட்டிக்கொண்டே இருந்தனர். பல சங்கீத வித்துவான்களைப் பரிபா லித்து வரும் அரசர் அந்த வித்துவான்களுக்கிடையில் விற்றிருந்து அவர்கள் முன்னிலையிலேயே தம் மைப் பாராட்டும்பொழுது ஆந்திர வித்துவானின் உள்ள‌த்தில் சிறிது கர்வம் உண்டாயிற்று; 'இங்கே நம்மைப்போலப் பாடுபவர் இல்லையெனத் தோற்று கிறது.இவ்வரசர் நம்முடைய சங்கீதத்தில் மயங்கி விட்டார். இவரிடத்தில் இன்னும் நம் ஆற்றலைக் காண்பிக்க வேண்டும்'என்று அவர் எண்ணினார். அரசர் மிகவும் சுலபராகப் பழகியதால் அவரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலானார்:


"இங்கேயுள்ள வித்துவான்களில் யாரேனும் என்னோடு போட்டிபோட்டால் என்னுடைய திறமை நன்றாக வெளியாகும்"என்று தம்முடைய உத் ஸாக மிகுதியால் அரசரை நோக்கிக் கூறினார். அரசர் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்துக் கொண்டே,"அதற்கென்ன ஆக்ஷேபம்?அப்படியே செய்யலாம்.நாளைத்தினம் நம்முடைய வித்துவான் களில் ஒருவர் உங்களோடு பாடுவார்"என்று கூறி னார்.ஆந்திரதேச‌ வித்துவானுக்கு உச்சி குளிர்ந்து விட்டது.


அந்தச் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த தஞ்சை வித்துவான்களும் உள்ள‌ம் பூரித்தனர். வந்த வித்துவான் அகங்காரம் கொண்டிருப்பதை அறிந்த அவர்கள் 'சோழ நாட்டுச் சங்கீதம் அவருடைய பாட்டுக்கு இம்மியளவும் குறைந்ததன்று' என்பதை நிரூபிக்க வேண்டுமென்று ஒவ்வொரு விநாடியும் துடித்துக்கொண்டிருந்தனர்.ஆனால் அதற்குரிய சந்தர்ப்பத்தைமட்டும் அரசர் தரவேண்டுமேயென்று ஆவலோடு நோக்கியிருந்த அவர்கள் தங்கள் விருப்பப்படியே தக்க சமயம் வாய்த்ததை அறிந்து எல்லையற்ற மகிழச்சியை அடைந்தனர். தமக்குள் எவ்வகையிலும் சிறந்த ஒருவரை அந்த ஆந்திர வித்துவானோடு பாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயரே.


மறுநாள் சங்கீத வாதம் அரண்மனையில் நடை பெறும் என்ற செய்தி நகர்முழுவதும் பரவியது. வித்துவான்களும் சிஷ்யர்களும் மறுநாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆந்திர வித்துவானோ மறுநாள் தம்முடைய வித்தைக்கு ஒரு தனிமதிப்பு ஏற்படப்போவதாக எண்ணி மிக்க இறுமாப் புடன் இருந்தார்.


விடிந்தது. அரசர் முன்னிலையில் ஒருமகாசபை கூடியது. வித்துவான்களும், ரஸிகர்களும் குழுமியிருந்தனர். தஞ்சை ஸமஸ்தானத்தின் சார்பில் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயர் வித்துவானகளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பணிவு தோன்ற முன்னே அமர்ந்திருந்தனர். அவருக்கு எதிரில் ஆந்திர தேச வித்துவான் இருந்தார். அரசர் தம்முடைய ஆசனத்தில் வீற்றிருந்தார். சங்கீந வித்தையிலும், பிராயத்திலும் முதிரந்த வித்துவான்களு சிலர் அந்த வாதத்திற்கு விதாயகர்த்தாக்களாக நியமிக்கப் பெற்று அரசருக் கருகில் உட்காரந்திருந்தனர். பிடில், வாய்ப்பாட்டு இரண்டிலும் வாதம் நடைபெறும்படி ஏற்பாடு செய் யப் பெற்றது. முதலில் இருவரும் வாய்ப்பாட்டைப் பாடுவதென்றும், அப்பால் வாத்தியத்தை வாசிப்ப தென்றும், பிறகு ஒருவர் பாடுவதை மற்றவர் பிடி லில் வாசிப்பதென்றும் வரையறை செய்து கொண்டார்கள்.


முதலில் ஆந்திர வித்துவான் பாடினார். சங்கீ தத்தில் அவருக்கிருந்த பயிற்சி அப்பொழுது நன்றாக வெளிப்பட்டது. துரைசாமி ஐயரிடம் பொறாமை கொண்டிருந்த சில இளைஞர், " சரி சரி; நமது ஸமஸ் தானத்தின் கௌரவம் இன்றோடு போய்விடும்" என்று எண்ணினார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நேரவில்லை. அவர் பாடியவற்றை யெல்லாம் துரை சாமி ஐயர் அப்படியே பாடிக் காட்டினார். பிறகு துரைசாமி ஐயர் பாடியவற்றை வந்த வித்துவான் பாடிக் காட்டினார். இவ்வாறு அந்தச் சங்கீத வாதத்தின் ஒரு பகுதி ஒருவருக்கும் வெற்றியோ தோல்வியோ இன்றி முடிந்தது. அப்பால் வாத்தியவாதம் தொடங்கியது. ஆந்திர சமஸ்தானத்து வித்துவான் பிடில் வாத்தியத்தலே சிறந்தவர். அவருடைய வாசிப்புக்கு முன் மற்ற சமஸ்தானங்களில் உள் ளோர் யாவரும் தலைவணங்கும் நிலையினரே யாவர்.


துரைசாமி ஐயர் தைரியமாகத் தம் வாத்தியத்தை எடுத்து வாசித்தார். எந்த நிமிஷத்தில் துரைசாமி ஐயர் தோல்வியுறுவாரோ வென்று பொறாமைக்கார்ர எதிர் பார்த்திருந்தனர். தெலுங்கு நாட்டு வித்துவான் நிச்சயமாகத் தம் வாத்தியத்துக்கு நேராகத் துரைசாமி ஐயர் வாசிக்க இயலாது என்றே எண்ணியிருந்தார். அவர் நினைத்தபடி நடக்கவில்லை. தாம் பிடித்த பிடிப்பையெல்லாம் துரைசாமி ஐயர் தவறாமற் பிடிப்பதைப் பார்த்து அவரே ஆச்சரியமடைந்தார். பிறகு துரைசாமி ஐயருடைய முறை வந்தது. அவர் பிடிலில் வாசித்ததை மற்றவர் அணுவளவும் பிசகாமல் தம்முடைய வாத்தியத்திலே வாசித்துக் காட்டினார். இவ்வாறு இரண்டாம் பகுதியும் பூர்த்தியாயிற்று.


அப்பால் மூன்றாவது போட்டி தொடங்கியது. ஆந்திர வித்துவான் பாடினார்; துரைசாமி ஐயர் பிடில் வாசித்தார். அந்தப் போட்டியில் சபையிலுள்ள அத்தனை பேரும் ஒன்றியிருந்தனர். பொழுது போவதே தெரியவில்லை. அரசரும் தம்மை மறந்து அதில் ஈடுபட்டனர். தாம் நெடுநாளாக அப்பியாசம் செய்து கைவரப்பெற்ற அரிய வித்தியா சாமர்த்தியதையெல்லாம் தெலுங்கு தேச வித்துவான் எடுத்துக் காட்டினார். அவருடைய குரல் போனவழியே துரைசாமி ஐயருடைய கை சென்றது. அந்த வித்துவானது சாரீர வீணையில் உண்டாகிய சங்கீதத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் துரைசாமி ஐயர் தம்முடைய பிடில் தந்தியிலே எழுப்பிக் காட்டினார். தஞ்சாவூர் வித்துவான்களுக்கே அவருடைய வாசிப்பு அளவற்ற ஆச்சரியத்தை உண்டாக்கியது. பிராயத்தில் முதிர்ந்த வித்துவான்களும், அவருக்கு ஆசிரிய நிலையிலே உள்ள பெரியோர்களும், "இந்தப் பிள்ளையாண்டான் இவ்வளவு வித்தையை இத்தனை நாள் எங்கே அடக்கி வைத்துக் கொண்டிருந்தான் ! இதுவரையில் இந்தத் திறமையை வெளியிடாமல் இருந்தானே!" என்று வியந்து உள்ளம் பூரித்தனர். ஆந்திரதேச வித்துவானுடைய மனத்திலோ வர வர உத்ஸாகம் குன்றியது. 'இனிமேல் இந்த ஸமஸ்தானத்தில் நம் ஜபம் பலியாது' என்றே அவர் உறுதிசெய்து கொண்டார்; ஆனாலும் அவருடைய மானம் இறுதி வரையில் போராட வேண்டுமென்று அவரை ஊக்கியது. அவர் பாடிக்கொண்டே வந்தார்.


ஒருவகையாக அவர் பாடி நிறுத்தினார். அது வரையில் வெற்றியோ தோல்வியோ ஒருவர் பக்ஷமும் காணப்படவில்லை. தம்மோடு யாராலும் போட்டி போட முடியாதென்று வந்தவர் எண்ணிய எண்ணந்தான் தோல்வியுற்றது. அதன் பின்பு துரைசாமி ஐயர் பாட, மற்றவர் பிடில் வாசிக்க வேண்டியது ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அவ்வித்துவானுடைய முகம் ஒளியிழப்பதை அரசர் கண்டார். "இதோடு நிறுத்திக் கொள்ளலாமே; உங்களுக்கு மிகுந்த சிரமம். துரைசாமி ஐயர் பாடுவதை நீங்கள் வாசிக்க வேண்டியது இப்பொழுது அவ்வளவு அவசியமாகத் தோன்றவில்லை" என்றார். அவர் அதற்கு இணங்கவில்லை; "இல்லை இல்லை" நாம் செய்து கொண்ட நிபந்தனையிற் பிறழக் கூடாது. அவர் பாடட்டும்; நான் வாசிக்கிறேன். இவ்வளவு அருமையான வித்துவானோடு வாசிக்க நான் எவ்வளவு புண்ணிய செய்திருக்க வேண்டும்" என்றார். அவருடைய குரலிலே பழைய மிடுக்கு இல்லை; பணிவின் சாயை புலப்பட்டது.


நிபந்தனையின்படியே துரைசாமி ஐயர் பாட ஆரம்பித்தார். அவருக்கு ஒவ்வொரு விநாடியும் உத்ஸாகம் ஏறிக்கொண்டே வந்தது. ஆந்திர வித்துவான் துரைசாமி ஐயருடைய வாய்ப்பாட்டைப் பிடிலில் வாசித்துக் கொண்டு வந்தார். ஒரு கீர்த்தனம் முடிந்தது. "இன்னும் ஒரு கீர்த்தனம் ஆகட்டுமே" என்றார் ஆந்திரர். துரைசாமி ஐயர் ஒரு சிறு கனைப்புக் கனைத்துக்கொண்டார். சிங்கமொன்று குகைக்கு வெளியிலே புறப்படுவதற்கு முன் செய்யும் கர்ஜனையிலுள்ள கம்பீரம் அதில் இருந்தது. அவர் தம்முடைய வாய்ப்பாட்டையும், பிடில் வாத்தியப் பயிற்சியையும் அந்த மகா சபையில் நிரூபித்ததோடு திருப்தி உறவில்லை. தம்முடைய சாஹித்திய சக்தியையும் வெளிப்படுத்த வேண்டுமென்றெண்ணினார். அவருக்கிருந்த மனவெழுச்சி அவருக்குத் துணை செய்தது. போட்டிபோடும் வித்துவான் ஓர் ஆந்திரராதலின் ஒரு புதிய தெலுங்குக் கீர்த்தனத்தை அந்தச் சமயத்திலேயே பாடிக் காட்ட வேண்டுமென்றும், முடிந்தால் வாசிக்க முடியாமல் செய்து அந்த வித்துவானைக் கலங்க வைக்க வேண்டுமென்றும் அவர் யோசித்தார். அந்த யோசனையைச் செய்வதற்கு வெகு நேரம் ஆகவில்லை. மின்னல்போல ஒரு கருத்து அவர் மனத்திலே தோற்றியது. கீர்த்தனம் ஒன்றைப் புதிதாகப் பாடத் தொடங்கிவிட்டார்.


"ஆடினம்ம ஹருடு த்ருகுடுத தையனி"


என்று பல்லவியை ஆரம்பித்தார். சிவபெருமானது திருநடனத்தை வருணிக்கும் பொருளையுடையது அக்கீர்த்தனம். 'சிவபெருமான் த்ரு குடுத தை யென்று ஆடினான்' என்பது அதன்பொருள். அனு பல்லவி அந்தப் பொருளைச் சிறப்பித்து நின்றது. 'அவனுடைய நடனத்தைக் கண்ட கிரிகன்யையாகிய உமாதேவி சபாஷென்று சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டும் அப்பிராட்டியைப் பார்த்துக் கொண்டும் வர வர வேகமாக நடனமாடினான்' என் பது அதன் கருத்து. சரணமும் வெளியாயிற்று. 'சிவபெருமான் திருச்செவியில் குழையும் தோடும் ஆடின; கங்கையணிந்த திருமுடி குலுங்கியது; சடை விரிந்தாடியது; சிறு நகை முத்துப்போலத் தோன்றியது; திரிபுரஹரனாகிய சிவபெருமான் கிர்ர்ர்ரென்று சுழன்று ஆடினான்' என்பது சரணப் பொருள். 'சுழன்று நடன மாடினான்' என்னும் கருத்துள்ள "கிர்ர்ர்ரனி திருகி யாடினம்மா" என்ற பகுதியைத் துரைசாமி ஐயர் பாடினபோது ஆந்திர வித்துவானது கை தளர்ந்து விட்டது. அதுகாறும் துரைசாமி ஐயருடைய உத்ஸாகமும் அவருடைய சாஹித்தியமும் அந்தச் சாஹித்தியப் பொருளும் ஆந்திர வித்துவானது கருத்தும் கையும் ஒன்றி யாவரையும் பிரமிக்க வைத்தன. 'கிர்ர்ர்ரனி' என்ற சப்தம் உண்டானவுடன் அதைப் பிடிக்க மார்க்கமில்லாமல் ஆந்திர வித்வான் தவித்தார். உயிருள்ள சாரீர வீணையோடு உயிரற்ற நரம்பு போராட முடியுமா?


சந்தோஷ ஆரவாரம் ஒன்று அப்பொழுது சபையில் எழும்பியது. 'கிர்ர்ர்ரனி' என்ற சாஹித்தியத்தைத் தொடர்ந்து எழுந்த அந்த ஆரவாரம் பரமேசுவரனது பரமானந்த தாண்டவத்தில் திசை முழுதும் எழுந்த முழக்கத்தையொத்தது.


ஆந்திர வித்துவான் வாத்தியத்தைக் கீழே வைத்தார்; துரைசாமி ஐயருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்; "நான் தோற்றேன்; என் கர்வம் ஒழிந்தது" என்று தழுதழுத்த குரலில் கண்ணீர் துளிக்க அவர் கூறினார்.


அரசர் புன்னகை பூத்து அவரை இருக்கச் செய்து, "நீங்கள் மகாவித்துவான். பல இடங்களுக்குச் செல்லுபவர்கள். இந்தப் பால்ய வித்துவான் உங்கள் வாழ்த்தைப் பெறவேண்டியவர். உங்கள் காதிலே படும்படி இவருடைய சங்கீதம் உபயோகமானது இவருடைய பாக்கியம். உங்களுடைய வித்தையைப் பூர்ணமாக அனுபவிக்கும்படியான சந்தர்ப்பம் இன்று நேர்ந்தது நமக்கு மிகவும் சந்தோஷம்" என்று சமாதான வார்த்தைகள்    கூறிப் பலவகையான சம்மானங்களைச் செய்தார்.


துரைசாமி ஐயருக்கு அன்று உண்டான கீர்த்தியும், அவர் அன்று இயற்றிய சுவை மிக்க அக்கீர்த்தனமும் சங்கீத உலகத்தில் இன்றும் நிலவி வருகின்றன.[துரைசாமி ஐயருடைய பேரர் சாம்பசிவையரென்பவர் ஸ்ரீ மகா வைத்தியநாதையருடன் இருந்து பிடில் வாசித்துக் கொண்டு வந்தார். இந்த வரலாற்றை எனக்குக் கூறியவர்கள் அவரும் லாலுகுடியிலிருந்த பிடில் ராஜூவையருமாவர்.]

[ நன்றி : ‘நினைவு மஞ்சரி’ , மதுரைத் திட்டம் ] 

தொடர்புள்ள பதிவுகள்;

என் சரித்திரம்: உ.வே.சா

கம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா


பெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 1


பெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 2

மற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்


உ.வே.சா : கட்டுரைகள்

புதன், 17 ஜூன், 2015

மீ.ப.சோமு - 3

மோக்ஷப் பாதை 
மீ.ப.சோமு 
மீ.ப.சோமுவுக்கும் ஆன்மிகத்துக்கும் பல தொடர்புகள் உண்டு. சோமு கண்ணப்ப சுவாமிகளிடம் தீட்சை பெற்றவர்.  அவருடைய சில கவிதைகளிலும் ஆன்மிகத் தாக்கத்தைக் காணலாம். “திருமூலர் தவமொழி” என்ற நூலை ராஜாஜியுடன் சேர்ந்து எழுதியவர் சோமு.

 இதோ  விகடனில் 50-களில் அவர் எழுதிய ஒரு சிறுகதை! 

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

மீ.ப.சோமு; படைப்புகள்

தமிழுக்கு ஒருவர்: மீ.ப.சோமு

திங்கள், 8 ஜூன், 2015

சங்கீத சங்கதிகள் - 53

மகத்தான கச்சேரி
‘கல்கி’ஜூன் 8. சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.

பேராசிரியர் கல்கி அவருடைய தமிழிசைக் கச்சேரியைப் பற்றி எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை  அவருக்கு ஓர் அஞ்சலியாக இங்கிடுகிறேன்.

அதற்கு முதலில் . . .

மதுரை மணி ஐயர் எப்போது சென்னையில் முதலில்  கச்சேரி செய்தார்?

பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் ‘ஆனந்த விகடனின்’ தொடக்க காலத்தில் ( 30-களில் ) உதவி ஆசிரியராய் இருந்தவர். ‘ தமிழ் இதழ்கள்’ என்ற நூலில், விகடன் அலுவகத்தைப் பற்றி விவரிக்கும்போது குறிப்பிடுகிறார்:


”. . . இந்த ஹாலில் ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தனது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”  

‘கல்கி’க்கும் மணி ஐயருக்கும் இருந்த நெடுநாள் தொடர்புக்கு ஒரு காட்டு,  கல்கி அவர்கள் மறைந்தபோது மதுரை மணி ஐயர்  ‘கல்கி’ இதழில் எழுதிய கடிதப் பகுதி :

இப்போது ’கல்கி’யின் அந்தக் கட்டுரை
[ நன்றி : ‘கல்கி’யின் கட்டுரைக் களஞ்சியம், சாரதா பதிப்பகம், 2006 ]

தொடர்புள்ள பதிவுகள்:

மதுரை மணி
சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

ஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் ?

மதுர மணி : தி.ஜானகிராமன்

’கல்கி’ கட்டுரைகள்

செவ்வாய், 2 ஜூன், 2015

டாக்டர் ஜெயபாரதி

நாஸ்டால்ஜியா
ஜெயபாரதி இன்று ( 2 ஜூன் 2015 )  மறைந்த மருத்துவர், மலேசியா தமிழறிஞர் ஜெயபாரதியின் பன்முகங்களைப் பற்றிப் பல மடல்கள் எழுதலாம்.

அகத்தியர் குழுமம் மூலமாய் அவர் புரிந்த தமிழ்த் தொண்டு காலமெல்லாம் அவர் புகழ் பேசும்.

தயங்காமல் அகத்தியராய்த்  தகவல்கள் வழங்கிவந்தார்;
சுயமான நகைச்சுவையின் துணைகொண்டே எழுதிவந்தார்;
நியமங்கள் பலபயின்று நித்தசக்தி பதம்பணிந்த
ஜெயபாரதி எனுமியக்கம் செகத்தினிலே வாழ்ந்திடுமே..

உதாரணம்: 
டாக்டர் ஜேபியின்ஏடும் எழுத்தாணியும்உரை
இதை 2012-இல் பார்த்ததும் அன்று நான் அகத்தியர்குழுவில் எழுதியது:

கருத்துக் கொளிகூட்டும் காணொளிகள் காட்டி
அருந்தமிழ்த் தொண்டுகள் ஆற்றும் -- குரவர்,
அரியபல செய்திகளை ஆற்றொழுக்காய்க் கூறும்
மருத்துவர் ஜேபிக்கெம் வாழ்த்து.


அவருடைய வேறுபட்ட ஒரு முகத்தைக் காட்ட ஒரு காட்டு: 

அவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள், விருப்பங்கள்  உண்டு. உதாரணமாய், சிறுவயதில் இருவருமே சில ஆங்கில காமிக்ஸ் படித்தவர்கள்! அவற்றை விரும்பினவர்கள் ! இருவருக்கும் ‘நாஸ்டால்ஜியா’ உண்டு!  

சில ஆண்டுகளுக்கு முன்  ‘அகத்தியர்’ யாஹூ குழுவில் டாக்டர் ஜேபி சிறுவயதில், தான் படித்த (Beano) பீ’னோ காமிக்ஸ்
 போன்ற பல ஆங்கிலச் சிறுவர் காமிக்ஸ் இதழ்களைப் பற்றி எழுதினார்.
  நானும் அவற்றைப் படித்தவன் என்பதால், என் நினைவுகளையும் அம்மடல்  கிளறிவிட்டது.
50/60-களில் சென்னையில் எல்லா இடங்களிலும் Beano கிடைக்காது. மௌண்ட் ரோடில், பழைய ந்யூ எலிபின்ஸ்டோன் தியேட்டர் அருகே இருந்த  ஒரு சிறு புத்தகக் கடையில் அதை  நான் வாடிக்கையாக வாங்குவேன்! பிறகு மூர் மார்கெட்டில் தேடல்! இப்படி நூற்றுக் கணக்கில் பீ’னோக்களைச் சேர்த்திருந்தேன். ( யாரோ ஒரு புண்ணியவான் அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று, திரும்பித் தர ‘மறந்து விட்டான்” என்று என் குடும்பத்தார் சொல்கின்றனர்:-((
 பீ’னோவில் வந்த பாத்திரங்கள் யாவரும் மிக அலாதி! ஒவ்வொருவரையும் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.
 எடுத்துக் காட்டாக, டெ’ன்னிஸ் ( Dennis the Menace)  என்ற வாண்டுப் பயல்  . பீ’னோ பாத்திரங்களில் மிகப் பிரபலமானவன் இவன். பின்னர் அதே பெயரில் அமெரிக்காவிலும்  டெ'ன்னிஸ் காமிக்ஸ் வரத் தொடங்கியது.
  ஒரு திரைப்படம் கூட 1993-இல் வந்தது.
 ஆனால்,  பீ’னோவின் டெ’ன்னிஸ் தான் ’நிஜம்’; அவனுடைய  விஷமத்திற்குமுன்  அமெரிக்க டெ’ன்னிஸ் வெறும் நிழல் தான்!  அந்த வருடம் (2011)  மணி விழா கொண்டாடிய  டெ’ன்னிஸுக்கு அகத்தியரில்  ஒரு வாழ்த்துப் பா எழுதினேன்!

 அறுபதாண் டைக்கடந்த அடங்காப் பிடாரியவன்
துறுதுறு  குறும்புசெயத்  துடிதுடிக்கும்  அவதாரம்
பரட்டைமுடி  யன்துணைக்கோ  ‘பைரவராய்’ நாயொன்று.
சிரிப்பிதழ் Beano-வின்  Dennis-ஐ மறப்பேனோ? 

இதோ மாதிரிக்கு ஒரு பீ’னோ அட்டை:


என் “கவிதை”யைப்  படித்ததும் ஜெயபாரதி எழுதியது:
===========
Nostalgia. நாஸ்டால்ஜியா
  
 by  டாக்டர் ஜெயபாரதி
[ நன்றி: அகத்தியர் குழுமம் ]


இந்த Nostalgia எனப்படுகிற விஷயம் இருக்கிறதே......
அது ஒரு தனி அலாதியான சமாச்சாரம்.
முப்பது நாற்பது வயது ஆசாமிகளுக்குக்கூட இந்த நாஸ்டால்ஜியா என்னும் ஏக்கநிலை இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது அறுபது மேற்பட்டவர்களுக்கு எப்படி எந்த அளவுக்கு இருக்கும்!

இது ஒரு மனோநிலை.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், நாம் எந்த இடத்தைப் பற்றி, எந்த காலகட்டத்தைப் பற்றி நினைத்துப் பெருமூச்சு விடுகிறோமோ, அது சம்பந்தமான இனிய நினைவுகளே நாஸ்டால்ஜியாவில் தோன்றும்.
அதான்.....
இந்த Beano, Dandy.....

பாருங்கள்.... Dennis The Menace என்னும் காமிக்ஸ் நாயகன்...... அவன் பெயருக்கு ஏற்ப ஒரு Menaceதான்.
அவனை நாயகனாகக் கொண்ட இன்னொரு காமிக்ஸ் ஸ்ட்ரிப்கூட இருக்கிறது. Walter Mathau-வை வைத்து ஒரு சினிமாகூட வந்துவிட்டது. அந்த ஆசாமி தாம் போட்டுக்கொள்ளவேண்டிய மாத்திரையை மறந்துவிடுவார். ஆகவே அவருக்கு உதவும் வண்ணம், அவர் வாயைத் திறந்துகொண்டு குறட்டை விட்டுத் தூங்கும்போது, டென்னிஸ் மாத்திரையைத் தன்னுடைய கேட்டப்பல்ட்டில் வைத்து இழுத்துக் குறிபார்த்து வால்ட்டரின் உள்நாக்கைப் பார்த்து அடிப்பான், பாருங்கள். இதற்கே வால்ட்டருக்கு ஓர் ஆஸ்க்கார் கொடுக்கலாம். ஆனால் இதில் வரும் டென்னிஸ¤க்கு அந்த Menacing Look கிடையாது. நியூஸன்ஸாக இருக்கிறானே ஒழிய வேறு இல்லை.

ஆனால் Beanoவின் நாயக டென்னிஸ், தன்னுடைய உருவத்தில் பார்வையில் நடவடிக்கையில் Menace என்பதன் உருவகமாகவே தோன்றுவான். அந்த கறுப்புக் குறுக்குப் பட்டை போட்ட சிவப்பு டீ ஷர்ட். கலைந்த அடங்காத பரட்டைத்தலை. மாறாத scowling முறைப்பு. இடுப்புவரை படத்தை எடுத்து தேமுதீக-வின் சின்னமாகக்கூட வைத்துக்கொள்ளலாம். கேப்டனுக்குக்கூட அந்த Look இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் இமேஜின் பண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.

விஷயத்துக்கு வருவோம். அப்பேற்பட்ட டென்னிஸை ஒரு பாட்டுடைத் தலைவனாக மாற்றக்கூடிய தன்மையும் வன்மையும் படைத்தது....?

நாஸ்ட்டால்ஜியா!

அன்புடன்

ஜெயபாரதி
========== 
அமரர் ஜெயபாரதிக்கு என் அஞ்சலி! 

தொடர்புள்ள பதிவுகள்: