சின்ன அண்ணாமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்ன அண்ணாமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

2021. சின்ன அண்ணாமலை - 9

தமிழிசை மாநாடு

சின்ன அண்ணாமலை


 தமிழிசை இயக்கம் தோன்றிய நேரம். சிதம்பரத்தில் முதல் தமிழிசை மாநாடு நடைபெற்று பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இயற்கையாகவே தமிழ் உணர்ச்சி அதிகமுள்ள எனக்கு, அச் செய்திகள் எனது உள்ளத்தில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிற்று. சிதம்பரத்தில் நடந்தது போல ஒரு பெரிய மாநாடு சொந்த ஊரான தேவகோட்டையில் நடத்த வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. இரவு பகல் அதே கனவு. கண்டவர்களிடமெல்லாம் தமிழ் இசை மாநாட்டைப் பற்றியே பேச்சு. இதில் எனக்கு மிகுந்த உற்சாகமூட்டியவர் என் அருமை நண்பர் திரு. டி.ஆர். அருணாசலம் அவர்கள். ஆகவே அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். இருவரும் கையிலிருந்து செலவு செய்து சில நோட்டீஸ்கள் அச்சடித்து தமிழிசை மாநாடு நடைபெறப் போவதாக விளம்பரம் செய்தோம். ஊரில் பரவலாகக் கொஞ்சம் ஆதரவு கிடைக்கும் போலிருந்தது. சங்கீத வித்வான்கள் அனைவருக்கும் கடிதம் போட்டோம். இலக்கியப் புலவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பினோம். அனைவரின் பதில்களும் உற்சாகமூட்டக் கூடிய வகைகளாக இருந்தன. அடுத்தது மாநாட்டிற்காக நிதி வசூல் தொடங்கினோம். வீடு வீடாகச் செல்லும்போதுதான் தமிழிசையைப் பற்றி பலருக்கு புரியவில்லை என்று தெரிந்தது. இத்தனைக்கும் அந்த ஊரில் மாதம் தவறாமல் நடைபெறும் பல கல்யாணங்களில் சங்கீத கச்சேரிகள் நடைபெற்று கொண்டிருந்தன.

 "எதுக்குத் தமிழில் பாடவேண்டும்?'', "இதற்கு ஏன் மாநாடு?'', "தமிழில் பாட முடியுமா?'' , "தமிழில் பாட பாட்டுக்கு எங்கே போவது?'', "இசையில் ஏன் பாஷை விவகாரம்?'' என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டுப் பலர் எங்களை அதைரியப்படுத்தினார்கள். ஆனால் எங்களுடைய தமிழுணர்ச்சி அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவிடவில்லை.

 திட்டங்கள் பிரமாண்டமானதாகப் போடப்பட்டன. ஆனால் நிதி வசூல் எப்படிச் செய்வதென்று தெரியவில்லை. பல பேர் மாநாட்டை கைவிடும்படி உபதேசம் வேறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்ன வந்தாலும் சரி, எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்று உறுதி பூண்டோம். சுமார் பத்தாயிரம் ரூபாய் வசூலானால் மாநாடு சிறப்பாக நடைபெறும் என்று திட்டம் போடப்பட்டது. ரூபாய் பத்தாயிரத்துக்கு எங்கே போவது? இந்நிலையில் மாநாட்டுக் காரியங்களில் தானாக வந்து உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டு அல்லும் பகலும் எங்களுடன் பணிபுரிந்து வந்த அன்பர் ஒருவர், "இராஜா. சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களிடம் சென்று முயற்சிக்கலாமே'' என்றார்.

 நானும் திரு. டி.ஆர். அருணாசலம் அவர்களும் தீவிர காங்கிரஸ்காரர்கள். பலமுறை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களை மேடையில் தாக்கிப் பேசி இருக்கிறோம். ஆகவே காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள், ராஜா சர் அவர்கள் வாசற்படி ஏறுவதே தவறு என்பதாக நினைப்பவர்கள். அப்படியிருக்க, அவரிடம் எப்படிப் போவது? ஆயினும் அந்த அன்பர் விடவில்லை. "இது காங்கிரஸ் விஷயம் இல்லையே; தமிழ் சம்பந்தப்பட்டதுதானே, தமிழுக்காகச் செல்லலாமே'' என்றெல்லாம் நியாயங்களை எடுத்துரைத்து, எங்களை ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் கூட்டிச் சென்றார்.

 ராஜா சர் அவர்கள் எங்கள் இருவரையும் வெகு அன்பாக வரவேற்று, எங்கள் தோள்மேல் கைபோட்டு மாநாட்டைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டார். நாங்கள் நிதி வேண்டுமென்று கேட்கவில்லை. ஏனோ கேட்பதற்கு எங்கள் மனம் துணியவில்லை.

 காபி சாப்பிட்டதும் நாங்கள் போய் வருகிறோம் என்று கிளம்பினோம். ராஜா சர் எங்களிடம் ஒரு கவரைக் கொடுத்து "இதில் எனது அன்பளிப்பு இருக்கிறது; மாநாட்டைச் சிறப்பாக நடத்துங்கள்'' என்று சொன்னார்கள். விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.

 கவரைப் பிரித்துப் பார்த்தோம். அப்படியே திகைத்துக் கல்லாய் சமைந்து நின்றோம்.

 சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதில் இருந்தது ரூபாய் பத்தாயிரம்.

 ஆயிரம் ரூபாய் பரிசு

 தமிழிசை இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். தேவகோட்டையில் ஒரு கல்யாண வீட்டில் அரியக்குடி ராமனுஜ ஐயங்கார் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 வெகுநேரம் அரியக்குடி தெலுங்கிலேயே பாடிக் கொண்டிருந்தார். நான் தமிழிசை இயக்கத்தின் காரியதரிசி. ஆகவே அரியக்குடியிடம், "தயவு செய்து தமிழில் பாடவும்'', என்று சீட்டு எழுதிக் கொடுத்தேன். அரியக்குடி சீட்டை வாங்கிப் பார்த்து விட்டுப் புன்முறுவல் பூத்தார். பாடுவதாகச் சைகை செய்தார். நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் பாடப்போகும் தமிழ்ப்பாட்டை எதிர்பார்த்திருந்தேன். பாட ஆரம்பித்தார் அரியக்குடி. அதுவும் என்னைப் பார்த்தே பாட ஆரம்பித்தார்,

 ""யாரடா குரங்கு நீ--இங்கே வந்த

 யாரடா குரங்கு நீ''.

 அருணாசலக் கவிராயர் கீர்த்தனைதான். நான் அரியக்குடியை முறைத்துப் பார்த்தேன்.

 "இது தமிழ் பாட்டுதானே?'' என்று சொல்லிவிட்டு அதைப் பாடி முடித்தார். அந்தப் பாட்டு முடிந்ததும் என்னை அருகில் வரும்படி அரியக்குடி கூப்பிட்டார். சென்றேன். ""கோபப்படாதீர்கள் சும்மா தமாஷ் செய்தேன். இனி பூராவும் தமிழ்ப் பாட்டுத்தான்'' என்று சொல்லி சுமார் இரண்டு மணி நேரம் தமிழிசையை முழக்கிச் சபையை மெய்மறக்கச் செய்தார்.

 கச்சேரி முடிந்ததும் நான் அவர் அருகில் சென்று நன்றி சொன்னேன். அரியக்குடி என்னைப் பார்த்து, "இசைக்கு மொழி அவசியமா?'' என்று கேட்டார். "அவசியம்தான்,'' என்றேன்.

 "எதனால்?'' என்றார்.

 "நம் முன்னோர்கள் இசையில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே,'' என்றேன். "எப்படி'' என்றார்.

 "இசைதான் முக்கியம் என்றால் நம் முன்னோர்கள் வாய்ப்பாட்டுக்காரர்களை நடுவில் வைப்பார்களா? ஒரு சாதாரண வித்வான் பாடினாலும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி போன்ற பெரியவர்கள் பக்கவாத்தியமாகத்தானே உட்காருகிறார்கள்? இசைதான் முக்கியம்; மொழி முக்கியம் இல்லை என்றால் ராஜமாணிக்கம் பிள்ளையைத்தானே நடுவில் வைக்க வேண்டும். இதிலிருந்தே மொழி முக்கியமென்று தெரியவில்லையா'' என்றேன்.

 அரியக்குடி அன்றிலிருந்து தமிழ்ப் பாட்டு நிறையப் பாட ஆரம்பித்தார். இந்தச் சம்பவத்தை ஒரு சபையில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் அரியக்குடியே சொன்னார். உடனே ராஜா சர் அகமகிழ்ந்து அப்போதே எனக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 25 ஜூலை, 2021

1906. சின்ன அண்ணாமலை - 8

இதய ஒலி
சின்ன அண்ணாமலை  
[ நன்றி: தினமணி ]

ஒரு சமயம் காரைக்குடி கம்பன் திருநாளுக்குப் போய் இருந்தேன். ஸ்ரீ டி.கே. சிதம்பரநாத முதலியார் என்னும் பெரியார் வெகு அருமையாக எல்லாரும் ரசிக்கும்படி கவிதைகள் சொல்லுகிறார்கள் என்று ஏற்கெனவே நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனாலும் அதை நான் நம்பவில்லை.
"இது வெறும் புகழுரையாய்த்தான் இருக்க முடியும். கவிதைகளையாவது எல்லாரும் ரசிக்கும்படி சொல்லுவதாவது?'  என்று எண்ணிக்கொண்டேன். ஸ்ரீ டி.கே.சி. அவர்கள் மேடைக்கு வந்தார்கள். எல்லோரும் அவரைக் கரகோஷம் செய்து வரவேற்றனர். சபையோர் செய்த கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் உற்சாகத்தையும் பார்த்தால் சாக்ஷாத் கம்பருக்கு நடந்த வரவேற்பாகவே காணப்பட்டது. டி.கே.சியினுடைய கம்பீரமான மீசையும் சாந்தம் தவழும் முகமும் என்னை மிகவும் வசீகரித்து விட்டன. அவர்கள் "மைக்'கின் முன் நின்ற நிலையும் எடுப்பான குரலும், பிரசங்க தோரணையும் என்னைப் பிரமிக்கச் செய்துவிட்டன. அன்று கம்பராமாயணத்திலிருந்து ஒரு முக்கியமான கட்டத்தை டி.கே.சி. அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். விசுவாமித்திரர் ஜனகனிடம் ராமனுடைய வீரச் செயலைப் பற்றிக் கூறும் கட்டம்.
""வரும் வழியில் ஒரு குன்று. அந்தக் குன்றைப் பற்றியும் அதில் வாழும் அரக்கியான தாடகையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று குன்றின் உச்சியில் தாடகை பயங்கரமான உருவத்தில் தோன்றினாள். குன்றின் சரிவில் இறங்கி நின்றுகொண்டு அவள் ஒரு சூலாயுதத்தை எடுத்து எங்கள் மேல் வேகமாக வீசினாள். ராமன் ஓர் அம்பை எய்து அந்தச் சூலாயுதத்தைச் சுக்குச் சுக்காக ஆக்கிவிட்டான். பிறகு பெரிய அம்பு ஒன்றை எடுத்து எய்தான். அது என்ன செய்தது? தன் கண்களில் கொல்லுலை போல அக்கினியைக் கொப்புளித்துக் கொண்டிருந்த தாடகையின் மார்பை ஊடுருவிப் போயிற்று.
அலை அலையாக மோதிக் கொண்டிருக்கும் நீலக் கடல் போல் சக்தியும் அற்புதமும் வாய்ந்தவனாய் இருக்கிறான் ராமன். ஜனகனைப் பார்த்து விசுவாமித்திரர் பேசுகிற பேச்சு இப்போது பாட்டைப் பார்க்கலாம்:
""
அலையுருவக் கடல் உருவத்(து)
       ஆண்டகை தன் நீண்டுயர்ந்த
 நிலையுருவப் புயவலியை
   நீ யுருவ நோக்கையா
உலையுருவக் கனல் உமிழ்கண்
   தாடகை தன் உரம் உருவி--
''
தாடகையின் மார்பை உருவிவிட்டு வேறு என்ன செய்தது அந்த அம்பு? அவளுக்குப் பின்னிருந்த மலையை உருவியது, பிறகு மலைக்குப் பின் பக்கத்தின் சரிவில் வளர்ந்து ஓங்கி நின்ற மரம் ஒன்றையும் உருவியது. தன் காரியங்களை இப்படியாக முடித்துக்கொண்டு அந்த அம்பு கடைசியில் மண்ணுக்குள் பாய்ந்தது. செய்யுள் முழுமையும் பார்ப்போம்:
அலையுருவக் கடல் உருவத்(து)
   ஆண்டகை தன் நீண்டுயர்ந்த
நிலையுருவப் புயவலியை
   நீ யுருவ நோக்கையா!
உலையுருவக் கனல் உமிழ்கண்
   தாடகை தன் உரம் உருவி
மலையுருவி மரம் உருவி
    மண் உருவிற்(று) ஒருவாளி.

என்று பாட்டைப்பாடி முடித்தார்கள். ஒவ்வொரு வரியையும் நிதானமாக நிறுத்திப் பல தடவை சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்தப் பாட்டிலுள்ள அம்பானது தாடகையின் (உரத்தை) மார்பை உருவியது. எல்லாம் அப்படியே கண் முன்னால் காட்சியளித்தது. ஆனால் ஸ்ரீ டி.கே.சி. அவர்களுடைய அழகிய பிரசங்கமோ முன்னாலிருந்த மைக்கை உருவியது. பின்னர் மின்சாரக் கயிறுகளை உருவியது. அப்புறம் எங்கள் இதயத்தை உருவி மனத்திலே பாய்ந்தது!
இப்படியாக ஓர் அதிசயமான காரியத்தை அன்று டி.கே.சி. செய்து விட்டார்கள். பாட்டு: அதிலும் கம்பன் பாட்டு எவ்வளவு சுலபமாகப் போய்விட்டது. அடடா என்ன எளிமை! இந்த எளிமை இத்தனை நாளாக நமக்குப் புலப்படாமல் போய்விட்டதே என்று ஒரே வருத்தமாகப் போய்விட்டது. அத்துடன் வியப்பும் ஆச்சரியமும் அதிசயமும் போட்டி போட்டுக் கொண்டு என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டன. அதிலிருந்து ரசிகமணி டி.கே.சி.யின் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிவிட்டேன்.
பிறகு இரண்டு மூன்று தினங்கள் காரைக்குடியிலேயே தங்கியிருந்து ஸ்ரீ டி.கே.சி.யின் பிரசங்கங்களைக் கேட்டு அனுபவித்தேன்.
கடைசி நாளன்று டி.கே.சி.யை நெருங்கி பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ""தாங்கள் எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேட்டேன். அதற்கு ரசிகமணி அவர்கள் ""ஆம் "இதய ஒலி' என்ற புத்தகம் ஒன்றை நண்பர்கள் பிரசுரித்திருக்கிறார்கள்'' என்று சொன்னார்கள்.


உடனே எனக்கு அப்புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அப்போது எனக்கு பால்ய வயது. ஸ்ரீ டி.கே.சி. அவர்களின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் வசதியற்றவனாயிருந்தேன். ஆயினும் எனக்கென்று ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என்ற ஆசைவிட்ட பாடில்லை.
நான் அப்போது காரைக்குடி திரு. சா. கணேசன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். அவரிடம் நிறையப் புத்தகங்கள் இருக்கின்ற விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, "இதயஒலி'யும் இருக்கத்தான் வேண்டும் என்று எண்ணி அவரது புத்தக சாலையை சோதனை போட்டேன். என் முயற்சி வீண் போகவில்லை. "இதயஒலி' கிடைத்தது!
எனக்கு ஏற்பட் சந்தோஷத்தைச் சொல்லி முடியாது! ஒன்றிரண்டு பக்கம் வாசித்தேன். ஸ்ரீ டி.கே.சியே நேரில் வந்து நின்று கொண்டு முகத்தில் புன்னகை தவழப் பேசுவதுபோல் இருந்தது. அந்தப் புத்தகத்தைவிட்டு பிரிய மனம் வரவில்லை. வேறு புத்தகம் வாங்கவும் வசதி இல்லை. என்ன செய்யலாம்? வேறு என்ன இருக்கிறது செய்வதற்கு? மெதுவாகப் புத்தகத்தை எடுத்து ஒளித்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டேன்! நேராகப் பஸ் ஸ்டாண்டிற்குப் போய் ஊரை அடைவதற்குள் என் பாடு வியர்த்து விறுவிறுத்துவிட்டது. வீட்டை அடைந்தவுடன் ஓர் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு புத்தகத்தை ஒரு முறை பிரித்துப் பார்த்தேன். அதன் அட்டையில்
"அருமை நண்பர்
சா. கணேசன் அவர்களுக்கு...
டி.கே.சி.
'
என்று எழுதியிருந்தது. அந்தப் புத்தகத்துக்குடையவருடைய  பெயரையும் ஒரு முறை வாசித்தேன். அதை அப்படியே வைத்திருந்தால் நம்ம குட்டு வெளிப்பட்டு விடும் என்று பயந்து மேற்படி எழுத்துக்களை மிகவும் கஷ்டப்பட்டு அழித்தேன், பிறகு அதன் மேல் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டி அதில் என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதிப் புத்தகத்தைச் சொந்தமாக்கிய பின்புதான் நிம்மதி உண்டாயிற்று.
அந்தப் புத்தகத்தை நான் எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதைக் கணக்கிடவே முடியாது!
"இதயஒலி' செய்த வேலையோ அபாரம் என்று சொல்லலாம். தமிழ்க் கவிதைகளை, படித்தவர்களும் பாமரர்களும் அநுபவிக்கலாம் என்று அது சொல்லித் தந்தது. உண்மைக் கவிதை எது, போலிக் கவிதை எது, என்பதையும் "இதயஒலி' எடுத்துக்காட்டிற்று.
கம்பன், கலிங்கத்துப் பரணி ஆசிரியர், மகாமகோபாத்யாய சாமிநாத ஐயர், வெள்ளக்கால் முதலியார், கவிமணி, பாரதியார், நந்திக் கலம்பகம் ஆசிரியர் பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார், முத்தொள்ளாயிரம் ஆசிரியர் திருப்பாப்புலியூர் ஞானியார் சுவாமிகள், குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் முதலிய அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து அவர்களின் கவிதைகளை அநுபவிக்கும்படி "இதயஒலி' செய்தது.
"இதயஒலி'யில் உள்ள "சங்கீதமும் சாகித்யமும்'  என்ற கட்டுரையைப் படித்த பிறகு உண்டான ஆவேசம்தான் என்னைத் தேவகோட்டையில் ஒரு தமிழிசை மாநாடு நடத்தும்படி தூண்டியது. தமிழிசைக் கிளர்ச்சிக்கே அந்தக் கட்டுரை தூண்டுகோலாகவும் அமைந்தது.
இப்படிப்பட்ட அற்புதமான காரியங்களைச் செய்த "இதயஒலி' யின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த இரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்காகத் திருத்திக் கொடுக்கப்பட்ட புத்தகம் நான் காரைக்குடி திரு. சா. கணேசன் அவர்கள் வீட்டிலிருந்து அமுக்கிக் கொண்டு வந்த அதே புத்தகம் என்பதுதான்.
"இதயஒலி'யைச் சொல்லாமல் எடுத்துக்கொண்டு வந்த குற்றத்திற்குப் பரிகாரமாக நானே ஆயிரக்கணக்கான புத்தகம் போட்டு விநியோகம் செய்யும்படி ஏற்பட்டது, எல்லாவற்றையும்விட அதிசயமான விஷயமாகும்.
[ நன்றி : தினமணி ]
தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

பி.கு.  "இதயஒலி" நூலை டி.கே.சி நூற்றாண்டு சமயத்தில் 
(81/82)  9 ரூபாய்க்கு மீள்பதிப்பாய் வெளிட்டபோது . நான் 
அதை வாங்கினேன். ( இப்போது 200 ரூபாய்க்குக் கிட்டும்! ) 1932- 40 க்கு இடையே அவர் எழுதிய 20 கட்டுரைகள் உள்ள 
தொகுப்பு இது.  


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 9 மார்ச், 2020

1488. சின்ன அண்ணாமலை - 7

முதல் சொற்பொழிவு , காவி நிறச் சட்டை
 சின்ன அண்ணாமலை  



முதல் சொற்பொழிவு 

தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது வகுப்பு மாணவர்கள் கூட்டம் ஒவ்வொரு வாரக் கடைசியில் நடக்கும். வாரத்திற்குச் சில மாணவர்கள் வீதம் பகிர்ந்து கொண்டு குறிப்பிடப்பட்ட விஷயத்தைப் பற்றிச் சுருக்கமாகத் தமிழில் பேச வேண்டும். கட்டாயமாக எல்லா மாணவர்களும் ஏதாவது ஒரு வாரத்தில் பேச வேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எனக்கும் ஒரு வாரம் வந்தது.
எப்போதும் பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி ஒரு வாரம் முன்பே ஆசிரியர் அறிவித்து விடுவார்.

நான் பேச வேண்டிய அந்த வாரத்தின் பொருள் "செல்வம்' என்பதாகும். என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. இதற்கு முன் நான் எந்தக் கூட்டத்திலும் பேசியதுமில்லை. ஒரே குழப்பமாக இருந்த நேரத்தில் எங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரிலிருந்த ஹரிஜன ரெங்கண்ணா அவர்களின் இல்லத்திற்கு எப்போதும் போல் சென்றேன்.
திரு. ரெங்கண்ணா அவர்கள் அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஹரிஜன சேவை செய்து வந்ததனால்  "ஹரிஜன ரெங்கண்ணா'  என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார்.

அவர் என்னிடம் ரொம்ப அன்பு கொண்டவர். சிறு வயதிலே நான் "காந்தி', "காங்கிரஸ்' என்று பேசுவதைக் கேட்பதில் அவருக்கு மெத்த மகிழ்ச்சி. ஆகவே அடிக்கடி நான் அவர் இல்லத்திற்குச் செல்வேன்.

அன்று நான் சென்றபோது, அவர் மேஜை மீது "ஆனந்தவிகடன்' பத்திரிகை இருந்தது. அதன் மேலட்டை மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. படங்கள் நிறைய இருந்தன. உள்ளே பிரித்துப் படித்தேன். வேடிக்கை வேடிக்கையாக துணுக்குகளும் கதைகளும் இருந்தன. அதில் கொட்டை எழுத்தில் முதலில் இரண்டு பக்கம்,  "பொருளாதாரம், பணம், செல்வம்' என்றெல்லாம் விவரித்து எழுதி சின்னஞ்சிறு கதை மூலமும், துணுக்குகள் மூலமும் விளக்கப்பட்டிருந்தன. சிறுவனாகிய எனக்கே மிகத் தெளிவாக விளங்கியது. நான் பேச வேண்டிய விஷயமும் அதுதான். அதனால் நான் பரபரப்படைந்திருந்தேன்.

வழக்கம்போல ஹரிஜன ரெங்கண்ணா வெளியே வந்தார். நான் வணக்கம் செலுத்திவிட்டு, ""சார் இது...'' என்று இழுத்தேன். ""வேண்டுமா, எடுத்துக் கொண்டு போ, "கல்கி'ன்னு ஒருத்தன் இதிலே அருமையா எழுதுகிறான், அவன் எழுதுறதை விடாம படி: சமத்தாயிடுவே'' என்று சொன்னார்.
ஒரே ஓட்டம். "ஆனந்த விகடன்' இதழில் எழுதியிருந்த தலையங்கத்தைப் படித்து நன்றாக மனப்பாடம் செய்து கொண்டேன்.

அந்த வாரம் மாணவர் கூட்டம் ஆரம்பமாயிற்று. உள்ளூர் வக்கீல் திரு. ராமசாமி அய்யங்கார் அவர்கள் தலைமை வகித்தார். அவர் "செல்வம்' என்பது பற்றிச் சிறிது நேரம் பேசினார். வேறு சில மாணவர்களும் பேசினார்கள். கடைசியாக என் முறை வந்தது.

மேடையில் வந்து நின்றேன். கைகால் உதற, கண்கள் சுழல, நாக்கு குழறியது. ஆயினும் எப்படியோ சமாளித்து, நான் மனப்பாடம் செய்து வைத்திருந்த ஆனந்தவிகடன் தலையங்கத்தைப் பேச ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் கை தட்டுதலும், சிரிப்பொலிகளும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. பின்னர் வெகு நிதானமாகவும், குழப்பமில்லாமலும் பேசி முடித்தேன். எல்லோரும் அசந்து போனார்கள். செல்வத்தைப் பற்றி இவ்வளவு அழகாக ஒரு சிறுவனால் எப்படிப் பேச முடிந்தது என்று ஆசிரியர்களும் தலைமை வகித்தவரும் வியப்படைந்தார்கள். தலைமை வகித்த வக்கீல் திரு. ராமசாமி அய்யங்கார் அவர்கள், என்னைத் திருஞான சம்பந்தருக்கு ஒப்பிட்டுப் பேசிப் பாராட்டினார்.

விஷயம் மனப்பாடம் என்பது அவருக்குத் தெரியாதல்லவா? அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஆனந்தவிகடனை வாங்கி ஒன்றுவிடாமல் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். பல தலையங்கங்களை மனப்பாடம் செய்துகொண்டேன்.

பின்னர் கேட்பானேன்! சங்கங்கள், வாசகசாலைகள், பொதுக்கூட்டங்கள் என்று சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தேன். குரல் மட்டும் என்னுடையதுதான். விஷயம் அனைத்தும் "கல்கி' எழுதியதாகத்தான் இருக்கும்.

காவி நிறச் சட்டை
""நீங்கள் ஏன் எப்பொழுதும் காவிகலர் சட்டையை அணிகிறீர்கள்?'' என்று பலர் என்னைக் கேட்டதுண்டு. அது சம்பந்தமாக ஒரு சம்பவம் உண்டு.
நான் 1935-36 இல் கோபிசெட்டிபாளையத்தில் டைமன் ஜுபிலி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் கோபியில் நடைபெற்ற ஓர் அரசியல் மாநாட்டிற்காகத் தலைவர் சத்யமூர்த்தி அவர்கள் வந்திருந்தார். அவரை நான் படித்துக் கொண்டிருந்த டைமண்ட் ஜுபிலி உயர்நிலைப் பள்ளிக்குப் பேச அழைத்தோம். நான் மாணவர் சங்கக் காரியதரிசி. எனக்கு வயது 15 இருக்கும். நல்ல சில்க் சட்டையும், ஜரிகை வேஷ்டியும் கட்டிக்கொண்டுதான் பள்ளிக்குப் போவேன். அன்றும் அப்படித்தான் போயிருந்தேன்.

திரு. சத்யமூர்த்தி அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து ஆங்கிலத்தில் பேசி எங்களை வியப்பில் ஆழ்த்தினார். நான் தமிழில் நன்றி கூறும்போது ""தமிழர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் பேசும்போது ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை. அதனால்தான் நான் தமிழில் நன்றி கூறுகிறேன்'' என்று சொன்னேன்.

உடனே சத்யமூர்த்தி என் மொழிப்பற்றைப் பாராட்டி ""அது சரி. நீ தாய் மொழிப் பற்றுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? தாய்நாட்டுப் பற்று வேண்டாமா?'' என்றார். ""அதுவும் வேண்டியதுதான்'', என்றேன். ""இன்று மாலையில் நடக்கும் அரசியல் மாநாட்டுக்கு வா'' என்று சொல்லிவிட்டுப் போனார்.

நான் அன்று மாலையில் நடந்த அரசியல் மாநாட்டுக்குச் சென்றேன். திரு. சத்யமூர்த்தி என்னைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
என்னையும் மாநாட்டில் பேசுவோர் பட்டியலில் சேர்த்திருந்தார் திரு. சத்யமூர்த்தி. மாநாட்டில் என் பேச்சு ரொம்ப நன்றாக அமைந்தது. தலைவர் சத்யமூர்த்தி எழுந்து என்னை மனதாரப் பாராட்டி என் நாவன்மையைப் புகழ்ந்தார். அவர் பேசிய தமிழ்--தோரணை--உச்சரிப்பு--விஷய அழுத்தம்--கணீர் என்ற குரல்--இவையனைத்தும் என்னை மெய்மறக்கச் செய்தன. தன் பேச்சு முடிவில் தலைவர் சத்யமூர்த்தி அவர்கள் என்னை நோக்கி, ""இன்று முதல் நீ கதரே கட்டவேண்டும். காங்கிரஸ் உறுப்பினராக வேண்டும். உன் சேவை நம்நாட்டுக்கு ரொம்பத் தேவை'' என்று கூறி தான் அணிந்திருந்த காவி கலர் அங்கவஸ்திரம் ஒன்றைச் சபையின் கரகோஷத்துடன் எனக்குப் போர்த்தினார்.

என் உடம்பில் முதலில் பட்ட கதர் துணி காவிக்கலர் துணியே. அதுவும் சத்யமூர்த்தி அவர்களால் அணிவிக்கப்பட்டதாகும். அந்தப் பெரும் பாக்யத்தை நான் என்றும் மறக்கமாட்டேன். அந்த நினைவாகவே நான் என்றும் கதரில் காவி நிறச் சட்டையையே அணிகிறேன்.

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 



வெள்ளி, 15 நவம்பர், 2019

1392. சின்ன அண்ணாமலை - 6

காணக் கண்கோடி வேண்டும் - 2
சின்ன அண்ணாமலை



சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947-இல்  எழுதிய இன்னொரு பயணக் கட்டுரை.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

புதன், 16 அக்டோபர், 2019

1377. சின்ன அண்ணாமலை - 5

காணக் கண்கோடி வேண்டும் - 1
சின்ன அண்ணாமலை


சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947-இல்  எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்னர் இவை ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற நூலில் வந்தன என்று நினைக்கிறேன்.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

திங்கள், 19 ஜூன், 2017

746. சின்ன அண்ணாமலை - 4

தமிழ்ப்பண்ணை
சின்ன அண்ணாமலை 



ஜூன் 18, 1920. சின்ன அண்ணாமலையாரின் பிறந்த தினம்.
ஜூன் 18, 1980.  அவர் காலமான தினம்.

சிறுவயதில், அவருடைய “ தமிழ்ப்பண்ணை”யிலிருந்து நான் வாங்கிய நூல்கள் பல!  இன்றும் பனகல் பார்க் ( சென்னை, தியாகராயநகர் )  பக்கம் போனால் அதன் நினைவும், அவர் நினைவும் எனக்கு வராமல் போவதில்லை.



 இதோ ‘தமிழ்ப்பண்ணை’யைப் பற்றி அவர் எழுதின ஒரு கட்டுரை:
======

சென்னைக்கு வந்துவிட்டேன். என்ன செய்வது என்று திகைத்திருக்கையில் திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் என்னைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்துக் கொண்டார்.

திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் ’உலகம் சுற்றும் தமிழன்' என்று புகழ் பெற்றவர், பிரயாணக்கட்டுரைகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். 'குமரி மலர் என்ற அற்புதமான மாத இதழ் நடத்திக் கொண்டிருந்தார்.

அவருடன் கூடவே அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டிச் சென்று என்னை அறிமுகம் செய்து வைப்பார். அடிக்கடி ’சக்தி’ காரியாலயத்திற்குச் செல்வோம். சக்தி வை.கோவிந்தன் அவர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். தமிழ்ப் புத்தகங்களை அழகிய முறையில் போடுவதற்கு முன்னோடி அவர் தான். ஏராளமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர். திரு.ஏ.கே.செட்டியார். சக்தி வை. கோவிந்தன் இவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கும் நண்பர் சத்ருக்கனன் அச்சுத் தொழிலில் பெரிய திறமைசாலி. இந்த மூவரும் இணை பிரியாத நண்பர்கள், இவர்கள் மூவரும் ஏனோ என்னிடம் மிகுந்த பாசம் காட்டினார்கள். தங்களின் செல்லப்பிள்ளை'யாக என்னைக் கட்டிக் காத்தார்கள்.

இவர்கள் அடிக்கடி போகும் இடம் தியாகராய நகரில் உஸ்மான் ரோடில் இருந்த திரு.வெ.சாமிநாத சர்மா அவர்களின் இல்லத்திற்குத்தான் இவர்களுடன் நானும் செல்வேன். ஒரு நாள் நாங்கள் பஸ்ஸில் திரு.சாமிநாதசர்மா அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது தியாகராய நகர் பனகல்பார்க் நாகேஸ்வரராவ் தெருவில் ஒரு சிறு அழகிய கட்டிடம் பூட்டிக் கிடந்தது. அதைப் பார்த்த மூவரும் என்னைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.

அந்தக் கட்டிடம் காலியாக இருப்பதை விசாரித்து தெரிந்துகொண்டு, இதில் நம் அண்ணாமலைக்கு தமிழ்ப் பண்ணை புத்தக நிலையம் வைத்துக் கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்தார்கள். என்னிடம் விஷயத்தைச் சொன்னபோது, நான், "என்னிடம் போதியபணம் இல்லையே, என்ன செய்வது?" என்று கையைப் பிசைந்தேன்.

அவர்கள் மூவரும் சிரித்துவிட்டு 'நாங்கள் உனக்கு வேண்டிய உதவி செய்கிறோம் தைரியமாகத் தொழிலை ஆரம்பி" என்றார்கள்.

இடத்தைப் பிடித்துக் கொடுத்தார்கள். பல புத்தகக் கம்பெனிகளில் புத்தகங்களை ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்கள். புத்தகம் போட பேப்பர் தந்தார்கள். அடடா அவர்கள் செய்த உதவியை நினைத்தால் இப்பொழுதுகூட என் மெய்சிலிர்க்கிறது.

'தமிழ்ப்பண்ணை’யை ராஜாஜி துவக்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை. கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார்.

எழுத்தாளர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தனர்.

தமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகமான ”தமிழன் இதயம்” என்ற நூலைப் பார்த்து அனைவரும் பிரமிப்படைந்தனர். அப்புத்தகத்தை மிகஅழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன் அவர்கள்.

அதன்மேல் அட்டையை கண் கவரும் வண்ணம் அச்சடித்துக் கொடுத்தவர் திரு.சத்ருக்கனன் அவர்கள். தமிழ்ப்பண்ணை எழுத்தாளர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் நிழல் கொடுத்து வந்தது. தமிழ்ப்பண்ணையின் மூலம் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்தது.

'நாமக்கல் கவிஞருக்குப் பண முடிப்பு அளிக்க முடிந்தது. அதைப் பார்த்த திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் என்னை நேரில் வந்து பாராட்டி விட்டு, தானும் பாரதிதாசனுக்கு அப்படி ஒரு நிதி அளிக்க வேண்டும். அதற்கும் கூடவே இருந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பலமுறை திரு.அண்ணாதுரை அவர்கள் சார்பில், திரு.என்.வி. நடராஜன் என்னைப் பலமுறை வந்து சந்தித்து பாரதிதாசன் நிதி அளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.

ராஜாஜியின் நூல்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம், பொ.திருகூடசுந்தரம் பிள்ளை, நாடோடி, தி.ஜ.ர. இப்படி ஏராளமானவர்களின் நூல்களை வெளியிட்டு, பெரிய விழாக்கள் நடத்தி எழுத்தாளர்களுக்குக் கெளரவம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது தமிழ்ப் பண்ணையே!


 ஆண்டுதோறும் பாரதிவிழா, பாரதி பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டன. திரு.வி.க. மணிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது தமிழ்ப் பண்ணையே! காந்தியடிகளின் 'ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்தியதும் தமிழ்ப் பண்ணையே!

தமிழ்ப்பண்ணைக்கு அடிக்கடி புத்தகம் வாங்க வருவார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். அவருடன் நெருங்கிய பழக்கம் எனக்கு அப்பொழுதுதான் ஏற்பட்டது.

தமிழ்ப்பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் வருவார்கள். தவறாமல் வ.ரா., புதுமைப் பித்தன், தி.ஜ.ர.முதலியவர்கள் வருவார்கள். வ.ரா.சத்தம் போட்டுத்தான் பேசுவார். யாரும் அவருக்கு நிகரில்லை. புதுமைப் பித்தனோ ரொம்பக் கிண்டலாகப் பேசுவார். தி.ஜ.ர.எதுவும் பேசமாட்டார். அப்படிப் பேசினாலும் ரொம்ப மெதுவாகப் பேசுவார்.

ஒருநாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது வ.ரா.வந்தார். "என்னடா எழுதுகிறாய்" என்று கேட்டார். 'ஒரு பிரயாணக் கட்டுரை எழுதுகிறேன்' என்றேன். 'கொடு பார்க்கலாம்  " என்றார். கொடுத்தேன். 'டேய்! நீ பெரிய ஆளுடா, என்னமா எழுதியிருக்கிறாய்' என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது தி.ஜ.ர.வந்து விட்டார்."பார்த்தியா, இதைப் பார்த்தியா' என்று தி.ஜ.ர.விடம் நான் எழுதியதைக் காட்டி வ.ரா.புகழ ஆரம்பித்தார்.

தி.ஜ.ர. அதைப் படித்துப் பார்த்து, 'நன்றாகத்தான் இருக்கிறது" என்றார். "சும்மா சொல்லி விட்டுப் போகாதே. சக்தி' பத்திரிகையில் இவனிடம் கட்டுரை வாங்கிப் போடு" என்று வ.ரா. சொன்னார். எனக்கு மெய் சிலிர்த்தது. அவர் பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல, பெரிய மனது உடையவர், நான் எழுதிய அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இது தான்.

"கட்டுரையாகட்டும் கதையாகட்டும் ! வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் இக்கட்டுரையைத் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ஆரம்பிக்கிறேன்"

அவர் சொற்படி பின்னர் சக்தி பத்திரிகையில் எனது கட்டுரையை தி.ஜ.ர.நிறைய வெளியிட்டார். அதன் பின்னர்கல்கி பத்திரிகையில் எனது கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்தன. எனது முதல் புத்தகத்தின் பெயர் "சீனத்துச் சிங்காரி'

சொன்னால் நம்பமாட்டீர்கள்!  அந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்கள்.  அவர் என்னை ஒரு "சிறுகதை மன்னன்” என்று நிரூபிப்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்து ஒரு அருமையான கட்டுரையை முன்னுரையாக அதில் எழுதியிருக்கிறார்


தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

செவ்வாய், 29 நவம்பர், 2016

சின்ன அண்ணாமலை - 3

கலைவாணருடன் போட்டி 
சின்ன அண்ணாமலை


நவம்பர் 29. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாள்.
===





 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

என்.எஸ். கிருஷ்ணன்

செவ்வாய், 27 மே, 2014

சின்ன அண்ணாமலை -2

கல்கியுடன் நான்!
சின்ன அண்ணாமலை


"ஸ்ரீ சின்ன அண்ணாமலை மணிக்கணக்கில் பிரசங்க மாரி 
பொழியக்கூடியவர்.ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்படி பேசுவார்: 
சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார். பேசும் ஆற்றலைப் போல் 
எழுதும் ஆற்றல் படைத்தவர். " 

            
    
- பேராசிரியர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி



இதோ 'கல்கி' யைப் பற்றிச் சின்ன அண்ணாமலை எழுதிய மூன்று சிறு  கட்டுரைகள்! [ நன்றி: 1978-இல் ’குமுத’த்தின் இலவச இணைப்பான 

சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ (, 'சொன்னால் நம்பமாட்டீர்கள்!" என்ற நூலிலிருந்து ஒரு சிறு தொகுப்பு.) 








‘கல்கி’யைக் கண்டேன்! 

சின்ன அண்ணாமலை 




பத்திரிகை ஆசிரியர் 
சின்ன அண்ணாமலை 



கல்கி தந்த கார் 
சின்ன அண்ணாமலை





பின் குறிப்பு:

'கல்கி' 54-இல் மறைந்தவுடன் சென்னையில் நடந்த பல இரங்கற் கூட்டங்களுள் ஒன்றில் சின்ன அண்ணாமலை உருக்கமாகப் பேசியதை நான் கேட்டிருக்கிறேன். அவர் பேச்சில் இப்போது எனக்கு நினைவில் இருப்பது ஒன்றுதான்: சில நாள்களுக்கு முன் கல்கியை மருத்துவமனையில் பார்த்தபோது, கல்கி தன் அடுத்த வரலாற்று நாவல் ஹைதர் அலி/திப்பு சுல்தான் பற்றி இருக்கும் என்றும், அதற்குத் தேவையான நூல்களைச் சேகரித்து வைக்கத் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார். 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

பாரதி பிறந்தார் ! : ஒரு நூல் முன்னுரை 

கல்கி மறைந்தவுடன் வந்த கல்கியில் இருந்து:


மீ.ப.சோமுவின் தலையங்கம் 

ம.பொ.சி யின் அஞ்சலிக் கட்டுரை

’தேவனி’ன் அஞ்சலிக் கட்டுரை

கொத்தமங்கலம் சுப்புவின் அஞ்சலிக் கவிதை


கல்கியைப் பற்றி . . .
கல்கி மறைந்தவுடன் ‘விகடனில்’ வந்த

எஸ்.எஸ்.வாசனின் கட்டுரை 


கல்கி’ கட்டுரைகள்

வெள்ளி, 2 நவம்பர், 2012

சின்ன அண்ணாமலை -1 : தாரா சிங் -கிங்காங் போட்டி!

விளம்பர வெற்றி
சின்ன அண்ணாமலை




சின்ன அண்ணாமலை ஒரு தேச பக்தர்; ராஜாஜி, கல்கி போன்றோருக்கு மிக நெருங்கியவர். காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்தியவர். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவராய் இருந்தவர். நகைச்சுவையாகப் பேசுவார்; எழுதுவார்.  சென்னையில் 50-களில் தி.நகரில்  பனகல் பார்க் அருகில், ‘தமிழ்ப்பண்ணை’ என்ற ஒரு நூல் பதிப்பகம் நடத்தியவர். ராஜாஜி, நாமக்கல் கவிஞர், ம.பொ.சி போன்றவரின் நூல்களை மிக நேர்த்தியான முறையில் வெளிட்டவர். ஒரு நூலகமும் ( லெண்டிங் லைப்ரரி )  வைத்திருந்தார்; அதிலிருந்து பல நூல்களைச் சிறு வயதில் நான் வாங்கிப் படித்திருக்கிறேன்.

அண்மையில் பிரபல மல்யுத்த வீரர், நடிகர் (தொலைக்காட்சி ராமாயணத் தொடரில் அனுமான்!) தாரா சிங் காலமானவுடன்,  எனக்குத் தாரா சிங் -கிங்காங் மல்யுத்தப் போட்டியும், கூடவே சின்ன அண்ணாமலையின் நினைவும் வந்தது. அவர் எழுதிய ஒரு கட்டுரையும் நினைவுக்கு வந்தது.
( அந்த மல்யுத்தப் போட்டிப் பப்ளிசிடி பொறுப்பு சாவி, சின்ன அண்ணாமலை இருவரிடம் இருந்தது)

1978-இல் ’குமுத’த்தின் இலவச இணைப்பான ‘சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ என்ற ஒரு சிறு  நூலில் வந்த அந்தக் கட்டுரை இதோ!
( அது சின்ன அண்ணாமலை எழுதிய ‘ சொன்னால் நம்பமாட்டீர்கள்!’ என்ற நூலிலிருந்து  ஒரு தொகுப்பு.)





[ நன்றி : குமுதம் ]

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்:

மல்லருக்கும் மல்லர் சின்ன அண்ணாமலை!

சின்னஅண் ணாமலை செய்த தனைப்பார்த்தென்
சிந்தையி லேஇன்பம் தோன்றுதடா!
மன்னும் புவியினில் மல்லரைக் கூடவும்
மண்ணையும் கவ்விடச் செய்யுகிறார்!


விற்பனை செய்திடும் மார்க்கத்தைக் பேசிடும்
விற்பனர்க் கெட்டாத சிந்தையடா!
கற்பனை இப்படி ஊறிடும் மானிடர்
காசினி காணாத விந்தையடா!

சிவ சூரியநாராயணன்.
===============

பி.கு.2 

 A classmate recollects:

Krishnan Sevel Venkataraman due to the initiative taken by our Head Master, both King Kong and Dara Singh visited our School and met the students. they spent more than 45 minutes with us. When King Kong appreciated the tamil songs, he felt he could not enjoy it fully as he is unable to undertand the lyrics, our teacher Margabandhu Iyer sang DING DONG BELL in a carnatic ragam which was appreciated by him

(I recall that DING DONG BELL was sung in the tune of Tyagaraja's " sarasa sama dhana" made famous by Madurai Mani Iyer. - Pasupathy )

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 2

காந்தி படித்த பாரதி பாட்டு 


முந்தைய பகுதி :

பாரதி மணிமண்டபம் -1    


( தொடர்ச்சி)

ரகுநாதன் ஐந்து ரூபாய் செக்குடன் எழுதிய கடிதத்தை வெளியிட்ட ‘கல்கி’ , எட்டயபுரத்தில் ஒரு வாசகசாலை அமைக்க வேண்டுமானால், அதற்கு “ஒரு பெரிய ஐந்து, அதாவது  ஐயாயிரம் ரூபாயாவது” வேண்டும் என்று ஒரு அடிக்குறிப்பு எழுதினார்.

பாரதி ஞாபகார்த்த நிதி பற்றிய செய்திகளைக் கல்கி தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.   நிதி மேலும் சேரப்  பாரதியைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவார்! உதாரணமாய்,  காந்தி தமிழ் படிக்கிறார் என்றும் , பாரதியின் பாப்பா பாட்டைப் படிக்கிறார் என்றும் ஒரு அட்டைப்பட விளக்கத்தில் எழுதுகிறார்!




கல்கி எழுதிய “பாரதி பிறந்தார்” என்ற கட்டுரையின் தாக்கத்தையும்  சின்ன அண்ணாமலை ( “பாரதி பிறந்தார்” என்ற கல்கியின் பாரதி புத்தகாலய நூலின் ( 64) முன்னுரையில்) இப்படி விவரிக்கிறார்.



ஆசிரியர் கல்கியின் ஜாதக விசேஷம் என்னவென்றால், அவர் என்ன எழுதினாலும், அல்லது எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அதை மற்ற எழுத்தாளரும் பத்திரிகைக்காரர்களும் தாக்க வேண்டும் என்பது தான்!

ஆனால் மேற்படி வழக்கத்துக்கு விரோதமாகச் சென்ற 1944-ம் ஆண்டில் ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது. அதாவது ஆசிரியர் கல்கி ஆரம்பித்த விஷயத்துக்கும் ஆரம்பித்த காரியத்துக்கும் தமிழ் நாட்டில் மகத்தான வரவேற்புக் கிடைத்தது!   
 . . . // . . .

“ஸ்ரீ ரகுநாதன் அவர்கள் சுபகரமாக ஆரம்பித்து வைத்த மேற்படி ஞாபகச் சின்ன நிதியானது நாளடைவில் மிகப் பெரிய நிதியாக மாறிப் “போதும்! போதும்!’ என்று  (கல்கி) ஆசிரியரே அறிவித்துக் கொள்ளும் அளவுக்குப் பெருகிவிட்டது.. . . . ஐயாயிரம் ரூபாயாவது சேருமா என்று ரொம்பவும் சந்தேகத்தோடு ஆரம்பித்த  நிதியானது நாற்பதினாயிரம் ரூபாய்க்குமேல் எட்டிப் போய்விட்டது.


[ 'கல்கி', ஏப்ரல் 45 ]


மேற் கண்டவாறு (சேர்ந்த)  பாரதி ஞாபகார்த்த நிதியைக் கொண்டு கல்கி ஆசிரியர் தமிழ் மக்களின் பூர்ண சம்மதத்துடன் மற்றொரு முக்கியமான காரியத்தையும் செய்து முடித்தார். அதாவது, மேற்படி தொகையிலிருந்து ரூபாய் பத்தாயிரத்தைத் தனியாக ஒதுக்கிப் பாங்கியில் போட்டு அதிலிருந்து வரும் வட்டித் தொகையை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை ரூபாய் 112-8-0 வீதம் பாரதியாரின் வாழ்க்கைத் துணைவிக்கு அவருடைய ஜீவிய காலம் வரை உதவியாக அளிக்க ஏற்பாடு செய்தார். 

. . . // . . .

ஒரு கட்டுரையின் மூலம் ரூபாய் நாற்பதாயிரம் வசூல் செய்வதென்பது தமிழ் நாட்டின் சரித்திரத்திலேயெ புதிய விஷயமாகும். ஒரு பெரிய அதிசயம் என்று கூடச் சொல்லலாம் “

பின் குறிப்பு:

மணிமண்டபத்துக்கு முதல் ‘போணி’யாய்க் காசோலையை அனுப்பிய ரகுநாதன் “ வெள்ளிமணி” பத்திரிகைக்கு 47-இல் எழுதிய ஒரு கடிதத்தை யும், அதற்கு ஆசிரியர் “சாவி” எழுதிய பதிலையும்  படியுங்கள்! இரண்டும் அரிய ஆவணங்கள்! 



“ பாரதி பிறந்தார்”  கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' பல கட்டுரைகள்/செய்தி அறிவிப்புகள்  'கல்கி'யில் எழுதினார். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றைப் பார்க்கலாமா?

(தொடரும்)

அடுத்த பகுதி

 பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள்