ஞாயிறு, 25 ஜூலை, 2021

1906. சின்ன அண்ணாமலை - 8

இதய ஒலி
சின்ன அண்ணாமலை  
[ நன்றி: தினமணி ]

ஒரு சமயம் காரைக்குடி கம்பன் திருநாளுக்குப் போய் இருந்தேன். ஸ்ரீ டி.கே. சிதம்பரநாத முதலியார் என்னும் பெரியார் வெகு அருமையாக எல்லாரும் ரசிக்கும்படி கவிதைகள் சொல்லுகிறார்கள் என்று ஏற்கெனவே நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனாலும் அதை நான் நம்பவில்லை.
"இது வெறும் புகழுரையாய்த்தான் இருக்க முடியும். கவிதைகளையாவது எல்லாரும் ரசிக்கும்படி சொல்லுவதாவது?'  என்று எண்ணிக்கொண்டேன். ஸ்ரீ டி.கே.சி. அவர்கள் மேடைக்கு வந்தார்கள். எல்லோரும் அவரைக் கரகோஷம் செய்து வரவேற்றனர். சபையோர் செய்த கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் உற்சாகத்தையும் பார்த்தால் சாக்ஷாத் கம்பருக்கு நடந்த வரவேற்பாகவே காணப்பட்டது. டி.கே.சியினுடைய கம்பீரமான மீசையும் சாந்தம் தவழும் முகமும் என்னை மிகவும் வசீகரித்து விட்டன. அவர்கள் "மைக்'கின் முன் நின்ற நிலையும் எடுப்பான குரலும், பிரசங்க தோரணையும் என்னைப் பிரமிக்கச் செய்துவிட்டன. அன்று கம்பராமாயணத்திலிருந்து ஒரு முக்கியமான கட்டத்தை டி.கே.சி. அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். விசுவாமித்திரர் ஜனகனிடம் ராமனுடைய வீரச் செயலைப் பற்றிக் கூறும் கட்டம்.
""வரும் வழியில் ஒரு குன்று. அந்தக் குன்றைப் பற்றியும் அதில் வாழும் அரக்கியான தாடகையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று குன்றின் உச்சியில் தாடகை பயங்கரமான உருவத்தில் தோன்றினாள். குன்றின் சரிவில் இறங்கி நின்றுகொண்டு அவள் ஒரு சூலாயுதத்தை எடுத்து எங்கள் மேல் வேகமாக வீசினாள். ராமன் ஓர் அம்பை எய்து அந்தச் சூலாயுதத்தைச் சுக்குச் சுக்காக ஆக்கிவிட்டான். பிறகு பெரிய அம்பு ஒன்றை எடுத்து எய்தான். அது என்ன செய்தது? தன் கண்களில் கொல்லுலை போல அக்கினியைக் கொப்புளித்துக் கொண்டிருந்த தாடகையின் மார்பை ஊடுருவிப் போயிற்று.
அலை அலையாக மோதிக் கொண்டிருக்கும் நீலக் கடல் போல் சக்தியும் அற்புதமும் வாய்ந்தவனாய் இருக்கிறான் ராமன். ஜனகனைப் பார்த்து விசுவாமித்திரர் பேசுகிற பேச்சு இப்போது பாட்டைப் பார்க்கலாம்:
""
அலையுருவக் கடல் உருவத்(து)
       ஆண்டகை தன் நீண்டுயர்ந்த
 நிலையுருவப் புயவலியை
   நீ யுருவ நோக்கையா
உலையுருவக் கனல் உமிழ்கண்
   தாடகை தன் உரம் உருவி--
''
தாடகையின் மார்பை உருவிவிட்டு வேறு என்ன செய்தது அந்த அம்பு? அவளுக்குப் பின்னிருந்த மலையை உருவியது, பிறகு மலைக்குப் பின் பக்கத்தின் சரிவில் வளர்ந்து ஓங்கி நின்ற மரம் ஒன்றையும் உருவியது. தன் காரியங்களை இப்படியாக முடித்துக்கொண்டு அந்த அம்பு கடைசியில் மண்ணுக்குள் பாய்ந்தது. செய்யுள் முழுமையும் பார்ப்போம்:
அலையுருவக் கடல் உருவத்(து)
   ஆண்டகை தன் நீண்டுயர்ந்த
நிலையுருவப் புயவலியை
   நீ யுருவ நோக்கையா!
உலையுருவக் கனல் உமிழ்கண்
   தாடகை தன் உரம் உருவி
மலையுருவி மரம் உருவி
    மண் உருவிற்(று) ஒருவாளி.

என்று பாட்டைப்பாடி முடித்தார்கள். ஒவ்வொரு வரியையும் நிதானமாக நிறுத்திப் பல தடவை சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்தப் பாட்டிலுள்ள அம்பானது தாடகையின் (உரத்தை) மார்பை உருவியது. எல்லாம் அப்படியே கண் முன்னால் காட்சியளித்தது. ஆனால் ஸ்ரீ டி.கே.சி. அவர்களுடைய அழகிய பிரசங்கமோ முன்னாலிருந்த மைக்கை உருவியது. பின்னர் மின்சாரக் கயிறுகளை உருவியது. அப்புறம் எங்கள் இதயத்தை உருவி மனத்திலே பாய்ந்தது!
இப்படியாக ஓர் அதிசயமான காரியத்தை அன்று டி.கே.சி. செய்து விட்டார்கள். பாட்டு: அதிலும் கம்பன் பாட்டு எவ்வளவு சுலபமாகப் போய்விட்டது. அடடா என்ன எளிமை! இந்த எளிமை இத்தனை நாளாக நமக்குப் புலப்படாமல் போய்விட்டதே என்று ஒரே வருத்தமாகப் போய்விட்டது. அத்துடன் வியப்பும் ஆச்சரியமும் அதிசயமும் போட்டி போட்டுக் கொண்டு என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டன. அதிலிருந்து ரசிகமணி டி.கே.சி.யின் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிவிட்டேன்.
பிறகு இரண்டு மூன்று தினங்கள் காரைக்குடியிலேயே தங்கியிருந்து ஸ்ரீ டி.கே.சி.யின் பிரசங்கங்களைக் கேட்டு அனுபவித்தேன்.
கடைசி நாளன்று டி.கே.சி.யை நெருங்கி பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ""தாங்கள் எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேட்டேன். அதற்கு ரசிகமணி அவர்கள் ""ஆம் "இதய ஒலி' என்ற புத்தகம் ஒன்றை நண்பர்கள் பிரசுரித்திருக்கிறார்கள்'' என்று சொன்னார்கள்.


உடனே எனக்கு அப்புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அப்போது எனக்கு பால்ய வயது. ஸ்ரீ டி.கே.சி. அவர்களின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் வசதியற்றவனாயிருந்தேன். ஆயினும் எனக்கென்று ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என்ற ஆசைவிட்ட பாடில்லை.
நான் அப்போது காரைக்குடி திரு. சா. கணேசன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். அவரிடம் நிறையப் புத்தகங்கள் இருக்கின்ற விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, "இதயஒலி'யும் இருக்கத்தான் வேண்டும் என்று எண்ணி அவரது புத்தக சாலையை சோதனை போட்டேன். என் முயற்சி வீண் போகவில்லை. "இதயஒலி' கிடைத்தது!
எனக்கு ஏற்பட் சந்தோஷத்தைச் சொல்லி முடியாது! ஒன்றிரண்டு பக்கம் வாசித்தேன். ஸ்ரீ டி.கே.சியே நேரில் வந்து நின்று கொண்டு முகத்தில் புன்னகை தவழப் பேசுவதுபோல் இருந்தது. அந்தப் புத்தகத்தைவிட்டு பிரிய மனம் வரவில்லை. வேறு புத்தகம் வாங்கவும் வசதி இல்லை. என்ன செய்யலாம்? வேறு என்ன இருக்கிறது செய்வதற்கு? மெதுவாகப் புத்தகத்தை எடுத்து ஒளித்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டேன்! நேராகப் பஸ் ஸ்டாண்டிற்குப் போய் ஊரை அடைவதற்குள் என் பாடு வியர்த்து விறுவிறுத்துவிட்டது. வீட்டை அடைந்தவுடன் ஓர் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு புத்தகத்தை ஒரு முறை பிரித்துப் பார்த்தேன். அதன் அட்டையில்
"அருமை நண்பர்
சா. கணேசன் அவர்களுக்கு...
டி.கே.சி.
'
என்று எழுதியிருந்தது. அந்தப் புத்தகத்துக்குடையவருடைய  பெயரையும் ஒரு முறை வாசித்தேன். அதை அப்படியே வைத்திருந்தால் நம்ம குட்டு வெளிப்பட்டு விடும் என்று பயந்து மேற்படி எழுத்துக்களை மிகவும் கஷ்டப்பட்டு அழித்தேன், பிறகு அதன் மேல் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டி அதில் என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதிப் புத்தகத்தைச் சொந்தமாக்கிய பின்புதான் நிம்மதி உண்டாயிற்று.
அந்தப் புத்தகத்தை நான் எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதைக் கணக்கிடவே முடியாது!
"இதயஒலி' செய்த வேலையோ அபாரம் என்று சொல்லலாம். தமிழ்க் கவிதைகளை, படித்தவர்களும் பாமரர்களும் அநுபவிக்கலாம் என்று அது சொல்லித் தந்தது. உண்மைக் கவிதை எது, போலிக் கவிதை எது, என்பதையும் "இதயஒலி' எடுத்துக்காட்டிற்று.
கம்பன், கலிங்கத்துப் பரணி ஆசிரியர், மகாமகோபாத்யாய சாமிநாத ஐயர், வெள்ளக்கால் முதலியார், கவிமணி, பாரதியார், நந்திக் கலம்பகம் ஆசிரியர் பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார், முத்தொள்ளாயிரம் ஆசிரியர் திருப்பாப்புலியூர் ஞானியார் சுவாமிகள், குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் முதலிய அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து அவர்களின் கவிதைகளை அநுபவிக்கும்படி "இதயஒலி' செய்தது.
"இதயஒலி'யில் உள்ள "சங்கீதமும் சாகித்யமும்'  என்ற கட்டுரையைப் படித்த பிறகு உண்டான ஆவேசம்தான் என்னைத் தேவகோட்டையில் ஒரு தமிழிசை மாநாடு நடத்தும்படி தூண்டியது. தமிழிசைக் கிளர்ச்சிக்கே அந்தக் கட்டுரை தூண்டுகோலாகவும் அமைந்தது.
இப்படிப்பட்ட அற்புதமான காரியங்களைச் செய்த "இதயஒலி' யின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த இரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்காகத் திருத்திக் கொடுக்கப்பட்ட புத்தகம் நான் காரைக்குடி திரு. சா. கணேசன் அவர்கள் வீட்டிலிருந்து அமுக்கிக் கொண்டு வந்த அதே புத்தகம் என்பதுதான்.
"இதயஒலி'யைச் சொல்லாமல் எடுத்துக்கொண்டு வந்த குற்றத்திற்குப் பரிகாரமாக நானே ஆயிரக்கணக்கான புத்தகம் போட்டு விநியோகம் செய்யும்படி ஏற்பட்டது, எல்லாவற்றையும்விட அதிசயமான விஷயமாகும்.
[ நன்றி : தினமணி ]
தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

பி.கு.  "இதயஒலி" நூலை டி.கே.சி நூற்றாண்டு சமயத்தில் 
(81/82)  9 ரூபாய்க்கு மீள்பதிப்பாய் வெளிட்டபோது . நான் 
அதை வாங்கினேன். ( இப்போது 200 ரூபாய்க்குக் கிட்டும்! ) 1932- 40 க்கு இடையே அவர் எழுதிய 20 கட்டுரைகள் உள்ள 
தொகுப்பு இது.  


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

2 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிக மிக நன்றி. திரு டி கே சி அவர்களின் எழுத்து திரு கி ரா ஐயா
வழி தெரியும்.
நீங்களும் சின்ன அண்ணாமலை அவர்களின் எழுத்தாக இதய ஒலி பற்றிச் சொல்லி இருப்பது மிக விசேஷம்.

படிக்கக் கிடைத்தால் பாக்கியம் தான்.
மிக நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி. என் வலைப்பூவில் நீங்களே டி.கே.சி. யின் மற்ற பல கட்டுரைகளைப் படிக்கலாமே?