புதன், 7 ஜூலை, 2021

1896. முத்தமிழ் வாணி : கவிதை

முத்தமிழ் வாணி 

பசுபதி


புள்ளி மயிலேறி - முருகன் 

  பொன்னொளிர் மாலையிலே 

கள்ளச் சிரிப்புடனே - குறத்தி 

  வள்ளி யிடம்சொல்வான். 


"சோலை மலர்நடுவே - தினமும்

   தோகை விரித்தாடும் 

கோல மயிலழகு - சிறிதும் 

  கிட்டிடு மோவுனக்கு " 


"கூவுங் குரலழகன் - எனது 

    கோதிலா அன்பனவன் 

 சேவலின் கம்பீர - நடைதான் 

   சேருமோ உந்தனிடம் "


கன்னித் தமிழ்வேந்தன் - தனது

   கைவேலைக் காட்டிடுவான் .

"மின்னிடும் வேலழகை - உன்விழி 

   மிஞ்சிடு மோயுரைப்பாய் "


குஞ்சரி  யின்கணவன் - குறும்பு 

   கொப்பளிக்  கப்பகர்வான் ;

" விஞ்சிட வல்லார்யார் - உலகில் 

    விண்ண வளினழகை ".


கெக்கலித் துச்சிரித்து  -வம்புக் 

     கேள்விகள் கேட்டிடுவான் ;

செக்கரெ  னச்சிவந்து - சினத்தில் 

    சீறுவாள் வள்ளியுமே. 


" விண்ணத்தி சேவலுடன் - மயிலும் 

      மின்னிடும் வேலிருக்கப்

   பின்னென்ன என்னிடமே - கண்டீர் 

      பின்னேவந் துமணந்தீர் ?"


சின்னஞ்  சிறுமுருகன் - அவளது 

   சீற்றம்  தணித்திடுவான்; 

மன்னிப்பு வேண்டுமென்று - மொழிந்து 

   மாற்றம் விடுத்திடுவான் .


"தண்டமிழ்ப் பாவலரின் -பொய்த்துதி 

    திகட்டிப் போனதடி!

 வண்டமிழ்க் கற்கண்டே - உன்நாவில் 

    வசவும்  இனிக்குதடி ! "


"எத்தவம் செய்தேனோ - எனக்கென்(று)

    ஏந்திழை நீகிடைக்க 

முத்தமிழ் வாணியன்றோ -மயங்கி 

   மோகித் துனைமணந்தேன் ."

தொடர்புள்ள பதிவுகள் :

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

கருத்துகள் இல்லை: